Monday, July 26, 2010

சண்முகம் MBA

சண்முகம் MBA



ஆசிரியர் அறையில் ஏதோ வேளையாக இருந்த போது வணங்கியவாறே வந்தான் அந்தப் பையன். நிமிர்ந்து பார்த்தேன். வெளிர் நீலத்தில் ஜீன்ஸ், வெள்ளை சட்டை, டை, ஷூ, வதைக்காத வாசனை திரவியம் என்று அமர்க்கலமாக இருந்த அவனுக்கு இருபத்தி ஐந்திற்குன் ஒன்றிரண்டு குறைச்சலாக இருக்கலாம். நன்கு பரிச்சயமான முகமாகத்தான் இருந்தது.ஆனாலும் சட்டென யாரென்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என் தடுமாற்றத்தை ரசித்தவாறே புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவோ வற்புறுத்தியும் அமர மறுத்தான். வற்புறுத்தியும் அமராமல் நிற்கும் அவனது மரியாதை (அமர மறுத்து நிற்பதில் மரியாதை எதுவும் இல்லை என்பதுதான் எனது நிலை) "என்ன வேணும்?" அல்லது " யாரைப் பார்க்கணும்?" என்று முகத்திலடித்துவிடக் கூடாது என்று என்னை பக்குவப் படுத்தியது.

எனவே "என்னப்பா செய்ற? " என்ற வழக்கமான கேள்வியைப் போட்டேன். தான் MBA முடித்து விட்டு ஏதோ ஒரு தனியர் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் மாதம் 26000 ரூபாய் சம்பளம் பெருவதாகவும் கூறினான். " எல்லத்தையும் எறச்சிடாம கொஞ்சம் சேத்து வை. இல்லாட்டி என்ன மாதிரி சிரமப் பட வேண்டி இருக்கும்" முடிப்பதற்குள் ரெண்டு ரூபா சீட்டு ஒன்னு போட்டுடுட்டு வரேன் சார்" என்று சொல்லிக் கொண்டே வந்தவன்"என்னத் தெரியுதுங்களா சார்" என்றவாறே புன்னகைத்தான்.

நிணைவுக் குகைக்குள் மீண்டும் நுழைந்து எவ்வளவோ சிரமப்பட்டு முயன்றும் பயனில்லை. எனவே " வயசாகுதேப்பா, அதுதான் கொஞ்சம் தடுமாறுது. ரொம்ப நல்லா பரிச்சயமான முகமாத்தான் தெரியுது. ஆனா சட்டுன்னு யாருன்னு புடிபட மாடேங்குதுப்பா" என்று சொன்னால் "உங்களால என்ன மறக்கவே முடியாதுங்க சார்" என்று புன்னகைக்கிறான். நமது பலவீனம் கண்டு புன்னகைக்கிறானா, அல்லது புன்னகைக்காமல் அவனால் இருக்கவே இயலாதா தெரியவில்லை. இவனால் சிரிக்காமல் அழக்கூட முடியாது என்றே தோன்றியது.

அப்போது "வாடா சண்முகம், என்ன திடீர்னு பள்ளிக்கூடதத்துப் பக்கம். எட்வின் சாரப் பாக்கனுமா?" என்றவாறே நுழைந்தார் தட்டச்சு ஆசிரியர் தெய்வீகன்.அவன் என்னருகில் நின்று கொண்டிருந்ததால் என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று அவர் நிணைத்திருக்கக் கூடும்.

"என்ன யாருன்னே சாருக்கு தெரியலீங்க சார்"

"என்னதிது எட்வின்,நம்ம சண்முகத்த தெரியல?"

ஆமாம் எஸ்.டி, ரொம்பப் பரிச்சயமான முகம், அதைவிட ரொம்பப் பரிச்சயமான புன்னகை. ஆனாலும் யாருன்னு புடிபட மாட்டேங்குது. எந்த செட் இவன்?"

"அடப் போங்க நீங்க எட்வின். ஒரு வருஷம் உங்க பாடத்துக்கு ப்ராக்டிகல்ஸ் இருந்துதே ஞாபகம் இருக்கா? அப்ப ஒரு பையன காணாம வண்டி எடுத்து வண்டி எடுத்துட்டு போய் தெருத் தெருவா சுத்தினோமே. அதுவாவது ஞாபகம் இருக்கா?. .."

