Thursday, May 19, 2022

முந்தாநாள் பார்த்த மனிதனைப் போலவே

 முந்தாநாள் பார்த்த

காக்காவைப் போலவே இருக்கிறது
இந்தக் காக்காவும்
முந்தாநாள் பார்த்த
காக்கா போலவே
இந்தக் காக்காவும் இருப்பதாக
உங்களிடம் நான்
சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவே
முந்தாநாள் பார்த்த மனிதனைப் போலவே இருந்தான் அவனென்று
தன் தோழமைகளிடம்
சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்
அந்தக் காக்காவும்

மாயைகள் சமயத்தில் இனிக்கும்

 அப்பா மாதிரியான இன்னொருவரும்

ஞாயிற்றுக் கிழமை
செத்துப் போனார்
காரியமின்று
வாசலில் தேநீர் பருகிக் கொண்டிருப்பவர்களைக் கடக்கையில்
என்னைப் பார்த்து புன்னகைக்கிறார் அவர்
அவர்தான் செத்துப் போனாரே
யாரது பின்ன?
யாராவாவது இருக்கும்
இருக்கட்டும்
அவராகவே கொள்தல் மாயையாகவே இருக்கட்டும்
மாயைகள் சமயத்தில் இனிக்கும்

Tuesday, May 17, 2022

எமது திரளின் கடைசி வரிசையில் இருந்து நான் வருகிறேன்

 திரு குருமூர்த்தி அவர்களுக்கு,

வணக்கம்
அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில் எமக்கு விமர்சனம் இருந்தாலும் உங்களது எழுத்துக்களுக்கு இருந்த அழுத்தத்தை அறிந்திருக்கிறேன்
அன்றைய ஒன்றிய அரசுக்கு அது சங்கடத்தைக் கொடுத்ததையும் நான் அறிவேன்
ஆனால் அதற்காக சமீப காலமாக நீங்கள் உளறிக் கொண்டிருப்பதை சகித்துக் கொண்டே கடந்துவிட முடியாது
வங்கியில் வேலைபார்த்த நல்லவர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள்
கழிசடைகள்தான் இப்போது வங்கியில் இருக்கிறார்கள்
என்று கூறி இருக்கிறீர்கள்
அதற்கு அந்த மேடையில் இருந்த ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலாதேவி மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன
வெளிப்படையாகப் பேசிவிடுவோமே
வங்கியில் சூத்திரர்களையும் பட்டியல் இனத்தவர்களையும்தான் நீங்கள் கழிசடைகள் என்று சொல்கிறீர்கள்
இன்னும் கொஞ்சம் காலம் கழித்து பார்ப்பனர் தவிர்த்த அனைவரையும் கழிசடைகள் என்று நீங்கள் அழைக்கக் கூடும்
உங்களை அதே மாதிரி இழி சொல்லால் விளிக்க எனக்கு என் இயக்கம் ஒருபோதும் அனுமதி தராது
ஆகவே உங்களோடும் உரையாடவும் விவாதிக்கவுமே நான் ஆசைப்படுகிறேன்
வங்கியில் வேலை பார்ப்பவர்கள் கழிசடைகள் என்று குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள்
இல்லை என்கிறேன்
உங்களிடம் இருக்கும் தரவுகளோடு வாருங்கள்
அவசரம் எல்லாம் இல்லை
நேரம் எடுத்துக் கொண்டு தயாரிப்புகளோடு வாருங்கள்
எங்கள் தரப்பில்
எமது பொதுச் செயலாளர் தோழர் Aadhavan Dheetchanya எல்லாம் இல்லை
எமது குரு Tamil Selvan இல்லை
எமது ஆசான் Sap Marx இல்லை
வங்கி ஊழியர்களின் நட்சத்திரம் Mathavaraj இல்லை
எமது திரளின் கடைசி வரிசையில் இருந்து நான் வருகிறேன்
விவாதிப்போம்
கத்தக் கூடாது,
கூச்சலிடக் கூடாது,
விவாதத்தை நாகரீகமாக நடத்த வேண்டும்
கழிசடை என்ற உங்கள் உளறலை பொய் என்று நிறுவுகிறேன்
நிறுவி விட்டால் ரிசர்வ் வங்கிக் குழுவில் இருந்து கழன்றுகொள்ள வேண்டும்
எப்போது?
எங்கு?
எதிர்பார்த்து,
இரா.எட்வின்
Like
Comment
Share

