Thursday, March 17, 2016

20. கல்லறைக்கு வெகு அருகிலிருந்து காப்பாற்றப்பட்ட மொழி

சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசிய தோழர் ஏசுநாதர் பேசிய ஹீப்ரு மொழி பேச்சு வழக்கற்று அழிந்துபோய் விட்டதாகவும், ஆனால் நமது தமிழ்க்கடவுள் முருகன் பேசிய தமிழ் மொழி இன்னமும் ஜீவித்திருக்கும் மொழி என்றும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார். கூடியிருந்த திரள் மகிழ்ந்து கொண்டாடியது.
இரண்டு காரணங்களுக்காக நான் கொஞ்சம் அதிர்ந்து போனேன்.
  1. ஏசுநாதர் பேசிய மொழி அவர் கூறியது போல ஹீப்ரு அல்ல, அராமிக்
  2. வழக்கொழிந்து ஏறக்குறைய செத்தே போயிருந்த ஹீப்ரு மொழியை அதன் பிள்ளைகள் மீட்டெடுத்து உயிர்ப்பித்து விட்டார்கள்.
முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட வேண்டும். ஏசுநாதர் என்கிற ஒருவர் இருந்ததற்கான சான்றுகளை புராண செய்திகளாகவே பார்ப்பவன். ஏசுநாதரை ஒரு வரலாற்று புருஷராக ஒருபோதும் என்னால் ஏற்க இயலவில்லை. என்றாலும் அவர்கள் முன்வைக்கிற புராண வகையிலான தரவுகளின் வழிநின்றே இவற்றை வைக்கிறேன்.ஏசுநாதர் பேசியது அராமிக் என்ற மொழியை. அதுதான் அவரது தாய்மொழி. மொழி அரசியல் இவ்வளவு வளர்ந்திருக்காத அந்த நிலையிலும் அவர் தனது தாய்மொழியான அராமிக் மொழியில்தான் மக்களோடு பேசினார் என்று தெரிகிறது. மக்கள் மொழியில் பேசினால்தான் கருத்துக்கள் மக்களை சென்றடையும் என்று அவர் நம்பியிருக்கிறார். எனில் அவர் மிகச் சரியாய் மொழிவழி செயல்பட்டிருக்கிறார் என்றுதான் பொருள். ஏசுநாதர் பேசிய அராமிக் மொழி கூட இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது. சிரியா நாட்டில் உள்ள ஒரு கிராம மக்கள் இன்றைக்கும் அராமிக் மொழியை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 4000 மக்கள் அதை இன்றைக்கும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
வேதப் புத்தகம் முதலில் ஹீப்ரு மொழியில்தான் எழுதப்பட்டது. இந்த இடத்தில்தான் நிறைய மக்கள் குழம்பிப் போகிறார்கள். வேதப்புத்தகத்தின் மூல மொழி ஹீப்ரு என்பதை இவர்கள் ஏசு பேசிய மொழி என்று கொண்டு விடுகிறார்கள். ஏசு பேசிய மொழியில்தான் வேதப்புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற புத்தியில் இருந்து வருவது இது. இன்னும் சொல்லப்போனால் வேதப்புத்தகத்தின் உருவாக்கத்தில் எந்த ஒரு இடத்திலும் ஏசுநாதருக்கு இடம் இல்லை.
ஏசுநாதர் பேசிய மொழி ஹீப்ரு அல்ல என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஏசுநாதர் பேசிய மொழி செத்துப் போய்விட்டது. ஆனால் முருகன் பேசிய மொழி இன்னும் வளமோடு வாழ்கிறது என்று சொல்வதன் தேவை என்ன?
சுற்றி வளைக்காமல் சொல்வதெனில் உலகில் பெரும்பான்மை மக்களது கடவுள் பேசிய மொழியே அழிந்துபோன நிலையிலும் அய்யன் திருவள்ளுவரும் அப்பன் முருகனும் பேசிய மொழி இன்றும் ஜீவித்து நிற்கிறது என்ற பெருமிதத்தின் வெளிப்பாடு. இதில் ஒன்றும் வியப்பில்லை. தமிழ் மண்ணில் கடவுள்களுக்கும் மொழிப்பற்று உண்டு.‘நின் தமிழோடு விளையாடவே யாமிங்கு வந்தோம்’ என்று திருவிளையாடல் திரைப்படத்தில் சிவனுக்கே வசனம் தந்தவர்கள் தமிழர்கள். மட்டுமல்ல தவறான சிந்தனையை கடவுள் கையில் எடுக்கும் வேளையில் கடவுளையே திருத்துகிற உரிமை தமிழுக்கு இருப்பதாகவும் ஒரு கருத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
‘உன் தத்துவம் தவறென்று
சொல்லவும் அவ்வையின்
தமிழுக்கு உரிமை உண்டு’
என்று முருகனைப் பார்த்து சுந்தராம்பாள் அம்மாவைவிட்டு பாடவைத்தவர்கள் தமிழர்கள். அவ்வையாரல்லவா, எப்படி சுந்தராம்பாள் என்று சொல்லலாம் என்று கேட்பவர்களுக்கு இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒரு பிம்பம் எனக்குள் இருக்கிறது, தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள் என்பதே எனது பதிலாக இருக்கும்.
