Monday, May 27, 2013

ஸ்மைல் பக்கம்


ஆணாதிக்கம்பெண்ணடிமைத்தனம் என்பதோடு பாலியல் பிரச்சினைகளில்,சிக்கல்களில் நாம் சுறுங்கிப் போகிறோம்.

இவை எதனினும் பெரிதான பாலியல்பிரச்சினைகளையும் ,சிக்கல்களையும் நாம் உதாசீனம் செய்கிறோம் என்பதைவிடஅந்தச் சிக்கல்கள் குறித்த எந்த சிறு தெளிவும் புரிதலும் இன்றியே நம்மில்பெரும்பான்மையோர் வாழ்ந்து சாகிறோம்

திருநங்கையர் மற்றும் திருநம்பியர் ஆகியோர் அனுபவிக்கும் பாலியல் சிக்கல்கள்இந்த உலகம் சந்திக்கும் எந்தச் சிக்கலைவிடவும் கொடூரமானதும்வலிமிக்கதுமாகும் .

அறிந்தோ அறியாமலோ அவர்களை நாம் நம் அன்றாட வாழ்வில் உதாசீனப்படுத்துகிறோம்அலட்சியப் படுத்துகிறோம்ஏன்பெரும்பான்மை நேரங்களில்அவர்களை அசிங்கப் படுத்தவே செய்கிறோம்.


எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்மை இருக்கிறதுஎல்லாப் பெண்களுக்குள்ளும்ஆண்மை இருக்கவே இருக்கிறது.

ஆண் உடலும், ஆண் கூறுகள் அதிகமாகவும், பெண்கூறுகள் குறைவாகவும்இருப்பின் அவன் ஆண்பெண் உடலும் பெண் கூறுகள் அதிகமாகவும்,ஆண்கூறுகள் குறைவாகவும் இருந்தால் அவள் பெண்.

இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆண் உடலும்ஆண்கூறுகள் குறைவாகவும் பெண்கூறுகள் அதிகமாகவும்இருந்தால் அவள் திருநங்கைபெண் உடலும் ஆண்கூறுகள் அதிகமாகவும்,பெண்கூறுகள் குறைந்துமிருப்பின் அவன் திருநம்பி.

பிச்சைக் காரர்களாக, பாலியல் ஊழியர்களாக மட்டுமே இவர்களை ஒரு அசூசையோடு பார்த்தவர்கள் வித்யாவின் “ஸ்மைல் பக்கங்கள்” பார்த்தால்யாரையும் போல தாங்களும் மனிதர்களே என்பதற்கான இவர்களது இருபது வருடங்களுக்கும் மேலான போராட்டத்தின் நியாயம் புரியும்.

ஆணாய் வளர்ந்தவன் தான் ஆணல்ல திருநங்கை என்பதை உணர்ந்து அதற்குமேல் வீட்டில் இருக்க இயலாது என்பதை உணர்ந்தவுடன் அங்கிருந்து வெளியேறி திருநங்கைகளோடு இணைவது என்பது இருக்கிறது பாருங்கள், எந்த எழுத்திலும் வசப்பட மறுக்கும் வலிமிகுந்தது.

ஆனால் இதைவிட கொடுமை பெண்ணாக வளர்ந்தவள் தான் திருநம்பி என்பதை உணரும் தருணம். அவளால் திருநங்கை வெளியேறுவது போல வெளியேற இயலாது. பெண் அல்ல திருநம்பி என தெரிய வந்ததுமே கருணைக் கொலையே செய்துவிடுவார்கள் என்பதை இந்த வலையில் பார்க்கும் போது மனசு கனத்துப் போகிறது.

அப்படியே தப்பி வெளியே வந்தாலும் திருநங்கை போல திருநம்பியால் வாழ்வை அவ்வளவு எளிதாக நகர்த்திவிட முடியாது என்பதையும் இந்த வலை நமக்கு சொல்கிறது.

தங்களைப் போலவே பாதிக்கப் படும் சம ஈர்ப்புடைய ஆண்கள் மற்றும் பெண்களின் வலியை அக்கறையோடு பதிவு செய்கிறது.

இரண்டு அக்காக்கள் ஒரு தங்கையோடு பிறந்து வளர்ந்த சரவணன் வித்யாவாய் மாறியதும் அந்த சகோதரிகளின் உறவை இழக்க நேர்ந்த அந்தத் தருணமும் அவரது தங்கையுடனான தொலைபேசி உரையாடலும் ஈரத்தை சுரக்க வைக்கின்றன.

