Sunday, August 9, 2015

65/66, காக்கைச் சிறகினிலே, ஆகஸ்ட் 2015



உன்னிடம்
அடகு வைக்கப்பட்ட
ஆயிரமாயிரம் காதுகள் இன்னும்
மீட்கப் படாமலே கிடக்கின்றன
என்று ஒருமுறை கவிஞர் வாலி அவர்கள் M.S. விஸ்வநாதன் அவர்களைப் பற்றி எழுதியது அப்படியொரு சத்தியம்.

ராகம், ஸ்ருதி, சங்கதி என்று இசையின் எந்தஒரு நுணுக்கமும் தெரியாது என்றாலும் இசையின் வலிமையும் ஆற்றலும் நமக்கு தெரியும்.

இன்றைக்கும் சூப்பர் சிங்கராக இருக்கட்டும் அல்லது சன் தொலைக்காட்சியில் கங்கை அமரன் நட்த்தும் சப்த ஸ்வரங்கள் ஆக இருக்கட்டும் பழைய பாடல்களைப் பாடும்போது பாடகர்கள் பெரும்பாலும் M.S. விஸ்வநாதன் அவர்களின் பாடல்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் அதுமாதிரி பழைய பாடல்களை தேர்ந்தெடுக்கும் நேரங்களில் தொலைக் காட்சி நேயர்களின் எண்ணிக்கை சன்னமான அளவிற்கேனும் கூடுவதும் அவர்கள் அந்த இசையால் அப்படியே பறந்துபோகும் அனுபவமுமே இதற்கு சாட்சியாகும்.

மட்டுமல்ல, இசைக்குழுவினரும் பாடகர்களும் அந்தப் பாடல்களைப் பாடும்போது நூறு விழுக்காடு கிடைக்காமல் தடுமாறுவது என்பதுகூட அவர்களின் இயலாமையை அல்ல M.S.விஸ்வநாதன் என்கிற மிகப் பெரிய ஆளுமையின் அசைத்துப் பார்க்க முடியாத பிருமாண்டத்தையே நம்மால் தரிசிக்க முடிகிறது.

குழந்தை மாதிரியான என்றெல்லாம் சொல்லமுடியாது, ஒரு குழந்தையேதான் M.S.விஸ்வநாதன்.

வாழ்த்துவதிலும் வளர்த்து விடுவதிலும் அவருக்கு நிகர் அவரே என்கிறார்கள்.

முதல்முறை இசை அமைப்பதற்காக இளையராஜா அவர்கள் இசைக்கருவிகளை வாடகைக்கு விடும் கடைக்கு சென்று பத்து வயலின்கள் வாடகைக்கு வேண்டும் என்று கேட்கிறார். கடைக்காரரிடம் பத்து வயலின்கள் இல்லை. ஆனால் பத்து வயலின்களில் இளையராஜா பிடிவாதமாக நிற்கிறார். அப்போது கடைக்கார்ர் சொல்கிறார், “ பத்து வயலின் வேணுமாம். பெரிய M.S.V பாரு.” அந்தப் பொழுதில் அவருக்கு தன் எதிரே நின்றிருப்பவர் வருங்காலத்தில் உலகையே தன் இசையால் கட்டிப் போடப் போகிற மாமேதை என்பது தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்தக் காலத்தில் M.S.V அவர்கள்தான் மெல்லிசை உலகின் மாமேதை.

முதல்நாள் இசை அமைக்கப் போகிறார் இளையராஜா. பக்கத்து தியேட்டரில் இருந்த M.S.V அவர்களிடம் பக்கத்து தியேட்டரில் யாரோ புதுசா ஒரு பையன் இசை அமைக்க வந்திருப்பதாகத் தகவல் வருகிறது. உடனே எழுந்து பக்கத்து தியேட்டருக்கு ஓடி வருகிறார்இளையராஜா இசையைத் தொடங்கும் வேலை மின்சாரம் நின்று போகிறது. அபசகுனமாக நினைத்து நொந்துபோன இளையராஜாவை தோளணைத்துபெருசா வருவப்பாஎன்று உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார் M.S.V. இந்தப் பக்குவமும் பெருந்தன்மையும் திரைத்துறையில் அரிதினும் அரிது.

இவரும் கவியரசும் இணைந்து நிகழ்த்திய ஜாலங்கள் ஏராளமானவை.

ஒரு கடிதத்தைக் கூட இவரால் இசையாய் பாடலாய்த் தரமுடியும்,

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச் சுடரேஎன்று உயிர்ப்போடு இவரிடமிருந்து கசியும்.

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்என்கிற திருமணப் பத்திரிக்கையைக் கூட இவரால் பாடலாகத் தர முடிந்தது.

அந்த மாமேதை இன்று நம்மிடையே இல்லை என்கிற வலியை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்துவிட முடியாது.

