சிலியில் உள்ள
செம்புச்சுரங்களுல் மரிய எலேனாவும் ஒன்று. அங்குள்ள சுரங்கத் தொழிலாளிகளை சந்திப்பதற்காக
பாப்லோ நெரூடா ஒருமுறை அங்கு செல்கிறார். காலப் போக்கில் பலமுறை அங்கு அவர் சென்றிருந்தாலும்
அதுதான் அந்த ஊருக்கான அவரது முதல் பயணம்.
தொழிலாளிகளின்
அன்புப் பெருவெள்ளத்தில் திக்கு முக்காடித்தான் போனார் அவர். அவரை நன்கு அறிந்து வைத்திருந்தனர்
அவர்கள். ஒரு சந்திலிருந்து வெளிப்பட்ட ஒரு தொழிலாளி எண்ணெயும், அமிலமும், சேறும் கலந்திருந்த
தனது கையை நீட்டியவாறே “உங்களை எனக்கு ஏற்கனவே தெரியும் சகோதரா. உங்களை வாசித்திருக்கிறேன்”
என்கிறார். எந்தவித அசூசையும் இன்றி வாஞ்சையோடு அந்த மனிதனோடு கைகுலுக்கியவாறே மறு
கையால் அவனை அணைத்துக் கொள்கிறார். அந்த அணைப்பின் கதகதப்பில் இருவரும் மட்டுமல்ல கூட
இருந்த அனைவருமே நெகிழ்ந்து போகிறார்கள்.
.“நான் ஏராளமாக
இலக்கியப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். வண்ணத்துப் பூச்சியைப் போல் அற்ப ஆயுளைக் கொண்டவை
அவை. ஆனால் நான் சம்பாத்யம் செதிருக்கிற பரிசு மகத்தானது.
எனக்குரிய பரிசு
என்னுடைய வாழ்க்கையின் சில அரிய நிமிடங்கள்தான். அதாவது லோட்பாவின் பாதாளத்திலிருந்து,
நைட்ரேட் சுரங்கத்திலிருந்து அல்லது ஏதோ ஒரு செம்புச் சுரங்கத்திலிருந்து முழங்காலில்
ஊர்ந்தவாறே மேலே வந்து விகாரமான முகமும், பம்பாசின் வாடையுமாக ஒவ்வொருவராக தங்களது
உலோகத் தண்டு போன்ற கரங்களை நீட்டி உங்களை எங்களுக்கு முன்னரே தெரியும் சகோதரா என்று
கூறும் அரிய நிமிடங்கள்”
என்று பிறகொரு
சமயத்தில் இதுகுறித்து நெரூடா நெக்குருகி எழுதியிருக்கிறார்.
சுரங்கத் தொழிலாளிகளுடனான
நெரூடாவின் உறவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. அவர்களை தனது மக்களாக நெரூடாவும்,
அவரைத் தங்களது கவியாக அவர்களும் அங்கீகரித்து கொண்டாடினார்கள்.
பேசிக்கொண்டே நகர்ந்த
தொழிலாளிகள் ஒரு வீட்டினுள்ளே நெரூடாவை அழைத்துப் போனார்கள். மக்கள் அதில் குடியிருந்தார்கள்
என்கிற ஒரே காரணத்தைத் தாண்டி அதை வீடென சொல்வதற்கு எதுவுமில்லை. அழுக்கும் இருளும்
அப்பிக் கிடந்த அந்த அறையினுள் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதே உலக அதிசயங்களில் முதலாவது
அதிசயமாகும்.
அந்த அறையில் அமிலமும்,
எண்ணெயும், தண்ணீருமாக ஒரு சேற்றுக் கலவையாக இருந்தது. அந்தச் சேற்றுக் கலவையில் பலகைகள்
போடப் பட்டிருந்தன. கீழே விழாமல் நடப்பதற்கே மிகுந்த கவனம் தேவைப் பட்ட அந்த இடம் நெரூடாவிற்கு
அதிர்ச்சியைத் தரவே, “ ஏன் இந்த வீடு இப்படி இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார்.
