அன்பிற்குரிய தமிழ் மடாதிபதிகளே,
Showing posts with label 65/66. Show all posts
Showing posts with label 65/66. Show all posts
Wednesday, June 25, 2025
65/66, காக்கைச் சிறகினிலே ஜூன் 2025
வணக்கம்
தமிழ் பக்திமரபு என்னை அப்படி நெகிழ்த்தும். அதுமட்டுமல்ல உலகின் வேறு எந்த மொழியேனும் பக்திமரபினை தனது அடையாளமாகக் கொண்டிருக்கிறதா என்பது அய்யம்தான். அப்படியே இருந்தாலும் பக்தனையும் கடவுளையும் தமிழ் இணைப்பதுபோல வேறு மொழி இணைக்கும் என்று நான் நம்பவில்லை.
தமிழ் பக்திமரபு அனைவரையும் அணைக்கும், இணைக்கும். தமிழ் பக்திமரபு என்பது குறிப்பாக சைவ பக்திமரபு என்பது சனாதனத்திற்கு எதிரானது.
மடங்களின் அதிபர்களை கிட்டத்தட்ட சாமியாகவே பார்க்கிற அன்பு தமிழ் பக்தர்களின் அன்பு.
இந்த அன்பு, எதையும் கடந்தவர்கள் நீங்கள் என்று அவர்கள் கருதுவதால் வருவது.
அவர்கள் எளியவர்கள், ஆனால் கூர்மையானவர்கள்.
வெளிப்படையானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். சரியோ தவறோ எதையும் முகத்திற்கு நேராகக் கேட்டுவிடக் கூடியவர்கள்.
திருவிளையாடல் புராணத்தில் இது இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சினிமாவில் பார்த்திருக்கிறேன்.
கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே இருக்கும் இந்த உறவை...
அது கற்பனை என்றே கொண்டாலும், விவரம் தெரிந்த நாள்முதலாக நான் கொண்டாடிக்கொண்டே இருக்கிறேன்.
குறுந்தொகையின் இரண்டாம் பாடலை இறைவன் சிவன் எழுதியதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் நமக்கு இப்போது இல்லை.
தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் மணம் இயற்கையானதா அல்லது அவள் பூசும் வாசனை திரவியங்கள்வழி வருவதா என்கிற அய்யம் மன்னன் செண்பகபாண்டியனுக்கு வருகிறது. இந்த அய்யம் அவ்வளவு முக்கியமானதா என்கிற அறிவு பூர்வமான வினாக்களுக்குள் நாம் இப்போது போகத் தேவை இல்லை. அவனது அவையில் உள்ள சான்றோர்களிடம் இவனது அய்யத்திற்கான விடை இல்லை.
எனவே தனது அய்யத்தைத் தீர்ப்பவனுக்கு தக்க சன்மானம் தரப்படும் என்று அறிவிக்கிறான். இந்த சன்மானத்திற்கு ஆசைப்படும் ஒரு எளிய மனிதனின் வழியாக இறைவன் கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலை அனுப்பி வைக்கிறான்.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே”
செண்பகப் பண்டியனின் அரசவைக் கவிஞரான நக்கீரன் தருமி கொண்டு வந்திருக்கும் இந்தப் பாடலில் பிழை இருப்பதாக சொல்கிறார். இதை தருமி சொல்லக் கேட்டதும் சிவனுக்கு கோபம் வருகிறது. அவரே நேராக செண்பகப் பாண்டியனின் அவைக்கு வருகிறார்.
வந்திருப்பது தாம் வணங்கும் இறைவன் என்பது நக்கீரனுக்குத் தெரிகிறது. அந்தப் பாடலை எழுதியது தாம் தினமும் வணங்கும் இறைவனே என்றாலும் அதை ஏற்க மறுக்கிறார்.
இறைவனுக்கும் நக்கீரனுக்கும் விவாதம் நீள்கிறது. தன்னை தன் பக்தன் வென்றுகொண்டே வருவது இறைவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் எல்லை தாண்டுகிறார்.
கோபம் தலைக்கேற,
“அங்கம் புழுதிபட,
அரிவாளில் நெய்பூசி
பங்கம் பட இரண்டு கால் பரப்பி
சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும்
நக்கீரனோ
எம் கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்”
என்று வெடித்து விடுகிறார்.
