Thursday, July 10, 2025

கவிதை 017

  மருத்துவம் மட்டும்தான்

படிப்பா ?
இப்படியாகத்தான்
இந்த நூற்றாண்டிற்கான
சூத்திரர்களுக்கான
கல்வி மறுத்தல் தொடரோட்டத்தை
ஆரம்பித்தான்
ஒரு புள்ளியில்
படித்தவன்
பக்கோடா போடலாமே என்றான்
சுதாரித்தோம்
இல்லையெனில்
பக்கோடா போட
படிப்பெதற்கென்று
நகர்ந்திருப்பான்
இப்போது
சூத்திர
கல்விமறுப்பு குச்சி
அறுபதாயிரம்
யானைகளை
ஒரே கப்பலில் ஏற்றியவனின்
கைகளுக்குப் போனது
அவனோ
மாடு மேய்க்கப்
பழகு
சம்பளம் தருவேன் என்கிறான்
இப்போது
இன்னொருவன் கைகளில்
சூத்திர கல்வி மறுப்பு குச்சி
இன்று
படிப்பைவிட
பக்தி பெரிதென்கிறான்
நாளை
பக்தி போதும்
படிப்பெதற்கென்பான்
குழந்தைகளே
எதற்கும்
சாணி வாளியில்
துடைப்பங்கள்
ஊறியபடியே இருக்கட்டும்

இடது வழியும் இருக்கிறது ஸ்டாலின் சார்

  அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்
நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில்
“ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன்
அதைப் படித்ததும்

எங்கள் கட்சித் தோழர்கள் என்னவோ ஒரு புன்னகையோடு என்னைக் கடந்து போய்விட்டார்கள்
ஆனால் திமுகவில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் உள்ளிட்டு பலர் என்னைக் கடிந்துகொள்ளவே செய்தார்கள்
வேறொன்றுமில்லை,
திமுக தோழர்கள் கலைஞருக்கு சமமாக உங்களைக்கூட பார்க்க மாட்டார்கள்
கலைஞர்மீது அவர்களுக்குரிய அன்பு அப்படி
ஆனால் அப்படி எழுதியது சரிதான் என்பதை இன்று (09.07.2025) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நீங்கள் நிகழ்த்திய உரை உறுதி செயகிறது
கலைஞர் இருந்திருந்தால் உங்களை அழைத்து முத்தமிட்டிருப்பார்
”காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான வழிகள் உள்ளன. மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக்கூடாது”
என்று அழுத்தி சொல்லியுள்ளீர்கள்

திமுக மாதிரியான ஒரு கட்சியின் தலைவரால் இப்படி பேசிவிட முடியும்
ஆனால் திமுக அரசின் தலைவரால் இப்படி பேசிவிட முடியாது. இழப்புகளை சந்திக்க நேரும் என்பதை அறிந்தவன் நான்.
வெளிப்படியாகவே சொல்லிவிடுகிறேன்
இதுவரை இவ்வளவு வெளிப்படையாக யாரும் பேசியது இல்லை
இழப்பதற்கு பயப்படாத குணம் வேண்டும் இப்படி பேசுவதற்கு
உங்களுக்கு அது இருக்கிறது
முத்தம் சார்
பாருங்களேன் கோட்சே ஒரு கொலைகாரன்
அவன் RSS காரன்
இதை வெளிப்படியகப் பேசுவதற்கு நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது பாருங்கள்
அதை உடைத்திருக்கிறீர்கள்
மீண்டுமொருமுறை உங்களை இறுக அணைத்துக் கொள்கிறேன் சார்
ஆனால் இது கோட்சே என்ற ஒரு மனிதனின் செயல் என்ற அளவில் அவனைக் குற்றப்படுத்துவதோடு சுருங்கிப்போய்விடக் கூடாது.
அவனுக்குப் பின்னால் இருந்த
இப்போது அமித்ஷா தொடங்கி
அய்யா H.ராஜா வரை கைவைத்திருக்கும் சித்தாந்தம்தான் நமது பிரச்சினை
ஒன்று சொல்லவா
19.02.1948 அன்று தஞ்சை சன்னாநல்லூரில் ஒரு கூட்டம்
காந்தியாருக்கான இரங்கல் கூட்டம்

