Sunday, August 30, 2015

கடிதம் 06

அன்பின் நண்பர்களே,
வணக்கம்.
நலம்தானே?

மூன்று விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நேற்று முன்தினம் பணியிடைப் பயிற்சி முடிந்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது  SRV பள்ளியின் முதல்வர் தோழர் துளசி அழைத்தார்.

ஏற்கனவே “காக்கைச் சிறகினிலே” இதழுக்கு ஏதேனும் செய்வதாக சொல்லியிருந்தார். அதை சுத்தமாய் நான் மறந்திருந்த நேரத்தில் பள்ளியின் சார்பாக காக்கைக்கு 25000 ரூபாய் சனியன்று நடக்கும் விழாவில் தர இருப்பதாகவும். வந்து பெற்றுச் செல்ல வேண்டுமென்றும் அழைத்தார்.

ஏற்கனவே சனியன்று அரும்பாவூரிலொரு நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டிருந்ததால் போக இயலவில்லை. எனது நிலைமையை உணர்ந்துகொண்ட தோழர் தொகையை கேட்புக் காசோலை மூலம் அனுப்பி வைப்பதாகக் கூறினார்.

இதை முத்தையாவிடம் சொன்னபோது “அப்பாடா பேப்பர் கடனை அடைத்துவிடலாம்” என்றார்.

இந்தத் தொகை எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை முத்தையா சொன்னதிலிருந்து உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

துளசிக்கு என் அன்பும் நன்றியும்.

இது முதல் தவணைதான் என்பது எனக்கு மட்டும் அல்ல துளசிக்கும் தெரியும்.

நிறையத் தோழர்களது கருத்துப் பங்களிப்பாலும் படைப்புகளாலும் விமர்சனங்களாலும் மட்டுமே காக்கை தொடர்ந்து பறக்கிறது.

காக்கை குறித்து பேசுங்கள்,
காக்கை குறித்து எழுதுங்கள்,
காக்கைக்கு படைப்புகளை கொடுத்துதவுங்கள்,
காக்கையை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்,
காக்கைக்கு சந்தா செலுத்துங்கள்,
செலுத்திய சந்தாவை புதுப்பித்து உதவுங்கள்,
நண்பர்களின் திருமண நாள், பிறந்த நாள் பரிசாக காக்கைக்கு அவர்கள் பெயரில் சந்தா செலுத்துங்கள்,
இது கடந்து விளம்பரம் கிடைக்குமெனில் உதவுங்கள்,

இவை கடந்து வேறு எந்த வகையில் உதவ முடியுமெனினும் உதவுங்கள்.

*******************************

2

அக்டோபர் மாதம் பதினொன்றாம் தேதி புதுக்கோட்டையில்   வலைப் பதிவர்கள் சந்திப்பு நடக்கிறது. அண்ணன் முத்துநிலவன் அவர்களும் கஸ்தூரி ரெங்கன்  வைகறை உள்ளிட்ட தோழர்களும் சுழன்று சுழன்று அதற்காக உழைப்பதை பார்க்கிறேன். காக்கைச் சிறகினிலே அவர்களது நிகழ்விற்கு தன்னால் ஆனதை செய்வதுதான் சரியென்று படுகிறது.

வரும் தோழர்களுக்கு குறிப்பெழுதுவதற்காக வழங்கப்படும் பேட் மற்ரும் பேனாவினை வழங்கலாம் என்று நினைக்கிறேன். தோழர்கள் முத்தையாவும் சந்திரசேகரும் இதற்கு அனுமதியளிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

இந்த சந்திப்பு குறித்த ஒரு சிறு குறிப்பை செப்டம்பர் மாத காக்கையில் “65/66, காக்கைச் சிறகினிலே” யில் எழுதியிருக்கிறேன்.

அது குறித்த நேர்காணல் ஒன்றினை அக்டோபர் இதழிலும், நிகழ்வு குறித்து நவம்பர் இதழிலும் நிச்சயம் வைப்போம்.

சந்திப்பு வீச்சோடு அமைய காக்கை வாழ்த்துகிறது.

************************************
3

தோழர் உதயன் காக்கை பெரிதும் மதிக்கிற எழுத்தாளர்களில் ஒருவர்.  அவர் எழுத்து மீதான விமர்சனங்களும் காக்கைகு உண்டு என்றாலும் அவர்மீதான அன்பும் மரியாதையும் எந்த நேரத்திலும் காக்கைக்கு குறைந்ததே இல்லை.

அவரது ”லோமியோ” என்ற நாவலை வெளியிட்டு நானும் தோழர் பிரபஞ்சனும் பேசினோம். அந்த எனது உரையை சிறு நூலாக கொண்டுவர வேண்டும் என்றும் பிரபஞ்சன் வைகறை அய்யாவிடமும் தன்னிடமும் கூறியதாக தஞ்சாவூர்க் கவிராயர் சொன்னார். ஒலிப் பதிவு செய்யப் படாததாலும் குறிப்புகளை தொலைத்துவிட்டதாலும் அது இயலாமல் போனது. என்றாலும் அந்த நாவல் குறித்து ஒரு விமர்சனக் கட்டுரையை நான் எழுதியிருக்கிறேன்.

கிறிஸ்தவத்தில் பதிந்து கிடக்கும் ஜாதியப் படிநிலைகளை மிக அழகாகப் பேசும் அந்த நாவலைப் பற்றி  நிறைய இடங்களில் நான் உரையாற்றியும் இருக்கிறேன்.

தோழர் உதயன் தனது சமீபத்திய நாவலை முத்தையா மூலமாக எனக்கு அனுப்பி மதிப்புரை எழுதிக் கேட்டார். வாசித்தேன். நலமின்மை மற்ரும் சில காரணங்களால் அதை என்னால் செய்ய இயலாமல் போனது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் அந்த நாவலின் பிரதியை அவர் தோழர் முத்தையாவிடம் தந்திருக்கிறார். அதில் அதை “ காக்கைச் சிறகிலே” வெளியீடாக அவர் போட்டிருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்துபோன முத்தையா தனது கண்டனத்தைப் பதிந்ததோடு காக்கையின் பெயரோடு அந்த நாவல் விநியோகிக்கப் படக் கூடாதென்றும் கூறியிருக்கிறார்.

சரி என்று சொல்லி சென்றிருக்கிறார் உதயன் அவர்கள்.

அதை அவர் சரி செய்வார் என்றே நம்புகிறேன். இல்லாத பட்சத்தில் என்ன செய்வதென்று காக்கை முடிவெடுக்கும்.

அந்த நாவலுக்கும் காக்கைக்குமான தொடர்பு என்பது எங்கள் அன்பிற்குரிய உதயனின் நாவல் என்பது மட்டுமே.



   

2 comments:

  1. காக்கைச் சிறகினிலே இதழுக்குச் சந்தா செலுத்த விரும்புகின்றேன் தோழர்
    விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன்
    நன்றி
    தம +1
    எனது மின்னஞ்சல் முகவரி
    karanthaikj@gmail.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். சந்தா விவரத்தை மாலை பேசும்போது சொல்கிறேன் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...