Wednesday, April 16, 2025

65/66, காக்கைச் சிறகினிலே, ஏப்ரல் 2025

19.03.2025 அன்று அதிகாலை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி இருக்கிறார். முதலில் அவருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். அவரது திரும்புகை திட்டமிட்டபடி சரியான நேரத்தில் இயல்பாக நடந்து முடிந்திருக்கிறது.

ஆனால் அவர் ஏதோ விண்ணில் சிக்கித் தவித்ததாகவும் எலான் மஸ்க் விண்வெளி வீரர்களை அனுப்பி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுனிதாவை மீட்டுக்கொண்டு வந்தது போலவும் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
இதன் உச்சமாகவும் நகைச்சுவையாகவும் சங்கிகள் ஒன்றைப் பரப்புகிறார்கள். விண்ணில் தவித்துக்கொண்டிருந்த சுனிதாவை எப்படி மீட்பது என்று ஆலோசனை கேட்பதற்காகத்தான் ட்ரம்ப் நமது பிரதமரை அமெரிக்காவிற்கு அழைத்ததாராம். இவர் சென்று வழங்கிய ஆலோசனையின்படி செயல்பட்டுதான் ட்ரம்ப் சுனிதாவை மீட்டதாகவும்கூட பலர் நம்பவும் செய்கிறார்கள்.
ஏதோ சுனிதா மட்டும் யாருமே இல்லாத ஒரு மோன வெளியில் சிக்கிக்கொண்டு போராடிக்கொண்டு இருப்பதுபோன்ற ஒரு கதையை உலகம் முழுக்கக் கட்டமைத்தார்கள்.
ஆனால் அவர் தனது சகாக்களுடன் தொடர்ந்து சுறுசுறுப்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. அவர் விண்வெளியில் தீபாவளியைக் கொண்டாடியதாகவும் செய்திகள் வந்தன.. கேக் வெட்டி அங்குள்ளோர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய காணொலிகளையும் நம்மால் பார்க்க முடிந்தது.
அமெரிக்க தேர்தல் நேரத்தில் ட்ரம்ப் இதை பிரச்சாரம் செய்தார். சுனிதாவை பாதுகாப்பற்ற முறையில் விண்ணிற்கு பைடன் அனுப்பிவைத்ததாக அவர் கூறினார். அவரது உயிருக்கு ஆபத்து உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டினார். தான் அதிபரானதும் தனது நண்பர் எலான் மஸ்க் உதவியோடு சுனிதாவை மீட்க இருப்பதாகக் கூறினார். இப்படியாக இது சூடான அரசியலாக மாறியது.
ஏற்கனவே சுனிதாவின் குடும்பம் இந்திய அரசியலில் ஒரு பலியைக் கொடுத்திருக்கிறது. இதுபோலவே அமெரிக்க அரசியலுக்காக அவரே பலியாகிவிடுவாரோ என்ற பரபரப்பை சில அரசியல் நோக்கர்கள் முன்வைத்தனர்.
செப்டம்பர் 2024 இல் ஒன்பதுநாள் ஒப்பந்தத்தில் விண்வெளிக்கு சென்ற இருவரில் சுனிதாவும் ஒருவர். இது அவருக்கு மூன்றாவது விண்வெளிப் பயணம். இதையும் சேர்த்து மூன்று முறையும் இவர் பணிநீட்டிப்பு பெற்று அடுத்தடுத்த அணியினரோடும் பணியாற்றிவிட்டு அவர்களோடுதான் திரும்பி இருக்கிறார். எப்போதும் போலவே இந்த முறையும் கிளம்பும் வரைக்கும் சுறுசுறுப்போடும் மகிழ்வோடும் தனது ஆராய்ச்சிகளை முன்னெடுத்திருக்கிறார்.