திருநங்கை மரணமுற்றதும் அவளது உடலை குடும்பத்தார் பிடுங்கிச் சென்று களிமண்ணால் ஆண்குறி பொருத்தி ஆணாய் அடக்கம் செய்யும் வன்முறையை இந்த வலை கேள்வி கேட்கிறது. 

பாலியல் சிறுபான்மையினராகிய தங்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் நியாயமான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டை கோருகிறது.

”என் பெயர் வித்யா” என்ற இவரது நூல் கன்னடத்தில் மொழி பெயர்க்கப் பட்டு மொழி பெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளது. இவர் தேர்ந்த ஓவியர் என்பதை இந்த வலை சொல்கிறது.

இவ்வளவு இருந்தாலும் அவரை திருமணமாகாதவர், குடும்பப் பின்னனி இல்லாதவர் என்ற காரணங்களுக்காக இவருக்கு வெளிநாடு செல்ல விசா மறுக்கப் பட்டதை வலிக்க வலிக்க சொல்கிறது.

உள்ளே போய் பாருங்கள், இவர்களை சக மனிதர்களாக பார்க்கும் பக்குவம் வரும். போக வரும் காலத்தில் நம் குடும்பத்தில் ஒரு திருநங்கையோ திருநம்பியோ தோன்றினால் அவர்களும் நம் பிள்ளைகள்தான் என்று குடும்பத்திற்குள் அரவணைக்கும் பக்குவத்தை இந்த வலை தரும்.

வலை முகவரி

நன்றி : “ புதிய தரிசனம்”

Wednesday, May 15, 2013

“ கை கால் முளைத்த கவிதைகள் ”

தனது குழந்தை நிலாவை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டுக் கல்விமுறையில் அவளுக்கு கல்வியை வழங்கலாம் என்று விரும்புவதாக தனது முகநூலில் எழுதியிருக்கிறார் ஆர்த்தி வேந்தன். 

வீட்டுக் கல்வி இயக்கத்தில் பெரும்பங்காற்றிய ஜான்ஹோல்ட் அவர்களது அனுபவத்திலிருந்தும் தனது அனுபத்திலிருந்தும் அவர் எடுத்து வைக்கும் காரணங்கள் குறித்து நம்மால் விவாதிக்க முடியும். ஆனால் இறுதியாக அவர் வைக்கும் காரணம் நம்மை வெட்கித் தலை குனியவே வைக்கிறது.

குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு அதிகமாய் இரையாகும் இந்த காலகட்டத்தில் தனது மூன்று வயது குழந்தையை எப்படி பள்ளிக்கு அனுப்புவது?  என்ற அவரது கேள்வி உப்புப் போட்டு உணவெடுக்கும் சுரணையுள்ள எவரையும் ஓங்கி அறையவே செய்யும்.

ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கினார்கள். மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வயதுக்கு வரும் வரைக்கும் அவர்களை கல்விகற்க அனுமதித்தார்கள். மிக நீண்ட , அழுத்தமான போராட்டத்தின் பின்பே பெண் கல்வி இந்த அளவிற்கு சாத்தியப் பட்டது. இன்று ஆண் குழந்தகளைவிடவும் பெண் குழந்தைகளே தேர்ச்சி விழுக்காட்டிலும் மதிப்பெண்களிலும் சிறந்து விளங்குகின்றனர். அழுத்தமான போராட்டத்தின் பின்பே பெண் கல்வி இந்த அளவிற்கு சாத்தியப்பட்டது.

அதில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார்கள் பாவிகள். இந்த ஆண்டு பள்ளிச் சேர்க்கையின்போது இதன் பாதிப்பு தெரியக் கூடும்.

17 வயதுப் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்தாலே , “ பாவம் பச்ச மண்ணு. அவளுக்கு என்ன தெரியும்னு இப்ப கல்யாண ஏற்பாடு செய்றீங்க” என்று கேட்கிற சமூகத்தில் 5 வயது குழந்தையை சீரழித்திருக்கிறார்கள் என்றால் இந்தக் காலத்தில் வாழ்வதற்காகக் கூட வெட்கப் படவே வேண்டும்.

சிதைப்பதற்காக அந்தக் குழந்தையை அவன் தூக்கியபோது குழந்தைமையோடு அவன் கன்னத்தை அவள் வருடியிருக்கவும் கூடும். எப்படியடா...?

