Friday, January 31, 2014

14 கரந்தை ஜெயக்குமார்


தொழுவத்திற்கும் அதற்கும் ஆறு வித்தியாசங்களை எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. சற்றேரக்குறைய ஒரு தொழுவத்தில் கைகளை இரும்பால் பின்புறமாக கட்டிய நிலையில் அந்த மனிதனைக் கிடத்துகிறார்கள்.

கொல்வதற்குள் தானாக செத்துவிடக்கூடாது. அதை அனுமதிக்கக் கூடாது.கொல்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதுவரை தங்களது இரையை உயிரோடு வைத்திருப்பது. அதற்காகவே அந்த மனிதருக்கு உணவு கொடுத்து அனுப்புகிறார்கள்.

உணவோடு ஒரு மனிதர் உள்ளே வருகிறார். அந்த பலவீனமான நிலையிலும் மிகவும் சிரமத்தோடு குரலுயர்த்தி அந்த மனிதனைப் பார்த்து கேட்கிறார்,

“நீங்கள் யார்?”

“நான் ஜூலியா கோர்ட்ஸ். இந்தப் பள்ளியின் ஆசிரியர்.”

“என்னது, பள்ளிக்கூடமா? இவ்வளவு மோசமான இடத்திலா பாடம் நடத்துகிறீர்கள். இங்கே அமர்ந்தா பச்சிளங் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள்?”

கால்களில் குண்டுகள் பாய்ந்த ரணங்கள்.இழுத்து வரப்பட்ட வலி. இதற்காகவெல்லாம் கலங்காத அந்த மனிதனின் கண்கள் இவ்வளவு மோசமான இடத்தில் குழந்தைகள் அமர்ந்து படிக்கிறார்களே என்பதற்காக கலங்குகின்றன.

சிறிது நேரம் கழித்து அவரே சொல்கிறார்,

“கவலைப் படாதீர்கள். ஒருக்கால் நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால் நல்ல பள்ளிக்கூடங்களைக் கட்டிட்டித் தருகிறேன்.”

அதற்குமேல் ஜூலியா கோர்ட்ஸால் அங்கே நிற்க முடியவில்லை.கொண்டு வந்த சாப்பாட்டுத் தட்டைக் கீழே போட்டுவிட்டு, அழுது கொண்டே ஓடி விடுகிறார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அங்கே கிடத்தி வைக்கப் பட்டிருந்த மனிதர் சேகுவாரா என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

இந்த சம்பவத்தை ஒரு வலைப் பதிவில் கண்டெடுக்க முடிகிறது என்பது எனக்கு ஒரு பேராச்சரியமான விஷயமே. ஒரு வரலாற்று நூல் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வலை செய்கிறது. இது ஒன்றும் புதிய தகவல் இல்லைதான். ஆனாலும் சேகுவாராவின் கல்வி குறித்த அக்கறைக்கு மிகப் பெரிய சாட்சியாக இருக்கும் இந்த சம்பவத்தை சேரவேண்டிய அளவிற்கு மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறோமா என்றால் ஒரு நொடியில் சிறு துளியும் யோசிக்காமல் இல்லை என்றே சொல்லிவிட முடியும்.

இந்த வேலையை கரந்தை ஜெயக்குமார் என்கிற ஒரு பட்டதாரி ஆசிரியர் தன் வலையில் செய்திருக்கிறார். அதுவும் அவர் ஒரு வரலாறு சொல்லித்தரும் ஆசிரியரும் இல்லை, கணித ஆசிரியர் என்பது ஆச்சரியத்தை அள்ளித் தருகிறது.

பொதுவாகவே, வரலாறு பதியப் படும்போது, அதுவும் இது மாதிரியான சம்பவங்களை பதியும்போது நிச்சயமாக மிகை என்பது இருக்கவே செய்யும். இதிலும்கூட மிகை இருக்கக் கூடும். அதுவும் கைமாறி கைமாறி இவ்வளவு தூரம் நகர்ந்து வருகையில் மிகையின் விகிதாச்சாரம் நிறைய கூடியிருப்பதற்கும் வாய்ப்புகளுண்டு.

ஆனாலும் கல்வி குறித்த சேகுவாராவின் கவலையும் அக்கறையும் அவரது எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் விஷயமாகும். அதே பதிவில் அவர் தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தையும், மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் எடுத்தாண்டிருக்கிறார் கரந்தை ஜெயக்குமார்.

நன்கு படிக்கவேண்டும் என்று பிள்ளைகளுக்கு எல்லாத் தந்தைகளையும் போலவே புத்திமதி சொல்லும் அவர், புரட்சிக்காரர்களாகவும் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்கிறபோது சேகுவாரா தெரிகிறார்.

” என்னை மரணம் தழுவும்போது உன் நினைவோடுதான் சாவேன்” என்று தன் மனைவிக்கு சே எழுதியதை ஜெயக்குமார் பதிகிற விதம் ஒரு புரட்சிக்காரனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த காதலை நமக்குக் காட்டுகிறது. இதைப் பதிகிற விதத்தில் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் ஜெயக்குமார்.

