”
திருப்பி அனுப்பிய
விருதுகளை உரியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.” என்று சொல்ல வேண்டிய நிலைமை சாகித்திய அகாதமிக்கு
இதற்குமுன் எப்போதும் நேர்ந்ததுண்டா என்று தெரியவில்லை.
பத்தோடு
பதினொன்றாக கல்புர்கி அவர்களின் கொலை குறித்த கொந்தளிப்பும்
பையப் பைய நீர்த்துப் போகும் என்ற ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையே அகாதமியின் நம்பிக்கையாகவும்
இருந்திருக்கக் கூடும்.
ஏறத்தாழ ஆளும் வர்க்கத்தின்
ஒருவகைப் பிரதிநிதியே சாகித்திய அகாதமியும். அதே நேரத்தில் அவர்களின் எதிர்பார்ப்பு அப்படி
ஒன்றும் பெரிதாய் பொய்த்துப் போனதாகவும் கொள்ள முடியாது.
ஒரு
மாபெரும் ஆளுமையின் கொலையானது வெகுஜனத் திரளின் கொந்தளிப்பை அது பெற்றிருக்க வேண்டிய
அளவிற்கு சம்பாதிக்கவில்லை என்று சொல்வோமேயானால் அது நமது பெருந்தன்மையின் வெளிப்பாடாகவே
அமையும். இந்தத் தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக
இந்தக் கொலை குறித்த அசைவு ஏதும் இல்லை என்பதை நாம் முதலில் ஏற்க வேண்டும். எவ்வளவு பெரிய ஆளுமையின், இந்தச் சமூகத்தை நேசித்த ஒரு சிந்தனையாளனின்
கொலை அது. இந்த இழப்பின் பெரு வலியை எம் ஜனங்கள்
அறிந்திருக்கவில்லை.
ஒரு ரௌடியின் கொலைக்குகூட
அவன் சார்ந்த பகுதி கொந்தளிக்கும். அந்த
அளவில்கூட இந்த மாமேதைக்கு நிகழவில்லை. இதற்கு
என்ன காரணம் என்று தேடினால்
‘அவரை வெகு ஜனங்களில்
யாருக்கும் தெரியாது’
என்ற உண்மை நம் முகமறையும்.
ஒரு
சமூகச் சொத்தின் கொலைக்குப் பிறகு ஒன்றுதிரண்டு அவருக்காக குரல் கொடுக்கும் இந்த அறிவு
ஜீவி உலகம் ( அல்லது என்னைப் போன்ற வாசக உலகம் ) அவர் உயிரோடு இருந்தபோது அவரை ஒன்று திரண்டு
மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தோமா என்றால் இல்லையே. இதுதான் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்
பட்டபோதும் நடந்தது.
ஒரே ஒரு சன்னமான முன்னேற்றம்
என்னவெனில் நரேந்திர தபோல்கரின் மரணத்தைவிட கல்பர்கியின் கொலை ஓரளவிற்கு பொதுத் திரளிடம்
வெளிச்சத்தைப் பெற்றுள்ளது.
இந்த
அளவிற்கு எதிர்ப்பு எழுத்தாளுமைகளிடமிருந்து கிளம்பும் என்று மத அடிப்படைவாதிகளும்
அகாதமியும் எதிர்பார்த்திருக்க வில்லை.
வழக்கமாக
விருதுகளை செலவழிக்கும் அகாதமி இன்று திரும்பி வீசப்பட்ட விருதுகளால் நிறம்பி வழிகிறது. உலகச் சான்றோர்களின் உமிழ்தலுக்கு ஆளாகிவிடக்
கூடாது என்கிற அச்சமும் தன்மீது போலியாகவேனும் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிம்பம் முற்றாய்
சேதப் பட்டுவிடக் கூடாதே என்ற கவலையும்தான் அகாதமியை கண்டனம் செய்ய வைத்திருக்கிறது.
இந்த
அளவிற்கேனும் எதிர்ப்பு கிளம்பியிருக்காவிட்டால் ஒருக்கால் இன்னொமொரு கன்னட எழுத்தாளுமையான
பகவானையும் நாம் இழந்திருக்க வாய்ப்புண்டு.
கல்பர்கி
அவர்களின் கொலையை ஆதரித்து ட்விட்டரில் புவத் ஷெட்டி எழுதுகிறார் என்றால் அதன் பொருள்
என்ன? புவத் ஷெட்டி ஒன்றும் கண்டுபிடிக்கவே
இயலாத சராசரிக்கும் கீழான மனிதனல்ல. பந்தவால்
என்ற பகுதியின் பஜ்ரங்தல் அமைப்பின் இணைச் செயலாளர் அவர். கல்புர்கியின் கொலையை நியாயப் படுத்திக்
கொண்டாடும் அதே ட்விட்டரில் இதே நிலைதான் பகவானுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்.
ஒரு
சாதாரண முகநூல் நிலைத் தகவலுக்காக ஒரு பெண் குழந்தையும் அதற்கு லைக் போட்டதற்காக இன்னொரு
பெண் குழந்தையும் கைது செய்யப்பட்டதை இந்த நாடறியும். கொஞ்சமும் வன்மமற்ற அந்த எழுத்துக்கே அப்படியொரு
நடவடிக்கை எனில் புவத் ஷெட்டி மீது என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப் பட்டுள்ளது.
ஒரு
சின்னஞ்சிறு குழந்தைகூட தான் வாங்கிய பால சாகித்திய புரஷ்கார் விருதினை திருப்பி அனுப்பியிருக்கிறாள்
என்ற செய்தி நம்மை மகிழ்ந்து வியக்க வைக்கிறது. அவள் உள்ளிட்டு விருதுகளைத் திருப்பிய அனைவரையும்
வாழ்த்துகிறோம்.
