Monday, July 26, 2010

சண்முகம் MBA

சண்முகம் MBAஆசிரியர் அறையில் ஏதோ வேளையாக இருந்த போது வணங்கியவாறே வந்தான் அந்தப் பையன். நிமிர்ந்து பார்த்தேன். வெளிர் நீலத்தில் ஜீன்ஸ், வெள்ளை சட்டை, டை, ஷூ, வதைக்காத வாசனை திரவியம் என்று அமர்க்கலமாக இருந்த அவனுக்கு இருபத்தி ஐந்திற்குன் ஒன்றிரண்டு குறைச்சலாக இருக்கலாம். நன்கு பரிச்சயமான முகமாகத்தான் இருந்தது.ஆனாலும் சட்டென யாரென்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என் தடுமாற்றத்தை ரசித்தவாறே புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவோ வற்புறுத்தியும் அமர மறுத்தான். வற்புறுத்தியும் அமராமல் நிற்கும் அவனது மரியாதை (அமர மறுத்து நிற்பதில் மரியாதை எதுவும் இல்லை என்பதுதான் எனது நிலை) "என்ன வேணும்?" அல்லது " யாரைப் பார்க்கணும்?" என்று முகத்திலடித்துவிடக் கூடாது என்று என்னை பக்குவப் படுத்தியது.

எனவே "என்னப்பா செய்ற? " என்ற வழக்கமான கேள்வியைப் போட்டேன். தான் MBA முடித்து விட்டு ஏதோ ஒரு தனியர் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் மாதம் 26000 ரூபாய் சம்பளம் பெருவதாகவும் கூறினான். " எல்லத்தையும் எறச்சிடாம கொஞ்சம் சேத்து வை. இல்லாட்டி என்ன மாதிரி சிரமப் பட வேண்டி இருக்கும்" முடிப்பதற்குள் ரெண்டு ரூபா சீட்டு ஒன்னு போட்டுடுட்டு வரேன் சார்" என்று சொல்லிக் கொண்டே வந்தவன்"என்னத் தெரியுதுங்களா சார்" என்றவாறே புன்னகைத்தான்.

நிணைவுக் குகைக்குள் மீண்டும் நுழைந்து எவ்வளவோ சிரமப்பட்டு முயன்றும் பயனில்லை. எனவே " வயசாகுதேப்பா, அதுதான் கொஞ்சம் தடுமாறுது. ரொம்ப நல்லா பரிச்சயமான முகமாத்தான் தெரியுது. ஆனா சட்டுன்னு யாருன்னு புடிபட மாடேங்குதுப்பா" என்று சொன்னால் "உங்களால என்ன மறக்கவே முடியாதுங்க சார்" என்று புன்னகைக்கிறான். நமது பலவீனம் கண்டு புன்னகைக்கிறானா, அல்லது புன்னகைக்காமல் அவனால் இருக்கவே இயலாதா தெரியவில்லை. இவனால் சிரிக்காமல் அழக்கூட முடியாது என்றே தோன்றியது.

அப்போது "வாடா சண்முகம், என்ன திடீர்னு பள்ளிக்கூடதத்துப் பக்கம். எட்வின் சாரப் பாக்கனுமா?" என்றவாறே நுழைந்தார் தட்டச்சு ஆசிரியர் தெய்வீகன்.அவன் என்னருகில் நின்று கொண்டிருந்ததால் என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று அவர் நிணைத்திருக்கக் கூடும்.

"என்ன யாருன்னே சாருக்கு தெரியலீங்க சார்"

"என்னதிது எட்வின்,நம்ம சண்முகத்த தெரியல?"

ஆமாம் எஸ்.டி, ரொம்பப் பரிச்சயமான முகம், அதைவிட ரொம்பப் பரிச்சயமான புன்னகை. ஆனாலும் யாருன்னு புடிபட மாட்டேங்குது. எந்த செட் இவன்?"

