Sunday, August 30, 2015

கடிதம் 06

அன்பின் நண்பர்களே,
வணக்கம்.
நலம்தானே?

மூன்று விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நேற்று முன்தினம் பணியிடைப் பயிற்சி முடிந்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது  SRV பள்ளியின் முதல்வர் தோழர் துளசி அழைத்தார்.

ஏற்கனவே “காக்கைச் சிறகினிலே” இதழுக்கு ஏதேனும் செய்வதாக சொல்லியிருந்தார். அதை சுத்தமாய் நான் மறந்திருந்த நேரத்தில் பள்ளியின் சார்பாக காக்கைக்கு 25000 ரூபாய் சனியன்று நடக்கும் விழாவில் தர இருப்பதாகவும். வந்து பெற்றுச் செல்ல வேண்டுமென்றும் அழைத்தார்.

ஏற்கனவே சனியன்று அரும்பாவூரிலொரு நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டிருந்ததால் போக இயலவில்லை. எனது நிலைமையை உணர்ந்துகொண்ட தோழர் தொகையை கேட்புக் காசோலை மூலம் அனுப்பி வைப்பதாகக் கூறினார்.

இதை முத்தையாவிடம் சொன்னபோது “அப்பாடா பேப்பர் கடனை அடைத்துவிடலாம்” என்றார்.

இந்தத் தொகை எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை முத்தையா சொன்னதிலிருந்து உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

துளசிக்கு என் அன்பும் நன்றியும்.

இது முதல் தவணைதான் என்பது எனக்கு மட்டும் அல்ல துளசிக்கும் தெரியும்.

நிறையத் தோழர்களது கருத்துப் பங்களிப்பாலும் படைப்புகளாலும் விமர்சனங்களாலும் மட்டுமே காக்கை தொடர்ந்து பறக்கிறது.

காக்கை குறித்து பேசுங்கள்,
காக்கை குறித்து எழுதுங்கள்,
காக்கைக்கு படைப்புகளை கொடுத்துதவுங்கள்,
காக்கையை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்,
காக்கைக்கு சந்தா செலுத்துங்கள்,
செலுத்திய சந்தாவை புதுப்பித்து உதவுங்கள்,
நண்பர்களின் திருமண நாள், பிறந்த நாள் பரிசாக காக்கைக்கு அவர்கள் பெயரில் சந்தா செலுத்துங்கள்,
இது கடந்து விளம்பரம் கிடைக்குமெனில் உதவுங்கள்,

இவை கடந்து வேறு எந்த வகையில் உதவ முடியுமெனினும் உதவுங்கள்.

*******************************

2

அக்டோபர் மாதம் பதினொன்றாம் தேதி புதுக்கோட்டையில்   வலைப் பதிவர்கள் சந்திப்பு நடக்கிறது. அண்ணன் முத்துநிலவன் அவர்களும் கஸ்தூரி ரெங்கன்  வைகறை உள்ளிட்ட தோழர்களும் சுழன்று சுழன்று அதற்காக உழைப்பதை பார்க்கிறேன். காக்கைச் சிறகினிலே அவர்களது நிகழ்விற்கு தன்னால் ஆனதை செய்வதுதான் சரியென்று படுகிறது.

வரும் தோழர்களுக்கு குறிப்பெழுதுவதற்காக வழங்கப்படும் பேட் மற்ரும் பேனாவினை வழங்கலாம் என்று நினைக்கிறேன். தோழர்கள் முத்தையாவும் சந்திரசேகரும் இதற்கு அனுமதியளிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்த சந்திப்பு குறித்த ஒரு சிறு குறிப்பை செப்டம்பர் மாத காக்கையில் “65/66, காக்கைச் சிறகினிலே” யில் எழுதியிருக்கிறேன்.

அது குறித்த நேர்காணல் ஒன்றினை அக்டோபர் இதழிலும், நிகழ்வு குறித்து நவம்பர் இதழிலும் நிச்சயம் வைப்போம்.

சந்திப்பு வீச்சோடு அமைய காக்கை வாழ்த்துகிறது.

************************************
3

தோழர் உதயன் காக்கை பெரிதும் மதிக்கிற எழுத்தாளர்களில் ஒருவர்.  அவர் எழுத்து மீதான விமர்சனங்களும் காக்கைகு உண்டு என்றாலும் அவர்மீதான அன்பும் மரியாதையும் எந்த நேரத்திலும் காக்கைக்கு குறைந்ததே இல்லை.

அவரது ”லோமியோ” என்ற நாவலை வெளியிட்டு நானும் தோழர் பிரபஞ்சனும் பேசினோம். அந்த எனது உரையை சிறு நூலாக கொண்டுவர வேண்டும் என்றும் பிரபஞ்சன் வைகறை அய்யாவிடமும் தன்னிடமும் கூறியதாக தஞ்சாவூர்க் கவிராயர் சொன்னார். ஒலிப் பதிவு செய்யப் படாததாலும் குறிப்புகளை தொலைத்துவிட்டதாலும் அது இயலாமல் போனது. என்றாலும் அந்த நாவல் குறித்து ஒரு விமர்சனக் கட்டுரையை நான் எழுதியிருக்கிறேன்.

கிறிஸ்தவத்தில் பதிந்து கிடக்கும் ஜாதியப் படிநிலைகளை மிக அழகாகப் பேசும் அந்த நாவலைப் பற்றி  நிறைய இடங்களில் நான் உரையாற்றியும் இருக்கிறேன்.

தோழர் உதயன் தனது சமீபத்திய நாவலை முத்தையா மூலமாக எனக்கு அனுப்பி மதிப்புரை எழுதிக் கேட்டார். வாசித்தேன். நலமின்மை மற்ரும் சில காரணங்களால் அதை என்னால் செய்ய இயலாமல் போனது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் அந்த நாவலின் பிரதியை அவர் தோழர் முத்தையாவிடம் தந்திருக்கிறார். அதில் அதை “ காக்கைச் சிறகிலே” வெளியீடாக அவர் போட்டிருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்துபோன முத்தையா தனது கண்டனத்தைப் பதிந்ததோடு காக்கையின் பெயரோடு அந்த நாவல் விநியோகிக்கப் படக் கூடாதென்றும் கூறியிருக்கிறார்.

சரி என்று சொல்லி சென்றிருக்கிறார் உதயன் அவர்கள்.

அதை அவர் சரி செய்வார் என்றே நம்புகிறேன். இல்லாத பட்சத்தில் என்ன செய்வதென்று காக்கை முடிவெடுக்கும்.

அந்த நாவலுக்கும் காக்கைக்குமான தொடர்பு என்பது எங்கள் அன்பிற்குரிய உதயனின் நாவல் என்பது மட்டுமே.   

11 காலிருக்கு... செருப்பிருக்கு

”மரணத்திற்குப்
பிறகு
மறு பிறப்பு
இருந்திடுமோ
என்ற பயத்திலேதான்
நாங்கள்
தற்கொலைக்குக் கூட
முயலுவதில்லை”

என்று எழுதுகிறார் ராதா சிவா என்ற முகநூல் நண்பர். இதைவிட அழுத்தமாக தலித் மக்களின் வலியை உணர்த்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை.

வாழ இயலாமையின் ரணத்தை, அவலத்தை, மனிதனாய் வாழ விடாத கொடூர அயோக்கியத் தனத்தைதான் இதுவரை பார்த்திருக்கிறோம். இந்தக் கொடுமைகளை, அவமானம் தரும் வலியை சகிக்க மாட்டாமல் தற்கொலை செய்வதை பார்த்த்டிருக்கிறோம்.

இதுவும் பொறுக்க மாட்டாமல்,

தற்கொலையின் ஊலம் உனது ரணத்திற்கும் அவமானத்திற்கும் முடிவு கட்டவா பார்க்கிறாய் என மறுபிறப்பின் சிந்தனை தடுக்கிறது. மறு பிறப்பு என்று ஒன்று இருந்து, மீண்டும் தலித்தாய் பிறக்க நேர்ந்து விட்டால் மீண்டும் இதே கேவலங்களை செய்யத்தானே இந்தச் சமூகம் தள்ளும் என்கிற பயமேகூட பல தற்கொலைகளைத் தடுக்கிறது.

வழக்கம் போல ஒரு பின்னிரவு வேலை, நல்ல தூக்கக் கலக்கத்தோடு நண்பர்களின் வலைகளையும் முகநூல் பக்கங்களையும் மேய்ந்து கொண்டிருந்த போது தம்பி சமரன் பக்கத்தில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

இந்தப் படத்தைப் பார்த்ததும் தூக்கமும் கலக்கமும் எங்கோ பறந்தோட கோவம் மட்டுமே உடலெங்கும் அப்பிக் கொண்டது.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கைகளில் செருப்புகள். செருப்பு வாங்க இயலாமல் வெறுங்காலோடு பள்ளிகளுக்குப் போகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அப்படியே மனசு சுக்கல் சுக்கலாய் நொறுங்கிப் போகும். பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா மிதியடிகளை வழங்கியமைக்காகவே இவர்கள் செய்த பிழைகளில் ஒரு பத்துப் பன்னிரணடை தள்ளுபடி செய்தவன்.

கோவமும் கொந்தளிப்புமாய் அப்படியே உறைந்து போனேன்.

தெரு தாண்டும் வரை
கைகளில்
சுமக்கத்
தீர்ப்பளித்தீர்.

கோவம் வரும்
எங்களுக்கும்

எங்களுக்கு
கோவம் வரும் வேலை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்

கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை

கைகளில்தான்
இருக்கிறது

என்று எழுதினேன்.டிசம்பர் மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் படத்தையும் கவிதையையும் அட்டையில் போட்டோம்.

“இதெல்லாம் கொஞ்சம் அதிகமாத் தெரியல?”

நண்பர்கள் கேட்டார்கள்.

இது உண்மை என்பதை எவ்வள்அவு சொல்லியும் சிலர் நம்ப மறுத்தார்கள்.எங்கே நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ? நாமே கொஞ்சம் குழம்புமளவிற்கு சிலர் இதை நம்ப மறுத்தார்கள்.

27.01.2013 அன்றைய தீக்கதிர் அதற்கு முந்தைய நாள் கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய ஒரு போராட்டத்தைப் பற்ரிய செய்தியை வெளியிட்டிருந்தது.

“காலில் செருப்பு அணிந்து நடப்போம்”

என்ற பதாகையைப் பார்த்த போது, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்னமும் காலில் செருப்பணிந்து நடப்பதற்கு இன்னமும் போராட வேண்டி இருக்கிறது.

ஒரு கதை, கந்தர்வன் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கதையில் ஆண்டை ஒருவன் எல்லா தலித்துகளுக்கும் துண்டு வாங்கிக் கொடுப்பான். அதைப் பார்த்த அவனது நண்பன் இவர்களுக்கு எதற்கு துண்டு என்று கேட்பான். அவன் சொல்வான், “அவனிடம் துண்டு இருந்தால்தானே நம்மைப் பார்த்ததும் இடுப்பிலே கட்டுவான்”

தன்னைக் கண்டதும் தோளிலிருந்து துண்டை எடுத்து இடுப்பிலே கட்டுவதை ரசித்துத் தொலைத்திருக்கிறது இந்த இடைச் சாதி சமூகம். இதன் நீட்சியாகத்தான் காலில் அணிந்து வந்த செருப்பை கைகளிலே சுமக்க வைத்தும் அழகு பார்த்திருக்கிறது.

பெரம்பலூருக்குப் பக்கத்தில் பேரளி என்றொரு கிராமம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தலித் மாணவனை மரத்திலே கட்டிப் போட்டு சித்திரவதை செய்தனர். அந்த அளவு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் செய்தான்? வகுப்பிற்கு நேரமாகிவிடவே மிதி வண்டியை சற்ரு வேகமாக மிதிக்கிறான்.

அவனைக் கட்டி வைத்து சித்திரவதை செய்ததற்குகாரணமாக சொன்னார்கள்,

“என்ன தைரியம் இருந்தால் குடியானத் தெருவுல சைக்கிள ஓட்டிட்டு வருவான்?”

இதை எதிர்த்து சுபாஷனி அலி மற்ரும் பால பாரதி தலைமையில் மார்சிஸ்ட் கட்சி ஒரு சைக்கிள் பேரணியை நடத்த முயன்றபோது அதற்கு தடை விதிக்கப் பட்டது. அப்போது இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னார், “ எல்லாம் அமைதியாகத் தானே இருக்கிறது.ஏன் இப்படி வம்படித்துச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்புகிறீர்கள்?”

அவரது விளக்கம் இதுதான்,

பையன் சைக்கிள் ஓட்டினான். அவர்கள் கட்டி வைத்து உதைத்தார்கள். இத்தோடு பிரச்சினை முடிந்து ஊர் அமைதியாக இருக்கிறது. ஏன் அந்த அமைதியைக் கெடுக்கிறீர்கள் என்பதுதானே?

இத்தனைக்குப் பிறகும் ஊர் அமைதியாக இருக்கும் என்றால் அது அசிங்கம் அல்லவா? இந்தக் கொடுமைக்குப் பிறகும் அமைதியாக இருக்க அது என்ன மயானமா?

இதை எதனினும் கொடிய வலியை கீழே உள்ள ஒரு செய்தி தருகிறது.

சத்திய மங்களம் பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் தலித் மாணாவிகளை மட்டும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. “உங்க அம்மாவும் அப்பாவும் செய்கிற வேலைதானே. கூச்சப் படாம செய்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு மாதம் ஒன்றிற்கு 500 கும் குறைவான சம்பளம்தான். எனவே இந்த வேலைக்கு யாரும் வர மறுக்கிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்தே தனியாக ஒரு சட்டம் போட வேண்டும்.

மாதம் முழுக்க பள்ளியில் உள்ள கழிவறைகள் அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு இவ்வளவு குறைவான ஊதியம் என்பது கொடுமையின் உச்சம். முதலில் அவர்களது நேர்மையான ஊதியத்திற்காக பொது மக்கள் இணாஇந்து போராட வேண்டும்.

( மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு நவீன எந்திரங்களை பயன் படுத்த வேண்டும் என்பதற்கான நீண்ட போராட்டம் என்பதே இலக்காக இருக்க வேண்டும்)

இந்தச் சூழலில் தங்கள் பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் பங்கு உண்டுதான். அந்த வகையில் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்வதில் இருவருக்கும் நிச்சயமாககடமை உண்டு.

மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குள் ஒரு முறை வைத்துக் கொண்டு இந்த வேலையைச் செய்தால் பாராட்டலாம். ஆனால் தலித் குழந்தைகள் மட்டுமே கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிலை பள்ளிகளிலேயே இருக்குமானால் அதை எப்படி சகித்துக் கொள்வது?

எனக்கொன்று தோன்றுகிறது.

அக்கறையுள்ள நண்பர்கள் ஒன்றிணைவது , முகநூல் மற்றும் ட்விட்டர் இருக்கும்போது இது ஒன்றும் சாத்தியம் இல்லாத செயல் அல்ல. கலை இலக்கிய பெரு மன்றம்,த.மு.எ ச, மற்றும் இடதுசாரிக் கட்சிகள், மற்றும் வி.சி போன்ற அமைப்புகளின் தோழர்கள் ஒருங்கிணைந்து தத்தமது பகுதியில் உள்ள பள்ளிகளை கண்காணித்தால் என்ன?

சட்டம் ஒன்றும் அவ்வளவு வலுவாக இல்லை. SC&ST PREVENTION OF ATROCITY ACT ன் மூலம் பதியப்படும் வழக்குகளில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான அளவு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்று வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சொல்கிறார்.

எனவே இதை ஒழிக்க வேண்டுமெனில் அக்கறையுள்ள தோழர்கள் இயக்கமாய் ஒன்றிணைய வேண்டும்.

சாத்தியமானதே.

Saturday, August 29, 2015

அழைப்பு 14இன்று மாலை அரும்பாவூர் உளிகள் அமைப்பினர் நடத்தும் கல்வி விழிப்புணர்வு விழாவில் உரையாற்றுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம்.

Wednesday, August 26, 2015

உறவை கொடையளிக்கும் சாலை

பன்னிரண்டு நாட்களாக தொடர்ந்து காலை வேளையில் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

போக இரண்டரை வர இரண்ரை என்று ஒவ்வொரு நாளும் ஐந்து கிலோ மீட்டர் நடக்கிறேன்.

சுடுகாடு தாண்டியதும் இரண்டு தாயார்கள் சொம்போடு கல்லெடுத்துப் போட்டு அதன் மேல் அமர்ந்து பேசியவாறே பால்காரருக்காக காத்திருக்கிறார்கள்.

ரோவர் ஆர்ச் முன்னால் பால்கடையொன்றில் ஒரு தோழர்  பால் அளந்தபடி இருக்கிறார்.

கிருஷ்ணா தியேட்டர் தாண்டி நடக்கையில் அந்த நேரமே குளித்து பட்டை அணிந்தபடி பால் சொம்போடு அந்தத் தோழரை எதிர் கடக்கிறேன்.

இப்போதெல்லாம் அந்தத் தாய்மார்கள் ஒரு புன்னகையை உதிர்க்கிறார்கள்.

பட்டை அணிந்த அந்தத் தோழரும் நானும் வணக்கத்தைப் பரிமாறத் தொடங்கியுள்ளோம்.

விரைவில் பேசிக் கொள்வோம்.

யார் சொன்னது ரத்தத்தில்தான் உறவு முகிழ்க்குமென்று?

அதிகாலைச் சாலை எனக்கிரு தாய்களையும் சகோதரனையும் கொடையளிக்கிறது.

யாரையேனும் ஒருவரை பார்க்க முடியாமல் போனால் அந்த நாள் முழுமை பெற மறுக்கிறது.

இடையில் நிற்காது நடை

Tuesday, August 25, 2015

12 திருவாளர்.கழிவறை

யோசித்துப் பார்க்கிறேன்,


திருவாளர் கழிவறை என்று யாருக்கேனும் பெயர் வைத்து அழைக்க இயலுமா?

கேவலமான பட்டப் பெயரால் விளிம்புநிலை மக்களை அழைப்பதில் எந்தக் கூச்சமும் காட்டாத நம் மண்ணில்கூட இது சாத்தியமில்லை என்றே படுகிறது.

“மண்ணாங்கட்டி”, “மண்வெட்டி” என்பது வரைக்கும் கூட இது நகர்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராமசாமி என்ற தனது பெயரால் அழைக்கப் படும் போது திரும்பிப் பார்க்காத மனிதன் “ மண்ணாங்கட்டி” என்று அழைத்ததும் திரும்பிப் பார்க்கிற நிகழ்வுகள் இங்கு ஏராளம் இருக்கவே செய்கின்றன.

அந்த அளவிற்கு பட்டப் பெயரோடு ஒன்றிப் போகும் விளிம்பு நிலை மனிதன்கூட தன்னை யாரேனும்  ”கக்கூசு” என்றழைத்தால் கொன்றே போடுவான்.

அனால் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய பிரபலமான ஒரு பெரிய மனிதரை “ திருவாளர். கழிவறை” (mr.toilet) என்று அழைப்பதில் ஒரு நாடு பெருமைப் படுகிறது.

அதைவிட முக்கியம் என்னவென்றால் அப்படி தான் அழைக்கப் படுவதில் எதைவிடவும் பெருமை கொள்கிறார் அந்த பெரிய மனிதர்.

இது சாத்தியப் பட்டிருக்கிறது சிங்கப்பூரில்.

ஜாக்சிம் என்ற பெரிய மனிதரைதான் திருவாளர். கழிவறை (MR.TOILET) என்று அழைக்கிறார்கள். அப்படி அழைக்கப் படுவதற்கு அவர் என்ன செய்தார்?

கழிவறைகளின் அவசியத்தை சிங்கப்பூர் மக்களிடம் இயக்கமாகக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அதற்காகத்தான் அவரை மக்கள் அப்படி கொண்டாடுகிறார்கள். அவர் தந்த அழுத்தத்தின் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த விவதமொன்றில் சிங்கப்பூரின் பிரதிநிதி திரு மார்க் நியோ அவர்கள் நவம்பர் 19 ஐ உலக கழிவறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மன்றாடினார்.

இந்தக் கோரிக்கையை முன் வைப்பதற்காக தான் கேலி செய்யப் படலாம் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். அதை வெளிப்படையாக அந்த மன்றத்தில் பதியவுமே செய்தார். யார் தன்னை எவ்வளவு கேவலமாக பகடி செய்த போதிலும்  இந்தக் கோரிக்கையிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். உலகத்தின் இந்த நொடியின் மிக அவசியமான ஒரு பிரச்சினையைத் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், ஆகவே அந்த மாமன்றம் அது குறித்து கவனம் குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் எதிபார்த்தபடியே அவர் பகடி செய்யப் பட்டாரா இல்லையா என்பதற்கு சான்றெதுவும் இல்லை. என்றாலும் அதற்கு வாய்ப்பிருக்கவே இருக்கிறது. ஒருக்கால் வெளிப்படியாக அதை செய்ய தைரியம் இல்லாதவர்கள் மனதிற்குள்ளேனும் அவரை பகடி செய்திருப்பதற்கு வாய்ப்புகளுண்டு.

உலகில் 250 கோடிக்கும் சற்று கூடுதலான மக்களுக்கு சுகாதாரமான கழிவறை இல்லை என்றும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியையே கழிவறையாகப் பயன் படுத்துகிறர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனில், இவ்வளவு வளர்ந்தநிலை விஞ்ஞானத்தை பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் நேரத்தில் 110 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதியே இல்லை என்பது எவ்வளவு கொடுமை. இவர்கள் திறந்த வெளியை கழிவறைகளகப் பயன்படுத்துவது சூழலை பாதிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இன்றைய உலக மய சூழலில் அதற்கு அவ்வளவு மறைவான இடம் எங்கே இருக்கிறது.

திறந்த வெளியை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு புதர் உள்ள இடங்களைத்தான் நாடவேண்டும். கிராமங்களில் இத்தகைய இடங்களை மந்தை என்பார்கள். வெளிச்சத்தில் போக முடியாது. இருட்டினால்தான் போக முடியும். புதர், இருட்டு கழிவறை கட்டவே வசதியற்ற கிராமப் புற ஏழை மக்கள் கை விளக்கிற்கு எங்கு போக முடியும்? இரவு நேரத்தில் புதர் பக்கம் ஒதுங்கியவர்களில் பாம்பு கடித்து செத்தவர்களின் எண்னிக்கை யாருக்குத் தெரியும். 

கழிவறை கட்டவே வக்கற்ற ஏழைமக்கள் எப்படிச் செத்தால் யாருக்கென்ன கவலை?

இதைவிடக் கொடுமை எவ்வளவு அவசரமென்றாலும் இருட்டும் வரை காத்திருக்க வேண்டும்.

”ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது “ என்பார்கள் ஆனால் பள்ளிகளில் எதை கற்றுத் தருகிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு மூத்திரத்தை அடக்கக் கற்றுத் தருகிறோம் என்று ஒரு கட்டுரையில் சொல்வார் தி. பரமேசுவரி.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கிராமத்தில் அல்லது, கழிவறை இல்லாத சிறு நகரத்தில் வசிக்கக் கூடிய ஒரு பெண்ணிற்கு மதிய நேரத்தில் இயற்கை உபாதைக்கான அறிகுறி தெரிகிறது எனில் அவர் எங்கு போவார்? பல பர்லாங்குகள் கடந்து போனால்தான் புதர் கிடைக்கும்.அதுவரை அடக்கிக் கொண்டே போகும் அவஸ்தையை, வலியை எப்படி எழுதுவது.

பயணத்தில் இருக்கிறோம். பசிக்கிறது. இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் ஒரு நல்ல உணவகம் கிட்டும் எனில் ஒரு மணி நேரம் பசியை அடக்கலாம். இருட்டும் வரை இதை எப்படி அடக்குவது?

பெரும் பகுதி இயற்கை உபாதைகளுக்காக இவர்கள் ஒதுங்கும் பகுதி சாலை ஓரங்கள்தான். அப்படி இருக்கும் போது சாலையில் வாகனங்களோ, மனிதர்களோ கடக்க நேரிட்டால் இவர்கள் படக் என்று எழுந்து நிற்க வேண்டும்.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். இயற்கை அழைப்பினை ஏற்று கழித்துக் கொண்டிருக்கும் வேளை யாராவது ஒரு நிமிடம் எழுந்து நில் என்று சொன்னால் கொன்றே போட மாட்டோமா?

ஆனால் கழித்துக் கொண்டிருக்கும் வேளை ஏதேனும் வாகனத்தின் ஒலியையோ ஒளியையோ கண்டு விட்டால் நிறுத்திவிட்டு அப்படியே எழுந்து நிற்க வேண்டுமே அந்தக் கொடூர வலியின் அவஸ்தையை இத்தனை ஆண்டுக்காலம் ஆண்ட நம் தலைவர்கள் உணர்வார்களா? 

தண்ணீர் எடுக்க எம் தாய்மார்கள் இரண்டு மூன்று மைல்கள் கால் கடுக்க நடந்து, அங்கு பல நேரம் கால் நோக காத்திருந்து நீரெடுத்து வரவேண்டுமென்றால் மூத்திரம் போக ஒதுங்க இருட்டும் வரை காத்திருக்க வேண்டிய அவலம்.

ஏறத்தாழ இரண்டு லட்சம் குழந்தைகள் போதிய கழிவறைகள் இல்லாமையால் வருடா வருடம் இறக்கிறார்கள் என்கிற செய்தியை மார்க் நியோ வேதனையோடு குறிப்பிடுகிறார். 

ஆக கழிவறைப் போதாமை இரண்டு லட்சம் குழந்தைகளை வருடா வருடம் கொல்கிறது. இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் போதிய கழிவறைகளை கட்டுமானித்தால் வருடா வருடம் இரண்டு லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றலாம். 

போதிய சத்துணவு இல்லாமையாலும் பல லட்சம் குழந்தைகள் வருடா வருடம் செத்து மடிகிறார்கள்.போதிய கழிவறையின்மையாலும் பல லட்சம் குழந்தைகள் செத்து மடிகிறார்கள். இதற்கு ஒரு வழி காணாது சந்திரனுக்குப் போயென்ன? சூரியனைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தின் கோபுரத்தில் வைத்தென்ன? 

பாராளு மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் நமது பிரதான எதிர்க் கட்சியின் பிரதம வேட்பாளரான திரு மோடி அவர்கள் “ கழிவறை கட்டுவதற்கே முன்னுரிமை. கோயில்கள் இரண்டாம் பட்சமே” என்று பேசத் துவங்கியிருக்கிறார்.

இதைப் பார்த்ததும் வடையை எங்கே அந்த மனுஷன் கொண்டு போய்விடுவாரோ என்ற அச்சத்திலும் பதட்டத்திலும் காங்கிரஸ் எதிர்குரலெடுக்கத் தொடங்கியிருக்கிறது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரிஜா வியாஸ் இது தங்களது அரசிந்திட்டம் என்றும், கோவிலை விட கழிவறைகளே அவசியம் என்பதை மோடிக்கு முன்பே தங்கள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பேசியிருப்பதையும் சொல்வதோடு தங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ளதையும் குறிப்பிடுகிறார்.

கிரிஜா அவர்கள் சொல்வது உண்மைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஜெயராம்தான் மோடியை முந்தி இதை சொன்னவர். நாம் கேட்பது என்னவெனில் ஜெயராம் பேசியது சரி, நீங்கள் ஒதுக்கியதும் சரி, என்ன விளைவு?

முறையான கழிவறைகளைக் கட்டுவதுதான் எங்கள் செயல்திட்டம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தவர்கள் சொல்வது ஏழைகளை எள்ளி நகையாடுவது அன்றி வேறென்ன? இதை செயல் திட்டமாக சொல்வதற்கே அரை நூற்றாண்டுக்கும் மேலே தேவைப் படுகிறது உங்களுக்கு எனில் நிறைவேற்ற எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்.

கோவில் கட்டுவதாகச் சொல்லியே இதுவரை அரசியலை நகர்த்தியவர்கள் இப்போதுகழிவறையைப் பற்றி பேசுகிறார்கள் என்றால் அது ஏதோமக்களின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையால் அல்ல, இன்றைய தேவை கோவில் அரசியல் அல்ல, கழிவறை அரசியலே என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுதான்.

சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் ஒரு புரிதலைத் தந்தது. ஒரு திருமணத்திற்காக கரூர் சென்றேன். பேருந்து நிலையம் இறங்கியதும் வேக வேகமாக கழிவறை நோக்கி நகர்ந்தேன். “ஒன்னுக்கு ரெண்டு ரூபா, ரெண்டுக்கு மூனு ரூபா “ என்று டோக்கன் கொடுப்பவர் கத்திக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாய் உள்ளே நுழைந்தால் ரேஷன் கடைக் கூட்டத்தில் பாதி தேறும் போல இருந்தது. கைகளைப் பின் கட்டி, கால்களை தரையில் அழுத்தி , இடுப்பை நெளித்து என என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன். ஏறத்தாழ அனைவரும் அப்படித்தான்.

அங்கு நின்று கொண்டிருந்த இருவர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. பணி மூப்பை மதிக்காமல் பதவி உயர்வினை பள்ளி நிர்வாகங்கள் வழங்கிக் கொண்டிருப்பது பற்றி விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

கோவத்தை எள்ளலோடு வெளிப்படுத்தும் ஆற்றல் இருந்தது இருவருக்கும்.
அந்த அவஸ்தையின் உச்சத்திலும் கொடுமை கண்டு எள்ளலோடு அவர்களால் பொங்க முடிந்தது.

என்னாலும் ரசிக்க முடிந்தது.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தார்கள்.

“ தனியார் பள்ளி ஆசிரியர்களா சார்?”

“ ஆமாம் சார். நீங்கள்?”

“ நானும்தான்”

இப்படி எங்களுக்குள் ஒரு உரையாடல் துவங்கியிருந்த நேரத்தில் ஒரு அறை காலியாகவே எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் உள்ளே நுழைந்து விட்டான்.

“ இங்க வரிசையில நிக்கறவனெல்லாம் மனுசனா இல்லையா?” என்று சகட்டு மேனிக்கு ஒருவர் திட்ட ஆரம்பித்து விட்டார்.

மற்றொரு ஆசிரியர் அவரை சமாதானப் படுத்தினார்.

சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்,

“ பாருங்க சார், இவனவிட ஏழு வருஷம் ஜூனியரை தலைமை ஆசிரியரா போட்டாங்க. அப்பக் கூட சிரிச்சான். இன்னமும் அந்த ஹெச்.எம் மோட நல்லாதான் பழகுறான். ஆஃப்டர் ஆல் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி பாயறான் பாருங்களேன்”

 “ எதுடா சின்ன விஷயம்?”

“ இது அவ்வளவு பெரிய விஷயமாடா?”

“ இல்லையா பின்ன. HM ப்ரொமோஷன உட்டுக் கொடுத்ததால என் பேண்ட்டு நாறாது. இங்க அப்படியில்லை”

இதுதான் ஞானத்தின் உசரம்.

மக்கள் தொகையின் அளவுக்கேற்ற கழிவறகளை அரசு கட்டமைக்க வேண்டும். அதை சுகாதாரத்தோடு பராமரிக்க வேண்டும்

இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று ரூபாய் கொடுத்து என்னால் போக முடிந்தது . போனேன். காசில்லாத ஏழை என்ன செய்வான். வேறு வழியின்றி பேருந்து நிலையத்திலேயே போவான். கழிவறைகள் வேண்டுமளவும், சுகாதாரத்தோடும், இலவசமாகவும் அமைய வேண்டும்.

நம்பிக்கையிருக்கிறது,

இந்தத் தேர்தலில் அதிகம் பேசப்பட உள்ளவைகளுள் கழிவறையும் உண்டு.

நன்றி: காக்கைச் சிறகினிலே

Monday, August 24, 2015

13 வேட்டி கட்டிய அம்மாயி டீ ஆத்திக் கொண்டிருக்கிறாள்

”சிரபுஞ்சியில் மழையே சரியாப் பெய்றடு இல்லையாமேப்பா?”

படிக்கட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கீர்த்திம கேட்டாள்.

“ஆமாண்டா”

“அப்புறம் ஏன், இன்னமும் உலகத்துலேயே அதிக மழை அங்கதான் பெய்யுதுன்னு பொய் பொய்யா நடத்துறீங்க”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் சொல்லித் தருகிற பொய் இது ஒன்று மட்டும்தானா மகளே என்று கேட்கத் தோன்றியது.

ஏன் ஒன்றைச் சொல்லி ஒரு நூறை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று எண்ணி மௌனத்தை விரித்துக் கொண்டிருந்தேன். அவளாகவே அடுத்ததைக் கேட்டாள்.

”நம்ம ஊரைப் போலவே அங்கையும் மழை இல்லைனா நம்ம ஊரைப் போலவே அங்கையும் பூமி வறண்டு வெடித்துதான் கிடக்குமா?”

எனக்கு வேலை வைக்காமல் இடை மறித்த விக்டோரியா,

“நம்ம ஜனங்க மாதிரி எல்லா ஊர் ஜனகளுக்கும் மனசு வறண்டுதானே கிடக்குது, மனசு வறண்டு கிடந்தா பூமியும் வறண்டுதானே கிடக்கும்.

மனசு ஈரப்பட்டாதானே பூமியும் ஈரப்படும்.”

“அதானே”

ஏதோ பெரிதாய் புரிந்ததுபோல் கீர்த்தி சொல்லி வைத்தாள்.

ஆமாம், ஜனங்களின் மனதில் ஈரமே இல்லையா?

கொடைக் கரிசலாய் மனித மனங்கள் வறண்டு வெடித்துதான் கிடக்கின்றனவா?

இல்லை என்று முகத்தில் அறைந்து சொல்லின, போன முறை சென்னி போய் திரும்பியபோது நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள்.

பொதுவாகவே “ தாய்மை:” என்பதை புனிதம் என்று சொல்வதுகூட பெண்களை இன்னும் கொஞ்சம் கசக்கி வேலை வாங்கத்தானோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டுதான்.

தாய்மைக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதன் மூலம் தகப்பனது பொறுப்பை, வேலைப் பகிர்வை தள்ளுபடி செய்து பெண்ணின் உழைப்பை இந்தச் சமூகம் சுரண்டுவதாகவே படும்.

ஆனால் எல்லாம் கடந்து தாய்மை ஈரமானது என்பது மீண்டும் இன்னொரு முறை நிரூபனமானது அன்று காலை.

அன்று கால பயணச்சீட்டு வாங்குவதற்காக சைதாப்பேட்டை ரயிலடியில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். கொஞ்சம் நீண்ட வரிசை. வெளியே சைக்கிள் ஸ்டாண்ட் வரைக்கும் நீண்டிருந்தது.

சன்னமாய் தூறத் தொடங்கியது.

உள்ளே ஓடி விடலாம் என்றால் எனக்கும் கட்டிடத்திற்கும் இடையில் நான்கைந்து பேர்களே இருந்தனர். எனக்குப் பின்னே ஏறத்தாழ அறுபது அல்லது எழுபது பேர் நின்றிருந்தனர். கொஞ்சம் நனைவதற்கு பயந்து உள்ளே போனால்பிறகு கடைசி ஆளாய் நிறு பயணச்சீட்டு வாங்க ஒரு மணி நேரம் கூடுதலாக செலவழிக்க நேரிடும். எனவே சன்னமாய் நனைந்து விடுவது என்று முடிவெடுத்தேன்.

ஓரத்தில் சாக்கு விரித்து அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அம்மா சொன்னார்,

“இந்த ரயிலு இல்லேன்னா அடுத்த ரயிலு, ஓடியாப் போகப் போகுது. நனையாமக் கொஞ்சம் ஒதுங்குப்பா. ஏற்கனவே தும்முற.காச்ச கீச்ச வந்துறப் போகுது.”

ஒரு த்ய்ய் எந்த நிலையில் இருந்தாலும் பொங்கிப் பிரவாகிக்கவே செய்யும் ஈரம்.

ஒரு வழியாய் ரயில் பிடித்து தாம்பரம் இறங்கி அங்கிருந்து பேரம்பலூருக்கு பேருந்து ஏறினேன்.

நல்ல பசி.

எங்கேனும் சாப்பிட நிறுத்த மாட்டார்களா என்று வயிறு கிடந்து அலைந்தது.

இன்னும் கொஞ்சம் விட்டால் பெருங்குடல் சிறு குடலைத் தின்றுவிடும் என்கிற ஒரு உச்சத்திற்கு பசி போன நிலையில் ஒரு வழியாய் பேருந்து ஒரு மோட்டலுக்குள் நுழைந்தது.

நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் நன்றி சொன்னது வயிறு.

இறங்கியதும் இளநீர் விற்குமிடத்தைத் தேடினேன்.

இரண்டு காரணங்களுக்காக நான் மோட்டல்களுக்குள் நுழைவதில்லை.

ஒன்று,

அங்கு கிடைக்கும் உணவின் தரம்.

மற்றொன்று,

மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து மோட்டலில் சாப்பிடும் காசை வைத்துசின்னதாய் ஒரு சாப்பாட்டுக் கடை வைத்து விடலாம். அப்படியொரு கொள்ளை விலை.

நமக்கென்றுதான் ஒரு ராசி உண்டே. மோட்டலைச் சுற்ரி சுற்ரி வந்தும் இளநீர் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லை. உள்ளே போய்விட வேண்டியதுதான் என்று எட்டிப் பார்த்தேன்.

குழம்பின் நிறமே வயிற்ருக்கு எரிச்சலைக் கொண்டு வந்தது.

சரி என்று சொல்லி தேநீர் ஸ்டாலுக்குப் போனேன். கடும் வெயிலாக இருந்ததால் கூட்டமே இல்லை. ஒரு சம்சாவை எடுத்தேன். முடித்ததும்,

“ஒரு காபி கொடுங்க”

இன்னொரு சம்சாவை எடுக்கப் போனேன்.

“சார், வேணாம் சார். வெயில். வயித்துக்கு ஒத்துக்காது. பன்னோ பிஸ்கட்டோ சாப்பிடுங்க சார்”

யாரும் பார்க்கிறார்களோ என்ற பயத்தோடு சன்னமான குரலில் சொன்னார் டீ மாஸ்டர்.

“ ஏண்டா ராஸ்கோலு, எப்ப பாத்தாலும் இப்படி வடையும் சம்சாவுமா வாங்கிட்டு வர. கண்ட கண்ட எண்ணெயில சுத்தமில்லாத மாவுல செஞ்சு தொலச்சிருப்பானுங்க. புள்ளைங்களுக்கு ஒத்துக்காதுன்னு எத்தன தவ சொல்றது” என்று பிள்ளைகளுக்கு வடை அல்லது சம்சா வாங்கி வரும் போதெல்லாம் அம்மாயி திட்டுவது நினைவுக்கு வந்தது.

மீண்டும் டீ மாஸ்டரைப் பார்த்தேன்.

அங்கே வேட்டி கட்டிய அம்மாயி டீ ஆத்திக் கொண்டிருப்பதாகவே பட்டது.

ரசனை 12

" ஆகப் பெரிய வன்முறைகளில் ஒன்று குழந்தைகளை அமைதிப் படுத்துதல்"

எதற்கு இப்படியெல்லாம் எழுதறான் இந்தப் பையன் Stalin Saravanan.

வாசகனான நம்மை அவனோட ரசிகனாக்காம ஓயமாட்டான் போல.

ரொம்பப் பெருசா வாடா சாமி

Sunday, August 23, 2015

மூன்று ஏன் கள்

டெல்லி சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு இளங்கோவன் அவர்களை கைது செய்வதற்காக தமிழக காவல் துறையினர் அங்கு சென்றுள்ளதாக ய்தித்தாள்களின் வழி அறிய முடிகிறது.

மூன்று விஷயங்கள்

1 அப்படி அந்த அளவிற்கு தரமிழந்து ஏன் பேசினார் திரு இளங்கோவன்

அது தவறு என்பதை உணர இயலாத அளவிற்கு கீழ்மையான ஆளில்லை அவர். பிறகு அதற்காக வருத்தம் தெரிவிப்பதில் அவர் தயக்கம் காட்டுவதேன்?

2 முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தான் கைது செய்யப்பட வாய்ப்புகளதிகம் என்ற நிலையில் அதை எதிர் கொள்ளாளாமல் ஏன் டெல்லி போனார்?

3 அவரைக் கைது செய்ய டெல்லி வரை செல்ல வேண்டிய அவசரம் ஏன்? இது அப்பட்டமான பழி வாங்கலாகத் தெரியவில்லையா?

Saturday, August 22, 2015

குட்டிப் பதிவு 44

காலையில் நடை பயிற்சியில் இருந்தவனை அழைத்து நடையெல்லாம் எப்படி போகுது என்றார் மாலு. போறப்ப ஃப்ரெஷாதான் இருக்கு திரும்பறப்பதான் சோர்வாயிடுது என்றேன்.
கடையில் ஃபைவ் ஸ்டார் சப்பிக் கொண்டிருந்து பொடிசு சொல்றான்,
“ அப்ப திரும்பிட்டு அப்புறமா போங்களேன்”

Friday, August 21, 2015

அடிநுனியின் முகவரி

தருமபுரி சம்பவத்தின் போது சென்னை இக்‌ஷா அரங்கில் “விடுதலை குயில்கள்” சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் தோழர் திருமாவளவன் அவர்கள் மிகுந்த நிதானத்தோடும், பக்குவத்தோடும் அதே நேரம் மிகுந்த ஆழத்தோடும் கூடியதொரு மிகச் சரியான உரையினை நிகழ்த்தினார்.
மட்டுமல்ல, அது போதும் அதன் பிறகும் மிகுந்த நிதானத்தோடு கூடிய அவரது அணுகுமுறையை நான் மிகுந்த நன்றியோடு கவனித்து வருகிறேன்.
அவர் கொஞ்சம் பதறியிருந்தாலும் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்குமென்பதையும் நான் அறிவேன்.
அவர்மீது தாக்குதலைத் தொடுப்பதற்கு தயாராகியிருக்கிறார்கள் எனில் மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த செயலின் ஆணிவேரின் அடிநுணியின் முகவரியையும் அது குடிக்க நீராதாரம் எந்த வீட்டிலிருந்து வந்தது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும், அம்பலப் படுத்த வேண்டும், தண்டிக்க வேண்டும்.
தோழர் பதறிவிடாமலும் தனது தோழர்கள் பதறாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.
ஆயிரம் வேறுபாடுகள் அவரோடு இருந்தாலும் இந்த நேரத்தில் அவரோடு இரண்டு வார்த்தை பேசிவிட ஆசை. எண் தந்து உதவுங்கள்.

