Saturday, February 17, 2024

எழுதும் செயலை எளிதாக்கிய பெரியார்


பெரியார் என்ன செய்து கிழித்தார்?
அண்ணல் என்ன செய்து கிழித்தார்?
என்ற கேள்விகள் பொதுத் தளத்தில் இன்று அதிகமாக வைக்கப்படுகின்றன.
இவற்றை பாஜக போன்ற சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் வைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால் பெரியார் என்ன செய்து கிழித்தார்? என்று அம்பேத்கரியர்களும்
அண்ணல் என்ன செய்து கிழித்தார்? என்று பெரியாரியர்களும் பெருங்குரலெடுத்து குற்றம் சாட்டுவது பேரதிகமாய் கவலை கொள்ளச் செய்கிறது.
இரண்டு கேள்விகளையுமே சாதி அழிப்பில், சமத்துவத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டியதும் எதிர்விணையாற்ற வேண்டியதும் அவசியமாகிறது.
இவற்றுள் முதலில் தந்தை பெரியார் செய்து கிழித்தவற்றுள் ஒரு சிறு விஷயம் குறித்து இப்போது இங்கு உரையாடலாம் என்று படுகிறது.
முடியுமானால் அடுத்தடுத்து அண்ணல் குறித்தும் பெரியார் குறித்தும் தொடர்ந்து எடுத்து செல்லவும் ஆசை இருக்கிறது.
பெரியார்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளுள் அவர் தமிழரல்ல என்பதும் ஆகவே அவர் தமிழுக்கு எதிராக நடந்து கொண்டவர் என்பதும் மாதிரியானவையும் உண்டு.
”தமிழைக் காட்டுமிராண்டி மொழி” என்று சொன்ன தமிழ் எதிரி என்றும் அவரது எதிரிகள் சொல்லித் திரிகிறார்கள்.
ஆனால் பெரியாரின் மொழி குறித்த பார்வை நம்மை வியக்க வைக்கிறது
”பெரியாரின் பார்வை பிழையானது , அவரிடம் அறிவியல் பார்வை இல்லை” என்றெல்லாம் பெரியாரது ‘கம்பராமாயண எரிப்பு குறித்து பேசும்போது கடுமையாக சாடுபவர் தோழர் மணியரசன்.
அவரே “சங்கராச்சாரி தமிழை ‘நீஷ பாஷை’ என்பதற்கும், பெரியார் தமிழைக் ‘காட்டுமிராண்டி மொழி’ என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
அது எதிரியின் சாபம்; இது தாயின் கோபம்”
என்று சரியாக முன்வைப்பதை ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” என்ற நூலின் முதல் தொகுதிக்கான முன்னுரையில் அதன் தொகுப்பாசிரியர் தோழர் பசு.கவுதமன் அவர்கள் எடுத்து வைக்கிறார்.
ஒரு மொழி வளர்வதற்கும் செல்வாக்கோடு திகழ்வதற்கும் உரிய காரணங்களை எந்தவிதமான வாசனைத் திரவியங்களையும் தெளிக்காமல் பாமரத்தனமான, எளிய மொழியில் கீழ்க்கண்டவாறு குடியரசு பதிப்பகம் 1948 இல் வெளியிட்ட தனது ’மொழி-எழுத்து’ என்ற நூலில் பெரியார் முன்வைக்கிறார்
1) ஒரு மொழி வளர்ந்து சிறக்க அது சுலபமாக கற்றுக் கொள்கிறமாதிரி இருக்க வேண்டும்
2) எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக்கூடிய வகையில் இருக்க வேண்டும்
3) எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்
4) அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் இருக்க வேண்டும்
நல்ல இலக்கிய வளம் போன்ற பல்வேறு காரணங்களை மொழியின் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் பண்டிதர்களும் மொழி அறிஞர்களும் எடுத்து வைப்பார்கள்.
அவை தவிர்க்கவே முடியாத முக்கிய காரணங்களே ஆகும்.