அந்த வீடு மட்டுமல்ல அங்குள்ள எல்லா வீடுகளுமே அப்படித்தான் என்று வந்த பதில் அதிர்ச்சியின்
உச்சத்திற்கே நெரூடாவை கொண்டு போனது.
“ ஏன் உலர்தளம்
அமைத்துக்கொள்ளக் கூடாது? “ என்ற நெருடாவின் அப்பாவித் தனமான கேள்விக்கு உலர்தரை அமைப்பதற்கான
உரிமை தங்களுக்கு இல்லை என்று சொன்னார்கள். மட்டுமல்ல, இப்படி பலகை போடுகிற உரிமைக்காகக்கூட
எட்டு ஆண்டுகள் தாங்கள் போராட வேண்டியிருந்தது என்றும், ஏழு தலைவர்களை பலிகொடுத்துதான்
இந்த ஈர சேற்றுத் தரைகளில் பலகை போட்டு வாழ்வதற்கான உரிமை தங்களுக்கு கிடைத்தது என்றும்
அவர்கள் சொன்னபோது நெரூடா அழுதானோ என்னமோ எனக்குத் தெரியாது. ஆனால் இதை வாசிக்க நேர்ந்தபோது
நான் அழுதேன்.
ஈரத் தரையில்தான்
குடும்பம் நடத்த வேண்டும் என்ற நடைமுறையை மாற்றவே சுரங்கத் தொழிலாளிகள் எட்டு ஆண்டுகாலம்
போராடி ஏழு தலைவர்களை இழக்கவேண்டிய நிலை இருந்தது என்பதை ஜீரணிக்கவே நான் படாதபாடு
பட வேண்டியிருந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட உலர்தரை அமைத்துக் கொள்ளும் அனுமதியைத்
தராத அந்த சமூகத்தை எந்த மொழியில் எப்படி சபிப்பது என்று கொதித்து குழம்பிப் போயிருந்தேன்.
எந்த வேலையினும்
சுரங்கத் தொழில் ஆபத்தானது என்பது என் கணிப்பு. எந்த நிமிடமும் மண் சரிந்தோ, பேய்மழை
நீரில் மூழ்கியோ மரணிக்கும் ஆபத்து இங்கு அதிகம். தோல் வியாதி உள்ளிட்ட நோய்களின் தாக்குதலுக்கு
அடிக்கடி இரையாகும் மனிதர்கள். இத்தகைய தொழிலாளர்களை சுரண்டுவது என்பது ஈனத்தனமான கொடுமை
என்றால் இப்படி உலர்ந்த தரையில்கூட வசிப்பதற்கு அனுமதி மறுப்பது என்பது கொடுமையின்
உச்சம்.
இதை AITUC அமைப்பின்
மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான தோழர் மூர்த்தி
அவர்களிடம் நெய்வேலிப் பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சொன்னேன். அப்போது அவர்
சொன்னது என்னை அதிர்ச்சியின் எல்லை தாண்டி தூக்கிக் கிடாசியது.
நெய்வேலி லிக்னைட்
கார்ப்பரேஷன் ஒப்பந்தத் தொழிலாளர்களது துயரமும் இதற்கு கொஞ்சமும் குறையாதது என்றார்.
நெய்வேலி ஒப்பந்தத்
தொழிலாளர்கள் தினமும் 370 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அந்தக்
கூலியை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும், ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தரப் படுத்த
வேண்டும் என்பதற்காகவும் போராடி வருகிறார்கள். பேச்சு வார்த்தையில் 370 ரூபாய் என்பதிலிருந்து
480 ரூபாய் என்கிற அளவிற்கு கூலி உயர்த்தப் பட்டிருக்கிறது.
இப்படியான பொதுப்
புரிதலுக்கு அப்பால் நமக்கு அவர்களது வேறெந்த வலியும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏதோ 110 ரூபாய்
அளவிற்கு உயர்வு ஏற்பட்டதாக பாய்ச்சப் பட்ட ஊடக வெளிச்சத்தில் அந்த 110 ரூபாய் உயர்வு
என்பது இப்போது 55 ரூபாயும் அடுத்த ஆண்டு 55 ரூபாயும்தான் என்கிற உண்மையின் வெளிச்சம்
மங்கிப் போனது.
