Saturday, October 24, 2015

கவிதை 36

எரித்தீர்கள்
கரியானோம்
மழை நனைக்க
கருஞ்சாந்துப் பெருக்கானோம்
கருக்கவில்லை பூமி
கிழித்தீர்கள்
வெட்டினீர்கள்
கொத்தினீர்கள்
ஆசைதீர
ரத்தச் சாந்தானோம்
சிவக்கவுமில்லை பூமி
நீங்கள் மகிழ ஏதுமில்லை ஆனாலும்
காவியாகாது
எம் பூமி ஒருபோதும்

Friday, October 23, 2015

கவிதை 35

மிரட்டுவாய் பேசினால்
பேசுவேன்
கரியள்ளிப் பூசுவாய்
சாணத்தால் குளிப்பாட்டுவாய்
எழுதினால்
ஆனாலும் எழுதுவேன்
தாக்குவாய் தெரியும்
ஆனாலும் பேசவே பேசுவேன்
எழுதவே எழுதுவேன்
என் நெஞ்சிறங்கும்
உன் கோடாரி பார்த்தபடியேயும்
பேசுவேன்தான்
போடா
பிஞ்சுகள் எரிந்ததையே
பார்த்து விட்டோம்

Thursday, October 22, 2015

குட்டிப் பதிவு 47




குழந்தைகள் எரிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கத்தானா இன்னும் உசிரோடிருப்பது.
உறங்கப் போகும் நான் எழாமலே செத்துத் தொலைக்க மாட்டேனா

கவிதை 34

அகப்படவில்லையா
படிக்கிறமாதிரியெதுவும்
முடித்துவிட்டானா ஏற்கனவே
இருக்கிறதனைத்தையும்
அல்லது இதுதானா
அவனது குணமே
எதுவானால் என்ன
நிம்மதியை வைத்துவிட்டுப் போனான்
புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்களில் எதையும்
சுட்டெடுத்துப் போகாத புத்தன்

Wednesday, October 21, 2015

நமது பேராசை

அவர்களது கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய அவர்களுடைய சங்கமது.

அவர்களது உறுப்பினர்களது பிரச்சனைகளுக்காக சம்பந்தப் பட்டவர்களோடு பேசி அல்லது போராடி பிரச்சினையை தீர்த்துவைக்க கடமைபட்ட சங்கம்.

அந்த வகையில் அந்த சங்கத்திற்கு யார் பொறுப்பாளர்கள் என்பது முற்றும் முழுதுமாய் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் நமக்கெதுவும் கருத்திருக்க இயலாது. அப்படி எதுவுமில்லை நம்மிடம்.

ஆனால் தனது பணித் தளம் தாண்டி பொதுத்தளத்திலும் மக்களது பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும், கூடுமான வரைக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாது பார்த்துக் கொள்ளும், ஓரளவிற்கு இடது சாரி சிந்தனையோடு களமாடும் தோழர் நாசர் அதன் தலைவராயிருப்பதும், படிக்க வசதியற்ற படிக்கக் கூடிய மாணவர்களுக்கு  சம்பாதிப்பதில் ஒரு பகுதியை செலவிடும் கார்த்தி பொருளாளராகியிருப்பதும் எதையும் தாண்டி நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.

வாழ்த்துகிறோம்.

சங்கத்தை தொழிற்சங்க கட்டமைப்பிற்குள் கொண்டுவரவேண்டிய பொறுப்பு அவர்கள் இருவருக்கும் இருக்கிறது என்பதையும்,

மக்களிடமிருந்து அந்நியப் பட்டு நிற்கும் திரைத்துறையை மக்களின் பிரதிநிதியாய் மாற்ற வேண்டிய பொறுப்பு அவர்கள் இருவருக்கும் கூடுதலாய் இருக்கிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும் என்பதுமே நமது பேராசை.

Tuesday, October 20, 2015

மாற்றுக்கான நேரம்

'உனக்கு மட்டும்தான் கெட்ட வார்த்தையில் ஏச வருமா? எனக்கு உன்னைவிட வரும். என் மனைவிக்கு நம் இருவரை விடவும் கேவலமாய் பேச வரும்' என்கிற அளவில் ஒருவரை ஒருவர் வைது கொண்டும் அசிங்க அசிங்கமாய் விமர்சித்துக் கொண்டும் அம்பலப் பட்டு நிற்கிறது பெரும்பான்மை திரைத்துறை.

இதில் எனக்கு அவ்வளவாய் அக்கறை இல்லை.

பெரும்பான்மை அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றும் ஒவ்வொரு முறையும் திரையில் அநீதிக்கு எதிராகப் போராடி மக்களைக் காப்பது போல தங்களையும் காப்பார்கள் என்றுதான் அப்பாவி உழைக்கும் ஜனங்கள் நம்பி அவர்களின் பின் திரள்கிறார்கள்.

அப்படியெல்லாம் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கு நமக்குக் கிடைத்த வாய்ப்பு இது.

மக்களுக்கு புரிகிற மாதிரி இதை போதுமான அளவு கொண்டு சென்றோமா நாம் என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

அநீதிக்கு எதிராகப் போராடும் யாரையும் நேசிக்ககவே செய்யும் உழைக்கும், மற்றும் ஒடுக்கப் பட்ட ஜனத்திரள்.

காவல் துறையிடம் அடிபட்டும் மிதிபட்டும் சிறை சென்றும் மக்ககளுக்காகப் போராடும் அந்தந்தப் பகுதி இளைஞர்களை குறும்படங்கள் மூலம் அந்தந்தப் பகுதி மக்களுக்கு போதுமான அளவு பார்க்கிற மாதிரி கொடுத்தோமெனில் அந்தந்தப் பகுதி ஜனங்கள் அவர்களைக் கொண்டாடி ஏற்கவே செய்வார்கள்.

இதன் மீது நாம் இதுவரை போதுமான அளவு கவனம் செலுத்தவில்லையே என்பதும் குடைந்து கொண்டே இருக்கிறது.

இந்த வாய்ப்பில் மக்களுக்கான மாற்றுப் படங்களைத் தருகின்ற தோழர்களை உற்சாகப் படுத்துவோம், உருவாக்குவோம்.

