‘வங்கிமுறை கல்வி’ என்று இந்தியக் கல்விமுறையை
மிகச் சரியாக அழைக்கிறார் பாவ்லோ பிரைரே. இதையும் அவர் ஒன்றும்
போகிற போக்கில் கூறவில்லை. ஏறத்தாழ இருபது ஆண்டுக்காலம் இந்தியக்
கல்வியை ஆய்வு செய்தபிறகே அவர் இந்த முடிவிற்கு வருகிறார். பிரேசிலைச்
சேர்ந்தவரான பிரைரே வழக்கறிஞருக்கு படித்தவர். ஆனால் வருமானம்
கொழிக்கும் வழக்கறிஞர் தொழிலைத் துறந்துவிட்டு ஆசை ஆசையாக ஆசிரியத் தொழிலிற்கு வந்தவர்.
பாடத்திட்டற்திக்குள்ளும் ப்ளூப்ரிண்ட்டிற்குள்ளும் சுறுங்கிக் கொள்ளாமல்
கல்வியை எதற்குத் தரவேண்டும் என்பதை தீவிரமாக சிந்தித்தவர். ஏழை
மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையைக் கற்பித்தலே கல்வி என்று கண்டுணர்ந்தவர்.
தான் கண்டுணர்ந்தது சரிதானா என்று தீர ஆய்ந்து தெளிந்தவர். அதன்பிறகு தனது கல்வி குறித்த கொள்கைகளை உரக்கக் கூறியதோடு தன்னளவில் நடைமுறைபடுத்தவும்
முயற்சி செய்தவர். அவரது கல்விக் கொள்கை தங்களுக்கு விரோதமானது
என்பதையும் அவரை அப்படியே விட்டுவைப்பது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதையும்
உணர்ந்த அன்றைய ராணுவ அரசாங்கம் அவரை மிகவும் கொடூரமான சிறையின் நீட்டி முடங்குவதற்குகூட
வசதியற்ற ஒரு சிறிய அறையில் சிறை வைத்தது. பிறகு நாடே கடத்தியது.
பொதுவாகவே
இந்தியக் கல்விமுறை அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்காமல் போனதற்கு காரணம் மெக்காலேதான்
என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் உண்டு. அது மிகச் சரியானதும்கூட.
அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்து விடக்கூடாது என்கிற நோக்கத்தோடுதான்
‘மெக்காலே கல்விமுறை’ உருவாக்கப் பட்டது.
அன்றைய இந்தியா மெக்காலே அவர்களது சகோதர நாடெல்லாம் அல்ல. இந்தியா அவர்களது காலனி நாடுகளுள் ஒன்று. பச்சையாக கூறினால்
இந்தியா அவர்களது அடிமை நாடு.
இன்னும்
சரியாய் சொல்வதெனில் இந்திய மக்களை அடிமைத்தனம் மாறாமல் வைத்திருப்பதற்கு என்ன செய்யவேண்டும்
என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி ஆலோசனை சொன்னவர் மெக்காலே. பிரிட்டிஷ்
பிரதமருக்கு இதன்பொருட்டு மெக்காலே ஒரு மிகப் பிரபலமான கடிதமொன்றை எழுதினார்.
இந்தியர்களது நிறம், அவர்கள் பேசும் மொழி,
அவர்களது கல்வி, யாவும் ஆங்கிலேயர்களின் நிறம்,
மொழி, உணவு மற்றும் கல்வியை விடவும் தாழ்வானவை
என்பதாக ஒரு மனப்பாங்கை அவர்களுள் விதைத்துவிட வேண்டும். அவர்கள்
ஆங்கிலேயர்களுக்கு என்றென்றும் அடிமையாகக் கிடப்பார்கள் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
உடல்
உழைப்பு, அறிவுழைப்பு என்பதாக உழைப்பு பொதுவாக இரண்டு வகைப்படும். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்த இரண்டுவகை உழைப்பிற்கும் ஆட்கள் தேவைப்பட்டது.