" அடப் பாவி, சண்முக சுந்தரமாடா நீ...?. " இப்போது முற்றாய் முழுதாய் எல்லாம் நிணைவுக்கு வந்து விட்டன. பழைய நிணைவுகளை அசை போட அசை போட அவனது புன்னகை என்னைத் தொற்றிக் கொண்டது.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்விற்கென்று இருபது மதிப்பெண்கள் உண்டு. வழக்கமாக நாங்களே தேர்வு மாதிரி ஏதாவது வைத்து உள் மதிப்பீடு முறையில் மதிப்பெண்களைப் போட்டு விடுவோம். ஒரே ஒரு ஆண்டு மட்டும் புறத் தேர்வர்களைக் கொண்டு நடத்தப் பட்டன.

அந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து புறத் தேர்வராக ஒரு ஆசிரியை வந்திருந்தார். மொத்தம் உள்ள நூற்றி எட்டு மாணவர்களை இருபத்திஏழு மாணவர்கள் வீதம் நான்கு குழுக்களாகப் பிரித்திருந்தோம். ஒரே ஒரு மாணவனை மட்டும் காணோம். அவன் தொழிற் கல்வியில் தட்டச்சு பிரிவில் படிக்கும் மாணவன். எங்கள் பள்ளி கிராமத்துப் பள்ளி என்பதாலும் பெரும்பான்மை மாணவர்கள் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஆங்கிலத்தைக் கற்பதில் அவர்களுக்கு சிரமம் இருந்தது. அதுமட்டுமல்ல பொதுவாகவே பத்தாம் வகுப்பில் குறைச்சலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைத்தான் தொழிற் பிரிவில் சேர்ப்பது வழக்கம். எனவே அவர்கள் செய்முறைத் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவது கடினம் என்றுகூட சொல்ல இயலாது. தேர்ச்சி பெறவே இயலாது. எனவேதான் முதல் நாளே ஒவ்வொரு பிரிவாக சென்று அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் அவசியம் வந்துவிட வேண்டும் என்றும் வராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அடுத்த நாள் அவசியம் வரச் சொல்லிவிடுமாறும் சொல்லியிருந்தேன்.

இதற்குள் முதல் பேச் மாணவர்கள் அறைக்குள் சென்றிருந்தனர். புறத் தேர்வாளராக வந்திருந்த ஆசிரியை மாணவர்களை அமரச் செய்து தேர்வின் நெறிகள் பற்ரி சொல்லிக் கொண்டிருந்தார். பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரைக்குள் நான்காவது பேச் தொடங்கி விடும்.

" நேத்து அவ்வளவு நேரம் படிச்சு படிச்சு சொன்னேனே. எங்கடா தொலஞ்சான்?"

எல்லோரும் மௌனமாக நின்றார்கள். அதற்குள் விஷயம் கேள்விபட்டு தெய்வீகன் வந்து விட்டர். அவரைக் கண்டதும் தட்டச்சு மாணவர்கள் அவரைச் சுற்றி தனியாக ஒதுங்கினர்.

"உண்மைய சொல்லுங்க. இப்ப எங்கடா இருப்பான்?" கொஞ்சம் அதட்டலாகவே தெறித்தார்.

"ஆதி மாரியம்மன் கொவில்ட்ட சீட்டு விளையாடிட்டு இருப்பான் சார்" என்னிடம் மௌனித்த மாணவர்கள் அவர்கள் ஆசிரியரைப் பார்த்ததும் தயங்கித் தயங்கி மௌனம் கலைத்தனர்.

என்னை நெருங்கினார்." என்ன செய்யலாம் எட்வின்?"

வண்டிய எடுங்க எஸ்.டி முடிப்பதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். ஏறி அமர்ந்ததும் விரட்டினார். " அவுங்க அம்மாவ பாத்தீங்கன்னா பாத்த மாத்திரத்துல கண்ணுல தண்ணி வந்துடும் எட்வின். கோவில்ல தட்டேந்தி கண்னடக்கம் வித்து இவன படிக்க வைக்குது இந்தம்மா. இந்த நாயி என்னடான்னா இப்படி பன்னுது பாருங்க எட்வின்" புலம்பிக் கொண்டே வந்தார்.

அது ஒரு பழைய இற்றுப் போன கீற்றுக் கொட்டகை. ரவுண்டு கட்டி சீட்டாடிக் கொண்டிருந்தனர். அழுக்காய் இருந்தான். ஆனால் நல்ல வேளையாக பள்ளிச் சீருடையில் இருந்தான்.

