Monday, March 14, 2016

தேசத்தின் வளங்களை அழித்தொழிப்பது என்பது தேசவிரோதமல்லவா?

மதச்சார்பற்றஎன்பதை அனைத்து மதங்களையும் சார்ந்திருத்தல் என்றே பெரும்பாலும் தவறாகக் கொள்கிறோம். உண்மையில் மதச்சார்பற்ற என்பதன் பொருள் எந்த மத்த்தையும் சாராதிருத்தல் என்பதே ஆகும். இப்படிக் கொள்வதால் என்ன குடியா முழுகிவிடப் போகிறது என்று கேட்கிறவர்களும் எனது நட்பு வட்டத்தில் உண்டு. குடிதான் முழுகிப்போகும் என்பதே எப்போதும் அவர்களுக்கான நமது பதிலாக இருந்திருக்கிறது. காரணம்எல்லா மதங்களையும் சார்ந்திருத்தல்என்பது மதவாதிகளின் முகமூடியாக இருக்கிறது. எல்லா மதங்களையும் சமமாகப் பாவித்தல் என்பதற்கும் எல்லா மதங்களையும் சார்ந்திருத்தல் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதிலும் குறிப்பாக ஒரு அரசாங்கம் எந்த ஒரு மதத்திலிருந்தும் தள்ளியே தன்னை கட்டமைத்துக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அப்படி இல்லாதபோது இதுமாதிரியான கார்பரேட் மதவாதிகள் சகல மதங்களிலிருந்தும் தோன்றவே செய்வார்கள்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்பது மத்திய அரசையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பு. அது பிறப்பிக்கும் ஒரு உத்தரவை மத்திய அரசே மீறமுடியாது. அப்படி எதாவது செய்யவேண்டிய நிலை அரசுக்கு வந்தாலும் அது உச்சநீதி மன்றத்தை நாடிதான் அதை செய்ய முடியும். அதற்குமிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அத்தகைய தேசிய பசுமைத் தீர்ப்பாயம்வாழும் கலைஎன்ற அமைப்பின் நிறுவனரான கார்ப்பரேட் சாமியார் ரவி சங்கருக்கு யமுனை நதியை மாசுபடுத்தி பாழடித்தமைக்காக ஐந்துகோடி ரூபாய் அபராதம் விதிக்கிறது. “ஒரு பைசா கூட அபராதம் கட்டமுடியாது. என்ன முடியுமோ செய்துகொள்ளட்டும்என்று சவால் விடுகிறார். ஒரு சாமியாருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. யார் இவர்?

ரவிசங்கர் என்ற ஒரு சாமியார் வாழும் கலைஎன்ற தனது இயக்கத்தின் மூலம் பிரபலமடைகிறார். அவருக்கு அமைச்சர்கள் பிரதமர் உள்ளிட்ட முக்கியமானவர்களின் ஆதரவு கிட்டுகிறது. ’வாழும் கலைஎன்ற இவரது இயக்கத்தை நாடு முழுவதும் கிளைகளை அமைத்து கிராமம் கிராமமாக கட்டமைக்கிறார். மேற்சொன்ன பிரபலங்களின் ஆதரவும் மத்திய மற்றும் பல மாநில அரசுகளின் ஆதரவும் ஊடகங்களின் பெருவெளிச்சப் பாய்ச்சலும் அவரே நினைத்துப் பார்த்திராத ஒரு உசரத்திற்கு அவரை கொண்டு போகிறது.

சகல வியாதிகளுக்கும் தனது ஒரே லேகியம் நிவாரணமளிக்கும் என்று தெரு ஓரத்தில் கடை விரித்து வியாபாரம் செய்யும் லேகிய வியாபாரி மாதிரி சகல நோய்களையும் யோகாவே தீர்க்கும் என்று கடை கட்டுகிறார். அமோகமாய் போகிறது. தலைவர்கள், வியாபாரிகள், ஊடகக்காரர்கள் உள்ளிட்டுஆமாம், ஆமாம்என்கிறார்கள்.

இவர்மீது அவ்வப்போது பல தரப்பில் இருந்தும் புகார்களும் வந்தபடியேதான் இருக்கிறது. அவ்வப்போது இவர்மீது வழக்குகளும் பதியப்பட்டப்படியேதான் இருக்கிறது. ஆனாலும் எதுகுறித்தும் கவலைப்படாதவராகவே இவர் வளர்கிறார். அதுவும் இவருக்கு மிக வேண்டிய ஆட்சி அமைந்தபிறகு இஅவருக்கு எந்த அச்சுறுத்தலும் பெரிதாகப் படவில்லை.