ஏற்கனவே பெண் குழந்தைகளை பெற்றெடுக்க தயங்குகிற சமூகத்தில் இனி சட்டத்திற்குப் புறம்பாக என்ன குழந்தை என்பதை ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதும் பெண் குழந்தை எனில் கருக்கலைப்பதும் தீவிரப்படும்.

இது, பெண்களின் விகிதாச்சாரத்தை பெருமளவு குறைக்கும். இதன் விளைவாக இயற்கை சமமிழந்து போவதோடு, பெண்களுக்கு மேலதிக எதிர்விளைவுகளையே கொண்டு வந்து சேர்க்கும்.

ஏதோ ஒரு குழந்தை யாருக்கோ காற்று வழி அனுப்பும் முத்தத்தின் ஒரு துளி எப்படியோ நம் மீது படுமானால் அந்தச் சின்னத் துளி நம் சோர்வையெல்லாம் துடைத்தெறியும் வல்லமை வாய்ந்ததாயிற்றே.

ஒவ்வொரு நாளும் god bless mummy என்று தங்கள் பிரார்த்தனையைத் தொடங்கும் குழந்தைகள் god bless all என்றுதான் முடிக்கிறார்கள். எல்லோருக்காகவு பிரார்த்திக்கிற குழந்தைகளைச் சீரழிக்க எப்படி வரும் மனம்? கொடியவர்களே , வேண்டாம், குழந்தைகளின் சாபத்தை நம்மால் தாங்க முடியாது.

“ காக்கைச் சிறகினிலே”  மே மாத இதழுக்கு எழுதிய தலையங்கம்

கவிதை

தருவதாய் சொன்ன கந்துகாரனுக்கும்
தரவேண்டிய கந்துக்காரனுக்குமிடையே
அலைந்தலைந்து
களைத்துப்போய்
போர்வைக்கும் எனக்குமிடையே
அரைத் தூக்கத்தில் கிடக்கிறது
என் தூக்கம் 

Tuesday, May 7, 2013

நள்ளிரவு காற்று


 விஷ்ணுபுரம் சரவணன் எப்போதாவது எழுதுவதை எப்போதும் பேசிக் கொண்டிருப்பவர்களுள் நானும் ஒருவன். கொஞ்சம் வியப்போடும் அதிகப் பொறாமையோடும் நான் பார்க்கும் எழுத்தாளர் அவர்.

எழுத்தாளர் பாமரன் அவர்களின் நண்பர் யுவன் பிரபாகரன் இவருக்காக ஒரு வலையை வடிவமைத்து “ ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப் பூச்சி” என்ற இவரது முதல் நூலிலிருந்து பத்துக் கவிதைகளை எடுத்துப் போட்டிருக்கிறார். இதுவே மணிசெந்தில் சொல்லித்தான் இவருக்கே தெரிய வருகிறது.

ஆக, இவரது வலை இவர் அறியாமலேயே பாமரனது முயற்சியில் உருவாகியிருக்கிறது.

 கவிதை,கதை, கட்டுரை என்று அள்ள அள்ள எல்லாம் இருக்கிறது இவரது வலையில். கோவமோ, வலியோ, அழுகையோ அல்லது வேறு எதுவோ எதுவாயினும் அதை அழகியலோடு சொல்லத் தெரிந்த கையடக்க எண்னிக்கையிலான இளைய எழுத்தாளர்களுள் சரவணன் முன்னுக்கு நிற்பவர்.

குழந்தைமை இவரது பெரும்பகுதி படைப்புகளின் அடிநாதம்.

இறுகிய பாறைகளையும் கட்டுடுடைத்து ஊடுறுவி கண்ணுக்குத் தெரியாத பொந்தொன்றில் தேங்கிக் கிடக்கும் பொட்டு ஈரத்தில் கறைந்துபோகும் பக்குவம் இவரிடம் இருக்கிறது.

“ சில்லறையாய் 
 தராததால் 
 கொட்டிய 
 வார்த்தைகளைக் கொண்டு
 பிம்பமொன்றைக் 
 கட்டினாள் 
 அவள் திமிர்க்காரி என்று. 

 பிறிதொரு நாள்.... 