சேவின் பன்முகத் தன்மைகளை ஒரு பதிவில் சொல்லிவிடுவது இயலாதுதான். அதை மிகச் சரியாய் செய்கிறது இந்த வலை.

இன்னொமொரு பதிவில் ஜோசப் ஸ்டாலினாக மாறிய சம்பவம் வருகிறது. ஜோசப் ஒரு நல்ல நாடறிந்த கட்டுரையாளர். ரஷ்யாவில் ஜார்ஜியா பகுதியை சேர்ந்தவர். தனது தலைவர் லெனின் கலந்து கொள்ளும் மாநாடு ஒன்றிற்கு வருகிறார். லெனினோடு ஒரு முறை பேசிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார். மாநாடு முடிந்ததும் இவரைக் கடந்து போகையில் லெனின் இவரைப் பார்த்து கேட்கிறார்,

“ ஜார்ஜியா எப்படி இருக்கிறது?”

ஏதோ சொல்லி ஜமாலித்த ஜோசப்பிடம் சொல்கிறார்,

“ உங்கள் எழுத்து இரும்பாய் இருக்கிறது. அப்புறம் ஏன் ஜோசப் என்று பெயரை வைத்துக் கொண்டு? ஸ்டாலின் என மாற்றுங்கள்.”

மாறுகிறது பெயர்.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவிடம் தோற்று பின்வாங்கும் வேளையில் கைக்கு அகப்பட்ட ரஷ்ய வீரர்களை எல்லாம் கைதிகளாக அள்ளிக் கொண்டு போகிறார்கள் ஜெர்மனிக்காரர்கள். அப்படி பிடித்துக் கொண்டு வந்தவர்களுள் ஸ்டாலினின் மகன் லெப்டினெண்ட் யாக்கோபும் இருக்கிறார் என்பது தெரிந்ததும் ஜெர்மெனி மகிழ்ந்து பேரம் பேசுகிறது.

யாக்கோபைத் தாங்கள் தருவதாகவும், மாறாக ரஷ்யா பிடித்து வைத்துள்ள ஜெர்மானிய வீரர்களைத் தந்துவிட வேண்டும் என்றும், இல்லாது போனால் யாகோபு கொல்லப் படுவார் என்றும் மிரட்டுகிறார்கள். ஸ்டாலின் சொல்கிறார்,

“நான் பேரம் பேசுபவனல்ல”

யாகோபு கொல்லப் படுகிறார். இதை இதய சுத்தியோடு பதிந்திருக்கும் ஜெயக்குமார் இடது சாரியல்ல. இந்த வலையின் பலமே அதுதான். தான் சார்ந்துள்ள இயக்கத்தின் அல்லது குழுவின் பிரச்சாரகர் அல்ல இவர். நல்லது எங்கு தட்டுப்பட்டாலும் அதை தேடி எடுத்து வந்து தன் வலையில் பந்தி வைக்கிறார்.

நல்லனவற்றை எடுத்துத் தருவதைத் தவிர வேறு எந்த அரசியலையும் இவர் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. பொதுவாகவே அரசியலற்ற எழுத்துக்களை அவ்வளவாக ரசிக்காத நமக்கும் இவரது வலை கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகவே படுகிறது.

மண்டேலாவின் வழமையான சாதனைகளோடு நில்லாமல் மிகவும் அபூர்வமான அவரது ஒரு போராட்டத்தை இவரது வலை தருகிறது.

சாரா என்கிற பெண்ணை மருத்துவர்  ஒருவன் வேலை ஆசை காட்டி லண்டன்அழைத்துபோய் நிர்வாணமாய் நிற்க வைத்து காட்சிகளை நடத்தி காசு செய்கிறான். பிறகு ஃப்ரான்ஸுக்கு விற்கிறான். பாலியல் தொழிலில் தள்ளுகிறார்கள். அவள் இறந்த பிறகும் ஒரு பூத பெண்ணின் உருப்புகள் என்று சொல்லி அவளது அந்தரங்க உறுப்புகளை பாடப் படுத்தி ம்யூசியத்தில் வைக்கிறார்கள்.

அவற்றை மிகுந்த போராட்டத்திற்கிடையே மீட்டு வந்து அடக்கம் செய்கிறார். அப்போது மண்டேலா சொன்னாராம்,

“பல மனித ஆயுட்காலங்களை கடந்து அவமதிக்கப் பட்ட பெண்ணின் உடல் இனியாவது அமைதியாக உறங்கட்டும்.”

சாரா இறந்தது 1815 இல்.

இப்படியாக ஏராளமான தேடக் கிடைக்காத அபூர்வமான தகவல்கள்.

எப்போதும் சொல்லாத ஒன்றை சொல்கிறேன். இந்த வலையை குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு பாருங்கள். குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய இருக்கிறது இந்த வலையில்.

