Thursday, June 17, 2010

(கல்கி துணை ஆசிரியர் திரு கதிர் பாரதி அவர்கள் "காற்று வரும் பருவம் " என்ற நாவலை விமர்சனம் செய்ய வேண்டி அனுப்பியிருந்தார். விமர்சனம் 20.06.2010 "கல்கி" இல் வந்திருந்தது. நல்ல நாவல் குறித்த தேடல் உள்ளவர்களுக்கு இந்த புதினத்தை சிபாரிசு செய்கிறேன்)
................................................................................................................................................................
காற்று வரும் பருவம்


"ருசி என்பது பண்டத்தில் மட்டுமல்ல ருசிக்கும் நாக்கின் தன்மையிலும்தானே இருக்கிறது" என்கிறார் பாரதி பாலன் முன்னுரையில். படைப்பாளி மற்றும் படைப்போடு வாசகனும் சேர்ந்தே ஒரு படைப்பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறான் என்கிற சரியான புரிதலோடுதான் இந்த புதினத்தை அவர் நெய்திருக்கிறார். வாசிக்கும் ஒவ்வொருவரும் புதினத்தில் வரும் ஏதோ ஒரு பாத்திரத்தோடு பொருந்திப் போவதே இதன் விளைவுதான்.

கிராமத்தின் அழகை, வனப்பை, வளத்தை, சாதியை, காதலை, மேன்மையை, இழிவை, எள்ளலை, ஆணாதிக்கத்தை, பாமர சனங்களின் பகடியை,அன்பை, வன்மத்தை, உழைப்பை, சுரண்டலை கொஞ்சமும் மிகையின்றி உள்ளது உள்ளபடி போகிற போக்கில் பதிந்து செல்கிறார் பாரதிபாலன்.

இந்தப் புதினத்தின் மையம் எதை சுற்றி?

கோவிந்து பஞ்சவர்ணம் காதலை சுற்றியா? குடியானத் தெருவுக்கும் வடக்குத் தெருவுக்கும் இடையே பேயாட்டம் போடும் சாதி மோதலை சுற்றியா? என்றால் இந்தப் புதினம் தனித்த எது குறித்தும் பேசவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் சீலையம்பட்டி கிராமத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க முடிகிறது.

கொல்லப்பட்ட கோவிந்துவின் அண்ணன் ஜெயபாலின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டபோது "எவன் அடிச்சானோ அவன சங்க நெறிச்சு கொல்லுங்கப்பா. நா கண்ணுல கண்டேன் வெளெக்க மாத்துக் கட்டையக் கொண்டே அவன கொண்டு போடுவேன்" என்று கொந்தளித்துப் பொங்கிய முத்தம்மாவை

" ஏ முத்தம்மா நீ சித்த சும்மா இருடி. ஆம்பளையாளுக பேசிக்கட்டும்" என்று அடக்கிய குரலில் மட்டுமல்ல, "நம்ம ஊர்ல ஆம்பளை ஆளுகளும் இருக்காங்களாக்கும்" என்ற முத்தம்மாவின் பதிலும்கூட கிராமத்து ஆணாதிக்கத்தின் முகவரிதான் என்றால் சாமத்தில் வேலியின் ரகசிய சந்து வழி நுழைந்து கத்தரி வயல் கடந்து பஞ்சுவை சந்திக்கும் கோவிந்து

"ஒன்னிய தனியாவா வுட்டுட்டு போயிட்டாங்க?"

"ஆம்பளைத் துணை வெச்சிட்டுத்தேன்"

"யாரு?"

"எந்தம்பியத்தேன்"

அந்த ஆம்பளைத் துணை குப்புறக் கிடந்தது. ஒரு கால் பாய் விரிப்பிலும் மறு கால் தரையிலுமாக தவளை மாதிரிக் கிடந்தது என்று பதிகிற இடம் ஆணாதிக்கம் குறித்த எள்ளளின் உச்சம்.