31 comments


Friday, May 13, 2022

அதற்கும் சரக்கு ரயிலுக்கும் என்ன தொடர்பு?

 சரக்கு ரயில் பற்றாக்குறைதான் இந்தியாவின் உ.பி, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் மின்வெட்டு நிகழ்வதற்கான காரணங்களுல் மிக முக்கியமானது என்றால் நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதல்லவா?

ஆனால் அதுதான் உண்மை
அனல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது
அங்கு நிலவும் மின்வெட்டிற்கான காரணம்
அனல் மின் உற்பத்தி குறைவிற்கு காரணம் நிலக்கரி பற்றாக்குறை என்றால் நம்பலாம்
ஆனால் இந்தியாவில் 28 சதவிகித அளவிற்கு நிலக்கரி உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும்
அதே சமயம் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு கிட்டத்தட்ட 13 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும்
”கோல் இந்தியா” கூறுவதை மேற்கோள்காட்டி 12.05.2022 நாளிட்ட ”தீக்கதிர்” கூறுகிறது
எல்லாம் சரி,
அதற்கும் சரக்கு ரயிலுக்கும் என்ன தொடர்பு?
போதுமான சரக்கு ரயில்களை கோல் இந்தியாவிற்கு ஒதுக்காததுதான் இதற்கு காரணம் என்றும் அந்த செய்தி கூறுகிறது
சரி இதனால் ஒன்றிய அரசிற்கு என்ன லாபம்?
சரக்கு ரயில்களைக் குறைத்தால்,
மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி போகாது
அரசின் மின் உற்பத்தி பாதிக்கும்
வேறு வழியே இல்லாமல் ஒன்றிய அரசின் நண்பர்களான பெரு முதலாளிகளிடம் மாநில அரசுகள் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க நேரும்
கூட்டிக் கழித்து கணக்குப் பார்க்க வேண்டுகிறேன்
#சாமங்கவிய சரியாக 2 மணி 30 நிமிடங்கள்
12.032022

Thursday, May 12, 2022

ராஜபக்‌ஷேவின் வீடு எரியும் வெளிச்சத்தில் இருந்து...