போய்ப் பாருங்கள்
http://karanthaijayakumar.blogspot.com/




















Tuesday, January 28, 2014

நிலைத் தகவல் 24



  • கீர்த்தனா அவங்க அம்மா மாதிரி. பயங்கற பக்தி. தூங்கும்போது மண்டியிட்டு ஜெபம் செய்து, காலண்டரில் இருக்கும் ஏசு படத்துக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அறையின் எல்லாத் திக்கும் திரும்பி காற்றிலே சிலுவைக் குறியிட்டுவிட்டுதான் தூங்குவாள்.

    நேற்றும் அப்படித்தான் , வந்திருக்கும் தங்கை மகள் நிவேதியை தூக்கிக் கொண்டு ஏசு படத்தை வணங்கி முத்தமிட்டவுடன் நிவேதியிட யேசப்பா சொல்லு என்றாள்.

    எங்கள் கிராமத்தில் இப்போது தொடர்ச்சியாக சபரிமலை போய்க் கொண்டே இருப்பார்கள். தினமும் ஒரு பேச் போவார்கள். அனுப்பி வைக்க பஜனைக்கு அம்மாவோடு இவளும் போய் வருவதால் எந்த சாமிப் படத்தைப் பார்த்தாலும் அய்யப்பூ எங்கிறாள்.

    யேசப்பா சொல்லு என்று கீர்த்தி சொன்னதும் குட்டி “அய்யப்பூ” என்றாள்.

    “ இது அய்யப்பா இல்லடீ ”சேசப்பா” சொல்லு”

    “ அய்யப்பூ “

    “ இல்லடீ, சேசப்பா சொல்லு”

    “ அய்யப்பூ”

    “ சேசப்பா “

    “ அய்யப்பூ “

    சலித்துப் போன கீர்த்தி சொன்னாள்,

    “ அய்யப்பா “

    வம்புக்கென்று இப்போது நிவேதி சொன்னாள்,

    “ சேசப்பூ “

    கடகடவென்று விட்டு சிரிக்கவே கேட்டேன்,

    “ ஏம்பா சிரிக்கிற? ”

    “ரெண்டும் ஒன்னுதானே. அதனாலதான்... “

    சிரித்தேன்.

    “ நீங்க ஏன் சிரிக்கிறீங்க ? “

    “ ரெண்டுலயும் ஒன்னும் இல்லதானே. அதனாலதான்... “

    முகநூலில் வாசிக்க

Thursday, January 16, 2014

நிலைத் தகவல் 23







உங்களிடம் ஒரு நேர்காணல் எடுத்து ”காக்கைச் சிறகினிலே” தமிழர் திருநாள் சிறப்பிதழில் போடுவது என்று முடிவெடுத்தோம். எங்களிடம் உங்கள் தொடர்பெண் இல்லை.

முகநூலில் உங்கள் எண் கேட்டிருந்தேன். ஏகப் பட்ட எண்களை நண்பர்கள் தந்திருந்தனர். அதில் சில எண்கள் உங்களது இளைய தோழர்களின் எண்கள்.

15 முறைகள் ஏறத்தாழ முயற்சித்தும் உங்களைப் பிடிக்க முடியவில்லை. நடை பயணத்தில் இருந்தீர்கள். அல்லது ஓய்விலிருந்தீர்கள். இதற்குள்ளாக இதழின் வேலைகள் முடிந்து போயின. இந்த சிறப்பிதழின் முத்தாய்ப்பே உங்களது நேர்காணலாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தோம். கிடைக்காமல் போனதில் நொந்து போனோம். சரி தமிழ் வருடப் பிறப்பிற்காவது உங்களது நேர்காணலைப் பெற்ருவிட வேண்டும் என்பதில் சந்திர சேகர் பிடிவாதமாய் இருந்தார்.

ஒருவித சலிப்போடுதான் உங்களது எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். ஆச்சரியமாயிருந்தது , எடுத்தீர்கள். மிகவும் தளர்ந்திருந்தது உங்கள் குரல்.

காந்தியின் எளிமையைவிடவும் உங்கள் எளிமை ரொம்பக் காஸ்ட்லிங்க அய்யா

இப்படித்தான் துவங்கினேன். ஒரு குழந்தையைப் போல் சிரித்துவிட்டு கேட்டீர்கள்.

“எப்படி?”

இதழைப் பற்றியும் எங்களது ஆசை பற்றியும் சொன்னேன்.

ஜனவரி 2 அல்லது 4 கடவூர் வருமாறு சொன்னீர்கள். கடவூர் வருவதற்கான வழியையும் ஒரு சிறு குழந்தைக்கு புரிய வைப்பது போல் சொன்னீர்கள். எனது சொந்த ஊரே கடவூர்தான் என்று புன்னகையோடு சொன்னபோது வாய்விட்டு சிரித்தீர்கள். 

நாளை மறுநாள் ஜனவரி 2.

நானிருக்கிறேன். காக்கை இருக்கிறது.

சொன்ன சொல் தவற மாட்டீர்களாம், பொய் சொல்ல மாட்டீர்களாம், எல்லோரும் சொல்கிறார்கள்.

என்னிடம் மட்டும் ஏன் தந்தையே சொல் தவறினீர்கள்?

வரச் சொல்லிவிட்டு வரவேற்க நீங்களில்லாமல் ஏன் போனீர்கள்?