பெரியார் பேசுகிறார்
அந்தக் கூட்டத்தில் அப்போது இளைஞராக இருந்த கலைஞர் கலந்துகொண்டு பெரியாரை ஏதோ கேள்வி கேட்கிறார்
பெரியார் கலைஞருக்கு இப்படியாக பதில் சொல்கிறார்
காந்தியை துப்பாக்கி சுட்டது என்பதற்காக துப்பாக்கியை ஒடித்துவிடலாமா?
வேறு துப்பாக்கி வாங்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
சரி கொன்ற கோட்சேயை கொன்று போடலாமா?
ஆயிரம் கோட்சேக்களை அவர்கள் உருவாக்குவார்கள்
சரி RSS அமைப்பை அழித்துவிடலாமா?
வேறு பெயரோடு வந்துவிடுவான்
அவனது சித்தாந்தத்தோடு சண்டை போடவேண்டும் என்று பெரியார் பதில் சொல்லி இருக்கிறார்
கலைஞரின் மகன்
வலுவாக,,
இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் சண்டை போடுகிறீர்கள்
சாம்சங் பிரச்சினையில் உங்களுக்கு எதிர் நின்றோம்
எங்களுக்குத் தெரியும்
எங்களைத் தவிர சங்கிகள் உள்ளிட்டு அனைவரும் உங்களோடு நின்றார்கள்

அது பாட்டளி மக்களின் உரிமைக்கான பிரச்சினை
அந்த விஷயத்தில் உங்களுக்கு எதிர் தளத்தில் நின்று உங்களோடு சமர் புரிவது எங்கள் வேலை

செய்தோம்

இனியும் செய்வோம்

உங்களுக்கும் அது தெரியும்
இதோ மோடிக்கு எங்கள் பலத்தை
இன்றைய பொது வேலைநிறுத்தத்தின் மூலம் காட்டி இருக்கிறோம்
இதுவும் எங்கள் வேலை
அதே வேளை இதுமட்டும் அல்ல எங்கள் வேலை என்பதும் எங்களுக்குத் தெரியும்
சங்கிகளுக்கு எதிராக உங்களை இணைத்துக்கொண்டு களமேகுவதும்
சங்கிளோடு நீங்கள் சண்டை போடும்போது உங்களோடு இணைந்து நிற்க வேண்டியதும் எங்கள் வேலை
செய்வோம்
நன்றி சார்
அன்புடன்,
இரா.எட்வின்
09.07.2025

Wednesday, July 9, 2025

ஆத்திசூடி 012

 


நாங்கள் எப்போதும் C/O மக்கள்

  அன்பின் எடப்பாடி சார்,

வணக்கம்
கம்யூனிஸ்டுகள் முகவரியை இழந்துவிட்டார்கள் என்று நக்கல செய்திருக்கிறீர்கள்
அரசியலில் இது சகஜம்தான்
நேரம் கிடைத்தால்
ஏதேனும் ஒரு செய்தித் தாளின் அத்தனை பதிப்புகளையும் வாங்குங்கள்
அவற்றில் மாவட்டச் செய்திகள் என்று ஒரு பகுதி இருக்கும்
நிதானமாகப் படியுங்கள்
எதற்கும் அலைபேசியை அணைத்துவிட்டு படியுங்கள்
அமித்ஷா அழைத்துக் கெடுத்துவிடப் போகிறார்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதேனும் சில பகுதிகளில்,
கழிவறை வசதி கேட்டு,
ரேஷன் கடைகளில் வெயிலில் நிற்கும் மக்களுக்கு நிழற்குடை கேட்டு,
மருத்துவமனை கேட்டு,
அர்சு மருத்துவமனைகளின் போதாமையை சுட்டிக்காட்டி,
ஏதேனும் ஒரு தாசில்தாரின் ஆணவத்திற்கு எதிராக,
பேருந்து வசதி கேட்டு,
தங்கள் ஊரிலும் ரயில் நின்றுபோக வேண்டும் என்று கேட்டு,
ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற வகையில் ஏழை மக்களின் குடிசைகளைக் காவு கேட்கும் புல்டோசர்களுக்கு எதிராக,
ஆணவக் கொலைகளுக்கு எதிராக,
நெல்லுக்கு, கரும்புக்கு நியாயமான விலை கேட்டு,
ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியைக் கேட்டு,
தீண்டாமைச் சுவர்களுக்கு எதிராக,
காலியான பணியிடங்களை நிரப்பக் கேட்டு,
நீங்களும் கையெழுத்துப்போட்ட CNAவிற்கு எதிராக,
குழந்தைகளை காவு வாங்கும் நீட்டிற்கு எதிராக,
மதவெறிக்கு எதிராக
பட்டியல் நீளும்
இதுபோன்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் கம்யூனிஸ்டுகள் நிற்பதை உங்களால் காண முடியும்
மக்களுக்கான போராட்டக் களங்களே கம்யூனிஸ்டுகளின் முகவரி
தோழர் Kanagaraj Karuppaiah சொன்னதுபோல்
நீங்கள் C/O அமித்சா
தெரிந்துகொள்ளுங்கள்,
நாங்கள் எப்போதும் C/O மக்கள்