இவ்வளவு பலமுள்ள ஒருவரால் சுருங்கி சும்மா இருக்க முடியாது அல்லவா. பொதுவாகவே அவரவர் இருத்தலை அவ்வப்போது வெளிக்காட்டிக்கொள்ள எதையாது செய்வோமல்லவா. அதுமாதிரி ஒரு ஆசை இவருக்கும் வருகிறது. அவரவர் தகுதிக்குத் தக்கவாறு வெளிப்படுத்துதலின் அளவும் செலவும் கூடும் குறையுமல்லவா. இவர் தனது இருத்தலை வெளிப்படுத்தவும் விஸ்தீரிக்கவும் தில்லியில் யமுனை ஆற்றங்கரையில்உலக கலாச்சாரத் திருவிழாநடத்துகிறார். உலகம் முழுவதிலுமிருந்து பல லட்சம் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் ரவி கூறுகிறார்.

விளைநிலங்களும் பழத்தோட்டங்களும் அழிக்கப் படுகின்றன. யமுனை நதியில் கொட்டப்படும் என்சைம் உயிரிகளையும் தாவரங்களையும் அழித்துப் போடுகிறது. விவசாயிகள் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார்கள். உச்சநீதிமன்றம் அவர்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகுமாறு பணிக்கிறது. விவசாயிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகுகிறார்கள். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சாமியார் ரவி அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கிறது. இவரால் நிகழ்த்தப்பட்ட இயற்கை அழித்தை தடுத்து கட்டுப் படுத்தாத காரணத்திற்காக தில்லி வளர்ச்சி குழுமத்திற்கு ஐந்து லட்சமும், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவிற்கு ஒரு லட்சமும் அபராதம் விதிக்கிறது.

இந்தத் தீர்ப்பை பெற்றுக்கொண்ட பின்புதான் சாமியார் ரவி அவர்கள்ஒரு பைசாவும் அபராதமாக கட்ட முடியாது. முடிந்ததை செய்என்று ஆணவம் கொப்பளிக்க பேசுகிறார்.

மட்டுமல்ல, மாநாட்டுத் திடலை கட்டமைக்கும் பணியிலும் யமுனையின் குறுக்கே ரப்பர் பாலங்களை நிர்மாணிக்கும் பணியிலும் ராணுவத்தை பயன்படுத்தியதில் தவறேதும் இல்லை என்று கூறுகிறார். இதில் பிரச்சினை என்னவெனில் ஒரு சாமியார் ஏற்பாடு செய்ய்ம் மாநாட்டுப் பணிகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவது சரியா என்று எதிர்கட்சிகள் கொந்தளித்தபோது இந்த அளவு தைரியத்தோடுஆமாம், அதிலென்ன தவறு?’ என்று கேட்கும் தைரியம் எந்த மத்திய அமைச்சருக்கும் இருக்கவில்லை. ’அவர்கள் ராணுவத்தினர் இல்லை. ராணுவ உடையில் பணியாற்றும் கூலிகள்என்பதாகத்தான் அவர்கள் நழுவினார்கள்.

1)   மத அமைப்பின் நிறுவனர் ஒருவர் ஏற்பாடு செய்யும் ஒரு மாநாட்டின் பணிகளை செய்வதற்கு ராணுவத்தை அனுப்பியது எப்படி சரியாகும்? இல்லை ராணுவ வீர்ர்களை நாங்கள் இதற்கு அனுப்பவில்லை என்று மத்திய அரசு சொல்லுமானால்இந்த வேலையை ராணுவ வீர்ர்கள் செய்ததில் என்ன தவறு?’ என்று சாமியார் ரவி அவர்கள் கேட்டிருக்கிறாரே. அதற்கு என்ன பொருள்? ராணுவ வீர்ர்களை பயன்படுத்தாமலே அவர்களை இந்த வேலைக்கு பயன்படுத்தியதாக சொல்வது இந்திய ராணுவத்தை அவமானப் படுத்துவதாகாதா? எனில், ராணுவத்தை அவமானப் படுத்திய ரவி அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
2)   இவ்வளவு பிரச்சினகள் உள்ள மத அமைப்பொன்றின் மாநாட்டிற்கு கோடிக்கணக்கில் நன்கொடையை அரசே வழங்குவது தவறென்று படவில்லையா?
3)   இதேபோல வேறொரு மதஅமைப்பின் மாநாடு நடந்தால் அதற்கும் ராணுவத்தை அனுப்புவீர்களா? நன்கொடை தருவீர்களா? அப்படியே தந்தாலும் ஒரு தவறை ஆதரித்ததற்காக எல்லாத் தவறுகளையும் ஆதரிப்பது போலாகாதா?