யாசகம் கேட்கும் 
பெரியவரிடம் 
 அன்பொழுகக் கேட்கிறாள் அவள் 

என்னங்கப்பா வேணும் ”

”எளிதில் பார்த்திட முடியா இடத்தில் 
 பூக்கத்தான் பூக்கின்றன பூக்கள்”

 என்று ஒரு கவிதை இருக்கிறது. எதுவாக இருப்பினும் விடாப்பிடியாக அடிவேர் வரைக்கும் விசாரிக்கும் வலை இவரது.

வண்ணத்துப் பூச்சியின் அழகை ,

”அதனழகு 
 அதில் மிதக்கும் 
 வண்ணங்களிலில்லை 
 பட படக்கும் 
 சிறகிலிருப்பதை 
 உணருவதேயில்லை பலரும் ”

என்று வாசிக்கும் பொழுது இந்த வலையிலிருந்து அழகழகாய் சிறகசைத்தபை வண்ண வண்ணமாய் பறக்கின்றன வண்ணத்துப் பூச்சிகள்.

“ உலக(மய)மறியா சோடா ராமு” என்றொரு பதிவு கிடைக்கிறது. தாராளமயம் என்னும் கொடூரப் பிசாசு எப்படி உள்ளூர் கோலி சோடாவை அதன் ஊழியர்களை உறிஞ்சி ஏப்பம் விட்டது என்பதை பேசும் பதிவு. இதில் கசியும் அரசியலும், எள்ளலும், வலியும் இவருக்கு பாமரனிடமிருந்து கைமாறியிருக்கக் கூடும். ஆனால் அழகியலோடு இது பின்னப் பட்டிருக்கும் நுணுக்கம் இவரது சொந்த அடையாளம்.

பரமக்குடி துப்பாக்கி சூட்டைப் பற்றிய ஒரு பதிவும்,  திருவாரூர் அரசு மருத்துவமனை பற்றிய பதிவும் என்னை உலுக்கிப் போட்டவை.

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஒரு இளைஞனின் படம் போட்ட ஒரு போஸ்டரை ஒட்டுவதில் ஏற்பட்ட சிரமங்களை சொல்லும் போது, “ இன்றைக்கும் கொல்லப் பட்ட தலித் படம் போட்டு ஒட்டமுடியாத இந்தச் சமூகத்தில் தலித் தலைவர்கள் எப்படிகட்சியை கட்டமைத்தார்களோ?” இவர் கேட்கும்போது நமக்கான வேலையின் பரப்பளவு எவ்வளவு அதிகம் என்பதை உணர முடிகிறது.

தனது அண்ணனை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தபோது கிடைத்த அனுபவத்தை அவர் சொல்லும் போது பாறைகளும் வலி நிவாரணிகளைத் தேடவே செய்யும். 150 மீட்டர் தூரத்தை ஸ்ட்ரெச்சரில் கொண்டுபோக விமானக் கட்டணத்தைவிடவும் அதிகம் கேட்கும் ஊழியர்களை அம்பலப் படுத்தும் போது படிக்கும் எவனும் சபிப்பான். 

சொல்கிறார்,

“வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நோய் குணமாகும் எனும் நம்பிக்கை தனியார் மருத்துவமனைக்கு செல்வோருக்கு 90 சதம் இருக்குமென்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வோருக்கு 50 சதத்திற்கும் வெகு குறைச்சலாய்த்தான் இருக்கும்அந்த எளிய மனிதர்களிடம் பணம் கேட்ச்டு நச்சரிக்கும் சிலரைப் பார்த்துதான் நம்பிக்கையின் சதவிகிதம் குறைகிறது..”.  

அரசு மருத்துவமனைகளின் அவலங்களை மட்டுமே சொல்லி அவநம்பிக்கையை மட்டுமே விதைக்கவில்லை.  எவ்வளவு வற்புறுத்தியும் எதையும் வாங்க மறுக்கும் மருத்துவர்களையும் ஊழியர்களையும், வசதி உள்ளவர்களிடம் கை ஏந்தி அவர்கள் விளக்குமாறுகளையும் ஒட்டடைக் குச்சிகளையும் வாங்குவதையும் மிக நேர்மையோடு இந்த வலை தருகிறது.

மூன்றுமாதங்களாக புதிய பதிவுகள் எதுவுமில்லை என்பதுதான் குறை.


இனி இவன் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் ஒருநூறு தோப்புக்கரணம் போடுகிறேன். இந்தப் பையனை தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள். 