 அன்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்
இலங்கை எரிந்து கொண்டிருக்கிறது
ராஜபக்‌ஷேவின் வீடு எரியும் வெளிச்சத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்
ஆனால் அப்படித் தெரியவில்லை
நேற்றைக்கு முந்தாநாள்,
இந்தியாவிலும் இதே பொருளாதார நிலைதான் இருக்கிறது.
ஆனால் இந்தியர்களைப் பாருங்கள். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இப்படிக் கொந்தளிப்பது நியாயமா?
என்று தனது மக்களிடம் கேட்டிருக்கிறார்
ஆக,
இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையைப் போலவே இருப்பதாகத்தான் அதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்
ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லாமையும்
அதனால் கையில் காசு இல்லை
மறுபுறம் விலைவாசி உயர்வும்
அதிலும் குறிப்பாக உணவுப் பொருள் பற்றாக்குறையும்
அவற்றின் விலைவாசி உயர்வும்தான்
இலங்கை எரிந்துகொண்டிருப்பதற்கான முக்கிய காரணம்
உலக நாடுகள் இலங்கையின் நிலையை சாந்தப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அங்குள்ள மக்கள் தொகை அப்படி
இந்தியாவிலும் இது நிகழ வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறியாதது அல்ல ஸ்டாலின் சார்
இந்தியாவில் கோதுமை உற்பத்தி குறைந்திருக்கிறது என்பதே செய்திகள் வழி வரும் உண்மை
இந்திய உணவு கோதுமையை சார்ந்தது
இறக்குமதியும் இப்போது சாத்தியமில்லை
காரணம் இந்தியப் பணத்தின் மதிப்பு அவ்வளவு வீழ்ந்திருக்கிறது
100 ரூபாய்க்கு வாங்கிய கோதுமையை 115 ரூபாய்க்கு வாங்க வேண்டும்
இதுவும் இறக்குமதியைப் பாதிக்கும்
இந்த நிலையில் அரசின் சேமிப்புக் கிட்டங்கியில் சேமிப்பு இருந்தால் ஓரளவு தப்பிக்கலாம்
ஒன்றியத்தில் அப்படி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை
உங்களிடம் இரண்டு கோரிக்கைகள் முதல்வரே
எதிர்க்கட்சி முதல்வர்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கண்ணுக்கு கிட்டத் தெரிகிற பஞ்சத்தைப் பற்றியும்
அரசின் கிடங்குகளை நிரப்பவும் வலியுறுத்துங்கள்
நெல் உற்பத்தியை அதிகரிக்கவும்
உற்பத்தி செய்யப்படும் நெல்லை வீணாகமல் சேமிக்கவும் ஏற்பாடுகளை செய்யுங்கள்
அன்புடன்,
இரா.எட்வின்

