“2010 ஆம்
ஆண்டு இதே காலத்தில் அடித்த வெள்ளத்தினால்
விசூர் கிராமத்தில் ஆறு உடைந்து வெள்ளப் பெருக்கெடுத்து 500 ஏக்கருக்குமேல்
மண் மூடிவிட்டது. பெரியகாட்டுப்பாளையத்தில் ஓடையில் வந்த வெள்ளத்தினால்
அந்தக் கிராமத்து மக்களசில நாட்கள் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப் பட்டிருந்தனர்”
என்ற தகவலை தம்மிடம் ஒரு பத்திரிக்கை நிரூபர் சொன்னபோது தாம் அதிர்ந்து
போனதாக மார்க்சிஸ்ட் பொது உடைமைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் 22.11.2015 அன்றைய தீக்கதிரில்
எழுதுகிறார்.
அவரது
அதிர்ச்சிக்கான காரணம் அதே காரணங்களுக்காகத்தான் அதே கிராமத்து மக்கள் அதே பள்ளிகளில்
இப்போதும் தங்க வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காகவும் சேதாரங்களை அளவிடுவதற்காகவும்
வந்திருந்தபோதுதான் இந்தச் செய்தி அவருக்கு கிடைக்கிறது. இதற்கான
செய்தித் தாள் நறுக்கு ஆதாரங்களையும் அந்த பத்திரிக்கையாளர் தோழர் ஜி.ஆர் அவர்களிடம் தந்திருக்கிறார்.
இதில்
ஆச்சரியப் படுவதற்கு ஏதும் இல்லை.
ஒருக்கால் 2005 இலோ அல்லது அதை ஒட்டியோ ஏதேனும்
இப்படி ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ந்திருக்குமானால் அப்போதும் இந்த கிராம மக்கள் இதே
பள்ளிகளில்தான் தங்க வைக்கப் பட்டிருந்திருப்பார்கள்.
நமது
கவலை எல்லாம் எதிர்காலத்தில் இப்படி ஒரு பேரிடர் நிகழும் பட்சத்தில் அப்போதும் இதே
மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டு இதே கிராமத்து மக்கள் இதே பள்ளிக் கூடங்களில் தங்க
வைக்கப் படுகிற நிலை வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான். விசூர், பெரியகாட்டுப்பாளையம் என்பவை பதம் பார்ப்பதற்காக எடுக்கப் பட்ட பருக்கைகளில்
இரண்டு பருக்கைகள். உலையில் பல மரக்கால் இருக்கின்றன.
2010 ஆம் ஆண்டு காட்டாற்றில் வெள்ளம் வந்திருக்கிறது. அதன்
விளைவாக குடிசைகள் அடித்துச் செல்லப் பட்டிருக்கிறன. கால்நடைகள்
செத்துப் போயிருக்கின்றன. அரிசி, பருப்பு
இன்ன பிற தானியங்கள் உடைகள் குழந்தைகளின் புத்தகங்கள் உள்ளிட்டு அணைத்தும் அடித்துச்
செல்லப் பட்டிருக்கிறது. ஊர் மக்கள் பள்ளிக் கூடங்களில் தங்க
வைக்கப் பட்டிருந்திருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டிலும் டிட்டோவாக
அவையே நிகழ்ந்திருக்கின்றன என்றால் 2010 ஆம் ஆண்டு பேரிடரிலிருந்து அந்த ஊர்ப் பஞ்சாயத்து நிர்வாகமும்,
மாவட்ட நிர்வாகமும் அரசும் ஏதும் கற்றுக் கொள்ளவேயில்லை என்றுதானே அர்த்தம்.
அதற்கு
முன்னரெல்லாம் என்ன நடந்தது என்பது பற்றியெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டாம்.
2010 ஆம் ஆண்டு இதே போன்றதொரு வெள்ளம் வந்திருக்கிறது. எனில்,
பெருமழை பெய்தால் அந்தக் காட்டாறு பெருக்கெடுக்கும் என்று தெரிகிறது.
பெருக்கெடுக்கும் போது நீர் ஊருக்குள் நுழையும் என்றும் தெரிகிறது.