வலை பார்க்க

Friday, May 3, 2013

என் கல்வி என் உரிமை

“ கல்விக்கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மனநிலையால் முழுமையாக ஆழ்த்தப் பட்டுவிட்டன. முதலாளிக்கு கீழ்ப்படிந்த கை ஆட்களையும், திறமையான தொழிலாளிகளையும் வழங்குவதுதான் அவற்றின் நோக்கம்.

வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் பிரிக்கப் பட்ட கல்வி என்பது பொய்யும் பாசாங்கும் ஆகும்”

என்று லெனின் 1918 இல் சொன்னது இன்றையத் தேதியில் இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அச்சு அசலாக அப்படியே பொருந்துவதாக உள்ளது.

எவ்வளவுதான் பூசி மெழுகினாலும் இன்றைக்கு கல்வி முதலாளித்துவத்தின் கோரப் பிடிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை மறுக்க இயலாது.

முன்பெல்லாம் தள்ளுவண்டிகளில் குச்சி வல்லிக் கிழங்குகளை சீவி வானலியில் இட்டு வறுத்து மிளகாய் உப்புப் பொடி கலந்து சிப்ஸாக்கி பழைய செய்தித்தாளை கூம்பு வடிவத்தில் மடித்து அதற்குள் போட்டுத் தருவார்கள். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும்.

கூலி வேலை பார்ப்பவர் முதல், கோமான் வரை யார் வேண்டுமானாலும் வாங்கலாம், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இப்போது முதலாளித்துவத்தின் அகோரப் பசிக்கு இந்த சிப்சும் பலியாகிவிட்டது.

கண்ணாடிச்சுவர் பெருங்கடைகளுக்குள் வண்ண வண்ணமான ஷாஷே பைகளுக்குள் விதவிதமான சிப்ஸ் வர ஆரம்பித்துவிட்டன. பிரபலமான நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் எல்லா சேனல்களிலும் போட்டி போட்டுக்கொண்டு கோடிக் கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு இந்த சிப்ஸ் நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்துக் கொடுக்கின்றனர்.

தள்ளு வண்டிகளின் வியாபாரம் அறவே படுத்துக் கொண்டது.

இரண்டு வகையான விளைவுகளை இவை தந்துள்ளன.

1) சிறிய முதலீட்டோடு தள்ளுவண்டியில் சிப்ஸ் போட்டு வியாபாரம் செய்தவரின் பிழைப்பில் மண் விழுந்தது. அதேபோல ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் சிப்ஸ் வாங்கிச் சாப்பிட்ட ஏழைகளுக்கு சிப்ஸ் அந்நியப் பட்டுப் போனது.

2) ஏராளமான வேதிப் பொருட்களோடு இவை தயாராவதால் உடலுக்கு ஏராளமான நோய்களைக் கொண்டு வருவதுடன் மக்கும் தன்மையற்ற வண்ண உறைகளால் மண்ணையும் மாசுபடுத்துகின்றன.

இதே நுட்பத்தைதான் கல்வி நிலையங்களுக்கும் முதலாளித்துவம் விரிவு படுத்தியது.

போட்டக் காசை அதனினும் பண்மடங்கில் எடுப்பது என்பது வணிக யுக்தி. இப்போது எல்லா முதலாளிகளும் எதனினும் லாபம் கொழிக்கும் தொழிலாக கல்வியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். கல்வி நோக்கி தனியார் காலடி எடுத்து வைத்ததுமே கல்வி அரசிடமிருந்தும் கல்வியாளர்களிடமிருந்தும் கழன்று போய் முதலாளிகளின் கையில் உட்கார்ந்து கொண்டது. பல கல்வி நிறுவனங்களில் தாளாளரை முதலாளி என்று அழைக்க ஆரம்பித்து ஓரிரு வருடங்களாகிவிட்டன.

வியாபாரத்தின் பிரதானக் கருவி விளம்பரம். கல்விக்கும் இப்போது விளம்பரம் தேவைப் படுகிறது. கல்வி நிறுவனங்களும் எல்லா சேனல்களிலும் தங்கள் கல்வி நிறுவனங்கள் குறித்து விளம்பரம் செய்கின்றன. இங்கும் நடிகர்களே விளம்பரத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றனர். விளம்பரத்திற்காக கோடி கோடியாய் செலவு செய்யப் படுகிறது.

வானுயர்ந்த கட்டிடங்கள், பேருந்து வசதி, வசீகரிக்கும் வண்ணங்களில் சீருடைகள், நுனி நாக்கு ஆங்கிலம் போன்ற நுணுக்கங்களில் மக்களை வசீகரித்து இழுத்து வீழ்த்திவிடுகின்றனர்.