இவை யாவினும் அதிர்ச்சியான விஷயம் இந்த மாநாட்டில் இந்திய ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொள்வதாக வெளியான செய்திதான். தான் கலந்துகொள்வதில்லை என்று ஜனாதிபதி அறிவித்திருப்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம். அநேகமாக பிரதமரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்றே எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் எதுபற்ரியும் கவலை கொள்ளாமல் தனது வருகையை மாண்பமை பிரதமர் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்.

இந்த நேரத்தில் 24.08.1957 அன்று அன்றைய இந்தியப் பிரதமர் மாண்பமை ஜவஹர்லால் நேரு அவர்கள் அன்றைய இந்திய ஜனாதிபதி மாண்பமை ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை நினைவூட்டுவது அவசியமாகிறது.

1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் சர்வ சமய மாநாடு என்பதாக பொருள்படும்விஷ்வ தர்ம சம்மேளனம்என்ற ஒரு மாநாடு தில்லியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் அதிர்ச்சியளிக்கும் விதமாக குடியரசுத் தலவர் மாளிகையில் 1957 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  23 மற்ரும் 24 ஆம் தேதிகளில் நடை பெற்றிருக்கிறது. இந்த அமர்வுகளில்விஷ்வ தர்ம சம்மேளத்தினைநேரு அவர்கள் துவங்கி வைப்பது என்றும் துணைக் குடியரசுத் தலைவர் மாண்பமை முனைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்குவது என்றும் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் தன்னால் தலைமை தாங்க இயலாது என்றும் ஆனால் அந்த மாநாட்டில் உரை நிகழ்த்துவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்.

நேரு அவர்கள் தனது கடிதத்தில் தம்க்கோ தமது அரசுக்கோ தெரியாமலேயே இப்படி ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் கூறுகிறார். இப்படி ஒரு பெரிய அளவிலான சர்வதேச மாநாட்டினை நடத்துவதற்கு மிகப்பெரிய கட்டமைப்பும் பொருளாதாரமும் தேவைப்படும். அவை இரண்டையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சர்வதேச மாநாட்டின் அமைப்பாளர்களிடம் இருக்கிறதா என்பது தமக்கு அச்சமளிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பிற நாடுகளின் அயலுறவுத் துறை அமைச்சகங்கள் அந்த மாநாட்டினை இந்திய அரசு நட்த்துகிறதா? அல்லது தனி அமைப்பு ஏதேனும் நடத்துகிறதா என்ற அய்யத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விசாரிப்பதாகவும் அந்தக் கடித்த்தில் நேரு கூறுகிறார்அந்த மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த விதம் அதை அரசுதான் செய்கிறதோ என்கிற அய்யம் வருகிறமாதிரி இருந்ததாகவும் வருத்த்த்தோடு சொல்லியிருக்கிறார் நேரு.

வரம்புகளை மீறி தேசத்தின் இயற்கைவளம் சூறையாடப் பட்டிருக்கிறது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. சூறையாடியவருக்கு மட்டுமல்ல அதை கட்டுப் படுத்தத் தவறிய குற்ரத்திற்காக தில்லி வளர்ச்சி குழுமத்திற்கும், தில்லி மாசு கட்டுப்பாட்டு குழுவிற்கும் அபராதம் விதிக்கிறது.

அப்படியான ஒரு நிகழ்வில், இன்னும் சொல்லப்போனால் குடியரசுத் தலைவர் நிராகறித்த ஒரு விழாவில் மாண்பமை பிரதமர் அவர்கள் கலந்து கொள்வதென்பது தேசத்தின் இயற்கை வளத்தை சூறையாடியவர்களை ஆதரிப்பதாகாதா?

தேசத்தின் வளங்களை அழித்தொழிப்பது என்பது தேசவிரோதமல்லவா? அழித்தொழிப்பவர்கள் தேசவிரோதிகள் அல்லவா?

எனில், அத்தகையதொரு நிகழ்வில் இந்த தேசத்தின் மாண்பமை பிரதமர் கலந்து கொள்வதை எப்படி கொள்வது?

நன்றி: மின்னம்பலம்.காம்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...