மாற்றுக்கான சரியான நேரமிது.

Sunday, October 18, 2015

உச்ச நீதிமன்ற காமடி

"இந்த பார்சலுக்குள் என்ன இருக்கிறது?"

"நீங்கள் பணியில் சேர்த்த எஜமானர்களில் குற்றமிழைத்தவர்களின் பட்டியலும் அவர்களிழைத்த குற்றங்களின் பட்டியலுங்க எஜமான்"

"முத்திரையிட்ட உறையில்தானே கேட்டோம். பெரிய பார்சலா இருக்கே"

"எவ்வளவோ வடிகட்டியபிறகும் இதற்குமேல குறைக்க முடியலீங்க எஜமான்"

"சரி, சரி, பஞ்சாயத்த ஆரம்பிக்கலாம். நாங்க வேலைக்கு சேர்த்ததுல சோடையான ஒருத்தர காட்ட முடியுமா?"

இதை உச்ச நீதிமன்றத்திலும் நீங்கள் கேட்டிருந்தால் நானென்ன செய்ய முடியும்?

Tuesday, October 13, 2015

1 ஊருக்கொரு துவக்கப் பள்ளி

எண்ணெய் இல்லாமலும் திரி இல்லாமலும்கூட விளக்குகள் எரிந்து வெளிச்சம் கொடுக்கும் என்பதை அன்றுதான் அந்த ஊர் மக்கள் அறிந்து கொண்டார்கள். சாயங்காலத்து நிழலுக்குள் பையப் பைய மறைந்து, இருட்டில் சுத்தமாய் கண்ணுக்குத் தட்டுப்படாமல் போகும் கருணைகிரி பெருமாள் கோவில் கோபுரம். இனி அதை மனசு குளிர ராத்திரிகூட தரிசித்து கன்னம் ஒற்றலாம். ஊர்க்காரர்களை, பரவசத்தின் உச்சிக்கு கொண்டு போயிருந்தது இது.

