Tuesday, September 11, 2018

தஞ்சை வாசகசாலை

முன்பெல்லாம் மாதம் ஒரு கூட்டமேனும் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் எனக்கு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சுகன், நா. விச்வநாதன் உள்ளிட்ட எனது தஞ்சைத் தோழர்களை சந்தித்து விடுவேன்.
கூட்டங்களைக் குறைத்துக் கொள்வது என்று ஒரு புள்ளியில் முடிவெடுத்ததும் இந்த வாய்ப்பு குறைந்தது. அவசர அவசரமாக சுகன் செத்துப் போனதும் நான் தஞ்சைக்குப் போவதே நின்றுபோனது.
இந்தச் சூழலில் ஒரு அதிகாலையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி தஞ்சை வாசக சாலையில் சி.எம்.முத்து அவர்களின் நாவலான “கறிச்சோறு” குறித்து பேச வேண்டும் என்று அழைத்ததும் ”எந்த மறுப்பும் சொல்லாமல்” என்று சொன்னால் அது பொய், ஆசை ஆசையாக ஒதுக்கொண்டேன் என்பதே உண்மை.
இதற்கு இரண்டு காரணங்கள்,
நாவி உள்ளிட்ட தஞ்சைத் தோழர்களை சந்திக்கிற வாய்ப்பு என்பது ஒன்று.
தோழர் கல்பனாசேக்கிழார் செல்வம் அவர்கள் சொல்லித்தான் தோழர் சி.எம்.முத்து அவர்களின் “கறிச்சோறு” எனக்கு தெரிய வந்தது. வாய்ப்பு கிடைத்து பேசுகிறபோதெல்லாம் கல்பானா முத்து குறித்தும் அவரது எழுத்து குறித்தும் சிலாகித்துக் கொண்டே இருக்கிறார். கல்பனா தோழர் முத்துவை இப்படி சிலாகிக்கிற அளவிற்கு உலகில் எந்த ஒரு எழுத்தாளனையாவது யாரும் சிலாகித்திருப்பார்களா என்பதும் இந்த உண்மை தோழர் முத்துவிற்கு தெரியுமா என்பதும் எனக்குத் தெரியவில்லை.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியாவது அவரது நாவல்களை வாசித்துவிடுவது என்பது இரண்டாவது காரணம்.
தம்பி Dinesh Palani Raj தஞ்சையில் இருந்து சமயபுரம் வரைக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்து புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். ஒரு கூட்டத்தை நடத்தும்போது ஒரு பொறுப்பாளர் எப்படி எல்லாம் உழைக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து நெகிழ்ச்சியோடு கற்றுக் கொண்டேன்.
கூட்டம் தொடங்குவதற்கு வெகு நேரம் முன்னமே அரங்கிற்குள் நுழைந்தால் எனக்கும் முன்னமே தோழர் Pena Manoharanஅவர்களும் முத்து அவர்களும் வந்திருந்தனர்.
தோழர்கள் ஹேமலதா கார்த்திகேயன் அவர்களும் Kannammal Manoharan அறிமுகம் ஆனார்கள்.
இருவரும் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள்.
ஹேமா உரையாற்றினார். நேர்த்தியாக இருந்தது. அவரிடம் எனக்குப் பிடித்தது உரையாற்றுவதில் அவருக்கு இருந்த ஆசை. ஆசைப் படுபவன்தான் அடைவான் என்பதுதான் விதி.
எங்கு தொடங்குவது, எப்படி நகர்வது, எங்கு முடிப்பது என்ற நுட்பங்களில் அவர் தேரும் புள்ளியில் ஒரு மிகச் சிறந்த உரையாளர் நமக்குக் கிடைப்பார். காரணம் மொழியும் குரலும் அவர் சொன்னதை எல்லாம் செய்கின்றன.
கண்ணம்மா உணர்ச்சிப் பிழம்பாக அதே நேரம் பிசிறற்று உரையாடுகிறார். அவரது வாசிப்பின் ஆழத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். வார்த்தைகளைத் தேடித் தேடி சேகரித்து, சேகரித்தவற்றை இழைத்துக் குழைத்து சாரலாய்த் தெளிக்கிறார்.
மிக நேர்த்தியாக தொகுத்தளித்தார்.
என்னை முற்றாய் வாசித்தவர்களில் அவரும் ஒருவராயிருக்கிறார். எப்போதோ நான் எழுதி மறந்துபோன
எந்தச் சுடுகாட்டின்
எத்தனையாவது
பிணம் நான்?
என்ற கவிதையை அவர் சொன்ன போது மிரண்டே போனேன். கண்கள் பனிக்க உணர்ச்சிப் பிழம்பாய் புன்னகைவழி அழுதுகொண்டே அந்தக் கவிதையை அவர் சிலாகித்ததில் நெகிழ்ந்து போனேன். என் கடைசி பக்கங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படியாய் இருக்கிறது. நன்றி கண்ணம்மா.
சொன்னபடி நல்ல பிள்ளையாய் கட்டுரை கொடுங்கள்
இடைசாதி அரசியலை எந்த விதமான வறட்டுத் தனமோ முரட்டுத்தனமோ இல்லாமல் இவ்வளவு இயல்பாக ஒரு நாவலின் வழி தர முடியுமா என்பது அய்யம்.
வாசகனை முறுக்கேற்றுகிற வேலையை இந்த நாவல் எந்த இடத்திலும் செய்யவில்லை.
உள்ளதை உள்ளபடி அழகான புனைவாக்கி இருக்கிறார்.
பல இடங்களில் கைகளை தலைக்குமேலே தூக்கி கரவொலித்தார். பண்டிதனாய் இல்லாமல் ஒரு எளிய வாசகனாக நிற்கிறோம் என்று புரிந்தது.
“கறிச்சோறு” குறித்து இரண்டொரு நாளில் எழுதுவேன்.
இனி கூட்டங்களுக்கு போவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
என்னோடு எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிந்திருக்கிறார் தமிழ் பாலா. அந்த ஈரத்திற்கு என் அன்பும் முத்தமும்
போக, Kaakkai Cirakinile குடியரசு இரண்டு இரண்டாண்டு சந்தாக்கள் கிடைத்தன. இன்னும் சில வரும். காக்கையை கொண்டு சேர்க்க உதவுவதாலும் இத்தகைய பயணங்கள் இனிக்கின்றன
இன்னொன்று ஜனவரி மாதத்தில் பிறந்து 72 மணி நேரத்திற்குள் என் தங்கை மகனுக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. மாப்பிள்ளை வெளிநாட்டில், தங்கை மணப்பாறையில் ஒரு மருத்துவ மனையில், பிள்ளைக்கு திருச்சியில் அறுவை.
அழுதுகொண்டே இருந்தேன். முடியவே முடியாது என்று தோன்றிய பொழுது அதுகுறித்து ஒரு பதிவு போட்டிருந்தேன். அதை நினைவு கொண்டு “தம்பி எப்படி இருக்கான்?” என்று தோழர் Subhasree Muraleetharan கேட்டபோது கலங்கிப் போனேன்.
நன்றி சுபா
#சாமங்கவிய 19 நிமிடங்கள்
10.09.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...