"மண்ட கொல்லப் பக்கமா வா சாப்ட்டுட்டு போவ" (பக்கம் 58) என்று கோவிந்துவின் அம்மா அவரை அழைப்பது கிராமத்து சாதியத்தை தோலுரித்து சொல்லும்.

"இந்த மழைக்கு அரிசி கஞ்சி காச்சி குடிக்கலாமுண்டு ஒரு ஆசைங்கைய்யா" என்று மண்வெட்டியான் கோவிந்துவிடம் சொல்லுமிடம் கிராமத்து உழைக்கும் திரளுக்கு குருனைக் கஞ்சியே எவ்வளவு பெரிய கனவாக உள்ளது என்பதை பிரச்சார நெடி துளியுமில்லாது பிரச்சாரம் செய்யும் இடம்.

"தூண்டிகள் சாம்பலாவதில்லை
திரிகள்தான்"

என்பது மாதிரி மேத்தா எழுதியதாக ஞாபகம். இதை நன்கு உணர்ந்த நல்லவர்கள் குடியானத் தெருவிலும் வடக்குத் தெருவிலும் இருக்கவே செய்கிறார்கள் என்பது எல்லா கிராமங்களிலும் விரவி கிடக்கும் எதார்த்தம்.

எவனோ உசுப்பி விட நரம்பு புடைத்து யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையோ செய்துவிட்டு நாயாய் பேயாய் பொளப்பைக் கெடுத்துக் கொண்டு நீதி மன்றம் அலையும் இளைஞர்களை நிறைய ஊர்களில் பார்க்க முடியும்.

"இந்த நாவலை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்கவில்லை, முடிவும் அப்படித்தான்" என்கிறார் பாரதிபாலன் .

ஆனால் சரியான இடத்தில் தொடங்கி சரியாய் முடித்திருக்கிறார்.

வெளியீடு
புதுமைப் பித்தன் பதிப்பகம்
சென்னை 83
044--24896979

Thursday, June 10, 2010

முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்


இறங்கினேன் என்று சொன்னால் அது பொய். விழாத லாட்டரி சீட்டினை கசக்கி எறிவது மாதிரி சக பயணிகள் என்னை கீழே எறிந்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். சட்டையை கழற்றிப் பிழிந்தால் இரண்டு குவளை தேறும். அது தந்த எரிச்சலோடுதான் இரண்டு சக்கர வாகனத்தை எடுக்க கிளம்பினேன்.
தலைக் கவசத்தை அணியப் போன நேரம் அலை பேசி யுகமாயினி சித்தன் என்று எழுதிக் காட்டி செல்லமாய் சிணுங்கியது.

"அது வந்து ரெண்டு விஷயம் எட்வின், ஒன்னு, நீங்க கல்கிக்கு அனுப்பியுள்ள காற்று வரும் பருவம் நாவல் விமர்சனத்த விரிவாக்கி எனக்கு அனுப்பிடுங்க. அத இந்த மாசம் வச்சுடுவோம். ரெண்டு, செந்தமிழனோட வலை தளத்த மெயில்ல இணைச்சிருக்கேன் . ரொம்ப நல்லா செய்றார். அவர் யாரு தெரியுமா? தோழர் மணியரசனோட பையன். அதுல ஒன்ன இந்த மாசம் வச்சுடலாம். அதுல இன்னொரு விஷயம் இருக்கு. அதப் பாத்துட்டு அதப் பத்தி கொஞ்சம் காலைல அவசியம் பேசுங்க."

கனிவென்றும் கொள்ளலாம், கட்டளையென்றும் கொள்ளலாம், இரண்டின் கலவையாகவும் கொள்ளலாம். இதுதான் சித்தன்.