இனி, சிம்னி விளக்குக் கண்ணாடிகளை உடைத்துவிடாமல் துடைக்கத் தேவையில்லை. சீமத்தண்ணியால் நிரப்பி, திரிகளை சரி செய்யத் தேவை இல்லை. கிராமத்து தாய்மார்கள், மகிழ்ச்சியோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அந்தியில் வெளிச்சம் அவர்களுக்குப் புதிது.
இனி, இரவிலும் தெருவிளக்கில் அமர்ந்து அரிசியில் கல்லு பொறுக்கலாம் - பாண்டி பல்லாங்குழி விளையாடலாம் என்று தாய்மார்களும்; தாயம் மங்காத்தா எப்பவும் விளையாடலாம் என்று சிலரும்; இனி கவளையக் கட்டிக்கிட்டு காலையில இருந்து அந்தி வரைக்கும் முன்னயும் பின்னயுமா போய் நீர் இறைக்கத் தேவை இல்லை - பொத்தானத் தட்டினா குழாயில தண்ணியா கொட்டுமாம் என்று விவசாயிகளும்; இனி வீட்டுப் பாடத்தை ராத்திரிகூட எழுதலாம் என்பதால் மாலையில் நிறைய விளையாடலாம் என்று பள்ளிக் குழந்தைகளும் ஏகத்துக்கும் மகிழ்ந்திருந்தார்கள்.
முற்றாய் முடிக்கப்பட்டிருந்த தார்ச் சாலைகள், அந்தக் கிராமத்துக் குழந்தைகளைத் திக்குமுக்காட வைத்திருந்தன.
இத்தனையையும் தங்களுக்குக் கொடுத்த அந்த மாமனிதர் அன்று அவர்களது கிராமத்துக்கு வருகிறார் என்பதை அறிந்த மக்கள், அந்தப் புண்ணியவான் முகத்தை ஒருமுறை தரிசித்துவிடும் ஆவலில், தேர்முட்டித் திடலில் திரண்டிருந்தார்கள்.
எல்லாவற்றையும் செய்து கொடுத்த அந்த உத்தமர், தங்களது பெருங்கனவான பள்ளிக்கூடத்தையும் கொடுத்திருந்தார் எனில் நன்றாக இருந்திருக்கும் என்று, பக்கத்து ஊருக்குப் போய் படிக்க முடியாததால் பாதிக்கப்பட்ட சில உள்ளூர் இளைஞர்களுக்கு சிறு உறுத்தல் இருந்தது. இருந்தபோதிலும் அவர்களும் மகிழ்வோடுதான் திரண்டிருந்தார்கள்.
அவரும் வந்தார்.
அவர்களூர் நடுத்தெரு சுப்பிரமணியக் கிழவனைப் போலவே இருந்தார். நம்மை மாதிரியே இருக்கும் இந்தக் கிழவன்தானா நமக்கு இத்தனையும் கொடுத்தார் என்று ஆச்சரியப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் என்பதால்தான், அவரால் இதை எல்லாம் செய்ய முடிந்தது என்பதையும், அவர்களில் இருந்து உருவாகும் தலைவர்களைத்தான் நம்ப வேண்டும் என்பதையும் மக்கள் இன்றளவும் உணர்ந்ததாகத் தெரியவே இல்லை.
பேச அழைத்ததும், ஒலி வாங்கியின்முன் வந்து நின்றார். பலசரக்குக் கடை அய்யாத்துரை பேசுவது மாதிரியே இருந்தது. பவுடர் பூசாத எளிமை.
‘இந்த ஊருக்கு ரோடு போட்டாச்சு, லைட்டு போட்டாச்சு, ஆஸ்பத்திரி கொண்டு வந்தாச்சு. என்ன, சின்னப் பசங்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்த கொண்டு வந்துட்டா நிம்மதியா தூங்குவேன். அந்தக் குறைதான் என்னை தூங்கவிடாம துரத்துது. இதை எல்லாம் செய்றதுல எந்தச் சிக்கலும் இல்லை. ஆனா, பள்ளிக்கூடம் கொண்டுவரதுல நிறைய சிக்கல் இருக்கு. இதோ எங்கூடவே உங்க DEO அய்யாவ கூட்டிட்டு வந்திருக்கேன். இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் கொண்டுவரதுக்கு இருக்கிற சிக்கலை அய்யா சரி செஞ்சு அனுமதி கொடுத்தாங்கன்னா, உடனே உங்க ஊருக்கு பள்ளிக்கூடத்தையும் கொண்டு வந்துடலாம். அதுக்கு ஏதாச்சும் செஞ்சு ஒத்தாசை செய்ய வேணும் அய்யான்னு கேட்டுக்கறேன்’.
மரியாதைக்குரிய இறையன் அய்யா அவர்கள்தான் அந்த DEO. இன்றைக்கெல்லாம், ஒரு முதல்வரிடம் இருந்து இப்படி இறைஞ்சும் தொனியிலான ஒரு வேண்டுகோளை எந்த ஒரு DEO-வும் எதிர்பார்க்க முடியாது. எந்த ஒரு DEO-வாலும் ஒரு முதல்வரிடமிருந்தோ, கல்வித் துறை அமைச்சரிடமிருந்தோகூட அல்ல, CEO-விடமிருந்துகூட இப்படி ஒரு அணுகுமுறையை இவர்களால் எதிர்பார்க்க முடியாது.
இப்போது இறையன் அவர்களின் முறை. இதுவே வரலாற்றில் எங்கும் கிடைக்காத புதிய அணுகுமுறைதான். முதல்வர் பேசி முடித்த பிறகு ஒரு அதிகாரி பேசுவது என்பதும், அதை முதல்வர் அமர்ந்து காது கொடுத்து கேட்பதும், என் வாழ்நாளில் நான் பார்த்து அறியாதது.
அவரும், முதல்வருக்கு சற்றும் குறைவுபடாத எளிமையாகவே பேசுகிறார்.
‘இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வேணும்னு அய்யா முடிவு செஞ்சுட்டாங்க. இனி அதை முடிக்காம என்னை அவங்க தூங்க விடமாட்டாங்க. எனக்கும் இந்த ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் கட்ட ஆசைதாங்க அய்யா’.
இதைக் கேட்டதும், முதல்வர் சிறு குழந்தைபோல மகிழ்ந்து சிரித்து கை தட்டுகிறார்.
‘ஆனா, பக்கத்து ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. ஒரு பள்ளிக்கூடத்துக்கும் இன்னொரு பள்ளிக்கூடத்துக்கும் இவ்வளவு இடைவெளியாச்சும் இருக்க வேணும்னு சட்டம் இருக்கு. அதுதான் இந்த ஊருக்கு பள்ளியைக் கொண்டு வருவதில் சிக்கலா இருக்குது’.
இறையன் அவர்கள் முடிப்பதற்குள் முதல்வர் எழுந்துவிட்டார்,
‘அந்தச் சிக்கலை தீர்ப்பீங்கன்னுதானே உங்ககிட்ட கோரிக்கையை நம்பிக்கையோடு வைச்சிருக்கோம். அய்யா, இரக்கத்தோடு ஏதாவது செய்யுங்க. புள்ளைங்க படிக்கனும்’.
‘அதத்தாங்க அய்யா சொல்ல வந்தேன்’ என்று புன்னகையுடன் தொடங்கினார் இறையன் அவர்கள். அந்த ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் இடையே ஒரு சின்ன வாய்க்கால் இருந்தது. அது மிகச் சின்ன வாய்க்கால். அதில் பாத அளவுக்கு மேல் ஒருபோதும் தண்ணீர் போனதில்லை. போக, ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையே அதை விளையாட்டா தாண்டிவிட முடியும். அந்த வாய்க்காலைத்தான் இயற்கைத் தடை என்பதாகக் காரணம் காட்டி வேண்டுமானால், இந்தக் கிராமத்துக்கு பள்ளிக்கூடத்தைக் கொண்டுவந்து விடலாம் என்று இறையன் அவர்கள் சொன்னதும் மகிழ்வோடு எழுந்த காமராசர், ‘அப்புறம் என்ன, இந்த ஊருக்கான பள்ளிக்கூடத்து வேலைய உடனே ஆரம்பிச்சுடலாம்னேன்’ என்று சொன்னார். அந்த ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம் வந்தது.
ஏதேனும் ஓட்டை உடைசல் காரணம் கிடைக்காதா, அதைப் பயன்படுத்தி பள்ளிக்கூடம் கொண்டுவந்துவிட மாட்டோமா என்று அக்கறைப்பட்ட காலம் அது. ஏதேனும் சந்து பொந்து கிடைத்துவிடாதா, இருக்கிற பள்ளியை மூடிவிட மாட்டோமா என்று அலைகிற காலம் இது.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை தாண்டிக் கடந்துவிடக்கூடிய ஒரு கையளவு வாய்க்காலைக் காரணம் காட்டி, அந்த வாய்க்காலைத் தாண்டி பள்ளிக்குப் போகும்போது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொல்லி, இந்தப் பக்கமே ஒரு பள்ளியைக் கொண்டு வந்த தமிழ்நாட்டில்தான், கீழ்க்காணும் செய்தியும் பல்லை இளித்துக்கொண்டு எகத்தாளமாய்ச் சிரிக்கிறது.
2015, ஜூலை மாதத்தில் ஒருநாள், ஒரு பத்திரிகையில் வந்த அந்தச் செய்தி இதுதான்,
வேதாரண்யத்துக்கு அருகே உள்ள ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குத்தான் குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும். இரண்டு ஊர்களுக்கும் இடையே ஒரு ஆறோ வாய்க்காலோ ஓடுகிறது. தாண்டியெல்லாம் அதனை கடக்க இயலாதபடி அகலமானது அது. கரையும் உயரமானது. எனவே, பனைமரங்களால் ஆன ஒரு பாலத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். பாலம் என்றால் வேறேதோ கனவுக்குள் எல்லாம் நுழைந்து பறக்கத் தொடங்கிவிடக்கூடாது. ஒரு ஆறேழு பனைமரங்களை பக்கம் பக்கமாக அடுக்கிவைத்து பாலம் மாதிரி செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.
அதில் மிதிவண்டிகளைத் தள்ளிக்கொண்டும், நடந்துமாக குழந்தைகள் கடப்பது மிக ஆபத்தானதாக உள்ளது. வழுக்கிவிடும். பிடிமானங்கள் ஏதும் இல்லாததால், தவறியும் விழுந்திருக்கிறார்கள் குழந்தைகள் அப்படித் தவறி விழுந்த சில குழந்தைகள், தண்ணீரில் அடித்தும் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவை எல்லாம் போதாதென்னும், இருக்கிற அந்தப் பாலமும் வயதாகி, உளுத்து நாளுக்கு நாள் சிதைந்துகொண்டே போகிறது.
எனவே, பள்ளி தொடங்கும் நேரத்துக்கும் முடியும் நேரத்துக்கும் வாய்க்காலின் இரு கரைகளிலும் அந்தந்த ஊர் மக்கள் திரண்டு நின்று, வாய்க்காலை குழந்தைகள் பத்திரமாகக் கடப்பதை உறுதி செய்த பின்னரே நகர்கின்றனர். தப்பித் தவறி குழந்தைகள் வாய்க்காலுக்குள் விழுந்துவிட்டால், குதித்துக் காப்பாற்றுவதற்காகவே இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அவ்வாறாக அவர்கள் குதித்துக் காப்பாற்ற வேண்டிய சூழல்களும் கடந்த காலத்தில் வாய்த்திருக்கின்றன.
பள்ளிக்குப் போகும்போதோ வரும்போதோ வாய்க்காலில் விழுந்து குழந்தைகள் இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த ஊர் மக்களைப் பொறுத்தவரை, கல்வி மிகவும் ஆபத்தானது. அவர்களால் முடிந்தவரை எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
இந்த ஆபத்துக்குப் பயந்து, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்களும் அந்த ஊரில் இருக்கவே கூடும். அவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் உயிர் என்பது, குழந்தைகளின் கல்வியைவிட முக்கியமானது. ஆக, பல குழந்தைகளையும் பல குழந்தைகளது கல்வியையும் இந்த வாய்க்கால் காவு வாங்கியிருக்கிறது.
இந்த ஒரு பாலத்தை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதே வாய்க்காலில், இதே நிலையில் இன்னும் எத்தனை பாலங்களோ? மேலும், இத்தகைய பாலங்களும் இல்லாத நிலையில், எத்தனைக் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல் இருக்கிறார்களோ?
இதேபோன்று எத்தனை வாய்க்கால்கள் இந்தப் பகுதியில் உள்ளனவோ? நாடு முழுவதும் இதுபோன்று கடந்து செல்வதற்கு பால வசதியற்ற வாய்க்கால்கள் எத்தனையோ?
அன்றைய செய்தித்தாள், அந்தப் பகுதி மக்களிடம் சிறிய அளவில் ஒரு நேர்காணலை நிகழ்த்தியுள்ளது. அனைவரிடமும் தனித்தனியாக, ‘அரசிடம் நீங்கள் வைக்கக்கூடிய கோரிக்கை என்ன?’ என்ற ஒரே ஒரே கேள்வியைத்தான் வைத்துள்ளது.
பல பத்து ஆண்டுகளாக தங்களது கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்வதற்காக, தங்களது அனைத்துவிதமான முயற்சிகளும் போராட்டங்களும் தோற்றுப்போய் சோர்வுற்ற நிலையில் இருந்தாலும், இந்த நேர்காணல் தங்களது நியாயமான கோரிக்கையை அரசிடம் கொண்டுபோய் சேர்த்துவிடாதா, தங்களுக்கும் விடிந்துவிடாதா என்ற ஒருவித நம்பிக்கையோடு அந்த மக்கள் ஒரே குரலில் சொல்லியிருக்கிறார்கள்,
‘எங்களுக்கு ஒரு சிமெண்டுப் பாலம் வேண்டும்’
அவர்கள் கோரிக்கைக்காக நாமும் குரல் கொடுக்கவே செய்கிறோம். அவர்கள் ஊரில் இருக்கும் அந்த அரதப் பழைய மரப்பாலத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு சிமெண்டு பாலத்தை அரசு கட்டித் தரட்டும்.
அந்தப் பாலத்தின் மூலம், அந்த இரண்டு ஊர் மக்களும் கூடி வாழ, இரண்டு ஊர்க் குழந்தைகளும் கூடி விளையாட வாய்ப்புகள் பெருகட்டும். வணிகம் பெருகி செழிக்கட்டும்.
ஆனால், பிள்ளைகள் பள்ளிக்குப் போய் வருவதற்கு மட்டும் அந்தப் பாலத்தின் தேவை இல்லாமல் போகட்டும்.
தெருதோறும் தெருதோறுமான தமிழ்ப் பள்ளிகளை மகாகவி கனவு கண்டான்.
ஊருக்கு ஒரு அரசுப் பள்ளியேனும் கனவு காண்போம்; அதற்கு உழைப்போம்; வென்றெடுப்போம்.