உடல் உழைப்பை பொறுத்தவரை இந்தியாவில் அவர்களுக்கு பிரச்சினையே இல்லை.
அப்படியொரு மனித வளம் லுவியல் குவியலாய் இந்தியாவில் கொட்டிக் கிடந்தது.
மூளை உழைப்பிற்கும் இந்திய உடல் உழைப்பாளிகளை கசக்கிப் பிழிந்து வேலை
வாங்குவதற்குமான படித்தவர்களை அவர்கள் இங்கிலாந்திலிருந்தே இறக்குமதி செய்யவேண்டி இருந்தது.
இதற்கு அவர்கள் ஏராளம் செலவு செய்ய வேண்டி இருந்தது. அல்லது அதிகம் செலவு செய்வதாய் அவர்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருந்தது.
போகவும், கசக்கிப்
பிழிபவர்கள் ஆங்கிலேயர்களாகவும் கசக்கப்படுபவர்கள் இந்தியர்களாகவும் இருப்பது இயல்பாகவே
ஆன்கிலேயர்கள் மீதான ஒரு எதிர்ப்பை உண்டு செய்யும். மாறாக,
இந்தியனை விட்டே இந்தியனை சுரண்டுவது என்பது இந்தியர்களுக்குள்ளேயே ஒருவிதமான
ஏற்றத்தாழ்வை உருவாக்கும். அவர்கள் பிளவுபட்டு கிடப்பார்கள்.
ஒருவருக்கொருவர் பிரச்சினைகள் வரும். அவற்றின்
மீதான புகார்களை அவர்கள் தம்மிடம்தான் கொண்டு வருவார்கள். தாங்கள்
அப்பத்தைப் பிரித்துக் கொடுத்த குரங்கு மாதிரி நாட்டாமை செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள்.
இந்தியர்களைப்
பிரிப்பதற்கு ஒரு கல்விமுறை தேவைப் பட்டது. அதை மிகச்சரியாய் மெக்காலே வடிவமைத்தார்.
இவன் படிக்கும் படிப்பானது இவனுள் ஒருசாராரையே யாருக்காகவோ சுரண்டுவது,
எவனோ ஒரு நாட்டுக்காரன் சொல்வதை அவன் சொல்லியபடி, கேள்வி கேட்காமல் செய்வது, அவனது உழைப்பையும் இவனது அறிவையும்
ஒருசேர அந்நியனுக்கு தாரை வார்ப்பது என்பது மெக்காலே கல்விமுறையின் விளைவு.
அது இன்றும் தொடர்கிறது.
இந்திய
சுதந்திரத்திற்குப் பிறகும் இதே கல்விமுறையே தொடர்வதாக பிரைரே கண்டுணர்ந்தார். இதைத்தான்
அவர் ‘வங்கிமுறைக் கல்வி’ என்கிறார்.
வங்கிமுறைக் கல்வி என்பது ‘எடுத்துச் சொல்லும்
முறை’ என்று கூறுகிறார். இது எப்போதும்
ஒருவழிப் பாதையாகவே இருக்கும். ஆசிரியர் எடுத்துச் சொல்லிக்கொண்டே
இருப்பார். மாணவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஆசிரியரை அய்யம் கேட்பதைக்கூட இந்தமுறை அனுமதிப்பதில்லை. ஆசிரியர் கூறுவதை அப்படியே பத்திரமாக சேமித்து வைப்பதே அறிவு எனக் கொள்ளப்
படுகிறது. இப்படியாக எடுத்துச் சொல்லப்படுவதை ஒருவகையான நோய்
என்று கூறுகிறார் பிரைரே. பிரைரே அவர்களின் கூற்றின்படி நோயாளிகளையே
வகுப்பறைகள் உருவாக்குகின்றன. எனில், மோசமான
நோயாளி என்பவனே நம் கல்வி முறையில் ஆகச்சிறந்த கல்விமான்.