ஆக, எதையும் மொழியோடு தொடர்புபடுத்தியே பழகிப்போன சூழலில் இவை நிகழ்வது இயல்பானதே.
ஆனால் அழிவின் விளிம்புவரை சென்றுவிட்ட ஹீப்ரு மொழியை அந்த மக்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் ஹீப்ருவை பேசுவதற்கு மக்களே இருக்க மாட்டார்கள் என்ற ஒரு நிலை இருந்தது உண்மைதான். ஆனால் இன்று தேவாலயங்களில் மீண்டும் ஹீப்ரு கோலோச்சுகிறது, மருத்துவ மொழியாக ஹீப்ரு மாறியிருக்கிறது, நீதிமன்றங்களில், சந்தைகளில், தெருக்களில் வீடுகளில் என்று எங்கும் ஹீப்ரு நிறைந்து கசிகிறது.
எந்த ஒரு மனிதனும் தனது குழந்தைக்கு ஹீப்ருதாசன் என்று பெயர் சூட்டுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஹீப்ரு பெயர்களைத்தான் சூட்ட வேண்டும் என்று எந்த இயக்கமும் நடந்ததாக வரலாற்றில் சான்றுகள் இருப்பதாகப் படவில்லை. மொழியை காப்பதற்காக யாரும் எந்த போரும் நடத்தவில்லை. தங்களது மொழியைக் காப்பாற்றுவதற்காக அவர்களில் யாரும் தங்களைத் தாங்களே எரித்துக் கொள்ளவில்லை. தங்களது மொழியைக் காப்பதற்காக யாரும் சிறை போகவில்லை. ஹீப்ரு பெயரை வைத்தால் படங்களுக்கு வரிவிலக்கு என்று அரசாங்கம் அறிவிக்கவில்லை.மேற்சொன்ன இவற்றில் எதுவுமே செய்யப்படாத நிலையிலும் ஹீப்ரு வளர்ந்து வருகிறது. ஏறத்தாழ ஒருகோடி மக்கள் இன்று ஹீப்ருவை பயன்படுத்துகிறார்கள். மேற்சொன்ன எல்லாம் நடந்ததற்கான சான்றுகள் ஏராளமிருந்தும் தமிழ் ஏதோ ஒரு தொலைப் புள்ளியில் வழக்கொழிந்து போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருப்பதன் பொருள் என்ன? அதுமாதிரியான எச்சரிக்கைகளுக்கு ஏன் தேவை இருக்கிறது?
கீர்த்தனா என்று பிள்ளைக்கு பெயர் வைத்திருக்கிறேன். அதற்காக பொதுமேடையில் வைத்தே என்னை என் நண்பனொருவன் வறுத்தெடுத்தான். தமிழை எழுதிப் பிழைக்கும் நான் கீர்த்தனா என்ற தெலுங்குப் பெயரை மகளுக்கு வைத்ததன் மூலம் தமிழை பிழைப்புக்காய் பயன்படுத்தும் பிழைப்புவாதியென்றும் தமிழ்த் துரோகி என்றும் வைது தீர்த்தான். தமிழ் அழிந்துபோகும் என்று யுனெஸ்கோ எச்சரிக்கும் நிலைக்கு என்னைப் போன்றோரின் ஈனத்தனமான நிலைபாடே காரணம் என்று குற்றம் சுமத்தினான். நான்கூட இதுதான் காரணமோ என்று ஒருகணம் குழம்பிப் போகுமளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு பேசினான். கூட்டம் முடிந்து உணவருந்தப் போகும் போதும் என்னை உரிமையோடு கடிந்து கொண்டான். என்னைப் போன்ற நெருங்கிய நண்பர்களையே திருத்த முடியாதபோது நாட்டில் வேறு யாரை தன்னால் நெறிப்படுத்த முடியும் என்று ஆதங்கப்பட்டான்.
உணவினூடான உரையாடலின்போது ‘குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்?’ என்று கேட்டேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய மிகச் சிறந்த பத்து மெட்ரிக் பள்ளிகளில் ஒன்றில் படித்துக் கொண்டிருந்தார்கள். ‘ஏன் மாப்ள ஆங்கில வழியில’ என்றபோது ‘படிப்பு விஷயத்துல கவனப் பிசகா இருக்கக் கூடாதுல்ல’ என்றான். ’பிள்ளைகள் எங்க படிக்கிறாங்க?’ என்றான். ‘கடவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்’ என்றேன்.
மொழிமீது அவனுக்கு இருக்கும் அக்கறை குறித்தும் அதனை அழிவிலிருந்து உயிரைக் கொடுத்தேனும் மீட்கவேண்டும் என்ற அவனது துடிப்பிலும் யாருக்கும் எந்தக் கேள்வியும் இருக்க முடியாது. உண்மையைச் சொன்னால் உயிரையும் கொடுக்கக் கூடியவன்தான். என்னை விடவும் பலமடங்கு அதிக அளவில் மொழி குறித்து அக்கறைப்படுபவன்தான். ஆனால் மொழியை அழிவிலிருந்து மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதில் அவனுக்கும் எனக்கும் முரண்பாடு இருக்கிறது.