வழக்கமாக ஆறுமாத கால ஆய்விற்காகத்தானே வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். அது என்ன ஒன்பதுநாள் ஒப்பந்தம் என்பதுகுறித்து அலசினால் இப்போது வாசிக்கிற சூடில் பரப்பப்பட்ட இந்தக் கதைகளின் வேரைப் பிடிக்க முடியும்.
விண்வெளி ஆராய்ச்சி மையம் எப்போதும் விண்வெளி வீரர்களால் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கக்கூடிய இடம். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏழுபேர் பணியாற்றுவார்கள். ஒரு அணியினரின் பணிக்காலம் முடியும்போது அடுத்த அணியினர் வருவார்கள். புதியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஏற்கனவே இருப்பவர்கள் திரும்புவார்கள். இது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கக்கூடிய வழமை.
2006 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு தனது 14 வது அணியை நாசா அனுப்பியது. அந்த அணியில் இருந்த ஏழுபேரில் ஒருவர்தான் சுனிதா. அந்த அணியில் சென்றவர்களில் சுனிதாவின் சுறுசுறுப்பும் கூர்மையும் அர்ப்பணிப்பும் நாசாவை ஈர்க்கவே அங்கேயே தங்கி இன்னுமொரு ஆறுமாதம் அடுத்த அணியினரோடு பணிபுரிய முடியுமா என்று சுனிதாவை கேட்கிறது. சுனிதா சம்மதிக்கிறார். 14வது அணியில் சென்ற மீதமுள்ள ஆறுபேரை அழைத்துக்கொண்டு 15 வது அணியில் ஆறுபேரை மட்டும் விண்ணிற்கு நாசா அனுப்புகிறது. ஆக, நாசாவின் 14வது அணியினரோடு விண்வெளிக்கு முதல்முறையாக ஆறுமாத ஒப்பந்தத்தில் சென்ற சுனிதா 15 வது அணியினரோடும் பணியாற்றிவிட்டு ஓராண்டு கழித்தே பூமிக்குத் திரும்புகிறார்.
2012 இல் நாசா அனுப்பிய 32 வது குழுவில் இரண்டாவது முறையாக விண்ணிற்கு சென்ற சுனிதா இந்த முறையும் பணி நீட்டிப்பு பெற்று 33 வது குழுவினரோடும் பணியாற்றிவிட்டு ஓராண்டு கழித்தே பூமிக்குத் திரும்பினார்.
மூன்றாவது முறையும் இதேதான் நிகழ்ந்தது. ஆனால் இந்தமுறை அவர் சென்றது ஆராய்ச்சிக்காக அல்ல.
01.02.2003 அன்று கல்பனா சாவ்லா விண்வெளி ஓடம் வெடித்து இறந்ததற்குப் பிறகு அமெரிக்கா ரஷ்யாவின் ஓடங்களிலேயே தனது வீரர்களை அனுப்பி வந்தது. இந்த நேரத்தில் முதல்முறையாக ட்ரம்ப் பதவி ஏற்கிறார். அவர் அமெரிக்காவே விண்வெளி ஓடங்களை சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். எலான் மஸ்கின் SPACE X, மற்றும் போயிங் ஸ்டார் லைனர் ஆகிய இரு நிறுவனங்களிடமும் ஒப்பந்தம் போடப்படுகிறது. முதலில் எலான் மஸ்க் செய்து தருகிறார்.
இந்த நிலையில் போயிங் ஏர்லைனரும் ஒரு ஓடத்தை தயாரிக்கிறது. அதன் வெள்ளோட்டத்திற்காகத்தான் ஒன்பது நாட்கள் பயணமாக 2024 செப்டம்பரில் சுனிதா விண்வெளி போகிறார். போகும்போதே ஓடத்தில் பழுது ஏற்படுகிறது. எப்படியோ ஒருவழியாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்துவிடுகிறது. பழுதுநீக்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிய விண்கலம் திரும்பப் பெறப்படுகிறது.