"அடப் போங்க நீங்க எட்வின். ஒரு வருஷம் உங்க பாடத்துக்கு ப்ராக்டிகல்ஸ் இருந்துதே ஞாபகம் இருக்கா? அப்ப ஒரு பையன காணாம வண்டி எடுத்து வண்டி எடுத்துட்டு போய் தெருத் தெருவா சுத்தினோமே. அதுவாவது ஞாபகம் இருக்கா?. .."

" அடப் பாவி, சண்முக சுந்தரமாடா நீ...?. " இப்போது முற்றாய் முழுதாய் எல்லாம் நிணைவுக்கு வந்து விட்டன. பழைய நிணைவுகளை அசை போட அசை போட அவனது புன்னகை என்னைத் தொற்றிக் கொண்டது.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்விற்கென்று இருபது மதிப்பெண்கள் உண்டு. வழக்கமாக நாங்களே தேர்வு மாதிரி ஏதாவது வைத்து உள் மதிப்பீடு முறையில் மதிப்பெண்களைப் போட்டு விடுவோம். ஒரே ஒரு ஆண்டு மட்டும் புறத் தேர்வர்களைக் கொண்டு நடத்தப் பட்டன.

அந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து புறத் தேர்வராக ஒரு ஆசிரியை வந்திருந்தார். மொத்தம் உள்ள நூற்றி எட்டு மாணவர்களை இருபத்திஏழு மாணவர்கள் வீதம் நான்கு குழுக்களாகப் பிரித்திருந்தோம். ஒரே ஒரு மாணவனை மட்டும் காணோம். அவன் தொழிற் கல்வியில் தட்டச்சு பிரிவில் படிக்கும் மாணவன். எங்கள் பள்ளி கிராமத்துப் பள்ளி என்பதாலும் பெரும்பான்மை மாணவர்கள் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஆங்கிலத்தைக் கற்பதில் அவர்களுக்கு சிரமம் இருந்தது. அதுமட்டுமல்ல பொதுவாகவே பத்தாம் வகுப்பில் குறைச்சலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைத்தான் தொழிற் பிரிவில் சேர்ப்பது வழக்கம். எனவே அவர்கள் செய்முறைத் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவது கடினம் என்றுகூட சொல்ல இயலாது. தேர்ச்சி பெறவே இயலாது. எனவேதான் முதல் நாளே ஒவ்வொரு பிரிவாக சென்று அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் அவசியம் வந்துவிட வேண்டும் என்றும் வராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அடுத்த நாள் அவசியம் வரச் சொல்லிவிடுமாறும் சொல்லியிருந்தேன்.

இதற்குள் முதல் பேச் மாணவர்கள் அறைக்குள் சென்றிருந்தனர். புறத் தேர்வாளராக வந்திருந்த ஆசிரியை மாணவர்களை அமரச் செய்து தேர்வின் நெறிகள் பற்ரி சொல்லிக் கொண்டிருந்தார். பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரைக்குள் நான்காவது பேச் தொடங்கி விடும்.

" நேத்து அவ்வளவு நேரம் படிச்சு படிச்சு சொன்னேனே. எங்கடா தொலஞ்சான்?"

எல்லோரும் மௌனமாக நின்றார்கள். அதற்குள் விஷயம் கேள்விபட்டு தெய்வீகன் வந்து விட்டர். அவரைக் கண்டதும் தட்டச்சு மாணவர்கள் அவரைச் சுற்றி தனியாக ஒதுங்கினர்.

"உண்மைய சொல்லுங்க. இப்ப எங்கடா இருப்பான்?" கொஞ்சம் அதட்டலாகவே தெறித்தார்.

"ஆதி மாரியம்மன் கொவில்ட்ட சீட்டு விளையாடிட்டு இருப்பான் சார்" என்னிடம் மௌனித்த மாணவர்கள் அவர்கள் ஆசிரியரைப் பார்த்ததும் தயங்கித் தயங்கி மௌனம் கலைத்தனர்.

என்னை நெருங்கினார்." என்ன செய்யலாம் எட்வின்?"

