அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம்.
தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டிருந்த உங்களது தலைவரை இழந்து தவிக்கும் உங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் என் சார்பிலும், “காக்கைச் சிறகினிலே” சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
”காக்கை” வந்த அடுத்தநாளே அதை வாசித்துவிட்டு எங்களோடு உரையாடும் திமுக மாநில நிர்வாகிகள் இருக்கிறார்கள். எனவே இந்த மடல் உங்களை வந்தடைவர்தற்கான வாய்ப்புகள் உண்டு என்பதையும் நானறிவேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு பெரிய வெகுஜன அரசியல் இயக்கத்தில் அந்த இயக்கத்தின் செயல் தலைவரான உங்களுக்கு இந்த நேரம் எவ்வளவு அழுத்தத்தைத் தரும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. அத்தகைய சூழலிலும் திமுகவின் சார்பில் ஒருகோடி ரூபாயை கேரளப் பேரிடருக்கு நிவாரணமாக அளித்ததோடு திமுகவின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தஙகளது ஒருமாத ஊதியத்தை இதற்காக வழங்குவார்கள் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பேரதிகமாய் ஏதேதோ அமைப்புகளின் அபிமானிகளும் ஆதரவாளர்களும் ஊடகங்களில் ஊனுருக உயிர் கசிய விவாதங்களைத் தொடங்கி விட்டார்கள். அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கட்டும்.
இந்த இதழ் அச்சாகி வாசிப்புக்கு வரும்வேளையில் நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகி இருப்பீர்கள். அதற்கான நெஞ்சார்ந்த வாழ்த்தினை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விரும்புகிறேனோ இல்லையோ, நான் உங்களுக்கு வாக்களிக்கிறேனோ இல்லையோ தமிழ்நாடு ஒருநாள் உங்கள் ஆளுகைக்குள் வரும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
அதனடிப்படையில்தான் தங்களோடு கொஞ்சம் உரையாட ஆசைப்படுகிறேன்.
அதனடிப்படையில்தான் தங்களோடு கொஞ்சம் உரையாட ஆசைப்படுகிறேன்.
”நெஞ்சுக்கு நீதி” ஏறத்தாழ 4750 பக்கங்கள் வரும் என்கிறார்கள். தொடர்ந்து எழுதுபவன் என்கிற முறையில் எனக்கு இது பெரும் வியப்பாக இருக்கிறது.
4750 பக்க சுயசரிதை வேறெதுவும் உண்டா என்பது குறித்து என்னிடம் தகவல்கள் ஏதும் இல்லை. 4750 பக்கங்களுக்குப் பிறகும் தீவிர செயல்பாட்டோடு கூடிய ஒரு நீண்ட வாழ்க்கை அவருக்கு மிச்சம் இருந்திருக்கிறது. அதையும் அவர் எழுதியிருந்தால் அது இன்னும் ஒரு 3000 பக்கங்களுக்கு நகர்ந்திருக்கக் கூடும்.
இரண்டு விஷயங்கள் என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு போகின்றன
1) ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் 5000 பக்கங்கள் எழுதினாலே பெரிது. தன் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே ஒரு மனிதர் 5000 பக்கங்கள் எழுதியிருக்கிறார்.
2) தனது 75 விழுக்காடு வாழ்க்கையைப் பற்றி மட்டுமே 5000 பக்கங்கள் வருமளவிற்கு அந்த மனிதருக்கு வாழ்க்கையில் செய்திகள் இருந்திருக்கின்றன.
2) தனது 75 விழுக்காடு வாழ்க்கையைப் பற்றி மட்டுமே 5000 பக்கங்கள் வருமளவிற்கு அந்த மனிதருக்கு வாழ்க்கையில் செய்திகள் இருந்திருக்கின்றன.
இதுபோக அவர் நாடகங்கள் எழுதியிருக்கிறார், திரை வசனம் எழுதியிருக்கிறார், கவிதைகள் எழுதியிருக்கிறார், புதினங்கள் எழுதியிருக்கிறார், கட்டுரைகள் எழுதியிருக்கிறார், சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா என்று ஏராளாம் எழுதியிருக்கிறார்.