ஆனால் பெரியார் இவற்றில் இருந்து விலகி மொழி வளர்வதற்கும் செழிப்பதற்குமான அடிப்படைக் காரணங்களை பாமரனும் புரிந்துகொள்கிற வகையில் அவனது மொழியிலேயே சொல்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் எப்போதும்போலவே தான் கூறுவது இறுதியானது அல்ல என்றும் கூறுகிறார். இந்த நூலின் தொடக்கத்திலேயே,
“எனக்குத் தோன்றிய, என் அநுபவத்திற்கு எட்டிய விசயங்களைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன்.
அவற்றில் பெரும்பாலும் உங்களுக்குக் குற்றமாகப் படலாம்.
ஆகவே நான் கூறுவதை நீங்களும், உங்கள் அறிவையும், அநுபவத்தையும், மற்றும் இதுவிசயத்தில், அநுபவமும் ஆராய்ச்சியும் உள்ள பெரியோர்கள் கருத்தையும் கொண்டு சிந்தித்துப் பார்த்து ஏற்கக் கூடியவற்றை ஏற்றும் ஏற்கக் கூடாதவற்றை தள்ளியும் தெளிவுபெற வேண்டுகிறேன்”
என்கிறார்.
அவரவரும் அவரவர் கருத்தோடு இதுவிசயத்தில் ஞானமும் அக்கறையும் கொண்டுள்ள சான்றோர்களின் கருத்தோடும் தம்முடைய கருத்தையும் கலந்து ஆராய்ந்து தெளிவுபெறுமாறு கோரிக்கை வைக்கிறார்.
ஆனாலும் அவரது மேற்சொன்ன கருத்துக்களை யாராலும் போகிற போக்கில் புறந்தள்ளிவிட்டுப் போய்விட முடியாது.
கற்றுக் கொள்கிறமாதிரி இருந்தால்தான் ஒரு மொழி வளரும், சிறக்கும் என்கிறார்.
எவ்வளவுதான் இலக்கிய, இலக்கண வளத்தோடு ஒரு மொழி இருந்தாலும் அந்த மொழியின் புழக்கமே அதனை கொண்டு செல்லும்.
திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். இதைச் சொல்லவும் நிறுவவும் ஒருவனுக்கு அந்த மொழியைத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அவன் அந்த மொழியைக் கற்றறிய வேண்டும்.
ஒரு மொழியைக் கற்றறிய வேண்டுமானால் அவன் கற்கிற மாதிரி அந்த மொழி எளிமையாக இருக்க வேண்டும்.
மொழியின் எளிமை குறித்து விளக்கக்கூட அவர் பெரிது பெரிதாய் அலட்டிக் கொள்ளவே இல்லை.
எளிதில் கற்றுக் கொள்ளக்கூடிய வகையில் எழுத்துக்களைக் கொண்ட மொழியே எளிய மொழி என்கிறார்.
எனில் கற்றுக்கொள்ள இயலாத வகையில் கடினமான எழுத்துக்களைக் கொண்டுள்ள மொழி சிறுகச் சிறுக அழிந்துபோகும் என்பதையும் அவர் இதன்வழி சுட்டுணர்த்துகிறார்.
எழுத்துமொழிகள் வழக்கழிந்து போனதற்கான காரணங்களுள் மிக முக்கியமான காரணம் அதைப் புழங்குவதற்கு ஆட்களற்றுப் போனதே ஆகும்.
புழங்குவதற்கு ஆட்களற்றுப் போனதற்கு அவை கற்பதற்கு கடினமாக இருந்ததும் காரணமாக இருக்கக் கூடும்.
எளிய மொழிக்கான அடுத்த காரணமாக பெரியார் முன்வைப்பது
‘குறைந்த எண்ணிக்கையிலான எழுத்துக்கள்’. இலக்கிய இலக்கணங்கள் நிறைந்தமொழி சிறந்த மொழி என்பது சான்றோர்கள் முன்வைக்கும் நியாயமான தர்க்கம்.
எந்த மொழியில் எழுத்துக்கள் எழுதுகிறமாதிரி எளிமையாகவும் குறைந்த எண்ணிக்கையிலும் இருக்கிறதோ அந்த மொழியில் இலக்கியமும் இலக்கணமும் வளார்ந்து செழிக்கும் என்பது எதார்த்தம்.
இதோடு நிறுத்தவில்லை,
ஒரு மொழிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் அவசியம் என்கிறார்.