என்ன செய்திருக்க வேண்டும் நிர்வாகம். காட்டாற்றின்
கரையினை உயர்த்தியிருக்க வேண்டும். அந்த வேலையைச் செய்திருந்தால்
உள்ளூர் மக்களுக்கு ஒரு மாதத்திற்கான வேலை கிடைத்திருக்கும். அதுபோக இந்த முறை ஊருக்குள் தண்ணீர் வந்து இந்த அளவு பொருட் சேதத்தைத் தந்திருக்காது.
இன்னும்
கொஞ்சம் மக்களுக்களுக்காக கூடுதலாக சிந்திக்கிற நிர்வாகமாக இருந்தால் வரமாக இயற்கைத்
தருகிற இந்த நீரை வீணாக்காமல் சேமித்து வைக்கலாமே என்று சிந்தித்து இருக்கும். அப்படி சிந்தித்திருக்குமானால்
இந்த நீரை எப்படி சேமிப்பது என்ற கேள்வியை அது சந்தித்திருக்கும். இந்தச் சந்தேகம் ஒரு ஊர் கூட்டத்தில் போய் முடிந்திருக்கும்.
ஒரு
ஏரியை வெட்டினால் மழை தரும் இந்த நீர்க் கொடையை சேமித்து பயன் பெறலாம் என்ற முடிவு
கிட்டியிருக்கும். அடுத்தது ஏரியை வெட்டுவதற்கான இடத்தேர்வு நடந்திருக்கும். தேர்வு செய்யப் பட்ட இடத்தில் ஏரி வெட்டப் பட்டிருக்கும். காட்டாற்றிலிருந்து தண்ணீரை ஏரிக்கு கொண்டு வருவதற்கான வாய்க்கால் வெட்டப்
பட்டிருக்கும்.
ஆக, ஏரி வெட்டுதல், அதற்கான வாய்க்காலை வெட்டுதல் என்கிற வகையில் ஒரு மூன்று அல்லது நான்கு மாத
வேலை அந்த ஊர் மக்களுக்கு கிடைத்திருக்கும்.
இந்த
வேலைகள் நடை பெற்றிருக்குமானால்
2015 இல் நிகழ்ந்த இந்த நீர்ப் பெருக்கு இந்நேரம் வெட்டப் பட்ட அந்த
ஏரியில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்திருக்கும்.
2015 இல் ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கு அந்த ஊர் மக்களுக்கு பேரிடராக அமிந்திருக்காது.
இந்த ஆண்டின் இயற்கை வரமாக இதைக் கொண்டாடி இருப்பார்கள் மக்கள்.
ஏரியில்
நீர் நிறைந்தால் அது பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும். மாலை நேரங்களில் நீர்க்
கரையில் அமர்ந்து பொழுதைக் கழிப்பது எவ்வளவு சுகமானது. ஒரு ஏரி
நீர் ஊர் மக்கள் குளிப்பதற்கு, துவைப்பதற்கு என்கிற வகையிலும்
உதவி இருக்கும். விவசாயத்திற்கு அதை பயன்படுத்தி இருக்கலாம்.
அந்த வகையில் மக்களுக்கு இன்னும் சில காலத்திற்கான வேலை வாய்ப்பு கிட்டியிருக்கும்.
ஒருக்கால்
இந்த ஏரியும் பத்தாது ஏரி உடைத்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டிருக்குமானால் இந்த காட்டோடை
பெருக்கிற்கு ஒரு ஏரி போதாது என்கிற பாடம் கிடைத்திருக்கும். அடுத்த ஏரியை வெட்டியிருக்கலாம்.
இந்த ஏரியில் ஒரு கண்மாய் வெட்டி அதன் வழியாக இந்த ஏரியின் மிகை நீரை
புதிய ஏரிக்கு கொண்டு சென்றிருக்கலாம்.
ஏரிகளில்
மீன் வளர்ப்பினை செய்திருக்கலாம்.
மீன் வளர்ப்பு மிகப் பெரிய தொழில் வாய்ப்பினை அந்த ஊர் மக்களில் சிலருக்கு
தந்திருக்கும். நிலத்தடி நீர் பெருகி எந்தக் காலத்திலும் இப்போது
மழையில் அடி பட்டு பள்ளிக் கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களை வளமோடு வைத்திருக்கும்.
