குளிர்
கசியும் பாரிஸ் நகரத்தின் நெரிசல் மிகுந்த தெரு அது. மஃப்ளர் போன்ற ஏதோ ஒன்றால் தன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறான் அந்த இளைஞன். இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஆறு இருக்கலாம் அநேகமாக அவனுக்கு. தனது இரண்டு கைகளையும் அகல விரித்தவாறு அங்கு கூடியிருந்த ஜனங்களிடம் சோகமும் நம்பிக்கையும் பிசைந்தெடுத்த, உடைந்த குரலெடுத்து அந்தக் குழந்தை பேசினான்,
“நான் ஒரு இஸ்லாமியன். ஆனால் தீவிரவாதியல்ல. உங்கள் எல்லோர் மீதும் எனக்கு நம்பிக்கையும் நேசமும் இருக்கிறது. உங்களில் ஒருவனாக என்னையும் ஏற்பீர்களா? என்னையும் நேசிப்பீர்களா? அனைத்திற்கும் மேலாக, நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு மிகுந்த நுட்பத்தோடு எங்கள் மீது தீவிரவாதிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப் பட்டதற்குப் பிறகும் என்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்னை அன்பொழுக கட்டிப் பிடித்து இவற்றை ஆமோதிப்பீர்களா?”
இதன்
ஒளிப்படச் சுருள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கது பார்க்கக் கிடைக்கவில்லை. இந்தச் செய்தியை வாசித்தபோது என்னை அறியாமலேயே கண்கள் உடைத்துக் கொண்டன.
அந்த
இளையப் பிள்ளையை கட்டி அணைப்பது என்பதை ஏகாதிபத்தியம் தனக்கு எதிரான ஒரு செயலாகவே கருதும் என்பது மட்டுமல்ல தங்களுக்கு எதிராக ஈவு இரக்கமற்ற எத்தகையதொரு அயோக்கியத் தனமான நடவடிக்கையையும் அது கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் எடுக்கும் என்பதும்கூட அங்குக் கூடியிருந்த மக்களுக்கு தெரிந்தே இருந்தது. மட்டுமல்ல, தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஃப்ரான்ஸ் அரசும் ராணுவமும் காலனுக்கு பலிகொடுப்பதற்காக தங்கள் வீட்டுக் கதவையும் தட்டும் என்பதையும் அவர்கள் தெரிந்தே வைத்திருந்தார்கள்.
நாங்களிருக்கிறோமடா மகனே
என்றவாறு அங்கிருந்த பெரியவர்களும், எவனோ என்னவோ சொல்லட்டும் இதனால் என்ன இழப்பு வேண்டுமானாலும் எங்களுக்கு வரட்டும், நீ எங்கள் சகோதரன் என இளைஞர்களும் யுவதிகளும் கண்கள் கசியக் கசிய அந்த இளைஞனைக் கட்டி அணைத்தனர். சிலர் வாஞ்சையோடு அவனை அழுதுகொண்டே முத்தமிட்டனர்.
இதயத்தின்
ஏதோ ஒரு ஓரத்தில் கொஞ்சமோ கொஞ்சூண்டு ஈரம் இருப்பவனையும் இந்த நிகழ்வானது நிச்சயமாய் நெகிழ்ந்து கசியச் செய்யும்.
ஏனிந்தப்
பிள்ளை அன்பையும் நம்பிக்கையையும் இப்படிக் கையேந்தி யாசிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
அதற்கு
சில நாட்களுக்கு முன்னர்தான் பாரிசில் ISIS அமைப்பு சில மனித வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்திருந்தது. இந்தக் கொடூரமான செயலை மனிதனாய்ப் பிறந்த எவனும் வன்மையாக கண்டிக்கவே செய்வான். செத்துக் கொண்டிருக்கும் ஒருவனையும் கொலை செய்யும் உரிமை எவனுக்கும் இல்லை. செத்துக் கொண்டிருப்பவனைத் தானே கொன்றேன். நான் கொல்லாமல் விட்டிருந்தாலும் அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் செத்திருக்கத்தானே செய்வான் என்றும் எவனும் சொல்ல முடியாது. தானாய் ஒருவனை மரணம் கவ்வும்வரை வாழும் உரிமை ஒவ்வொருவனுக்கும் உண்டு. அப்படியிருக்க முதியவர், இளைஞர், யுவதி, பச்சிளங் குழந்தைகள் என்று மானுடப் பரப்பை குறுக்கும் நெடுக்குமாய் கொன்றொழித்த அந்த அயோக்கியர்களைக் கண்டிக்கிறோம் என்பது மட்டுமல்ல அந்த அமைப்பை முற்றாய் அழித்தொழிக்க வேண்டுமென்பதிலும் அதற்கு மானுடச் சமூகம் கரங்கோற்க வேண்டும் என்பதிலும் உறுதியாகவே இருக்கிறோம்.