மொழி குறித்த அக்கறை உள்ளவர்கள் அந்த மொழிமீதான அரசாங்கத்தின் ஆதரவை ஈர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதும் இதன் உள்ளடக்கமே ஆகும்.
இதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதால்தான் இன்றைய மத்திய பாஜக அரசு தனது ஆதரவைக் கொண்டு மட்டுமே சமஸ்கிருதத்தையும் இந்தியையும் இந்தியாவில் நிலைநாட்டிவிட எத்தனிக்கிறது.
அனைத்து மொழிக்காரர்களும் இதனைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றாமல் இன்னுமொருமுறை பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளும் மிகக்கடுமையான பின்னடைவுகளைச் சந்திக்க நேரும்.
இதைத்தான் பெரியார் நாற்பத்தி எட்டிலேயே தெளிவு படுத்தியிருக்கிறார்.
மொழியின் வளர்ச்சிக்கான காரணங்களாக அவர் எவற்றையெல்லாம் கருதியிருக்கிறாரோ அவற்றை எல்லாம் அவர் தமிழுக்காக தன்னால் இயன்ற அளவு செய்திருக்கிறார்.
இதைத்தான் அவர் தெலுங்கர், தமிழுக்கு எதிரானவர் என்றெல்லாம் அவர்மீது குற்றம் சுமத்துபவர்களின் மேலான பரிசீலனைக்கு கொண்டுசெல்ல ஆசைப்படுகிறோம்.
அவர் தமிழைக் ’காட்டுமிராண்டி மொழி’ என்றார். எனவே அவர் தமிழ் மொழியின் விரோதி என்றுகூட அவர்மீது வன்மமாக குறை கூறுகிறார்கள்.
சமூக வலைதளங்கள் வந்தபிறகு இது இன்னுமாய் விரிந்திருக்கிறது.
பெரியாரை வாசிக்காமலே பெரியார் குறித்தான அவதூறுகளை மட்டுமே வாசித்துவிட்டு பல பிள்ளைகள் அவர்மீதான சாடல்களை வைப்பதுதான் வருத்தமளிக்கிறது.
அதிலும் பலர் பெரியார் குறித்தான அவதூறுகளைக்கூட முழுதாக உள்வாங்காமல் வினையாற்றுகின்றனர்.
அவர்கள் அப்படித்தான் என்று கடந்துவிடவும் முடியவில்லை.
அவர்கள் நம் பிள்ளைகள். அவர்கள் தெளிவு பெற்றால்தான் நாளைய சமூகம் நல்லபடியாக இருக்கும். ஆகவே அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
பெரும்பான்மை அறிஞர்கள் தமிழில் இருந்து சிதறியவையே திராவிட மொழிகள் என்கிறார்கள்.
தமிழில் இருந்து சிதறியவையே திராவிட மொழிகள் என்பதால் தமிழை ’திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்” என்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் இருப்பதுபோலவே இதற்கும் எதிர்வினைகளும் உண்டு.
தனித்தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தேசியத் தோழர்களும் இந்த அளவில் தமிழை திராவிட மொழிகளின் தாய் என்கிற அளவில் நின்றுகொள்ள பெரியாரோ இதைக் கடந்து மேலே நகர்கிறார்.
வேறுவேறு பகுதிகளில் வேறுவேறு மாதிரி பேசப்படும் தமிழே திராவிட மொழிகள் என்கிறார் அவர்.
இன்றைய தமிழ்நாட்டிலேயே தமிழ் வேவேறுவிதமாகப் புரிந்து கொள்ளப்படுவதை அவர் சுட்டுகிறார்.
உதாரணமாக ‘நான் தோட்டத்திற்குப் போகிறேன்’ என்றால் வயலுக்குப் போவதாக ஒரு இடத்திலும் கழிவறைக்குப் போவதாக மறு இடத்திலும் புரிந்துகொள்ளப்படுவதாக கூறுகிறார்.
