அன்பிற்குரிய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரும் எங்கள் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான எங்கள் குமரி அய்யா அவர்களின் மகளுமான திருமதி தமிழிசை அவர்களுக்கு,
வணக்கம்.
தினமும் தினமும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஏறிக்கொண்டே போகிறது என்று சொன்னால் நீங்களே ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். நாளும் நாளும் ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்.
நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கூடிக்கொண்டே போகிறது.
இவை இரண்டும் ஆட்டோ ஓட்டுநர்களை மிகக் கடுமையாக பாதிக்கும் விஷயங்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
மிக நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநரையே இவை இரண்டு விஷயங்களும் மிகக் கடுமையாய் பாதிக்கும்.
ஒரு நாளைக்கு 125 லிருந்து 150 கிலோமீட்டர் ஓட்டினால்தான் 1500 ரூபாய் கிடைக்கும் என்று கொள்வோம். கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம்.
நல்ல நிலையில் உள்ள ஆட்டோவெனில் இருபது கிலோமீட்டருக்கு ஒரு லிட்டர் குடிக்கும். வயதான ஆட்டோ எனில் 15 கிலோமீட்டர் கொடுக்கும். நாம் இரண்டிற்கும் இடையில் ஒரு லிட்டருக்கு 17 கிலோமீட்டர் என்று கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் எனில் (150/17) 8.8 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும். தற்போதைய நெரிசலும் சிக்னல்களில் நிற்பதனாலும் இன்னும் ஒரு லிட்டர் கூட வரும். பத்து லிட்டர் என்று கொண்டால் தோராயமாக 850 ரூபாய் ஆகிறது.
வாடகை வண்டி எனில் அதற்கொரு 250 ரூபாய். திடீரென ஏற்படும் பஞ்சர் அல்லது கார்பரேட்டர் அடைப்பு அல்லது வண்டி முதலாளியிடம் கேட்கமுடியாத சில்லறை மராமத்து செலவினங்கள் என்ற வகையில் ஒரு 50 ரூபாய் செலவாகும். இந்த வகையில் ஏறத்தாழ 1150 ரூபாய் செலவாகும்.
ஆக 1500 ரூபாய்க்கு வண்டி ஓட்டினால் அவருக்கு 350 ரூபாய்தான் மிஞ்சும்.
இந்த நிலையில் தினமும் தினமும் பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே போனால் அவருக்கான மிச்சம் குறையும் என்பது நீங்கள் அறியாததா தாயே.
பெட்ரோல் உயர்வு தன்னை பாதிக்காது என்று சொல்ல படத்தில் உள்ள திரு கதிர் ஒன்றும் மத்திய அமைச்சர் அல்ல. மத்திய அமைச்சரின் அந்த அலட்சியமான கூற்றையும் எங்கள் அய்யாவின் மகளால் ஒருபோதும் மனதார ஏற்க முடியாது என்பதையும் நான் அறிவேன்,
எளிமையான ஆட்டோ ஓட்டுநரான அவர் இப்படியே பெட்ரோல் விலை ஏறிக் கொண்டிருந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார்.
இந்த 350 ரூபாயும் குறையும் எனில் அதைக் கொண்டு அவர் தனது குடும்பத்தை எப்படி நடத்துவார்? அவரது குழந்தைகளை எப்படி படிக்க வைப்பார்?
ஆகவே தனது ஸ்டாண்ட் அருகே உரையாற்ற வந்த உங்களிடம் இது நியாயமா எனக் கேட்டுள்ளார். அதை நீங்கள் சட்டை செய்யாத்தால் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார்.
அந்த ஏழை முதியவரை உங்களது கட்சிக்காரர்கள் உங்கள் எதிரிலேயே நையப் புடைத்திருக்கிறார்கள்.
கொஞ்சமும் சலனமே இல்லாமல் அந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறீர்களே. இது நியாயமா தமிழிசை அவர்களே?.
”ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்” என்பதை எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் எப்போதும் பாத்திரமாயிருக்கக் கூடிய தமிழறிஞர் குமரி அய்யா அவர்களின் செல்லப் பிள்ளையான உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
கொஞ்சம் தரையில் நடக்க முயற்சி செய்யுங்கள் திருமதி தமிழிசை.
பரபரப்பு அரசியல் நிலை இல்லாதது தாயே.
காவித் திரளைவிட காக்கித் திரள் பலம் வாய்ந்தது என்பதையும் அருள்கூர்ந்து புரிந்துகொண்டு அரசியல் நடத்துங்கள்.
நன்றி.
அன்புடன்,
இரா.எட்வின்
இரா.எட்வின்
15.09.2018
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்