வங்கிமுறை
கல்வியில் மாணவன் என்பவன் வங்கியாகிறான். வங்கியில் பணத்தை சேமித்து வைப்பது
மாதிரி மாணவனுள் அறிவு என யாராலோ கருதப்படும் ஒன்று சேமித்து வைக்கப் படுகிறது.
மாணவனின் மூளையானது அடுக்கு அடுக்காக ஆசிரியரால் பிரிக்கப் படுகிறது.
அவற்றுள் மாணவனுக்கு எவை எல்லாம் தேவை என்று ஆளும் வர்க்கத்தால் இயக்கப்படும்
கல்வித்துறை கருதுகிறதோ அவற்றை ஆசிரியர் எடுத்து அடுக்கி வைக்கிறார். மாணவனுக்கு எவையெல்லாம் தேவை என்று ஆளும் வர்க்கம் தீர்மானிக்கிறதோ அவற்றை
பாடமாக்குமாறு கல்வித்துறைக்கு கட்டளையிடும். கல்வித்துறை அவற்றை
பாடத்திட்டத்தில் இணைக்கும். கல்வி நிலையங்கள் அவற்றை அவனுக்கு
சொல்லித் தரும். ஆளும் வர்க்கம் ஒருபோதும் மாணவனுக்குத் தேவையானதை
அவனுக்குத் தர முயற்சிக்காது. மாணாவனுக்குத் தேவையானதை அவனுக்கு
சொல்லிக் கொடுத்தால் தாங்கள் ஆளும் வர்க்கமாக தொடர முடியாது என்பது அதற்குத் தெரியும்.
எனவே தங்களது இருத்தலை தக்க வைப்பதற்கு எவற்றையெல்லாம் அவனுக்கு சொல்லித்
தரக் கூடாது என்பதை அது தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும்.
வங்கிக்கென்று
எந்த ஆசாபாசமும் இருப்பதில்லை. எந்த பீரோ எங்கிருப்பது என்றோ, தன்னுள் எவை எவை சேமித்து வைக்க வேண்டும் என்றோ தன்னுள் யார் எல்லாம் இயங்க
வேண்டும் என்றோ அதற்கு எந்த கருத்தும் இருக்க முடியாது. தனது
சுவரில் எந்த வண்ண சாயம் அடிப்பது என்பதில் வங்கி எந்தக் கருத்தையும் கொண்டிருக்க இயலாது.
அதைவிட முக்கியம், தன்னுள் சேமிக்க வைக்கப்படும்
தொகையுள் எதை சேமிப்புக் கணக்கில், எதை கரண்ட் அக்கவுண்டில்,
எதை தொடர் சேமிப்பில், எதை நிரந்தர வைப்புக் கணக்கில்
வைப்பதென்று சொல்லும் உரிமை வங்கிக்கு கிடையாது. இதைவிட முக்கியம்
சேர்த்து வைக்கபடும் தொகைக்கு என்ன வட்டி தருவது என்றோ, யாரெல்லாம்
பணியாற்றுவது என்றோ தன்னுள் சேமிக்கப்படும் பணத்தை யாருக்கு செலவு செய்ய வேண்டும் என்றோ
வங்கியிடம் யாரும் ஒருபோதும் அபிப்பிராயம் கேட்பதில்லை.
யாருடைய
பணமோ கொண்டு வரப்படுகிறது.
யாரோ வாங்கி எங்கெங்கோ அடுக்கி வைக்கிறார்கள். யாருக்கோ தேவைப் படுகிறபோது அதை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ யாரோ எடுத்து
எதற்கோ செலவு செய்கிறார்கள். வங்கி ஏனென்று எதையும் கேள்வி கேட்கமுடியாது.
காரணம், வங்கி என்பது ஒரு பருப்பொருள்.