வண்டிய எடுங்க எஸ்.டி முடிப்பதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். ஏறி அமர்ந்ததும் விரட்டினார். " அவுங்க அம்மாவ பாத்தீங்கன்னா பாத்த மாத்திரத்துல கண்ணுல தண்ணி வந்துடும் எட்வின். கோவில்ல தட்டேந்தி கண்னடக்கம் வித்து இவன படிக்க வைக்குது இந்தம்மா. இந்த நாயி என்னடான்னா இப்படி பன்னுது பாருங்க எட்வின்" புலம்பிக் கொண்டே வந்தார்.

அது ஒரு பழைய இற்றுப் போன கீற்றுக் கொட்டகை. ரவுண்டு கட்டி சீட்டாடிக் கொண்டிருந்தனர். அழுக்காய் இருந்தான். ஆனால் நல்ல வேளையாக பள்ளிச் சீருடையில் இருந்தான்.

எங்களைக் கண்டதும் எழுந்தான். "வாடாத் தாயோளி வாடா. ஆயி அங்க கஞ்சிக்கு உசிர விக்குது. இங்க சீட்டாட்டம் கேக்குதாடா ஒனக்கு, பொறம்போக்கு" கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போனார். அவரது குரலும் கைகளும் நடுங்குவதைப் பார்த்தேன். இப்ப விழலாமா இன்னுங் கொஞ்ச நேரம் கழித்து விழலாமா? என்பது மாதிரி இரண்டு கண்களிலும் ததும்பி நின்றது கண்ணீர். படிக்கும் மாணவனுக்கான அவரது அக்கறையும் , கண்ணீரும், கோவமும், பதட்டமும் அவர் மீது இருந்த அபிப்ராயத்தையும் மரியாதையையும் கணிசமாக கூட்டியது.

"வாடா இங்க"

வந்தான். ஒரே புகையிலை நெடி. ஒரே அறை. காலரைப் பிடித்து இழுத்து சட்டைப் பையில் கையை நுழைத்தார். "ஹான்ஸ்" பொட்டலம் இருந்தது. "பொழைக்கறப் பொழப்புக்கு இது ஒன்னுதான் கொறச்ச மசுறு." மீண்டும் இரண்டு மூன்று விழுந்தது அவனுக்கு. கையைக் கட்டிக் கொண்டு புள்ளப் பூச்சி மாதிரி நின்றான்.

எனக்கும் அவருக்குமிடையில் அவனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். வழியெல்லாம் வசவிக் கொண்டே வந்தார். இறங்கியதும் கூட்டம் கூடிவிட்டது. ஆசிரியர்களில் பலர் எங்களை கோவித்துக் கொண்டார்கள். இப்படியெலாம் இறங்கி செய்வதனால்தான் பசங்களுக்கு துளிர் விட்டுப் போகிறது என்பது அவர்கள் வாதம். ஒருத்தன் ஒழிந்தால்தான் பசங்களுக்கு புத்தி வந்து ஒழுங்கா இருப்பங்க என்பது சிலரது கருத்து.

இதில் எதிலும் கவனம் செலுத்தாது அவனை முகம் கழுவ வைத்து , பேனாவை கையில் கொடுத்து ஒரு வழியாய் அவனை அறைக்குள் தள்ளிவிட்டு வந்தோம்.

அந்தப் பையன்தான் இபோது என்னெதிரே நிற்கிறான். ஒரே ஆச்சரியம். என்னையுமறியாமல் எழுந்து நின்று கை குலுக்கினேன்.

அன்ன்னைக்கு விட்டுட்டு போயிருந்தீங்கன்னா இன்னைக்கும் அதே கொட்டகையில ஒக்காந்து சீட்டு விளையாட்டுதான் சார் இருந்திருபேன். அவனோடு சேர்ந்து என் கண்களிலும் ஈரம். தோளில் கை போட்டு "வாப்பா போய் ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம்" , இருவரும் தெய்வீகனைப் பார்க்க அவரும் கிளம்புகிறார்.

ஆக ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் வாழ்க்கையிலும் இருக்கு.

Wednesday, July 7, 2010

பாகவதமேளா – புதுப்பிக்கப்படும் பொறுப்புணர்வு
“All mothers are great but my mother is the greatest” என்று இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியபோது பாலுமகேந்திரா பேசியதாக ஞாபகம்.