ஆனால்
இதனை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கிறது. தீவிர வாதத்தை வேரறுக்கிறோம் என்ற பெயரில் தனது வல்லான்மையை விரிவுபடுத்தி நிலை நாட்டுவதற்கு நயவஞ்சமாக முனைகிறது. தீவிரவாதத்தை அம்பலப் படுத்துவதை விடவும் பேரதிகமாய் அமெரிக்காவின் இந்தக் கோர முகத்தை அம்பலப் படுத்த வேண்டியத் தேவையும் தீவிரவாதத்தை எதிர்கொள்வதைப் போலவே அமெரிக்காவின் இந்த முயற்சியை எதிர்கொள்ள வேண்டியத் தேவையும் மானுட சமூகத்திற்கு இருக்கிறது.
ISIS அமைப்பு இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு என்கிற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிற முயற்சியில் அமெரிக்கா ஒரு குறிப்பிடத் தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது. இதுமாதிரி இஸ்லாமிய இளைஞர்களால் கட்டப்படும் தீவிரவாத அமைப்புகளை ‘இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள்’ என்று பொதுப் புத்தியைக் கட்டமைக்க முயல்கிறார்கள். இதில் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு வெற்றி பெற்றதும் ‘இஸ்லாமியர்கள் எல்லோருமே தீவிரவாதிகள்’ என்று நிறுவ முயற்சிக்கிறார்கள்.
ISIS மட்டுமல்ல இது போன்ற எந்த ஒரு தீவிரவாத அமைப்பாக இருந்தாலும், அது எந்த மண்ணில் இருந்தாலும் அவற்றைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆயுதம், பணம் பயிற்சி அனைத்தையும் அமெரிக்கா வழங்கும். அந்த மண்ணின் அரசாங்கத்திற்கு ஏதிராக கிளர்ச்சிகளை உண்டு பண்ணும். அப்படி முடியாத பட்சத்தில் பிற மத, இனக் குழுக்களோடேனும் பகைமையை உருவாக்கி அடித்துக் கொள்ள வைக்கும். பிறகு தீவிர வாதத்தை அழிக்கிறேன் என்ற பெயரில்தான் உருவாக்கிய அமைப்புகளையும் அழித்தொழிக்கும். இப்போது அதன் கையில் இருக்கும் பலிக்கடா ISIS.
இதனடிப்படையில்தான் இப்போது
பாரிசில் மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததற்கு பின்னால். தீவிரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் பாரிசில் உள்ள இஸ்லாமியர்களை வேட்டையாடும் கொடூரத்தை ஃப்ரான்ஸ் அரசாங்கத்தை விட்டு முடுக்கிவிட்டிருக்கிறது. ஆறு வயது குழந்தையிலிருந்து வேட்டை தொடங்குகிறது. இஸ்லாமியன் எனில் அவன் தீவிரவாதி. ஆகவே அவன் அழிக்கப்பட வேண்டியவன் என்கிற எண்ணத்தை அந்தந்த மண்ணின் மக்களிடம் வலுவாகப் பிரச்சாரம் செய்கிறது.
இதனால்
பாதிக்கப்பட்ட
ஒரு இளைஞன்தான் நாம் துவக்கத்தில் பார்த்தவன். நமது குழந்தை இப்படி நடுத்தெருவில் நின்று கையேந்தி பொதுமக்களின் நம்பிக்கையை யாசித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.