ஒப்பந்தத் தொலிலாளி
என்பவர் யார்?
இந்தக் கேள்விக்கு
பதில் சொல்ல நாம் சிரமப் படத் தேவையே இல்லை. வங்கியில், தோல் பிளாசாக்களில், ஆலைகளில்,
நிறுவனக்களில், தொழிற்சாலைகளில் என்று எல்லா இடங்களிலும் இன்று ஒப்பந்தத் தொலிலாளிகள்
நிறைந்து கிடக்கிறார்கள். இவர்கள் இவர்கள் வேலை பார்க்கும் தளத்தின் நிரந்தரத் தொலிலாளிகள்
என்ன வேலை செய்கிறார்களோ அதே வேலையைத்தான் செய்வார்கள். இன்னும் சொல்லப் போனால் பல
இடங்களில் நிரந்தர ஊழியர்களை விட அதிக நேரம் உழைப்பார்கள். ஆனால் நிரந்தரத் தொழிலாளி
வாங்கும் ஊதியத்தில் கால் பங்கிற்கும் குறைவான சம்பளத்தையே வாங்குவார்கள். பணிப் பாதுகாப்பென்பது
இவர்களுக்கு அறவே கிடையாது. ஒரே தொழிற்சாலை, ஒரே வேலை. ஆனால் இரு ஊழியர்களுக்கு இருவிதமான
ஊதியம்.
இது எப்படி?
இப்போதுதான் நாம்
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வேலை ஒன்றுதான். நிறுவனமோ, வங்கியோ, தொழிற்சாலையோ
இடமும் ஒன்றுதான். இது கடந்து ஒரு நுணுக்கமான அமைப்பு ஒரே இடத்தில் ஒரே வேலையைப் பார்க்கும்
தொழிலாளிடையே மலைக்கும் துகளுக்குமான வேறுபாட்டைக் கொண்டு வருகிறது.
இருவர் செய்யும்
வேலையும் ஒரே முதலாளியினுடையதுதான். ஆனால் இருவருக்கும் அவரே முதலாளியல்ல. நிரந்ததரத்
தொழிலாளி அவரது ஊழியர். ஒப்பந்தத் தொழிலாளி அவரது வேலையை செய்து தரும் இன்னொரு முதலாளியின்
ஊழியர். தலையே சுற்றும்தான். ஆனாலும் அதுதான் உண்மை.
உதாரணமாக ஒரு நிறுவனம்
சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 10000 தொழிலாளிகள்
தேவைப் படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 1000 தொழிலாளிகளை அந்த நிறுவனம் நேரடியாக
வேலைக்கு அமர்த்தும். மீதமிருக்கும் 9000 ஊழியர்களை தரகர்கள் மூலம் நியமிக்கும்.
நிரந்தரத் தொலிலாளிக்கு
25000 ரூபாய் சம்பளம் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். மிச்சம் உள்ள ஊழியர்களை நியமித்து
பணியினை செய்து தருவதற்காக அது தரகர்களை நியமிக்கும். அந்தத் தரகர்களிடம் ஒரு ஊழியருக்கு
10000 ரூபாய் என்கிற அளவில் ஊதியத்தைக் கணக்கிட்டு கொடுத்துவிடும். இந்த ரூபாய்க் கணக்கு
தோராயமானதுதான். 25000 ரூபாய் அவர்களுக்கு என்றால் இவர்களுக்கு இவ்வளவு குறைவாகப் போகும்
என்பதை சொல்லவே இது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது அந்தத்
தரகர்கள் வாங்கிய 10000 ரூபாயில் 5000 ரூபாயை தாங்கள் வைத்துக் கொண்டு மீதமிருக்கிற
5000 ரூபாயை தொழிலாளிக்கு வழங்குவார்கள். இங்கும் இது கொஞ்சம் குறைவதற்கும் சில நேரம்
கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்தத் தொழிலாளிகளை கொத்தடிமைகள் என்று சொல்லிவிட முடியாது
என்றாலும் அப்படி சொல்லாமல் இருக்கவும் முடியாது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இருக்கும்
எந்த உரிமையும் சலுகைகளும் இவர்களுக்கு இருக்காது.
