Thursday, June 17, 2010

(கல்கி துணை ஆசிரியர் திரு கதிர் பாரதி அவர்கள் "காற்று வரும் பருவம் " என்ற நாவலை விமர்சனம் செய்ய வேண்டி அனுப்பியிருந்தார். விமர்சனம் 20.06.2010 "கல்கி" இல் வந்திருந்தது. நல்ல நாவல் குறித்த தேடல் உள்ளவர்களுக்கு இந்த புதினத்தை சிபாரிசு செய்கிறேன்)
................................................................................................................................................................
காற்று வரும் பருவம்


"ருசி என்பது பண்டத்தில் மட்டுமல்ல ருசிக்கும் நாக்கின் தன்மையிலும்தானே இருக்கிறது" என்கிறார் பாரதி பாலன் முன்னுரையில். படைப்பாளி மற்றும் படைப்போடு வாசகனும் சேர்ந்தே ஒரு படைப்பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறான் என்கிற சரியான புரிதலோடுதான் இந்த புதினத்தை அவர் நெய்திருக்கிறார். வாசிக்கும் ஒவ்வொருவரும் புதினத்தில் வரும் ஏதோ ஒரு பாத்திரத்தோடு பொருந்திப் போவதே இதன் விளைவுதான்.

கிராமத்தின் அழகை, வனப்பை, வளத்தை, சாதியை, காதலை, மேன்மையை, இழிவை, எள்ளலை, ஆணாதிக்கத்தை, பாமர சனங்களின் பகடியை,அன்பை, வன்மத்தை, உழைப்பை, சுரண்டலை கொஞ்சமும் மிகையின்றி உள்ளது உள்ளபடி போகிற போக்கில் பதிந்து செல்கிறார் பாரதிபாலன்.

இந்தப் புதினத்தின் மையம் எதை சுற்றி?

கோவிந்து பஞ்சவர்ணம் காதலை சுற்றியா? குடியானத் தெருவுக்கும் வடக்குத் தெருவுக்கும் இடையே பேயாட்டம் போடும் சாதி மோதலை சுற்றியா? என்றால் இந்தப் புதினம் தனித்த எது குறித்தும் பேசவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் சீலையம்பட்டி கிராமத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க முடிகிறது.

கொல்லப்பட்ட கோவிந்துவின் அண்ணன் ஜெயபாலின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டபோது "எவன் அடிச்சானோ அவன சங்க நெறிச்சு கொல்லுங்கப்பா. நா கண்ணுல கண்டேன் வெளெக்க மாத்துக் கட்டையக் கொண்டே அவன கொண்டு போடுவேன்" என்று கொந்தளித்துப் பொங்கிய முத்தம்மாவை

" ஏ முத்தம்மா நீ சித்த சும்மா இருடி. ஆம்பளையாளுக பேசிக்கட்டும்" என்று அடக்கிய குரலில் மட்டுமல்ல, "நம்ம ஊர்ல ஆம்பளை ஆளுகளும் இருக்காங்களாக்கும்" என்ற முத்தம்மாவின் பதிலும்கூட கிராமத்து ஆணாதிக்கத்தின் முகவரிதான் என்றால் சாமத்தில் வேலியின் ரகசிய சந்து வழி நுழைந்து கத்தரி வயல் கடந்து பஞ்சுவை சந்திக்கும் கோவிந்து

"ஒன்னிய தனியாவா வுட்டுட்டு போயிட்டாங்க?"

"ஆம்பளைத் துணை வெச்சிட்டுத்தேன்"

"யாரு?"

"எந்தம்பியத்தேன்"

அந்த ஆம்பளைத் துணை குப்புறக் கிடந்தது. ஒரு கால் பாய் விரிப்பிலும் மறு கால் தரையிலுமாக தவளை மாதிரிக் கிடந்தது என்று பதிகிற இடம் ஆணாதிக்கம் குறித்த எள்ளளின் உச்சம்.

"மண்ட கொல்லப் பக்கமா வா சாப்ட்டுட்டு போவ" (பக்கம் 58) என்று கோவிந்துவின் அம்மா அவரை அழைப்பது கிராமத்து சாதியத்தை தோலுரித்து சொல்லும்.

"இந்த மழைக்கு அரிசி கஞ்சி காச்சி குடிக்கலாமுண்டு ஒரு ஆசைங்கைய்யா" என்று மண்வெட்டியான் கோவிந்துவிடம் சொல்லுமிடம் கிராமத்து உழைக்கும் திரளுக்கு குருனைக் கஞ்சியே எவ்வளவு பெரிய கனவாக உள்ளது என்பதை பிரச்சார நெடி துளியுமில்லாது பிரச்சாரம் செய்யும் இடம்.

"தூண்டிகள் சாம்பலாவதில்லை
திரிகள்தான்"

என்பது மாதிரி மேத்தா எழுதியதாக ஞாபகம். இதை நன்கு உணர்ந்த நல்லவர்கள் குடியானத் தெருவிலும் வடக்குத் தெருவிலும் இருக்கவே செய்கிறார்கள் என்பது எல்லா கிராமங்களிலும் விரவி கிடக்கும் எதார்த்தம்.

எவனோ உசுப்பி விட நரம்பு புடைத்து யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையோ செய்துவிட்டு நாயாய் பேயாய் பொளப்பைக் கெடுத்துக் கொண்டு நீதி மன்றம் அலையும் இளைஞர்களை நிறைய ஊர்களில் பார்க்க முடியும்.

"இந்த நாவலை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்கவில்லை, முடிவும் அப்படித்தான்" என்கிறார் பாரதிபாலன் .

ஆனால் சரியான இடத்தில் தொடங்கி சரியாய் முடித்திருக்கிறார்.

வெளியீடு
புதுமைப் பித்தன் பதிப்பகம்
சென்னை 83
044--24896979

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...