“சங்குகளை அறுத்து வளையல் செய்து விற்று வயிறு வளர்க்கும் கடையனான நீ என் பாடலில் பிழை காண்கிறாயா?” என்ற இறைவனின் கோபத்தையும் நேராக எதிர்கொள்கிறார் நக்கீரன்.
நக்கீரர் சொல்வார்,
“சங்கருப்பதெங்கள் குலம்
சங்கரனார்க்கேது குலம்?”
இந்த இரண்டு வரிகளை நினைக்குந்தோறும் நெக்குருகிப் போகிறேன் சன்னிதானங்களே.
”சங்கரன் நீ
நீ குலமற்று இருப்பதுதானே நியாயம்
நீ எப்படி குல பேதம் சொல்லலாம்”
என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம் என்றே இந்த எளிய நாத்திகன் நினைக்கிறேன். ஆமாம் சன்னிதானங்களே, நக்கீரனாரின் கோபத்தை இந்த எளியவன் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.
படைக்கப்பட்ட எந்த இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இப்படி ஒரு உறவை உலகில் எங்கும் பார்க்க இயலாது. எந்த ஒரு மொழியும் இறைவனையும் பக்தனையும் இப்படி படைத்தளித்ததில்லை. தமிழ் இந்த அதிசயத்தை செய்திருக்கிறது. இந்த இடத்தில் தமிழ் எதுவரைக்கும் நகர்ந்திருக்கிறது தெரியுமா சாமிகளே…
”திருவிளையாடல்” திரைப்படத்தில் இந்த உரையாடல் இறைவனின் இந்த ஆறு வார்த்தைகளோடு நிறைவுப் பகுதிக்கு நகரும். சிவன் சொல்வார்,
“நக்கீரனே! நின் தமிழோடு விளையாடவே யாம்
வந்தோம்”
அய்யோ, அய்யோ, ஒரு பக்தனின் மொழியை ரசித்து சுவைக்க ஏங்குகிறவனாக கடவுளைக் காட்டும் மொழி தமிழ். இதெல்லாம் புனைவு அல்லவா என்று யாரேனும் கேட்பீர்களேயானால், “இறைவனும் புனைவுதானே சாமிகளே” என்பதுதான் எனது பதில்.
”பித்தா
பிறைசூடி
பெருமானே
அருளாளா”
என்று சுந்தரமூர்த்தி சாமிகளையும் எங்கள் தமிழ் பாட வைக்கும். அதற்கு நேர் எதிராக
“தாவாரம் இல்லை
தங்க ஒரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி”
என்று சித்தனையும் பாட வைக்கும்.
நீங்கள் அரவணைக்க வேண்டியவர்கள்.
”ஏகன் அநேகன்” என்ற ஒப்பற்ற தத்துவத்தின் தூதுவர்கள் நீங்கள். அநேக பெயர்களில் இருக்கிறவன் ஒரே ஒருவன்தான். அவனை நாம் சிவன் என்கிறோம். இன்னொருவன் இன்னொரு பெயரில் அழைக்கிறான். அவ்வளவுதான் பிள்ளைகளே. அமைதியாக, ஒற்றுமையாக அணைந்து வாழுங்கள் என்று எங்களை ஆற்றுப்படுத்தி வழிநடத்த வேண்டியவர்கள் நீங்கள்.
எல்லோரிடமும் சமமாக அன்பு பாராட்ட வேண்டியவர்கள். ஒரு மதத்தின் பிரதிநிதி என்பது உங்களது முற்றான அடையாளம் அல்ல.
எல்லோருக்கும் பொதுவானவர்கள் நீங்கள்.
குல்லா தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்
சிலுவை தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்
குங்குமம் வைத்தவனும் உங்கள் பிள்ளைதான்
உங்களில் ஒருவர் தொப்பியோடும் தாடியோடும் ஒருவர் தன்னைக் கொல்ல வந்தார் என்று சொல்வது மட்டுமல்ல அதைக் கேட்டு மற்ற சன்னிதானங்கள் மௌனமாக இருப்பதும் தவறுதான்.