இதே வித்தையைத்தான்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் செய்தது. போனஸ் இல்லை என்றது. ஊழியர்களின் பணிக்கு
உத்திரவாதம் இல்லை என்றது. மருத்துவ சிகிச்சைக்கான நிரந்தரத் தொழிலாளுக்குண்டான சலுகை
இவர்களுக்கு இல்லை என்றது.
இவ்வளவு ஏன்? நிரந்தரதொழிலாளிக்கு
ஒரு சாப்பாடு ஒப்பந்தத் தொழிலாளிக்கு ஒரு சாப்பாடு என்று கேண்டீனில் போட்டது.
நெய்வேலி சுரங்கத்
தொழிலாள்களின் வலியை இந்த அளவிற்கு மட்டுமே உணர்ந்திருதேன். இவையே என்னைத் தூங்க விடாமல்
குத்திக் குடைவதற்கு போதுமானதாக இருந்தது.
ஆனால் தோழர் மூர்த்தியோடான
அந்த அலைபேசி உரையாடல் இவர்களுக்கிழைக்கப் பட்டுள்ள கொடூரமான அநீதி ஒன்றினை எனக்கு
சொன்னது.
மரிய எலேனா சுரங்கத்
தொழிலாளிகளுக்கு நேர்ந்த கொடுமையைவிட இது கொடூரமானதாய் இருக்கிறது.
நெய்வேலி சுரங்கத்தில்
வேலைபார்க்கும் ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு குடிசையோ ஆஸ்பெஸ்டாஸ் கூரையோடோ வீடுமாதிரி
ஒன்றை அமத்துக் கொள்ள நிர்வாகம் இடம் கொடுத்திருக்கிறது. தொழிலாளிகளும் வீடுமாதிரி
ஏதோ கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்லதுதானே? இதில்
என்ன குறை இருக்கிறது? வசிப்பதற்கு கட்டிக்கொள்ள இடம் கொடுத்தது குற்றமா? இப்படி அடுக்கடுக்காய்
கேள்விகள் வரக்கூடும்தான்.
இடம் கொடுத்ததெல்லாம்
சரிதான். ஆனால் அதற்குள் கிடக்கும் ஒரு நிபந்தனைதான் கொடூரமானது. அந்தத் தொழிலாளிகள்
அவர்கள் கட்டியிருக்கும் குடிசைகளுக்கு மின் இணைப்பு உரிமை மறுக்கப் பட்டுள்ளது. அதற்கான
காரணம் சிறு பிள்ளைக்கும் புரிகிறமாதிரி எளிதானதுதான். மின் இணைப்பு பெற்றுவிட்டால்
ரசீது அவர்கள் பெயரில் வந்துவிடும். பிறகு அந்த ரசீதுகளைப் பயன்படுத்தி தொழிலாளிகள்
இடத்தை தங்களுடையது என்று உரிமை கோரிவிடுவார்களோ என்ற கவனம்தான்.
உலகத்திற்கே மின்சாரம்
வழங்கக் கூடிய நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய தொழிலாளிகளின் வீடுகளில் அரிக்கேன் விளக்கென்றால்
எங்கு போய் முட்டிக் கொள்வது?
நம் மண்ணில் நிலமை
இப்படி இருக்க, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கங்கள் நட்டத்தில் இயங்குவதைப் பார்த்து
நமது பிரதமர் சரிவிலிருந்து அவற்றை மீட்டெடுத்து சீராக்க நட்புக் கரம் நீட்டுவதாக செய்திகள்
வந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில்
குயின்லேண்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கமானது மிக மோசமான அளவு நட்டத்தைச்
சந்தித்ததால் ஏறத்தாழ 4000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சரிவிலிருந்து
தொழிலை மீண்டெழச் செய்வதற்காக குயின்லேண்டில் கௌதம் அதானி அவர்களுக்கு சுரங்கம் அமைக்கும்
உரிமையை ஆஸ்திரேலிய அரசு தந்துள்ளது. இது மட்டுமல்ல. நிலக்கரிச் சுரங்கம் அமையும் இடத்திலிருந்து
ஏறத்தாழ 400 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் உரிமையையும் அதானி அவர்களுக்கே
ஆஸ்திரேலிய அரசாங்கம் அளித்திருக்கிறது.