M.S.V என்னும் மாபெரும் சமுத்திரத்தில் எங்கள் காதுகளை மூழ்கித் தொலைத்துவிடவே ஆசைப் படுகிறோம்.
*************************************************************************************************************** 

அவர்களும் நம்மைப் போலவே ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள்தான்.
மகனாகவோ, மகளாகவோ வீட்டிற்குள் வளைய வளைய வந்தவர்கள்தான்.
ஏதோ ஒரு புள்ளியில் தாம் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பதை கண்டறிந்த நொடியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

வளர்த்த நாய்க்குட்டி காணாமல் போனாலே பதறிப் போய் தெரு தெருவாய் தேடுபவர்கள் காணாமல் போன தாங்கள் பெத்து வளர்த்த இவர்களைத் தேடுவதே இல்லை.

வீட்டை விட்டு வெளியேறும் அந்தக் கணத்தில் வாக்குரிமை உள்ளிட்ட சகல உரிமைகளும் இவர்களுக்கு இல்லாமல் போகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சாசாதகமான ஒரு தீர்ப்பின் உதவியோடு ஏழாண்டு கால போராட்டத்தின் விளைவாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கிறார் அக்கய் பத்மஷாலி.

இந்த வகையில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெருகிறார்.

வாழ்த்துக்கள் அக்கய்.

எனக்கு ஒரு தம்பி ஒரு திருநங்கை என்று எந்த வித நெருடலுமின்றி சொல்லும் காலம் என் மரணத்திற்குமுன் வந்தால் மகிழ்வோடு சாவேன்
**************************************************************************
"செயல்படுத்தவே முடியாத கொள்கையை இத்தனை ஆண்டுகளாக அமெரிக்க கடைபிடித்து வந்திருக்கிறது" என்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள். கியூபா மீதான அமெரிக்காவின் மனிதாபிமானமேயற்ற நடவடிக்கைகள் குறித்துதான் அவர் இப்படி கூறியிருக்கிறார்.
உண்மையை சொன்னால் செயல்படுத்தவே முடியாத என்று சொல்வதைவிட செயல்படுத்தவே கூடாத கொள்கைகள் அவை என்பதே பொருத்தமானதாகும்.
அமெரிக்க ஆட்சியாளர்களைப் போல் அல்ல அமெரிக்க மக்கள். அவர்கள் கியூபாவையும் கியூப மக்களையும் நேசிக்கிறவர்கள்.
கியூப மக்களும் ஆட்சியாளர்களும் அமெரிக்க மக்களை அப்படியொரு அன்பு கொண்டு நேசிக்கிறவர்கள்.
உலகின் எந்த மூலையிலிருந்தும் மருத்துவத்திற்காக அமெரிக்காவை நோக்கித்தான் தலைவர்களும் செல்வந்தர்களும் பறக்கிறார்கள். அமெரிக்காவின் மருத்துவ வசதி அவ்வளவு பேர் பெற்றது. ஆனால் அங்குள்ள மருத்துவம் கோடீஸ்வர கனவான்களுக்கானது. உலகில் உள்ள எந்த கோடீஸ்வர கனவானுக்கும் எந்தவித பாகுபாடின்றி அங்கு உயர்தரமான மருத்துவம் கிடைக்கும். ஆனால் அமெரிக்கனே ஆனாலும் அவன் ஏழையாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு கண்புறைக்கான மருத்துவம்கூட கிடைக்காது என்பதுதான் கசந்தாலும் உண்மை. இந்தியாவில் கூட பணக்காரனுக்கு ஒருவகை வைத்தியம் நடுத்தரனுக்கு ஒருவகை வைத்தியம் என்று வகை வகையாக கிடைத்தாலும் ஏதுமற்ற ஏழைக்கும் இலவச கண்புறை சிகிச்சைக்கு வழியுண்டு. ஆனால் அமெரிக்காவில் கண்புறை அறுவை என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியே ஆகும்.
அத்தகைய ஏழை உழைக்கும் அமெரிக்க மக்களை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து கண்புரை அறுவை செய்து மீண்டும் கொண்டுபோய் விடும் நாடு நாடு கியூபா என்று படித்திருக்கிறேன்.
இன்றைய ஒபாமாவின் பேச்சு கியூப மக்களும் அமெரிக்க மக்களும் அன்போடு உறவாட வாய்ப்பு உருவாகலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது
வாழ்த்துக்கள் ஒபாமா..

********************************************************************* 

"இந்தியப் பொருளாதாரத்தோடு சேர்த்து இந்தியும் வளர்கிறது" என்று போன இடத்தில் வைத்து சொல்லியிருக்கிறார் பிரதமர்.
கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த ஒரு மொழி வளரும்போது மகிழவும் சமஸ்கிருதமே அழிவை நோக்கி நகர்ந்தாலும் அது குறித்து கவலைப் படவுமே கற்றுக் கொடுத்திருக்கிறது என் மண்ணின் பண்பாடு.
எங்கள் மண்ணில் எங்களிடமிருந்தே எங்கள் மொழியை அப்புறப்படுத்தித்தான் இதை நீங்கள் சாத்தியப் படுத்த முயற்சிப்பதைத்தான் நாங்கள் கவலையோடு கேள்வி கேட்கிறோம்.
தெரியுங்களா பிரதமர் அவர்களே,

இந்தி வளர்வதை பெருமிதத்தோடு நீங்கள் பதியும்போது மகிழும் எங்களுக்கு அழிவிலிருந்து எங்கள் மொழியை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பது.



No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...