இவ்வளவு
வளங்களும் அந்த ஊரின் நிர்வாகத்திற்கும் வருமானத்தை அள்ளிக் கொண்டுபோய் சேர்த்திருக்கும்.
இத்தனையும்
நடந்திருக்கும் பட்சத்தில் அதற்குப் பிறகு தொடர் பராமரிப்பு என்பதும் அவசியம்தான். தொடர்ந்து தூர் வார வேண்டும்.
வாய்க்கால்களில் புதர் அண்டாமல் சேர் அண்டாமல் பராமரிக்க வேண்டும்.
இன்னொரு
விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜீவ நதிகளையே நாம் முறையாகப் பராமரிப்பது இல்லை. இதுவே பெருங்குற்றம். ஆனால் இதைவிடப் பெருங்குற்றம் இயற்கையாகவே
நதியிடம் இருக்கும் அதற்கான பாதுகாப்பு அரண்களையும் நாம் கொல்லையடித்துக் கொண்டிருக்கிறோம்.
நதிகளில்தான் நாம் சாயக் கழிவுகளை, தொழிற்சாலைக்
கழிவுகளை கொண்டு போய் கொட்டுகிறோம்.
ஆற்று
மணலை சில பெரு முதலாளிகளின் அயோக்கியத் தனமான பேராசைக்கு ஆட்பட்டு கொல்லையடிக்க அனுமதிக்கிறோம். ஆற்றில் முளைக்கும் ஆகாயத்
தாமரைகளையும் முட் புதர்களையும் களை எடுத்து பராமரிக்கத் தவறுகிறோம். ஆக, ஜீவ நதிகளின் விஷயத்திலேயே நாம் செய்ய வேண்டியவற்றை
செய்யாமல் செய்யக் கூடாதவற்றை செய்து இரட்டைக் குற்றவாளிகளாக உள்ளோம்.
ஜீவ
நதிகள் விஷயத்திலே எதிர் நிர்வாகத்தில் தேர்ந்திருக்கும் நாம் இது மாதிரி காட்டாறுகள்
விஷயத்தில் எப்படி நேர்மறை நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறோம்.
இந்தப்
பெருமழையைத் தாக்குப் பிடிக்கும் வக்கற்றவர்களாக ஏன் மாறினோம். கடந்த ஆண்டுகளில் குடிநீருக்கே
வழியின்றி பெருந்துயரத்தில் இருந்தோம். குடம் குடமாக தண்ணீரை
பெருவிலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்த நமக்கு ஏரி ஏரியாக் தண்ணீரை இயற்கை கொடையளித்தது.
நாமோ இயற்கையின் கொடையை இயற்கைப் பேரிடர் என்று வாய் கூசாமல் சொல்லுகிறோம்.
இயற்கையின்
பெருங்கொடை நமக்கெப்படி இயற்கைப் பேரிடரானது?
பெரம்பலூரில்
ஒரு பெரிய ஏரி இருக்கிறது.
பெரிய ஏரி என்று சொன்னதற்கா பெரிய செம்பரம்பாக்கம் ஏரி இவர்களது என்று
யாரும் என்னை கிண்டல் செய்ய வேண்டாம். எங்கள் ஊருக்கு அது பெரிய
ஏரி. இந்த நவம்பரில் பெய்த மழையில் பாதி பெய்திருந்தாலே எங்கள்
ஏரி நிறைந்திருக்கும். கடை போயிருக்கும். எங்கள் ஏரி கட போய் நாங்கள் பார்த்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாயிற்று.
இவ்வளவு பெரு மழைக்குப் பிறகும் எங்கள் ஏரியில் சொட்டு தண்ணீர் இல்லை.
காரணம் இந்த மழை நீர் எங்கள் ஏரிக்கு வந்து சேரவே இல்லை. காரணம் முறையற்ற ஆக்கிரமிப்புகள்.
ஆக
ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டுவரக் கூடிய நீர்வழித் தடங்களை நாம் பாதுக்காக்கத் தவறியிருக்கிறோம். நீர் நிலைகளை அவற்றின் கொள்ளளவு
குறைந்து விடாதபடி தூர் எடுத்து மண்டிக் கிடக்கும் புதர்களை சுத்தம் செய்து பராமரிக்கத்
தவறியிருக்கிறோம்.