14 ஒரு வழக்கும் ஒரு சாட்சியும்

அவர் தீவிரமான பக்தர்தான். ஆனால் வெறித் தனமான பக்தி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. என்ன, ஒரு விதத்தில் நமக்கு நேரெதிரானவர். அவருக்கு எம்மதமும் சம்மதம். நமக்கோ எந்த மதத்தோடும் சம்மதம் இல்லை.

எதையும்விட முக்கியமானது அவரது அர்ப்பணிப்போடு கூடிய தொழில் பக்தி. அர்ப்பணிப்பு என்றால் அப்படியொரு அர்ப்பணிப்பு.

“ஓன்னு அழுதாச்சும் எங்களப் படிக்க வச்சிடுவாருங்க சார்”

பிள்ளைகள் இப்படிச் சொல்லி அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

பணியில் சேர்ந்த ஆண்டிலிருந்து ஒரு ஆண்டுகூட விடாமல் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக தனது பாடத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி விழுக்காட்டினைத் தருபவர்.

அன்று மிகுந்த விரக்தியோடு ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தார்.

“ஏன் அண்ணே ஒரு மாதிரியா உக்காந்து இருக்கீங்க. உடம்பு ஏதும் சரியில்லையா?”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை எட்வின்”

“பசங்க ஏதும் எழுதிக் காட்டலையா அண்ணே?”

பள்ளியில் பிள்ளைகள் யாரேனும் தவறிழைத்தாலோ அல்லது அவர் சொன்ன வேலையை செய்யவில்லை என்றாலோ அவர்களைத் தண்டிக்க மாட்டார். மாறாக தன்னையே வருத்திக் கொண்டு, பல நேரங்களில் சாப்பிட மறுத்து அடம் பிடித்து இப்படித்தான் தன்னையே வருத்திக் கொள்வார்.அதனால்தான் அப்படிக் கேட்டேன்.

“என்ன எட்வின், மனசாட்சியே இல்லாம இப்படி பண்றாங்க? கேட்டதுல இருந்து மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எட்வின்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, இன்னிக்கு காலைல பசங்கள கூட்டிட்டு இருங்களூர் போனோம் இல்ல...”

புரிந்தது. இப்போதெல்லாம் ஜனவரிக்குப் பிறகு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு யாரேனும்புத்துணர்வு முகா, அல்லது அவர்களுக்கான பிரார்த்தனை என்கிற வகையில்மாணவர்களைத் திரட்டி விடுகின்றனர்.

அதிலும் பொறியியல் கல்லூரிகள் தங்களது கல்லூரிக்கான சேர்க்கையை கவனத்தில் கொண்டு பள்ளிகளுக்கு பேருந்துகளை அனுப்பி புத்தாக்க முகாம்களுக்கு மாணவர்களைத் திரட்டுகிறார்கள்.

அதுபோல அன்று காலை இருங்களூரில் இருக்கும் ஒரு போதகர் சிறப்பு வழிபாட்டிற்காக பள்ளிகளிலிருந்து மாணவர்களைத் திரட்டியிருந்தார்.

பிள்ளைகளோடு அண்ணனும் போயிருந்தார்.அங்கு நடந்த ஏதோ ஒன்று அவரது மனதை சிராய்த்திருக்க வேண்டும்.

“என்ன நடந்துச்சுங்க அண்ணே?”

“எல்லாம் நல்லாத்தான் நடந்துச்சு எட்வின். அதிலுங் குறிப்பா அந்த பாஸ்டர் புள்ளைகளுக்காக உருகி அழுது ஜெபம் செய்தது மனச அப்படியே உருக்கிடுச்சு எட்வின்.”

“அப்புறம் என்னங்க அண்ணே?”

“ஒரு பாப்பா சாட்சி சொல்ல வந்துச்சு. அது சொல்லுது, நான் போன வருஷம் ஒரு பேப்பர்ல இருபது மார்க்குக்குத்தான் எழுதினேன்.  ஆனால் கர்த்தர் மனதிறங்கி, பேப்பர் திருத்தும் ஆசிரியரின் மனதை இறங்க வைத்து எனக்கு எண்பது மதிப்பெண்களை வாங்கித் தந்தார் என்கிறது.இது பசங்கள கெடுத்துடாதா எட்வின். படிக்காம சாமி கும்பிட்டாப் போதும் என்கிற மனநிலையை உண்டாக்கிவிடாதா?”

”ஆமாம் விடுங்க அண்ணே,” என்று அவரை ஒருவழியாய் சமாதானப் படுத்திவிட்டு இருந்த சமாதானத்தை தொலைத்தவனாய் நகர்ந்தேன்.

அவரைப் பொறுத்தவரை இத்தகைய சாட்சிகள் மாணவர்களை ‘எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவார்’ என்ற மனநிலைக்குத் தள்ளி படிக்க விடாமல் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதே என்ற கவலை. அது கடந்து அதை அவர் அரசியல் படுத்தவில்லை.

ஆனால் நமக்கோ அதில் அலச சில இருக்கின்றன. அதற்குள் போகுமுன் ஒரு வழக்கை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

அது ஒரு விசித்திரமான வழக்கு.

பொதுவாக தேர்விலே ஏதேனும் ஒரு பாடத்தில் அல்லது சில பாடங்களில் தோல்வி அடையும் மாணவனோ மாணவியோ தான் நல்ல முறையில் தேர்வினை எழுதியிருப்பதாகவும் எனவே எனது தாளினை மறு மதிப்பீடு செய்ய உத்திரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடுவது வாடிக்கை.

சில நேரங்களில் தான் பெற்றிருக்கிற மதிப்பெண்ணிற்கும் தான் எழுதியதற்கும் கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் இருப்பதால் தனது தாளினை மறு மதிப்பீடு செய்ய உத்திரவிடக் கோரி நீதிமன்றத்தை அனுகுவதும் உண்டு.

பல நேரங்களில் இதில் அவர்கள் வெற்றி பெறுவடு உண்டு. இன்னும் சொல்லப் போனால் மறு மதிப்பீட்டிற்குப் பிறகு அந்தக் குழந்தை மாநிலத்தில் முதலிடத்திற்குப் போனதும் உண்டு. இதில் இரண்டுவகையான துயரங்கள் உண்டு.

ஒன்று யாரோ ஒரு ஆசிரியரின் பிழையால் அல்லது கவனக் குறைவால் அந்தக் குழந்தை தனக்கு உரிய இடத்தை சில காலம் இழந்திருந்தது.

இன்னொன்று, அதே ஆசிரியரின் கவனக் குறைவால் தனக்கு உரியதற்ற இடத்தில் கொஞ்ச காலம் இருந்து தற்போது அந்த இடத்தி இழந்த மற்றொரு குழந்தை.

ஒரே ஆசிரியரின் சன்னமான கவனக் குறைவால் இரண்டு குழந்தைகள் அனுபவித்த மன உளைச்சல் சொல்லி மாளாது.

ஒருக்கால் அந்தக் குழந்தை நீதிமன்றத்தை அணுகியிருக்காவிட்டால் அந்தக் குழந்தைக்கு உரிய இடம் கிடைக்காமல் போனது, அந்த இடத்திற்கு தகுதியற்ற குழந்தையிடம் அந்த இடம் போனது என்ற வகையில் அது ஒரு இரட்டைக் குற்றமாகவே அமைந்திருக்கும்.

இப்போது கேட்கலாம்,

முதலிடத்திற்கு தகுதியற்ற ஒரு குழந்தை அந்த இடத்திலிருந்து கீழிறக்கம் செய்யப்பட்டது நியாயம்தானே? அதில் அந்தக் குழந்தை மன உளைச்சல் அடைவதற்கு என்ன இருக்கிறது?

மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமாகக்கூடப் படும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.,

தன்னை முதலிடத்தில் அமர்த்தும்படி அந்தக் குழந்தை யாரிடத்தும் மனு எதுவும் கொடுக்கவில்லை. யாருடைய தவறாலோ அந்த இடத்திலிருந்து விருதுகள், பாராட்டுக்கள், எல்லாவற்றையும் அனுபவத்துவிட்டு  தற்போது அவை தனக்குரியவை அல்ல என்றானபின் தனது உறவினர்களை, நண்பர்களை,  மற்றவர்களைப் பார்க்க எப்படிக் கூனி குறுகியிருப்பாள்.

ஆனால் இது மாதிரி வழக்குகள் வழக்கம்தான்.

ஆனால் ஒரு மாணவன் தான் கணிதப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றது சாத்தியமே இல்லாத ஒன்று என்று வழக்கிற்குப் போனான்.திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தான் கணக்கிலே எழுபது மதிப்பெண் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும், ஆகவே முறையாக மறு மதிப்பீடு செய்து தன்னை கணிதத்திலே தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கிற்குப் போகிறான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

இப்படியெல்லாம்கூட நடக்குமா? என்று நினைக்கத் தோன்றும்.

ஆனால் நடந்தது.

அதிகபட்சம் அறுபத்தி ஐந்து மதிப்பெண்களுக்குமேல் தான் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும் தனக்கு எழுபது மதிப்பெண் வழங்கி தனது எதிர்காலத்தை பாழாக்கியிருக்கிறார்கள் என்பதே வழக்கின் சாரம்.

சொன்ன மாதிரியே அவன் அறுபத்தி ஐந்து மதிப்பெண்கள்தான் அவன் பெற்றிருந்தான்.

நடந்தது இதுதான்.

அவன் கட் ஆஃப் கணக்கில் வரும் மற்ற எல்லாத் தாள்களிலும் இருநூறு எடுத்திருந்தான். கணிதத் தேர்வன்று வினாத் தாளை வாங்கியதும் 180 மதிப்பெண் மட்டுமே வாங்க முடியும் என்பது புரிந்திருக்கிறது. 180 மட்டுமே வாங்கினால் பொறியியல் சேர்க்கைக்கான கடாஃப் குறையும் என்பது புரிந்திருக்கிறது.

ஆனால் 180 மதிப்பெண் வாங்குவதற்குப் பதிலாக தொவி அடைந்துவிட்டால் உடனடித் தேர்வில் நன்கு எழுதி 200 எடுத்துவிடலாம் என்று நினைத்தவன் 65 மதிப்பெண் வருமளவு மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விட்டான்.

திருத்திய ஆசிரியருக்கு இது தெரியாது.பாவம், 65 வாங்கி தோல்வி அடைகிறான் என்று கருதிய அவர் 5 மதிப்பெண்களை அங்கும் இங்குமாக நிரவி தேர்ச்சி பெறச் செய்துவிட்டார்.

அதற்கு அவர் கொடுத்த விலையும் பெற்ற தண்டனைகளும், அப்பப்பா எழுத்தில் சொல்லி மாளாது.

இப்போது அந்த சாட்சிக்கு வருவோம்.

20 மதிப்பெண்ணிற்கு மட்டுமே எழுதிய ஒரு குழந்தைக்கு எந்த ஒரு ஆசிரியனும் எண்பது போட முடியாது. இது எனது கால் நூற்றாண்டுக்கும் மேலாலான எனது கல்வி ஊழியத்தில் நான் கற்ற பாடம்.

மூன்று விஷயங்கள்தான் இருக்க வேண்டும்.

ஒன்று, ஊழல் நடந்திருக்க வேண்டும்.அதற்கு வாய்ப்பில்லை என்றே படுகிறது.

இரண்டு, அந்தக் குழந்தை பொய் சொல்லியிருக்க வேண்டும்.அல்லது, மூன்றாவதாக ஒருக்கால் ஏசுநாதரே திருத்திய ஆசிரியரின் மனதை இறங்க வைத்து இருபது மதிப்பெண்ணிற்கு மட்டுமே எழுதியிருந்தக் குழந்தைக்கு எண்பது மதிப்பெண்ணை வாங்கித் தந்திருக்க வேண்டும்.

ஊழல் நடந்திருக்கிறது எனில் அது சாட்சிக்குரிய விஷயம் அல்ல. அது கிரிமினல் குற்றம்.

இரண்டாவது எனில் அது மத அரசியலை நோக்கி நகர்த்தும். அது மிக மிக ஆபத்தானது.

மூன்றாவது எனில், ஏசு ஆசிரியரிம் பேசி இருபதை எண்பதாக்கிய குற்றவாளியாகிறார்.

ஒன்று சொல்வேன்,

சாமி இல்லை என்று சொல்கிற நாங்களே ஒரு கடவுளை இந்த அளவிற்கு கேவலப் படுத்த மாட்டோம்Thursday, August 20, 2015

ரசனை 11

வளி மண்டலம் பெரிதும் சேதமடைந்தது
உழைப்பவனின் குடைத்துணிபோல் ஏகத்துக்கும் கிழிந்து கிடக்கும் ஓசோன் மண்டலம்
காடுகளை இயற்கை வளங்களை இஷ்டத்திற்கும் சூறையாடியது
எதை எல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்து புவியை வெப்பப் படுத்தியது
போன்ற காரணங்கள்தான் மழை பெய்யாமல் இருப்பதற்கான காரணங்கள் என்றுதான் எல்லோரையும் போலவே நானும் இதுவரை நினைத்திருந்தேன்.
இன்று தூக்கக் கலக்கத்தில் முகநூலை மேய்ந்துகொண்டிருந்தபோது தோழர் சா.நாதன் ரவிகுமார் எழுதியிருந்தார்,
“கவிஞர்க்குப் பயந்து
வெயிலின் முதுகில்
மறைந்து கொண்டது
மழை”
கவிதையை சரியாய் எழுதியிருக்கிறேனா என்று தெரியவில்லை. நினைவில் உள்ளதை எழுதியுள்ளேன்.
அப்பாடா, என்ன ஒரு நச்.
ஆக மழை பெய்யாமல் போவதற்கு கவிஞர்களும் ஒரு பெரிய காரணம்.
கேட்கலாம், பிறகு அவ்வப்போது பெய்கிறதே எப்படி.? அது என்னைப் போன்றவர்கள் கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டதற்கான மழையின் ஆசீர்வாதம்.