‘தோட்டம்’ வயலாகக் கொள்ளப்படும் இடத்தில் ‘கொள்ளை’ கழிவறையாகவும் ‘கொள்ளை’ தோட்டமாக்க் கொள்ளப்படும் இடத்தில் ‘தோட்டம்’ கழிவறையாகவும் கொள்ளப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
ஒரே தமிழ்ச் சொல் இறு வேறு இடங்களில் இருவேறு பொருள்களில் பயன்படுத்தப் படுவதைப்போல்தான் தமிழில் வீடு என்பதுதெலுங்கில் ‘இல்’ என்றும் கன்னடத்தில் ‘மனை’ என்றும் மலையாளத்தில் ‘பொறை’ என்றும் வழங்கப்படுவதாகக் கூறுகிறார்.
இதேபோல்தான் தமிழில் ‘நீர்’ எனப்படுவது தெலுங்கில் ‘நீரு’ என்றும் தெலுங்கில் ‘நீள்ளு’ என்றும் மலையாளத்தில் ‘வெள்ளம்’ என்றும் வழங்கப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.
’இல்’, ’மனை’, ‘பொறை’ வீட்டிற்கான மற்ற தமிழ்ச் சொற்கள் என்றும் ‘நீரு’ , ‘நீள்ளு’, ‘வெள்ளம்’ ஆகியவர் நீருக்கான மற்றத் தமிழ்ச் சொற்கள் என்றும் கூறுகிறார். இவற்றை அகராதிகளைக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள ஏதுவாகும் என்றும் கூறுகிறார்.
ஆனால் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் இதை மறுப்பதற்கு காரணமே அந்த மொழிகளில் அங்கங்கு குடியேறிய ஆரியர்கள் கடவுளைத் துணைக்கழைத்து தமது மொழியை அந்த மொழிகளோடு ஏகத்திற்கும் கலந்து விட்டதுதான் என்றும் கூறுகிறார்.
இந்த ஆரிய மொழிக் கலப்பே அந்த மொழிகளை தமிழில் இருந்து வெறுபட்ட மொழிகள் போன்று தோன்றச் செய்வதாகவும் கூறுகிறார்.
அத்தோடுகூட அவர் திருப்தி படவில்லை.
அந்தந்த மொழிகளின் பண்டிதர்களைக் கொண்டு அந்தந்த மொழிகளில் இருக்கும் வடமொழி சொற்கள் அனைத்தையும் நீக்கிவிடச் சொல்ல வேண்டும்.
அவ்வாறு நீக்கிய பிறகு அந்த மூன்று மொழிகளும் தமிழாகவே இருப்பதை நிறுவ முடியும் என்கிறார்.
இவை சரியா தவறா என்றெல்லாம் அறுதியிட்டுக் கூற எனக்கு அறிவு இல்லை என்றே படுகிறது.
ஆனால் இதுகுறித்து சான்றோர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவிற்கு வர வேண்டும் என்றே தோன்றுகிறது.
பெரியாரும் இதையேதான் விரும்புகிறார்.
நாம் சொல்ல விரும்புவது வேறு.
திராவிட மொழிகளின் தாய் தமிழ். தமிழில் இருந்துதான் திராவிட மொழிகள் சிதறித் தோன்றின என்கிற அளவில்தான் தமிழறிஞர்களில் ஆகப் பெரும்பாலோர் நிற்கும்போது
‘திராவிட மொழிகள்’ அனைத்தும் தமிழே என்று முரட்டடியாக பெரியார் கூறுகிறார். இந்த பெரியார் எப்படி தமிழ் விரோதியாக இருக்க முடியும்?
ஒரு மொழி வளர வேண்டும் என்றால் அதன் எழுத்துக்கள் எளிதில் கற்றுக் கொள்ளுகிற மாதிரியும் எழுதுவதற்கு எளிதானதாகவும் இருக்க வேண்டும். எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்க வேண்டும் என்று கூறிய பெரியார் அப்படியான மொழியாக தமிழை மாற்றுவதற்கு தன்னாலானதை செய்தும் தந்திருக்கிறார்.
எழுதுவதற்கு மிக எளிமையான மொழியாக இன்றைக்கு தமிழ் இருக்கிறது.
“கணினிக்கு மிகவும் ஏற்ற மொழி தமிழ்” என்று ஒருமுறை சுஜாதா கூறினார்.
நாற்பது வயதிற்கு குறைவான தோழர்களும் இளைய பிள்ளைகளும் ஏதோ தமிழ் காலங்காலமாகவே எழுதுவதற்கு இவ்வளவு எளிதாக இருந்த மொழி என்றே கருதக்கூடும்.