குன்றக்குடி பெரிய சன்னிதானத்தின் இறுதி இலக்கிய பொதுமேடை ஜெயங்கொண்டத்தில் நடந்த கலை இரவுதான். அன்று நடந்த வழக்காடு மன்றத்தில் அவரது கீழ் நானும் பேசினேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நான் எப்போதும் வாயருகே கை வைத்து மரியாதையோடுதான் அவரோடு பேசி இருக்கிறேன்.
காரணம் மதச்சார்பின்மை என்ற இந்திய அடையாளத்தின் ஒப்பற்ற முகவரி அவர்.
இப்படியாகவே இருங்கள்.
அன்போடு இருங்கள். அனைத்து சன்னிதானங்களுக்கும் என் அன்பும் நன்றியும்
அன்புடன்,
இரா.எட்வின்.
Saturday, May 31, 2025
65/66, காக்கைச் சிறகினிலே, மே 2025
“சிதறிய பொருட்களில்
தம்பி வைகறையின் இந்தக் கவிதை காட்சியாக விரிந்து என்னை பிசைந்துகொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தக் கவிதை என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது.
அறைக்குள் ஒரு எலி புகுந்துவிட்டது. அதை அடித்துக் கொல்வதற்கு கைகளில் கம்புகளோடு துரத்துகிறார்கள்.
அங்கும் இங்குமாக ஓடி ஒளிகிறது அந்த எலி. அது ஒளிந்துகொண்டிருப்பதாக இவர்கள் நம்புகிற இடங்களையெல்லாம் கலைத்துப் போடுகிறார்கள்.
அது வேறு இடத்திற்குப் போகிறது. அங்கும் இருக்கிற பொருட்களையெல்லாம் கலைத்துப் போடுகிறார்கள். மீண்டும் மீண்டும் எலி ஓடி ஒளிவதும் இவர்கள் கலைத்துப் போடுவதுமாக நகர்கிறது.
நீண்டதொரு தேடலுக்குப் பிறகு களைத்துப் போனவர்களாக எலி வேட்டையை நிறுத்துகிறார்கள்.
அறை முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. சே, இந்த எழவெடுத்த எலி என்ன பாடு படுத்திடுச்சு என்று அங்கலாய்க்கிறார்கள்.
அறைகள் முழுவதும் சிதறிக் கிடக்கும் பொருட்களை மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டுமே என்கிற அங்கலாய்ப்பு இவர்களுக்கு.
பொருட்கள் சிதறி அலங்கோலமாகக் கிடக்கும் அந்த அறைகள் என்பது அந்த எலியின் உயிர்காக்கும் போராட்டம். அவ்வளவு அழகாக அதைக் காட்சிப் படுத்தியிருப்பான் வைகறை.
இப்போது மொத்த இந்தியாவும் சிதறிக் கிடக்கும் அறைகளாகத்தான் காட்சியளிக்கிறது. பாஜக தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கைகளில் கிடைத்த ஆயுதங்களோடு எலிகளை முற்றாய் அழிக்க முடியாமல் களைத்துப் போனவர்களாக “சே நாசமாப் போன எலி, சிக்காம என்னபாடு படுத்துது” என்று புலம்புகிறார்கள்.
இங்கு எலிகள் என்பவை இந்தியாவின் விழுமியங்களைக் குறிக்கிற சொல் என்று கொள்வதுதான் சரியாக இருக்கும்.
இந்தியாவின் விழுமியங்களை பாஜகவும் RSS காரர்களும் ஒருபோதும் ஏற்பதில்லை. காரணம் இந்திய விழுமியங்களின் மையச்சரடு “மதச் சார்பின்மை”. RSS மற்றும் பாஜக சித்தாந்தத்தின் மையச்சரடு இந்துத்துவா.
மதச் சார்பின்மை மக்களை இணைக்கக் கோரும். மதப்பழமைவாதம் மனிதர்களைக் கூறுபோடத் துடிக்கும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நேர் எதிரிகள் RSS மற்றும் பாஜகவினர்.
பரந்த இந்து ராஷ்ட்ரமே அவர்களது சித்தாந்தத் தந்தையான கோல்வால்கரது கனவு. இதை அவர்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை.
ஆனால், அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சி பீடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவேதான் இதுகுறித்து உரக்கப் பேசமுடியாமல் தவிக்கிறார்கள்.