Monday, October 12, 2015

பாராட்டி விடுவோம்

சிலரை பாராட்டுகிற பாக்கியம் நம் வாழ்நாளுக்குள் ஒரு முறையேனும் வாய்த்துவிடுமா என்ற அய்யம் சிலர்மீது நமக்கு வரும்தான். அப்படித்தான் ஒபாமாவையாவது நம் வாழ்நாளில் பாராட்டுவதாவது என்றுதான் நினைத்திருந்தேன் . ஆனால் நன்றியோடு பாராட்ட வேண்டிய சூழலை எனக்கு ஒபாமா தந்திருக்கிறார். ஒபாமாவிற்கு காலம் தந்திருக்கிறது.
ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் இதுவரை மூன்றுமுறை சந்தித்திருக்கிறார்கள்.
முதல்முறை சந்தித்தபோது காஸ்ட்ரோ ”மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்று வாஞ்சையோடு கை குலுக்கியதை ஒபாமாவும் வெள்ளைமாளிகையும் அலட்சியப் படுத்தியதை பார்த்தோம்.
இரண்டாம் முறை சந்திப்பிற்குப் பிறகு “ நடைமுறைப் படுத்தவே முடியாத கொள்கையை இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா கடைபிடித்து வருகிறது” என்றார்.
மூன்றாவது சந்திப்பிற்குப் பிறகு “ பொருளாதாரத் தடை நீக்கம் தவிர்க்க முடியாதது” என்றிருக்கிறார்.
கியூபா மீதான பொருளாதாரத் தடை குறித்த ஒபாமாவின் கருத்துக்களே மேற்சொன்ன இரண்டும்.
இதற்கு பாராளுமன்றத்தில் அவர் கொஞ்சம் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் ஒபாமாவின் இந்தக் கருத்து அமெரிக்க மக்களின் கருத்து. அமெரிக்க மக்கள் எந்த ஒரு நாட்டின் மீதான அமெரிக்காவின் மேலான்மையையோ போரையோ ஒருபோதும் விரும்பியது இல்லை. இன்னும் சொல்லப் போனால் தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையே அவர்களுக்கு பேரதிகமாய் இருக்கிறது.
மக்களின் கருத்தை ஏற்ற் நடைமுறைப் படுத்த முன் வந்துள்ள ஒபாமாவை விரைவு படுத்துங்கள் என்ற கோரிக்கையோடு நன்றி சொல்லி பாராட்டுகிறேன்

