( முந்தைய சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிந்தபோது எழுதியது)
அன்பின் தோழர் ஜேம்ஸ் James Vasanthan
வணக்கம். உங்களது 35 ஆண்டுகால வளர்ச்சியைத் தொடர்ந்து மகிழ்ந்து கவனித்து வருபவன்.
உள்ளே போவதற்குள் சன்னமாக ஒரு அறிமுகம்.
நீங்கள் 1979-1982 இல் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தீர்கள். நான் 1980-1983 இல் அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவன். அதாவது கல்லூரியில் உங்களது ஜூனியர் நான்.
கல்லூரி காலத்தில் புனித வளனார், பிஷப், ஜமால் முகமது, தேசியக் கல்லூரி, பெரியார் என எங்கு போட்டிகள் நடந்தாலும் நீங்கள் பாடுவதைக் கேட்பதற்காக வந்துவிடுவோம் சிலர். அப்படிப் பார்த்தால் உங்களது ரசிகர்களில் நான்தான் சீனியராக இருப்பேன். என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு மௌனமான வாசகன் நான்.
உங்களது ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியை கூட்டங்கள் ஏதுமின்றி வீட்டில் இருக்கும்போது தவறாமல் கேட்கிறேன். என் மகள் தொடர்ந்து கை தட்டி ரசித்துக் கொண்டாடுகிறாள். ஆரவாரங்களுக்கு மத்தியில் அமைதியான ஆற்றொழுக்கான உங்களது பேச்சு நடை எனக்குப் பிடித்தமானது.
சூப்பர் சிங்கரில் ஸ்ரீஷாவை பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பாட வா என்று நீங்கள் சொன்னபோது அவளொத்த ஒரு குழந்தையின் தந்தையாய் மகிழ்ந்தேன். ஒரு குழந்தை பாடலை முடிக்கும் ஒவ்வொரு முறையும் அழுது முடித்தபோது முதல்முறை கொண்டாடிய நீங்கள் அதை தவறென்று மென்மையாக சுட்டியபோதும் மகிழ்ந்தேன்.
சினிமாவை மிகச் சரியாக அணுகுகிறீர்கள். முற்றாய் அதில் கறைந்து போகாமல் அதே நேரம் உங்களைப் பிரித்துவிட்டு சின்மாவை பேசிவிட முடியாது என்கிற ஒரு எதார்த்தநிலை நோக்கி நகர்கிறீர்கள்.
உங்களிடம் சில எதிர்பார்க்கிறேன் ஜேம்ஸ். எதிர்பார்த்தல் என்பதைவிட கையேந்தல் என்பதே சரியானதாகும்.
சூப்பர் சிங்கர் முடிந்ததும் இப்படி எங்கள் பத்திரிக்கையில் எழுதினேன்.
”அந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்த திரு ஆனந்த் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும். தனக்குத் தெரிந்த வித்தையை மிகுந்த அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்கு கொண்டு செல்வதில் நூறு விழுக்காட்டுக்கும் மேல் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் அவரிடம் மடங்கி முறையிட ஒன்றுண்டு.
மழலை மாறாத நான்கு வயது குழந்தைகளை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடல்களை அட்சரம் பிசகாமல், சுதி சுத்தமாய், நீளாமல் குறையாமல் சங்கதிகளை கொண்டுவர நீங்கள் கொடுத்த பயிற்சியும் பட்ட சிரமங்களும் மிக அதிகம் என்பதை நான் அறிவேன். அதற்காக உங்களை தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
ஆனால் அதை குழந்தைகளின் முதிர்ச்சி (maturity) என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.
ஐம்பது வயதில் ஜானகி அம்மாவை ஐந்து வயது குழந்தையின் குரலில் பாடச் சொல்கிறீர்கள். ஐந்து வயது குழந்தையை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடலை அப்படியே பாடச் சொல்கிறீர்கள். மாறாக அம்மாவை அவர்களது குரலிலும் குழந்தைகளை குழந்தைகளின் குரலிலும் பாடச் சொல்லலாமே?
உங்களது இவ்வளவு உழைப்பும், அர்ப்பணிப்பும் நீங்கள் கொடுத்த பயிற்சியும் அந்தக் குழந்தைகளின் முயற்சியும் உழைப்பும் அவர்களது மழலை வழி கசிந்திருக்குமானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதோடு மிகச் சரியாகவும் இருந்திருக்குமே.
அந்தக் குழந்தைகள் பாடியது பேரழகாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மழலையில் திக்கித் திக்கிப் பேசியது அவர்கள் பாடியதைவிடவும் இனிமையாக இருந்ததே ஆனந்த் சார்.
அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் சாக்கில் அவர்களது மழலையையும் குழந்தைமையையும் கொன்றுபோட்டோம் என்றே தோன்றுகிறது
மழலை இசைக்கு உகந்தது என்று சொன்னால் அது குறையுடையது என்று உங்களுக்குத் தெரியும். மழலை இசைக்கு இணையானது. குழந்தையை நேசிப்பவர்களுக்கு மழலை இசையைவிடவும் இனிமையானது.
உங்கள் மீது எனக்கு அளப்பரிய மரியாதையும் நம்பிக்கையும் உண்டு ஆனந்த் சார். அவர்களது மழலையைக் கொண்டே இதைவிடவும் எதைவிடவும் காத்திரமான இசையை உங்களால் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்.
மிகுந்த நம்பிக்கையோடு உங்களிடம் கை ஏந்துகிறேன் சார்.”
1. ஜேம்ஸ் , குழந்தமை மாறாமல் அவர்கள் மழலையை பயன்படுத்தி இசை செய்து தாருங்கள்.
2. சென்னை புறநகர் ரயில்களில் பாடும் பார்வையற்ற தோழர்களை ஒரு படத்திலேனும் பாட வாய்ப்பு கொடுங்கள். எங்கோ ஏகாந்தமாய் போய்விடுவது அல்லது சாவது என்று முடிவெடுத்து பயணித்துக் கொண்டிருந்த என்னை,
“ நிழல் வேண்டும்போது
மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது
துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலமொன்று எல்லோர்க்கும் உண்டு” என்று பார்வையற்ற ஒருவர் பாடியதுதான் இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறது.
மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது
துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலமொன்று எல்லோர்க்கும் உண்டு” என்று பார்வையற்ற ஒருவர் பாடியதுதான் இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறது.
கையேந்துகிறேன். கவனியுங்கள் ஜேம்ஸ்.
எதற்கும் எனது எண் 9842459759
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்