விளங்காதவன், தோஷிப் பயல் என்றெல்லாம் என்னைப் பற்றி சிலர் சொல்லும் போது ஒரு புன்னகையோடு கடந்து போகிறவன்தான். அது உண்மைதானோ என்று தோன்றுகிறது.

உங்கள் செய்திகளை முடிந்தவரை காக்கை கொண்டு சேர்க்கும்.

போய் வாருங்கள் தந்தையே

முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/photo.php?fbid=642026805838833&set=a.215651775143007.50424.100000945577360&type=1&stream_ref=10

01

கொஞ்சம் கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
நகர்த்தி நட்டிருக்கிறார்கள் அவ்வப்போது
பத்துப் பதினைந்து முறையேனும்
எனக்குத் தெரிய
இந்த இருபத்தி ஐந்து வருடத்தில்,
ஆபத்துகளை அப்புறப் படுத்த வக்கில்லாத
நகராட்சிக் காரர்கள் அதில்
புது வண்ணம் பூசி எழுதி வைத்திருக்கிறார்கள்
ஆபத்தான வளைவென்று

Saturday, January 11, 2014

13 அமரேசன் மா



ஒன்றை அதுவாக உணர்வதும் ஒத்துக்கொள்வதும் பெரிதாய் அருகிப் போயிருக்கிற காலம் இது. கட்டமைக்கப் பட்ட பிம்பங்களினூடே பெரும்பான்மை அணுகுதல்கள் நிகழ்கின்றன. அல்லது, ஒன்றை படு சிரமப் பட்டு அமைத்துக் கொண்டேனும் அதனூடாக ஒன்றை உணர்ந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும்தான் இன்றைய வாடிக்கையாய்ப் போனது. இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால் பிம்பங்களையே அசலென ஏற்பதுதான், எளிமையாக சொன்னால் முகமூடிகளையே முகமாக ஏற்பதுதான் இன்றைய எதார்த்தமாக இருக்கிறது. இந்தச் சூழலில் அமரேசன் “உண்மையை உண்மையென்று உணர்” என்ற பிரகடனத்தோடு வலையை நடத்துகிறார்.

இருக்கிற அவலங்களைக் கண்டு கொதிப்பதற்கும், அவற்றை அம்பலப் படுத்துவதற்கும் சமூக அக்கறையும் துணிச்சலும் தேவை. அதுமாதிரியான படைப்புகளும், அச்சு ஊடகங்களும், வலைதளங்களும் ஏராளம் இருக்கவே இருக்கின்றன. அவற்றைப் போற்றிக் கொண்டாடவே செய்கிறோம். அனால் அவற்றினூடான பயணப்படும்போது ஏதோ ஒரு வெற்றிடம் அல்லது போதாமை தட்டுப் படவே செய்கிறது. அமர்ந்து யோசித்தால் பிரச்சினைகளை ஆழ்மாக அலசும் படைப்பும் ஊடகமும்கூட அதற்கான தீர்வுகளை முன்வைப்பதில்லை. ஆனால் அமரேசன் பிரச்சினைகளைன் வேரைப் பிடிப்பதோடு அதற்கான தீர்வுகளையே நம்முன் விவாதத்திற்கு வைக்கிறார்.

அந்த வகையில் கொஞ்சம் பழசுதான் என்றாலும் இதைத்தான் சொல்ல வேண்டும், “ எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான வலை இவருடையது”

”நுட்பமாக எதையும் அணுகுவதாலேயே அமரேசனுக்கு எங்கு போனாலும் பிரச்சினை வருகிறது” என்பது மாதிரி ஒருமுறை தோழன் யாழன்ஆதி கவிதாசரனில் எழுதியதாக நினைவு. அது எவ்வளவு உண்மை என்பது இவரது படைப்புகளில் பயணப்படும்போது ஒவ்வொரு பாராவும் நமக்கு சொல்கின்றன. பொய் சொல்ல மாட்டான் தோழன் யாழனாதி.

ஏழை மக்களை மனதில் வைத்து நடைபெறும் அரசாங்கத்திற்கும், ஏழைகளின் அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை சுட்டுவதோடு ஆரம்பிக்கிறது “ஏழைகளுக்கான மதுக் கொள்கை” என்ற பதிவு. ஏழைகளுக்கான அரசாங்கம் எது என்பதில் முடிந்த அளவுக்கு குழம்பிக் கிடக்கிறோம். ஏழைகளுக்கான வயிறுகளை இலவசங்களால் நிரப்புவதும், சுயமாக அந்த வேலையை அவர்கள செய்துவிடாமல் பார்த்துக் கொள்வதும், ஏழைகளை ஏழைகளாகவே எப்போதும் வைத்திருப்பதுமே ஏழைகளை மனதில் கொண்டு நடக்கும் அரசாங்கம். சுயமாக அவனை சம்பாரிக்க வைத்து அவனது வாழ்நிலையை இருக்கிற இடத்திலிருந்து ஒருசில அங்குலங்களேனும் உயர்த்த முயற்சிப்பது ஏழைகளுக்கான அரசாங்கம் என்கிறார்.

