Friday, October 2, 2015

65/66, காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2015

டி.எம்.எஸ் குரல்

எப்போதாவது ஆக அபூர்வமாக நிகழ்வது நேற்று மாலை பயணத்தில் நிகழ்ந்தது. பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அந்தப் பேருந்தின் ஓட்டுனர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் பாடல்களை போட்டிருந்தார்.

அண்ணா, அங்கிள்என்ற கெஞ்சல்களோ பிள்ளைகளின் வேறு எந்தவிதமான நிர்ப்பந்தங்களோ அவரிடம் செல்லுபடியாகவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பிள்ளைகள்வாட்ஸ் அப்பிலும் கேம்சிலும் வகுப்பறைக் கலாட்டாக்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதிலுமாக மூழ்கிப் போயினர்.

தங்களுக்குள் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு பொதுவில் கறைவதும் எதிலிருந்தும் தங்களை அந்நியப் படுத்திக் கொண்டு தங்களுக்குள் கறைந்து போவதும் விடலைப் பிள்ளைகளுக்கே உரித்தான தனிப்பட்ட குணம்.

இப்பல்லாம் யாரு சார் இப்படி பாடுறா?” என்று சன்னமாகத்தான் ஆரம்பித்தார் பக்கத்தில் அமர்ந்திருந்தவர். போகப் போக அவரது வேகம் அதிகரித்தது. அவரைப் பொறுத்தவரை பழைய பாடல்களே இனிமையானவை, உன்னதமானவை, அர்த்தம் உள்ளவை, ஆபாசம் இல்லாதவை. இப்போதையப் பாடல்களில் முக்கலும் முனகலும் தாண்டி மருந்துக்கும் நல்லதாய் எதுவும் இல்லை.

அப்படியெல்லாம் இல்லை, நல்லதுகளும் இப்போதும் உள்ளன, அல்லதுகள் அப்போதும் இருக்கவே செய்தன என்கிற எனது வாதத்தை கேட்கிறவராகவே அவர் தெரியவில்லை.

எங்க காலத்துல எல்லாம் நாங்க…” என்று ஏதாவது ஒரு புள்ளியில் துவங்காத ஐம்பதைக் கடந்தவர்கள் யாரேனும் இருப்போமா தெரியவில்லை. நானும் இதற்கு விதி விலக்கெல்லாம் இல்லைதான்.

ஒருமுறை இப்படித்தான்எங்க காலத்துல நாங்கலெல்லாம்என்று கிஷோரிடம் எதற்கோ சொன்னபோதுஉங்க காலத்துல மட்டும் என்ன? நீங்களும் கணக்கு செஞ்சுட்டு போயிருக்க மாட்டீங்க, உங்க கணக்கு சார் முட்டிக்கால் போட வச்சிருப்பார். மளிக்க் கடைக்கு போயிட்டு வந்த்துல கமிஷன் போட்டுட்டு அப்பாயிகிட்ட அடி வாங்கியிருபீங்கஎன்று திருப்பினான். அன்று அடங்கியது. அதன் பிறகு அப்படிப் பேசிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாயிருக்கிறேன்.

அது மாதிரியான ஐம்பதின் புலம்பல் இது என்று நகர எத்தனித்தவனை அடுத்து அவர் சொன்னது யோசிக்க வைத்தது. ‘அவர் சிவாஜிக்கு பாடினா சிவாஜி பாடுற மாதிரியே இருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பாடினா எம்.ஜி.ஆர் பாடுற மாதிரியே இருக்கும் சார்என்று அவர் சொன்னது அவரது சொந்தக் கருத்தாக மட்டும் படவில்லை. அது தமிழகத்தின் ஒரு திரளின் அறுபது ஆண்டுகால பொதுக் கருத்து. இதை நானும் பல நேரம் சொல்லியிருக்கிறேன்தான். ஏன், சிவாஜியே இதை ஒரு மேடையில் சொன்னதை தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன்,.

இது உண்மைதானா?

கலங்கரை விளக்கம் பட்த்தில் டி.எம்.எஸ் பாடியபொன்னெழில் பூத்த்து புது வானில்என்று பாடியது எம்.ஜி.ஆரின் குரலா?

தென்னை வனத்தினில்
உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண்பட்டு புண்பட்ட கன்னத்தை
உன் பட்டு கைதொட பாடுகிறேன்’ 

என்று உசிர் கசிய டி.எம்.எஸ் பாடுவது எம்.ஜி ஆரின் குரலிலா. இப்படி உயிர் கசிய யாசித்து யார் பாடினாலும் காதலி விழுந்துவிட மாட்டாளா? இதே பாடலை விஜய் நடிக்கும் படத்தில் டி.எம். எஸ் பாடினாலும் பொருந்தவே செய்யும். அதே மாதிரிதான்ஊட்டி வரை உறவுபடத்தின்பூ மாலையில்…’ பாடலை இன்று அஜித்திற்கு வைத்து டி.எம்.எஸ் பாடினாலும் பொருந்தவே செய்யும்.  

காரணம் அது காதலன் குரல்.

அப்படித்தான்நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலேஎன்பது சிவாஜியின் குரலல்ல. அது ஒரு அண்ணனின் குரல். ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்என்பது சிவாஜியின் குரல் அல்ல. சத்தியமாய் அது ஒரு குடிகாரனின் குரல்.