தேவையான விஷயங்களை ஒன்று ஒன்றாய் கடகட வென்று சொல்லி முடித்து விட்டு சட்டென துண்டித்து விடும் வித்தையை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். "ஏதோ சொல்ல வந்தேன். சட்டென வர மாட்டேங்குது. மறந்து போச்சு," என்பதெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. தேவைக்கு மேல் ஒரு வார்த்தை இருக்காது. பேசுவதற்கு முன் மனுஷன் ஒத்திகை பார்த்துவிட்டு வருவாரோ என்றுகூட எண்ணுவதுண்டு.
செம்மொழி மாநாட்டிற்குள் இதழைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதால் அவர் சுமக்கும் பளுவின் சுமை அறிந்தவன் என்பதால் இரண்டு வேலைகளையும் அன்றிரவே முடித்துவிடுவது என்று தீர்மானித்தேன்.

இணையத்திற்குள் நுழைந்து அவர் அனுப்பியிருந்த வலையைத் திறந்தேன். "காட்சி" என்ற தனது வலையை மிகுந்த கவனத்தோடும் அழகுணர்வோடும் வடிவைமைத்திருந்தார். நாமும்தான் வைத்திருக்கிறோம் வலையை. எப்படி மற்றவர்கள் பார்க்க வருவார்கள் என்று என்னை நானே நொந்து கொண்டே உள்ளே போனேன். "அது ஒரு பெரிய விஷயமே இல்ல எட்வின், அரை மணி நேரத்துல முடிச்சுடலாம்" என்று சொன்ன சித்தனுக்கும் இன்னும் நேரம் வாய்க்க வில்லை. நானும் அதற்கப்பறம் அது பற்றி பேசவே இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். சரி விடுங்கள். அதற்கெல்லாம் ஒரு அக்கறை வேண்டும்.

" கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தாரா?" என்ற செந்தமிழனது பதிவைப் பார்த்ததும் அப்படியே மிரண்டு போனேன். தாத்தா பாட்டிகளின் வடிவில் கடவுள்களை கண்டுணர இயலாத நமது அறியாமையை, கீழ்மையை குழந்தைகளின் தளம் நின்று குழந்தைகளின் மொழி கொண்டு நச்சென்று நெய்திருந்தார்.

"திண்ணையிலிருந்த தாத்தா
வீட்டிற்குள் வந்தார்
படமாக"
என்ற சேது மாதவனின் கவிதையையும் இந்தப் பதிவு என் அசைக்கு கொண்டு வந்தது.
எனது மிரட்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவரது "கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தாரா?" என்ற இந்தக் கட்டுரையையும் எனது "சாமிக்கு சயின்ஸ் தெரியாது" என்ற கட்டுரையையும் இருவரது பெயரையும் போடாமல் சுற்றுக்கு விட்டால் இரண்டையுமே அவர் எழுதியதாக அவரது நண்பர்களும் நான் எழுதியதாக எனது நண்பர்களும் சத்தியமே செய்யக் கூடும்.

குழந்தைகளுக்கான வெளியும் மொழியும் எங்கள் இருவருக்கும் மிக நெருக்கமாய் வருகிறது.

" உளுந்து சாகுபடிக் காரனின் சாபம்" கட்டுரையை வாசித்தால் நேர்மையுள்ள யாராலும் வேறு எதற்கும் சட்டென கடந்துவிட முடியாது. உளுந்துப் பண்டங்கள் எதைத் தின்னும் போதும் உளுந்து சாகுபடியாளர்களின் வியர்வையும் செந்தமிழன் முகமும் நம்மை சபித்துக் கொண்டே இருக்கும். " உளுந்தின் நிறம் கருப்பு. உங்கள் வீட்டிற்கு வரும் போது தோல் உரிக்கப் பட்டிருக்கும்" என்று முடித்திருப்பார். அது குறித்து நிறையப் பேச வேண்டும்தான். அந்தக் கட்டுரையே "யுகமாயினி" ஜூலை இதழில் வருகிறது. அவசியம் வாசியுங்கள்.