எங்களைக் கண்டதும் எழுந்தான். "வாடாத் தாயோளி வாடா. ஆயி அங்க கஞ்சிக்கு உசிர விக்குது. இங்க சீட்டாட்டம் கேக்குதாடா ஒனக்கு, பொறம்போக்கு" கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போனார். அவரது குரலும் கைகளும் நடுங்குவதைப் பார்த்தேன். இப்ப விழலாமா இன்னுங் கொஞ்ச நேரம் கழித்து விழலாமா? என்பது மாதிரி இரண்டு கண்களிலும் ததும்பி நின்றது கண்ணீர். படிக்கும் மாணவனுக்கான அவரது அக்கறையும் , கண்ணீரும், கோவமும், பதட்டமும் அவர் மீது இருந்த அபிப்ராயத்தையும் மரியாதையையும் கணிசமாக கூட்டியது.

"வாடா இங்க"

வந்தான். ஒரே புகையிலை நெடி. ஒரே அறை. காலரைப் பிடித்து இழுத்து சட்டைப் பையில் கையை நுழைத்தார். "ஹான்ஸ்" பொட்டலம் இருந்தது. "பொழைக்கறப் பொழப்புக்கு இது ஒன்னுதான் கொறச்ச மசுறு." மீண்டும் இரண்டு மூன்று விழுந்தது அவனுக்கு. கையைக் கட்டிக் கொண்டு புள்ளப் பூச்சி மாதிரி நின்றான்.

எனக்கும் அவருக்குமிடையில் அவனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். வழியெல்லாம் வசவிக் கொண்டே வந்தார். இறங்கியதும் கூட்டம் கூடிவிட்டது. ஆசிரியர்களில் பலர் எங்களை கோவித்துக் கொண்டார்கள். இப்படியெலாம் இறங்கி செய்வதனால்தான் பசங்களுக்கு துளிர் விட்டுப் போகிறது என்பது அவர்கள் வாதம். ஒருத்தன் ஒழிந்தால்தான் பசங்களுக்கு புத்தி வந்து ஒழுங்கா இருப்பங்க என்பது சிலரது கருத்து.

இதில் எதிலும் கவனம் செலுத்தாது அவனை முகம் கழுவ வைத்து , பேனாவை கையில் கொடுத்து ஒரு வழியாய் அவனை அறைக்குள் தள்ளிவிட்டு வந்தோம்.

அந்தப் பையன்தான் இபோது என்னெதிரே நிற்கிறான். ஒரே ஆச்சரியம். என்னையுமறியாமல் எழுந்து நின்று கை குலுக்கினேன்.

அன்ன்னைக்கு விட்டுட்டு போயிருந்தீங்கன்னா இன்னைக்கும் அதே கொட்டகையில ஒக்காந்து சீட்டு விளையாட்டுதான் சார் இருந்திருபேன். அவனோடு சேர்ந்து என் கண்களிலும் ஈரம். தோளில் கை போட்டு "வாப்பா போய் ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம்" , இருவரும் தெய்வீகனைப் பார்க்க அவரும் கிளம்புகிறார்.

ஆக ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் வாழ்க்கையிலும் இருக்கு.

24 comments:

  1. // படிக்கும் மாணவனுக்கான அவரது அக்கறையும் , கண்ணீரும், கோவமும், பதட்டமும் அவர் மீது இருந்த அபிப்ராயத்தையும் மரியாதையையும் கணிசமாக கூட்டியது.//படிக்கும் போதே கண்கள் கசிந்தன ஐயா... உன்னதமான பணியை உணர்தலுடன் போற்றிச் செய்யும் தங்களைப் போன்றே சக ஆசிரியர்களும் (தெய்வீகன்) அமைவது கொடை! நீங்க எல்லாம் நல்லா இருக்கணும் நெடுங்காலம்!!

    ReplyDelete
  2. தங்களது அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  3. நல்ல ஆசிரியர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.. என்றும் இருப்பார்கள்.. அப்போது நல் மாணாக்கர் இல்லாமலா போவார்கள்.. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.. மலர வைத்த நினைவு மொட்டுகள் நன்றி சொல்கின்றன நல்லாசிரியர் திரு எட்வின் அவர்களுக்கு..

    ReplyDelete
  4. மீண்டும் இதைத்தான் சொல்வேன் உங்கள் பெருந்தன்மைக்கு ஏற்ப என்னை தகுதி படுத்திக் கொள்ள முயல்வேன்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தங்களது பதிவு படித்தேன்.
    தங்களை தெய்வமாக நினைத்து வணங்குகிறேன்.
    நீங்கள் நீடூழி வாழ்க.