தனது கட்சித் தோழர்களுக்கென்று அவர் எழுதிய கடிதங்கள் கடித இலக்கிய வகையிலே வரும்.
கலைஞரது எழுத்திலே உங்களுக்கும் விமர்சனம் இருக்கவே செய்யும். எனக்கும் அவரது பல செயல்பாடுகளின்மீதும் முடிவுகளின்மீதும் இருப்பதைப் போலவே அவரது எழுத்துக்களின்மீதும் விமர்சனம் உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் அவரது எழுத்தின்மீதான விமர்சனம் அவருக்கும் இருந்திருக்கவே செய்யும். அவற்றை அவரது நெருங்கிய நண்பர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டிருக்கவும் கூடும். கொஞ்சம் சிரமப்பட்டு அவற்றை திரட்டி நூலாக்குங்கள். அது நீங்கள் அவருக்கு செய்யும் பெரும் பங்களிப்பாக அமையும்.
நான் இங்கு குறிப்பிட்டு சொல்ல விரும்பும் ஒரு விஷயம் அவர் எழுத்தின்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.
நெருக்கடி நிலையைப்பற்றி உங்களுக்கு நான் கூறுவது என்பது திரு மோடியிடமே ஒருவன் நூறு பொய்களைக் கூறுவதற்கு சமமாகும். ஆனாலும் உங்களுக்கான இந்தக் கடித்தத்தின் வாயிலாக நானே ஒருமுறை அதை மீள அசைபோட ஆசைப்படுகிறேன்.
கலைஞரை மிகவும் வெறிகொண்டு எதிர்ப்பவர்களும் இந்தியா முழுமையையும் இந்த மண்ணின் மகத்தான தலைவர்களையும் ஏதோ ஒரு வகையில் கொடூரமாக காவு கொண்ட நெருக்கடி நிலையின் கோரக் கரத்தினின்று தமிழகத்தையும் தமிழகத் தலைவர்களையும் குறிப்பாக பெருந்தலைவர் காமராசர் அவர்களையும் அவர் காப்பாற்றிய பாங்கினை நன்றியோடு நினைவு கூரவே செய்கிறார்கள்.
இதையும் இதனால் அவரது கட்சியும் உங்களது குடும்பமும் எதிர்கொண்ட இன்னல்களையும் இன்றைய காங்கிரஸ் தலைவர்களே மிகுந்த நெகிழ்வோடு மேடைகளில் எடுத்து வைப்பதை காண முடிகிறது.
அன்று அவர் இந்திராவின் பக்கம் சாய்ந்திருந்தால் அந்தப் புள்ளியில் இருந்து வரலாற்றில் அவர் இல்லை. அவர் நெருக்கடி நிலையை அவ்விதமாக எதிர் கொண்டிருக்கவில்லை என்றால் இன்றைக்கு திராவிடக் கட்சிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இப்பவும் நான் சொல்ல வந்ததுகூட வேறு திரு ஸ்டாலின். நெருக்கடி நிலையின்போது பத்திரிக்கைகளுக்கு ”இரட்டைத் தணிக்கை” இருக்கிறது. முரசொலிக்கு இன்னும் கூடவே நெருக்கடிகள் இருந்த நேரம். நீங்கள் உள்ளிட்ட திமுக தோழர்கள் சிறையில். யாரும் அவரோடு இல்லை. சற்றேறக்குறைய தன்னந்தனி மனிதனாக நிற்கிறார்.
அவரது கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோக வேண்டும். மேடை போட்டு பேச முடியாது. பத்திரிக்கை மூலமாக கருத்தைக் கொண்டுபோக முடியாது. அவரே முரசொலி அலுவலகம் போகிறார். மக்களுக்கான தனது கருத்துக்களை அவரே அச்சுக் கோர்க்கிறார். அவரே துண்டறிக்கைகளாக அவற்றை அச்சடிக்கிறார் யாரும் இல்லாத சூழலிலும்.எப்படி விநியோகிப்பது?