இந்திய அரசிலமைப்புச் சட்டத்தை காவி மைகொண்டு எழுதுவதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என்றால் மக்களை பதற்றத்தோடு வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
80 விழுக்காடு பெரும்பான்மை மக்களை 20 விழுக்காடு சிறுபான்மையிருக்கு எதிரியாக மாற்றுவது தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மையைக் கொடுக்கக்கூடும் என்று கருதுகிறார்கள். ஆகவே கலவரங்களை வாய்க்கிற இடங்களில் எல்லாம் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில் சம்பல் பற்றி எரிந்தது நாம் அறிந்தது. அதற்கான தோற்றுவாயினை தோழர் மதுர் சத்யா ஒரு கூட்டத்தில் பேசக் கேட்க வாய்த்தது.
ஒரு RSS இளைஞன் தனது பயணத்தின் ஊடே ஒரு மசூதியைப் பார்க்கிறான். அது அவனை உறுத்துகிறது. அந்த மசூதி அவனை மிகவும் உறுத்துவதாக அவனது நண்பனுக்கு அலைபேசி வழியாக சொல்கிறான்.
வழக்கறிஞரான அவனது நண்பன் அந்த மசூதியின் இருப்பிட விவரங்களைக் கோருகிறான். இவனும் தருகிறான்.
இது நிகழ்ந்தபோது காலை பத்தே முக்கால் மணி இருக்கும் என்கிறார் சத்யா. விவரங்களை அலைபேசி வழியாக பெற்றுக் கொண்டதும் வழக்கிற்கான மனுவைத் தயார் செய்கிறான்.
ஒரு இந்து ஆலயம் இருந்த இடத்தில் அந்த மசூதி கட்டப்பட்டிருப்பதாக வழக்கைத் தொடுக்கிறான்.
வழக்கு அன்றே விசாரணைக்கு வருகிறது அன்றே தீர்ப்பும் வருகிறது. அந்த மசூதி இருக்கும் இடத்தில் இந்து ஆலயம் இருந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறுகிறது.
எனவே தொல்லியல் துறை அந்த இடத்தை சோதித்து அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிடுகிறது. தொல்லியல்துறை களத்திற்கு வருகிறது. அங்கு ஒரு இந்து ஆலயம் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அது ஆய்வறிக்கை தருகிறது.
இவை அத்தனையும் 40 மணிநேர அவகாசத்திற்குள் நடந்து முடிந்திருக்கிறது.
வேறென்ன சொல்வது. அன்பை பெடல் இல்லாத சைக்கிளிலும் வெறுப்பை ராக்கெட்டிலும் அனுப்பிப் பழகிவிட்டார்கள். இதன் விளைவு கடும் பதற்றமும் ஐம்பது அறுபது உயிர்ப் பலிகளும்.
வழக்குகளையும் ஆயுதங்களாக மாற்றக் கற்றிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இதுபோல இன்னும் 40,000வழக்குகளைத் தொடுப்பதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கிறதாம்.
இது ஒன்றிற்கே இவ்வளவு பதற்றமும் உயிரிழப்பும் என்றால் நாற்பதாயிரம் வழக்குகள் எத்தனை பாதிப்புகளைக் கொண்டு வரும்? இந்த பதற்றத்தினால் அவர்களுக்கு என்ன பயன் என்ற கேள்வியும் வரும்.
இது சிறுபான்மை மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களை அச்சப்படுத்தும். இந்த அச்சம் வாக்குகளாக மாறும் என்று கருதுகிறார்கள்.
ஊழியர்கள் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள் என்றால் அரசோ சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் மூலம் பதற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது. அப்படி ஒரு அரக்கத்தனமான முயற்சிதான் வக்பு வாரியத் திருத்தச் சட்டம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே வக்பு வாரியச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
2013 வாக்கில் வக்பு வாரிய சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வக்பு வாரியச் சட்டத்தில் உள்ள ஷரத்துகளை மாற்றவோ திருத்தவோ கூடாது என்றுகூட இஸ்லாமியர்கள் ஒருபோதும் கோரியது இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில் வக்பு வாரியத்தில் இரண்டு பெண்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது இஸ்லாமியர்கள் அதை எதிர்க்கவெல்லாம் இல்லை.