நல்ல
வேலையாக பாரிஸ் மக்கள் ஏகாதிபத்தியத்தின் இந்த வலையில் விழுந்துவிட வில்லை.
இன்னொன்றையும் நாம்
கவனிக்க கடமைப் பட்டிருக்கிறோம். ISIS அமைப்பின் தாக்குதலுக்கு எதிராக உலக கவனத்தை ஈர்க்க இவ்வளவு பாடுபடும் ஏகாதிபத்தியமும் அதன் நேசநாடுகளும் சிரியாவில் ISIS நிகழ்த்தும் அட்டூழியங்களுக்கு எதிராக பெயரளவைக் கடந்து எந்த கவனமும் குவிக்கப் பட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
ISIS அமைப்பானது இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பல்ல. அது இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் பேரழிவைத் தரக்கூடிய ஒரு அமைப்பாகும். இதை உணர்வதும், உணரச் செய்வதும் மிக மிக அவசியம்.
தோழர்
இன்குலாப் அவர்களுக்கு காக்கை எடுத்த பாராட்டு விழாவில் அவர் சொன்னதை இங்கு பதிவது சரியாக இருக்கும்,
“ஒருக்கால் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையினராகவும் இருந்து தமிழர்கள் சிங்களவர்களை அழித்தொழித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் எனது பேனா நிச்சயமாக சிங்களவர்களுக்காகத்தான் எழுதும்”
****************************************************************************************
மனித
மலத்தை மனிதன் அள்ளுவது கொடூரமானது. அதை முற்றிலுமாக ஒழித்துவிட வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறோம். நம்மால் இதுவரை வெற்றிபெற முடியாத போராட்டமாக அது இருக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்கு போராட்டங்களை இன்னும் அழுத்தமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது ஏழு வயதே ஆன இரண்டாம் வகுப்பு படிக்கக் கூடிய பச்சைக் குழந்தை ஒருவனை அதே வயதுகொண்ட குழந்தையின் மலத்தை அள்ளிப் போட வைத்திருக்கிறார்கள் என்பதைக் கேள்விப் படும்போது கோவத்தின் உச்சிக்கே போகிறோம்.
இது
ஏதோ ஆண்டை அல்லது முதலாளி ஒருவரது வீட்டில் அவரது குழந்தையின் மலத்தை அதே வயதுடைய வேலைக்காரக் குழந்தையையை வைத்து சுத்தம் செய்தாலே அது மாபெரும் குற்றம்தான். அப்படிப் பணித்தவருக்கு சிறைத்தண்டனை என்பதுகூட சற்று குறைவான தண்டனைதான்.
இது
நடந்தது ஒரு பள்ளிக்கூடத்தில் என்றால். அதுவும் அந்த வகுப்பின் ஆசிரியையே இந்த செயலை செய்ய வைத்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு கொடுமை.
ஆனால்
அப்படி ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் என்ற ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் உயர்சாதிக் குழந்தை ஒருவன் மலம் கழித்துவிடவே அதை அதே வகுப்பில் படிக்கும் தலித் மாணவனை மிறட்டி சுத்தம் செய்ய வைத்திருக்கிறார் விஜயலட்சுமி என்ற ஆசிரியை.
‘படித்தவன் பாவம் செய்தால் அவன் அய்யோனு போவான், அய்யோனு போவான்’ என்பான் பாரதி.
இப்படி
ஒரு பாவத்தை செய்தால் செய்தவன் அய்யோனு போனால் பத்தாது ஒரு ஆயுளுக்கேனும் உள்ளே போக வேண்டும்.
********************************************************************************
“ ஆறுகள் ஓடிக்கொண்டிருந்த இடத்தில்
லாரிகள்
ஓடிக் கொண்டிருக்கின்றன
லாரிகள்
ஓடிக் கொண்டிருந்த இடத்தில்
ஆறுகள்
ஓடிக் கொண்டிருக்கின்றன”
என்று
தனது முகநூல் பக்கத்தில் ரதி பாலா எழுதியிருந்ததை உங்களுக்கு சொல்லவேண்டும்போல் இருந்தது. சொல்லிவிட்டேன்.
***********************************************************************
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்