பொதுவாகவே காசிருப்பவன் பணக்காரன், அது இல்லாதவன் ஏழை என்றுதான் பொதுவில் கொள்ளப்படுகிறது. நிலமுடையவர்கள் பணக்காரர்கள், நிலமற்றவர்கள் ஏழைகள் என்று மிகச் சரியாய் சொல்கிறார். நிலப் பகிர்வு பற்றிமட்டும் கொஞ்சம் தாவியிருக்குமானால் இந்தப் பதிவின் உசரம் எவ்வளவோ கூடியிருக்கும். ஆனால் அது ஒன்றும் குற்றமோ குறையோ அல்ல.

நிலமற்றவர்களின் வாக்குகளைப் பெற்று நிலமுள்ளவர்களுக்காக நிலமுள்ளவர்களால் நடத்தப்படும் ஆட்சி என்று இன்றைய ஜனநாயகத்தை தங்களது வஞ்சகமான சூழ்ச்சிமூலம் வளைத்துப் பிடித்தவர்கள் பற்ரி பேசுகிறார்.

மதுவைக் கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்ட பிறகு மண்ணுக்கேற்ற மதுவையாவது கொடுத்து தொலையுங்களேன் என்ற இவரது கோரிக்கை மிக மிக வித்தியாசமானது. புதிதாய் பள்ளிகளை திறக்க மாட்டார்கள், மருத்துவ மனைகளைத் திறக்க மாட்டார்கள், ரேஷன் கடைகளைத் திறக்க மாட்டார்கள். ஆனால் நாளும் நாளும் புதிதாய் புதிதாய் “டாஸ்மாக்” கடைகளைத் திறப்பதைக் கொள்கையாய்க் கொண்டவர்கள். இவர்களிடம் போய் மதுவிலக்கு குறித்து பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்துள்ளார். ஆகவே எவனது சீதோஷ்ண நிலைக்காகவோ தயாரிக்கப் பட்ட அயல்நாட்டு மதுவிற்கு பதில் உடலுக்கு தீங்குதராத, மலிவான கள்ளினை மாற்றாக முன்மொழிகிறார்.

தெருக்களை சுத்தம் செய்யும் தலித்களைப் பற்றிய அக்கறை கொள்கிறார். அவர்களது வாழ்நிலை சிறக்க தன்னாலான தீர்வுகளை முன்வைக்கிறார். ஊரைச் சுத்தம் செய்யும் தலித்துகளை குடிநோயாளிகளாக மாற்றும் இன்றைய சமூக அவலத்தை வேதனையோடு பார்க்கிறார்.
இவர்கள் அள்ளிக் குவிக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கவும், மின்சாரம் தயாரிக்கவுமான தொழில்நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் இவர்களுக்கு வழங்கி இவர்களது வாழ்நிலையை உயர்த்தவேண்டும் என்கிற இவரது ஆலோசனையை திறந்த மனதோடு நாம் விவாதிப்பது நல்லது.

பன்னாட்டு மூலதனங்களை கூட்டுறவு முறைகொண்டு எதிர்கொள்ள அழைக்கிறார். அதுவும் சேரிகளில் கூட்டுறவு கடைகளை திறப்பதன் மூலம் அவர்கள் சம்பாரிக்கும் பணம் வெளிநாட்டு பெரு முதலாளிகள் கைகளுக்கு போவதைத் தடுக்கமுடியும் என்பதோடு இவர்களைச் சுற்றியே புழங்கும் என்று சொல்கிறார். இது பணவீக்கத்தினை கட்டுப் படுத்துவதற்கான அரிச்சுவடி என்பதை சிதம்பரம் மாதிரி பொருளாதார மேதைகள் ஒருபோதும் உணர்ந்துகொள்ளப் போவதில்லை. இடதுசாரிகள் தங்களுக்கான மாற்றுப் பொருளாதாரத் திட்டத்திற்கு இதை நிச்சயம் பரிசீலிக்க வேண்டும் என்று பாமரத்தனமாக ஒரு ஆசை பிறக்கிறது.
மலைகள், காடுகள் ஆறுகள் ஆகியவை சூறையாடப் படுவதை அதனால் ஏற்படும் விளைவுகளை பேசுகிறார்.

“புலப்படாத தண்ணீர்” என்கிற ஒரு புது வார்த்தையை, விவாதத்தை இவர் மிக நேர்த்தியாக முன்வைக்கிறார். ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2000 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதே போல்தான் காய்கறிகள் விஷயத்திலும் நடக்கிறது. எனில், 1000 கிலோ அரிசியை நாம் கேரளாவிற்கு அனுப்புகிறோம் என்றால் இருபது லட்சம் தண்ணீரையும் சேர்த்தே அனுப்புகிறோம். இதைத்தான் அவர் புலப்படாத தண்ணீர் என்கிறார். எழுந்து நின்று இதற்காக இவரை வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது.