இன்றைய
கல்விமுறையில் வங்கியைப் போலவே மாணவனும் ஒரு கருப்பொருள் அவ்வளவே. அவனுக்குள்
சேமிக்கப்படும் அறிவு என்பது யாருக்கோ ஆனது. அது யாருக்காக சேமிக்கப்படுகிறதோ
அவர்கள் எடுத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வார்கள். தன்னுள் சேமிக்கப்படும் அறிவை ஒருபோதும் மாணவன் எடுத்து பயன்படுத்த முடியாது.
கல்வி
என்பது எந்தக் காலத்திலும் எந்த தேசத்திலும் ஒரு அரசியல் செயல்பாடாகவே இருப்பதாக பிரைரே
கருதுகிறார்.
ஆளும் நபர்கள் தங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான, தங்களை எவரும் அசைத்துவிடாதபடிக்கு, மிகுந்த கவனத்தோடான
ஒரு கல்வித்திட்ட்த்தையே எப்போதும் வடிவமைக்கும்.
மாணவர்கள்
அரசியலில் செயல்படக்கூடாது என்று அது சொல்லிக்கொண்டே இருக்கும். மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் தங்களால்
தங்களது இருத்தலை வெகுகாலத்திற்கு தக்கவைக்க முடியாது என்பது அதற்குத் தெரியும்.
ஆளும்
வர்க்கத்தை எதிர்த்து பேசாமல் இருப்பதே தேசபக்தி என்று சொல்லித் தரும். ஆதரித்து
அணுசரித்துப் போனால் சம்பாரித்து சுகமாக இருக்கலாம் என்று கிளிப்பிள்ளைக்கு சொல்லித்
தருவதுபோல சொல்லித் தரும். இவையாவும் கடந்து யாருக்கேனும் சொரணை
வந்து எதையேனும் ’ஏன்’ என்று எதிர்த்துக்
கேட்டால் அவனை தேசவிரோதி என்று சொல்லி சித்திரவதை செய்வதன்மூலம் மற்றவர்களை கட்டுக்குள்
வைத்திருக்க முயற்சி செய்யும். ’அடங்கிப் போதலே’ ஞானம் என்று கற்றுக் கொடுக்கும்.
எல்லோருக்கும்
பசிக்கிறதா?
அதுபற்றி கவலைப்படாதே. நீ உனது பசி பற்றியும் உனது
குடும்பத்தின் பசிபற்றியும் மட்டுமே கவலைப்படு. ஆளும் வர்க்கத்தை
அண்டிப் பிழை. உன்னை சார்ந்த உனது குடும்பத்தின் வயிறுகளை இட்டு
நிறப்பு. சமூகத்தின் பசிபற்றி சிந்திப்பதோ, அல்லது அதை தீர்க்க முயற்சிப்பதோ உன் வேலை அல்ல. உனது
குடும்பத்தின் சுகாதாரம் பற்றி மட்டுமே கவலை கொள்.
இவ்வாறாக
தன்னைப் பற்றியும் தனது குடும்பம் பற்றியும் கடந்து எதையும் சிந்தித்துவிடக் கூடாது
என்று சொல்லித் தரும் இந்த முறையை கல்வி என்று ஏற்கவே மறுக்கிறார் பிரைரே. இதை
‘படிப்பு’ என்பதாக மட்டுமே அவரால் கருத முடிகிறது.
உலகம்
முழுக்க ஒரே வகையான கல்வி என்பதே அசிங்கமானதும் வன்முறையானதும் ஆகும் என்கிறார். ‘பிரச்சினை’
அடிப்படையிலான கல்விமுறையே தேவையானது என்பதை அவர் அழுத்தி எடுத்துரைக்கிறார்.
பிரச்சினை என்பது உலகம் முழுக்க ஒன்றானது அல்ல என்பதில் அவர் தெளிவாயிருக்கிறார்.
எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த பிரச்சினைகள் பிரதானமாக இருக்கின்றனவோ
அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து அவற்றிலிருந்து மக்கள் விடுதலை பெறுவதற்கான எத்தைகைய
போராட்டங்களை கையிலெடுக்க வேண்டும் என்பதை பாடத்திட்டமாக்க வேண்டும்.
