ஒரு கட்டத்தில் “காந்தி ஒழிக” என்றுகூட பேசியவர் பெரியார்
ஆனால், காந்தி இறந்தபொழுது அப்படி வருந்தினார். ஒருபடி மேலே சென்று இந்த தேசத்திற்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் கோரினார். பெரியாரை அதுவரை காந்தி எதிர்ப்பாளராகவே பார்த்து வந்தவர்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஏன், ஏனிந்த திடீர் மாற்றம்?
பெரியார் சொன்னார்,
“வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு”
இந்த ஆறு சொற்களும் ஆழமானவை. எதையும் போகிற போக்கில் சொல்லும் வழக்கமற்ற பெரியார் இதையும் கூர்ந்த கவனிப்பிற்குப் பிறகே சொல்கிறார்.
இந்திய சுதந்திரத்தை தந்தை பெரியார் கொண்டாடவில்லை. அதைத் துக்க நாளாக என்று அறிவிக்குமளவிற்கு சென்றார். அவரது இந்த முடிவை அண்ணாவேகூட ஏற்கவில்லை.
காந்தி இதைத் துக்க நாளாகவெல்லாம் அறிவிக்காவிட்டாலும் இந்த விடுதலையில் இருக்கும் போதாமையைத் தன் இறுதிக் காலத்தில் உணர்ந்தவராகவே இருந்தார்
விடுதலை நாள் நெருங்க நெருங்க காந்தி ஒருவித மனச்சோர்வோடு இருந்ததை துயரத்தோடும் இருந்ததை அவரைச் சந்தித்த நண்பர்கள் உணர்கிறார்கள். ஏன் என்று வினவுகிறார்கள்.
தாம் உண்மையில் உணராத ஒரு மகிழ்ச்சியை தம்மால் வெளிப்படுத்த முடியாது, தன்னால் ஒருபோதும் அப்படியெல்லாம் பாசாங்கு செய்ய முடியாது என்று 20.07.1947 அன்று காந்தி கூறுகிறார்.
ஆக, பெரியார் அளவிற்கு தீவிரமாக வரப்போகும் விடுதலைகுறித்து கோவம் இல்லாதவராக இருந்தபோதிலும் இது மக்களுக்கான விடுதலையாக இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தவராகவும் அதன்பொருட்டு துயறுற்றவராகவுமே இருந்தார்
“உண்மையான சுயார்ஜ்யம் என்பது ஒரு சிலர் அதிகாரம் பெறுவது அல்ல. அதிகாரம் பெற்றவர்கள் தவறு செய்யும்போது அதை எதிர்ப்பதற்கான பலத்தை அனைவரும் பெறுவது” என்பதை வலியுறுத்தி வந்த அவர் விடுதலை நெருங்குகிற காலத்தில் அது அப்படியாக இருக்கப் போவதில்லை என்று உணர்ந்து நொந்துபோனவராகவே இருந்திருக்கிறார்.
சுரண்டவும் செய்வார்கள், சுரண்டுபவர்களின் கால்களில் விழுந்து கிடக்கவும் செய்வார்கள் என்பதை உணர்ந்தவராகவும் துயருற்றவராகவே இருந்திருக்கிறார்.
“இந்தியை சென்னை மாகாணம் மட்டும் ஏற்க மறுக்கிறதே. அதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் என்று 1925 வாக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “அது, சிறுபான்மையினரின் கொடுங்கோண்மை” என்று பதில் சொன்னவர் காந்தி.
இன்னும் எழுத்துவடிவம் இல்லாத மொழிகள் அழிந்து இந்தி வளம் பெற வேண்டும் என்றுகூட அந்தக் காலகட்டத்தில் ஆசைப்பட்டவர் அவர்.
ஆனால் அந்த சிந்தனை அவரது இறுதிக் காலத்தில் மாறி இருந்தது
வங்கப் பிரிவினை குறித்து அவரிடம் 1947 ஜூலை மாதத்தில் கேட்கப்பட்டபோது
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கிழக்கு வங்கம் என்றும் இந்துக்கள் அதிகம் வாழும் மேற்கு வங்கம் என்று பிரிக்கப்பட்டாலும் இரண்டு பகுதிகளிலும் வாழும் இஸ்லாமியரும் இந்துவும் வங்க மொழியைத்தான் பேசுவார்கள். அவர்கள் வங்காளிகள் என்ற பார்வை அவருக்கு வந்திருந்தது
இந்தியர்கள் அனைவரும் மற்ற இந்திய மக்களின் மொழி மற்ரும் பண்பாடு குறித்து அறிந்தவர்களாகவும் மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கோருகிறார்
இந்த காந்தி நம்மிடம் வருவதற்கு காலமாகி இருக்கிறது
தந்தை பெரியாரோ காந்தியிடம் உருவாகிக் கொண்டிருந்த இந்த மாற்றக்கங்களை கவைத்தவராகவே இருந்திருக்கிறார்
அதனால்தான் உறுதியான குரலில் சொன்னார்
“வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு