Saturday, December 27, 2014

கவிதை 24

வேலையில்லை
மொடாக்குடியன்
கஞ்சா உறிஞ்சி
பொறுக்கி
எல்லாம் சரி
யாரிடம் இல்லை
சரியாயிடும்
பையன் நல்லவனா சொல்லுங்க

Friday, December 26, 2014

அழைப்பு 4
44


வரவேற்கவா?
காட்டிக் கொடுக்கவா?
குரைக்கும் நாய்.

கவிதை 23


ஈர யூனிபார்ம் 
சொட்டச் சொட்ட
புத்தகப்பை 
சொட்டச் சொட்ட
நனைந்த விரல்கள்
வெளிறி 
விறைத்து நிற்க
நடுக்கத்தோடு
தேர்வறை நுழையும் குழந்தைக்கு
உடனடித் தேவை
வினாத்தாள் அல்ல
ஒரு கோப்பை தேநீர்
குடிக்கிற சூடில்

Sunday, December 14, 2014

குட்டிப் பதிவு 16

” அம்மா, அப்பா சரியில்ல. அப்பா நம்பருக்கு போட்டா வேற அம்மா எடுத்து திட்டுது. கொஞ்சம் மிரட்டி வையுங்க” என்று விக்டோரியாவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறாள் கிருத்திகா மாசிலாமணி
விஷயம் இதுதான்,
நேற்று என்னை அழைத்திருக்கிறாள். எடுக்கப் பட்டதும் வழக்கம் போல கொஞ்சம் சாய்ந்த குரலில் “அப்ப்ப்பா” என இழுத்திருக்கிறாள்.
“உங்கப்பனுக்கு எதுக்கு என் நம்பருக்கு போட்டற” என்று எதிர் முனையிலிருந்து எரிந்து விழவே, ” இது எங்க அப்பா நம்பர்தானே” என்றிருக்கிறாள்.
“காலைல இருந்து இதே பொழப்பா போச்சு “ என்றிருக்கிறார் அந்தப் பெண்.
என் நம்பருக்கு போட்டால் அந்த அம்மாவிற்கு போயிருக்கிறது. அது எப்படி என்றுதான் தெரியவில்லை.
விக்டோரியாவிடம் போட்டுக் கொடுத்துட்டு “ வாங்குனியா அம்மாட்ட நல்லா” என்று சிரிக்கிறாள்.
இதே நிலைதான் கவின் மலர் , ஸ்டாலின் மற்றும் பல நண்பர்களுக்கும்.
எந்த அழைப்பு எனக்கு வருகிறது எந்த அழைப்பு யாருக்குப் போகிறது என்று தெரியவில்லை.பல நேரங்களில் அழைப்பு மணி ஒலிப்பதில்லை.
புது செல், வேறு சிம் வாங்குகிற வரைக்கும் நண்பர்கள் சிரமத்தைப் பொறுத்தருளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். காசு வந்ததும் புது செல் வாங்கி விடுகிறேன்.
ஆனாலும் இதுவும் ஒரு விதத்தில் நன்றாய்தான் இருக்கிறது.

Tuesday, December 9, 2014

குட்டிப் பதிவு 15

நிறுத்தமில்லாத சில இடங்களில் விசிலடித்து பேருந்தை நிறுத்த வைத்த நடத்துனர் தனது இருக்கையில் வந்தமர்ந்ததும் ஓட்டுனர்,
"ஏண்டா சிவக்குமாரு, நீ பாட்டுக்கு கண்ட இடத்துலையும் விசிலிருக்குன்னு ஊதிடுற. பி.எம் மைலேஜ் குறையுதுன்னு கத்தறார்"
"கண்டக்டர் கண்ட இடத்துலயும் ஊதறான்னு சொல்லிக்க"
"சொன்னேன்டா"
"அதுக்கு என்ன சொன்னார்?"
"அவன் அப்படித்தான் ஊதுவான். நீதான் கண்டுக்காம நகரனும். 6 கிலோ மீட்டருக்கு குறையக்கூடாதுங்கறார்
"அப்படியா சொன்னாரு அந்த ஆளு. ஏங்கிட்ட என்னடான்னா நீதான் எப்படியாவது அங்கங்க நிறுத்தவச்சு டிக்கட்ட ஏத்தனும். கிலோமீட்டருக்கு 36 ரூபாய்க்கு குறையக்கூடாதுங்கறார்"
அதிகாரிகள் அதிகாரிகள்தான்.

Monday, December 8, 2014

கவிதை 22

நீண்ட தவத்தை இடைமறித்த
இறைவனிடம்
வரமாய்
சாத்தானின்
அலைபேசி எண் கேட்டான

Saturday, December 6, 2014

குட்டிப் பதிவு 14

இந்த மலைய ஒடச்சா இந்த உலகத்துக்கே ரோடு போடலாம்ல என்று பேருந்து கடந்து கொண்டிருந்த பெருங்குன்றொன்றினைக் காட்டி முன்னிருக்கை பொடிசு சொன்னான்.

இயற்கையை அழிப்பது தப்பென்றும் ஆபத்தென்றும் பதறியவாறு சொன்னான் பக்கத்து பெரும்பொடிசு.

மலைய ஒடச்சாதானே ரோடு போடலாம், வீடு கட்டலாம். மலைய வச்சு என்ன பன்றது என்ற சின்ன பொடிசுக்கு பதில் சொல்ல முடியாது தவித்தான் பெரிசு.

அழிப்பதற்கான காரணங்கள் எல்லோரிமும் இருக்கிறது.

இயற்கையை காக்க நினைப்பவர்கள் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

கற்றுத் தரவும் வேண்டும்.

வேலை இருக்கிறது ஆமாம்.

Wednesday, December 3, 2014

அனல் உலைகளின் அடிநிழலில் எரியும் அரிக்கேன் விளக்குகள்


சிலியில் உள்ள செம்புச்சுரங்களுல் மரிய எலேனாவும் ஒன்று. அங்குள்ள சுரங்கத் தொழிலாளிகளை சந்திப்பதற்காக பாப்லோ நெரூடா ஒருமுறை அங்கு செல்கிறார். காலப் போக்கில் பலமுறை அங்கு அவர் சென்றிருந்தாலும் அதுதான் அந்த ஊருக்கான அவரது முதல் பயணம்.

தொழிலாளிகளின் அன்புப் பெருவெள்ளத்தில் திக்கு முக்காடித்தான் போனார் அவர். அவரை நன்கு அறிந்து வைத்திருந்தனர் அவர்கள். ஒரு சந்திலிருந்து வெளிப்பட்ட ஒரு தொழிலாளி எண்ணெயும், அமிலமும், சேறும் கலந்திருந்த தனது கையை நீட்டியவாறே “உங்களை எனக்கு ஏற்கனவே தெரியும் சகோதரா. உங்களை வாசித்திருக்கிறேன்” என்கிறார். எந்தவித அசூசையும் இன்றி வாஞ்சையோடு அந்த மனிதனோடு கைகுலுக்கியவாறே மறு கையால் அவனை அணைத்துக் கொள்கிறார். அந்த அணைப்பின் கதகதப்பில் இருவரும் மட்டுமல்ல கூட இருந்த அனைவருமே நெகிழ்ந்து போகிறார்கள்.

.“நான் ஏராளமாக இலக்கியப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். வண்ணத்துப் பூச்சியைப் போல் அற்ப ஆயுளைக் கொண்டவை அவை. ஆனால் நான் சம்பாத்யம் செதிருக்கிற பரிசு மகத்தானது.

எனக்குரிய பரிசு என்னுடைய வாழ்க்கையின் சில அரிய நிமிடங்கள்தான். அதாவது லோட்பாவின் பாதாளத்திலிருந்து, நைட்ரேட் சுரங்கத்திலிருந்து அல்லது ஏதோ ஒரு செம்புச் சுரங்கத்திலிருந்து முழங்காலில் ஊர்ந்தவாறே மேலே வந்து விகாரமான முகமும், பம்பாசின் வாடையுமாக ஒவ்வொருவராக தங்களது உலோகத் தண்டு போன்ற கரங்களை நீட்டி உங்களை எங்களுக்கு முன்னரே தெரியும் சகோதரா என்று கூறும் அரிய நிமிடங்கள்”

என்று பிறகொரு சமயத்தில் இதுகுறித்து நெரூடா நெக்குருகி எழுதியிருக்கிறார்.