( படம் பார்க்க)
மேற்காணும் எழுத்துக்களை நாற்பதிற்கும் கீழ் உள்ள தோழர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நாங்கள் பள்ளியில் படிக்கும்பொழுது ‘னா’ “ணா’ ‘னை’ ‘ணை’ ‘லை’ ‘ளை’ ‘றா’ போன்ற எழுத்துக்களுக்கு மேலே பட்த்தில் உள்ள எழுத்துக்களைத்தான் பயன்படுத்தினோம். அது எவ்வளவு கடினம் என்பதும் இப்போதைய எழுத்துமுறை எவ்வளவு சுலபம் என்பதையும் அதை எழுதிப் பார்த்தவர்கள் அறிவார்கள். தட்டச்சு செய்வதற்கு படத்தில் உள்ள ஏழு எழுத்துக்களும் அவ்வளவு சிரமம்.
என்னைப் போன்றவர்கள்கூட இந்த அளவிற்கு எழுத முடிகிறது என்றால் அதற்கான காரணங்களுள் எளிதான இன்றைய எழுத்து முறையும் ஒன்று.
இதைச் செய்தவர் பெரியார்.
13.01.1935 அன்றுமுதல் குடியரசு வெளி வருகிறது. அதற்கு முன்னர் அது ”பகுத்தறிவு” என்று வந்த்து என்று தோன்றுகிறது.
“பகுத்தறிவு” கடைசி இதழுக்கு முந்தைய இதழில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தலையங்கம் எழுதுகிறார் பெரியார்.
அதுதான் பகுத்தறிவின் கடைசி இதழ் என்றும் அடுத்த இதழ் முதல் அது “குடியரசு” என்று பெயர் மாற்றம் பெறும் என்றும் அந்த இதழில் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் அரசு அனுமதி கிடைக்காத காரணத்தால் பகுத்தறிவின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது.
13.01.1935 அன்று வந்த “குடியரசு” இதழ்தான் முதன் முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தோடு வெளிவந்த முதல் இதழ்.
நிறைய எதிர்ப்புகள்.
இறுதியாக மரியாதைக்குரிய எம்.ஜி. ஆர் அவர்கள் முதல்வராக வந்த பிறகுதான் இந்த எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வருகிறது.
ஏற்கனவே பழைய எழுத்து முறையில் எழுதிப் படித்துப் பழகியிருந்த எங்களுக்கு இதில் ஆரம்பத்தில் சிரமம் இருந்தது.
ஆனால் பழகப் பழக பாய்வதற்கு ஏற்ற எழுத்து வடிவம் இது என்பதை எங்களால் உணர முடிந்தது.
ஆக,
1) தமிழில் எழுத்து வடிவத்தில் சீர்த்திருத்தம் செய்ததன் மூலம் எழுத்தை எளிமைபடுத்தியவர் தந்தை பெரியார்
2) அப்படிச் செய்ததன் மூலம் எழுதும் செயலை எளிதாக்கியவர் பெரியார்
3) தமிழ்ப் பண்டிதர்களே தமிழை திராவிட மொழிகளின் தாய் என்பதோடு நின்றுகொண்ட நேரத்தில் திராவிட மொழிகள் அனைத்தும் தமிழே என்று கொஞ்சம் முரட்டுத் தனத்தோடு கூறியவர் பெரியார்
4) உலகப் பொதுமொழி இந்தியப் பொது மொழி என்பதெல்லாம் தமிழ் உள்ளிட்ட மொழிகளை அழிப்பதற்கான முயற்சி (இதுகுறித்து அடுத்த இதழில் எழுதுவேன்) என்று சரியாகக் கணித்தவர்
அந்தப் பெரியாரை போகிற போக்கில் அவரையே வாசிக்காமல், அவர்மீதான அவதூறுகளையும் முழுமையாக வாசிக்காமல் சாட வேண்டும் என்றும் மிகுந்த அன்போடும் தயவோடும் வேண்டுகிறேன். மற்றபடி அவரை ஏற்பதும் தள்ளுவதும் விமர்சிப்பதும் அவரே விரும்புவதுபோல நாமும் விரும்புவதுதான்.
No photo description available.
All reactions

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...