37

புத்தகம் கேட்கும்
மகளின் கையில்
மயிலிறகு

யுவா இந்தியா


(20.08.2015 அன்று எழுதியது)

அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடி மற்றும் கிராமப்புறப் பெண்கள் அணி ஒன்று ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கால்பந்துப்போட்டியில் வெண்கலம் வென்ற செய்தி பல ஊடகங்களின் கவனத்தைப்பெற்றது. என்றாலும், கிரிக்கெட் மோகம் மட்டுமே அதிகமாக இருக்கிற நம்நாட்டில் இவர்கள் மீது கவனம் கிடைப்பதெல்லாம் சாத்தியமில்லை.
ஸ்பெயின் நாட்டில், விக்டோரியா கேஸ்டீஜ் நகரில், கேஸ்டீஜ் கோப்பைக்கான கால்பந்துப்போட்டி நடைபெற்றது. பதினான்கு வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான இந்தப்போட்டியில், யுவா இந்தியா என்னும் அமைப்பைச் சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். ஒன்பது அணிகளுக்கு எதிராக விளையாடி, மூன்றாம் இடம் பெற்று, சர்வதேசப்போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய இந்தப் பெண்களைப்பற்றியும், யுவா இந்தியா பற்றியும் கொஞ்சம் அலசுவது சுவையாக இருக்கும்.
பிரான்ஸ் கேஸ்ட்லர் 30 வயது இளைஞர். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். அரசியல் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும், ஹார்வேர்டு சட்டக் கல்லூரியில் சமரசம் மற்றும் பேச்சுவார்த்தையில் சான்றிதழும் பெற்றவர். ஜுடோ, ஐஸ் ஹாக்கி, ஸ்கையிங் ஆகியவற்றில் பயிற்றி பெற்றவர். இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பில் ஆலோசகராகப் பணியாற்றியவர்.
2008 மே மாதத்தில், தன் நண்பரின் அழைப்பின்பேரில், ஹுதுப் என்னும் கிராமத்துக்கு வருகிறார். அங்குள்ள பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கிறார். அப்போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் பெண் கல்வியில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிப்பை பாதியில் நிறுத்தும் பெண்களின் எண்ணிக்கை 67 சதவிகிதம். எனவே, பெண்கள் கல்வியைத் தொடர வேண்டுமானால், அவர்கள் தம்மை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு தேவை என்று கருதுகிறார். அதே சமயத்தில், தம் குழந்தைகளுக்கு வீடுதேடி வந்து கற்றுத்தருமாறு பெற்றோர் வேண்டுகின்றனர். ஒவ்வொருவர் வீட்டுக்கும் செல்வது சாத்தியமில்லை என்பதால், அனைவரும் வரக்கூடிய வகையில் ஒரு மையம் துவங்குகிறார். அதுதான் பிற்பாடு யுவா இந்தியா என உருப்பெறுகிறது. கடந்த ஐந்த ஆண்டுகளாக ஜார்க்கண்டில் கிராமத்தில் வசித்து தொண்டாற்றி வருகிறார் இவர்.
அமெரிக்காவில் உள்ள தன் நண்பர்கள் துணையுடனும், பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடனும் நிதி திரட்டி, ஜார்க்கண்ட் பழங்குடி பெண்களுக்கு கால்பந்து பயிற்சியளிக்க கிராமங்களிலேயே வசிக்கத்துவங்கினார். ஏற்கெனவே இந்திய கால்பந்து அணியில் பழங்குடியினர் நிறையவே இருப்பது நேயர்களுக்கும் தெரிந்திருக்கும்.
வெளிப்புற மக்களோடு பழகத் தயங்கும் பழங்குடியினரைக் கொண்டு கால்பந்து அணி உருவாக்குவது எளிதல்ல. முதலில் சுமன் என்ற பெண் அவரிடம் கால்பந்து பயிற்சி அளிக்குமாறு கேட்டிருக்கிறாள். ஓர் அணிக்குத் தேவையான அளவுக்கு பெண்களையும் சேர்த்துக்கொண்டு வந்தால் பயிற்சியளிக்கிறேன் என்றார் பிரான்ஸ். இப்படி பல அணிகள் பல கிராமங்களில் உருவாயின. ஒரு பெண் நான்கு மாதங்கள் வரை தவறாமல் பயிற்சியில் பங்கேற்றால், காலுக்கு ஷூவும் சாக்சும் கிடைக்கும். அதுவும், ஷூவுக்கான விலையில் மூன்றில் ஒரு பங்கு அந்தப் பெண்தான் தர வேண்டும் என்பது நிபந்தனை. அப்போதுதான் பொறுப்பும் ஆர்வமும் வரும் என்பதே இதன் காரணம். ஓராண்டுக்குள் யுவா அமைப்பின் 13 பெண்கள் பயிற்சி பெற்று, தேசியத் தரவரிசையில் 20ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்திற்கு முன்னேறினர். இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்பந்துப் பயிற்சியாளர்களாக உருவாகிறார்கள்.
5 முதல் 17 வரையான பெண்கள்தான் இதற்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏன் பெண்கள்தான் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்றால், பழங்குடி இனத்தவர்களில் 43 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள் திருமணம் செய்து குழந்தைகளுக்குத் தாயாகி விடுகிறார்கள். படித்த ஒரு பெண், தன் வருமானத்தில் 90 சதவிகிதத்தை குடும்பத்துக்காகச் செலவு செய்வாள், ஆணோ 35 சதவிகிதம்தான் குடும்பத்துக்குத் தருவான். பெண்கள் கல்வி கற்பதால் ஊட்டச்சத்துக்குறைவு விகிதம் 43 சதவிகிதம் குறைகிறதாம். இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
ஏன் வேறு விளையாட்டுகளை விட்டுவிட்டு கால்பந்தைத் தேர்வு செய்ய வேண்டும்? கால்பந்து என்பது குழுவிளையாட்டு. இதில் பங்கேற்பவர்களுக்கு ஆரோக்கியம், கல்வி, அர்ப்பணிப்பு, ஒற்றுமையுணர்வு ஆகியவை பற்றிய புரிதல் கிடைக்கிறது. மைதானத்தையும் அவர்களே தேர்வு செய்கிறார்கள். ஆக, இந்த அணிகளின் வெற்றியும் தோல்வியும் அவர்களுக்கே உரியது.
இவ்வாறு உருவான யுவா அணிதான் ஸ்பெயினுக்குச் சென்றது. அவர்களின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. பாஸ்போர்ட் வாங்க வேண்டுமானால் பிறப்புச் சான்றிதழ் தேவை. பழங்குடியினக் குழந்தைகள் எல்லாமே வீட்டில் பிரசவித்தவர்கள். எனவே சான்றிதழ் இல்லை. கிராமப் பஞ்சாயத்து ஊழியரிடம் கேட்டபோது, அவர்களை அடித்தும், அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கச் செய்தும் அவமானப்படுத்தியிருக்கிறார். தினேஷ் சாஹு என்ற அந்த அலுவலர், சான்றிதழ் வழங்க லஞ்சமும் கேட்டிருக்கிறார். ஸ்பெயினுக்கு அழைத்துப்போய் உங்களை விற்றுவிடுவார் என்றும் மிரட்டியிருக்கிறார். காவல்துறை அதிகாரி ஒருவரின் துணையால் ஒருவழியாக சான்றிதழ்களைப் பெற்றார்கள்.
ராஞ்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தம் கிராமத்துக்கு வெளியே இதுவரை சென்று விளையாடாத இந்தப் பெண்கள்தான் ஸ்பெயினுக்குச் சென்றார்கள், கேஸ்டீஜ் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றார்கள், வெண்கலம் வென்றார்கள். வந்தார்கள். இவர்களுடைய கதை இப்போதுதான் உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.
யுவாவில் பயிற்சிபெறுகிற எந்தப் பெண்ணும் 18 வயதுக்கு முன்னால் திருமணம் செய்யவில்லை. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து கூட்டமைப்புக் கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றதில், யுவாவைச் சேர்ந்த புஷ்பா முக்கியக் காரணமாக இருந்தார். நீதா குமாரியும், மனிஷா திர்க்கியும் இலங்கையில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றனர்.
இந்திய கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவர் பிரபுல்ல படேல், இவர்கள் பற்றி தனக்கு எதுவுமே தெரியாதபோது நான் என்ன செய்ய முடியும் என்கிறார். கோப்பைக்கான கால்பந்துப்போட்டி என்பது இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற போட்டி அல்ல என்று கைகழுவுகிறது கூட்டமைப்பு. யுவாவுக்கு இப்போது விளையாட்டுக்கு மைதானம் கிடைப்பதும்கூட சிரமமாக இருக்கிறது. விளையாட்டு அமைச்சகச் செயலரிடம் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறதாம். இதுவரை மைய அரசும் சரி, மாநில அரசும் சரி, எந்த உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ திறமைகள் எத்தனையோ கிராமங்களில் ஒளிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஏராளமான பதக்கங்களை அள்ளிச் செல்லும் சீனத்தில், விளையாட்டுத் திறமை உள்ளவர்களை ஆரம்பப்பள்ளி நிலையிலேயே கண்டறிகிறார்கள். கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடுமின்றி, இந்தத் திறமை கண்டறியும் நடவடிக்கையை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இதுபோல இந்தியாவும் முனைப்பாக திறமைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியா, மாஸ்கோவில் நடைபெற்ற உலகத் தடகளப்போட்டிகளில் ஒரு பதக்கம்கூட வெல்லாதது குறித்து கவலைப்பட்டுப் பயனில்லை.
மேலும் தகவலுக்கு - http://yuwa-india.org/ வலைதளத்தைப் பார்க்கவும்.

Wednesday, August 19, 2015

பெரியார் தாசன்


எனக்கும் அவருக்கும் பெரிய அறிமுகம் எல்லாம் இல்லை.
ஒரே ஒரு கூட்டத்தில் அவரோடு பேசுகிற அரிய வாய்ப்பு.
இனிய நந்தவனம் சந்திர சேகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். திருச்சி கலையரங்கத்தில். நானும் பேராசிரியர்.பெரியார் தாசனும் பேச வேண்டும்.
45 நிமிடம் பேசியிருக்கிறேன். பிறகு அவர் பேசினார். கேட்கவா வேண்டும்.
முடிந்து வெளியே வந்துகொண்டிருந்த போது,
“ தோழர்”
குரல் கேட்டு திரும்பினேன்.
என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கை கொடுத்தார்.
“ பட்டைய கிழப்புற பேச்சு. புதுசா இருக்கு. ஏன் வெளியே எல்லாம் வரது இல்லையா. தொடர்பு கொள்ளுங்கள். பெரியாரையும் மார்க்ஸையும் சரியா கலக்குறீங்க.அவசியம் தொடர்பு கொள்ளுங்கள்”
மீண்டும் ஒரு முறை கை குலுக்கி விட்டு காரேறுகிறார். இது நடந்து ஐந்தாறு ஆண்டுகள் கடந்திருக்கும்.
தொடர்பு கொள்ளவில்லை.
இனி தொடர்பு கொண்டாலும் எடுத்துப் பேச அவரில்லை.
ஒரு பேச்சைக் கேட்டதற்கே என்னை அங்கீகரித்துப் பேசினீர்கள்.
எவ்வளவு கேட்டிருப்பேன். எவ்வளவு எடுத்திருப்பேன்.
உங்கள் பேச்சுக்களில் பெரும்பாலும் என்னிடம் ஆவணங்களாய்.
நன்றிசொல்லி அனுப்பி வைக்கிறோம். போய் வாருங்கள்.
(இதே நாள் 2013 இல் எழுதியது)

Tuesday, August 18, 2015

38

எதிர் வீட்டுப் பையன்
கொடுத்த புத்தகத்தில்
என்ன இருக்கிறதோ?

கடிதம் 05

அன்பின் தோழர்களே,
வணக்கம். 
நலம். நலம்தானே?

மீண்டும் மீண்டும் இந்தப் பக்கம் வரவிடமல் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தமுறை தடுத்தது மாமனாரின் மரணம்.

அவரது மரணம் இந்தச் சமூகத்தையோ, ஊரையோ, அல்லது தெருவையோ பாதிக்கக்கூடிய பெரும் இழப்பில்லை. ஆனால் குடும்பத்தையே உலகமாக பார்த்த அந்த எளிய மனிதனின் மரணம் எனக்கான மிகப் பெரிய இழப்பு. போன ஞாயிறு அவர் திருச்சி KMC மருத்துவ மனைக்கும் நான் பெரம்பலூர் ராஜா முகமது மருத்துவ மனைக்கும் போகிறோம். இருவரையுமே மருத்துவர்கள் அட்மிட் ஆகச் சொல்கிறார்கள். இருவரையுமே ஒரே நேரத்தில் வைத்துப் பார்த்துக் கொள்வதற்கு ஆள் பஞ்சம். எனவே அவர் அட்மிட் ஆவதென்றும் நான் வீட்டிலேயே தங்குவது என்றும் முடிவெடுக்கிறோம். அவரது உடல் பலவீனத்தின் தீவிரமும் இதற்கான காரணம்.

ஐந்து மகள்கள், ஆறாவதாய் ஒரு மகன். ஆறு பேருக்கும் திருமணம் முடித்த பின்பும் அந்தச் சாதாரண போக்குவரத்து ஊழியருக்கு எந்தக் கடனும் இல்லை. அப்படி ஒரு சிக்கனம், அப்படி ஒரு திட்டமிடல். 

பொதுத் தளத்தில் அவரைப் பற்றி வைப்பதற்கு ஒரு விஷயம் இருக்கிறது. அவரது வீட்டில் எந்த இடத்தில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றினாலும் சொட்டுத் தண்ணீர் வீணாகாமல் ஏதோ ஒரு மரத்திற்கு ஓடிவிடும். அப்படி ஒரு நீர் மேலாண்மை.

என்ன சொல்ல?

போய் வாருங்கள் அப்பா.


Saturday, August 15, 2015

கடிதம் 04

அன்பின் தோழர்களே,
வணக்கம்.
நலமா?