சுரங்கத் தொழிலாளிகளுடனான நெரூடாவின் உறவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. அவர்களை தனது மக்களாக நெரூடாவும், அவரைத் தங்களது கவியாக அவர்களும் அங்கீகரித்து கொண்டாடினார்கள்.
பேசிக்கொண்டே நகர்ந்த தொழிலாளிகள் ஒரு வீட்டினுள்ளே நெரூடாவை அழைத்துப் போனார்கள். மக்கள் அதில் குடியிருந்தார்கள் என்கிற ஒரே காரணத்தைத் தாண்டி அதை வீடென சொல்வதற்கு எதுவுமில்லை. அழுக்கும் இருளும் அப்பிக் கிடந்த அந்த அறையினுள் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதே உலக அதிசயங்களில் முதலாவது அதிசயமாகும்.

அந்த அறையில் அமிலமும், எண்ணெயும், தண்ணீருமாக ஒரு சேற்றுக் கலவையாக இருந்தது. அந்தச் சேற்றுக் கலவையில் பலகைகள் போடப் பட்டிருந்தன. கீழே விழாமல் நடப்பதற்கே மிகுந்த கவனம் தேவைப் பட்ட அந்த இடம் நெரூடாவிற்கு அதிர்ச்சியைத் தரவே, “ ஏன் இந்த வீடு இப்படி இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார். அந்த வீடு மட்டுமல்ல அங்குள்ள எல்லா வீடுகளுமே அப்படித்தான் என்று வந்த பதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே நெரூடாவை கொண்டு போனது.

“ ஏன் உலர்தளம் அமைத்துக்கொள்ளக் கூடாது? “ என்ற நெருடாவின் அப்பாவித் தனமான கேள்விக்கு உலர்தரை அமைப்பதற்கான உரிமை தங்களுக்கு இல்லை என்று சொன்னார்கள். மட்டுமல்ல, இப்படி பலகை போடுகிற உரிமைக்காகக்கூட எட்டு ஆண்டுகள் தாங்கள் போராட வேண்டியிருந்தது என்றும், ஏழு தலைவர்களை பலிகொடுத்துதான் இந்த ஈர சேற்றுத் தரைகளில் பலகை போட்டு வாழ்வதற்கான உரிமை தங்களுக்கு கிடைத்தது என்றும் அவர்கள் சொன்னபோது நெரூடா அழுதானோ என்னமோ எனக்குத் தெரியாது. ஆனால் இதை வாசிக்க நேர்ந்தபோது நான் அழுதேன்.

ஈரத் தரையில்தான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற நடைமுறையை மாற்றவே சுரங்கத் தொழிலாளிகள் எட்டு ஆண்டுகாலம் போராடி ஏழு தலைவர்களை இழக்கவேண்டிய நிலை இருந்தது என்பதை ஜீரணிக்கவே நான் படாதபாடு பட வேண்டியிருந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட உலர்தரை அமைத்துக் கொள்ளும் அனுமதியைத் தராத அந்த சமூகத்தை எந்த மொழியில் எப்படி சபிப்பது என்று கொதித்து குழம்பிப் போயிருந்தேன்.

எந்த வேலையினும் சுரங்கத் தொழில் ஆபத்தானது என்பது என் கணிப்பு. எந்த நிமிடமும் மண் சரிந்தோ, பேய்மழை நீரில் மூழ்கியோ மரணிக்கும் ஆபத்து இங்கு அதிகம். தோல் வியாதி உள்ளிட்ட நோய்களின் தாக்குதலுக்கு அடிக்கடி இரையாகும் மனிதர்கள். இத்தகைய தொழிலாளர்களை சுரண்டுவது என்பது ஈனத்தனமான கொடுமை என்றால் இப்படி உலர்ந்த தரையில்கூட வசிப்பதற்கு அனுமதி மறுப்பது என்பது கொடுமையின் உச்சம்.

இதை AITUC அமைப்பின் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான தோழர் மூர்த்தி அவர்களிடம் நெய்வேலிப் பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சொன்னேன். அப்போது அவர் சொன்னது என்னை அதிர்ச்சியின் எல்லை தாண்டி தூக்கிக் கிடாசியது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஒப்பந்தத் தொழிலாளர்களது துயரமும் இதற்கு கொஞ்சமும் குறையாதது என்றார்.

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினமும் 370 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அந்தக் கூலியை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும், ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தரப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் போராடி வருகிறார்கள். பேச்சு வார்த்தையில் 370 ரூபாய் என்பதிலிருந்து 480 ரூபாய் என்கிற அளவிற்கு கூலி உயர்த்தப் பட்டிருக்கிறது.
   
இப்படியான பொதுப் புரிதலுக்கு அப்பால் நமக்கு அவர்களது வேறெந்த வலியும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏதோ 110 ரூபாய் அளவிற்கு உயர்வு ஏற்பட்டதாக பாய்ச்சப் பட்ட ஊடக வெளிச்சத்தில் அந்த 110 ரூபாய் உயர்வு என்பது இப்போது 55 ரூபாயும் அடுத்த ஆண்டு 55 ரூபாயும்தான் என்கிற உண்மையின் வெளிச்சம் மங்கிப் போனது.

ஒப்பந்தத் தொலிலாளி என்பவர் யார்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நாம் சிரமப் படத் தேவையே இல்லை. வங்கியில், தோல் பிளாசாக்களில், ஆலைகளில், நிறுவனக்களில், தொழிற்சாலைகளில் என்று எல்லா இடங்களிலும் இன்று ஒப்பந்தத் தொலிலாளிகள் நிறைந்து கிடக்கிறார்கள். இவர்கள் இவர்கள் வேலை பார்க்கும் தளத்தின் நிரந்தரத் தொலிலாளிகள் என்ன வேலை செய்கிறார்களோ அதே வேலையைத்தான் செய்வார்கள். இன்னும் சொல்லப் போனால் பல இடங்களில் நிரந்தர ஊழியர்களை விட அதிக நேரம் உழைப்பார்கள். ஆனால் நிரந்தரத் தொழிலாளி வாங்கும் ஊதியத்தில் கால் பங்கிற்கும் குறைவான சம்பளத்தையே வாங்குவார்கள். பணிப் பாதுகாப்பென்பது இவர்களுக்கு அறவே கிடையாது. ஒரே தொழிற்சாலை, ஒரே வேலை. ஆனால் இரு ஊழியர்களுக்கு இருவிதமான ஊதியம்.

இது எப்படி?

இப்போதுதான் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வேலை ஒன்றுதான். நிறுவனமோ, வங்கியோ, தொழிற்சாலையோ இடமும் ஒன்றுதான். இது கடந்து ஒரு நுணுக்கமான அமைப்பு ஒரே இடத்தில் ஒரே வேலையைப் பார்க்கும் தொழிலாளிடையே மலைக்கும் துகளுக்குமான வேறுபாட்டைக் கொண்டு வருகிறது.

இருவர் செய்யும் வேலையும் ஒரே முதலாளியினுடையதுதான். ஆனால் இருவருக்கும் அவரே முதலாளியல்ல. நிரந்ததரத் தொழிலாளி அவரது ஊழியர். ஒப்பந்தத் தொழிலாளி அவரது வேலையை செய்து தரும் இன்னொரு முதலாளியின் ஊழியர். தலையே சுற்றும்தான். ஆனாலும் அதுதான் உண்மை.

உதாரணமாக ஒரு நிறுவனம் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 10000 தொழிலாளிகள் தேவைப் படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 1000 தொழிலாளிகளை அந்த நிறுவனம் நேரடியாக வேலைக்கு அமர்த்தும். மீதமிருக்கும் 9000 ஊழியர்களை தரகர்கள் மூலம் நியமிக்கும்.

நிரந்தரத் தொலிலாளிக்கு 25000 ரூபாய் சம்பளம் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். மிச்சம் உள்ள ஊழியர்களை நியமித்து பணியினை செய்து தருவதற்காக அது தரகர்களை நியமிக்கும். அந்தத் தரகர்களிடம் ஒரு ஊழியருக்கு 10000 ரூபாய் என்கிற அளவில் ஊதியத்தைக் கணக்கிட்டு கொடுத்துவிடும். இந்த ரூபாய்க் கணக்கு தோராயமானதுதான். 25000 ரூபாய் அவர்களுக்கு என்றால் இவர்களுக்கு இவ்வளவு குறைவாகப் போகும் என்பதை சொல்லவே இது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது அந்தத் தரகர்கள் வாங்கிய 10000 ரூபாயில் 5000 ரூபாயை தாங்கள் வைத்துக் கொண்டு மீதமிருக்கிற 5000 ரூபாயை தொழிலாளிக்கு வழங்குவார்கள். இங்கும் இது கொஞ்சம் குறைவதற்கும் சில நேரம் கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்தத் தொழிலாளிகளை கொத்தடிமைகள் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அப்படி சொல்லாமல் இருக்கவும் முடியாது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இருக்கும் எந்த உரிமையும் சலுகைகளும் இவர்களுக்கு இருக்காது.

இதே வித்தையைத்தான் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் செய்தது. போனஸ் இல்லை என்றது. ஊழியர்களின் பணிக்கு உத்திரவாதம் இல்லை என்றது. மருத்துவ சிகிச்சைக்கான நிரந்தரத் தொழிலாளுக்குண்டான சலுகை இவர்களுக்கு இல்லை என்றது.

இவ்வளவு ஏன்? நிரந்தரதொழிலாளிக்கு ஒரு சாப்பாடு ஒப்பந்தத் தொழிலாளிக்கு ஒரு சாப்பாடு என்று கேண்டீனில் போட்டது.

நெய்வேலி சுரங்கத் தொழிலாள்களின் வலியை இந்த அளவிற்கு மட்டுமே உணர்ந்திருதேன். இவையே என்னைத் தூங்க விடாமல் குத்திக் குடைவதற்கு போதுமானதாக இருந்தது.

ஆனால் தோழர் மூர்த்தியோடான அந்த அலைபேசி உரையாடல் இவர்களுக்கிழைக்கப் பட்டுள்ள கொடூரமான அநீதி ஒன்றினை எனக்கு சொன்னது.

மரிய எலேனா சுரங்கத் தொழிலாளிகளுக்கு நேர்ந்த கொடுமையைவிட இது கொடூரமானதாய் இருக்கிறது.

நெய்வேலி சுரங்கத்தில் வேலைபார்க்கும் ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு குடிசையோ ஆஸ்பெஸ்டாஸ் கூரையோடோ வீடுமாதிரி ஒன்றை அமத்துக் கொள்ள நிர்வாகம் இடம் கொடுத்திருக்கிறது. தொழிலாளிகளும் வீடுமாதிரி ஏதோ கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லதுதானே? இதில் என்ன குறை இருக்கிறது? வசிப்பதற்கு கட்டிக்கொள்ள இடம் கொடுத்தது குற்றமா? இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் வரக்கூடும்தான்.

இடம் கொடுத்ததெல்லாம் சரிதான். ஆனால் அதற்குள் கிடக்கும் ஒரு நிபந்தனைதான் கொடூரமானது. அந்தத் தொழிலாளிகள் அவர்கள் கட்டியிருக்கும் குடிசைகளுக்கு மின் இணைப்பு உரிமை மறுக்கப் பட்டுள்ளது. அதற்கான காரணம் சிறு பிள்ளைக்கும் புரிகிறமாதிரி எளிதானதுதான். மின் இணைப்பு பெற்றுவிட்டால் ரசீது அவர்கள் பெயரில் வந்துவிடும். பிறகு அந்த ரசீதுகளைப் பயன்படுத்தி தொழிலாளிகள் இடத்தை தங்களுடையது என்று உரிமை கோரிவிடுவார்களோ என்ற கவனம்தான்.

உலகத்திற்கே மின்சாரம் வழங்கக் கூடிய நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய தொழிலாளிகளின் வீடுகளில் அரிக்கேன் விளக்கென்றால் எங்கு போய் முட்டிக் கொள்வது?

நம் மண்ணில் நிலமை இப்படி இருக்க, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கங்கள் நட்டத்தில் இயங்குவதைப் பார்த்து நமது பிரதமர் சரிவிலிருந்து அவற்றை மீட்டெடுத்து சீராக்க நட்புக் கரம் நீட்டுவதாக செய்திகள் வந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் குயின்லேண்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கமானது மிக மோசமான அளவு நட்டத்தைச் சந்தித்ததால் ஏறத்தாழ 4000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சரிவிலிருந்து தொழிலை மீண்டெழச் செய்வதற்காக குயின்லேண்டில் கௌதம் அதானி அவர்களுக்கு சுரங்கம் அமைக்கும் உரிமையை ஆஸ்திரேலிய அரசு தந்துள்ளது. இது மட்டுமல்ல. நிலக்கரிச் சுரங்கம் அமையும் இடத்திலிருந்து ஏறத்தாழ 400 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் உரிமையையும் அதானி அவர்களுக்கே ஆஸ்திரேலிய அரசாங்கம் அளித்திருக்கிறது.

இதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான தொகையை பாரத ஸ்டேட் வங்கி அதானி அவர்களுக்கு கடனாக வழங்க முன் வந்துள்ளது. இந்தக் காரியங்கள் அனைத்திலும் பாரதப் பிரதமர் மாண்பமை மோடி அவர்களின் உதவி வெளிப்படையாகவே இருப்பதாக பத்திரிக்கைகள் சொல்கின்றன. இது உண்மை எனும் பட்சத்தில் நமக்கு இயல்பாகவே சில அய்யங்கள் எழுவது இயற்கைதான்.

1) உள்ளூர் சுரங்கங்களில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது பிரதமர் அவர்கள் ஆஸ்திரேலியா மண்ணின் சுரங்கத் தொழில் சரிவை இவ்வளவு செலவு செய்து சரிகட்ட துடிப்பது ஏன்?


2) பிரதமர் அவர்களது தேர்தல் நேரத்து பயணச் செலவுகளை திரு அதானி அவர்கள்தான் கவனித்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக பத்திரிக்கைகளால் சொல்லப்படுகிற நிலையில் இவ்வளவு வெளிப்படையான உதவி பிரதமரிடமிருந்து தேவைதானா?

3) பாரத ஸ்டேட் வங்கிதான் இந்த கடனைத் தருகிறது என்பது உண்மை எனும் பட்சத்தில் அவ்வளவு பெரிய கடனை ஒரே நாளில் அனுமதித்தது?
4) ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் அவ்வளவு லாபகரமானது அல்ல என்று ஊடகங்கள் சொல்லும் செய்தி உண்மை எனில் மிகப் பெரிய நட்டம் அதானி அவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புண்டே. அப்படி நிகழும் பட்சத்தில் வங்கி கடனைத் திரும்பப் பெருவதில் ஏராளமாய் சிக்கல் எழுமே.

5) அப்படி நிகழும் பட்சத்தில் வங்கியில் இருந்த மக்களின் சேமிப்பை பாதிக்குமே.

6) அப்படித்தான் எனில் அது மக்களைப் பாதிக்குமே.

அதனால்தான் இவ்வளவு நீட்டிக் கேட்க வேண்டியதாயிற்று.  Monday, December 1, 2014

”மனிதப் படுத்துதலே கல்வியின் நோக்கம்”