இப்போது கொண்டு வந்திருக்கக்கூடிய திருத்தங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கின்றன.
வாரியத்தின் சொத்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இருக்கிற சொத்தை அரசின் சொத்தாக மாற்றிக்கொள்கிற ஏற்பாடாகவும் இந்தத் திட்டங்கள் இருப்பதால்தான் இதை எதிர்க்கவும் இதற்கெதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்வதற்குமான தேவை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
வக்பு வாரியச் சட்டத்தில் இருப்பது 113 ஷரத்துகள். இதில் கிட்டத்தட்ட 48 ஷரத்துகளை இந்த அரசாங்கம் திருத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட 42 விழுக்காடு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. சரி பாதி ஷரத்துகள் திருத்தப்பட்டுள்ளன என்பது கிட்டத்தட்ட புதுச் சட்டம் போன்றதுதான்.
வக்பு அமைப்பிற்கு ஈரமனம் கொண்டோர்கள் யாராயினும் நன்கொடை அளிக்கலாம். திருத்தச் சட்டத்தின்படி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளேனும் இஸ்லாமியராக இருக்கக்கூடிய ஒருவரால்தான் வக்பு அமைப்பிற்கு நன்கொடை அளிக்க முடியும்.
இதன்மூலம் வக்பு வாரியத்திற்கு புதிதாக வரவெதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் இவர்களுக்கு இருக்கிற வக்கிரம் வெளிப்படுகிறது. ஒருபுறம் வரவைத் தடுக்கிற இவர்களது வன்மம் இதுவென்றால் இன்னொரு புறம் இருக்கிற வக்பு சொத்துகளை அரசாங்கம் எடுத்துக்கொள்கிற வன்மமும் இருக்கிறது.
இருக்கிற சொத்துக்களுக்கான பத்திர ஆவணங்களைக் கேட்கிறார்கள். பத்திரப்பதிவு தொடங்கும் முன்னரே வக்புவிற்கு வந்த சொத்துக்களுக்கு ஆவணங்கள் சாத்தியமே இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆவணம் இல்லாத சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட அரசின் சொத்துகள் என்கிறார்கள்.
தாவா ஏற்படின் இதற்கான விசாரணை அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவர் என்கிறார்கள். அது எப்படி அரசின் அதிகாரி அந்த நிலம் யாருடையது என்று விசாரிக்க முடியும் என்றால் அது அப்படித்தான் என்கிறார்கள்.
இந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
இவர்கள் மீதான வன்முறைகள், இவர்களுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றால் நொந்து போயிருக்கிற இஸ்லாமியர்களை இறுக அணைத்தபடி “இருக்கிறோம்” என்று சொல்லும் தொண்ணூறு விழுக்காடு இந்தியர்கள் நம் வயிற்றில் பால் வார்க்கிறார்கள்.
இந்த அன்பும் அணைப்பும் சங்கிகளின் வெறுப்பை சல்லி சல்லியாக நொறுக்கும்.
-- காக்கை
மே 2025
Like
Comment
Share
Tuesday, April 1, 2025
65/66 காக்கைச் சிறகினிலே, மார்ச் 2025
பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி நிறைவுற்ற இரவு. நான், இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் தோழர் தங்கவேல் ஆகியோர் பாரதி புத்தகாலய ஸ்டாலில் அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கு இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். வந்தவர்கள் மிச்சப் புத்தகங்களைக் கணக்கெடுத்து பார்சல் செய்வதில் எங்களுக்கு உதவ ஆரம்பிக்கிறார்கள். வேலையினூடே ஆரம்பித்த உரையாடல் கணக்கெல்லாம் முடித்து பார்சல்களை ரெகுலர் சர்வீசில் ஒப்படைத்துவிட்டு தோழர் தங்கவேலு அவர்களை விடியற்காலம் பேருந்து ஏற்றிவிடும்வரை தொடர்கிறது.
ஆக, கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் சிறையில் இருந்த மனிதன்
Subscribe to:
Posts (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
அன்பின் ஸ்டாலின் சார், வணக்கம் நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில் “ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன் அதைப் படித்ததும் ...
-
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் ...