அவரே களமிறங்குகிறார். திமுக கொடியை ஒரு கழியிலே கட்டி அதைத் தன் தோளிலே சாய்த்துக் கொள்கிறார். அண்ணா சாலையிலே நின்றுகொண்டு போவோர் வருவோருக்கெல்லாம் அந்தத் துண்டறிக்கைகளை விநியோகிக்கிறார்.
நேற்றுவரை இந்த மண்ணின் முதல்வர். இன்று கையிலே கட்சிக் கொடியோடு துண்டறிக்கைகளை அந்த மனிதனால் எப்படி விநியோகிக்க முடிகிறது? காரணம் மிகவும் எளிதானது. அவர் எழுத்தின்மீது அவருக்கிருந்த நம்பிக்கை. தன் எழுத்து மக்களை நெருக்கடிக்கு எதிராக களமிறக்கும் என்பதில் அவருக்கிருந்த நம்பிக்கை.
அவரை அவரே எதிர்பார்க்காத வகையில் குளித்தலையில் அண்ணா காரணம் இல்லாமல் ஒன்றும் களம் இறக்கவில்லை திரு ஸ்டாலின். அதற்குப் பின்னனியில் அவருக்கு வலுவான காரணமும் நம்பிக்கையும் இருந்தது.
குளித்தலைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குட்டி ஜமீந்தார் தன்னிடம் இருந்த பலநூறு ஏக்கர் நிலங்களைக் கொண்டு ஏகப்பட்ட குடும்பங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார். தனி ஒருவனாக களம் இறங்கி ஆட்களைத் தனது பேச்சாலும் செயலாலும் ஒன்றுதிரட்டி அந்த ஜமீந்தாருக்கு எதிராகப் போராடி அந்த அடிமைகளுக்கு அந்த ஜமீந்தாரின் நிலத்தைப் பிரித்து வாங்கிக் கொடுத்திருந்ததாகக் கூறுகிறார்கள்.
திமுக இவ்வளவு பலமாக இல்லாத சூழ்நிலையில், ஆளுங்கட்சி முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்த ஒரு சூழ்நிலையில் அதை அவர் சாதித்திருக்கிறார் என்றால் அதற்காக மக்கள் அவரை வெற்றிபெற வைத்திருக்கிறர்கள் என்றால் அதிலிருந்து ஒரு பாடம் உங்களுக்கு இருக்கிறது திரு ஸ்டாலின்.
உழைக்கிற மக்களோடு நின்று அவர்களுக்காக போராடினால் அவர்களது வாழ்க்கை விடியும். அந்த எளிய மக்கள் தம் பக்கம் நின்றவர்களைக் கைவிட மாட்டார்கள் என்பதே அது.
அருள்கூர்ந்து யோசித்துப் பாருங்கள் திரு ஸ்டாலின். திமுக உழைக்கும் மக்களிடம் இருந்து பையப் பைய முதலாளிகள் பக்கம் நகர்ந்து போய் இருக்கிற உண்மை உங்களுக்குப் புரியும். மேடைகளில், அறிக்கைகளில் மக்களுக்காகப் பேசுவதோடு மட்டும் இல்லாமல் வாழ்க்கைக்கான அவர்களது போராட்டங்களில் அந்த எளிய மக்களோடு திமுகவை கொண்டு நிறுத்துங்கள்.
இன்னொரு விஷயத்தை நான் இங்கே அவசியம் உங்களோடு உரையாட ஆசைப்படுகிறேன்.
கலைஞர் இறந்தவுடன் அல்லது இறந்து விடுவார் என்று உறுதியாக தெரிந்தவுடன் நீங்கள் உங்கள் குடும்பத்தினரோடு சென்று முதல்வரைச் சந்தித்து அவரை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் கேட்கிறிறீர்கள். பிறகு முறைப்படி கட்சிமூலமாக கோரிக்கை வைக்கிறீர்கள். அந்தக் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது.
இரவோடு இரவாக உயர்நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெறுகிறீர்கள். எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் இறந்தபிறகு இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் நீதிமன்றத் தீர்ப்பு வந்த்தும் மரணத்திற்குப் பிறகும் கலைஞர் வென்றார் என்றும் திமுக தோழர்கள் எழுதுவதை கண்ணீரோடு என்னாலும் ரசிக்கவே முடிந்தது திரு ஸ்டாலின்.