Sunday, October 11, 2015

குட்டிப் பதிவு 46

காலையில் சிறப்பு வகுப்பு. 
ஆர்த்தி என் செல்லப் பிள்ளைகளுள் ஒருத்தி. எதையாவது எடக்கு மடக்காக செய்துவிட்டு வந்து நிற்பாள். இன்றும் அப்படித்தான்.
”எதையாவது தப்பு தப்பா செஞ்சுட்டு வந்து நில்லு”
என் கோவம் எடுபடவில்லை.
சிரிக்கிறாள்.
“எதுக்கு இளிக்கிற”
இது முடிந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மயக்கம் வருகிறது. காரணம் தெரியும். வியாழன் மதியம் சாப்பிட்டது. தேநீரிலேயே போகிறது. தாமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை மட்டும் என்னை மருத்துவரிடம் துறத்துகிறது.
என்னைவிட குறைந்தபட்சம் 15 வயது குறைந்தவர்.
“இப்படி எதையாவது தப்பு தப்பா பண்ணி உடம்பக் கெடுத்துக் கொண்டுதான் எப்பவும் வறீங்க சார்”
சிரிக்கிறேன்.
“எதுக்கு சார் சிரிக்கிறீங்க.”

Saturday, October 10, 2015

2 சாதி அசிங்கம்

“In a suspected case of honour killing, a 20 – year old girl was hacked to death by her grand father over her love affair with a youth from a different caste.

The accused, identified as veerasamy (66) of andipalayam near virudhachalam, surrendered before cholatharam police”

என்ற செய்தியைத் தருகிறது 23.09.2015 அன்று வெளி வந்த THE HINDU.

அந்தச் செய்தியை தமிழ்ப் படுத்தினால் வேற்று சாதிக்காரனை காதலித்த ரமணி தேவி என்கிற இருபது வயதேயான தனது பேத்தியை அருவாளால் வெட்டிக் கொன்ற வீராசாமி என்கிற அறுபத்தியாறு வயது கிழவன் விருதாச்சலம் அருகிலுள்ள சோலத்தரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்று வரும்.

இந்தக் கொலையோடு ஒரு தற்கொலையும் நம் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.

மிகுந்த கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.  எங்காவது போய் ஓவென்று  குரலெடுத்து    கதறித் தீர்த்து விடலாமா என்கிற கையறு நிலைக்கு அடிக்கடி சென்று மீளவேண்டி இருக்கிறது.

என்னதான் நடக்கிறது என் மண்ணில்? திரும்பிய திசையெல்லாம் கொலை, தற்கொலை என்றே செய்திகள் வருகின்றனவே. இது கண்டு துடிக்கக்கூட வேண்டாம் சற்றே நெளியுமளவிற்கேனும் துளியும் ஈரமற்று சுத்தமாய் உலர்ந்து போனதா தமிழ் பூமி?

விட்டிருந்தால் கல்புர்கியின் கொலையைக் கூட காதல் தோல்வியினால் நிகழ்ந்த தற்கொலை என்று புனைந்திருப்பார்களே?

இந்தக் கொலைகளைவிடவும் தற்கொலைகளைவிடவும் அவற்றை நியாயப் படுத்தி சிலர் அடிக்கும் அலப்பறை கொலைகளைவிடவும் தற்கொலைகளைவிடவும் கோரமானதாக இருக்கிறதே. இதுகண்டும் மௌனித்திருக்குமளவிற்கு மரத்தே போனோமா நாம்? இந்த மௌனம்தான் இரண்டு மூன்று தலைமுறையில் நாம் பெற்ற கல்வியின் கொடையா?

யோசித்துப் பாருங்கள், ரமணியைக் கொன்றது வேறு சாதிக்காரனா? சொந்த சாதி என்பதெல்லாம் கடந்து சொந்த தாத்தா கொன்றிருக்கிறார். ஏன் கொல்கிறார். கொல்லவில்லை, யார் கொன்றது என்று தெரியவில்லை என்றெல்லாம் சொல்லவில்லை. கொன்றது தானென்று வலிய சென்று சரணடைகிறார். சொந்தப் பேத்தியை கொன்றதற்கான காரணத்தை பகிரங்கமாக சொல்கிறார்.

ஒரு கொலை நடந்திருக்கிறது. கொன்றவரை பிடிக்க வேண்டிய தேவையே இல்லாமல் தானாகவே வந்து சரணடைந்திருக்கிறார். கொலைக்கான காரணத்தை (MOTIVE) அவரே சொல்கிறார். பிறகு இந்த வழக்கில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. ஏன் இப்படி மூச்சிறைக்க இதற்கெதிராய் போராடுகிறீர்கள் என்று போராடும் நம்மைப் பார்த்து சிலர் முனுமுனுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் இதை சத்தம் போட்டும் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

ஏன் எட்வின், ஒரு கொலை நடந்திருக்கு. கொலையாளி சரண்டராயிட்டான். இந்த இடத்துலேயே பிரச்சினை முடிந்து போச்சே. இனி கோர்ட்டாச்சு தீர்ப்பாச்சு. இதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு போடுகிறீர்கள்என்று கேட்கிறார் எனது ஆசிரியத் தோழர் ஒருவர்.

