ஒன்றை அதுவாக உணர்வதும்
ஒத்துக்கொள்வதும் பெரிதாய் அருகிப் போயிருக்கிற காலம் இது. கட்டமைக்கப் பட்ட பிம்பங்களினூடே
பெரும்பான்மை அணுகுதல்கள் நிகழ்கின்றன. அல்லது, ஒன்றை படு சிரமப் பட்டு அமைத்துக் கொண்டேனும்
அதனூடாக ஒன்றை உணர்ந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும்தான் இன்றைய வாடிக்கையாய்ப் போனது.
இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால் பிம்பங்களையே அசலென ஏற்பதுதான், எளிமையாக சொன்னால்
முகமூடிகளையே முகமாக ஏற்பதுதான் இன்றைய எதார்த்தமாக இருக்கிறது. இந்தச் சூழலில் அமரேசன்
“உண்மையை உண்மையென்று உணர்” என்ற பிரகடனத்தோடு வலையை நடத்துகிறார்.
இருக்கிற அவலங்களைக்
கண்டு கொதிப்பதற்கும், அவற்றை அம்பலப் படுத்துவதற்கும் சமூக அக்கறையும் துணிச்சலும்
தேவை. அதுமாதிரியான படைப்புகளும், அச்சு ஊடகங்களும், வலைதளங்களும் ஏராளம் இருக்கவே
இருக்கின்றன. அவற்றைப் போற்றிக் கொண்டாடவே செய்கிறோம். அனால் அவற்றினூடான பயணப்படும்போது
ஏதோ ஒரு வெற்றிடம் அல்லது போதாமை தட்டுப் படவே செய்கிறது. அமர்ந்து யோசித்தால் பிரச்சினைகளை
ஆழ்மாக அலசும் படைப்பும் ஊடகமும்கூட அதற்கான தீர்வுகளை முன்வைப்பதில்லை. ஆனால் அமரேசன்
பிரச்சினைகளைன் வேரைப் பிடிப்பதோடு அதற்கான தீர்வுகளையே நம்முன் விவாதத்திற்கு வைக்கிறார்.
அந்த வகையில் கொஞ்சம்
பழசுதான் என்றாலும் இதைத்தான் சொல்ல வேண்டும், “ எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான
வலை இவருடையது”
”நுட்பமாக எதையும்
அணுகுவதாலேயே அமரேசனுக்கு எங்கு போனாலும் பிரச்சினை வருகிறது” என்பது மாதிரி ஒருமுறை
தோழன் யாழன்ஆதி கவிதாசரனில் எழுதியதாக நினைவு. அது எவ்வளவு உண்மை என்பது இவரது படைப்புகளில்
பயணப்படும்போது ஒவ்வொரு பாராவும் நமக்கு சொல்கின்றன. பொய் சொல்ல மாட்டான் தோழன் யாழனாதி.
ஏழை மக்களை மனதில்
வைத்து நடைபெறும் அரசாங்கத்திற்கும், ஏழைகளின் அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை
சுட்டுவதோடு ஆரம்பிக்கிறது “ஏழைகளுக்கான மதுக் கொள்கை” என்ற பதிவு. ஏழைகளுக்கான அரசாங்கம்
எது என்பதில் முடிந்த அளவுக்கு குழம்பிக் கிடக்கிறோம். ஏழைகளுக்கான வயிறுகளை இலவசங்களால்
நிரப்புவதும், சுயமாக அந்த வேலையை அவர்கள செய்துவிடாமல் பார்த்துக் கொள்வதும், ஏழைகளை
ஏழைகளாகவே எப்போதும் வைத்திருப்பதுமே ஏழைகளை மனதில் கொண்டு நடக்கும் அரசாங்கம். சுயமாக
அவனை சம்பாரிக்க வைத்து அவனது வாழ்நிலையை இருக்கிற இடத்திலிருந்து ஒருசில அங்குலங்களேனும்
உயர்த்த முயற்சிப்பது ஏழைகளுக்கான அரசாங்கம் என்கிறார்.
பொதுவாகவே காசிருப்பவன்
பணக்காரன், அது இல்லாதவன் ஏழை என்றுதான் பொதுவில் கொள்ளப்படுகிறது. நிலமுடையவர்கள்
பணக்காரர்கள், நிலமற்றவர்கள் ஏழைகள் என்று மிகச் சரியாய் சொல்கிறார். நிலப் பகிர்வு
பற்றிமட்டும் கொஞ்சம் தாவியிருக்குமானால் இந்தப் பதிவின் உசரம் எவ்வளவோ கூடியிருக்கும்.
ஆனால் அது ஒன்றும் குற்றமோ குறையோ அல்ல.
நிலமற்றவர்களின்
வாக்குகளைப் பெற்று நிலமுள்ளவர்களுக்காக நிலமுள்ளவர்களால் நடத்தப்படும் ஆட்சி என்று
இன்றைய ஜனநாயகத்தை தங்களது வஞ்சகமான சூழ்ச்சிமூலம் வளைத்துப் பிடித்தவர்கள் பற்ரி பேசுகிறார்.
