Thursday, July 3, 2025

65/66 , காக்கைச் சிறகினிலே, ஜூலை 2025

தொன்மைக்கும் கீழடி உண்மைக்கும் ஒன்றிய பாஜக அரசு எப்போதும் எதிராகவே இருக்கிறதுஎன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டுகிறார்.

பாஜக அரசுதான் கீழடி ஆய்விற்கு நிதியை ஒதுக்கியது. நிதி அமைச்சர் சீதாராமன் கீழடிக்கு வந்து சென்றார். இப்படி இருக்க வெங்கடேசன் ஒன்றிய அரசை குற்றம் சுமத்துவது நியாயமா?” என்று கேட்கிறார் தமிழிசை.

ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதல்ல. அவர்கள் முயற்சிக்கும்பாரதகட்டுமானத்தை கீழடி தொன்மை தகர்க்கும் என்பதை உணர்ந்ததும் அந்த நிதியையும் நிறுத்தி ஆய்வை முடக்கியதும் பாஜக அரசுதான்.

இத்தனை நெருக்கடிகளையும் கடந்து ஆய்வினை நடத்தி முடிக்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். 982 பக்கங்கள் அடங்கிய தனது ஆய்வறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கவும் செய்கிறார். அந்த கனமான ஆய்வறிக்கை வேத கலாச்சாரத்திற்கும் முந்தையது திராவிட கலாச்சாரம் என்பதை எடுத்துரைக்கிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ஒரு நகர நாகரிகம் இருந்திருப்பதை அங்கு கிடைத்த சான்றுகள் உறுதி செய்கின்றன. அங்கு கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அங்கு வாழ்ந்த மக்கள்,

 

1)   இயற்கையை வழிபட்டிருக்கிறார்கள்

2)  இறந்தவர்களை மரியாதையோடும் கவனத்தோடும் அடக்கம் செய்திருக்கிறார்கள்

3)  மூதாதையர்களை வழிபட்டிருக்கிறார்கள்

4)  தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது

5)  பெருந்தெய்வ வழிபாடு இல்லவே இல்லை

என் விவரங்கள் அமர்நாத் அவர்களின் ஆய்வறிக்கையில் இடம்பெறுகின்றன. இத்தகைய ஆதாரங்கள் கிடைக்க ஆரம்பித்த போதிருந்தே சங்கிகள் கதறத் தொடங்குகிறார்கள்.

வேத வழிப்பாட்டிற்கான சான்றுகள் அவை என்று முதலில் பொய்யாக கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள். அவை எதுவும் எடுபடவில்லை. பாஜகவும் சங்கிகளும் துடித்துப் போகிறார்கள். சீப்பை மறைத்து திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று கருதுகிறார்கள். அறிக்கையை கிடப்பில் போடுகிறார்கள்

தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கொந்தளிக்கிறார்கள். திமுக அரசு கனமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. இனி அறிக்கையை முடக்கி வைக்க முடியாது என்பதை ஒன்றிய அரசு உணர்கிறது. இரண்டே வாய்ப்புகள்தான் தமக்கு உள்ளன என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

ஒன்று, இந்த ஆய்வறிக்கையை இப்போது இருக்கிற வடிவில் அப்படியே ஏற்க வேண்டும். அல்லது இந்த ஆய்வறிக்கையை நிராகரிக்க வேண்டும். அறிக்கையை நிராகரித்தால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதும் பாஜகவிற்குத் தெரியும்அதுமட்டுமல்ல மாநில அரசும் இதை விடாது. நிச்சயமாக முதல்வர் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடுவார்.

இந்த ஆய்வினை எவ்வளவு முயன்றாலும் பொய்யென நிறுவுவது கடினம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். 982 பக்களில் உள்ள அத்தனையும் மெய்ப்பிக்கப்பட்ட தரவுகள்.

போகிற போக்கில் கீழடியில் காலை வைத்துவிடவில்லை அமர்நாத் குழு. வைகை நதிப் பகுதியில் 293 இடங்களில் சுற்றித் திரிகிறார்கள். தரையில் கிடைக்கிற தடயங்களையெல்லாம் சேகரிக்கிறார்கள். கடுமையாக ஆய்வு நடத்துகிறார்கள். இப்படியாகத்தான் கீழடியை அடைகிறார்கள். அந்த 110 ஏக்கர் தென்னந்தோப்பு அவர்களை  அங்கே நங்கூரமிட வைக்கிறது.

1976 வாக்கில் கீழடி பகுதியில் பழங்காலத்து ஓடுகள் கிடைக்கின்றன. மாணவர்கள் சிலர் அவற்றை சேகரித்து தங்களது ஆசிரியரான பாலசுப்பிரமணியன் அவர்களிடம் கொடுக்கிறார்கள். அவரும் அவற்றை அரசுக்கு அனுப்புகிறார். இந்தத் தகவல்களும் அமர்நாத் கீழடியைத்  தேர்ந்தெடுப்பதற்கு ஒரு காரணம்.

 

1)   ஏழு லட்சம் பானை ஓடுகள் சேகரிக்கப்படுகின்றன

2)  அவற்றில் 1,03,000 ஓடுகள் ஆய்வு அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன

3)  அவற்றை சல்லடையிட்டு 1,842 ஓடுகள் நுணுகி ஆய்விற்குள்ளாகின்றன

4)  கிடைத்த குதிரையின் எலும்புக்கூடு ஆய்விற்குள்ளாகிறது

இவற்றிற்கு எதிராய்வு செய்வது இயலவே இயலாது என்பது சங்கிகளுக்கு புரிகிறது. முழுக்க அறிவியல்பூர்வமான ஆய்வு இது என்பதை புரிந்துகொள்கிறார்கள். ஆய்வின் முடிவினை ஏற்றால் அவர்களது இந்துத்துவாவின் அடிப்படை ஆட்டம் கண்டுவிடும்.

ஹரப்பாவிலும் பானை ஓடுகள் கிடைத்தன. அவற்றில் இருந்தவை குறிகள். கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்தவை தமிழ் பிராமி எழுத்துகள். நுணுகி ஆய்ந்த 1,842 ஓடுகளில் கிட்டத்தட்ட 108 ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதாக அமர்நாத் கூறுகிறார். ஹரப்பா ஓடுகளில் காணும் குறிகள் ஒலிக்குறிகள் அல்ல என்றும் மாறாக இங்கு உள்ளவை ஒலிக்குறிகள் என்கிறார்.

இங்குக் கிடைத்த குதிரை எலும்பினை ஆராய்ந்ததில் குதிரைகள் அரேபியாவில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார் அமர்நாத். இது பட்டினப்பாலையில் காணப்படும் கூற்றுக்கான சான்றெச்சம் என்கிறார்.

இந்த ஆய்வினை ஏற்பதில் சங்கிகளுக்கு சில சிக்கல்கள் இருப்பதாக உணர்கிறார்கள். ஆய்வினை ஏற்றால் குறைந்தபட்சம்,

 

1)   திராவிட நாகரிகத்திற்கு மிகப் பிந்தைய நாகரிகம் வேத நாகரிகம்

2)  திராவிடர்கள் இயற்கையையும் மூதாதையர்களையும் வழிபட்டவர்கள்

3)  தமிழ் மொழியின் மூப்பு

போன்றவற்றை ஏற்க வேண்டும்.

ஆக, ஏற்கவும் இயலாமல் நிராகரிக்கவும் வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்துவதன் மூலம் இதை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதன் விளைவாக இந்த ஆய்வறிக்கையில் போதாமைகள் இருப்பதாகவும் திருத்தங்கள் அவசியம் என்றும் கூறி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

30.01.2023 அன்று தமக்கு வந்த ஆய்வறிக்கையை இப்போது திருத்தங்கள் கேட்டு திருப்பி அனுப்பி இருக்கிறது இந்திய தொல்லியல் துறை

முதல் கால கட்டம் எட்டாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை என்பதை கி.மு காலம் என்று மாற்ற வேண்டும் என்பதும் கோரப்பட்டுள்ள திருத்தங்களுள் ஒன்று.

இந்துத்துவா மற்றும் சமஸ்கிருதத்தை கேள்வி கேட்கும் எதையும் ஒருபோதும் இவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.

பாஜக என்று இல்லை, காங்கிரசும் திராவிடத் தொன்மையையும் தமிழின் மூப்பு குறித்த ஆய்வுகளையும் கடந்த காலத்தில் நிராகரிக்கவே செய்திருக்கிறது.

நாகை மாவட்டம் பூம்பூகார் அருகே சுமார் பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடலில் மூழ்கிய ஒரு மிகப்பெரிய நகரம்தான் உலகின் முதன் முதலில் தோன்றிய நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தின் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஆன் கூக் கண்டறிந்துள்ளார்என்று சங்கிகளின் தினமலரே 18.12.2002 அன்று வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை தனது பண்டைய தமிழரும் பரதவரின் வாழ்வும்என்ற நூலில் வைத்திருக்கிறார் கவிஞர் மீனவன்.

1990 முதல் 1993 வரை இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனம் பூம்புகார் பகுதியில் ஆய்வு செய்கிறது.  ஆரம்பகட்ட முடிவுகளையே தாங்க முடியாத அன்றைய காங்கிரஸ் அரசு நிதி இல்லை என்ற காரணத்தை சொல்லி ஆய்வினை நிறுத்துகிறது.

அதன்பிறகு ஆன்கூக் இங்கிலாந்தின்சேனல் - 4’ மற்றும் அமெரிக்காவின்லானிங் சேனல்ஆகியவற்றின் நிதி உதவியோடு அதே பகுதியை ஆய்வு செய்கிறார். 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் அங்கு இருந்தது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்.

அதை சரியா என்றுகூட ஆராய்வதற்கு முயற்சிக்கவில்லை அன்றைய காங்கிரஸ் அரசு.

பஜகவோ, இன்றைய ராகுலுக்கு முந்தைய காங்கிரசோ தமிழ் மண்ணின் தொன்மையை ஒருபோதும் ஏற்பதில்லை.

இப்போதுகூட அமர்நாத்தை நொய்டாவிற்கு இடமாற்றம் செய்துள்ளார்கள். ஒன்று சொல்வோம்,

கீழடி தொன்மை தமிழ் மண்ணின் தொன்மை. தமிழ் மண்ணின் தொன்மை இந்தியாவின் தொன்மை என்பதை உணர மறுப்பது இந்திய சிந்தனைக்கு எதிரானது.


 

 


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...