வறட்சியால் ஒருகட்டத்தில் பாதிக்கப் பட்டிருந்த கேரளா இன்று கடவுளின் நிலம் என்று அழைக்கப் படுமளவிற்கு மாறிப் போனதைப் பற்றி “மரங்களை வெட்ட வாருங்கள்” என்ற பதிவு பேசுகிறது.
நிலத்தடி நீரையும் காற்றில் உள்ள ஈரப் பதத்தையும் உறிஞ்சி பூமியை வரளச் செய்யும் சீமக் கருவேலி, முள்மரம் தைலமரம் போன்றவற்றை கேரளத்துக் காரர்கள் அப்புறப்படுத்தியதுபோல் நாமும் செய்ய வேண்டும் என்கிறார்.

பறைக்கு தப்பென்றும் ஒரு பெயர் உண்டு. ”சரி க்கு எவனடா தப்பென்று பெயர் வைத்தது” என்று கேட்பார் நந்தலாலா. தமிழர்களின் அடையாளம் பறை. அதன் அங்கீகாரத்திற்கான முயற்சி செய்ய வேண்டுமென கோருகிறார்.

இந்த வலையை இவ்வளவுநாள் எப்படி பார்க்காமல் போனோம் என்ற குற்ற உணர்வேகூட எனக்குண்டு. சரியோ தவறோ தீர்வுகளை முன்வைக்கிற ஒரு வலை. அவை குறித்து மேலதிகமாய் நாம் விவாதிக்கலாம். இந்த வலையை எனக்கு அறிமுகம் செய்துவைத்த இதழாசிரியர் ஜெபக்குமாருக்கு நன்றி சொல்லி இந்த வலையை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.  

Sunday, January 5, 2014

வீட்டிற்கொரு மரம்...பள்ளிக்கொரு இதழ்...


நடத்த முடியுமா?

நடத்துகிறார்கள்.

நடத்தலாம் சரி. தொடர்ந்து  நடத்த முடியுமா?

தொடர்ந்தும்  நடத்துகிறார்கள்.

அப்படியா? அப்படி எனில் அவர்கள் தேர்வில் தோல்வியுற்று அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்று வாழ்க்கையை நாசமாக்கொண்டிருப்பார்கள்.

சத்தியமாய் இல்லை. அனைவரும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று சமூக அக்கறையோடு கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்னதிது?  நல்லா இல்லைனாலும் புரியற மாதிரி எழுதுவாயே. என்ன ஆச்சு எட்வின் உனக்கு?”

ஒன்றுமில்லை. நடத்த முடியுமா? தொடர்ந்து நடத்த முடியுமா? என்பதாக மேலே நீண்ட உரையாடல் சிற்றிதழ் நடத்துவது சம்பந்தமானது. தொடர்ந்து நடத்தி சாதித்துக் காட்டி தொடர்ந்து கொண்டுமிருப்பவர்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்தான் இந்த தொடரோட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே நிகழ்ந்த உரையாடல் என்பது எனக்குள்ளே நிகழ்ந்ததுதான். கேள்விப் பட்டதிலிருந்து என்னாலேயே நம்ப முடியாமல்தான் குழம்பிக் கிடந்தேன்

ஆனால் குறிப்பிட்ட சீரான இடைவெளியில் ( மாதா மாதம் ) வந்துகொண்டிருக்கும்சமூகமே எந்திரி” , “பேனா முனை” , “சிற்பியின் விதைகள்”, மற்றும்சுழல்ஆகிய இதழ்கள் என் முன்னே கிடக்கின்றன.
தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் எந்த வித ஆரவாரமுமின்றி தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் ஒரு மாத இதழோடு தொடர்புடையவன் என்கிற வகையில் மிகுந்த ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிற விஷயமாகவே எனக்கிது படுகிறது.
 

சிற்றிலக்கிய இதழ்களைப் பொறுத்தவரை முப்பது வருடங்களுக்கு முன்னால்செந்தூரம்தொடக்கவிழாவில் பேராசிரியர் பெரியார்தாசன் பேசியதைத்தன் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சொன்னார்,
சிறு பத்திரிக்கை நடத்துவதென்பது ஒரு காஸ்ட்லியான தற்கொலை
அவர் ஏதோ போகிற போக்கில் உதிர்த்துவிட்டுப் போன நகைச்சுவைத் துணுக்கல்ல அது. ஒவ்வொரு இதழும் ஒரு பிரசவம் போன்றது என்பார்கள். அது உண்மைதான். ஆனால் அது ஒரு தற்கொலைக்கு சமம் என்பதை சிற்றிதழோடு தொடர்புடையவர்கள் நன்கு உணர்வார்கள்.

சத்தியமாய் தற்கொலைதான். ஆனால் ஒவ்வொரு இதழ் கொண்டு வருவதற்காகவும் தற்கொலை செய்து கொள்பவன் இதழ் வந்த அடுத்த கணமே உயிர்த்தெழுந்து விடுகிறான்.

இப்படியும் சொல்லலாம், உயிர்த்தெழும் வல்லமை உள்ளவனால் மட்டுமே ஒரு சிற்றிதழை தொடர்ந்து நடத்த முடியும். எனில், மேற்சொன்ன இதழ்களை நடத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் உயிர்த்தெழும் வல்லமை கொண்டவர்களே. 
 