அண்ணன் முத்து நிலவனுக்கு எதிரிகள் என்று யாரும் இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அண்ணனது இந்த இரண்டு குணங்களை அங்கீகரித்து கொண்டாடாமல் கடந்துவிட முடியாது.1) வஞ்சனையே இல்லாமல் வளர்த்து விடுவது
2) கஞ்சத்தனமே இல்லாமல் பாராட்டி வளர்ப்பது

ஒன்றுக்கும் ஆகாததைக் கூட ஊதிப் பெரிதாக்கி வளர்த்துவிடுகிறார் என்ற இவர்மீதான குற்றச்சாட்டிற்கு அஞ்சி இவர் மட்டும் திருந்தியிருப்பார் என்று சொன்னால் நானெல்லாம் ஆளாகியிருக்க முடியாது. எண்பதுகளின் தொடக்கத்தில் பச்சை மண்ணாய் இருந்த என்னுள்ளும் ஏதோ இருப்பதைக் கண்டறிந்து வளர்த்து விட்டவர்.

இன்றைக்கும்கூட விடுதலைத் திருநாள் வாழ்த்து கூறுகிற சாக்கில் இரண்டு இளைஞர்களை, அவர்களது சாதனையை நமக்கு பந்தி வைக்கிறார்.

புதுகைமுரளி அப்பாஸ் அவர்கள் இயக்கத்தில் தோழர் ராகவ் மகேஷ் அவர்கள் நடித்துள்ள “ நெய்ப்பந்தம்” என்ற குறும்படத்தை அறிமுகம் செய்து அதன்மூலம் ஆகஸ்ட் பதினைந்தை கௌரவப் படுத்தியிருக்கிறார். அந்தக் குறும்படம் பற்றி பிறகு எழுதுகிறேன்.

அந்தப் படத்தைப் பாருங்கள்
https://www.youtube.com/watch?v=4rLOV47nMeA

************************************************************************************************************************ 

ஆகஸ்ட் 15 என்றதும் பெயர் தெரியாது செத்துப்போன போராளிகளையே நான் நினைத்துக் கொள்வது வழக்கம். தோழர்கள் தமிழ்ச்செல்வன், சு.பொ. அகத்தியலிங்கம் போன்றோரிடமிருந்து அப்படிப் பட்டவர்களில் சிலரை அறிந்துகொள்ளும் வாய்ப்பு என்னைப் போன்றவர்களுக்கு கிடைத்தது.

இந்த விடுதலைக்காக பெயரற்றுச் செத்துப்போன ஒரு தாயய்ப் பற்றி தோழர் எஸ்.பி.செந்தில்குமார் தனது வலையான “கூட்டாஞ்சோறு” வில் பதிந்திருக்கிறார்.


பாரதியாரின் மிக நெருங்கிய நண்பரும், சொத்தை விற்றேனும் பணம் அனுப்பு, பத்திரிக்கை அனுப்ப வேண்டும் என்று பாரதியார் சொன்னவுடன் அப்படியே செய்த சீனி வரதன் அவர்களின் மனைவி பதம்சானி தாயாரைப் பற்றி எழுதியுள்ளார். பத்மசானி அவர்களைப் பற்ரி தரவு தேடி நீண்டு எழுதும் ஆசையை விதைத்திருக்கிறார். அந்தப் பதிவை வாசியுங்கள்.

http://senthilmsp.blogspot.com/2015/08/blog-post_15.html

ஆகஸ்ட் 15, 2015

குதித்து, குதூகலித்து, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் கொப்பளித்துக் கொண்டாட இயலவில்லைதான்.
ஆனாலும் எதையும் போல் இதுவும் ஏதோ ஒரு நாளில்லைதான்.

காங்கிரஸ், லீக், இடதுசாரி, மற்றும் கட்சி சாராது தியாகித்த எனது பாட்டன்களையும் பாட்டிகளையும் போகிற போக்கில் விட்டு விட முடியவில்லைதான்.
ஆனாலும் ஒரே மனிதன் 50 ஆண்டுகால இடைவெளியில் தந்த இரண்டு நேர்காணல்களை உள் வாங்குவது அவசியம்.
அநேகமாக 1942. பாட்னா கலக்டர் அலுவலகம். ஒரு சிறுவன் அதன் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று கொண்டு “ வந்தே மாதரம். வெள்ளையனே வெளியேறு” என்று குரல் கொடுக்கிறான். காவலர்கள் அவனை அமைதியாக கலைந்து செல்லுமாறு எச்சரிக்கிறார்கள்.
தொடர்கிறான்.
”சுட்டுவிடுவோம்” மிரட்டுகிறார்கள்.
“ சுட்டுக் கொள்ளுங்கள்”
இன்னும் அதிக அவேசத்தோடு இன்னும் அதிக குரலெடுத்து கர்ஜிக்கிறான். “ வந்தே மாதரம். வெள்ளையனே வெளியேறு”
சுட்டே விட்டார்கள். செத்தும் போனான்.
அவனது தந்தையை பேட்டி காண்கிறார்கள்.
“ உங்கள் மகன் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“ என் மண்ணின் விடுதலைக்காக என் மகன் தன் உயிரைத் தியாகித்திருப்பது மிகுந்த பெருமையாயிருக்கிறது. என் மண்னின் விடுதலையில் என் மகனது பங்கும் குறிப்பிட்டுக் கொண்டாடும்படி இருப்பதில் எதைவிடவும் பெருமையாய் இருக்கிறது”
1992 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு கொண்டாடப் பட்டபோது அதே தந்தையிடம் அவரது மகனது தியாகம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள். சொல்கிறார்,
“ஊழலும் சுயநலமும் நிரம்பிப் போன இந்த மண்ணைப் பார்க்கும் போது என் மகன் செய்தது தியாகம் இல்லையோ, பைத்தியக்காரத்தனமோ என்று தோன்றுகிறது.”
இந்த நேர்காணலில் இருந்து நல்ல மக்கள் இயக்கங்களோடு இணைந்து பணி செய்ய வேண்டிய கடமை இருப்பது புரிகிறது.
ஆனாலும்,எதையும்போல இதுவும் ஏதோ ஒரு நாள் இல்லை எனக்கு.

Friday, August 14, 2015

கடிதம் 03

அன்பின் தோழர்களே,
வணக்கம்.

பேரதிகமாக தேறியிருப்பதாகவே தோன்றுகிறது. 480 என்றிருந்த சர்க்கரை அளவு 263 என்கிற நிலைக்கு வந்துவிட்டது. ஏறத்தாழ 90 விழுக்காடு முதுகு வலி காணாது போனது. நிறைய தோழர்கள் அலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும், முகநூல் குறுஞ்செய்தியிலுமாக விசாரித்தபடி இருக்கிறார்கள். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். பையப் பைய வாசிக்க முடிகிறது.

இரண்டு விஷயங்கள் குறித்து பேசவேண்டும்.

1) புதுக்கோட்டையில் நடைபெற உள்ள வலைப் பதிவர் சந்திப்பு.
2) “புதிய தரிசனம்” இதழில் எழுதிக் கொண்டிருந்த “ வலைக்காடு” தொடரை மீண்டும் வலையில் தொடர்வது.

இ. புதுகை வலைப்பதிவர் சந்திப்பு
***********************************

வலைப் பதிவுகள் வருங்காலத்தைத் தீர்மானிக்கிற சக்திகளுள் முக்கியமானதொன்றாக இருக்கும் என்று மிக உறுதியாய் நம்புபவன் நான். சமூக அக்கறையும் எழுத்தும் கைவரப் பெற்ற பதிவர்களை ஒருங்கிணைப்பதும் நெறிப்படுத்துவதும் மிக அவசியம் என்று நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் பல சந்திப்புகள் நடக்கவே செய்துள்ளன. அனாலும் ஒரு கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கக் கூடிய மக்கள் சக்தியின் ஒருங்கமர்வாக, நன்கு செதுக்கப் பட்ட வடிவமைப்பாக ஒரு சந்திப்பின் அவசியத்தைப் பேசுகிற இடமெங்கும் பேசியே வருகிறேன்.

ஒரு மாநில அமைப்பாக இந்தச் சக்தியை மாற்றவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

புதுகை சந்திப்பிற்கான திட்டமிடல்களைப் பார்க்கும்போது அப்படிப் பட்ட கனவினை செயல்படுத்தும் கவனம் அவர்களுக்கு இருப்பதாகவே படுகிறது. நிச்சயமாய் பத்தோடு பதினொறாய் இது முடியப் போவது இல்லை என்றே நம்புகிறேன்.

எனது மேடை குருநாதரும் வழிகாட்டியுமான அண்ணன் முத்துநிலவன் அவர்கள் முன்கை எடுத்திருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது. அவரோடு தோழர்கள் கஸ்தூரி ரெங்கன், வைகறை வைகறை, கீதா போன்றோர் சுழன்றடிப்பதைப் பார்த்தால் மகிழ்ச்சி அப்பிக் கொள்கிறது. எனது சர்க்கரையை சரி பாதியாய் குறைத்ததில் இவர்களது இந்த முயற்சிக்கும் நிச்சயமாய் பங்குண்டு.

நிச்சயமாய் அந்த கூடலில் ஏதோ ஒரு மூலையில் நானும் அமர்ந்திருப்பேன்.

இது குறித்து தொடர்ந்து எழுத உள்ளேன்.

அண்ணன் நிலவனுக்கும் மற்ற தோழர்களுக்கும் என் அன்பும் மரியாதைகளும்.


2 வலைக்காடு
***************

ஏற்கனவே நல்ல வலைகளைப் பற்றி (17 வலைகள்) ”புதிய தரிசனம்” இதழில் “ வலைக்காடு” என்று தொடராக எழுதினேன். வேலைப் பளு காரணமாக தொடர முடியாமல் போனது.

இவர்களது சந்திப்பிற்கான ஏற்பாடு தந்த உற்சாகத்தில் அதை மீண்டும் தொடர உள்ளேன். எந்தக் கால நிர்ணயமும் இல்லாமல் அவ்வப்போது எழுதலாம் என்றிருக்கிறேன்.

இந்த முயற்சிக்கான எனது நன்றிக் கடனாக புதுகைத் தோழர்களின் வலைகளுக்கு முன்னுரிமை கொடுக்க இருக்கிறேன். அண்ணன் நிலவனது வலையிலிருந்து தொடங்க இருக்கிறேன்.

புதுகை வலைகளை என் கவனத்திற்கு கொண்டு வருமாறு புதுகை தோழர்களை அன்போடு கேட்கிறேன்.

வலைக்காட்டில் கூடு கட்டியுள்ள வலைப் பறவைகளை தரிசிக்க...
http://www.eraaedwin.com/search/label/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

குட்டிப் பதிவு 43

இரு கரைதொட்டு நீர் பாய்கையில் நதியென்றால் நீரற்று வரண்டு கிடக்கையில் அதன் பெயரென்ன?
நீரற்று காய்ந்து கிடக்கையில் நதியென்றால் இருகரை தொட்டு நீர் பாயும்போது அதன் பெயரென்ன?

15 அவருக்கு சோனியா, இவருக்கு ஆர்.எஸ்.எஸ்

“நமது நாடு ஜப்பானோடும் சீனாவோடும் போட்டி போட்டு முன்னேற வேண்டுமென்றால் நல்ல மாணவர்கள் உருவாக வேண்டும். நல்ல மாணவர்கள் உருவாக வேண்டுமென்றால் அதற்கு நல்ல ஆசிரியர்கள் வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அத்தகைய நல்ல ஆசிரியர்களுக்கு கடுமையான பஞ்சம் இருக்கிறது” என்பதாக நமது பிரதமர் திரு மோடி அவர்கள் பேசியுள்ளதாக செய்தி ஊடகங்களின் வழி அறிய முடிகிறது.