Tuesday, July 8, 2025

பிரிக்சும் பகல்காமும்

 


பிரிக்ஸ் கூட்டமைப்பு பகல்காம் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருப்பதாக ஒன்றிய அரசின் விசுவாசிகள் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்
இரண்டு விஷயங்களை வெளிப்படையாகப் பேசிவிடுவது சரியாக இருக்கும்
22.06.2025 அன்று பகல்காமில் தீவிரவாதிகள் 26 பேரைத் தாக்கிக் கொன்றொழித்ததை பிரிக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது
அதை எல்லா நாடுகளும்தான் கண்டிக்கின்றன
ஆனால் அதையொட்டி இந்தியா பாகிஸ்தான்மீது தொடுத்த தாக்குதலை எந்த நாடுகளும் ஆதரிக்கவில்லை
பிரிக்சும் ஆதரிக்கவில்லை என்பது ஒன்று
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது பிரிக்ஸ் என்பது இரண்டு
படம்
07.07.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்

Monday, July 7, 2025

உழைப்பை இப்படிச் சுரண்டினால்

  போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவார்கள் என்று தொழிலாளிகளைப் பார்த்து கவலையோடு கேட்கும் நீதிமன்றம்

உழைப்பதற்கு யார் வருவார்கள் என்று எப்போது முதலாளிகளைப் பார்த்து கவலையோடு கேட்கும்?

ஒரு புள்ளதான வச்சிருக்க

 சிந்தாமணியூர்

K.பெருமாள் ஜவுளிக்கடை
பக்கத்தில்
அப்பா, அம்மா, பாட்டி இவர்களோடு ஒரு குழந்தை
30 இருக்கும்
அப்பாவிற்கு பீகாக் ப்ளு பிடிக்கும் என்பதால் அந்தக் கலரில் ஒரு பட்டு
8500 ரூபாய்
சிரித்தபடி
நல்லாருக்கு தானே அங்கிள் என்கிறாள்
அப்படி ஒரு வார்ப்பான சிரிப்பு
செமையா இருக்கு சாமி
இன்னும் வார்ப்பாய் சிரிக்கிறாள்
அம்மாக்கு புடிச்ச கலர்ல ஒன்னு
பாட்டிக்கு புடிச்ச கலர்ல ஒன்னு
ஏண்டி எத்தன எடுப்ப
ஒரு புள்ளதான வச்சிருக்க
எனக்கு புடிச்ச கலர்ல ஒன்று எங்கட்டுக்காரருக்கு புடிச்ச மாதிரி ஒன்னு
இப்ப அவங்க அப்பா
எப்ப பார்த்தாலும் ஒரு புள்ளைய வச்சுருக்கன்னு சொல்லிய மொளகா அறக்கிற நீ
உங்க வீட்டுக்காரரும் ஒரு வொய்ப்தான வச்சிருக்கார்னு சொன்னதுதான் தாமதம்
நீ தப்பா பேசிட்ட பைனா ஒரு புடவை
வேற வழி
அள்ளிட்டுப் போறப்ப கன்னத்தைப் பிடித்து வரட்டா அங்கிள்னு சிரிச்சபடியே போறா
பெருசா வா சாமி

சுள்ளி பொறுக்கியவனை ...

  நேற்று

"சுள்ளி
பொறுக்கியவனை
சந்தனம் திருடியவன்
சவுக்கால் அடிக்கிறான்''
என்ற கவிதையோடு ஒரு பதிவு எழுதினேன்
இன்னும் புரியற மாதிரி சொல்லேன் என்கிறான்
எனக்குப் புரிந்த அளவில் சொல்கிறேன்
அனில் அம்பானி வங்கியில் 49,000 கோடி கடன் வாங்குகிறார்
இழுத்து ஒரு வழியாக ஒன் டைம் செட்டில்மென்டில்" 455 கோடி கட்டுகிறார்
வங்கி போதும் என்று சொல்லிவிட்டது
SBI அனில் அம்பானியின் கடன் கணக்கை fraud account என்று சொன்னதோடு திருப்தி கொண்டிருக்கிறது
49,000 கோடி கடன்
வட்டி எப்படியும் 5 கோடி என்று வருகிறபோதுதான் one time Settlement கு வருவார்கள்
எனில்,
54,000 கோடிக்கு 455 கோடியை பெற்றுக் கொண்டு
Fraud என்றுகூட அல்ல
Fraud account என்று சொன்னதோடு திருப்திப்பட்டுக் கொண்ட SBI
சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக ஏழைகளிடம் கறாராக கறக்கிறது