ஆனாலும் அதை கலைஞரது போராட்டம் என்றோ அல்லது மரணத்திற்குப் பிறகான அவரது வெற்றி என்று மட்டுமோ நீங்கள் எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இதில் நமக்கான ஒரு பாடம் இருக்கிறது.
கலைஞரை அடக்கம் செய்துவிட்டு வந்து படுத்து எழுந்திருப்பதற்குள் அக்கிரஹாரத்து பெண் ஒருவர், ”இனி மெரினா சென்று வந்தால் வீடு வந்ததும் குளித்துவிட்டு பூனூலை மாற்ற வேண்டும்” என்று எழுதுகிறார்.
அதாவது கலைஞரை மெரினாவில் புதைத்ததால் மெரினா தீட்டுப் பட்டு விட்டதாம். அதுவும் பூனூலை மாற்றும் அளவிற்கு அந்தத் தீட்டின் வீரியம் இருக்கிறதாம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது ஸ்டாலின்.
அவர்கள் அப்பட்டமாக வெளியே வந்து விட்டார்கள் திரு ஸ்டாலின்.
ஆனால் அதை நாம் சரியாக எதிர்கொள்கிறோமா? என்ற அச்சம் என்னுள் இருக்கிறது.
பார்ப்பன ஆதிக்கத்தை கலைஞர் என்ற சூத்திரர் வென்றுவிட்டதாகவே பெரும்பான்மை பதிவுகள் வந்தன. திமுக தலைவர்கள் சிலரும் அதே பாதையில் நகர முயற்சித்தது மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது.
”பார்ப்பனரல்லாதார் இயக்கம்” என்று முன்னோர்கள் துவக்கியதன் பொருள் நசிந்துவிடக்கூடாது திரு ஸ்டாலின்.
இது ஒரு சுடுகாட்டுப் பிரச்சினை. கலைஞர் என்ற மிகப் பிற்படுத்தப்பட்ட தலைவரை மெரினாவில் வைத்தால் கடற்கரை தீட்டுப்படும் என்று சொல்வது பார்ப்பனத் திமிர் அன்றி வேறெதுவும் இல்லை.
ஆனால் அதிலிருந்து வெற்றி பெறுவது இடைசாதி வெற்றி என்றோ சூத்திர வெற்றி என்றோ மட்டும் குறுகிக் கொள்ளப்படுமானால் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது திரு ஸ்டாலின்.
இடைசாதியைச் சார்ந்த ஒருவருக்கு அவருக்கு உரிய நினைவிட்த்தை மறுப்பது பார்ப்பனத் திமிர் என்றால் இடைசாதி தெருக்கள் வழியாக தலித் பிணங்கள் கொண்டு செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை என்னவென்று சொல்வது?
இன்னமும் ஊர்த் தெருக்களில் தந்தை அம்பேத்கரின் சிலைகள் சேதப் படுகிறதே திரு ஸ்டாலின்.
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
நீங்கள் இதை அருள்கூர்ந்து அக்கறையோடு பரிசீலிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.
பார்ப்பனியத்திற்கு எதிரான இடைசாதி விடுதலைக்கு முன் நிபந்தனை தலித் விடுதலை என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நகர்வீர்கள் எனில் அது தமிழ் நாட்டிற்கு நல்லதுகளையும் அமைதியையும் கொண்டுவந்து சேர்க்கும். அல்லாது போனால் அது மதவெறி (அது எந்த மதமாயினும்) பாசிஸ்டுகளுக்கு வாசலைத் திறந்துவிடுகிற காரியத்தை சத்தமின்றி செய்யும்.
தோழமைகளை அரவணைத்து நீங்கள் வெற்றி காணவும் இந்த மண் அதனால் பயனுறவும் வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.
நன்றி.
அன்புடன்,
இரா.எட்வின்.
இரா.எட்வின்.
நன்றி: காக்கை செப் 2018
அருமை தோழர்
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete