பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி நிறைவுற்ற இரவு. நான், இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் தோழர் தங்கவேல் ஆகியோர் பாரதி புத்தகாலய ஸ்டாலில் அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கு இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். வந்தவர்கள் மிச்சப் புத்தகங்களைக் கணக்கெடுத்து பார்சல் செய்வதில் எங்களுக்கு உதவ ஆரம்பிக்கிறார்கள். வேலையினூடே ஆரம்பித்த உரையாடல் கணக்கெல்லாம் முடித்து பார்சல்களை ரெகுலர் சர்வீசில் ஒப்படைத்துவிட்டு தோழர் தங்கவேலு அவர்களை விடியற்காலம் பேருந்து ஏற்றிவிடும்வரை தொடர்கிறது.
உரையாடலினூடே அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் அருட்தந்தை கஸ்பர் அவர்கள் குறித்த ஒரு தகவலைச் சொன்னார். வேறொன்றுமில்லை, ஒரு புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுவதற்கு பாதர் கஸ்பரைக் கேட்டிருக்கிறார்கள். அவரும் இசைவைத் தந்திருக்கிறார்.
திட்டமிடல் குறித்தான ஒரு உரையாடலில் பாதர் ஒருவரை அழைத்து வந்தால் சங்கிகள் பிரச்சினை செய்தால் என்ன செய்வது என்ற அச்சம் நிர்வாகிகளுக்கு வந்திருக்கிறது. சங்கிகள் கொஞ்சம் பலமாக இருக்கிற ஊர் அது.
அவர்களது கலந்துரையாடலிn ஊடே அவர்களது அச்சமும் வளர்ந்தபடியும் கெட்டிப்பட்டபடியேயும் நகர்ந்திருக்கிறது. நிச்சயமாக சங்கிகள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற உறுதியான
முடிவிற்கு வந்திருக்கிறார்கள். அதை எதிர்கொள்ளும் பலம் இல்லாதவர்கள் இல்லை அவர்கள். ஆனால் அமைதியாக புத்தகக் கண்காட்சியை
நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். என்ன செய்வதென்று யோசித்த நிர்வாகம் அருட்தந்தை கஸ்பரிடம் நிலவரத்தை எடுத்துச் சொல்லி தவிர்த்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
ஒரு வழியாக கஸ்பர் இன்றி புத்தகக் கண்காட்சி அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இதைக் கேட்ட தோழர் ராமகிருஷ்ணன் அதிர்ந்து போகிறார். கிறிஸ்தவ பெயராக இருந்தால் கூட்டத்தில்கூட பேசமுடியாதா என்று கேட்டார்.
கொலை செய்யப்படுவதற்கே ஒரு பெயர் போதும் ராமகிருஷ்ணன் என்று நான் சொன்னபோது அவரது முகம் வாடித் தொங்கி விட்டது.
இந்த பயத்தில்தானோ என்னவோ எட்வின் தோழர் அவரோட பையனுக்கு ‘கிஷோர்’ என்றும் பாப்பாவிற்கு ‘கீர்த்தனா’ என்றும் பெயர் வைத்துவிட்டார் என்று இடையில் வந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் சொன்னபோது அனைவருமே சிரித்துவிட்டோம். ஆனால் இருவருக்கும் பெயர் வைத்ததற்கு பயமோ அல்லது புத்திசாலித்தனமோ காரணம் அல்ல.
11.07.1990 அன்று “கிஷோரிலால்” என்றொருவர் இறந்துபோனதாக செய்தியை
தற்செயலாக செய்தித் தாள்களில் வாசிக்கிறேன். எத்தனையோ மரணச்
செய்திகளை வாசிக்கிறோம். ஆனால் கிஷோரிலால் மரணமடைந்தது
புதன்கிழமை என்பது உள்ளிட்டு இதுநாள் வரைக்கும் நினைவில் இருப்பதற்கு இன்னொரு காரணமும்
உண்டு. அன்றுதான் 18 மாதங்களாக
இழுத்துக் கொண்டிருந்த என்னுடைய பணிநியமன உத்திரவிற்கு ஒப்புதல் கிடைக்கிறது.
கிஷோரிலால் யாரென்று தெரியாததால்
சுவாரசியமற்று இருந்த என்னை அவர் பகத்தின் நண்பர் என்று யாரோ சொன்னது
உசுப்பிவிடுகிறது. பகவதி சரண்,
சந்திரசேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ் என்றெல்லாம் ஓரளவு தெரிந்து வைத்திருந்த எனக்கு கிஷோரிலால் யாரென்று
தெரியவில்லை. தேட ஆரம்பிக்கிறேன்
”பகத்தோடவே
போயிருக்க வேண்டியவன்பா. 18 வயசாகலங்கறதால தப்பிச்சான்”
என்று யாரோ ஒருமுறை சொல்ல உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. இன்னும் அதிகமாய் தேட ஆரம்பிக்கிறேன். தெரிந்திருக்கக்கூடும்
என்று நம்புபவர்களிடம் எல்லாம் விசாரிக்க ஆரம்பிக்கிறேன்
07.10.1930 அன்று பகத், சுகதேவ், ராஜகுரு ஆகியோரோடு கிஷோரிலாலுக்கும் சேர்த்துதான்
தூக்கு வழங்கப்படுகிறது. ஆனால் 18 வயது
நிரம்பவில்லை என்பதால் ஆயுளாகக் குறைக்கப்படுகிறது என்ற செய்தி கிடைக்கிறது.
இன்னும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது
எப்போதும் உற்சாகமாகவும்
சிரித்தபடியேயும் இருப்பவர் அவர் என்று தெரிய வருகிறது. 18 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார்.