இந்தியாவின் கனவுகளை நனவாக்குவேன் என்பதுமாதிரி பிரதமர் மோடி அவர்கள் சிட்னியில் பேசியதாக செய்திகள் சொல்கின்றன.
கல்வி குறித்தான இந்த மண்ணின் கனவு வண்ணமயமானது. அது கடந்த சில பத்து ஆண்டுகளாக அதிலும் கடந்த இறுதிப் பத்தாண்டுகளில் சிதைவுகளை மட்டுமல்ல, எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கல்வி குறித்த இந்த மண்ணின் கனவு என்ன என்பது பற்றியும் மோடி அவர்களின் கடந்தகால கல்விதள செயல்பாடுகளையும் அறிந்தவர்களால் மகிழ்ச்சியுற முடியாது.
முதலில் யாருக்கு கல்வி தர வேண்டும்? கொஞ்சமும் யோசிக்காமல் பாரதி சொல்வான் “ஆங்கோர் ஏழைக்கு” என்று. ஆனால் நடைமுறையில் வசதியுள்ளவனுக்கே கல்வி என்று ஆளும் வர்க்கமும் ஆண்டைவர்க்கமும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டார்கள். மாடு மேய்ப்பவன் குழந்தைக்கும் செருப்பு தைப்பவன் குழந்தைக்கும் எதற்கு கல்வி என்று உரத்துப் பேசியவர்களும் போராடியவர்களும்தான் இன்று மோடி அவர்களோடு உடனிருந்து அவரை இயக்குபவர்கள் என்ற நிலையில் ஏழைக்கு கல்வி என்பது எப்படி இவரது செயல்திட்டமாகும்?
ஊர்தோறும் தெருதோறும் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்றான் பாரதி. தான்மட்டும் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் தாய்மொழி தவிர்த்து பிறமொழியில் கல்வி பயில்பவர்கள் சிறைக்குத்தான் போகவேண்டும் என்கிறார் காந்தியடிகள் .இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன.
1) ஊர்தோறும் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தெருதோறும் என்று பாரதி சொல்வதை அருகமை பள்ளிகள் என்றுதான் கொள்ள வேண்டும். தூரப் பள்ளிகள் கல்வியை ஒடுக்கப்பட்ட ஏழை மக்களிடமிருந்து அந்நியப் படுத்திவிடும் என்பதே பாரதியின் கவலை. அதனால்தான் தெருதோறும் என்கிறான்.
அவன் கேட்கும் பள்ளிகள் பொதுப் பள்ளிகள். பொழுதிற்கொன்று என்ற கணக்கில் பொதுப்பள்ளிகள் மூடப் படுவது ஆபத்தென்றால் பொழுதிற்கு நூறென்ற கணக்கில் தனியார் பள்ளிகள் தோன்றி செழிப்பது மகா ஆபத்தானது. கல்வித் தளத்தை சந்தைப் படுத்துவதற்கு மோடி உள்ளிட்ட பெரும்பான்மை அரசியல்வாதிகள் எல்லா வகைகளிலும் பாடுபடும்போது கல்வி குறித்த கனவு எப்படி மெய்ப்படும்.
2) தாய்மொழி வழிக் கல்விமட்டுமே ஒருமனிதனை சிறந்த கல்விமானாக மாற்றும். தாய்மொழியில் படிப்பதை கேவலப்படுத்தும் இவர்களால் கல்விபற்றிய கனவு எப்படி மெய்ப்படும்?
நல்ல இந்தியக் கல்வி என்பது வங்கத்தில் ஓடி வரும் மிகை நீரைக் கொண்டு வையத்து நாடுகளில் பயிர் செய்யக் கற்றுத்தர வேண்டும். காவிரியை அரசியலாக்கியதில் இவர்களது பங்கும் அவரது கூற்றோடு சேர்த்தே கவனத்திற்கு வருகிறது.
”இந்திரன் வச்சிரம் ஓர்பால்
அதில் எங்கள் துளுக்கர் இளம்பிறை ஓர்பால்”
என்கிறான் பாரதி. தேசம் கிழியாமல் இருக்க வேண்டுமெனில் இந்திரன் வச்சிரத்தையும் பிறையையும் கொடியில் வைக்க வேண்டும் என்ற மாகவியின் கனவே இந்த மண்ணின் கனவாகவும் இருக்க முடியும். கொஞ்சமும் மதச் சகிப்புத் தன்மையற்ற இவர்களால் இது சாத்தியப் படாது.
மனிதப் படுத்துதலே கல்வியின் நோக்கமாக இருக்க முடியும். அது நிறைவேறினால்தான் இந்த மண்ணின் கனவு நிறைவேறியதாகக் கொள்ளமுடியும்.
மக்கள் எழுச்சியைத் தவிர இவர்களால் இது மெய்ப்படாது.

Monday, November 24, 2014

...

22 ஆம் தேதி 11 மணிக்கு ஒரு அழைப்பு,
” எலெக்‌ஷன் கமிஷனிலிருந்து பேசறோம். நீங்க எட்வின் தானே?”
“ஆமாம்”
“ சரி வச்சுடுங்க”
பிறகு 12 மணி வாக்கில் அங்கிருந்து வந்த இன்னொமொரு அழைப்பு அடுத்த நாள் 9 மணிக்கே வந்து அப்பாயின்மெண்ட் ஆர்டெர் வாங்கி கொண்டு பூத்திற்கு செல்ல ஆணையிட்டது.
அன்று இரவு 8 மணிக்கு வந்த அழைப்பு அடுத்த நாள் சரியாக 7 மணிக்கெல்லாம் வந்து உத்தரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தவறினால் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் கனிவாக மிரட்டியது.
வீட்டை விட்டு 4 மணிக்கு கிழம்பி ஏழுக்கெல்லாம் போனால் ஏழரைக்குப் பிறகே அவர்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள். உத்தரவை 11 மணிக்கு கொடுத்தவர்கள் உடனே வாக்குச் சாவடிக்கு போய் காத்திருக்க வேண்டும் என்றும் வாக்களிக்கும் கருவிகளைக் கொடுக்க உடனே வருவார்கள் என்றும் அப்போது இல்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் வரும் என்றும் மிரட்டி அனுப்பினார்கள்.
போய் காத்திருந்தால் ஆறு மணி வாக்கில் நிதானமாக வந்தார்கள்.
முதல் நாள் மதியம் சாப்பிட்டது. 24 ஆம் தேதி இரவு 7 மணிக்குத்தான் சாப்பிட முடிந்தது. இடையில் ஒரே ஒரு கப் தேநீர்தான். இதுகூட பல இடங்களில் இல்லை என்பதுதான் செய்தி. ஏற்கனவே சாப்பாட்டிற்கு முன்னர், பின்னர் என்பதெல்லாம் தாண்டி சாப்பிடும் போது ஒரு மாத்திரை சாப்பிடவேண்டிய ஆள் நான்.
இவை போக வாக்கெடுப்பை அமர்ந்து நடத்த நாற்காலிகளைத் தேடிய ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே தேர்தல் வகுப்புகள் எடுத்து மிக நேர்த்தியாக ஆசிரியர்களை அசிங்கப் படுத்தினார்கள்.
தேர்தல் கமிஷனே இப்படித்தான் வழிகாட்டியதா? இல்லை வருவாய்த்துறை வரம்பு மீறினார்களா தெரியாது.
தேர்தல் கமிஷன் அவ்வப்போது ஆசிரியர்களை கலந்தாலோசித்தாலே தேர்தல்களை இதைவிடச் சிறப்பாக நடத்த முடியும்.

குட்டிப் பதிவு 13

ஏன் சார் உங்க செல் ரிப்பேரா? முகநூலில் பார்த்தேன் என்று கேட்ட பூபதியிடம் ( Jilla Boopathi ) சம்மரி தவிர மத்த எல்லாத்தையும் படி என்றேன்.
எந்த டெட்டால் போட்டு கழுவினாலும் வாத்தியார் புத்தியை சுத்தமாய் கழுவித் துடைத்தெறிய முடியவில்லை.

கவிதை 21

மாதக்கணக்காய் பூட்டிக் கிடக்கும் 
வீட்டின் கூரையிலிருந்து
கரைந்துகொண்டேயிருக்கிறது
காகம்

Friday, November 21, 2014

குட்டிப் பதிவு 12

உன் பெயரென்ன என்றுகேட்டால் வி.லேகாஸ்ரீ UKG C செக்‌ஷன் என்று பள்ளி முகவரியோடு சேர்த்துதான் சொல்வாள்.
வாங்க வி.லேகா LKG என்று ஆரம்பித்தாலே போதும் அழாத குறையாக தான் UKG என்று ஆரம்பித்து விடுவாள். எனக்கு அவளைச் சீண்டிக் கொஞ்சுவதற்கு இதுவே போதுமானதாக இருக்கிறது.
லேகா குட்டி LKG பெரிசா UKG பெரிசா என்றேன் இன்று.
கொஞ்சமும் யோசிக்காமல் UKG தானென்றாள். அப்புறம் ஏன் போன வருஷம் LKG படிச்ச என்றேன்.
போன வருஷம் LKGதான் பெரிசு. அதனாலதான் என்கிறாள்.
குழந்தைனா குழந்தைதான்.