அதே வேளை விருதுகளைத்
திருப்பாதவர்கள்மீது ஏளனமாய் வைக்கப் படும் விமர்சனங்களை அருள்கூர்ந்து கைவிடுமாறும்
நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
விருதுகளைத் திருப்பித்தான்
எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை. அது ஒரு எதிர்ப்பின் வடிவம் அவ்வளவே.
மகள்
செங்கொடி தன்னை தீயிலிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தாள். அதற்காக நீங்கள் எல்லாம் ஏன் உயிரோடு இருக்கிறீர்கள்
என்று நம்மை கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இந்த விமர்சனம்.
நல்ல
ஆளுமைகளை பொது மக்களிடம் கொண்டு போவோம். நல்ல
எழுத்துக்களை உடனுக்குடன் மொழிபெயர்த்து கொண்டு செல்வோம். எழுத்தாளர்கள் மக்களோடு மக்களாய் கலந்து
வாழ்வோம்.
மக்களிடமிருந்து
அந்நியப் பட்டுக் கிடக்கும் வரை இதுமாதிரி கொடுமைகள் தொடரவே தொடரும் என்பதை உணர்வோம்.
**************************************************************************************
இது
காக்கையின் ஐம்பதாவது இதழ்.
அடிக்கடி நான் மேற்கோள்
காட்டும் பெரியார் தாசனின் உரையின் ஒரு பகுதியைத்தான் இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் “செந்தூரம்” இதழை வெளியிட்டு பெரியார்தாசன் பேசினார்,
“
இலக்கியப் பத்திரிக்கை
நடத்துவது என்பது காஸ்ட்லியான தற்கொலை. அவற்றின்
ஆயுளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ‘இந்த
இதழ் நிச்சயம்,
அடுத்த இதழ் லட்சியம்’ ”
ஒவ்வொருமாத
இறுதி வாரத்திலும் நாங்கள் செத்துதான் போகிறோம். ஆனால் அடுத்த மாத முதல் வாரத்திலேயே உங்களது
ஒரு அழைப்பு எங்களை உயிர்த்தெழ வைக்கிறது. ஆக, நாங்கள் ஒவ்வொரு மாதமும் உயிர்த்தெழுவதற்காகவே
தற்கொலை செய்து கொள்கிறோம்.
உங்கள் அனைவருக்கும்
என் அன்பையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்
ஐம்பதாவது
இதழ் என்பதை நினைத்தாலே இனிக்கிறது.
எங்களை
இதில் சங்கமிக்க வைத்ததன் மூலம் எங்கள் வாழ்வையும் பொருள்படுத்திய வைகறை அய்யாவை மிக்க
மரியாதையோடும் நன்றியோடும் இந்தப் புள்ளியில் நினைத்துக் கொள்கிறேன்.
இந்த
நல்ல நேரத்தில் முத்தையா மற்றும் சந்திரசேகரன் இருவருக்கும் என் அன்பும் முத்தங்களும். தோழர் சரவணனைப் பற்றி தனியாகவே எழுத இருக்கிறேன். அவரன்றி காக்கையின் தொடர் பயணம் சாத்தியமேயில்லை. அவருக்கும் என் அன்பும் முத்தங்களும்.
எங்களை
சகித்துக் கொண்டு அடித்துத் தருவது என்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். அச்சக உரிமையாளருக்கும் அச்சுக் கோர்த்து
வடிவைக்கும் தோழர்களுக்கும் என் அன்பும் முத்தங்களும்.
*************************************************************************************
காக்கை
ஐம்பதாவது இதழைக் கொண்டாடும் இதே நேரத்தில் ’உயிர் எழுத்து’ நூறாவது இதழைக் கடந்து
தனது பயணத்தைத் தொடர்கிறது. ஐம்பது
இதழ்களைக் கொண்டு
வருவதற்குள் எவ்வளவு
சிரமப் பட்டோம்
என்பதை உணர்ந்துள்ள எங்களுக்கு நூறு
இதழ்களைக் கொண்டு வருவதற்கு சுதிர் என்ன பாடு பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது.
உயிர்
எழுத்து கண்டெடுத்துத் தந்த படைப்பாளிகளின் பட்டியல் மிக நீளமானது.
எந்தக்
குழுவிலும் தன்னை அடைத்துக் கொள்ளாமலும் தற்செயலாகவேனும் தனக்கென்று ஒரு குழு அமைந்துவிடக்
கூடாது என்பதிலும் சுதிர் காட்டும் அக்கறை எடுத்துக் கொள்ளத் தக்கது.
சமூகமும்
கலாச்சாரமும் எல்லாத் திக்குகளிலிருந்தும் அச்சுறுத்தல்களை சந்தித்துக் கொண்டிருக்கும்
இந்த வேளையில் அவற்றை எதிகொள்ள இன்னும் பலநூறு சிற்றிதழ்களின் தேவை இருக்கிறது.
அந்த
வகையில் உயிர் எழுத்தின் வெற்றியை இந்தச் சமூகம் மகிழ்ந்து கொண்டாட வேண்டும். தனது
தோழமையின் வெற்றியை காக்கை தனதாக உணர்ந்து காக்கை மகிழ்கிறது.
சொன்னால்
யாரும் நம்புவார்களா என்று தெரியவில்லை. உயிர் எழுத்தில் என் பெயரைப் பார்த்துவிட வேண்டும்
என்ற என் கனவின் வயது ஏழு ஆண்டு.
வலியுணர்ந்தவன்
வாழ்த்துகிறேன் சுதிர்.