இரண்டு பேர் பழகியது பெரியவர்களுக்குப் பிடிக்கவில்லை. அடுத்தவண்ட்ட போயி எங்க புள்ளைகூட பழகாதன்னுகூட சொல்ல்ல. ரொம்ப டீசண்டா அவங்க புள்ளைட்ட சொல்லிப் பார்த்தாங்க. சொன்ன பேச்ச கேட்கல. போட்டுட்டார். அவரு பேத்திய அவரு கொல்றாரு. அதக் கேட்க நீங்க யாரு. கோர்ட்ல பார்த்துக் கொள்கிறோம் என்ற அவர்களது குறைந்த அளவிலான சத்தம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் பெருங்கூச்சலாய் விரைந்து உருவெடுக்கும்.

விரும்பிய ஒரு பெண்ணும் பையனும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள், அல்லது சேர்ந்து வாழ்கிறார்கள். பெண்ணின் பெற்றோர் புகார் கொடுக்கிறார்கள். இருவரையும் அழைத்து வந்த காவல்துறையினர் பெண்ணின் பெற்றோரோடு பெண்ணை அனுப்பி வைக்கிறார்கள். அங்கிருந்த படியே ரமணி தனது காதலனோடு பேசுகிறாள். தடுத்துப் பார்த்த தாத்தா முடியாத நிலையில் கொலை செய்திருக்கிறார்.

இது நியாயம் என்று உரக்கப் பேசத் துவங்கியிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தக் கொலையைவிடவும் அபாயமானதாய் நான் பார்க்கிறேன்.
நீதி சுத்ததிற்காக சோழ மன்னன் தன் சொந்த மகனையே தேர்க் காலில் இட்டு கொன்றதற்கு கொஞ்சமும் குறைச்சலானதல்ல இந்தக் கிழவன் செய்த கொலை என்று இவர்கள் பேச ஆரம்பிப்பதற்குள் இந்த இளைய சமூகத்தை நாம் விழித்திருக்குமாறு உசுப்பிவிட வேண்டும்.

அவர்களிடம் சரியானத் திட்டம் இருக்கிறது. இதை அவர்கள் ஒருபோதும் கொலை என்று சொல்வதில்லை. கௌரவக் கொலை என்கிறார்கள். கொலையில் என்ன கௌரவக் கொலை கிடக்கிறது? இந்து போன்ற பத்திரிக்கைகளும் இதை கௌரவக் கொலை என்றே எழுதுவதில் உள்ளர்த்தம் இல்லை என்றெல்லாம் போகிற போக்கில் போய்விட முடியாது.

கேட்டால் சாதிதான் அவர்களது கௌரவம் என்கிறார்கள். சாதித் தூய்மை மிக முக்கியம் என்கிறார்கள். சாதிக் கலப்பு தங்களது சாதியின் தூய்மையை புனுத்த்தைக் கெடுத்துப் போடும் என்கிறார்கள். இதைத் தான் PURITANISM செய்த்து ஏறத்தாழ.

அந்தக் கிழவனை சாதித் தூய்மைக்காக சொந்தப் பேத்தி என்றும் பார்க்காமல் கொலை செய்த தியாகி என்று தொடங்கி இதை ஒரு அறமென கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். அந்தக் கிழவனுக்கு கோவில் கட்டி குல த்ய்வமாய் வழிபட ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இதை அறமென பள்ளிகளில் சொல்லித் தரக் கூறுவார்கள்.

கட்டாயத் தற்கொலையும் கொலைதான் என்பார் வைரமுத்து. அந்த வகையில் விஷ்ணுப்ரியாவின் தற்கொலையும் கொலைதான். அதற்கு எடுத்த எடுப்பிலேயே CBI விசாரனை தேவை இல்லை என்கிறார் மாண்பமை முதல்வர்.

சில விஷயங்களை நாம் செய்யலாமா என்பதை அக்கறையுள்ளவர்கள் பார்வைக்காக வைக்க ஆசைப் படுகிறேன்.

1)   ஒடுக்கப் பட்ட சாதிகள் தங்களுக்குக்குள் ஏற்றத் தாழ்வை கடைபிடிப்பதை கைவிடச் செய்ய வேண்டும். (ஒடுக்கப் பட்ட சாதியிலும் கௌரவக் கொஅலை நடந்திருக்கிறது.)
2)   ஒடுக்கப் பட்ட சாதிகளின் தலவர்கள் தங்களுக்குள் உள்ள பிணக்குகளை எல்லாம் மறந்து ஒன்றிணைய வேண்டும். குறைந்த பட்சம் ஒரு கூட்டமைப்பை நோக்கியாவது நகர்தல் வேண்டும்.
3)   இடது சாரிகள், பெரியாரிஸ்டுகள்அம்பேத்காரிஸ்டுகள்,, தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து களமேக வேண்டும்.
4)   சாதி தூய்மைனது என்ற கருத்தியல் அசிங்கமானது என்பதை இளைஞர்கள் உணரும் வகையில் அவர்களிடம் கொண்டு போக வேண்டும்
5)   கிராமம் கிராமமாக இளைஞர்களுக்கு வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் என்ற சகல வடிவங்களையும் கையெடுக்க வேண்டும்.
6)   பாடப் புத்தகங்களின் அட்டையில் தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று எழுதினால் போதாது, சாதி அசிங்கமானது என்ற அறத்தை பாடப் புத்தகங்களில் கேட்டு போராட வேண்டும்.

7)   அறவழிப் போராட்டங்களின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும்.   

Friday, October 2, 2015

65/66, காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2015

டி.எம்.எஸ் குரல்

எப்போதாவது ஆக அபூர்வமாக நிகழ்வது நேற்று மாலை பயணத்தில் நிகழ்ந்தது. பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அந்தப் பேருந்தின் ஓட்டுனர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் பாடல்களை போட்டிருந்தார்.

அண்ணா, அங்கிள்என்ற கெஞ்சல்களோ பிள்ளைகளின் வேறு எந்தவிதமான நிர்ப்பந்தங்களோ அவரிடம் செல்லுபடியாகவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பிள்ளைகள்வாட்ஸ் அப்பிலும் கேம்சிலும் வகுப்பறைக் கலாட்டாக்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதிலுமாக மூழ்கிப் போயினர்.

