Friday, August 21, 2015

14 ஒரு வழக்கும் ஒரு சாட்சியும்

அவர் தீவிரமான பக்தர்தான். ஆனால் வெறித் தனமான பக்தி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. என்ன, ஒரு விதத்தில் நமக்கு நேரெதிரானவர். அவருக்கு எம்மதமும் சம்மதம். நமக்கோ எந்த மதத்தோடும் சம்மதம் இல்லை.

எதையும்விட முக்கியமானது அவரது அர்ப்பணிப்போடு கூடிய தொழில் பக்தி. அர்ப்பணிப்பு என்றால் அப்படியொரு அர்ப்பணிப்பு.

“ஓன்னு அழுதாச்சும் எங்களப் படிக்க வச்சிடுவாருங்க சார்”

பிள்ளைகள் இப்படிச் சொல்லி அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

பணியில் சேர்ந்த ஆண்டிலிருந்து ஒரு ஆண்டுகூட விடாமல் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக தனது பாடத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி விழுக்காட்டினைத் தருபவர்.

அன்று மிகுந்த விரக்தியோடு ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தார்.

“ஏன் அண்ணே ஒரு மாதிரியா உக்காந்து இருக்கீங்க. உடம்பு ஏதும் சரியில்லையா?”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை எட்வின்”

“பசங்க ஏதும் எழுதிக் காட்டலையா அண்ணே?”

பள்ளியில் பிள்ளைகள் யாரேனும் தவறிழைத்தாலோ அல்லது அவர் சொன்ன வேலையை செய்யவில்லை என்றாலோ அவர்களைத் தண்டிக்க மாட்டார். மாறாக தன்னையே வருத்திக் கொண்டு, பல நேரங்களில் சாப்பிட மறுத்து அடம் பிடித்து இப்படித்தான் தன்னையே வருத்திக் கொள்வார்.அதனால்தான் அப்படிக் கேட்டேன்.

“என்ன எட்வின், மனசாட்சியே இல்லாம இப்படி பண்றாங்க? கேட்டதுல இருந்து மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எட்வின்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, இன்னிக்கு காலைல பசங்கள கூட்டிட்டு இருங்களூர் போனோம் இல்ல...”

புரிந்தது. இப்போதெல்லாம் ஜனவரிக்குப் பிறகு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு யாரேனும்புத்துணர்வு முகா, அல்லது அவர்களுக்கான பிரார்த்தனை என்கிற வகையில்மாணவர்களைத் திரட்டி விடுகின்றனர்.

அதிலும் பொறியியல் கல்லூரிகள் தங்களது கல்லூரிக்கான சேர்க்கையை கவனத்தில் கொண்டு பள்ளிகளுக்கு பேருந்துகளை அனுப்பி புத்தாக்க முகாம்களுக்கு மாணவர்களைத் திரட்டுகிறார்கள்.

அதுபோல அன்று காலை இருங்களூரில் இருக்கும் ஒரு போதகர் சிறப்பு வழிபாட்டிற்காக பள்ளிகளிலிருந்து மாணவர்களைத் திரட்டியிருந்தார்.

பிள்ளைகளோடு அண்ணனும் போயிருந்தார்.அங்கு நடந்த ஏதோ ஒன்று அவரது மனதை சிராய்த்திருக்க வேண்டும்.

“என்ன நடந்துச்சுங்க அண்ணே?”

“எல்லாம் நல்லாத்தான் நடந்துச்சு எட்வின். அதிலுங் குறிப்பா அந்த பாஸ்டர் புள்ளைகளுக்காக உருகி அழுது ஜெபம் செய்தது மனச அப்படியே உருக்கிடுச்சு எட்வின்.”

“அப்புறம் என்னங்க அண்ணே?”

“ஒரு பாப்பா சாட்சி சொல்ல வந்துச்சு. அது சொல்லுது, நான் போன வருஷம் ஒரு பேப்பர்ல இருபது மார்க்குக்குத்தான் எழுதினேன்.  ஆனால் கர்த்தர் மனதிறங்கி, பேப்பர் திருத்தும் ஆசிரியரின் மனதை இறங்க வைத்து எனக்கு எண்பது மதிப்பெண்களை வாங்கித் தந்தார் என்கிறது.இது பசங்கள கெடுத்துடாதா எட்வின். படிக்காம சாமி கும்பிட்டாப் போதும் என்கிற மனநிலையை உண்டாக்கிவிடாதா?”