Wednesday, November 19, 2014

நிலைத் தகவல் 64

” என்னங்க சார், மூனு தரம் போன் செஞ்சிட்டோம். வந்து வாங்கிக்க மாட்டீங்கறீங்க. எப்ப வரீங்க. அல்லாட்டி திருப்பி அனுப்பட்டுமா?”
என்னுடனான ஒரு கூரியர் அலுவலரின் உரையாடலே இது.
கூரியர் வந்த புதிதில் எல்லோரும் அதன் விரைவு சேவையை ஆகா ஓகோ என்று கொண்டாடினார்கள். தபால் துறையை விட இதன் சேவையை உச்சிமுகர்ந்து மெச்சினார்கள்.
தபால் துறையில் கோளாறுகளே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் அவற்றைப் போக்குவதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அதற்கு மாற்று இது என்றார்கள்.
தெருக்கள் அதிகரிக்கும் அளவிற்கு தபால் காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற சன்னமான அக்கறைகூட இல்லாதே இருக்கிறார்கள். இருக்கிற காலிப் பணியிடங்களையே நிரப்ப எண்ணம் இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறுதான்.
இந்த லட்சணத்தில் ரயில்வேயை 100 விழுக்காடு தனியாருக்கு தாரை வார்ப்பதே தனது லட்சியம் என்பதை எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி சொல்லியிருக்கிறார் பிரதமர்.
விடுங்க சார்,
இனி எங்களுக்கு ரயிலும் இல்லை

Tuesday, November 18, 2014

குட்டிப் பதிவு 11

தங்களது காத்திரமான பதிவுகளால் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பவர்களுள் முகநூல் தோழர் சியாமளா ஷேக்ஸ்பியர் அவர்களும் ஒருவர்.
கிறிஸ்தவராக இருந்துகொண்டே அந்த மதத்தை விமர்சிக்கும் அவரை கூடுதல் மரியாதையோடுதான் நான் பார்க்கிறேன்.
தனக்கு தனது தந்தை தமிழ்ப் பெயரை வைக்காமல் தனது மருத்துவக் கல்லூரி தோழியான சியாமளாவின் பெயரை வைத்ததில் ஏற்படும் சிக்கல்களை அவர் எழுதி இருந்தார்.
இதில் பிழை எதுவும் இல்லை என்றும் தமிழைப் புழங்குவதே இன்றையத் தேவை என்றும் அவருக்கு பின்னூட்டமிட்டிருந்தேன்.
ஆனால் இந்தப் பதிவு வேறு காரணங்களுக்கானது.
பிடித்த தலைவர்களின், படைப்பாளிகளின், நடிக நடிகைகளின், தெய்வங்களின் பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை. ஆனால் தங்களது தோழர்களின் பெயரை வைப்பது அபூர்வம். எனக்குத் தெரிய எனத நண்பர் செல்வ பாண்டியன் அவர்கள் தனது ஒரு மகனுக்கு தனது வகுப்புத் தோழனின் பெயரான செழியன் என்பதை வைத்துள்ளார். அதற்காகவே அவரை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாராட்டுவேன். தோழமையை இவ்வளவு உயர்வாக மதிக்கும் அவரை இன்னும் பாராட்ட வேண்டும் என்று கருதுவேன்.
தோழருக்கு சியாமளா என்று பெயர் வைத்ததற்காகவே அவரது தந்தையை நான் தொடர்ந்து மதித்து பாராட்ட கடமை பட்டிருக்கிறேன். அதிலும் செல்வ பாண்டியனாவது தனது தோழனின் பெயரை வைத்திருக்கிறார். இவரோ தனது கல்லூரித் தோழியின் பெயரை தனது மகளுக்கு வைத்ததோடு அதை தெரியப் படுத்தவும் செய்திருக்கிறார். இது பேரதிக மரியாதைக்குரியது. நான் அறிந்து தோழமையை அழகோடும் நெகிழ்வோடும் கௌரவப் படுத்தியிருக்கிறார் தோழரின் தந்தை அவர்கள்.
சங்கடமே வேண்டாம் சியாமளா தோழர். உங்கள் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு கனமும் எனக்குள் பெருமிதம் சுரக்கும்.

தேர்வல்ல.... மதிப்பீடே தேவை

” புதிய தலைமுறை கல்வி” இதழில் வந்திருக்கும் எட்டாம் வகுப்பு வரைக்கும் கட்டாயத் தேர்வு அவசியமா? என்பது குறித்த எனது கருத்துக்களின் முழுப்பகுதி
**********************************************************************************
”பேரெழுதத் தெரியாதது, அனா ஆவன்னா தெரியாததையெல்லாம் எட்டாம் வகுப்பு வரைக்கும் பாஸ் போட்டுட்டு இப்ப 100 விழுக்காடு ஏன் தரலைனா எங்க போயி முட்டிக்கிறது? எப்படி தருவது?” என்பது மாதிரியான பத்தாம் வகுப்பு ஆசிரியர்களின் புலம்பலில் உள்ள நியாயத்தை ஒரு சக ஆசிரியனான என்னால் உணர முடிகிறது.
நல்ல தேர்வும் முழுமையான வடிகட்டலும் அவசியம்தானா? என்று கேட்டால் நல்ல தேர்வு அவசியம்தான் ஆனால் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரைக்குமேனும் வடிகட்டுதல் கூடாது என்பதே நமது பதில்.
யுனெஸ்கோவின் கல்வி அறிக்கை ஒன்று, “The purpose of education is to include the excluded” என்று சொல்கிறது. மதிப்பெண்களும், தேர்ச்சியும் மட்டுமல்ல, யாரையும் விடுபடாமல் பள்ளியில் அமரவைப்பதே கல்வியின் நோக்கம் என்று இதை தமிழ்ப்படுத்தலாம்.
பொதுவாகவே ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறாத குழந்தைகளில் 60% பேர் அதற்கு மேல் கல்வியைத் தொடர்வதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் தெருக்களில் சுற்றித் திரிவதும், சன்னம் சன்னமாக தீயப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு சமூகவிரோதிகளாகவும் மாறிப் போகிறார்கள்.
பள்ளி என்பது மொழிகளையும், சில பாடங்களையும் மட்டும் கற்றுத்தரும் இடம் அல்ல. தன்னம்பிக்கையை, நல்ல ஒழுக்கத்தை, அடுத்தவன் துயர் கண்டு துயருறும் மனிதத்தை, சாதி மிதித்தலை, மண்ணின், தாய்மொழியின் தொண்மத்தை போற்றிக் காக்கவேண்டிய கடப்பாட்டினை, பெண்மையைப் போற்றச் செய்வதில், வயதான காலத்தில் பெற்றோரை காப்பாற்றுவதில் அந்தக் குழந்தையை செதுக்கித் தரவேண்டிய பட்டறைதான் பள்ளி.
குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் பெறாத ஒரு குழந்தையை தேர்ச்சி பெறாதவனாக அறிவிப்பது என்பது அவனுக்கு வழங்க வேண்டிய மற்றவற்றைத் தர மறுக்கிற, அவனை மனிதப்படுத்துகிற கடமையிலிருந்து நழுவிப் போகிற வன்முறையே ஆகும்.
இந்த மாணவர்களை வைத்துக் கொண்டு எப்படி தேர்ச்சி விழுக்காட்டைத் தருவது? இங்குதான் ஆசிரியப் பணி அறப்பணி என்பது பொருந்துகிறது. இந்தக் குழந்தையும் தேர்ச்சிபெறப் போராடுவோம்.
இன்னொருபுறம் வறட்டுத் தனமான தேர்ச்சிவிழுக்காடு உதவாதென்பதை கல்வித்துறைக்கும் அரசுக்கும் எடுத்துச் சொல்வோம். தேவைப் படுமெனில் இதற்கான ஒரு போராட்டத்தையே கையெடுக்கலாம்.

Thursday, September 25, 2014

கவிதை 20

பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடந்து போயினர் இருவரும்
கடவுளை சபித்தபடியே
தன்னைத் தானே
இருள்
சபித்துக் கொண்டது அறியாமல்

Saturday, September 20, 2014

குட்டிப் பதிவு 10

கவி தகுர் என்ற தனது நூலில் க.ந.சு சொல்லும் ஒரு சம்பவத்தை சொல்லத் தோன்றுகிறது.
கலைகளின் காவலர், மெத்தப் படிப்பவர் என்ற பிம்பத்தோடு உள்ள ஒரு வழக்குறைஞர் வீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பத்துப் பதினைந்து முறை சென்றிருக்கிறார்.
அவரது மேஜைமீது தகுரின் ( தாகூரை தகுர் என்றுதான் க.ந.சு அவர்களும் அழைக்கிறார் ) புத்தகம் ஒன்று இருந்்திருக்கிறது.
புரட்டப் படாமலே இருந்திருக்கிறது அந்த நூல்.
தகுர் நூலை படிப்பவர் என்று காட்டிக் கொண்டால்தான் ஒரு மவுசு என்கிறார் க.ந.சு
மட்டுமல்ல அவ்வளவு உசத்தியானது தகுரின் மவுசு என்றும் சொல்கிறார் க.ந.சு
ஆக, அந்தக் காலமும் மவுசுகளாலேயே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது

Thursday, September 18, 2014

குட்டிப் பதிவு 9

பிரதமர் மோடி அவர்கள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியில் பேச இருப்பதைக் குறித்து நண்பர்கள் கொதித்தெழுந்து விமர்சித்து வருகிறார்கள்.
எனக்கென்னவோ இது அவசியமற்றது என்றேபடுகிறது.
இன்னும் சொல்லப் போனால் மோடி அவர்கள் தனது தாய் மொழி குஜராத்தி எனும் பட்சத்தில் குஜராத்தியில் பேசுவதுதான் சரியாக இருக்கும்.
மொழிபெயர்ப்பு வசதிகள் விரிந்து கிடக்கும் காலத்தில் அவரவரும் தத்தமது தாய் மொழியில் பேசுவதும் அதை கேட்பவர்களின் தாய்மொழிகளில் பெயர்க்கப்பட்டு வழங்கப் படுவதும் அவசியம்.
இது சாத்தியமானதே.
நமது ஆசை இதுதான். தமிழகத்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழில் மட்டுமே பேசுவது என்று கட்சி பேதமின்றி முடிவெடுத்து செயல் படுத்த வேண்டும்.
இதற்கு சபாநாயகரின் அனுமதியை வாங்க வேண்டும் என்ற விதியை அல்லது நடைமுறையை நீக்கக் கோரி போராட வேண்டும்.

Sunday, September 7, 2014

கவிதை 19

எறும்பு மட்டும் கடித்து
எழுப்பியிருக்காவிட்டால்
சாப்பிட்டிருக்கக் கூடும் அவன்
தொடங்கிய கனவிலாவ

Saturday, September 6, 2014

கவிதை 18

தலைக்குமேல்
தலைக் குப்புறக் கவிழ்ந்து
நனைத்துவிட்டுப் போனது
காற்றில் பறந்த
குழந்தை வரைந்த
தண்ணீர் வாளி

Friday, September 5, 2014

கவிதை 17

புரிகிறது
விரல் பிடித்து விலை பேசியிருக்கிறீர்கள்
தாமிரமோ தங்கமோ எதையோ எடுக்க
எவனுக்கோ சத்தியம் செய்திருக்கிறீர்கள்
இந்தியிலோ, தமிழிலோ, ஆப்பிரிக்க மொழிகளில் ஏதோ ஒன்றிலோ
வேறு ஏதோ ஒரு மொழியிலோ
வனத்தை, மலைகளை யாருக்கோ தாரை வார்க்க
அப்புறப் படுத்த வேண்டுமெங்களை
நாக்கிலே தேன் தடவி எதையெதையோ சொல்கிறீர்கள் எங்களிடம்
வேண்டாம் துரைமார்களே உங்கள் ஊரும் சாமியும் படிப்பும் பணமும்
தரிசித்துவிட முடியும் எங்கள் சாமிகளை
ஒரு கூரிய கல்லிலோ
கூடுகளாடர்ந்த ஒரு மரத்திலோ எங்களால்
எங்களைவிட எளிமையானவர்கள் எங்கள் சாமிகள்
போக ஒரே மொழிதான்
எங்களுக்கும் எங்கள் சாமிகளூக்கும்
ஊருக்குள் வந்தால் என் பேரனும் என் மகனோட பேரனும்
வேற மொழியில் பேச
தன் மொழி பேச ஆளற்று செத்துப் போகும் எங்கள் சாமிகள்
எங்கள் வியர்வையின் ஈரம் ஒற்றி
தங்களை சுத்தம் செய்துகொள்ளும் மேகங்கள்
எங்களைத் தழுவ மறுதலிக்கும்
இசையறிவோ எழுத்தறிவோ இல்லாத எங்களுக்கு
எங்கள் அருவிகளின் பாடல் பிடிபடும்
உங்கள் உடையில் உங்கள் மொழியில் நாங்கள் வந்தால்
மிறண்டு ஓடிவிடும் குருவிகளூம் மைனாக்களூம்
முயல்களூம் மான்களும்
தங்கள் வாய்களை மூடிக் கொள்ளூம் அருவிகள் எங்களுக்கு
ஜீவித்திருக்க முடியாது எங்களால் இவைகளற்ற ஒரு நரகத்தில்
எல்லாமறிந்த நீங்களறியீர்கள்
எங்கள் நாய்களின் குருவிகளின் மொழி
வேண்டாமெங்களுக்கு உங்களின் காரும் படிப்பும் பணாமும் பதவிசும்
விட்டு விடுங்கள் எங்கள் அருவிகளோடும்
மரங்களோடும் மான்கள் மயில்களோடும் எங்களை
உங்களூக்குத் தெரியும்
நகர மாட்டோம் நாங்களென்பது
உறுமுவீர்கள்
படைகளை ஏவுவீர்கள்
தெரியும்
பறவைகளல்ல
ஒரு வேட்டுச் சத்தத்திற்கே பறந்து போக
வேறல்ல
இந்தக் காடென்பதும் நாங்களென்பதும்

நன்றி ; செம்மலர்

Tuesday, September 2, 2014

நிலைத் தகவல் 63

அநேகமா இது எனக்கு இப்படியான இருபதாவது அனுபவம்
இன்று ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்தார்.
“ வந்தால் பார்க்க முடியுமா எட்வின்?”
“ இல்லை தோழர். மதுரையில் ஒரு கூட்டம். நாளை பார்க்கலாம்”
“உங்களுக்கென்ன. ஓய்வு பெற்றாச்சு. ஜாலியா ஊர் சுத்தலாலாம் இன்னும் நாலு வருஷம் ஓட்டனும்.”
“ நான் இன்னும் எட்டரை வருஷம் ஓட்டனும் தோழர்”
“என்னது?”
“ஆமாம், 2022 மேதான் ஓய்வு”
ஆமாம், எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி ஆகுது.

Monday, September 1, 2014

அழைக்கிறேன்

மதுரை புத்தகக் கண்காட்சியில் சந்தியா பதிப்பகத்தில் ( கடை எண் 82 மற்றூம் 83 ) எனது

1 இவனுக்கு அப்போது மனு என்று பேர்
2 எப்படியும் சொல்லலாம்

ஆகிய நூல்களூம்

நியூ சென்ச்சுரி புத்தக ஸ்டால்களில்

1 என் கல்வி என் உரிமை
என்ற நூலும் கிடைக்கு

Sunday, August 31, 2014

கவிதை 16

மரத்தின் நிழலைக் 
கடத்த முடியாத கோவத்தில் 
வெள்ளமாய் பெருத்து வந்து 
மரத்தைக் கடத்திப் போனது 
நதி

Saturday, August 30, 2014

குட்டிப் பதிவு 8

"அங்குலி மாலா " என்ற கன்னட திரைப்படத்தின் கதாசிரியர் பரகூர் ராமசந்திரப்பாவிற்கு 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியருக்கான விருதினை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அது தனது சொந்த கதை அல்லவென்றும் வரலாற்றை கொஞ்சம் புனைவு படுத்தியதைத் தவிர தாம் எதுவும் செய்யவில்லை என்றும் நிறைய நண்பர்களிடமிருந்து இதற்கான தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் எனவே எழுதாத கதைக்கு விருது வாங்குவது நியாயமல்ல என்பதால் அதை நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தாங்களே எல்லா செலவுகளையும் செய்து அடுத்தவர் தருவதுபோல் பிம்பத்தை ஏற்படுத்தி விருதுகளை வாங்குவோர் மத்தியில் இவர் பளிச்சென மாறுபடுகிறார்.
வணங்கி வாழ்த்துகிறேன் ராமசந்திரப்பா சார்.

Friday, August 29, 2014

45

அபிட் எடுக்கத் தவறியதால்
ஆணிக்காயம்
பம்பரத்திற்கு

46

உறையைப்
பிரித்தேன்
நகை எதுவும்
முழுகவில்லை

47

மாலை நூத்தி ஐம்பது ரூபா

அறுபதே தேரல

ஜோப்பு,
கடுகு டப்பா, 
எல்லாம் குடைந்த பின்னும் 

கேட்டாச்சு பட்டவனிடமெல்லாம் 

நாளைக்கு தரானுங்களாம் 
நாரப் பயலுக 

போன மாசம் முப்பது ரூபாதான் மால 

தாயோளி பயப் புள்ள
நாளைக்கு செத்திருக்கலாம் 
இல்லாட்டி

போன மாசமே
போய் தொலஞ்சிருக்கலாம்  

Saturday, August 23, 2014

இதுவா கல்வி 2

ஒரு பள்ளியியில் மாலை 6,20 கு மேலும் வாசிக்கவே முடியாத அளவிற்கு இருட்டு விழுந்திருந்த நிலையிலும் மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருநதார்கள் என்றும் அதையெல்லாம் பார்க்கிறபோது தனது பள்ளி ஆசிரியர்களின் வேலை குறைவு என்றும் அது மாதிரி உழைப்புக்கு தயாராக வேண்டும் என்றும் இன்று நடந்த தனது பள்ளியின் ஆசிரியர் கூட்டத்தில் ஒரு தலைமை ஆசிரியர் பேசியிருக்கிறார்.