Wednesday, May 11, 2022

அனைவருக்காகவும் அனைவரும் களமேகும்போதுதான் எதுவும் வசப்படும்

 அன்புமிக்க தோழர் சுகிர்தராணிக்கு,

வணக்கம்
பழைய ஓய்வூதியத்திட்டம் வருவதற்கு சாத்தியமில்லை என்று நமது நிதி அமைச்சர் கூறியது ஒட்டிய எனது பதிவிற்கு நீங்கள் பின்னூட்டம் வைத்திருந்தீர்கள்
மகிழ்ச்சியாக இருந்தது
அதில் இரண்டு விஷயங்களை நீங்கள் சொல்லி இருந்தீர்கள்
பழைய ஓய்வூதியத்தில் இருப்பவர்கள், அனைவருக்கும் அது வேண்டும் என்று போராடுவதாகவும்
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு அந்த அளவிற்கு அக்கறை இருப்பதாகப் படவில்லை என்றும்
தேர்வுத் தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பதன் மூலம் அரசின் கவனத்தை இதன் பக்கம் திருப்ப முடியுமா என்றும்
கூறி இருந்தீர்கள்
இதை முன்வைத்து உங்களோடும் நண்பர்களோடும் கொஞ்சம் உரையாட விருப்பம்
மயிலாப்பூரில் ஏழை மக்களின் வசிப்பிடங்களை தரைமட்டமாக்கியபோது தீக்குளித்த மனிதன்
“ஊமை ஜனங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தியதாக கேள்விப் படுகிறேன்
அதுதான் தோழர் நமக்கான வழிகாட்டும் குரல்
அவர்களது மௌனத்தின் பின்னால் பயம் உள்ளிட்ட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்
இருக்கட்டும்
அவர்களது வலி நமக்குப் புரியும்
அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மாவட்டத்தில் பலமுறை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவன் என்ற வகையில்
சரியான நேரத்தில் சரியான திட்டம் உங்களிடமிருந்து வருவதாகவே பார்க்கிறேன்
மகிழ்ச்சியாக இருக்கிறது
அதுவும் வெற்றிகரமாக முடியுமா என்பது சந்தேகம்தான் தோழர்
2003 வாக்கில் அனைத்து சங்கங்களும் சேர்ந்து ஒருநாள் தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்தோம்
ஜெயலலிதா கோவமடைந்தார்
அன்று நாகை முகாம் முற்றாகப் பணியைப் புறக்கணித்தது
மற்றபடி தமிழகம் முழுக்க 13 பேரோ அதற்கு கொஞ்சம் கூடுதலான எண்ணிக்கையிலோதான் புறக்கணித்தோம்
எனவே இதில் எனக்கு இந்த நிமிடத்தில் நம்பிக்கை இல்லை
நாம் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டிருக்கிறோம் தோழர்
எழுபதுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் போராடியபோது அன்றைய முதல்வர் MGR அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை என்றும்
தஞ்சை மாவட்டத்து விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கவே
அடுத்தநாளே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் என்றும்
போராட்ட காலத்திற்கான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றுவிட்டார்கள்
ஆனால் அந்த ஒருநாள் கூலி விவசாயத் தொழிலாளிக்களுக்கு இழப்புதான் என்றும்
TNPGTA வின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் கே.ராஜேந்திரன் அடிக்கடி சொல்வார்
அந்த விவசாயிகள் போராடியபோது இயக்கமாக ஆசிரியர்கள் அவர்கள் பின்னே போகவில்லை தோழர்
தூத்துக்குடி போராட்டத்தின்போது உங்களது பங்கெடுப்பு பெருமிதத்தைத் தந்தது
ஆனால் ஆசிரியப் பேரினம் அந்த விஷயத்தில் இயக்கப்படவில்லை
போக்குவரத்து ஊழியர்களின் பிஎஃப் உள்ளிட்ட பணம் அவர்களுக்குப் போகாதபோதும் நாம் அங்கே எட்டிப் பார்க்கவில்லை
சாதிய ஆணவக் கொலைகள் நடந்தபோது ஆசிரியர்கள் எட்டிப்பார்க்கவில்லை
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது
“ஊருக்கு ஒரு ஜல்லிக்கட்டு
சேரிக்கொரு ஜல்லிக்கட்டு”
என்பது மாதிரி நீங்கள் வலியோடு எழுதியதாக நினைவு
அதைக்கூட நாம் ஒன்றாய் சிந்திக்கவில்லை
அனைத்து பிரிவினரும் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டு கிடக்கும்வரை விடியாது தோழர் சுகிர்தராணி
அனைவருக்காகவும் அனைவரும் களமேகும்போதுதான் எதுவும் வசப்படும்
உங்களைப்போன்ற இளைஞர்கள் முன்கை எடுங்கள்
தொடர்ந்து வருகிறோம்
அன்புடன்,
இரா.எட்வின்

Monday, May 9, 2022

பள்ளியில் இருந்து தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தரமாக நீக்கிவிட்டால் அவன் எங்கு சென்று தன்னை நெறிப்படுத்திக் கொள்வான்?

 

மரியாதைக்குரிய கல்வி அமைச்சருக்கு,

வணக்கம்

“மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பதிந்து அவர்களை நிரந்தரமாக பள்ளியில் நீக்கப்படுவார்கள்”

என்று இன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறீர்கள்

ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்தவிதமான பாதிப்பையும் எவரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற உங்களது அக்கறைக்கு அடி மனசிலிருந்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஆனாலும் இதுகுறித்து உங்களோடு உரையாடுவதற்கு கொஞ்சம் இருக்கிறது சார்

ஒரு குழந்தை ஒரு ஆசிரியையை வகுப்பறையில் வைத்து கொலை செய்தான்

ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்டு ஏறத்தாழ அனைவரும் மாணவர்களுக்கு எதிராகப் பொங்கினோம்

ஏதோ பிள்ளைகள் என்றாலே குறைந்த பட்சம் பொறுக்கிகள் என்பதாக ஒரு பொதுப் புத்தியை கட்டமைப்பதில் பலர் வெற்றி கண்டனர்

அப்படி அன்று பொங்கியவர்களில் சிலருக்கு இன்றைய தேதியில் அன்று கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் மறந்து போயிருக்கும்