மேம்போக்காகப் பார்த்தால் மிகுந்த அக்கறையோடும், தேசம் குறித்த கவலையோடும் பிரதமர் அவர்கள் பேசியுள்ளதாகத் தெரியும். ஆனால் அவரது இந்தப் பகுதியின் இறுதிப் பகுதி நமக்கு சில அய்யங்களைத் தருகிறது.
ஜப்பானோடும் சீனாவோடும் சகலத் துறைகளிலும் போட்டி போட்டு முன்னேற வேண்டும் என்பதிலோ, அதற்கு நல்ல மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும் என்பதிலோ, நல்ல மாணவர்களை உருவாக்க இந்த மண்ணை நேசிக்கிற, அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள் அவசியம் என்பதிலோ நமக்கு எள்ளின் முனையளவும் நமக்கு கருத்து மாறுபாடில்லை. ஆனால் அப்படிப் பட்ட ஆசிரியர்களுக்கான பஞ்சம் இருப்பது போன்ற அவரது கூற்றின் தொணியில் கொஞ்சம் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்குப் படுகிறது.
முதலில் எதையும் எதிகொள்ளும் ஒரு பலம் மிக்க எதிர்கால சமூகம் அமைவதற்கு நல்ல ஆசிரியர்களே அவசியம் என்கிற உண்மையை உரக்கச் சொன்னமைக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நல்ல ஆசிரியர் யார் என்பதைப் பார்க்கும் முன் நல்ல கல்வி என்பது எது என்பதைப் பார்த்துவிடுதல் அவசியம்.
“கல்“ என்றால் “தோண்டு” என்று ஒரு பொருளாகிறது. தோண்டுதல் என்பதை தேவையில்லாததை தோண்டி எடுத்து அப்புறப் படுத்துவது என்று கொள்ள வேண்டும். மண்ணைப் பிசைந்து அதிலிருந்து தேவை இல்லாததை தோண்டி எடுத்து அப்புறப் படுத்தினால் அழகான தோண்டி கிடைக்கும்.
ஒரு மனிதனில் இருந்து குறிப்பாக மாணவனிலிருந்து தேவை இல்லாதவற்றை தோண்டி எடுத்து அப்புறப் படுத்துதலே கல்வியின் வேலையாகும். இப்பொழுது எவை தேவை இல்லாதவை என்று ஒரு கேள்வி வருகிறது. இந்த இடத்தில்தான் நமக்கு பிரதமரின் கருத்தில் அய்யம் எழுகிறது. அச்சம், பொறாமை, பொய் கூறுதல், புறம்பு பேசுதல், களவாடுதல், வஞ்சித்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகமிழைத்தல், பெண்மையை இழிவு செய்தல், பாகுபாடு பார்த்தல், காலை வாரிவிடுதல், மத வெறி, சாதி வெறி போன்ற இழிவான குணங்களை ஒரு மணவனிடத்தில் இருந்து தோண்டி எடுத்து தூரப் போடுதலே கல்வியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.
இத்தகைய இழி குணங்களோடு தன்னிடம் வரும் மாணவனிடத்தில் இருந்து மேற்சொன்ன குணங்களை தோண்டி எடுத்து தூரப் போடுபவன் ஆசிரியன் ஆகிறான்.
இவற்றைத் தோண்டி எடுத்ததால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இவற்றிற்கு நேரெதிரான மேன்மையான குணங்களால் நிரப்ப முயல்பவன் நல்ல ஆசிரியன் ஆகிறான்.
மதவெறியற்ற, சாதியற்ற பெண்மையை மதிக்கிற, உழைப்பை மதிக்கிற ஒரு மனிதனை உருவாக்குதலே நல்ல கல்வியின் இன்றைய அடையாளங்களாக நாம் பார்க்கிறோம். இதை செய்பவனை நல்ல ஆசிரியனாகவும் நாம் அடையாளம் காண்கிறோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டே அதற்கு நேரெதிரான மேற்சொன்ன குணங்களை மாணவனுள் விதைக்கிற பிற்போக்குத்தனமே மத வாதிகளின் நல்ல கல்விக்கான அடையாளங்களாக நாம் பார்க்கிறோம்.
இதுமாதிரியான மோசமான காரியங்களை செய்யக் கூடிய ஆசிரியர்களுக்குத்தான் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகத்தான் பிரதமர் பார்க்கிறாரோ என்பதே நமது அய்யம்.
வரலாற்றை உள்ளது உள்ளபடி சொல்லித் தருவது கல்வியின் கடப்பாடு ஆகும். எனில் வரலாற்றை உள்ளது உள்ள படி சொல்லித் தருபவனே நல்ல ஆசிரியன் ஆகிறான். ஆனால் இன்றைய எதார்த்த நிலை என்னவென்றால் புத்தகத்தில் இருக்கிற கூடுதாலான அல்லது குறைவானவற்றை போதித்தலே ஒரு ஆசிரியரின் வேலையாகிறது. இருப்பதையும் திரித்து மதச்சாயம் பூசப்பட்ட, உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத இன்னும் சொல்லப் போனால் முற்றிலும் பொய்யானவற்றைப் போதிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் பஞ்சம் இருப்பதாக பிரதமர் பார்க்கிறாரோ என்றுதான் பார்க்கத் தோன்றுகிறது.
குஜராத் பள்ளிகளில் போதிக்கப் பட்டு வரும் வரலாறு குறித்து 17.06.2014 அன்றைய “மெயில் டுடே” பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை மேற்கோள் காட்டி 18.06.2014 நாளிட்ட “தீக்கதிர்” வெளியிட்டுள்ள செய்திகள் நமது அய்யத்தை அதிகப் படுத்துகின்றன.
GCERT என்றழைக்கப் படுகிற குஜராத் கல்வி ஆராய்ச்சி மற்ரும்பயிற்சி கவுன்சிலும் மற்றும் GSBST என்றழைக்கப் படுகிறபள்ளிப் பாடப் புத்தகங்களுக்கான குஜராத் மாநில வாரியமும் இணைந்து ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்கு தயாரித்தளித்துள்ள பாடப் புத்தகங்களில் வரலாறு ஏகத்துக்கும் திரிக்கப் பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சுட்டுக் கொல்லப் பட்டார் என்கிற பிழையான வரலாற்றைதான் குஜராத் பிள்ளைகள் படித்து வருகிறார்கள்.
இரண்டாம் உலகப் போர் என்றதுமே ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பான் நகரங்களை அமெரிக்கா கொஞ்சமும் மனிதாபிமானமே இல்லாமல் அணுகுண்டு வீசி அழித்ததைத்தான் எவரும் அறிவோம். ஆனால் குஜராத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் அமெரிக்காவின் மீது அணுகுண்டுகளை வீசியதாக வரலாறு சொல்லிக் கொடுக்கப் படுகிறது. அமெரிக்காவே இப்படி ஒரு பாடத்தை வைப்பதற்கு நிச்சயமாக வெட்கப் பட்டுத் தயங்கும் என்று நம்மால் நிச்சயம் நம்ப முடியும்.
உலகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும், இன்னும் சொல்லப் போனால் அமெரிக்க மாணவர்களேகூட அமெரிக்காதான் ஜப்பான் மீது அணு குண்டுகளை வீசியது என்கிற உண்மையைப் படிக்கும் போது குஜராத் மாணவர்கள் மட்டும் ஜப்பான்தான் அமெரிக்கா மீது அணு குண்டுகளை வீசியது என்கிற அப்பட்டமான ஒரு பொய்யை வரலாறு என்கிற பெயரில் படிக்கிறார்கள்.
இப்படிப் படிப்பதன் மூலம் உலக அளவில் குஜராத் மாணவன் தனித்து விடப் படும் ஆபத்து இருப்பது மட்டுமல்ல பாதிக்கப் பட்டவன் மீது கோவமும் பாதகத்தை செய்தவன் மீது அனுதாபமும் அவனுக்கு ஏற்படும்.
இதை இந்தியா முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் பிரதமர் விரும்புகிறாரோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதை கொண்டு செல்லத்தான் ஆசிரியர்களுக்கு பஞ்சம் இருப்பதாகத்தான் பிரதமர் பார்க்கிறார் போலும்.
இப்படி ஒரு பாடத்தை வைப்பதை இன்னும் கொஞ்சம் நீட்டினால் வருங்காலத்தில் காந்தியின் கொலையினைக் கூட இவர்கள் நியாயப் படுத்தக் கூடும். கோட்சேவினைக் கூட மிகப் பெரிய நல்லவனாக தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.
சுற்றி சுற்றி இது குறித்தே நாம் பேசுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.
ஒரு பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கார் பெயரை வைப்பதற்கே கடுமையான எதிர்ப்பை எதனினும் மூர்க்கமாகக் காட்டியவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியினர். ஆனால் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி அவர்கள் வாஜ்பாய் அவர்களுக்கே மாரடைப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் ஒரு செய்தியை சொன்னார். அம்பேத்கார் அவர்களுக்கு வாஜ்பாய் அவர்களது ஆட்சிதான் பாரதரத்னா வழங்கியது என்று சொன்னார். அம்பேத்கார் அவர்களுக்கு பாரதரத்னா வழங்கி கௌரவித்தது வி. பி. சிங் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சத்தியமாக வாஜ்பாய் அவர்கள் அதை செய்யவில்லை. மோடி அவர்களைப் பார்க்கிலும் வாஜ்பாய் அவர்கள் பெருந்தன்மையானவர் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அம்பேத்காருக்கு பாரத ரத்னா கொடுக்குமளவிற்கு அவரது பெருந்தன்மை இருப்பதாக அவரே ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இதை எல்லாம் ஏன் செய்ய வேண்டும் இவர்கள்? எப்படியேனும் வரலாற்றை திரித்து மதமயப் படுத்திவிட வேண்டும். மேன்மைமிக்க பன்முகத் தன்மை கொண்ட இந்த மண்ணின் கலாச்சாரத்தை மதமயப் படுத்திவிட வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.
பன்முகத் தன்மை என்பது இந்தியாவின் மேன்மைமிக்க மாண்பு. உலகமே வியந்து பார்க்கும் ஒன்று. இத்தனை மொழிகள், இத்தனை கலாச்சாரங்கள், வேறு வேறான உணவு வகைகள், ஆனாலும் அவற்றின் ஊடாக ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சங்கிலிப் பிணைப்பு. சாத்தியமே இல்லாத ஒன்று எப்படி இந்தப் பூமியில் சாத்தியப் பட்டிருக்கிறது என்று இந்தியாவின் எதிரிகளே வியந்து பார்க்கும் உன்னதமான மாண்பு.
அதை சிதைப்பது என்பதில் இவர்கள் வெறிகொண்ட தீவிரமானவர்கள் என்பதை சமூக வலைத் தளங்களில் இந்தியை மூர்க்கமாக அவர்கள் திணிக்க முயல்வதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
இன்னுமொரு மொழியைப் படிக்கக் கூடாதா என்று சிலர் கேட்கிறார்கள். ஒன்றல்ல ஒருவன் தன்னால் எத்தனை மொழிகளைப் படிக்க இயலுமோ அத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்தான். பிரச்சினை என்பதே இந்தியைப் படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில்தான் இன்னும் சிலர் இந்தியை எதிர்த்ததால்தான் தாங்கள் இந்தியைப் படிக்க முடியாமல் போனதாகவும் ஒருக்கால் அதைப் படித்திருந்தால் தங்களது வாழ்க்கை பிரகாசமாகியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள்து கருத்துப்படி இந்தியை எதிர்த்ததால்தான் தங்களது வாழ்க்கை கருகிப் போயிருப்பதாக சொல்கிறார்கள்.
மத்திய அமைச்சர் மாண்பமை ராதாக்கிருஷ்ணன் அவர்கள் கூட இந்தி திணிக்கப் படுவதை தாமும் எதிர்ப்பதாகவும் ஆனால் இந்தியை கற்றுக் கொள்வதை தடுப்பதை எதிர்ப்பதாகவும் சாரப்படும்படி பேசியிருக்கிறார்.
இந்தி கற்பதை யாரும் எப்போதும் எதிர்க்கவே இல்லை. தமிழ் மண்ணில் இந்தி பிரக்சார சபாக்கள் வளமையோடு தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. போக, எல்லா ஊர்களிலும் இந்தியை படிப்பதும் தேர்வெழுதுவதும், பி.ஏ, எம்.ஏ என்று இந்தியில் பட்டங்களை வாங்குவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதை யாரும் எப்போதும் தடுத்ததே இல்லை.
இந்திக்காக இவ்வளவு கவலைப் படும் தமிழர்கள் பலர் தமிழ் மண்ணில் நமது பள்ளிகளில் தமிழை என்று கூட அல்ல தமிழ் அல்லது தாய்மொழியை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும் என்பதை எதிர்ப்பதில் உள்ள அரசியலைத்தான் உணர்ந்து கொள்ள இயலவில்லை.
இந்தி நம் மீது திணிக்கப் படுவதை மட்டுமல்ல, ஒருக்கால் பீஹாரி மீதோ, வங்காளி மீதோ அல்லது வேறு யார் மீதோ தமிழ் திணிக்கப் பட்டாலும் அதை நாம் எதிர்க்கவே வேண்டும். எதிர்க்கவே செய்வோம்.
ஒரு மொழி, ஒரு மதம், ஒற்றைக் கலாச்சாரம் என்கிற அவர்களது மறைமுக செயல்திட்டம் திரை கழன்று வெளி வரத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது.
மன்மோஹனுக்கும் மோடிக்கும் இடையில் ஆறு வித்தியாசங்களை அல்ல அவர் பேச மாட்டார், இவர் பேசிக் கொண்டே இருப்பார், அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர், இவர் மதவாதி என்பதைத் தவிர மூன்றாவது வித்தியாசமே சாத்தியமில்லாதது.
மன்மோஹன் அவர்களை சோனியா அவர்களின் கைப் பொம்மை என்றும், சுயமாக எதையும் முடிவெடுக்கத் தெரியாதவர் என்றும் சொல்லப் பட்டதில் உண்மை இல்லாமல் இல்லை. அவரது இடுப்பில் கட்டப் பட்டிருந்த கயிறின் ஒரு முனை சோனியா அவர்களின் கைகளில்தான் இருந்தது. கயிறை எவ்வளவு நீளத்திற்கு சோனியா அவர்கள் அனுமதித்தாரோ அந்த நீளம் மட்டுமே மன்மோஹன் அவர்களால் பயணிக்க முடிந்தது.
மோடி அவர்களும் அப்படித்தான் என்பதையும், அங்கு சோனியா என்றால் இங்கு ஆர்.எஸ்.எஸ் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மோடியும் சுயமாக எதையும் செய்து விட இயலாது என்பதையும் அப்படித் தப்பித் தவறி ஆர்.எஸ்.எஸ் சொல்வதை மீறி அவர் ஏதேனும் செய்ய முற்சித்தால் அதே புள்ளியில் அவர் தூக்கி எறியப் படுவார் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த வெளிச்சத்தில் பார்த்தால்,
“நமது நாடு ஜப்பானோடும் சீனாவோடும் போட்டி போட்டு முன்னேற வேண்டுமென்றால் நல்ல மாணவர்கள் உருவாக வேண்டும். நல்ல மாணவர்கள் உருவாக வேண்டுமென்றால் அதற்கு நல்ல ஆசிரியர்கள் வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அத்தகைய நல்ல ஆசிரியர்களுக்கு கடுமையான பஞ்சம் இருக்கிறது” என்ற அவரது கூற்றைக் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூற்றாகத்தான் பார்க்க வேண்டும். எதிர்கொள்ள வேண்டும்

Thursday, August 13, 2015

ரசனை 10

எடுத்துக் கொடுப்பது என்பது அபூர்வமான கலை. எடுத்ததில் எதைக் கொடுப்பது என்பதும் எப்போது கொடுப்பது என்பதும் படைப்புக் கலையின் ஆக முக்கியமான பகுதி. அந்தக் கலை மிக லகுவாக வருகிறது தோழர் பூங்கொடிக்கு (Poongodi Poongodi). கல்வித்தளத்தில் இயங்குபவர்களுக்கும், அதை இயக்குபவர்களுக்கும் எப்போதும் தேவைப்படுகிற ஐன்ஸ்டின் சொன்ன ஒரு விசயத்தை அவர் தேவையான நேரத்தில் எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவரும் ஒரு ஆசிரியை என்பதால் மகிழ்வும் நம்பிக்கையும் பெருகுகிறது.
வாழ்த்துக்கள் பூங்கொடி.
”தண்ணீர் ராஜ்யத்துக்கு மீன்தான்
சக்கரவர்த்தி,அதற்கு மரம் ஏறுவதுதான்
கல்வி எனக் கட்டாயப் பயிற்சி கொடுத்தால்
தன் வாழ்நாள் முழுவதும் அது தன்னை
திறமையில்லாத முட்டாளாகவே கருதும்”

வேண்டுகோள் 03

" இப்பல்லாம் யாரு தோழர் ஜாதி பார்க்கல”
**********************************************************
என்கிற தொடரொன்றை “மக்கள் போராளி” யில் எழுத இருக்கிறேன்.
நமக்குத் தெரிய வரும் ஜாதிய ஒடுக்குமுறைச் சம்பவங்கள் குறித்து அந்தந்த மாதம் எழுத நினைத்திருக்கிறேன்.
ஏதேனும் ஒரு மாதம் நமக்குத் தெரிய எங்கும் ஏதும் நிகழவில்லை எனில் அந்த இதழில் எழுத இயலாமைக்காக மகிழ்வேன்.
உங்கள் கவனத்திற்கு வரும் சம்பவங்களைப் பற்றி அறியத் தந்தால் நன்றிக்குரியவனாவேன்

16 இது தவறெனில்....

