Friday, September 21, 2018

நானும் கூறுகிறேன், குரலற்றவர்களின் குரலே இந்த நூல்



முனைவர் செல்வக்குமாரியின் “திருநங்கையரின் பால்நிலையும் வாழ்நிலையும்” நூலிற்கான எனது அறிமுக உரை

*********************************************************************


திவ்யபாரதி பர்கவுன்சிலில் தன்னை பதிவு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னை பார் கவுன்சில் உறுப்பினராகப் பதிவு செய்துவிட்டு வந்த திவ்யா நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஷர்மிளா என்ற ஒரு திருநங்கை தன்னை பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் செய்தியை முகநூலில் பதிந்திருந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகே திவ்யா தனக்கிருந்த தடையை உடைக்க முடிந்தது. ஆனால் அதைவிடவும் பேரதிகமாய் ஷர்மிளா பார்கவுன்சிலில் இணைந்திருந்ததை மகிழ்ந்து கொண்டாடியிருந்தார்.
அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் தோழர் பெண்ணியம் செல்வக்குமாரியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. தாம் எழுதியுள்ள “திருநங்கையர் பால்நிலையும் வாழ்நிலையும்” என்ற ஆய்வுநூலுக்கு ஒரு வாழ்த்துரை எழுதித் தருமாறு அவர் கேட்டிருந்தார்.
இரண்டும் ஒரே புள்ளியில் நிகழ்ந்தது சத்தியமாய் தற்செயல்தான்.
அந்த நூலுக்கான தன்னுரைக்கு “குரலற்றவர்களின் குரல்” என்று அவர் தலைப்பிட்டிருந்தார். இந்த நூலை வாசித்து முடித்ததும் நமக்குத் தோன்றியது இதுதான்,
ஏன் இவர் இந்த நூலுக்கு “குரலற்றவர்களின் குரல்” என்று தலைப்பு வைத்திருக்கக் கூடாது?
திருநங்கை என்றோ திருநம்பி என்றோ யாரும் பிறப்பதில்லை. ஆணென்றும் பெண்ணென்றும்தான் அனைவருக்கும் பிறப்பு நிகழ்கிறது. பிறகெப்படி திருநங்கைகளும் திருநம்பிகளும் காணக் கிடைக்கிறார்கள்?
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் குறித்து கருத்தெடுக்க விழைவோர் அவசியம் கவனம் குவிக்க வேண்டிய அடிப்படையான எளிய கேள்வி இது.
எல்லா மனிதர்களுக்குள்ளும் ஆண் தன்மையும் இருக்கும், பெண் தன்மையும் இருக்கும். பெண் தன்மையே இல்லாத வறட்டு ஆணோ அல்லது ஆண் தன்மையே இல்லாத வறட்டு பெண்ணோ சாத்தியமே இல்லை. இந்த வகையில் பால்நிலையைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1) ஆண் உடலில் ஆண் தன்மை பேரதிகமாகவும் பெண் தன்மை குறைவாகவும் உள்ளவர்கள் ஆண்கள்
2) பெண் உடலில் பெண் தன்மை பேரதிகமாகவும் பெண் தன்மை குறைவாகவும் உள்ளவர்கள் பெண்கள்
3) ஆண் உடலில் ஆண் தன்மை குறைவாகவும் பெண் தன்மை பேரதிகமாகவும் உள்ளவர்கள் திருநங்கைகள்
4) பெண் உடலில் பெண் தன்மை குறைவாகவும் ஆண் தன்மை பேரதிகமாகவும் உள்ளவர்கள் திருநம்பிகள்
வறுமையின் காரணமாக தங்கள் பிள்ளையின் ஆண்குறியை அறுத்து திருநங்கை போலாக்கி பாலியல் தொழில் ஈடுபடுத்தி பிழைப்பை ஓட்டும் பெற்றோர்களும் இருப்பதாக இந்த நூலில் ஓரிடத்தில் செல்வக்குமாரி பதிகிறார். இதுமாதிரி பிள்ளைகளின் நிலைமை கொடுமையினும் கொடுமை.
இவர்களுள் ஆண் தன்மையே மிகுதியாய் இருக்கும். ஆனால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்தாக்கப்படும் ஆண்கள் இவர்கள்.
குறிப்பிட்ட காலம் வரைக்கும் இவர்கள் குடும்பத்தோடு ஐக்கியமாய் விளையாண்டு மகிழ்ந்து கொண்டாடி வாழவே செய்கிறார்கள். ஏதோ ஒரு புள்ளியில் தான் ஆணல்ல என்பதை உணரத் தொடங்குகிறார்கள். இதை உணரும் போது அவர்கள் அநேகமாக பதின் பருவத்தை அடைந்தவர்களாக இருக்கிறார்கள். அதன்பிறகு இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள்.
ஆனால் திருநம்பிகளால் அப்படி வெளியேறவும் வாய்ப்பில்லை. பல குடும்பங்களில் திருநம்பிகள் கௌரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டு விடுகிறார்கள்.
இப்படி வீட்டைவிட்டு வெளியேறும் திருநங்கைகள் எப்படி ஒன்றிணைந்து குடும்பமாய் சங்கமிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை மிக நுட்பமாக ஆய்வு செய்து இந்த நூலூலில் பதிவு செய்திருக்கிறார் முனைவர் செல்வக்குமாரி.
இளைய திருநங்கை ஒருவர் திருநங்கைக் குடும்பத்திற்குள் நுழையும்போது அவரை மூத்த திருநங்கை சுவீகரித்து குடும்பத்து உறுப்பினராக அந்தத் திருநங்கையை ஏற்கும் வைபவத்திற்கு “ரீத்” என்று பெயர் என்பதை போகிற போக்கில் எழுதி நகர்கிறார் ராஜகுமாரி. ஆனால் இந்த நுட்பமான விஷயத்தைக் கண்டடைய அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்பது நமக்கு புரியவே செய்கிறது.