“எல்லோரும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி  கொண்டவர்கள்தான், எல்லாத் தாய்மார்களும் ஆனால் எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றவள் எனது தாய்” என்று இதை தமிழ்ப் படுத்திக் கொள்ளலாம்.

“தாய்” என்பதை ‘மொழி’ என்பதன் குறியீடாகவும் கொள்ள முடியும். எனில்,

“எல்லா மொழிகளும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்ற மொழி எனது தாய் மொழி” என்று ஆகும். அவரவரும் அவரவர் தாயை, தாய்மொழியை இப்படிப் பொருத்திப் பார்த்து பூரித்துக் கொண்டாட உரிமை உண்டு.

தனது மொழியின் தொன்மத்தை, பழமையை, வளத்தைக் குறித்து வறட்டுப் பெருமை பேசும் எந்த மொழியைச் சார்ந்த மேதைகளைக் காட்டிலும், தனது மொழியோடு தன்னை அடையாளப்படுத்தி, அதனைப் புழங்கி, காலாகாலத்திற்கும் தன் மொழி உயிர்த்திருப்பதற்கு பங்காற்றும் சனத்திரளின் மொழி அக்கரையே மெச்சத் தக்கதாகும்.

தங்களது மொழிப்பற்றை, மொழி குறித்த அக்கறையை, தங்கள் கலாச்சாரத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணியை எந்த ஆராவாரமும் இன்றி, விளம்பரமின்றி ஓராண்டு, ஈராண்டல்ல முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளாக உழைத்துவரும் ஒரு தெருவின் சனங்களை சமீபத்தில் சந்திக்க முடிந்தது.

“சாலியமங்களம்” என்றதும் அங்கு 365 ஆண்டுகளாக விடாது, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் ‘பாகவத மேளா’ தான் நினைவுக்கு வரும்.

முன்னூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளா? அதுவும் விடாது தொடர்ந்தா? சாத்தியமா?

சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் சாலியமங்களத்தின் அக்ரஹாரத்தை சாந்த தொன்னூறு குடும்பத்தினர்.

பதினேழாம் நூற்றாண்டின் தஞ்சையை விசயநகர அரசர் அச்சுதப்ப நாயக்கர் வெற்றி கொள்கிறார். மன்னர், மந்திரிமார்கள், மற்றும் தம்மோடு வந்திருக்கும் தமது உறவினர்களது சமயச் சடங்குகளை நிறைவேற்றவும், தமக்கு ராச ஆலோசனைகள் வழங்கவும் தனது சொந்த நாட்டிலிருந்து தெலுங்கு பேசும் பிராமணர்களை அழைத்து வருகிறார். அவர்களை, “சாலியமங்களம்”, ‘மெலட்டூர்’ “தேபெருமாநல்லூர்”, ‘ஊத்துக்காடு’ மற்றும் சூலமங்களம் ஆகிய கிராமங்களில் அக்ரஹாரங்களை ஏற்படுத்தி குடியமர்த்துகிறார். அவர்களுக்கு ஏராளமான விளைநிலங்களை தானமாக வழங்குகிறார்.

அந்த வகையில் சாலியமங்களம் அக்ரஹாரத்தில் சற்றேரக்குறைய தொன்னூறு தெலுங்கு பிராமணக் குடும்பங்கள் குடியேறுகிறார்கள். வெற்றியின் விளைவாக தம்மோடு தஞ்சை நாட்டில் குடியேறிய தனது குடிகள் இந்த மண்ணோடும், மக்களோடும் கலந்து, கரைந்து பையப் பையத் தமது மொழியை, கலாச்சாரத்தின் விழுமியங்களை மறந்து போவார்களோ, என்ற அச்சம் மன்னருக்கு வருகிறது.

உடனே அய்ந்து கிராமங்களிலும் உள்ள தெலுங்கு பிராமணர்களை அழைத்து தனது கவலையை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். தமது மொழியை கலாச்சாரத்தின் வேர்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கிறார். “ஏதாவது செய்யுங்கள்” என்று உத்தரவிடுகிறார்.