சமீபத்தில் வெளியான இரண்டு தீர்ப்புகள் என்னைக் கையைப் பிடித்து இதற்குள் இழுத்துப் போயின.


1) கல்லூரி முதல்வரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரனைக் கைதிகளாக சிறையில் உள்ள மூன்று மாணவர்களும் பல்கலைக் கழகத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.

2) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.

இரண்டுமே ஆகச் சமீபத்தில் வெவ்வேறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளாகும்.

நம்மைப் பொறுத்தவரை இவை இரண்டு தீர்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போதுதான் பிரச்சினையே வருகிறது. கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது சரி என்றால் கிரிமினல் வழக்குகள் நிழுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்பது தவறாய் படுகிறது. அல்லது கிரிமினல் வழக்குகள் நிழுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கலாம் என்றால் கொலை வழக்கு நிலுவையில் உள்ள மாணவர்கள் மூவரும் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது தவறாய் தெரிகிறது.

இதன்மூலம் இன்னொரு விஷயத்தை கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் கொலை வழக்கு நிலுவையில் உள்ள மாணவர்கள் தேர்வெழுத முடியாது. ஆனால், அவர்கள் விரும்பினால் தேர்தலில் நிற்கலாம். வெற்றி பெற்றால் அமைச்சராகக் கூட ஆகலாம்.

இதை இப்படியும் சொல்லலாம். குற்றப் பின்னனி உள்ளவன் பொறியியல் வல்லுனராகக் கூடாது. ஆனால் அமைச்சராகலாம். எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.

ஒன்றைச் சொல்லி விடுகிறேன். அந்தக் கொலை வழக்கு முறையாக நடக்க வேண்டும் என்பதிலும் மிகச் சரியான தண்டனை கொலையாளிளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் நான் இரண்டாவதாய் இல்லை. ஆனால் நெஞ்சில் ஈரம் மிச்சம் இருப்பவர்களைப் பார்த்து இரண்டு கேட்க ஆசைப் படுகிறேன்.

மனசு நிறைய ஆசைகளோடும், விழிகளில் கசியும் கனவுகளோடும்தானே எம் பிள்ளைகள் கல்வி நிலையங்களில் நுழைகிறார்கள். அவர்கள் கைகளில் கொலைக் கத்தியைக் கொடுத்த சக்தி எது?

தங்கள் குடும்பத்தின் ஆறேழு வயிறுகளுக்காகவும் வாழ்க்கைப் பாட்டிற்காகவும்தானே பாடம் கற்பிக்க வருகிறார்கள். எந்தக் குழந்தைகள் வளமோடு வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று மனசார போராடுகிறார்களோ அதே குழந்தைகளிடம் ஆசிரியர்களைக்  கொன்று அவர்களது குடும்பங்களை அநாதையாக்க கொலைவாளினைக் கொடுக்கும் சக்தி எது?

சுருக்கமாகக் கேட்கிறேன் தந்தையும் பிள்ளையுமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொலைக் களத்தில் கொண்டு வந்து நிறுத்திய ஈனத்தனமான சக்தி முதலாளித்துவம் என்பதை என்பதை நாம் இன்னும் எத்தனை இழப்புகளுக்குப் பிறகு புரிந்து கொள்ளப் போகிறோம்?

நானொரு கற்றுக் கொடுக்கும் ஊழியன். என்னைப் போலவே கற்றுக் கொடுக்கும் ஊழியரான கல்லூரி முதல்வர் சுரேஷ் அவர்களின் கொலைக்காக ஒரு சக ஊழியனாய் வலி தாங்க முடியாமல் அழுகிறேன்.

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவனின் தகப்பன். அந்த வகையில் பதறி, ஒரு கொலையை செய்துவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் நினைத்தும் ஒரு தகப்பனாய் வலி தாங்க முடியாமல் அழுகிறேன்.

சிலர் கேட்கக் கூடும்,

“ இந்தப் பக்கமா? அந்தப் பக்கமா? எந்தப் பக்கம் நீ? ”

ஈரம் துளியுமற்ற வறட்டுத்தனத்தின் விளைவாகவே இத்தகைய கேள்வியைப் பார்க்கிறேன்.

நான் சராசரி மனிதன்.  கடன் வாங்கி பிள்ளையைப் படிக்க வைக்கும் ஒரு பாமரத் தகப்பன். கல்வியை சொல்லித்தர வேண்டிய ஒரு ஊழியன். ஆகவே பாமரத் தனமான சராசரியாய் நால்வருக்காவும் அழுகிறேன்.

எனக்குத் தெரியும்,

என்னிடம் படிக்கும் பிள்ளையை பள்ளியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலையும் எங்களுக்கு  வரலாம். எனக்கு எதிராகவும் என்னிடம் படிக்கும் குழந்தையின் கையில் ஏதோ ஒன்று கத்தியைத் தரலாம்.

இதை இப்படியும் வெளிப்படையாகப் பார்க்கலாம்,

ஒரு நாள் என்னிடம் படிக்கும் பிள்ளையையும் நாங்கள் எங்கள் பள்ளியிலிருந்து நீக்கலாம்.  என்னைக் கொல்லவும் என்னிடம் படிக்கும் குழந்தை கத்தியை எடுக்கலாம்.

வழக்கமாக பெரும்பான்மை நேரங்களில் பதட்டத்தோடும் தவறுதலாகவும் நாம் இரண்டாவதை எடுத்துவிடுகிறோம்.

எந்த ஆசிரியனுக்கும், தலைமை ஆசிரியருக்கும், விரிவுரையாளருக்கும், பேராசிரியருக்கும் , முதல்வருக்கும் ஒரு மாணவனைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வெளியேற்றி  அவனது வாழ்க்கையை நாசமாக்கிவிட வேண்டும் என்கிற அளவிற்கு எந்தப் பிள்ளையோடும் தனிப்பட்ட பகையோ விரோதமோ இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும்கூட அத்தகைய ஈனத்தனம் வெளிப்படாது.

 ஒரு ஆசிரியரையோ, தலைமை ஆசிரியரையோ, கல்லூரி முதல்வரையோ கொலை செய்யுமளவிற்கு எந்த ஒரு பிள்ளைக்கும் சொந்தப் பகை இருக்காது. அப்படியே இருப்பினும் எந்தப் பிள்ளையும் இத்தகையதொரு படு பாதக செயலை செய்ய மாட்டான்.

ஆனால் இரண்டும் நடக்கத் துவங்கியுள்ளன. ஆனால் இவை இவர்கள் மூலமாக நிறைவேறியிருப்பினும் இதற்கு இவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் இந்தக் கொலை நடந்தது?

ஏதோ ஒரு தவறு நடக்கிறது. அதுபற்றி விரிவாய் பேச இங்கு இடமில்லை என்பதால் அதற்குள் நாம் போகவில்லை. அந்தத் தவறுக்காக மாணவர்கள் தற்காலிகமாக கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இதற்காக கொலை செய்துவிடுவதா? என்ற கேள்வி இயல்பானதுதான். அதற்குள் போவதற்குமுன் இன்னொரு விஷயத்தை நாம் பார்த்தாக வேண்டும்.

ஏதோ ஒரு தவறை பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதற்காக இடை நீக்கம் செய்துவிடுவார்களா? அவர்களது பிள்ளைகளாக இருந்தால் இப்படி செய்துவிடுவார்களா? தவறே செய்திருந்தாலும் நெறிப்படுத்த வேண்டாமா? ஒரு கல்வி நிலையத்தின் வேலை பொறியியல் வல்லுனர்களை உருவாக்கித் தருவது மட்டும்தானா? ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பதில்லையா?

மேல் சொன்ன இரண்டு பாராக்களில் உள்ள அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் உலகமயமும் தாராளமயமும் விதைத்துள்ள வணிகப் போட்டி இவற்றை செய்வதற்கான அவகாசத்தை தருவதில்லை.

கொலை நடந்திருப்பது கல்லூரி வளாகத்தில். இதில் எங்கே வணிகப் போட்டி வந்தது என்று கேட்களாம். கல்வியே வணிகமாகிப் போன சூழலில் கல்லூரி முதலாளிகளுக்கு நட்டம் வந்துவிடக்கூடாது என்கிற வணிக நோக்கமே இப்படி பிள்ளைகளை கொலையாளிகளாயும், ஆசிரியர்களை பிணங்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு மாணவன் ஒரு மாணவியிடம் குறும்பு செய்கிறான் என்றும், அந்த  மாணவி பேராசிரியரிடம் முறையிடுகிறாள் என்றும் வைத்துக் கொள்வோம். முன்னர் எல்லாம் எப்படி நடக்கும் என்றால் அப்படி ஒரு புகார் வந்தவுடன் இருவரையும் அழைத்து பேசி சமாதானப் படுத்தி விடுவார்கள். அந்த மாணவியிடம் தனியாக இதை பெரிது படுத்த வேண்டாம். இனி இப்படி நடக்காது. பயப் படாமல் போடா. தொடர்ந்து அவன் இதையே செய்தால் வா. பார்த்துக் கொள்ளலாம் என்பார்.

மாணவனிடமோ இனி இப்படி ஒருமுறை நடந்தால் தொலைத்து விடுவேன் தொலைத்து என்று மிரட்டி அனுப்பிவிடுவார். பெரும்பான்மை இந்த அணுகுமுறையிலேயே தீர்ந்துவிடும்.

இந்த இயல்பான அணுகுமுறையில்தான் முதலாளித்துவம் மண்ணள்ளிப் போட்டது.

அவசரகதியில் இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் முதல்வருக்கு ஏன் வந்தது? அவருக்கும் மாணவர்களுக்கும் அவ்வளவு பகையா? மனிதாபிமானமே சுத்தமாய் இல்லாது வறண்டு போயிற்றா அவருக்கு? இல்லை, இந்த இடை நீக்கத்தை நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அவர் செய்திருக்க முடியும்.

அப்படி செய்யாவிட்டால் கல்லூரியின் மாண்பு கெட்டுப் போய்விட்டதாகக் கருதி கல்லூரி முதலாளி அவரை பதவி இறக்கமோ பணிநீக்கமோ செய்திருக்கக் கூடும். அதற்கு அஞ்சித்தான் முதல்வர் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

நிர்வாகிக்கு கல்லூரியின் மாண்பு குறித்து இவ்வளவு அக்கறையா என்றால் அது அல்ல இங்கு பிரச்சினை. இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மாணவர்கள் வர மாட்டார்கள். முதலாளியின் கல்லா நிரம்பாது என்ற வணிக நுணுக்கமே இத்தனைக்கும் காரணம் என்பதை நாம் உணராமல் போனால் தவறிழைத்தவர்களாவோம்.

இடைநீக்கம் செய்த பின்பு அந்த மாணவர்களை அழைத்து ஒன்றும் பயப்பட வேண்டாம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அமைதியாகப் படியுங்கள். வீட்டிற்கெல்லாம் சொல்ல வேண்டாம். அந்தப் பிள்ளையை சமாதானப் படுத்தவே இந்த முடிவு என்று சொல்லியிருந்தால் இந்தக் கொலை நடந்திருக்குமா?

அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் மாணவர்களை அழைத்து  அன்போடும் அக்கறையோடும் பேசி சமாதானப் படுத்தியிருந்தார்கள் என்றால்கூட இது நடந்திருக்காது.

ஏன் அவர்கள் அப்படி செய்யவில்லை? அப்படி செய்ய அவர்கள் விரும்பவில்லையா?   அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் செய்தால் எங்கே நிர்வாகத்திற்கு எதிராக தங்களைக் கொண்டு போய் நிறுத்திவிடுமோ என்ற அச்சமே அவர்களை அப்படி செய்யாமல் தடுத்திருக்கும் என்பதையும் உணர வேண்டும்.

இது மட்டுமல்ல இவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டிருக்கக் கூடும். ஆக இடை நீக்கம் செய்யப் பட்ட  பிள்ளைகள் தனிமைப் படுத்தப் பட்டிருப்பார்கள். அந்தத் தனிமை அவர்களை வேதனைப் படுத்தியிருக்கும். அது சன்னம் சன்னமாக கோவமாக மாறியிருக்க வேண்டும்.

நாம் என்ன கொலையா செய்தோம். நமக்கேன் இந்த தண்டனை என்று அவர்கள் குமுறியிருக்க வேண்டும். அந்தக் குமுற்லும் கொந்தளிப்புமே சுரேஷ் அவர்களுக்கு எதிராக அவர்கள கையில் கொடுவாளைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு சின்னத் தவறுக்காக கொலைகாரர்களைப் போல் அந்தப் பிள்ளைகளைப் பார்த்ததன் விளைவுதான்  இன்றவர்களை கொலையாளிகளாகவே மாற்றியிருக்கிறது.

ஆக, முதாளியின் கல்லா குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற முதலாளித்துவத்தின் உந்துதலோடு எடுக்கப் பட்ட ஒரு நடவடிக்கைதான் சுரேஷ் கொலை செய்யப் படுவதற்கும் மூன்று பிள்ளைகள் கொலையாளிகளாக வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்பதற்கும் காரணம்.

சுரேஷ் கொலை செய்யப்பட்டு விட்டார். பிள்ளைகள் கைதிகளாகி விட்டார்கள். இந்தக் கொலைபாதகச் செயலுக்கு உந்தித் தள்ளிய முதலாளித்துவத்தை என்ன செய்யப் போகிறோம்?

நன்றி: “காக்கைச் சிறகினிலே”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...