Monday, May 9, 2022

பள்ளியில் இருந்து தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தரமாக நீக்கிவிட்டால் அவன் எங்கு சென்று தன்னை நெறிப்படுத்திக் கொள்வான்?

 

மரியாதைக்குரிய கல்வி அமைச்சருக்கு,

வணக்கம்

“மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பதிந்து அவர்களை நிரந்தரமாக பள்ளியில் நீக்கப்படுவார்கள்”

என்று இன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறீர்கள்

ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்தவிதமான பாதிப்பையும் எவரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற உங்களது அக்கறைக்கு அடி மனசிலிருந்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஆனாலும் இதுகுறித்து உங்களோடு உரையாடுவதற்கு கொஞ்சம் இருக்கிறது சார்

ஒரு குழந்தை ஒரு ஆசிரியையை வகுப்பறையில் வைத்து கொலை செய்தான்

ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்டு ஏறத்தாழ அனைவரும் மாணவர்களுக்கு எதிராகப் பொங்கினோம்

ஏதோ பிள்ளைகள் என்றாலே குறைந்த பட்சம் பொறுக்கிகள் என்பதாக ஒரு பொதுப் புத்தியை கட்டமைப்பதில் பலர் வெற்றி கண்டனர்

அப்படி அன்று பொங்கியவர்களில் சிலருக்கு இன்றைய தேதியில் அன்று கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் மறந்து போயிருக்கும்

பலருக்கு அன்று அந்த ஆசிரியையை கொலை செய்த குழந்தையின் பெயர் மறந்து போயிருக்கும்

அநேகமாக அனைவருக்குமந்த வழக்கின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாது சார்

அப்புறம் பாருங்கள்,

பெண் குழந்தைகளிடம் யாரோ சில ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்துகொள்ள,

ஆசிரியர்கள் அனைவரும் காமக் கொடூரன்கள் போலவும்கூட பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டது

இன்றைய தேதியில் அந்த ஆசிரியர்கள்மீதான வழக்கின் நிலை குறித்தும் கவலையற்றுப் போனோம்

இப்போது எங்கள் சகோதரர்களிடம் சில குழந்தைகள் தகாத முறையில் நடந்துகொள்ள

நீங்கள் இப்படியான ஒரு அறிக்கையை வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது

இவற்றை தடுப்பதற்கு சில சட்டப் பாதுகாப்பு அனைவருக்கும் தேவைதான் என்பதை நான் ஏற்கவே செய்கிறேன்

ஆனாலும் எங்கள் அன்பிற்குரிய அமைச்சரிடம் உரிமையோடு சிலவற்றை வைப்பதற்கு ஆசைப்படுகிறேன்

பள்ளியில் இருந்து தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தரமாக நீக்கிவிட்டால் அவன் எங்கு சென்று தன்னை நெறிப்படுத்திக் கொள்வான்?

பல வருடங்களுக்கு முன்னால் எமது பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை மது அருந்திவிட்டு வகுப்பில் வாந்தி எடுத்துவிட்டான்

பெண் குழந்தைகளின் பெற்றோர் அந்த மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால்தான் தங்களது குழந்தைகளை எங்கள் பள்ளியில் படிக்க வைக்க முடியும் என்று துடிக்கிறார்கள்

நாங்கள் அவர்களிடம் அந்த மாணவனுக்காக மன்னிப்போடு மன்றாடுகிறோம்

முடியாது போகவே எங்கள் தலைமை ஆசிரியர் TC தருவதற்கு தயாராகிறார்

அப்போது அவனது தாய் உரத்த குரலெடுத்து,

“அவன் பள்ளிக்கு சரக்கடித்துவிட்டு வந்து வாந்தி எடுத்தான் என்பதற்காக எங்களை அழைத்து இப்படி விசாரிக்கிறீர்களே,

வீட்டிலும் இதை செய்கிறாந்தான். என்றைக்காவது உங்க க்ளாஸ் சார கூட்டிட்டு வாடானு நாங்க சொல்லி இருக்கோமா சார்

பாடம் படிக்க மட்டும் அல்ல பள்ளி. நெறிப்படுத்தவும்தான் “ என்றார்

அனைவரும் அவன் படிப்பதற்கு சம்மதித்து விட்டனர்

அவன் MBA முடித்து நல்ல வேலைக்குப் போனான்

என் அன்பிற்குரிய மகேஷ் சார்,

நாங்கள் இறுக்கத்தோடு வகுப்பிற்குள் நுழைகிறோம்

பிள்ளைகள் இறுக்கத்தோடு எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள்

இறுக்கத்தோடே நடத்துகிறோம்

இறுக்கத்தோடே கேட்கிறார்கள்

இறுக்கத்தோடு வெளியேறுகிறோம்

எதைவிடவும் இறுக்கத்தோடு எழுந்து நன்றி சொல்கிறார்கள்

புன்னகையோடு வகுப்பிற்குள் நுழந்து புன்னகையோடே வெளிவரும் சூழல் வந்தால் இந்த நிகழ்வுகளில் 75 சதம் சரியாகும்

இதை எப்படிக் கொண்டுவருவது?

இதற்கான உரையாடலை ஏற்பாடு செய்யுங்கள்

குழந்தைகளை,

ஆசிரியர்களை,

அலுவலகப் பணியாளர்களை,

பெற்றோரை,

மாணவர் சங்கப் பிரதிநிதிகளை,

ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை,

அதிகாரிகளை

அக்கறை உள்ளவர்களை

ஒன்றிணைத்து ஒரு உரையாடலுக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்யுங்கள்

ஆசிரியர் மாணவர் உறவு செறிவுறும்

உங்களது இன்றைய அறிக்கை எங்கள்மீதான உங்களது அக்கறையில் இருந்து வந்த்து

அதற்காக எம் நன்றிகள்

அன்புடன்,

இரா.எட்வின்.

 

 

2 comments:

  1. மிக நல்ல பதிவு, சார்.

    எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன்/அவள் நல்லவனா(ளா)வதும் தீயவனா(ளா) வதும் அன்னை வளர்ப்பில் மட்டுமல்ல, பள்ளியின் வளர்ப்பிலும் இருக்கிறது. ஆசிரியர் மாணவர் உறவு நல்ல வகையில் அமைய வேண்டும். இப்போதைய சமூக ஊடகங்கள் மிகவும் கேவலமான நிலையில் இருப்பதால் பள்ளியி/ஆசிரியர்களின் பொறுப்பு இன்னும் கூடுகிறது. வழிநடத்தல் மிக மிகத் தேவை.

    கீதா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...