இதற்கு ஒரு பில்லியன்
அமெரிக்க டாலர் அளவிற்கான தொகையை பாரத ஸ்டேட் வங்கி அதானி அவர்களுக்கு கடனாக வழங்க
முன் வந்துள்ளது. இந்தக் காரியங்கள் அனைத்திலும் பாரதப் பிரதமர் மாண்பமை மோடி அவர்களின்
உதவி வெளிப்படையாகவே இருப்பதாக பத்திரிக்கைகள் சொல்கின்றன. இது உண்மை எனும் பட்சத்தில்
நமக்கு இயல்பாகவே சில அய்யங்கள் எழுவது இயற்கைதான்.
1) உள்ளூர்
சுரங்கங்களில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது பிரதமர் அவர்கள் ஆஸ்திரேலியா மண்ணின்
சுரங்கத் தொழில் சரிவை இவ்வளவு செலவு செய்து சரிகட்ட துடிப்பது ஏன்?
2) பிரதமர்
அவர்களது தேர்தல் நேரத்து பயணச் செலவுகளை திரு அதானி அவர்கள்தான் கவனித்துக் கொண்டார்
என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக பத்திரிக்கைகளால் சொல்லப்படுகிற நிலையில் இவ்வளவு
வெளிப்படையான உதவி பிரதமரிடமிருந்து தேவைதானா?
3) பாரத
ஸ்டேட் வங்கிதான் இந்த கடனைத் தருகிறது என்பது உண்மை எனும் பட்சத்தில் அவ்வளவு பெரிய
கடனை ஒரே நாளில் அனுமதித்தது?
4) ஆஸ்திரேலியாவில்
நிலக்கரிச் சுரங்கத் தொழில் அவ்வளவு லாபகரமானது அல்ல என்று ஊடகங்கள் சொல்லும் செய்தி
உண்மை எனில் மிகப் பெரிய நட்டம் அதானி அவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புண்டே. அப்படி
நிகழும் பட்சத்தில் வங்கி கடனைத் திரும்பப் பெருவதில் ஏராளமாய் சிக்கல் எழுமே.
5) அப்படி
நிகழும் பட்சத்தில் வங்கியில் இருந்த மக்களின் சேமிப்பை பாதிக்குமே.
6) அப்படித்தான்
எனில் அது மக்களைப் பாதிக்குமே.
அதனால்தான் இவ்வளவு
நீட்டிக் கேட்க வேண்டியதாயிற்று.
////உலகத்திற்கே மின்சாரம் வழங்கக் கூடிய நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய தொழிலாளிகளின் வீடுகளில் அரிக்கேன் விளக்கு///
ReplyDeleteகொடுமை தோழர்
தம 3
மிக்க நன்றி தோழர்
Delete//உலகத்திற்கே மின்சாரம் வழங்கக் கூடிய நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய தொழிலாளிகளின் வீடுகளில் அரிக்கேன் விளக்கென்றால் எங்கு போய் முட்டிக் கொள்வது?//
ReplyDeleteநெருடாவில் ஆரம்பித்து நெய்வேலியில் இறங்கி ஆஸ்திரேலியாவை அசைக்கும் பதிவு ... அசையவேண்டியவர்கள் அசைந்தார்களோ என்னவோ நான் நடுங்கிப் போனேன்...
மிக்க நன்றி தோழர்
Deleteவலி ...தரும் பதிவு .சக மனிதனின் வேதனைகளை உணர வைக்கின்றது...
ReplyDeleteமிக்க நன்றி கீதா
Delete