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்என்றாள் கிழவி. அது பிள்ளைகளுக்கு சொன்னது. நமக்கல்ல என்பதாக ஆசிரியர்களின் மனோபாவம் சுறுங்கிப் போனதோ என்று அச்சப் படுமளவில்தான் இன்றைய ஆசிரியத் திரளின் ஒரு பகுதி வாசிப்பை விட்டு விலகி நிற்கிறது. பாடத் திட்டத்தை தாண்டி நகரமறுக்கும் ஒரு திரளும் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசினால் செய்தித்தாள்களை வாசிக்காத ஆசிரியர்களையும் நானறிவேன்.

விதி விலக்காக வாசித்துக் குவிக்கிற ஆசிரியப் பெருமக்களும் இருக்கவே செய்கிறார்கள். சொறிபிடித்தவன் கையும் பேனா பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பாகள். அது மட்டுமல்ல நல்ல புத்தகத்தைப் படித்தவனாலும் சும்மா இருக்க முடியாது. அதுவும் நல்லதை வாசித்த நல்லவன் ஒருவனுக்கு சும்மா இருப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

இதுதான் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும் நடந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தீவிரமான வாசிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். தீவிர வாசிப்பாளனால் சும்மா இருக்க இயலாது. வாசித்தவை பற்றி அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அது விவாதம் வரை நீண்டிருக்கிறது. ஆழமாய் விவாதித்திருக்கிறார்கள். வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வரைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று ஒரு புள்ளியில் அக்கறை கொள்கிறார்கள். வாசிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நல்ல இதழ்களை வாசிக்க கொடுத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் கொடுத்த பத்திரிக்கைகளுள்காக்கைச் சிறகினிலேவும் ஒன்று என்பதுமகிழ்ச்சியைத் தருகிறது.

இதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறார்கள். வாரா வாரம் வாசித்தவைகளைப் பற்றி கட்டமைக்கப் படாத அமைப்பாகக் கூடி விவாதிக்கிறார்கள். பையப் பைய இந்த நிகழ்வுகளுக்குள் மாணவர்களும் வருகிறார்கள். இவற்றிற்கு இவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளரிடமிருந்து ஆதரவு கிடைக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்களில் சிலர் எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள். எழுதியவற்றை கொண்டுசெல்ல தாங்களே ஒரு இதழைத் தொடங்கினால் என்ன என்று சிந்திக்கிறார்கள். தலைமை ஆசிரியர்ஆஹாஎன்கிறார்.   என் ஆசி எப்போதும் உண்டென்கிறார்  தாளாளர்.
விளைவு அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நடத்தும்சுழல்என்ற இதழ் பிறக்கிறது

அந்த இதழின் வெளியீட்டு விழாவை பள்ளி நிர்வாகம் மிகச் சிறப்பாக நடத்துகிறது. ஆசிரியர்களை உச்சி முகந்து கொண்டாடுகிறார் தாளாளர்.
ஆயிரம் பிரதிகள் போடுகிறார்கள், கொண்டு சேர்க்கிறார்கள் என்பது நினைத்தும் பார்க்க முடியாத விஷயம். வந்தவாசியில் இந்த இதழை நான் பார்த்திருக்கிறேன். நேற்று புதுக்கோட்டையில் முத்துநிலவன் வீட்டிலும் சுழலைப் பார்க்கிறேன். பரவலாய் நாடு முழுக்கக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆயிரம் பிரதிகள் என்பது லேசான காரியமே இல்லை. அது எவ்வளவு கடினமென்பது எனக்குத் தெரியும். வெறும் 300 பிரதிகளைத் தாண்டாத வலுவான சிற்றிதழ்களை நானறிவேன். எப்படி இந்த அதிசயத்தை இவர்கள் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள்?

ஒரு சிறு பத்திரிக்கை நடத்த முதலில் பணம் தேவை. அதைத் தொடர்ந்து படைப்புகள். அதனைத் தொடர்ந்து இதழை நடத்த ஒரு குழு.
சுழல் நடத்த மாதா மாதம் தோறாயமாக எட்டாயிரம் ரூபாய் தேவைப் படுகிறது என்கிறார் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர். இதை எப்படி சமாளிக்கிறார்கள்?