ஏதோ ஆங்கிலமே சகலத்தையும் தீர்மானித்து சொர்கத்தைக் கட்டமைக்கும் என்ற இவர்களது பிம்ப வலையில் எப்படியோ பெரும்பகுதி பெற்றோர்கள் சாய்த்து போனார்கள்.  காய்கறி விற்பவரிலிருந்து உயரதிகாரிகள் வரைக்கும் இந்த வலையில் விழுந்ததோடு ஏதோ ஒரு புள்ளியில் அதற்கான பிரச்சாரகர்களாகவும் மாறிப் போகிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்நம்மைப் பார்த்து சொல்கிறார்கள்,

“ புரியாமப் பேசாதீங்க சார். ஆங்கிலம் தெரியாமல் வெளிநாட்டுக்கெல்லாம் வேலைக்குப் போகமுடியுமா?”

அவர்கள் கேட்பதும் நியாயம்தானே என்று ஆங்காங்கே திரள் திரளாக ஆதரவு சக்திகளும் பெருகிக் கொண்டுதானுள்ளன.

எல்லோரும் வெளி நாட்டிற்கு வேலைக்குப் போகப் போவதில்லை. மூன்றிலிருந்து நான்குசதம் மட்டுமே அந்த வாய்ப்பினைப் பெறுகிறார்கள். அதுவும் பலநாடுகள் வெளிநாட்டிலிருந்து வேலைக்கான ஊழியர் இறக்குமதியை குறைத்துக் கொள்ளவும் , பையப் பைய நிறுத்திக் கொள்ளவும் இருக்கின்றன என்கிறபோது எல்லாக் குழந்தைகளையும் ஆங்கில வழியில் படிக்கவைப்பது தேவையா?

சரி அப்படியே அனைவருமே போவதாக வைத்துக் கொள்வோம். இப்போது தமிழ்நாட்டிற்கு எழுதப் படிக்கவே தெரியாத கூலித் தொழிலாளிகள் பீகாரிலிருந்தும் இன்னும் பல வட மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர்.
அவர்கள் எந்த சிறப்பு பயிற்சியும் இல்லாமலேயே மூன்று மாதங்களுக்குள் ஓரளவும் ஆறு மாதங்களுக்குள் முழுமையாகவும் தமிழைப் பேசக் கற்றுக் கொள்கின்றனர்.

படிப்பறிவே இல்லாத மக்களுக்கே இது சாத்தியப் படுகிறது. எனில்,நன்கு படித்து வெளி நாட்டிற்குப் போகிறவர்களுக்கு இது நிச்சயமாய் சாத்தியமே. தேவைப் படும் எனில் ஆங்கிலத்தை நன்கு கற்றுக் கொடுங்கள் அதற்காக கணிதத்தையும் அறிவியலையும் ஆங்கிலத்தில்தான் கற்றுக் கொடுப்போம் என்பது என்ன நியாயம்.

யாரும் அவ்வளவாய் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது.

பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் அதிகமாக குடியேறியுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதன் விளைவாக இங்கிலாந்தில் உள்ள 1300 பள்ளிகளில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.

“ ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கல்வி அளிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு மூன்றாயிரம் பவுண்டுகள் அதிகம் செலவு பிடிக்கிறது. இத்தனையும் செய்தாலும் விளைவுகள் மிகக் கீழேயே உள்ளது. ஆங்கிலம் தெரியாத குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் கல்வி கொடுப்பது எளிதாயில்லை.

எனவே இங்கிலாந்தில் குடியேறுபவர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் “

என்று இங்கிலாந்து பிரதமர் பிரவுண் கூறுவதாக தீக்கதிரில் சென்ற ஆண்டு ஒரு செய்தி வந்தது.

பிரவுன் சொல்வதன் சாரம் இதுதான்,

ஒருவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழி வழியாகத்தான் கல்வியைத் தரவேண்டும். அல்லது எந்த மொழி வழி கல்வியைப் பெற ஒருவன் விரும்புகிறானோ அந்த மொழியினை அவன் முதலில் கற்க வேண்டும்.

இது சரியென்றே படுகிறது. ஆனால் நம் நாட்டில் காணப்படும் நிலை என்ன?
நமது மெட்ரிக் பள்ளிகளில் பெரும்பகுதி பள்ளிகளில் கற்பவருக்கும் கற்பிப்பவருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதுதானே உண்மை.