மதுவைக் கொடுப்பது
என்று முடிவெடுத்துவிட்ட பிறகு மண்ணுக்கேற்ற மதுவையாவது கொடுத்து தொலையுங்களேன் என்ற
இவரது கோரிக்கை மிக மிக வித்தியாசமானது. புதிதாய் பள்ளிகளை திறக்க மாட்டார்கள், மருத்துவ
மனைகளைத் திறக்க மாட்டார்கள், ரேஷன் கடைகளைத் திறக்க மாட்டார்கள். ஆனால் நாளும் நாளும்
புதிதாய் புதிதாய் “டாஸ்மாக்” கடைகளைத் திறப்பதைக் கொள்கையாய்க் கொண்டவர்கள். இவர்களிடம்
போய் மதுவிலக்கு குறித்து பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்துள்ளார். ஆகவே எவனது சீதோஷ்ண
நிலைக்காகவோ தயாரிக்கப் பட்ட அயல்நாட்டு மதுவிற்கு பதில் உடலுக்கு தீங்குதராத, மலிவான
கள்ளினை மாற்றாக முன்மொழிகிறார்.
தெருக்களை சுத்தம்
செய்யும் தலித்களைப் பற்றிய அக்கறை கொள்கிறார். அவர்களது வாழ்நிலை சிறக்க தன்னாலான
தீர்வுகளை முன்வைக்கிறார். ஊரைச் சுத்தம் செய்யும் தலித்துகளை குடிநோயாளிகளாக மாற்றும்
இன்றைய சமூக அவலத்தை வேதனையோடு பார்க்கிறார்.
இவர்கள் அள்ளிக்
குவிக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கவும், மின்சாரம் தயாரிக்கவுமான தொழில்நுட்பத்தையும்
பொருளாதாரத்தையும் இவர்களுக்கு வழங்கி இவர்களது வாழ்நிலையை உயர்த்தவேண்டும் என்கிற
இவரது ஆலோசனையை திறந்த மனதோடு நாம் விவாதிப்பது நல்லது.
பன்னாட்டு மூலதனங்களை
கூட்டுறவு முறைகொண்டு எதிர்கொள்ள அழைக்கிறார். அதுவும் சேரிகளில் கூட்டுறவு கடைகளை
திறப்பதன் மூலம் அவர்கள் சம்பாரிக்கும் பணம் வெளிநாட்டு பெரு முதலாளிகள் கைகளுக்கு
போவதைத் தடுக்கமுடியும் என்பதோடு இவர்களைச் சுற்றியே புழங்கும் என்று சொல்கிறார். இது
பணவீக்கத்தினை கட்டுப் படுத்துவதற்கான அரிச்சுவடி என்பதை சிதம்பரம் மாதிரி பொருளாதார
மேதைகள் ஒருபோதும் உணர்ந்துகொள்ளப் போவதில்லை. இடதுசாரிகள் தங்களுக்கான மாற்றுப் பொருளாதாரத்
திட்டத்திற்கு இதை நிச்சயம் பரிசீலிக்க வேண்டும் என்று பாமரத்தனமாக ஒரு ஆசை பிறக்கிறது.
மலைகள், காடுகள்
ஆறுகள் ஆகியவை சூறையாடப் படுவதை அதனால் ஏற்படும் விளைவுகளை பேசுகிறார்.
“புலப்படாத தண்ணீர்”
என்கிற ஒரு புது வார்த்தையை, விவாதத்தை இவர் மிக நேர்த்தியாக முன்வைக்கிறார். ஒரு கிலோ
அரிசியை உற்பத்தி செய்ய 2000 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதே போல்தான் காய்கறிகள்
விஷயத்திலும் நடக்கிறது. எனில், 1000 கிலோ அரிசியை நாம் கேரளாவிற்கு அனுப்புகிறோம்
என்றால் இருபது லட்சம் தண்ணீரையும் சேர்த்தே அனுப்புகிறோம். இதைத்தான் அவர் புலப்படாத
தண்ணீர் என்கிறார். எழுந்து நின்று இதற்காக இவரை வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது.
வறட்சியால் ஒருகட்டத்தில்
பாதிக்கப் பட்டிருந்த கேரளா இன்று கடவுளின் நிலம் என்று அழைக்கப் படுமளவிற்கு மாறிப்
போனதைப் பற்றி “மரங்களை வெட்ட வாருங்கள்” என்ற பதிவு பேசுகிறது.
நிலத்தடி நீரையும்
காற்றில் உள்ள ஈரப் பதத்தையும் உறிஞ்சி பூமியை வரளச் செய்யும் சீமக் கருவேலி, முள்மரம்
தைலமரம் போன்றவற்றை கேரளத்துக் காரர்கள் அப்புறப்படுத்தியதுபோல் நாமும் செய்ய வேண்டும்
என்கிறார்.
பறைக்கு தப்பென்றும்
ஒரு பெயர் உண்டு. ”சரி க்கு எவனடா தப்பென்று பெயர் வைத்தது” என்று கேட்பார் நந்தலாலா.
தமிழர்களின் அடையாளம் பறை. அதன் அங்கீகாரத்திற்கான முயற்சி செய்ய வேண்டுமென கோருகிறார்.
இந்த வலையை இவ்வளவுநாள்
எப்படி பார்க்காமல் போனோம் என்ற குற்ற உணர்வேகூட எனக்குண்டு. சரியோ தவறோ தீர்வுகளை
முன்வைக்கிற ஒரு வலை. அவை குறித்து மேலதிகமாய் நாம் விவாதிக்கலாம். இந்த வலையை எனக்கு
அறிமுகம் செய்துவைத்த இதழாசிரியர் ஜெபக்குமாருக்கு நன்றி சொல்லி இந்த வலையை உங்களுக்கு
சிபாரிசு செய்கிறேன்.
அருமையான வலைப் பூவினை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி தோழரே
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteபுதிய வலைப்பக்க அறிமுகத்திற்கு நன்றி எட்வின், தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்
ReplyDeleteமிக்க நன்றிங்க அண்ணா
Deleteஅருமையான அறிமுகம் தோழர்.
ReplyDeleteஇவரது தளத்தை தொடர்கிறேன்..