நான்
ஆண்டுக்கு 25 முறையேனும் சென்னைக்கு வருபவன். ஒவ்வொருமுறை வரும் பொழுதும்
மதுராந்தகம் ஏரியை ஆசையோடு பார்த்து வருகிறேன். மதுராந்தகம் ஏரியை
ஒழுங்காகப் பராமரித்து இருந்தால் இப்போது ஏரியில் இருக்கும் தண்ணீரைப் போல் இன்னும்
ஒரு நாற்பது விழுக்காடு தண்ணீரை இந்த ஏரியில் நம்மால் சேமித்து வைத்திருக்க முடியும்.
ஒவ்வொரு
முறை பெருமழை பெய்யும் பொழுதும் வெறும் தண்ணீர் மட்டும் ஏரிக்கு வருவதில்லை. தண்ணீரோடு சேர்த்து சேற்றினையும்
தான் வெள்ளம் ஏரிக்கு கொண்டு வந்து சேர்க்கும். இவ்வாறு சேரும்
சேற்றின் அளவு அந்த ஏரியின் நீரின் கொள்ளளவை குறைத்து விடும்.
எல்லா
ஏரிகளையும் இப்படி ஒழுங்காகப் பராமரித்து இருந்தால் இந்த பெருமழைக்குப் பிறகு இப்போது
உள்ள ஏரி சேமிப்புத் தண்ணீரைப் போல நான்கு மடங்கு தண்ணீர் சேமிப்பில் இருந்திருக்கும். கரைகள் உடைந்திருக்காது.
சேதாரம் இருந்திருக்காது.
ஒவ்வொரு
ஏரி நிறையும் பொழுது அதனுடைய மிகை நீர் அடுத்த ஏரிக்குப் பயணப் பட வேண்டும்.
நாம்
நீரின் பாதைகளையும் களவாடி விட்டோம்.
ஏரிகளையும் களவாடி விட்டோம்.
ஏதோ
ஒரு படத்தில் வடிவேலு தன்னுடைய கிணறினை யாரோ களவாடிச் சென்று விட்டதாகப் புகார் செய்வார். அதை சோதிப்பதற்காக காவலர்களும்
ஜீப் எடுத்துக் கொண்டு வருவார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தைக்
காட்டி அந்த இடத்தில்தான் தனது கிணறு இருந்ததாகவும் அதை யாரோ களவாடிக் கொண்டு போய்
விட்ட்தாகவும் கூறும் வடிவேலு தனது காணாமல் போன கிணறிறினை கண்டுபிடித்துத் தருமாறு
கூறுவார். வங்கியை ஏமாற்றுவதற்காக அவர் அப்படி ஒரு பொய் சொல்வார்.
உண்மையிலுமே
இன்றைய நிலமை அப்படித்தான் இருக்கிறது.
பல ஏரிகள்தான் இன்றைக்கு பிரபலமான பொறியியல் கல்லூரிகளாக அடுக்ககங்களாக,
தொழிற்சாலைகளாக, பங்களாக்களாக மாறிப் போயிருக்கின்றன.
முதலில்
களவு போன ஏரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
காக்கிரமிப்பாளர்கள் செலவிலேயே அவற்றை ஏரிகளாக மாற்ற வேண்டும்.
இருக்கிற ஏரிகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவற்றை
செய்தால் உறுதியாக சொல்லலாம் புயல்களும் நமக்கு வரமாகும்.
இயற்கை
தனது பயணத்தின் பாதச் சுவட்டிலும் நமக்கான பாடங்களை பதிய வைத்தபடியேதான் நகர்ந்தபடி
இருக்கிறது. நாம்தான் அவற்றை ஒழுங்காகப் படிக்கிறோம் இல்லை. இயற்கை
தரும் பாடங்களின்படி நாம் நமது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டால் ‘இயற்கை ஒருபோதும் நம்மை சபிப்பதில்லை’ என்ற உண்மை பிடிபடும்.
எதோ
ஒரு மாதத்தின் பெயரை ஏரி மாதம் என்று வைத்து அந்த மாதத்தை ஏரிகளைப் பராமரிப்பதற்காக
செலவிட்டோம் எனில் எந்தப் புயலையும் ஒரு புன்னகையோடு எதிர் கொள்ளும் ஆற்றலை இயற்கை
நமக்கு வழங்கும்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்