எனில், இத்தகைய மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதால் மட்டும் ஒருவனுக்கு ஆங்கிலத்தில் உரையாட வந்துவிடப் போவதும் இல்லைதானே. ஆனாலும் எல்லாம் கடந்து ஒரு கேள்வி இருக்கிறது.

படிப்பவனுக்கும் ஆங்கிலம் தெரியாது, சொல்லித் தருபவருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆனால் தேர்ச்சியும், மதிப்பெண்களும் மட்டும் எகிறிக் கொண்டு பாய்கிறதே. அது எப்படி?

இதற்காக பெரிய அளவில் மூளையை கசக்கத் தேவையில்லை. பிரதமருக்குத் தெரியாமல் 2G யில் இவ்வளவு ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கு எடுத்துக் கொள்ளவேண்டிய சிரமத்தைக் கூட இதற்கு எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. காரணம் அவ்வளவு எளிது.

கண்மூடித்தனமான மனப்பாடமும் , மீண்டும் மீண்டும் அதை எழுதிப் பார்க்க வைப்பதுமே இந்தத் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களுக்கான பிரதான காரணம். அங்கொன்றும் இங்கொன்றுமாக விலக்குகள் இருக்கலாம்.

இந்த முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனம் எது வரை போயுள்ளது என்றால், பல பிரபல பள்ளிகளில் சேர்க்கைக்காக மூன்று கிலோமீட்டர் தொலைவு வரிசை நிற்பதைப் பார்க்கிறோம். பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயுள்ளது.பல இடங்களில் பெற்ரோர்களை உள்ளே விட மறுத்து காவலர்கள் கம்பைச் சுழற்றியஅனுபவமும் உண்டு.

இவ்வளவு கேவலப்பட்டும் இது மாதிரிப் பள்ளிகளில் தம் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் துடிக்க காரணம் என்ன/?

மேலே சொன்னதுதான். என்ன பாடு பட்டேனும் இங்கு சேர்த்துவிட்டால் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களோடு வெளியே வந்து விடுவார்கள். நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும். கிடைத்தால் கேபஸ் இண்டர்வியூக்களில் நல்ல வேலைக்குப் போய் நிறையச் சம்பாதித்து சொகுசாக வாழ்வார்கள்.

எல்லோரையும் 1100 கு குறையாமல் எடுக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்.

11 ஆம் வகுப்பில் அந்த வகுப்பு பாடங்களை நடத்துவதே இல்லை அப்போதிருந்தே 12 ஆம் வகுப்பு பாடங்களை நடத்துகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு ஆண்டு படிக்கும் ஒரு மாணவன் படிக்கும் பாடத்தை இங்கு இரண்டு ஆண்டு காலத்தில் படிக்க வாய்ப்புள்ளது.

அதையும் கூட அனைத்து பாடங்களிலும் கவனம் குவிப்பதில்லை. BLUE PRINT எடுத்து வைத்துக் கொண்டு மதிப்பெண்கள் இல்லாத பாடங்களைத் தவிர்த்து விடுகின்றனர்.

பதினோராம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாமலே ஒருவன் பன்னிரெண்டாம் வகுப்பில் 1100 கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறமுடிகிறது.

பதினோராம் வகுப்பில் உள்ள மிக முக்கியமான பாடங்களைக் கற்காமல் போவதன் மூலம் எவ்வளவுதான் அதிகம் மதிப்பெண்களைப் பெற்ராலும் ஒரு மாணவனேராளம் இழக்கிறான்

கல்லாவை நிரப்பாது என்ற காரணத்தினாலேயே மெட்ரிக் பள்ளிகள் ஒப்புக்கு ஒரு வகுப்பை மட்டும் கலை பிரிவிற்கு ஒதுக்கும் அவலமும் நடக்கிறது. இப்படியே போனால் வரலாறு புவியியல் படிக்காத ஒரு சமூகம் வருவதற்கு வாய்ப்புண்டு.

இதற்கெல்லாம் காரணம் 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை அந்தந்தப் பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதே.

இப்படி புற்றீசலாய் பெருகும் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி?

11 ஆம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வையோ அல்லது மேல் நிலை வகுப்புகளுக்கு பருவத்தேர்வு முறைகளையோ கொண்டு வருவது மிக அவசியம். இதைச் செய்தாலே இந்த செயற்கையான தேர்ச்சியும், அகோர மதிப்பெண்களும் குறையும்.