தமிழில் பெயர் வைப்பதன் மூலம் தமிழைக் காப்பாற்றிவிட முடியும் என்று அவன் நம்புகிறான். ‘கீர்த்தனா’ போன்ற பிறமொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைப்பது தமிழை சேதப்படுத்தும் என்று நம்புகிறான். தமிழின் பழம்பெருமையை, தொன்மையை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதன் மூலம் மொழி வாழும் என்று கருதுகிறான்.தாய்மொழி மூலமாக கல்வியைத் தருவதும் தாய்மொழியைப் புழங்குவதும் மட்டுமே மொழியைக் காக்கும் என்று நான் கருதுகிறேன்.
சோகம் என்னவென்றால் இன்றைக்கு கல்வித்துறைக்கே மொழி குறித்து சரியான ஒரு பார்வை இல்லை. குழந்தைகளுக்கு சகல தளங்களிலும் தாய் மொழியைப் புழங்கச் சொல்லித்தர வேண்டிய பள்ளிக் கல்வித் துறை தனது பொறுப்பினை முற்றாய் தட்டிக் கழிக்கிறது.
மொழியின் மேன்மையை, பழம்பெரும் இலக்கியங்களின் தொன்மையை பேரதிக மிகையோடு கற்றுத்தரும் கல்வித்துறை கணிதத்தையும் அறிவியலையும் சொந்த மொழி வழியாக கற்றுத் தரவேண்டியதன் அவசியத்தை மட்டும் தட்டிக் கழிக்கிறது.
ஆங்கிலம் தெரிந்தால் நல்லது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஆங்கில வழியில் கற்பதுதான் நல்லது என்ற கருத்து மிக மிக ஆபத்தானது.
ஆங்கிலமே தெரியாத பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை சொல்லித் தருவது சரி. ஆங்கில வழியில் சொல்லித் தருவது எப்படி சரியாகும்?
இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டிருக்காத குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வியை கொடுப்பதில் இருக்கும் சிக்கல்களை கேமரூன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொட்டியிருந்தார்.
ஒவ்வொரு குழந்தையும் மூன்று வயதைத் தொடும் நிலையில் குறந்தபட்சம் 2000 வார்த்தைகளையாவது அறிந்து வைத்திருப்பார்கள். அவற்றின் ஊடாக அவர்களுக்கு கல்வியை புகட்டுவது எளிது என்பதைவிடவும் சரியானது பயனைத் தரக் கூடியது என்பதுதான் சரியாக இருக்கும்.
தேங்காய் என்பதை அறிந்திருக்கும் குழந்தைக்கு தேங்காயைப் பற்றி சொல்லித் தருவது எளிது. தேங்காயை தேங்காய் என்று மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் குழந்தைக்கு COCONUT பற்றி நடத்துவது கடினம் மட்டுமல்ல ஆபத்தானதும்கூட.
காட் முற்றாய் நடைமுறைப் படுத்தப்படும் போது மொழிவழியில் ஒரு பெரும் சிக்கலை உலகம் சந்திக்கும் என்றே படுகிறது. காட்டின் ஒரு ஷரத்து அமெரிக்க ஆங்கில வழியில் மட்டுமே கல்வி தர கட்டளையிடுகிறது. அது நடைமுறைக்கு வந்தால் ஆவணங்களை ஆய்வு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்பதை கல்வியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் கவலையாய் இருக்கிறது.
நம் குழந்தைகள் படிக்கும் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் GROUND FLOOR என்பது அமெரிக்க ஆங்கிலத்தில் FIRST FLOOR. இதில் இருக்கும் ஆவணச் சிக்கலை விரித்தால் மிகவும் விரியும்.
ஹீப்ருவின் எழுச்சியை மொழி குறித்து கவலைப்படும் யாவரும் கவனத்தோடு கற்க வேண்டும். ஒரு கட்டத்தில் பயன்படுத்த ஆளற்று அழிவின் விளிம்பில் இருந்த அந்த மொழியை இன்று ஒரு கோடி மக்கள் பேசுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம்தான். தங்களது மொழி அழிந்து கொண்டிருப்பதை முதலில் அவர்கள் உணர்ந்தார்கள். மீட்டெடுக்க ஆசைப்பட்டார்கள்.
தங்கள் மொழியை மட்டுமே தங்களுக்குள் புழங்கினார்கள். கடையில் காய்கறி உள்ளிட்டு அனைத்தையும் தங்கள் மொழியிலேயே கேட்டார்கள். மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் தங்கள் மொழியிலேயே எழுதினார்கள், அனைவரும் தங்கள் பிள்ளைகளை ஹீப்ரு மொழியிலேயே படிக்க வைத்தார்கள்.
கல்லறைக்கு வெகு அருகில் சென்று கொண்டிருந்த தங்கள் மொழியை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.
நமது கல்விக் கூடங்கள் இந்த வரலாறை நமது குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...