ஆசிரியர்கள் இன்னமும் கூடுதலான அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் பணியாற்ற வேண்டும் என்பதிலோ அதற்கு தயாராக இல்லாதவர்கள் தண்டிக்கப் படுவதிலோ நமக்கு மாற்றுக் கருத்தெதுவும் இல்லை.

ஆனால் வாசிக்கவே இயலாத அந்த நேரத்தில வாசிக்க வைப்பது என்பது எதில் சேர்த்தி?

அது நடிப்பு என்பதோடு குழந்தைகள்மீதான வன்முறை என்றே படுகிறது. இது மாதிரியான வன்முறைகளை செய்பவர்களையும் செய்யத் தூண்டுபவர்களையும் என்ன செய்யப்போகிறது கல்வித்துறை

Friday, August 22, 2014

செய்தி 1

17.08.2014 அன்று பொள்ளாச்சியில் நான் பேசியது குறித்து 18.08.2014 அன்று தி இந்து எழுதியது....

Thursday, August 21, 2014

இதுவா கல்வி?

பல கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களை மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து எழுதி வாங்குவதில் ஆசிரியர்களை முடுக்கி விட்டு நூறு விழுக்காடு தேர்ச்சியை வாங்குங்கள் என்று கடுமையாக உத்திரவிடுவதாக அறிகிறோம்.

தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களிடம் வேறு எதுவும் செய்ய வேண்டாம் மனப்பாடம் செய்யச் செய்து எழுதி வாங்குங்கள் போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டனர்.

பேசாமல் செத்துப் போய்விடலாமா என்றிருக்கிறது

அழைப்பு3
இன்று மாலை பெரம்பலூர்மாவட்டமைய நூலகத்தில்பேசுகிறேன்.வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள்சந்திப்போம்Wednesday, August 20, 2014

கவிதை 15

நனைய மறுத்தவனை
சபித்தபடி
நகர்நது போனது
மழை

Tuesday, August 19, 2014

கவிதை 14

வைப்பர் வேகத்தினும்
வேகமாய்
சலிக்கவே சலிக்காமல்
எழுதிக் கொண்டிருக்கிறது
மழை
எனக்கான கடிதத்தை

குட்டிப் பதிவு 7

அதிகாலை மூன்று மணி சுமாருக்கு பொள்ளாச்சி போய் சேர்ந்தேன். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் பேசவேண்டும்.
வந்ததும் வாசுதேவன் அய்யா வீட்டிற்கு போய்விடுமாறு அம்சப்பிரியா சொல்லியிருந்தார்.
இரண்டும் கெட்டான் நேரமாக இருந்ததால் தொந்தரவைத் தவிர்க்க விரும்பி லாட்ஜ் தேடினேன். கிடைக்காது போகவே வாசுதேவன் அய்யா வீடு போக ஆட்டோ எடுத்தேன்.
அய்யாவைத் தொடர்பு கொண்டேன். வடுகபாளையம் பூங்காவில் இறங்கி நிற்குமாறும், தான் வந்து அழைத்து போவதாகவும் சொன்னார்
விவரத்தை ஆட்டோ தோழரிம் சொன்னேன்.
பூங்காவில் இறங்கியதும் பணம் கொடுத்தேன். அவரும் இறங்கி என்னோடு நின்று கொண்டார்.
ஊருக்கு புதிதாய் தெரிவதாலும் இரண்டுங் கெட்டான் நேரமாக இருப்பதாலும் அய்யா வரும் வரை இருப்பதாவும் ஒருக்கால் முகவரி தவறெனில் விசாரித்து அவர் வீட்டில் கொண்டுவந்து விடுவதாகவும் சொன்னவர் அய்யா வரும்வரை இருந்துதான் சென்றார்.
ஆட்டோக்கள் வெறும் பெட்ரோலால் மட்டும் ஓடவில்லை

Monday, August 18, 2014

கவிதை 13

நனைதலுக்கான
அவர்களது
தவம்
ஆசீர்வதிக்கப் பட்டபோது
நனைந்தன
அவர்களது குடைகள்

Sunday, August 17, 2014

குட்டிப் பதிவு 6

முன்பு மாண்பமை சிதம்பரம் அவர்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அதே வளர்ச்சி அளவு வாய்ப்பாட்டை இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு மாண்பமை ஜெட்லி அவர்களும் இன்னும் கொஞ்சம் உரக்கவே சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.
வங்கத்து தனி மனிதனின் வருமானத்தைவிட வெறும் ஐம்பது விழுக்காடு மட்டுமே உயர்ந்து நின்ற இந்தியத் தனி மனிதனின் வருமானம் தாராள மயமும் உலக மயமும் வந்து இருபதே ஆண்டுகளில் நூறு சதம் உயர்ந்து நிற்கிறது என்பதும் அவர் அடுக்கக் கூடிய மேன்மைகளுள் ஒன்றாக இருக்கவும் கூடும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மனிதனின் சராசரி ஆயுளானது வங்கத்து மனிதனின் சராசரி வயதைவிட மூன்று நான்கு வருடங்கள் அதிகம். இப்போது இந்தப் பெருமகனார்கள் குறிப்பிடும் வளர்ச்சிக்குப் பின் வங்கத்து மனிதனைவிட இந்திய மனிதனின் சராசரி ஆயுள் நான்கு குறைந்திருக்கிறது என்கிறார் அமர்த்தியா சென்.
இந்திய தனி மனித ஆயுளில் ஏழு ஆண்டுகளை கபளீகரம் செய்த வளர்ச்சி என்ன வளர்ச்சி?

Saturday, August 16, 2014

தோழர் ஜோதிதோழர் ஜோதிமணி.
நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்.
என் சொந்தக் கிராமம் இவர் நின்ற தொகுதியில் . ஆக எனது தொகுதி வேட்பாளர்.
கொஞ்சம் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதுகூட தவறு. தன்னை கவனிக்க வைக்கிறார்.
ஈழம், மூன்றுபேர் தூக்கு குறித்த நிலை , பொருளாதாரம் , பொதுத்துறை விற்பனை போன்றவற்றில் இவரோடு முரட்டுத்தனமாக முரண்படுபவன்.
நிறைய முதல்வர்களோடும் கட்சியின் தலைமையோடும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருந்தபோதும் இன்னும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர். இதில் இன்னொரு விஷயம், இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் பொதுப் போக்குவரத்தைத் தாண்டி வர இயலாத பொருளாதாரம். இதை கௌரவமாகக் கருதும் பேசும் நேர்மை. உழைத்து சாப்பிடவேண்டும் என்று கருதுகிற வெகுஜன அரசியல்வாதி. 
மட்டுமல்ல
அவரது வருமானத்திற்கு வியர்வைக்கும் சரியான விகிதத்தில் பொருத்தமிருப்பதாக அவரை எதிர்த்து தேர்தல் வேலைபார்த்த என் தம்பி சொல்கிறான். ஒங்க கட்சியில இருக்கவேண்டிய பொண்ணு காங்கிரசில எப்படி இருக்குன்னு தெரியல என்கிறான்.
.அவரது எளிமையும், அப்பழுக்கின்மையும், மக்களுக்குழைத்தலையும் காசு பண்ணத் தெரியாத இளிச்சவாய்த் தனத்தையும் பார்த்து அவன் இப்படி சொல்லியிருக்கக் கூடும்.
நான் பார்த்தவரை கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முயற்சிக்கிறார்.
வன்மமான விமர்சனங்களையும் புன்னகையோடும் மென்மையாகவும் எடுத்து வைக்கிறார்
இவையும் இவரது எழுத்தும் என்னை மரியாதை கொள்ள வைத்தன
மாண்பமை தம்பிதுரை அவர்கள் மக்களவை துணை சபாநாயகராக பொறுப்பேற்றவுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார்
இந்தச் செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் திரு தம்பித்துரை அவர்களை எதிர்த்து தேர்தலில் நின்ற வேட்பாளர் இவர்.
இது இந்திய அரசியலில் அபூர்வம்
வாழ்த்துக்கள் ஜோதிமணி

பின்குறிப்பு: இவரது பிறந்த நாளன்று வாழ்த்திக் கொண்டிருந்தபோது தாளாளர் வந்துவிட்டார். பேசிட்டு வாங்க என்றபோதும் அவருடனான அழைப்பைத் துண்டித்துவிட்டு போக வேண்டிய அவசரம். பிறகு அவர் பிசியாகிவிட்டார். அவரது நேரச் சிக்கலை நான் உணர்ந்து வைத்திருப்பதைப் போலவே எனதையும் புரிந்து வைத்திருக்கிறார்.