செந்தமிழனைக் கடந்து போகும் தெம்பற்றவனானேன். சரி, விஷ்ணுபுரம் சரவணனோடு பேசலாம் என்று பார்த்தால் அவர் ஒரு இழவு வீட்டில் இருந்தார்.

மனம் போன போக்கில் எலி கொண்டு வலையோடு விளையாடிக் கொண்டிருந்தேன். எலி என்னை இழுத்துக் கொண்டுபோய் மாதவராஜின் "தீராத பக்கங்கள்" வலையில் தள்ளியது. வலையுலகை ரொம்பவும் வெப்பப் படுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை கண்ணில் பட்டது. பதிவுலகை கொந்தளிக்கச் செய்த அந்த பிரச்சினை குறித்த அரிச்சுவடிகூட தெரியாமல் இருந்திருக்கிறேன் பாருங்கள். இன்னும் கொஞ்சம் உன்னிப்பாய் கவனிக்க வேண்டுமென்று உறுதியேற்றேன்.

பதிவர் நர்சிம் தனது வலையில் தோழர் சந்தன முல்லைபற்றி ஆணாதிக்கத் திமிரோடு பதிந்தது பற்றியும், அது குறித்து நீண்ட விவாதங்கள் நடந்தது பற்றியும், இறுதியாய் நர்சிம் முல்லையின் கணவர் தோழர்.முகிலிடம் மன்னிப்பு கேட்டது பற்றியும், முல்லையிடமே அதை கேட்பதுதான் சரி என்று மாதவராஜ் ஆலோசனைத்திருந்ததையும் அறிய முடிந்தது.
இது ஓராண்டாகவே நீண்டு வருவதாக படுவதாலும் முல்லை எங்கு என்ன பின்னூட்டமிட்டார் என்பதும் தெரியாமல் நர்சிம் என்ன எழுதினார் என்பதும் தெரியாமல் அபிப்பிராயம் சொல்லக் கூடாது. தப்பித்தல் முயற்சியல்ல இது. சாராக் கொள்கையோடு நமக்கென்றும் உடன்பாடில்லை. யாவரும் நமக்கு கேளிருமல்ல. உழைப்பவனும் யோக்கியனும் மட்டுமே நமக்கு உறவாக முடியும்.

இந்த நேரத்தில் முல்லையின் வலை கிடைதது. "பூக்காரிகளுக்கும் தன் மானம் உண்டு" என்ற தனது பதிவில் (பூக்காரி என்ற புனைவில்தான் நர்சிம் முல்லையைக் காயப் படுத்தி இருந்தார் என்று சொல்லப் படுகிறது)

"பதிவெழுத முகிலைக் கேட்டு நான் வரவில்லை.முகிலைக் கேட்டு கமெண்ட் போடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

சித்திரக்கூடத்திலும் பதிவுலகிலும் சந்தனமுல்லையாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேனே தவிர முகிலுடைய மனைவியாக அல்ல. நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல. அதைக் குறித்த தெளிவு என்னிடம் இருக்கிறது.

முகிலிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்?

இதன் மூலம் மனைவி, கணவனது சொத்து என்பதே திரும்ப நிறுவப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்த குடும்பத்தில் கணவன் அங்கமே தவிர, கணவன் என்றைக்கும் மனைவியை ரெப்ரசெண்ட் செய்ய முடியாது!

அப்படியே நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், கேட்க வேண்டிய நபர் யாரைப் பற்றி புனைவெழுதி எல்லார் பதிவுகளிலும் ஒரு வருடமாக சீண்டி வருகிறேனென்று கமெண்ட்களிட்டு திரிந்தீர்களோ அவளிடம்.

ஏன், ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க உங்கள் ஈகோ பின்வாங்குகிறதா?"