பலருக்கு அன்று அந்த ஆசிரியையை கொலை செய்த குழந்தையின் பெயர் மறந்து போயிருக்கும்

அநேகமாக அனைவருக்குமந்த வழக்கின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாது சார்

அப்புறம் பாருங்கள்,

பெண் குழந்தைகளிடம் யாரோ சில ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்துகொள்ள,

ஆசிரியர்கள் அனைவரும் காமக் கொடூரன்கள் போலவும்கூட பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டது

இன்றைய தேதியில் அந்த ஆசிரியர்கள்மீதான வழக்கின் நிலை குறித்தும் கவலையற்றுப் போனோம்

இப்போது எங்கள் சகோதரர்களிடம் சில குழந்தைகள் தகாத முறையில் நடந்துகொள்ள

நீங்கள் இப்படியான ஒரு அறிக்கையை வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது

இவற்றை தடுப்பதற்கு சில சட்டப் பாதுகாப்பு அனைவருக்கும் தேவைதான் என்பதை நான் ஏற்கவே செய்கிறேன்

ஆனாலும் எங்கள் அன்பிற்குரிய அமைச்சரிடம் உரிமையோடு சிலவற்றை வைப்பதற்கு ஆசைப்படுகிறேன்

பள்ளியில் இருந்து தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தரமாக நீக்கிவிட்டால் அவன் எங்கு சென்று தன்னை நெறிப்படுத்திக் கொள்வான்?

பல வருடங்களுக்கு முன்னால் எமது பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை மது அருந்திவிட்டு வகுப்பில் வாந்தி எடுத்துவிட்டான்

பெண் குழந்தைகளின் பெற்றோர் அந்த மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால்தான் தங்களது குழந்தைகளை எங்கள் பள்ளியில் படிக்க வைக்க முடியும் என்று துடிக்கிறார்கள்

நாங்கள் அவர்களிடம் அந்த மாணவனுக்காக மன்னிப்போடு மன்றாடுகிறோம்

முடியாது போகவே எங்கள் தலைமை ஆசிரியர் TC தருவதற்கு தயாராகிறார்

அப்போது அவனது தாய் உரத்த குரலெடுத்து,

“அவன் பள்ளிக்கு சரக்கடித்துவிட்டு வந்து வாந்தி எடுத்தான் என்பதற்காக எங்களை அழைத்து இப்படி விசாரிக்கிறீர்களே,

வீட்டிலும் இதை செய்கிறாந்தான். என்றைக்காவது உங்க க்ளாஸ் சார கூட்டிட்டு வாடானு நாங்க சொல்லி இருக்கோமா சார்

பாடம் படிக்க மட்டும் அல்ல பள்ளி. நெறிப்படுத்தவும்தான் “ என்றார்

அனைவரும் அவன் படிப்பதற்கு சம்மதித்து விட்டனர்

அவன் MBA முடித்து நல்ல வேலைக்குப் போனான்

என் அன்பிற்குரிய மகேஷ் சார்,

நாங்கள் இறுக்கத்தோடு வகுப்பிற்குள் நுழைகிறோம்

பிள்ளைகள் இறுக்கத்தோடு எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள்

இறுக்கத்தோடே நடத்துகிறோம்

இறுக்கத்தோடே கேட்கிறார்கள்

இறுக்கத்தோடு வெளியேறுகிறோம்

எதைவிடவும் இறுக்கத்தோடு எழுந்து நன்றி சொல்கிறார்கள்

புன்னகையோடு வகுப்பிற்குள் நுழந்து புன்னகையோடே வெளிவரும் சூழல் வந்தால் இந்த நிகழ்வுகளில் 75 சதம் சரியாகும்

இதை எப்படிக் கொண்டுவருவது?