கேரளாவில்
ஆற்றுமணலை யாரும் அள்ளுவதேயில்லை. ஆகவே அவர்களுக்கு நிலத்தடிநீர் பிரச்சினை என்பது
இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஆறுகளில் மணாலே இருக்கப் போவதில்லை
என்கிற அளவில் வேக வேகமாய் சுரண்டிக்கொண்டு இருக்கிறோம். இப்போதே
நிலத்தடி நீர்மட்டும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இன்னும்
கொஞ்ச காலத்தில் நம் மண்ணில் நிலத்தடிநீர் என்பது அறவே இருக்காது.
இப்போது
கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரேவகையான நீர்மேலாண்மையை பாடமாக வைப்பது எப்படி சரியாக
இருக்கும்?
இதுவே அபத்தமாக இருக்கிறபோது தனது நிலத்தடி நீராதாரத்தை பாதுகாப்பாக
பத்திரப் படுத்திக்கொண்டே தென் தமிழ்நாட்டின் நிலத்தடிநீரை சுரண்டிக் கொழுக்கும் அமெரிக்காவிற்கும்
தமிழ்நாட்டிற்கும் ஒரேவகையான நீர் மேலாண்மையை சொல்லித் தருவது எப்படி சரியாகும்?
ஒடுக்கப்பட்டவனுக்கும்
ஒடுக்குபவனுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது எப்படி சரியாகும்? எல்லோருக்கும்
ஒரு வாக்குதான், யாரிடத்தும் ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்லித்
தருவது தவறல்லவா?
அவனிடம்
ஏழு கார்களும் ஏழு வீடுகளும் ஆயிரம் பவுன் தங்கமும் குவிந்திருக்க இவன் வாழ்க்கை நடத்த
ப்ளாட்ஃபாரமே கதி என்ற நிலை இருக்கிறது. இருவருக்கும் ஒரே வாக்குதான்.
ஆகவே இருவரும் சமம்தான் என்கிற வகையில் சொல்லித் தருவது அவனை வசதிகளோடும்
இவனை நடைபாதையிலுமே பத்திரமாக வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடுதானே தவிர வேறு என்ன?
அவனிடம்
என்ன இருந்தால் என்ன?
இருவருக்கும் இந்த சமூகம் ஒரு வாக்கைதான் கொடுத்திருக்கிறது.
நீங்கள் இருவரும் சமம் என்று நம்ப வைத்து அவனை திருப்தி கொள்வது
‘படிப்பு’
இருவருக்கும்
ஒரு வாக்குதான்.
ஆனால் அவன் கோடிசுவரனாகவும் நீ ஒன்றுமற்ற ஏழையாகவும் இருப்பது ஏன்?
இதில் எப்படி சமப்படுவது என்று கற்றுக் கொடுப்பது ‘கல்வி’
இந்தியாவைப்
பொறுத்தமட்டில் படிப்பை கல்வி என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். படிப்பு
இருக்கும் சமூக படிநிலையை சிதைந்துவிடாமல் பாதுகாக்கும். கல்வி
சமூகத்தை சமப்படுத்தும்.
சமூக
விடுதலையோ,
அரசியல் விதலையோ பொருளாதார விடுதலையோ அது எதுவாயினும் அதற்கான கருவி
படிப்பல்ல கல்வி.
யோசித்துப்
பாருங்களேன்,
பிரைரே இன்று சொல்வதைத்தான் அன்றே அவ்வை ‘கற்கை
நன்றே’ என்றாள். வள்ளுவனோ ‘கற்க கசடற’ என்றான். ‘இளமையில்
கல்’ என்றார்கள்.
எல்லோருமே ‘கற்க’ சொல்லி
இருக்கிறார்களேயன்றி யாரும் ’படிக்க’ சொல்லவில்லை.