Sunday, July 6, 2025

மக்கள் புரிந்துகொள்கிற மாதிரி

  ”இங்கு 

சுள்ளி திருடியவனை
சந்தனம் திருடியவன்
சவுக்கால் அடிக்கிறான்”

என்று யார் எழுதியது என்று தெரியவில்லை. 40 வருடங்களாயிற்று படித்தது

காவல்நிலையங்களில் வழுக்கி விழுந்து கைகால் உடையும் இத்தனை இளைஞர்கள் 

லாக் அப்பில் மரணமடையும் இத்தனை இளைஞர்கள்

இந்தக் கணக்குகளில் வராமல் சித்தரவதைக்கப்படும் இத்தனை இளைஞர்கள்

இவர்கள்மீது சுமத்தப்படும் திருட்டுதொகையின் மொத்தமே அதிகபட்சம் 50 கோடிதான் என்றும்



ஆனால் ஆன்லைன் திருட்டு என்பது குறைந்தபட்சத் தொகை குறைந்தபட்சம் 1,800 கோடி என்றும்

திருபுவனம் அஜித் கொலைகளை ஒட்டி ஒரு நேர்காணலில் ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி ராஜாராம் கூறுகிறார்

நாம் எப்போது அந்த 1,800 கோடி குறித்து மக்கள் புரிந்துகொள்கிறமாதிரி பேசப்போகிறோம்

#சாமங்கவிய 32 நிமிடங்கள்
05.07.2025

Friday, July 4, 2025

ஊடக அறம்


The Hindu வில் 03.07.2025 அன்று  வெளியான இந்த செய்தியை தமிழ் இந்துவில் காணவில்லை

வேறு எந்த தமிழ் நாளிதழிலாவது வந்துள்ளதா என்றும் தெரியவில்லை

SBI அம்பானியின் கடன் கணக்கை Fraud என்கிறது

10 பவுன் நகையை திருடியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் FIR கூட இல்லாமலேயே ஒரு பிள்ளையை இங்கு கொண்று போட்டிருக்கிறார்கள்

அம்பானி குறித்து எந்த மீடியாவாவது

யூட்யூப் சேனலாவது விவாதம் நடத்தியிருப்பின் சொல்லுங்கள்

பார்க்க வேண்டும்

 

Thursday, July 3, 2025

65/66 , காக்கைச் சிறகினிலே, ஜூலை 2025

தொன்மைக்கும் கீழடி உண்மைக்கும் ஒன்றிய பாஜக அரசு எப்போதும் எதிராகவே இருக்கிறதுஎன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டுகிறார்.

பாஜக அரசுதான் கீழடி ஆய்விற்கு நிதியை ஒதுக்கியது. நிதி அமைச்சர் சீதாராமன் கீழடிக்கு வந்து சென்றார். இப்படி இருக்க வெங்கடேசன் ஒன்றிய அரசை குற்றம் சுமத்துவது நியாயமா?” என்று கேட்கிறார் தமிழிசை.

ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதல்ல. அவர்கள் முயற்சிக்கும்பாரதகட்டுமானத்தை கீழடி தொன்மை தகர்க்கும் என்பதை உணர்ந்ததும் அந்த நிதியையும் நிறுத்தி ஆய்வை முடக்கியதும் பாஜக அரசுதான்.