இதற்கான உரையாடலை ஏற்பாடு செய்யுங்கள்

குழந்தைகளை,

ஆசிரியர்களை,

அலுவலகப் பணியாளர்களை,

பெற்றோரை,

மாணவர் சங்கப் பிரதிநிதிகளை,

ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை,

அதிகாரிகளை

அக்கறை உள்ளவர்களை

ஒன்றிணைத்து ஒரு உரையாடலுக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்யுங்கள்

ஆசிரியர் மாணவர் உறவு செறிவுறும்

உங்களது இன்றைய அறிக்கை எங்கள்மீதான உங்களது அக்கறையில் இருந்து வந்த்து

அதற்காக எம் நன்றிகள்

அன்புடன்,

இரா.எட்வின்.

 

 

Sunday, May 8, 2022

ஊர்தோறும் தெரு தோறும் தமிழ்ப் பள்ளிகளைத் துவக்கு

”தாயே

தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது எப்படி சாப்பிடுவது?
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது எப்படி கேட்பது?
ஆசிரியரே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது எப்படி படிப்பது?
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
முதலில் என் பசிக்கு
ஒரு பதிலை சொல்லுங்கள்”
என்ற அண்ணன் எஸ். அறிவுமணியின் கவிதைக்கு 07.05.2022 அன்று சட்டமன்றத்தில் பதிலைக் கூறி இருக்கிறார் முதல்வர்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்
இந்தக் கேள்வியை முதன் முதலாக அறிவுமணிதான் எழுப்பியதாகவும் கொள்ளக் கூடாது
ஸ்டாலின்தான் முதன் முதலாக அதற்கான பதிலைத் தந்துள்ளதாகவும் கொண்டுவிடக் கூடாது
இந்தப் பசியும் பழசுதான்
அதனைத் தீர்ப்பதற்கான சிறு சிறு முயற்சிகளும் பழசுதான்
ஒருமுறை அன்றைய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு ஆய்விற்காக ஒரு பள்ளிக்கு செல்கிறார்
கூட்டு வழிபாட்டின்போது குழந்தைகள் சிலர் மயக்கம்போட்டு விழுகிறார்கள்
காரணம் பசி என்பதும்
பசிக்கு காரணம் காலை உணவு வழங்க இயலாத குடும்பச் சூழல் என்பதும் அவருக்குப் புரிகிறது
அன்றைய முதல்வர் காமராசரோடு இதுகுறித்து உரையாடுகிறார்
மதிய உணவுத் திட்டம் வருகிறது
தமிழ்ச் சமூகம் கொண்டாடித் தீர்க்கிறது
அன்று அந்தக் குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்தது காலை உணவின்மையால்
அவர்களுக்கு கிடைத்ததோ மதிய உணவு
ஆக
குழந்தைகளின் காலைப்பசி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது
அதை புரிந்துகொண்டவராக திரு ஸ்டாலின் இருக்கிறார் என்பதை இந்த அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது
இந்த அறிவிப்பிற்கான மூன்று காரணங்களை முதல்வர் கூறி இருக்கிறார்
1) குழந்தைகள் சீக்கிரமே வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்புவதால் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள்
2) வீடு தூரத்தில் இருப்பதால் சாப்பிடாமல் வருகிறார்கள்
3) காலை உணவு தருகிற சூழலில் பல குடும்பங்கள் இல்லை
இதை இரண்டாக குறைக்கலாம்
பள்ளிகள் தூரமாக இருப்பதால் குழந்தைகள் சீக்கிரமே கிளம்ப வேண்டி இருக்கிறது. ஆகவே சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது ஒன்று
பல குடும்பங்களில் காலை உணவிற்கு வழி இல்லை என்பது இரண்டு
தீர்வு எளிதானவை
அருகமைப் பள்ளிகளை அமைக்க வேண்டும்
“ஊர்தோறும் தெரு தோறும் தமிழ்ப் பள்ளிகளைத் துவக்கு” என்றான் பாரதி
தமிழ்ப் பள்ளிகளாகத் துவக்க வேண்டும்
எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
முடியும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...