தங்களுக்குள் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு பொதுவில் கறைவதும் எதிலிருந்தும் தங்களை அந்நியப் படுத்திக் கொண்டு தங்களுக்குள் கறைந்து போவதும் விடலைப் பிள்ளைகளுக்கே உரித்தான தனிப்பட்ட குணம்.

இப்பல்லாம் யாரு சார் இப்படி பாடுறா?” என்று சன்னமாகத்தான் ஆரம்பித்தார் பக்கத்தில் அமர்ந்திருந்தவர். போகப் போக அவரது வேகம் அதிகரித்தது. அவரைப் பொறுத்தவரை பழைய பாடல்களே இனிமையானவை, உன்னதமானவை, அர்த்தம் உள்ளவை, ஆபாசம் இல்லாதவை. இப்போதையப் பாடல்களில் முக்கலும் முனகலும் தாண்டி மருந்துக்கும் நல்லதாய் எதுவும் இல்லை.

அப்படியெல்லாம் இல்லை, நல்லதுகளும் இப்போதும் உள்ளன, அல்லதுகள் அப்போதும் இருக்கவே செய்தன என்கிற எனது வாதத்தை கேட்கிறவராகவே அவர் தெரியவில்லை.

எங்க காலத்துல எல்லாம் நாங்க…” என்று ஏதாவது ஒரு புள்ளியில் துவங்காத ஐம்பதைக் கடந்தவர்கள் யாரேனும் இருப்போமா தெரியவில்லை. நானும் இதற்கு விதி விலக்கெல்லாம் இல்லைதான்.

ஒருமுறை இப்படித்தான்எங்க காலத்துல நாங்கலெல்லாம்என்று கிஷோரிடம் எதற்கோ சொன்னபோதுஉங்க காலத்துல மட்டும் என்ன? நீங்களும் கணக்கு செஞ்சுட்டு போயிருக்க மாட்டீங்க, உங்க கணக்கு சார் முட்டிக்கால் போட வச்சிருப்பார். மளிக்க் கடைக்கு போயிட்டு வந்த்துல கமிஷன் போட்டுட்டு அப்பாயிகிட்ட அடி வாங்கியிருபீங்கஎன்று திருப்பினான். அன்று அடங்கியது. அதன் பிறகு அப்படிப் பேசிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாயிருக்கிறேன்.

அது மாதிரியான ஐம்பதின் புலம்பல் இது என்று நகர எத்தனித்தவனை அடுத்து அவர் சொன்னது யோசிக்க வைத்தது. ‘அவர் சிவாஜிக்கு பாடினா சிவாஜி பாடுற மாதிரியே இருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பாடினா எம்.ஜி.ஆர் பாடுற மாதிரியே இருக்கும் சார்என்று அவர் சொன்னது அவரது சொந்தக் கருத்தாக மட்டும் படவில்லை. அது தமிழகத்தின் ஒரு திரளின் அறுபது ஆண்டுகால பொதுக் கருத்து. இதை நானும் பல நேரம் சொல்லியிருக்கிறேன்தான். ஏன், சிவாஜியே இதை ஒரு மேடையில் சொன்னதை தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன்,.

இது உண்மைதானா?

கலங்கரை விளக்கம் பட்த்தில் டி.எம்.எஸ் பாடியபொன்னெழில் பூத்த்து புது வானில்என்று பாடியது எம்.ஜி.ஆரின் குரலா?

தென்னை வனத்தினில்
உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண்பட்டு புண்பட்ட கன்னத்தை
உன் பட்டு கைதொட பாடுகிறேன்’ 

என்று உசிர் கசிய டி.எம்.எஸ் பாடுவது எம்.ஜி ஆரின் குரலிலா. இப்படி உயிர் கசிய யாசித்து யார் பாடினாலும் காதலி விழுந்துவிட மாட்டாளா? இதே பாடலை விஜய் நடிக்கும் படத்தில் டி.எம். எஸ் பாடினாலும் பொருந்தவே செய்யும். அதே மாதிரிதான்ஊட்டி வரை உறவுபடத்தின்பூ மாலையில்…’ பாடலை இன்று அஜித்திற்கு வைத்து டி.எம்.எஸ் பாடினாலும் பொருந்தவே செய்யும்.  

காரணம் அது காதலன் குரல்.

அப்படித்தான்நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலேஎன்பது சிவாஜியின் குரலல்ல. அது ஒரு அண்ணனின் குரல். ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்என்பது சிவாஜியின் குரல் அல்ல. சத்தியமாய் அது ஒரு குடிகாரனின் குரல்.

அழகென்ற சொல்லுக்கு முருகாஎன்பதை முருகன் என்ற ஒரு கடவுள் இருந்து கேட்டால் அப்படியே கூச்சத்தில் நெளிந்துஇதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலீங்களா டி.எம்.எஸ் என்று கேட்பான்.

அது பக்தனின் குரல்.

டி.எம்.எஸ் அவர்களின் குரல் ஏதோ ஓரிரு நடிகர்களுக்கு மட்டுமே பொருந்திப் போவதாய் சுருக்கிக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு கிராமத்திலிருக்கும் அண்ணன் ஒருவன்மலர்ந்தும் மலராதமுனுமுனுத்தாலும் அவனுக்கும் பொருந்தும். காதலிக்கும் தூத்துக்குடி இளைஞன் ஒருவன்முத்துக் குளிக்க வாரியளா?’ பாடினால் அது அவன் குரலாகும்.

இனியாவது அவரது குரல் அண்ணன்களின் குரல், காதலனின் குரல், இளைஞனின் குரல், பக்தனின் குரல் என்று சரியாய் புரிந்து கொள்வோம்.
************************************************************************ 

வரும் அக்டோபர் இதழ் காக்கையின் ஐம்பதாவது இதழ். ஆமாம் நண்பர்களே, காக்கைக்கு நான்கு முடிந்து ஐந்து தொடங்குகிறது.

முடியுமா?” என்றார்கள் சிலர். ‘முடியாது, ஓடி விடுவார்கள்என்றார்கள் சிலர். ஏன் இவ்வளவு, “விடுவோமாஎன்றுகூட சிலர் கிளம்பினார்கள்.