இத்தனை நெருக்கடிகளையும் கடந்து ஆய்வினை நடத்தி முடிக்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். 982 பக்கங்கள் அடங்கிய தனது ஆய்வறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கவும் செய்கிறார். அந்த கனமான ஆய்வறிக்கை வேத கலாச்சாரத்திற்கும் முந்தையது திராவிட கலாச்சாரம் என்பதை எடுத்துரைக்கிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ஒரு நகர நாகரிகம் இருந்திருப்பதை அங்கு கிடைத்த சான்றுகள் உறுதி செய்கின்றன. அங்கு கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அங்கு வாழ்ந்த மக்கள்,

 

1)   இயற்கையை வழிபட்டிருக்கிறார்கள்

2)  இறந்தவர்களை மரியாதையோடும் கவனத்தோடும் அடக்கம் செய்திருக்கிறார்கள்

3)  மூதாதையர்களை வழிபட்டிருக்கிறார்கள்

4)  தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது

5)  பெருந்தெய்வ வழிபாடு இல்லவே இல்லை

என் விவரங்கள் அமர்நாத் அவர்களின் ஆய்வறிக்கையில் இடம்பெறுகின்றன. இத்தகைய ஆதாரங்கள் கிடைக்க ஆரம்பித்த போதிருந்தே சங்கிகள் கதறத் தொடங்குகிறார்கள்.

வேத வழிப்பாட்டிற்கான சான்றுகள் அவை என்று முதலில் பொய்யாக கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள். அவை எதுவும் எடுபடவில்லை. பாஜகவும் சங்கிகளும் துடித்துப் போகிறார்கள். சீப்பை மறைத்து திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று கருதுகிறார்கள். அறிக்கையை கிடப்பில் போடுகிறார்கள்

தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கொந்தளிக்கிறார்கள். திமுக அரசு கனமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. இனி அறிக்கையை முடக்கி வைக்க முடியாது என்பதை ஒன்றிய அரசு உணர்கிறது. இரண்டே வாய்ப்புகள்தான் தமக்கு உள்ளன என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

ஒன்று, இந்த ஆய்வறிக்கையை இப்போது இருக்கிற வடிவில் அப்படியே ஏற்க வேண்டும். அல்லது இந்த ஆய்வறிக்கையை நிராகரிக்க வேண்டும். அறிக்கையை நிராகரித்தால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதும் பாஜகவிற்குத் தெரியும்அதுமட்டுமல்ல மாநில அரசும் இதை விடாது. நிச்சயமாக முதல்வர் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடுவார்.

இந்த ஆய்வினை எவ்வளவு முயன்றாலும் பொய்யென நிறுவுவது கடினம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். 982 பக்களில் உள்ள அத்தனையும் மெய்ப்பிக்கப்பட்ட தரவுகள்.

போகிற போக்கில் கீழடியில் காலை வைத்துவிடவில்லை அமர்நாத் குழு. வைகை நதிப் பகுதியில் 293 இடங்களில் சுற்றித் திரிகிறார்கள். தரையில் கிடைக்கிற தடயங்களையெல்லாம் சேகரிக்கிறார்கள். கடுமையாக ஆய்வு நடத்துகிறார்கள். இப்படியாகத்தான் கீழடியை அடைகிறார்கள். அந்த 110 ஏக்கர் தென்னந்தோப்பு அவர்களை  அங்கே நங்கூரமிட வைக்கிறது.

1976 வாக்கில் கீழடி பகுதியில் பழங்காலத்து ஓடுகள் கிடைக்கின்றன. மாணவர்கள் சிலர் அவற்றை சேகரித்து தங்களது ஆசிரியரான பாலசுப்பிரமணியன் அவர்களிடம் கொடுக்கிறார்கள். அவரும் அவற்றை அரசுக்கு அனுப்புகிறார். இந்தத் தகவல்களும் அமர்நாத் கீழடியைத்  தேர்ந்தெடுப்பதற்கு ஒரு காரணம்.

 

1)   ஏழு லட்சம் பானை ஓடுகள் சேகரிக்கப்படுகின்றன

2)  அவற்றில் 1,03,000 ஓடுகள் ஆய்வு அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன

3)  அவற்றை சல்லடையிட்டு 1,842 ஓடுகள் நுணுகி ஆய்விற்குள்ளாகின்றன

4)  கிடைத்த குதிரையின் எலும்புக்கூடு ஆய்விற்குள்ளாகிறது

இவற்றிற்கு எதிராய்வு செய்வது இயலவே இயலாது என்பது சங்கிகளுக்கு புரிகிறது. முழுக்க அறிவியல்பூர்வமான ஆய்வு இது என்பதை புரிந்துகொள்கிறார்கள். ஆய்வின் முடிவினை ஏற்றால் அவர்களது இந்துத்துவாவின் அடிப்படை ஆட்டம் கண்டுவிடும்.