இன்னொன்று ஜோதி,

உங்கள் கொங்கு மொழியும் குரலும் அடிக்கடி தொந்தரவு செய்ய வைக்கும்

அழைப்பு 117.08 2014 அன்று பொள்ளாச்சியில் பேசுகிறேன். வாய்ப்புள்ள பொள்ளாச்சி தோழர்கள் வாருங்கள். சந்திப்போம்

Friday, August 15, 2014

குட்டிப்பதிவு 5

முற்றாய் கிடைத்து விட்டதாகவோ இனி போராடுவதற்கென்று எதுவுமில்லையென்றோ நினைக்கவில்லை.

அரசியல் தரகர்களிடமிருந்து,
ஆதிக்க சாதிக்காரர்களிமிருந்து,
மதவாதிகளிடமிருந்து,
கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து,
இன்னபிற சமூக நச்சுகளிடமிருந்து
விடுலைக்கான போரை நடத்தியே ஆகவேண்டும்தான்.

ஆனாலும் இந்த அளவு எங்களது சுதந்திரத்திற்கு நீங்கள் தந்த விலை மிக அதிகம்

பெயரற்று செத்தெமை சுதந்திரப் படுத்திய உங்களுக்கென் வீர வணக்க

Thursday, August 14, 2014

உங்களுக்கு ...?

இன்றைய இடைநிலைக் கல்வித் திட்டம் குறித்து நாம் அவசியம் கவலைப் பட்டே ஆக வேண்டும் என்பதை நாள்தோறும் ஏதாவது ஒன்று நியாயப் படுத்திக் கொண்டே இருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் இன்றும் நிகழ்ந்தது.

இன்று பதினோராம் சி வகுப்பு நோட்டு திருத்திக் கொண்டிருந்தேன். ஒரு குழந்தை அளவிற்கு அதிகமான எழுத்துப் பிழைகளோடு எழுதியிருக்கவே அவளை அழைத்துப் பேசலாம் என்று தோன்றியது. யாராயிருக்கும் என்பதை அறிய முதல் பக்கத்தைத் திருப்பினேன்.

priyaha என்றிருந்தது.

இன்றைக்கு அந்த வகுப்பில் பாடமெடுத்து முடிந்ததும் அந்த நோட்டைக் காட்டி யாருடைய நோட்டு இது என்றேன்.

ஒரு குழந்தை எழுந்து நின்றாள். அழைத்து நோட்டைக் கொடுத்துவிட்டு ஆசிரியர் அறையில் என்னை வந்து பார்க்கச் சொன்னேன்.

வந்தாள்.

”பெயரென்னப்பா?”

”பிரியங்கா”

“நோட்டில் என்ன எழுதியிருக்க பாரு” என்றதும் பார்த்துட்டு சரியாகவே எழுதியிருப்பதாகச் சொன்னாள்.

சரி உன் பெயருக்கு ஸ்பெல்லிங் சொல்லு என்றால் piriyaha என்கிறாள்.

”இப்படித்தான் எப்பவும் எழுதுவியா?”

“ ஆமாம் சார்”

பயந்து போனவனாய் அலுவலகம் சென்று அவளது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை எடுத்துப் பார்த்தால் piriyanga என்றிருந்தது.

அவளது பெயரை அவளுக்கு எழுதச் சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

அவள் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 50 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்.

மூன்றாம் தரத்தில் பேசுபவரிடம் இது போனால் “ பாரு பேரே எழுதத் தெரியவில்லை. இதல்லாம் பதினொன்னாங்கிளாசு படிக்குது. வெளங்குன மாதிரிதான்” என்று சொல்லக் கூடும்.

பெயரையே எழுதக் கற்றுக் கொள்ளாமல் கூட ஒரு குழந்தையால் பத்தாம் வகுப்பைக் கடந்து வந்துவிட முடியும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையின் தகப்பன் என்கிற முறையில் இந்தக் கல்வித் திட்டத்தில் எங்கோ குறை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது ரிசல்ட் வேண்டும் என்று பிழியும் இந்தக் கல்வி அமைப்பு பெயர் எழுதத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை தேர்ச்சி பெறச் செய்துவிட வேண்டும் என்று ஆசிரியரை உந்தித் தள்ளுகிறது.

இந்த அணுகுமுறை மிக மோசமான பின் விளைவுகளை, ஒரு பலவீனமான சமூகத்தைக் கட்டமைக்கும் என்பதால் இது பற்றி எனக்கு கவலையாயிருக்கிறது.

உங்களுக்கு

Tuesday, August 12, 2014

காக்கை ---- இரண்டு கோரிக்கைகள்

                                                                         1

காக்கைச் சிறகினிலே வாசகர்களிடம் உரிமையோடு ஒரு வேண்டுகோளை வைப்பது அவசியம்.

தோழர்களே,

இந்த இதழ் எங்களது தவத்தின் விளைவு.

ஒவ்வொரு மாதக் கடைசியிலும் மரணித்து அடுத்த மாதம் 5 ஆம் தேதி வாக்கில் உயிர்த்தெழுகிறோம். உயிர்த்தெழுவதற்காகவே மரணிக்கிறோம்.

காக்கை நீண்டு பயணிக்க நல்ல படைப்புகளும் சந்தாவும் அவசியம்.

ஒவ்வொருவரும் தத்தமது மாவட்டத்திலுள்ள படைப்பாளிகளை காக்கைக்கும், காக்கையை அவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.

உங்கள் மாவட்டத்திலிருந்து ஒரு பத்து சந்தாக்களையாவது சேகரித்து உதவுங்கள்.

மாவட்டம் மாவட்டமாக வாசகர் கூட்டம் நடத்த ஆசை.

எங்கிருந்து தொடங்கலாம்?


                                                                            2

தோழர்களே,

நேற்று “காக்கைச் சிறகினிலே” இதழுக்காக அணுகியிருந்தேன்.நிறைய நண்பர்கள் விளக்கம் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கான விவரங்கள் கீழே ஒவ்வொன்றாய்...

அதற்கிடையில் சில இனிப்பான செய்திகள். வாசகர் கூட்டங்களை நடத்த இயலுமா என்று கேட்டிருந்தேன்.

ஏற்கனவே என்னிடம் ஆகஸ்ட் 17 நாளினை வாங்கியிருந்த இரா. பூபாலன் அதை காக்கை அறிமுகத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார். அவருக்கும் அம்சப் பிரியாவிற்கும் நன்றி.

தோழர் Mani Rathnam திருநெல்வேலியில் ஏற்பாடு செய்ய முயல்வதாக சொல்லியுள்ளார். இயலுமெனில் திருநெல்வேலி தோழர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும். அவரது தொடர்பெண் 9788096216

தோழர் Madurai Saravanan மதுரையில் நடத்தலாம் என்று சொல்லியுள்ளார்

பெரம்பலூர் குறித்து தோழர் ப. செல்வகுமார் என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும்.

இவை எல்லாம் சாத்தியப் பட்டால் காக்கைச் சிறகினிலே விரிந்து பறக்கும்.

எல்லா ஊர்களிலும் பாரதி புத்தகாலயம் மற்றும் என்.சி.பி.ஹெச் இல் கிடைக்கும்.

ஆண்டு சந்தா 275 ரூபாய்

மேலதிக விவரங்களுக்கு தோழர் முத்தையாவைத் தொடர்பு கொள்ளுங்கள்.அவரது எண் 9841457503

முகவரி

காக்கை
288, டசக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை 600005

எதற்கும் எனது எண் 9842459759

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...