அழகென்ற சொல்லுக்கு முருகாஎன்பதை முருகன் என்ற ஒரு கடவுள் இருந்து கேட்டால் அப்படியே கூச்சத்தில் நெளிந்துஇதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலீங்களா டி.எம்.எஸ் என்று கேட்பான்.

அது பக்தனின் குரல்.

டி.எம்.எஸ் அவர்களின் குரல் ஏதோ ஓரிரு நடிகர்களுக்கு மட்டுமே பொருந்திப் போவதாய் சுருக்கிக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு கிராமத்திலிருக்கும் அண்ணன் ஒருவன்மலர்ந்தும் மலராதமுனுமுனுத்தாலும் அவனுக்கும் பொருந்தும். காதலிக்கும் தூத்துக்குடி இளைஞன் ஒருவன்முத்துக் குளிக்க வாரியளா?’ பாடினால் அது அவன் குரலாகும்.

இனியாவது அவரது குரல் அண்ணன்களின் குரல், காதலனின் குரல், இளைஞனின் குரல், பக்தனின் குரல் என்று சரியாய் புரிந்து கொள்வோம்.
************************************************************************ 

வரும் அக்டோபர் இதழ் காக்கையின் ஐம்பதாவது இதழ். ஆமாம் நண்பர்களே, காக்கைக்கு நான்கு முடிந்து ஐந்து தொடங்குகிறது.

முடியுமா?” என்றார்கள் சிலர். ‘முடியாது, ஓடி விடுவார்கள்என்றார்கள் சிலர். ஏன் இவ்வளவு, “விடுவோமாஎன்றுகூட சிலர் கிளம்பினார்கள்.

எல்லாம் கடந்து காக்கை உலகம் முழுக்க பறந்து கொண்டே இருக்கிறது. காக்கை இல்லாத நாடு சிங்கப்பூர் என்று இனி யாரும் சொல்ல முடியாது.

தனது நாற்பத்தி ஒன்பதாவது பயணத்திற்காக காக்கை தயாராக நிற்கிறது. இது ஏதோ முத்தையாவால், சந்திர சேகரால், ஏகனால், எட்வினால் மட்டும் என்று எங்களில் யாரும் நினைக்க வில்லை. இது முழுக்க முழுக்க உங்களால் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு காக்கையின் நன்றிகள்.
புதிய படைப்பாளிகள், புதிய சந்தாக்கள், புதிய வாசகர்கள் என்று கொண்டு வந்து குவியுங்கள் என்று உங்களிடம் கேட்கிற உரிமை எனக்குண்டு: கேட்கிறேன்

நினைத்துப் பார்க்கிறேன்,

SRV முதல்வர் தோழர் துளசி அவர்களிடம் அவரது அலுவலகம் சென்று காக்கையை அறிமுகம் செய்கிறேன். மகிழ்கிறார். ஆயுள் சந்தா கேட்கிறேன். மறுக்கிறார். ஆனால் சந்தா தருகிறார். சிறு பத்திரிக்கைகளின் ஆயுள் குறித்த அவரது அய்யம்தான் என்னுடையதும் என்பதால் அவரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஐந்தாறு மாதங்கள் கழிகிறது. ஒருநாள் அலைபேசியில் பிடிக்கிறார்.

எட்வின், காக்கையை தொடர்ந்து படிக்கிறேன். ரொம்ப நல்லா வருது. நிர்வாகத்தோடு பேசி ஏதேனும் ஒரு பெருந்தொகையை ஏற்பாடு செய்கிறேன்என்கிறார்.” சரிங்க துளசி, நன்றிஎன்று முடிக்கிறேன்.

பிறகு அவ்வப்போது காக்கை குறித்து பேசுவார், விவாதிப்பார் ஆனால் அந்த விஷயம் குறித்து இருவருமே பேசியதில்லை.

திடீரென ஒருநாள் (28.08.15 என்று நினைக்கிறேன்) பிடிக்கிறார். நாளை எங்கள் பள்ளியில்அறிஞர்களைக் கொண்டாடுவோம்என்று ஒரு நிகழ்ச்சியைக் கொண்டாடுகிறோம். பத்து அறிஞர்களைக் கௌரவிக்கிறோம். பதினோராவது அறிஞராக காக்கையை கௌரவிக்க ஆசைப் படுகிறோம். வந்து பணமுடிப்பையும் எங்கள் அன்பையும் மரியாதையையும் ஏற்ரு சிறப்பிக்க வேண்டும் என்கிறார். போக முடியாதபடிக்கு ஒரு கூட்டம் இருந்தது.

25000 ரூபாயை அனுப்பி வைத்தார்.

நன்றி சொன்னேன். “எதற்கு எட்வின். காக்கையோடு நாங்களும் இருக்கிறோம்என்றார். விடாமல், “இது முதல் தவணைதான் துளசிஎன்கிறேன். “நிச்சயமாகஎன்கிறார்.

இதற்கு இரண்டு பாராக்களுக்கு முந்தைய பாராவை அடித்துக் கொண்டிருந்தபோது அழைத்தார். பேச்சின் முடிவில் சொன்னார், “ விரைவில் இதற்கு சற்றும் குறையாத ஒரு தொகை காக்கைக்கு வரும் எட்வின்

இவற்றைத் தவிர திருப்பித் தர ஏதுமில்லை என்னிடம்,

என் அன்பும் முத்தங்களும் துளசி.


    

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...