விளைவு, மேற்சொன்ன அய்ந்து கிராமங்களிலும் பாகவத மேளாக்கள். இதில் சாலியமங்களம் தவிர மற்ற ஊர்களில் நின்றுபோகிறது அல்லது தொடர்ச்சியற்று விட்டுவிட்டு நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் சாலியமங்களத்தில் மட்டும் விடாது 365 ஆண்டுகளாக தொடர்ந்து “பாகவத மேளா” நடைபெற்று வருகிறது.

“வெற்றி விழா” ‘பொன்விழா’ ‘வைரவிழா’ என்பது போன்று 365 ஆண்டுகளாக தொடர்ந்து சாலியமங்களத்தில் நடைபெற்று வரும் பாகவதமேளாவை என்ன பெயரிட்டு அழைக்கலாம்.

1645 ஆண்டு முதல் தொடர்ந்து நடப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பக்த சமாசத்தின் பொருளாளர் எஸ்.சி.வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். அவரும், சென்னை ரயில்வேயில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் திரு.சுப்பிரமணியன் அவர்களும் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாகவத மேளாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம். ஒரு நாள் “சீதா கல்யாணம்” ஒரு நாள் “ருக்மணி கல்யாணம்” ஒரு நாள் ‘ருக் மாங்கதா’ ஒரு நாள் “பிரகலாத சரித்திரம்” என்று கடந்த காலங்களில் அமர்க்கலப்பட்டிருக்கிறது. அந்தத் தெருவின் சனங்கள்தான் நடிப்பதும் பார்ப்பதும். நரசிம்ம அவதாரம் பூண்டு இறைவன் இரணியனை வதம் செய்யும் காட்சிகாண மொத்த ஊரும் திரண்டு விடுமாம்.

ஏறத்தாழ தொண்ணூறு குடும்பங்களில் இருந்தும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். எவர் எங்கு இருப்பினும், என்ன செலவேயாயினும் அனைவரும் அந்த காலத்தில் வந்துவிடுகின்றனர்.

இப்போது நாடகங்களைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள். இளந்தலை முறையினருக்கு தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாததே காரணம் என்பதை கவலையோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

“இங்க நாங்க குடியேறியபோது எல்லா குடும்பத்து சனங்களுக்கும் தெலுங்கு எழுதப் படிக்க பேசத் தெரிந்திருந்தது. இப்போது ஒன்றிரண்டு குடும்பத்து இளைய தலைமுறை தவிர ஏனையோருக்கு இது இயலாததாகி உள்ளது. நாங்கள் எங்கள் மொழியை, கலாச்சாரத்தை என்ன செய்தேனும் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை கலந்த அக்கறை எங்களுக்கு” வேதனையோடு சொல்கிறார் வெங்கடகிருஷ்ணன். பாகவத மேளாவில் கூடும் பெரியவர்கள் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்.

பாகவத மேளாவில் பக்தி உண்டு. ஆனால் அதில் உள்ள பக்தியை மட்டுமே நாம் தவறாகக் கண்டிருக்கிறோம். நாயக்க மன்னரோடு புலம் பெயர்ந்த ஒரு நூறு குடும்பத்தினரின் மொழி மற்றும் கலாச்சார விழுமியங்களைக் காப்பாற்றத் துடிக்கும் கவலை கலந்த அக்கறையை எடுத்துக் கொள்ளத் தவறியிருக்கிறோம்.

படாதபாடு பட்டு, வருடா வருடம் இங்கு கூடுவது பக்தியோடு சேர்ந்து தங்களது மொழி மற்றும் கலாச்சார வேரினை தரிசிக்கவும், அதனைக் காக்க வேண்டிய தங்களது பொறுப்புணர்வினை புதுப்பித்துக் கொண்டு போகவும் சேர்த்துதான்.

அவசர அவசரமாக அழிந்துவரும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்கிறது யுனெஸ்கோ. மொழி குறித்து அக்கறையுள்ள தமிழர்களுக்கு கற்றுக்கொள்ள சாலியமங்களத்து அக்ரஹாரத்தில் நிறைய இருக்கிறது.


நன்றி;   "கல்கி"   

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...