”ஆமாம் விடுங்க அண்ணே,” என்று அவரை ஒருவழியாய் சமாதானப் படுத்திவிட்டு இருந்த சமாதானத்தை தொலைத்தவனாய் நகர்ந்தேன்.

அவரைப் பொறுத்தவரை இத்தகைய சாட்சிகள் மாணவர்களை ‘எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவார்’ என்ற மனநிலைக்குத் தள்ளி படிக்க விடாமல் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதே என்ற கவலை. அது கடந்து அதை அவர் அரசியல் படுத்தவில்லை.

ஆனால் நமக்கோ அதில் அலச சில இருக்கின்றன. அதற்குள் போகுமுன் ஒரு வழக்கை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

அது ஒரு விசித்திரமான வழக்கு.

பொதுவாக தேர்விலே ஏதேனும் ஒரு பாடத்தில் அல்லது சில பாடங்களில் தோல்வி அடையும் மாணவனோ மாணவியோ தான் நல்ல முறையில் தேர்வினை எழுதியிருப்பதாகவும் எனவே எனது தாளினை மறு மதிப்பீடு செய்ய உத்திரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடுவது வாடிக்கை.

சில நேரங்களில் தான் பெற்றிருக்கிற மதிப்பெண்ணிற்கும் தான் எழுதியதற்கும் கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் இருப்பதால் தனது தாளினை மறு மதிப்பீடு செய்ய உத்திரவிடக் கோரி நீதிமன்றத்தை அனுகுவதும் உண்டு.

பல நேரங்களில் இதில் அவர்கள் வெற்றி பெறுவடு உண்டு. இன்னும் சொல்லப் போனால் மறு மதிப்பீட்டிற்குப் பிறகு அந்தக் குழந்தை மாநிலத்தில் முதலிடத்திற்குப் போனதும் உண்டு. இதில் இரண்டுவகையான துயரங்கள் உண்டு.

ஒன்று யாரோ ஒரு ஆசிரியரின் பிழையால் அல்லது கவனக் குறைவால் அந்தக் குழந்தை தனக்கு உரிய இடத்தை சில காலம் இழந்திருந்தது.

இன்னொன்று, அதே ஆசிரியரின் கவனக் குறைவால் தனக்கு உரியதற்ற இடத்தில் கொஞ்ச காலம் இருந்து தற்போது அந்த இடத்தி இழந்த மற்றொரு குழந்தை.

ஒரே ஆசிரியரின் சன்னமான கவனக் குறைவால் இரண்டு குழந்தைகள் அனுபவித்த மன உளைச்சல் சொல்லி மாளாது.

ஒருக்கால் அந்தக் குழந்தை நீதிமன்றத்தை அணுகியிருக்காவிட்டால் அந்தக் குழந்தைக்கு உரிய இடம் கிடைக்காமல் போனது, அந்த இடத்திற்கு தகுதியற்ற குழந்தையிடம் அந்த இடம் போனது என்ற வகையில் அது ஒரு இரட்டைக் குற்றமாகவே அமைந்திருக்கும்.

இப்போது கேட்கலாம்,

முதலிடத்திற்கு தகுதியற்ற ஒரு குழந்தை அந்த இடத்திலிருந்து கீழிறக்கம் செய்யப்பட்டது நியாயம்தானே? அதில் அந்தக் குழந்தை மன உளைச்சல் அடைவதற்கு என்ன இருக்கிறது?

மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமாகக்கூடப் படும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.,

தன்னை முதலிடத்தில் அமர்த்தும்படி அந்தக் குழந்தை யாரிடத்தும் மனு எதுவும் கொடுக்கவில்லை. யாருடைய தவறாலோ அந்த இடத்திலிருந்து விருதுகள், பாராட்டுக்கள், எல்லாவற்றையும் அனுபவத்துவிட்டு  தற்போது அவை தனக்குரியவை அல்ல என்றானபின் தனது உறவினர்களை, நண்பர்களை,  மற்றவர்களைப் பார்க்க எப்படிக் கூனி குறுகியிருப்பாள்.

ஆனால் இது மாதிரி வழக்குகள் வழக்கம்தான்.