எல்லாம் கடந்து காக்கை உலகம் முழுக்க பறந்து கொண்டே இருக்கிறது. காக்கை இல்லாத நாடு சிங்கப்பூர் என்று இனி யாரும் சொல்ல முடியாது.

தனது நாற்பத்தி ஒன்பதாவது பயணத்திற்காக காக்கை தயாராக நிற்கிறது. இது ஏதோ முத்தையாவால், சந்திர சேகரால், ஏகனால், எட்வினால் மட்டும் என்று எங்களில் யாரும் நினைக்க வில்லை. இது முழுக்க முழுக்க உங்களால் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு காக்கையின் நன்றிகள்.
புதிய படைப்பாளிகள், புதிய சந்தாக்கள், புதிய வாசகர்கள் என்று கொண்டு வந்து குவியுங்கள் என்று உங்களிடம் கேட்கிற உரிமை எனக்குண்டு: கேட்கிறேன்

நினைத்துப் பார்க்கிறேன்,

SRV முதல்வர் தோழர் துளசி அவர்களிடம் அவரது அலுவலகம் சென்று காக்கையை அறிமுகம் செய்கிறேன். மகிழ்கிறார். ஆயுள் சந்தா கேட்கிறேன். மறுக்கிறார். ஆனால் சந்தா தருகிறார். சிறு பத்திரிக்கைகளின் ஆயுள் குறித்த அவரது அய்யம்தான் என்னுடையதும் என்பதால் அவரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஐந்தாறு மாதங்கள் கழிகிறது. ஒருநாள் அலைபேசியில் பிடிக்கிறார்.

எட்வின், காக்கையை தொடர்ந்து படிக்கிறேன். ரொம்ப நல்லா வருது. நிர்வாகத்தோடு பேசி ஏதேனும் ஒரு பெருந்தொகையை ஏற்பாடு செய்கிறேன்என்கிறார்.” சரிங்க துளசி, நன்றிஎன்று முடிக்கிறேன்.

பிறகு அவ்வப்போது காக்கை குறித்து பேசுவார், விவாதிப்பார் ஆனால் அந்த விஷயம் குறித்து இருவருமே பேசியதில்லை.

திடீரென ஒருநாள் (28.08.15 என்று நினைக்கிறேன்) பிடிக்கிறார். நாளை எங்கள் பள்ளியில்அறிஞர்களைக் கொண்டாடுவோம்என்று ஒரு நிகழ்ச்சியைக் கொண்டாடுகிறோம். பத்து அறிஞர்களைக் கௌரவிக்கிறோம். பதினோராவது அறிஞராக காக்கையை கௌரவிக்க ஆசைப் படுகிறோம். வந்து பணமுடிப்பையும் எங்கள் அன்பையும் மரியாதையையும் ஏற்ரு சிறப்பிக்க வேண்டும் என்கிறார். போக முடியாதபடிக்கு ஒரு கூட்டம் இருந்தது.

25000 ரூபாயை அனுப்பி வைத்தார்.

நன்றி சொன்னேன். “எதற்கு எட்வின். காக்கையோடு நாங்களும் இருக்கிறோம்என்றார். விடாமல், “இது முதல் தவணைதான் துளசிஎன்கிறேன். “நிச்சயமாகஎன்கிறார்.

இதற்கு இரண்டு பாராக்களுக்கு முந்தைய பாராவை அடித்துக் கொண்டிருந்தபோது அழைத்தார். பேச்சின் முடிவில் சொன்னார், “ விரைவில் இதற்கு சற்றும் குறையாத ஒரு தொகை காக்கைக்கு வரும் எட்வின்

இவற்றைத் தவிர திருப்பித் தர ஏதுமில்லை என்னிடம்,

என் அன்பும் முத்தங்களும் துளசி.


    

விரைந்து நடக்கட்டும்

சிலரை பாராட்டுகிற பாக்கியம் நம் வாழ்நாளுக்குள் ஒரு முறையேனும் வாய்த்துவிடுமா என்ற அய்யம் சிலர்மீது நமக்கு வரும்தான். அப்படித்தான் ஒபாமாவையாவது நம் வாழ்நாளில் பாராட்டுவதாவது என்றுதான் நினைத்திருந்தேன் . ஆனால் நன்றியோடு பாராட்ட வேண்டிய சூழலை எனக்கு ஒபாமா தந்திருக்கிறார். ஒபாமாவிற்கு காலம் தந்திருக்கிறது.
ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் இதுவரை மூன்றுமுறை சந்தித்திருக்கிறார்கள்.
முதல்முறை சந்தித்தபோது காஸ்ட்ரோ ”மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்று வாஞ்சையோடு கை குலுக்கியதை ஒபாமாவும் வெள்ளைமாளிகையும் அலட்சியப் படுத்தியதை பார்த்தோம்.
இரண்டாம் முறை சந்திப்பிற்குப் பிறகு “ நடைமுறைப் படுத்தவே முடியாத கொள்கையை இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா கடைபிடித்து வருகிறது” என்றார்.
மூன்றாவது சந்திப்பிற்குப் பிறகு “ பொருளாதாரத் தடை நீக்கம் தவிர்க்க முடியாதது” என்றிருக்கிறார்.
கியூபா மீதான பொருளாதாரத் தடை குறித்த ஒபாமாவின் கருத்துக்களே மேற்சொன்ன இரண்டும்.
இதற்கு பாராளுமன்றத்தில் அவர் கொஞ்சம் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் ஒபாமாவின் இந்தக் கருத்து அமெரிக்க மக்களின் கருத்து. அமெரிக்க மக்கள் எந்த ஒரு நாட்டின் மீதான அமெரிக்காவின் மேலான்மையையோ போரையோ ஒருபோதும் விரும்பியது இல்லை. இன்னும் சொல்லப் போனால் தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையே அவர்களுக்கு பேரதிகமாய் இருக்கிறது.
மக்களின் கருத்தை ஏற்ற் நடைமுறைப் படுத்த முன் வந்துள்ள ஒபாமாவை விரைவு படுத்துங்கள் என்ற கோரிக்கையோடு நன்றி சொல்லி பாராட்டுகிறேன்

அழைப்பு 16

இன்று மதியம் மதுரையில் உரையாற்றுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம்.


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...