இரண்டாண்டு பாடங்களை இரண்டாண்டுகள் எல்லோருமே படிக்க வேண்டிய கட்டாயம் வந்தால் இந்தப் பள்ளிகளுக்கு வெகு அருகில் அரசு மற்ரும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சியும் மதிப்பெண்களும் வந்துவிடும். பொதுமக்களிடம் இருக்கும் மோகம் குறைந்து போகும்.

தவறாய் ஊறிக் கிடக்கும் ஆங்கில மோகத்தை எப்பாடு பட்டேனும் போக்க வேண்டும் . அதற்கு அது குறித்து அக்கறையோடு பேசுவோர் முதலில் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்க முன் வர வேண்டும்.

இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாம் ஆங்கில மோகம் என்று கொள்ளவில்லை. பாடங்களை ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்பதையே நாம் வறட்டுத் தனமான ஆங்கில மோகமாகப் பார்க்கிறோம்.

470 கும் மேல் எடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே 11 ஆம் வகுப்பில் இடம் கொடுக்கும் பள்ளிகளை அரசு இழுத்து மூட வேண்டும். வியாபாரம்தான் என்றானபின் வியாபார பாஷையிலேயே ஒன்றைக் கேட்கலாம் என்று படுகிறது.

தனியார் ஒருவர் ஓட்டல் நடத்துகிறார். யார் வேண்டுமானாலும் போகலாம். சாப்பிடலாம். ஒரே நிபந்தனைதான். சாப்பிட்ட உணவிற்கு அவனிடம் காசு இருக்க வேண்டும்.

தனியார் ஒருவர் பேருந்து சேவை நடத்துகிறார். யார் வேண்டுமானாலும் அதில் ஏறலாம். என்ன பயணச்சீட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான்.

தனியார் மருத்துவ மனையில் ஒரு அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் எனில்., அதைக் கட்டக் கூடிய யாருக்கும் அந்த அறுவையை அங்கு செய்துவிட முடியும்.

10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கக்கூடிய,  கேட்கும் கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிற, 350 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிற மாணவனுக்கு இதில் எந்தப் பள்ளியும் இடம் தராது.

அரசு சான்றிதழில் உயர்கல்வியில் சேரத் தகுதி பெற்றுள்ளான் என்று அரசு முத்திரையோடு சொல்லப் பட்டிருக்கும். ஆனாலும் சேர்க்க மாட்டார்கள். எனில் உயர் படிப்புக்கு தகுதி பெற்றவன் என்று அரசு சான்றளித்தது செல்லாதா?

நாம் நமது கோரிக்கையை கட்டணத்தோடு சுறுக்கிக் கொள்வது தவறென்றே படுகிறது. தேர்ச்சி பெற்று முதலில் வரக்கூடிய மாணவர்களை அவன் எடுத்துள்ள மதிப்பெண்களை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

இதை செய்யட்டும். 10 ஆம் வகுப்பில் 300 மதிப்பெண்கள் மட்டும் பெற்ற மாணவனை நாங்கள் 1120 எடுக்க வைத்திருக்கிறோம் என்று சொல்லட்டும். பாராட்டுவோம். இப்படி ஒரு சட்டம் வந்தால் பாதிப் பள்ளிக்ள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

ஆனால் தான் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவனையே தேர்வு வைத்து வேலைக்கு எடுக்கும் அரசு இதை செய்யும் என்று நம்பவில்லை.  எனவே இதற்கு அழுத்தமான ஒரு போராட்டம் தேவை.

புரட்சி வெற்றி பெற்ற கொஞ்ச நாட்களில் லெனின் பேசுகிறார்,

“தங்கள் சொந்த மொழியில் மக்கள் கல்வியைக் கற்கும் உரிமை நிறுவப் பட வேண்டும்.  எந்தக் கூட்டத்திலும் யாரும் அவர் மொழியில் பேசுவதற்கான உரிமையை உத்திரவாதப் படுத்த வேண்டும்”

 ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கிலத்தை பேச , எழுதக் கற்றுக் கொடுப்பதை கை ஏந்தி வரவேற்கவே செய்யலாம்.

எதையும் சரி செய்து விடலாம் முதலாளிகளிடமிருந்து கல்வியை அப்புறப் படுத்திவிட்டால்.


சின்னக் கவிதை

மிச்சமிருக்கிறது
மிளகின் நிழல்
எறும்புக்குப் போக

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...