    ReplyDelete
  7. @Rathnavel
    அன்பின் அய்யா ,
    வணக்கம். அய்யய்யோ, இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் ...
    கொஞ்சமும் தகுதி இல்லாத, சராசரியை விடவும் நிரம்ப குள்ளமான ஆளுமை கொண்டவன் நான். ஆனாலும் தங்களது வாழ்த்தைப் பெருதற்கரிய பொக்கிஷமாகவே பார்க்கிறேன்.
    மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  8. இதை படிக்கும் போது எனது ஆசிரியர் ஜான் பெந்தகோஸ் நினைவுக்கு வருகிறார். நன்று! மிக அருமையாக உள்ளது.

    ReplyDelete
  9. ஒவ்வொரு ஆசிரியரும் படிந்து உணர்ந்து கொண்டு இப்படி நடந்தால் எந்த மாணவனும் தப்பான வழியில் போக மாட்டான்.

    ReplyDelete
  10. இது போல ஆசிரியர்கள் வேண்டும் நிறைய.. நல்லதோர் மாணவ சமுதாயம் உருவாக..

    இப்பொழுது பலர் அரசாங்க வேலையாக மட்டுமே ஆசிரியப் பணியைப் பார்க்க தொடங்கியிருக்கின்றனர்... பலரது எண்ணமும் ஆறு மணி நேர வேலை, கை நிறைய சம்பளம்.. என்றாகிவிட்ட நிலையில் தங்களின் பதிவு அருமை அண்ணா..

    ReplyDelete
  11. தன்னிடம் படித்த மாணவன் தன்னை விட எவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து இருந்தாலும் அவன் மீது பொறாமை கொள்ளதா ஓரே சமூகம் ஆசிரிய சமூகம்

    ReplyDelete
  12. கற்றல் என்பது சொல்லிகொடுப்பது மட்டுமல்ல . வழிநடத்துவது
    உங்கள் செயல் அது போன்றது

    ReplyDelete
  13. நல்லதொரு பதிவு. பொதுவாகவே மாணவர்களை திட்டும் பெரும்பாலான ஆசிரியர்கள் அந்த மாணவர்கள் குறித்த உண்மையான அன்போடும் அக்கறையோடுமே திட்டுவார். ஆனால், அத்தகைய பெரும்பான்மை இன்றைக்கு சிறுபான்மை ஆகி வருகிறது.

    ReplyDelete
  14. நல்லதொரு பதிவு. பொதுவாகவே மாணவர்களை திட்டும் பெரும்பாலான ஆசிரியர்கள் அந்த மாணவர்கள் குறித்த உண்மையான அன்போடும் அக்கறையோடுமே திட்டுவார். ஆனால், அத்தகைய பெரும்பான்மை இன்றைக்கு சிறுபான்மை ஆகி வருகிறது.

    ReplyDelete
  15. எதிலும் கவனம் செலுத்தாது அவனை முகம் கழுவ வைத்து , பேனாவை கையில் கொடுத்து ஒரு வழியாய் அவனை அறைக்குள் தள்ளிவிட்டு வந்தோம்.


    அந்தப் பையன்தான் இபோது என்னெதிரே நிற்கிறான். ஒரே ஆச்சரியம். என்னையுமறியாமல் எழுந்து நின்று கை குலுக்கினேன்.


    அன்ன்னைக்கு விட்டுட்டு போயிருந்தீங்கன்னா இன்னைக்கும் அதே கொட்டகையில ஒக்காந்து சீட்டு விளையாட்டுதான் சார் இருந்திருபேன். அவனோடு சேர்ந்து என் கண்களிலும் ஈரம்.மிக அருமையாக உள்ளது.நீங்கள் நீடூழி வாழ்க!

    ReplyDelete
  16. எதிலும் கவனம் செலுத்தாது அவனை முகம் கழுவ வைத்து , பேனாவை கையில் கொடுத்து ஒரு வழியாய் அவனை அறைக்குள் தள்ளிவிட்டு வந்தோம்.


    அந்தப் பையன்தான் இபோது என்னெதிரே நிற்கிறான். ஒரே ஆச்சரியம். என்னையுமறியாமல் எழுந்து நின்று கை குலுக்கினேன்.