சென்ற இருவரிடமும் திரும்புகிறீர்களா அல்லது அங்கு ஒரு பணிக்காலத்தை நிறைவு செய்கிறீர்களா என்று நாசா கேட்கிறது. இருவரும் பணிநீட்டிப்பை ஏற்கிறார்கள். இப்படியாகத்தான் செப்டம்பர் 2024 இல் விண்வெளிக்குச் சென்ற சுனிதா 18.03.2025 வரை விண்வெளியில் பணியாற்றிவிட்டு 18.03.2025 இல் புறப்பட்டு 19.03.2025 அதிகாலை பூமிக்குத் திரும்புகிறார்.
சுனிதா புறப்பட்டபோது பைடன்தான் அமெரிக்க அதிபர். அவர் புறப்பட்ட காலத்தை ஒட்டி அமெரிக்க தேர்தல் வருகிறது. ஒன்பது நாள் ஒப்பந்தத்தில் சென்ற சுனிதா பணிநீட்டிப்பு பெறுகிறார். இங்குதான் லாவகமாக இதை தனது தேர்தலுக்காகத் திருப்புகிறார் ட்ரம்ப். மோடியின் நண்பரென்றால் சும்மாவா.
இந்தப் பணி நீட்டிப்பையோ, சுனிதா விரும்பி இருந்தால் அடுத்த ஓடத்தை அனுப்பி அவரை அழைத்துக்கொள்ள நாசா தயாராக இருந்ததையோ மறைக்கிறார். ஓடம் பழுதானதால் ஏதோ தன்னந்தனியாக விண்வெளியில் சுனிதா சிக்கிக் கொண்டிருப்பதாகவும் தான் ஆட்சிக்கு வந்தால் தனது நண்பர் எலான் மஸ்கின் துணையோடு அவரை மீட்பேன் என்றும் கூறி மக்களிடம் வாக்கு கேட்கிறார்.
இப்போதும் சுனிதா பூமிக்கு திரும்பியுள்ள நிலையில் அது எலான் மஸ்கினால் நிகழ்ந்ததாகவே அவரை வாழ்த்தி கட்டமைக்க முயல்கிறார் ட்ரம்ப். எலான் மஸ்கும் சுனிதாவை மீட்டு அழைத்து வந்த தனது சகாக்களுக்கு நன்றி என்று கூறி சுனிதா தன்னால் மீட்கப்பட்டதாகவே கட்டமைக்க முயல்கிறார்.
இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் வாயைத் திறப்பதன் மூலம் சுனிதா தவிடுபொடியாக்கிவிட முடியும். ஆனால் சுனிதா வாயைத் திறக்க மாட்டார் என்றே தெரிகிறது. காரணம் ட்ரம்ப் யார் என்பது அவருக்குத் தெரியும்.
குஜராத்தில் பாஜக அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா 2003 இல் கொல்லப்பட்டார். அந்த வழக்கோடு இன்றைய ஒன்றிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவே வழக்கு இருந்தது. அது ஒரு மர்ம மரணம் என்று முடித்து வைக்கப்பட்டது. இப்போதுகூட சுனிதா பூமிக்கு திரும்பியபிறகான ஒரு விஷயமாக காங்கிரஸ் இந்த வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருகிறது.
ஹரேன்பாண்டியா சுனிதாவிற்கு மாமா அல்லது சித்தப்பா பெரியப்பா முறை உறவு. அரசியல் என்ன செய்யும் என்பதை சுனிதா நன்கு உணர்ந்தவராகவே இருப்பார். எனவே யாரும் அவர் வாயைக் கிளறவேண்டாம் என்று கேட்டு வைப்போம்.
ஒன்று இருக்கிறது சொல்ல,
இன்னொருமுறை பணி நீட்டிப்பு வேண்டுமா என்று கேட்டிருந்தால் சுனிதா அதை மகிழ்வோடு ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது.

காக்கை- ஏப்ரல்,2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...