500 சந்தாதாரர்கள் இருப்பதாக அவர் சொன்னபோது நான் வியப்பின் உச்ச்சிக்கே போனேன். முழுநேரமாய் பத்திரிக்கைத் த்ழிலை செய்யக்கூடிய நண்பர்களுக்கு இது சாத்தியப் படாத ஒன்றுதான்.
வருட சந்தா எண்பது ரூபாய் என்கிறார்கள். எனில் இந்த வகையில் 40000 ரூபாய் வருகிறது. இந்த வகையில் மாதம் 3000 ரூபாய் ஒதுங்குகிறது. விற்பனையில் 3000 வருகிறது என்கிறார். எவ்வளவு ஆச்சரியமான விஷயம். மிச்சத்தை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதைப் பார்த்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஏன் நமக்கென நாமே ஒரு இதழைத் தொடங்கக் கூடாது என்று சிந்திக்கிறார்கள். விளைவு, “சமூகமே எந்திரிஎன்ற இதழ் உதயமாகி உள்ளது. தஙளது ஆசிரியர்களுக்கு இதழ் நடத்துவதில் ஏற்பட்ட அனுபவங்களை உள் வாங்கியவர்களாக அவர்கள் இதழை ஆரம்பித்துள்ளார்கள்.. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இதழ் இது எனில் அடுத்த ஆண்டு இந்த மாணவர்கள் வெளியேறிவிடுவார்களே? என்றேன். அடுத்த ஆண்டும் பத்தாம் வகுப்பு இருக்கும். அதிலும் மாணவர்க இருப்பார்கள். அவர்கள் தொடர்வார்கள் என்கிறார்.

இப்படித்தான்பேனா முனை” “சிற்பிகளின் விதைஆகிய இதழ்களும் வெளி வருகின்றன

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாகவும் அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாகவும் மாற்றுவது கல்வி. ஆனால், இன்றைய நிலையில் கல்வியானது வெறும் பணம் சம்பாரிக்கும் தொழிலாக மாறிவிட்டது
இது எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுதிய தலையங்கம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை

கூடங்குளத்தைப் பற்றி இப்படி கவிதையாக்குகிறான் ஜா. முத்து என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவன்,

கரண்டுக்காக
கல்லறையைக் கட்டி ஏமாந்தான்
இந்தியன்.”

இதுபோல நிறையத் தெறிப்புகளை இந்த இதழ்களில் நம்மால் பார்க்க முடிகிறது.

இதில் வெளிவந்த கவிதைகளை தொகுத்து “மொட்டுகளின் வாசம்” கவிதை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் பள்ளியின் நிர்வாகக் குழுவினர். பெரிய விழாவெடுத்து இந்தத் தொகுப்பினை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறர்கள் பள்ளியின் தாளாளரும் தலைமை ஆசிரியரும். இதைப் பள்ளியின் 69 வது ஆண்டுவிழா வெளியீடு எனச் சொல்லி பெருமை பட்டிருக்கிறார்கள்.

நிறைய பிம்பங்களை கட்டுடைத்திருக்கிறார்கள் இந்தப் பள்ளியின் நிர்வாகிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும்.

1 ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமூக அக்கறை அவ்வளவாக இல்லை என்று விஷம்போலப் பரவி வரும் பொதுப் புத்தியைத் தகர்த்து தூளாக்கியிருக்கிறார்கள்.
2 இதுமாதிரி நடவடிக்கைகள் மாணவர்களை கல்வியிலிருந்து அப்புறப் படுத்தும் என்கிற பொதுவான குற்றச்சாட்டினையும் தங்களது தேர்ச்சி விழுக்காடு மற்றும் அதிக மதிப்பெண்கள் மூலம் சரித்துப் போட்டிருக்கிறார்கள்.
3 படிப்பு படிப்பு படிப்பு என்கிற நிலை மட்டுமே மாணவனின் எதிர்காலத்தை செறிவாக்கும் என்கிற பிம்பத்தையும் தகர்த்துப் போட்டிருக்கிறார்கள்.
4 ஆசிரியர்களும் மாணவர்களும் நிர்வாகமும் எந்தப் புள்ளியிலும் ஒன்றிணைய முடியாது என்கிற கருத்தையும் துடைத்தெறிந்திருக்கிறார்கள்.

இதுமாதிரியான ஒன்றிணைவும் புரிதலும் இருந்து விட்டால் எந்த மாணவனும் ஆசிரியனுக்கெதிராக கத்தியைத் தூக்கமாட்டான். அந்த வகையில் இந்தப் பள்ளி ஒரு முன்னுதாரனமாக விளங்குகிறது.
இன்றைய நமது எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் படித்த பள்ளி, முன்னாள் அமைச்சர் இராம வீரப்பன் அவர்கள் படித்த பள்ளி என்பதிலெல்லாம் எவ்வளவு பெருமையும் மகிழ்வும் கிடைக்கிறதோ அதற்கு சற்றும் குறையாத அளவு மகிழ்ச்சியும் பெருமையும் இதில் இத்தகைய மாணவர்களாலும் மாணவர்களாலும் பள்ளிக்குக் கிடைப்பதாகவே நிர்வாகியும் தலைமை ஆசிரியரும் நம்புகிறார்கள்.
ஆசிரியர்கள் பத்திரிக்கை நடத்துகிறார்கள். பத்தாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களும் பத்திரிக்கை நடத்துகிறார்கள். 

அடுத்து?

ஒரு ஆசிரியர் சொல்கிறார்,

”ஒரு வீடு ஒரு மரம் என்பது போல் ஒரு வகுப்பு ஒரு இதழ் என்பதே எங்கள் கனவு”

கனவு பலிக்கட்டும்.

நன்றி: ”காக்கைச் சிறகினிலே”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...