    அன்ன்னைக்கு விட்டுட்டு போயிருந்தீங்கன்னா இன்னைக்கும் அதே கொட்டகையில ஒக்காந்து சீட்டு விளையாட்டுதான் சார் இருந்திருபேன். அவனோடு சேர்ந்து என் கண்களிலும் ஈரம்.மிக அருமையாக உள்ளது.நீங்கள் நீடூழி வாழ்க!

    ReplyDelete
  17. ஐயா, நல்ல நிகழ்வு

    ReplyDelete
  18. எழுத்த‌றிவித்த‌வ‌ன் இறைவ‌ன் ஆவான் அப்ப‌டினு சொல்லுவாங்க‌ ஆசிரிய‌ர் எப்ப‌டி இருக்க‌ணும்கிற‌துக்கு நீங்க‌ளும் உங்க‌ள் ச‌க‌ ஆசிரிய‌ரும் சிற‌ந்த‌ உதார‌ண‌ம். இப்ப‌டி ந‌ல்ல‌ ஆசிரிய‌ர்க‌ள் அமைய‌ அந்த‌ மாண‌வ‌னும் புண்ணிய‌ம் செய்த‌வ‌ன். சீட்டு விளையாண்டு ர‌வுடியாகி அர‌சிய‌ல்ல‌ இற‌ங்கி அமைச்சராய் ஆக‌ வாய்ப்புள்ள‌வ‌னை இப்ப‌டி செய்துவிட்டீர்க‌ளே சார்‍:)

    ReplyDelete
  19. ஆசிரியனுக்குள் தாய் தகப்பன் இருவரும் ஒருமுகமாக இருக்கிறார்கள் என்பது இந்த வரலாற்றுச் சம்பவம் மூலம் நிரூபணமாகிற்து தோழர்... உண்மையின் உருக்கம் உள்ளத்தைத் தைக்கிறது. எத்தனை நல்லாசிரியர் விருதுகள் கொடுத்தாலும் இந்த நல்லுள்ளத்துக்கு ஈடாகாது என்பது என் உறுதியான உள்ளக் கிடக்கை!

    ReplyDelete
  20. பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவர் மீதும் எனக்கு தவறான கருத்தே இருந்து வந்தது. என்னவெனில், அவர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒன்றையும் கண்டுகொள்ளாமல் கடனைக் கழிக்க மட்டுமே பள்ளிக்குச் செல்வார்கள் என்று நானும் என் நண்பர்களும் பல முறை நினைத்ததுண்டு. இதைப் படித்ததில் என்னை அறியாமலேயே என் மனம் நெகிழ்ந்தது..இதுபோன்ற ஆசிரியர்களால் எனக்குப் பெருமையாகவும் பூரிப்பாகவும் உள்ளது! அவ்வாசிரியர்களுக்கு முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா, உங்களைப் போன்ற வலிமையான ஏணிகள் இல்லையெனில் நாங்கள் ஆங்காங்கே இருந்தவாரே இருந்திருப்போம் என்பதில் ஐயம் இல்லை. எனவே, உங்களுக்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் பட்டிருக்கிறோம். நன்றி.

    ReplyDelete
  21. மாதா பிதா குரு தெய்வம்...
    என்ற வரிசையை
    குரு மாதா பிதா தெய்வம்...
    என்று வரிசைப்படுத்தலாம்

    ReplyDelete
  22. தங்களின் இந்த அறிய பதிவை மிகவும் காலதாமதமாக அறிய நேர்ந்ததற்கு வருத்தமாக உள்ளது. கல்வி கடைச்சரக்கான இவ்வேளையில் ஆசிரியர் மாணவர் உறவில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. உங்களைபோல் ஒருசில மகத்தான ஆசிரியர்களை தவிர்த்து பலரும் இன்றைய நுகர்வு கலச்சாரத்தாலும், புதிய சமுக சுழலிலும் அழ்பட்டு கடமை மறந்து இயந்திரமனிதர்களாகவே மாறிவிட்டனர்.

    ReplyDelete
  23. நல்ல பதிவு, படித்ததும் நெஞ்சம் நெகிழ்ந்தது. முதன் முறையாய் தங்கள் த(க)ளத்திற்கு வருகை புரிந்துள்ளேன். தங்களின் கல்விப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. சென்னையில் அண்ணாமலை என்ற ஆசிரியர் (இந்து இயக்கத்தை சேர்ந்தவர்)இவ்வாறான மாணவர் நலம் மீது அக்கறை கொண்டவராக வாழ்ந்தார் எனக் கேள்விப் பட்டுள்ளேன்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...