ஆனால் ஒரு மாணவன் தான் கணிதப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றது சாத்தியமே இல்லாத ஒன்று என்று வழக்கிற்குப் போனான்.திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தான் கணக்கிலே எழுபது மதிப்பெண் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும், ஆகவே முறையாக மறு மதிப்பீடு செய்து தன்னை கணிதத்திலே தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கிற்குப் போகிறான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

இப்படியெல்லாம்கூட நடக்குமா? என்று நினைக்கத் தோன்றும்.

ஆனால் நடந்தது.

அதிகபட்சம் அறுபத்தி ஐந்து மதிப்பெண்களுக்குமேல் தான் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும் தனக்கு எழுபது மதிப்பெண் வழங்கி தனது எதிர்காலத்தை பாழாக்கியிருக்கிறார்கள் என்பதே வழக்கின் சாரம்.

சொன்ன மாதிரியே அவன் அறுபத்தி ஐந்து மதிப்பெண்கள்தான் அவன் பெற்றிருந்தான்.

நடந்தது இதுதான்.

அவன் கட் ஆஃப் கணக்கில் வரும் மற்ற எல்லாத் தாள்களிலும் இருநூறு எடுத்திருந்தான். கணிதத் தேர்வன்று வினாத் தாளை வாங்கியதும் 180 மதிப்பெண் மட்டுமே வாங்க முடியும் என்பது புரிந்திருக்கிறது. 180 மட்டுமே வாங்கினால் பொறியியல் சேர்க்கைக்கான கடாஃப் குறையும் என்பது புரிந்திருக்கிறது.

ஆனால் 180 மதிப்பெண் வாங்குவதற்குப் பதிலாக தொவி அடைந்துவிட்டால் உடனடித் தேர்வில் நன்கு எழுதி 200 எடுத்துவிடலாம் என்று நினைத்தவன் 65 மதிப்பெண் வருமளவு மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விட்டான்.

திருத்திய ஆசிரியருக்கு இது தெரியாது.பாவம், 65 வாங்கி தோல்வி அடைகிறான் என்று கருதிய அவர் 5 மதிப்பெண்களை அங்கும் இங்குமாக நிரவி தேர்ச்சி பெறச் செய்துவிட்டார்.

அதற்கு அவர் கொடுத்த விலையும் பெற்ற தண்டனைகளும், அப்பப்பா எழுத்தில் சொல்லி மாளாது.

இப்போது அந்த சாட்சிக்கு வருவோம்.

20 மதிப்பெண்ணிற்கு மட்டுமே எழுதிய ஒரு குழந்தைக்கு எந்த ஒரு ஆசிரியனும் எண்பது போட முடியாது. இது எனது கால் நூற்றாண்டுக்கும் மேலாலான எனது கல்வி ஊழியத்தில் நான் கற்ற பாடம்.

மூன்று விஷயங்கள்தான் இருக்க வேண்டும்.

ஒன்று, ஊழல் நடந்திருக்க வேண்டும்.அதற்கு வாய்ப்பில்லை என்றே படுகிறது.

இரண்டு, அந்தக் குழந்தை பொய் சொல்லியிருக்க வேண்டும்.அல்லது, மூன்றாவதாக ஒருக்கால் ஏசுநாதரே திருத்திய ஆசிரியரின் மனதை இறங்க வைத்து இருபது மதிப்பெண்ணிற்கு மட்டுமே எழுதியிருந்தக் குழந்தைக்கு எண்பது மதிப்பெண்ணை வாங்கித் தந்திருக்க வேண்டும்.

ஊழல் நடந்திருக்கிறது எனில் அது சாட்சிக்குரிய விஷயம் அல்ல. அது கிரிமினல் குற்றம்.

இரண்டாவது எனில் அது மத அரசியலை நோக்கி நகர்த்தும். அது மிக மிக ஆபத்தானது.

மூன்றாவது எனில், ஏசு ஆசிரியரிம் பேசி இருபதை எண்பதாக்கிய குற்றவாளியாகிறார்.

ஒன்று சொல்வேன்,

சாமி இல்லை என்று சொல்கிற நாங்களே ஒரு கடவுளை இந்த அளவிற்கு கேவலப் படுத்த மாட்டோம்No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...