விடுதலைக்குப் பிறகும் காங்கிரஸ் அரசாங்கம் எட்டு ஆண்டுகள் அவரை
சிறையில் வைத்திருக்கிறது.
ஆக, கிட்டத்தட்ட 26 ஆண்டுகள்
சிறையில் இருந்த மனிதன்
இரண்டு ஆண்டுகள் தலைமறைவு
வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்று கிடைக்கிற செய்திகள் எல்லாம் ஆர்வத்தை
அதிகப்படுத்துகின்றன.
1936 இல் சிறையில்
இருந்தபடியே அன்றைக்கு ஒன்றுபட்டு இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்காக
விண்ணப்பிக்கிறார். 1942 இல் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்.
சிறையில் இருந்து 1946 இல் விடுதலையானதும்
நேரே கட்சி அலுவலகம் செல்கிறார்.
கட்சி பிரிந்தபோது CPM வருகிறார். ஒருக்கால்
தூக்கு இல்லாமல் ஆயுளாக இருந்திருப்பின் பகத்தும் சுகதேவும் ராஜகுருவும்கூட
இங்குதான் வந்திருப்பார்கள்.
தம்பி பிறந்ததும் அப்பாவிடம்
விவரமெல்லாம் சொல்லி தம்பிக்கு கிஷோரிலால் என்று பெயர் வைக்க அனுமதி கேட்கிறேன். அப்பா திமுக. அவருக்கு
கிஷோரிலாலைப் பிடித்துப் போகிறது. ஆனால் இந்த ’லால்’ உறுத்துகிறது. ”லால” எடுத்துடேன் என்கிறார். தம்பி கிஷோரான வரலாறு
இதுதான்.
தம்பிக்கு கிஷோர் என்று
இருப்பதால் பாப்பாவிற்கு கி அல்லது கீ தொடங்குகிற பெயராக வேண்டும் என்று
விக்டோரியா கேட்டபோது சட்டென வந்த பெயர்தான் கீர்த்தனா. கீர்த்தனா என்றால் இசை. கீர்த்தி என்று அழைத்தாலும் இசைதான். இசை எனில்
புகழ். இப்படியெல்லாம் யோசித்த எங்களுக்கு அது தெலுங்கு
என்பது அப்போது சத்தியமாக நினைவிற்கு வரவில்லை.
பாப்பாவிற்கும் கிஷோரிலால்
தோழருக்கும்கூட சம்பந்தம் இருக்கிறது. 1999 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழில் கீர்த்தனா பிறந்தாள். அதுதான் மூவருக்கும் தூக்கும் கிஷோரிலாலிற்கு ஆயுளும் விதிக்கப்பட்ட நாள்.
இரண்டு பிள்ளைகளுக்கும் தோழர் கிஷோரிலாலிற்கும் தொடர்பிருப்பதில்
மகிழ்ச்சி. இருவரும் மக்கள் சார்ந்து வாழட்டும்.
போக, பெயரே குழந்தைகளைக் கொன்றுபோடுமோ என்ற
பயத்தோடே ஒரு தாயோ தகப்பனோ தமது குழந்தைக்கு பெயர் தேடவேண்டிய நிர்ப்பந்தம்
வருமானால் அதற்காக அதற்கு காரணமானவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.
************
திருப்பூர் தாய்த் தமிழ்ப்
பள்ளியின் முப்பதாவது ஆண்டுமலர் வந்திருக்கிறது. அதில் அந்தப் பள்ளியின் ஆசிரியை ப.த.மாலா அவர்கள் எழுதிய “ஆசிரியர்
மகுடம் எட்டிப் பார்த்தது” என்றொரு கட்டுரை வந்திருக்கிறது.
அதில் ஓரிடத்தில் அவருக்கும் அவரது வகுப்புக் குழந்தை ஒருவனுக்கும்
இடையேயான உரையாடல் வரும். திருப்பரங்குன்றம் அவனுக்கில்லை
எனக்குத்தான் என்று வரிந்து வரும் ஒவ்வொருவருக்கும் அந்த உரையாடலை சிபாரிசு
செய்கிறேன்.
அந்தக் குழந்தை முதல்நாள்
பள்ளிக்கு வரவில்லை. மாலா அந்தக்
குழந்தையிடம் கேட்கிறார்,
”ஏண்டா நேத்து
பள்ளிக்கு வரல?”
“கோயிலுக்கு
போனோங்க அக்கா”
அந்தப் பள்ளியில் ஆசிரியைகளை
அக்கா என்றுதான் குழந்தைகள் அழைப்பார்கள். இன்னொருதரம் பிறக்க வேண்டும். அந்தப் பள்ளியில்
சேர்ந்து அந்த அக்காக்களிடம் படிக்க வேண்டும். அவர்களின்
உரையாடலின் முத்தாய்ப்பான பகுதி தொடர்கிறது.
”எந்தக்
கோவிலுக்குடா போனீங்க?”
“அதான், அந்த சாமியெல்லாம் இருக்குமில்ல
அந்தக் கோயிலுக்குதாங்க அக்கா”
மாலாவையும் அந்தக் குழந்தையையும்
அணைத்துக் கொள்கிறேன்.
கோயில்களில் சாமிகள் இருப்பதாக
குழந்தைகள் நம்புகிறார்கள். அப்படியே
விட்டுவிடுவோம் நண்பர்களே. கோவில்களில் ஏதோவொரு சாமி வாசம்
செய்யட்டும். சண்டை வேண்டாம்.
முடியுமானால் அல்லாவும் முருகனும்
அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு கோவிலைக் கட்டுவோம். அவர்களது உரையாலுக்கு இடையூறு செய்யாமல்
அவர்களை வணங்கிவிட்டு வருவதற்கு கற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்