ஹரப்பாவிலும் பானை ஓடுகள் கிடைத்தன. அவற்றில் இருந்தவை குறிகள். கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்தவை தமிழ் பிராமி எழுத்துகள். நுணுகி ஆய்ந்த 1,842 ஓடுகளில் கிட்டத்தட்ட 108 ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதாக அமர்நாத் கூறுகிறார். ஹரப்பா ஓடுகளில் காணும் குறிகள் ஒலிக்குறிகள் அல்ல என்றும் மாறாக இங்கு உள்ளவை ஒலிக்குறிகள் என்கிறார்.

இங்குக் கிடைத்த குதிரை எலும்பினை ஆராய்ந்ததில் குதிரைகள் அரேபியாவில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார் அமர்நாத். இது பட்டினப்பாலையில் காணப்படும் கூற்றுக்கான சான்றெச்சம் என்கிறார்.

இந்த ஆய்வினை ஏற்பதில் சங்கிகளுக்கு சில சிக்கல்கள் இருப்பதாக உணர்கிறார்கள். ஆய்வினை ஏற்றால் குறைந்தபட்சம்,

 

1)   திராவிட நாகரிகத்திற்கு மிகப் பிந்தைய நாகரிகம் வேத நாகரிகம்

2)  திராவிடர்கள் இயற்கையையும் மூதாதையர்களையும் வழிபட்டவர்கள்

3)  தமிழ் மொழியின் மூப்பு

போன்றவற்றை ஏற்க வேண்டும்.

ஆக, ஏற்கவும் இயலாமல் நிராகரிக்கவும் வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்துவதன் மூலம் இதை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதன் விளைவாக இந்த ஆய்வறிக்கையில் போதாமைகள் இருப்பதாகவும் திருத்தங்கள் அவசியம் என்றும் கூறி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

30.01.2023 அன்று தமக்கு வந்த ஆய்வறிக்கையை இப்போது திருத்தங்கள் கேட்டு திருப்பி அனுப்பி இருக்கிறது இந்திய தொல்லியல் துறை

முதல் கால கட்டம் எட்டாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை என்பதை கி.மு காலம் என்று மாற்ற வேண்டும் என்பதும் கோரப்பட்டுள்ள திருத்தங்களுள் ஒன்று.

இந்துத்துவா மற்றும் சமஸ்கிருதத்தை கேள்வி கேட்கும் எதையும் ஒருபோதும் இவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.

பாஜக என்று இல்லை, காங்கிரசும் திராவிடத் தொன்மையையும் தமிழின் மூப்பு குறித்த ஆய்வுகளையும் கடந்த காலத்தில் நிராகரிக்கவே செய்திருக்கிறது.

நாகை மாவட்டம் பூம்பூகார் அருகே சுமார் பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடலில் மூழ்கிய ஒரு மிகப்பெரிய நகரம்தான் உலகின் முதன் முதலில் தோன்றிய நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தின் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஆன் கூக் கண்டறிந்துள்ளார்என்று சங்கிகளின் தினமலரே 18.12.2002 அன்று வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை தனது பண்டைய தமிழரும் பரதவரின் வாழ்வும்என்ற நூலில் வைத்திருக்கிறார் கவிஞர் மீனவன்.

1990 முதல் 1993 வரை இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனம் பூம்புகார் பகுதியில் ஆய்வு செய்கிறது.  ஆரம்பகட்ட முடிவுகளையே தாங்க முடியாத அன்றைய காங்கிரஸ் அரசு நிதி இல்லை என்ற காரணத்தை சொல்லி ஆய்வினை நிறுத்துகிறது.

அதன்பிறகு ஆன்கூக் இங்கிலாந்தின்சேனல் - 4’ மற்றும் அமெரிக்காவின்லானிங் சேனல்ஆகியவற்றின் நிதி உதவியோடு அதே பகுதியை ஆய்வு செய்கிறார். 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் அங்கு இருந்தது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்.

அதை சரியா என்றுகூட ஆராய்வதற்கு முயற்சிக்கவில்லை அன்றைய காங்கிரஸ் அரசு.

பஜகவோ, இன்றைய ராகுலுக்கு முந்தைய காங்கிரசோ தமிழ் மண்ணின் தொன்மையை ஒருபோதும் ஏற்பதில்லை.

இப்போதுகூட அமர்நாத்தை நொய்டாவிற்கு இடமாற்றம் செய்துள்ளார்கள். ஒன்று சொல்வோம்,

கீழடி தொன்மை தமிழ் மண்ணின் தொன்மை. தமிழ் மண்ணின் தொன்மை இந்தியாவின் தொன்மை என்பதை உணர மறுப்பது இந்திய சிந்தனைக்கு எதிரானது.


 

 


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...