Tuesday, September 4, 2018

03.09.2018

இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் தோழர் முத்தையா அழைத்தார். வழக்கமாக அந்த நேரத்தில் அவர் அழைக்கிறவர் இல்லை. ஏதோ முக்கியமான செய்தி போல என்று அலைபேசியை எடுத்தேன்.
“பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டு இருக்கீங்களா?”
“ஆமாம்”
“வைரமுத்து பேசினார்”
“என்னவாம் தோழர்”
இந்த மாத காக்கையை வாசித்ததும் அதில் இருக்கும் தோழர் முத்தையாவின் எண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார். இவர் அலைபேசியை எடுத்ததும், “எட்வினா?” என்று கேட்டிருக்கிறார்.
தான் எட்வின் இல்லை என்று சொன்னவர் தான் காக்கையின் ஆசிரியர் முத்தையா என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.
தன்னை வைரமுத்து என்றுஅறிமுகம் செய்து கொண்ட கவிஞர் தான் காக்கையை ( Kaakkai Cirakinile ) தொடர்ந்து வாசித்து வருவதாகவும் இதழ் மிகவும் செறிவோடு இருப்பதாகவும் கூறியவர் தான் அழைத்தது எனது இந்த மாத காக்கையில் திரு ஸ்டாலினுக்கான எனது கடிதம் குறித்து பேசவே என்று சொல்லியிருக்கிறார்.
அந்த மொழியும், நுட்பமும், விஷயமும் என்னை உடனே பேச வைத்தது. எட்வினிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார் என்று சொல்லிவிட்டு “சரி பள்ளிக்கு கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு இவர் வைத்து விட்டார்.
சன்னமாக மகிழ்ச்சி அப்பிக் கொண்டது என்பதை மறைக்க விரும்பவில்லை.
வண்டியை வண்டி ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்து பேருந்து ஏறும் நேரம் அலைபேசி சிணுங்கியது. புதிய எண்ணாக இருந்தது. ஏதோ ஒரு நண்பர் லீவு சொல்வதற்காக பேசுகிறார் போல என்று நினைத்துக் கொண்டே எடுத்து “வணக்கம் எட்வின்” என்கிறேன். “வைரமுத்து பேசுகிறேன்” என்கிறார்.
“அண்ணே, சொல்லுங்க என்கிறேன்”
அந்தக் கடிதம் குறித்து சிலாகித்து ஆறு நிமிடங்கள் பேசுகிறார்.
மொழி, நுட்பம், பாராக்களைப் பிரித்திருக்கிற பாங்கு, விஷயம் என்று பேசிக் கொண்டே போனவர் “சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த படைப்புகளுள் இதுவும் ஒன்று. சமீபத்தில் நான் வாசித்த ஆகச் சிறந்த கட்டுரை இது. கலைஞரைப் பற்றி அவரது மரணத்திற்குப் பிறகு வந்து தான் படித்தவற்றுள் இது சிறந்தது.
இப்படி ஒரு கட்டுரை கலைஞரின் பார்வைக்கு சென்றிருந்தால் மகிழ்ந்து அழைத்துப் பேசியிருப்பார் என்றவர் லேண்ட்லைன் எண்ணைக் கொடுத்துவிட்டு பேசிவிட்டு வந்து சந்திக்குமாறு கூரியவர் காக்கைக்கு கடிதமும் எனது கடிதம் குறித்து ஒரு கட்டுரையிலும் எழுதுவதாகச் சொன்னார்.
சொன்ன மாதிரியே காக்கைக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டார்.
வைரமுத்து பாராட்டியதும் கரைந்துபோகாதே என்று நண்பர்கள் சொல்லக்கூடும்.
அப்படி இல்லை. நிச்சயமாய் இல்லை.
போப் குறித்த அவரது கட்டுரையில் விலங்குகளைபோல் திரிந்த என்பதுமாதிரி ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதியதைக் கடுமையாக விமர்சிக்கிறோம்தான்.
இவருக்கு எதிர்வினையாக தோழர் அறிவுறுவோன் எழுதியதை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காக்கையில் உரிய முக்கியத்துவத்தோடு வைத்தோம்.
அந்தக் கட்டுரைகளை தோழர் க.சி அகமுடைநம்பி உச்சி முகர்ந்து பாராட்டியக் கடிதத்தை இந்த இதழில் வைத்திருக்கிறோம்.
தமது மின்னஞ்சலில் இந்த இதழில் வெளிவந்துள்ள அனைத்துப் படைப்புகள் குறித்தும் வைரமுத்து குறிப்பிடுகிறார். எனில் இதையும் அவர் வாசித்திருப்பார்.
தேவைப்படும்போது அவர்மீதான விமர்சனங்களைப் பதியவே செய்வோம். அதில் எமக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
ஆனால் அவரது அழைப்புகள் எம்மை உற்சாகப் படுத்தியது என்ற உண்மையை இங்குப் பதிவது அவசியம் என்று பட்டது..
வழக்கமாக எழுத்தை மெச்சிக் கொண்டாடுபவன் என்று சொல்லப்படுகிற எனக்கு அதைத் தொடர வேண்டும் இன்னும் பேரதிகமாகத் தொடரவேண்டும் என்று தோன்றுகிறது
#சாமங்கவிய ஐம்பத்தியெட்டு நிமிடங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...