தனது குடும்பத்தில் ஆணாக வாழ்ந்து கொண்டு அரவாணியர் குடும்பத்தில் அரவாணியராக வாழ்பவர்களும் உண்டு என்கிறார் ராஜகுமாரி. இது எவ்வளவு ஆபத்தானது என்பதும் தான் பிறந்த குடும்பத்தில் ஆணாக வாழும் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு பாதுகாப்பில்லாத மணித்துளிகள்தான். இதில் அவரை ஆணென்று நம்பி அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பங்கள் எத்தனிக்கும்போது அவரது நிலை மிக மிக கடுமையான ஒன்றாக அமையும்.
இதுபோக அரவாணியரை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களும் இருப்பதாகவும் அவர்களில் பலர் ரகசியமாக தங்களது குடும்பத்தைக் கட்டமைப்பதாகவும் இந்த நூல் கூறுகிறது. அவர்களில் பலர் குடும்பத்திற்கு பயந்து வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு இங்கும் அங்குமாக வாழ்க்கை நடத்துவதையும் ஏதோ ஒரு புள்ளியில் இது அவர்களது குடும்பத்திற்கு தெரிய வரும்போது அவர்களின் மிரட்டலுக்கு பயந்து திருநங்கையரை கைவிட்டு நகர்வதையும் இந்த நூலில் காணமுடிகிறது.
அவ்வாறு கைவிடப்பட்ட பிரிவாலுழலும் திருநங்கை ஒருவரின் வேதனைக் குரலை ஈரம் சொட்டச் சொட்ட பதிவு செய்திருக்கிறார் ராஜகுமாரி.
”தோல்விக்கு சுமை” என்ற சிறுகதை திருநங்கையருக்கு சொத்தில் பங்கில்லை என்ற அவலத்தை தோலுரிப்பதை மேற்கோளிடும் ஆசிரியர் தகப்பனின் சொத்தில் திருநங்கையருக்கும் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார். நிச்சயமாக அதற்கான போராட்டங்களை மிக வலுவாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு இந்தச் சமூகத்திற்கு இருக்கிறது.
இந்நூலின் முடிவுரையில் இந்தியக் குற்றவியல் சட்டம் 377 எப்படி அரவாணியரின் பாலுறவு உரிமையை இயற்கைக்கு மாறானது என்று காரணங்காட்டி தடை செய்த கேட்டினை சுட்டுகிறது. அதற்கு எதிராக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்ததையும் அதை மத அமைப்புகளும் சில அரசியல் கட்சிகளும் பழமைவாத அமைப்புகளும் எதிர்த்ததையும் இந்த நூலின் இறுதிப் பகுதி மிகச் சரியாக அம்பலப்படுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் அந்த சிறப்புமிக்க தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேல்முறைட்டின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று இந்த நூல் எழுப்பும் அய்யம் நம்மை வெகுவாகக் கவலைகொள்ளச் செய்கிறது. ஒருக்கால் தீர்ப்பு பாதகமாக வந்தால் இந்தக் கவலை நம்மை அந்தத் தீர்ப்பிற்கு எதிராக களமாடத் தூண்டும்.
அந்த வகையில் இது அரவாணியர் குறித்த ஆய்வுநூல் மட்டுமன்று. இது அரவாணியரை ஆதரவோடு அரவணைத்துக் கொள்கிற அவர்களுக்கு ஆதரவான நூல்.
அரவாணியர் குறித்து உலவுகிற புனைவுக் கருத்துக்களை பொய்யென்று நிறுவுகிற நூல்.
அரவாணியர்களுக்கு ஆதரவான சக்திகளை அடையாளாம் கண்டு அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்காக்க் களமாட்த் தூண்டுகிற நூல்.
இலக்கியத்திலிருந்தும், நீதிமன்றத் தீர்ப்புகளில் இருந்தும் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இந்த நூலுக்கான தரவுகளை சேகரித்திருக்கிறார் முனைவர் செல்வக்குமாரி.
இதற்காக ராஜகுமாரி நிறையத் தேடித் தேடி வாசித்திருக்கிறார். நிறைய நடந்திருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். நிறைய எதிர்வினைகளை நிச்சயமாக அவர் சந்தித்திருப்பார். நிறை இழந்துமிருப்பார் நிச்சயமாக.
மேற்சொன்னவற்றின் விளவுதான் இந்த நூல்.
எனக்கு சில ஆசைகள் உண்டு
எனக்கொரு மகன் எனக்கொரு மகள் என்று கூறுவதைப்போல எனக்கொரு மகன் ஒரு திருநங்கை என்று இயல்பாகக் கூறக்கூடிய காலம் ஒன்று வரவேண்டும்.
திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் சொத்தில் பங்குண்டு என்று சட்டம் வரவேண்டும்.
திரு நங்கைகள்மீது செலுத்தப்படும் அதே அளவு கவனம் திருநம்பிகள்மீதும் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வளவு மெனக்கெட்டு மிக நுட்பாக இந்த நூலைக் கொண்டு வந்திருக்கும் செல்ச்வக்குமாரிக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா.எட்வின்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...