என்று கொதித்திருந்தார். பிரச்சினை என்னோடு என்கிறபோது அதில் உங்கள் பக்கம் தவறிருப்பதை உணர்ந்தவுடன் என்னிடம் கேட்காமல் மன்னிப்பை என் கணவரிடம் கேட்பதும் கேவலமான ஆணாதிக்கச் சிந்தனையன்றி வேறென்ன என்ற முல்லையின் வாதம் சரியெனப் படவே அந்த அதிகாலை மூன்று மணி வாக்கில் முல்லைக்கு பின்னூட்டமிட்டேன்.

இதில் முல்லையின் கோபம் பிடித்துப் போக இன்னொரு காரணமும் உண்டு.

இப்போது ஆறாவது படிக்கும் கீர்த்திக் குட்டி அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளது தமிழ் புத்தகத்தில் "கீர்த்தனா" என்று தனது பெயரை அழகாக எழுதியிருந்தாள். அதற்கு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ "மக்கு" என பென்சிலால் சேர்த்தேன். ஒன்று "மக்கு கீர்த்தனா" என்றோ அல்லது "கீர்த்தனா மக்கு" என்றோ வந்திருக்க வேண்டும்.

"நானா மக்கு?. நீ மக்கு, உங்க அப்பா மக்கு, உங்க மிஸ் மக்கு, உன்னோட ப்ரண்ட்ஸ் மக்கு" என மெல்ல ஆரம்பித்த புயல் தீவிரமைந்தபோது ஒரே ரணகளமானது வீடு. அவள் கைகளில் போனவை எல்லாம் பறந்தன.அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை. "அழுச்சுக்கலாண்டா" என்று என் அம்மா சமாதானப் படுத்த முயன்றபோது "ஓம் பையன ஸ்கேல்லயே அடிச்சு கொன்னுடுவேன். ஒழுங்கா இருக்க சொல்லு அப்பாயி" என்று தெரிக்கிறாள்.

இறுதியாய் விக்டோரியா வந்து அவளை சமாதானப் படுத்தும் விதமாக என்னைக் கடிந்து கொண்டு "எப்ப பாத்தாலும் நீங்க இப்படித்தான். புள்ளக் கிட்டயே வம்பு பன்னிக்கிட்டு. "என்றபோது அவள் கன்னம் சிவந்திருந்ததை பார்த்தேன் . உடனே சாரி விட்டு இனிப் பாப்பாவ மக்குன்னு சொல்ல மாட்டேன் என்றேன்.

"அப்பாதான் சாரி சொல்லிட்டான்ல. அழுவாதடா செல்லம் என்றவாறு அவளை தூக்கப் போன என் அம்மாவை தள்ளி விட்டு

"லூசாப்பா நீ. என்னதானே மக்குன்ன அப்புறம் ஏன் ஏங்கிட்ட சாரி கேட்காம அம்மாக்கிட்ட சாரி கேக்குற"

அசந்தே போனேன். ஆமாம் மக்கு என அவளை அழைத்தது நான். அவள் காயப்பட்டிருக்கிறாள் என்று உணர்ந்ததும் நான் அவளிடம்தானே சாரி கேட்டிருக்க வேண்டும்.
அப்புறம் அவளிடம் சாரி கேட்டு ஒரு வழியாய் சமாதானம் அடைந்தவுடன் விட்டு ரப்பர் எடுத்து அதை அழிக்கப் போன போதும் அவளுக்கு கோபம் வந்தது. "

நீயா எழுதன ? அப்பாதான எழுத்தனார். அப்ப அப்பாதான அழிக்கனும்"

என் மகளை இந்த மாதிரியான நியாயமான கோவங்களுக்காகவே ரசித்து மதிப்பேன் அல்லது மதித்து ரசிப்பேன்.

அன்று கீர்த்திக் குட்டியிடம் நான் கண்ட கோபத்தின் உச்சத்தைதான் இன்று முல்லையின் கோபத்தில் பார்க்கிறேன்.

இன்றைய முல்லையின் இந்த நியாயமான கோபத்தில் கீர்த்தியின் கோபத்தைக் காண்கிறேன்.

இப்படிக்கூட சொல்லலாம்

முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும்
அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...