Friday, March 18, 2016

65/66, காக்கைச் சிறகினிலே மார்ச் 2016

பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் சிலர் அலை பேசியில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

எல்லா பயணிகளுக்கும் பயணச்சீட்டுகளை வழங்கி முடித்ததும் ஒரு மாணவனிடம் வந்தார் நடத்துனர்,

இப்ப யாருக்கு  எஸ் எம் எஸ் அனுப்புற?”

கோபிக்குத்தான்

இங்க இருந்து ரெண்டாவது சீட்ல இருக்கவனுக்கு எஸ் எம் எஸா?”

எல்லோருக்கும் நன்கு தெரிந்த நடத்துனர் போலும்.

ம்…”

க்ளோபல் வார்மிங்னா என்னான்னு தெரியுமாடா சதீஷ்?”

அதுக்கென்னங்கண்ணே?”

இல்லடா முன்னெல்லாம் நிறைய சிட்டுக்குருவிகளப் பார்க்க முடியும். நம்ப வீட்டு சைடு எவ்வளோ பார்க்கலாம். இப்ப எங்கயாச்சும் தட்டுப் படுதாடா?”

இல்ல

இவ்வளோ எஸ் எம் எஸ் அனுப்பினா எப்படி இருக்கும்?”

அதுக்கும் இதுக்கும் என்னண்ணே

படிக்கிறதானே. இதுகூட தெரியாதா

அவர் பேச ஆரம்பித்ததும் மற்ற பசங்க , “மாட்னாண்டா மாப்ள. நாம பிச்சுக்குவோம் என்று  நகர்ந்து போனார்கள்.

அவன் கவனிக்கிறானா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப் படவில்லை அவர். முன்பெல்லாம் பெரம்பலூரிலிருந்து திருச்சி வருவதற்குள் ஏராளம் தேன் கூடுகள் தட்டுப்படும் என்றும், தற்போது தேன்கூடுகளையே காண முடியவில்லை என்றும், செல் வந்ததுதான் இதற்கு காரணமென்றும், செல்லை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டே போனார். இல்லாது போனால் இயற்கை சம நிலை பாதிக்கும் என்றும் அவர் சொன்னதை எல்லாம் அவன் கேட்டானோ என்னமோ நான் கேட்டேன்.

உங்களுக்கும் சொல்லிவிட்டேன்
**********

அது ஒரு சனி.  மதுரைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தபோது தம்பியிடமிருந்து அழைப்பு.
சொல்லுடா
கிழவி உன்னோட பேசனுமாம். இதோ தரேன்.
சொல்லு காட்டம்மா
பார்க்கனும்போல இருக்கு. வந்துட்டுப் போப்பா.
அடுத்தவாரம் வரேன். இப்ப மதுரைக்குப் போறேன் காட்டம்மா
மதுரைக்கா... பாத்து சூதானமா போயிட்டு வாய்யா
நான் என்ன பச்சக் குழந்தையா
இல்லையா. எனக்கின்னும் குழந்தைதாம்பா நீ
ஐம்பது வயது கிழவனான என்னை இன்னும் குழந்தையாகவே பார்க்கும் என் தொண்ணூறு வயது அம்மாயி.
நானன்று பேசப் போன ஆய்வரங்கத்தின் கோரிக்கைத் தீர்மானங்களாக தோழர் பர்வதா முன்மொழிந்த ஒரு தீர்மானம் இப்படி கோருகிறது,
இந்தியாவில் உள்ள 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகளென்ற வரையறையை, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகள் மீதான பிரகடனத்தின் வழிகாட்டுதலின்படி நமது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு அடிப்படைச் சட்ட உரிமை அளிக்க வேண்டும்
எவ்வளவு முரணான சமூகம் இது.
குழந்தகளை குழந்தைகள் என்றழைப்பதற்குக் கூட கோரிக்கை வைக்க வேண்டிய சூழலில்தான் நாமின்னும் இருக்கிறோம்.


நீ படிச்சு என்னவாவ?
கலக்டராவேன்.
கலக்டராயி?
டிவி பார்ப்பேன், எல்லாருக்கும் சாக்லெட் வாங்கித் தருவேன், ஐஸ் க்ரீம் வாங்கித் தருவேன்.
குழந்தைகள் இப்படியே வளரட்டுமே
***************************************************************************  

நிறுத்தமில்லாத சில இடங்களில் விசிலடித்து பேருந்தை நிறுத்த வைத்த நடத்துனர் தனது இருக்கையில் வந்தமர்ந்ததும் ஓட்டுனர்,
"ஏண்டா சிவக்குமாரு, நீ பாட்டுக்கு கண்ட இடத்துலையும் விசிலிருக்குன்னு ஊதிடுற. பி.எம் மைலேஜ் குறையுதுன்னு கத்தறார்"
"கண்டக்டர் கண்ட இடத்துலயும் ஊதறான்னு சொல்லிக்க"
"சொன்னேன்டா"
"அதுக்கு என்ன சொன்னார்?"
"அவன் அப்படித்தான் ஊதுவான். நீதான் கண்டுக்காம நகரனும். ஒரு லிட்டருக்கு 6 கிலோ மீட்டருக்கு குறையக்கூடாதுங்கறார்
"அப்படியா சொன்னாரு அந்த ஆளு. ஏங்கிட்ட என்னடான்னா நீதான் எப்படியாவது அங்கங்க நிறுத்தவச்சு டிக்கட்ட ஏத்தனும். கிலோமீட்டருக்கு 36 ரூபாய்க்கு குறையக்கூடாதுங்கறார்"
அதிகாரிகள் அதிகாரிகள்தான்.
**************************************************************************************************  
கடந்த சனியன்று (20.02.2016) அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய உலக தாய்மொழி தினம்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக மன்னார்குடி சென்றிருந்தேன். அழைத்தவுடன் ஒத்துக் கொண்டதில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் காமராசு அவர்களுக்கு மகிழ்ச்சி. ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மன்னார்குடியில் பேசுகிற வாய்ப்பு. காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போடுவதென்பதுகூட தமிழை பாதிக்கும் என்பதை பேசிவிட்டு வந்தேன்.

எந்த அலுவலகத்திலும் ஆலயத்திலும் இல்லாத தமிழை சேரி மக்கள்தான் பேசிப் பேசியே உயிரோடு வைத்திருக்கிறார்கள் என்பதை பேசிவிட்டு வந்தேன்.

கிளையின் தலைவர் தோழர் செல்வகுமார் அவர்களின் சுறுசுறுப்பும் அன்பும் உபசரனையும் என்றும் மறக்க முடியாதவை.

வைத்திருந்த 15 காக்கை இதழ்களையும் தோழர்கள் காசு கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். எல்லோரிடமும்  
*********************************************   

தோழர் தாஹிர்பாட்சா பெரம்பலூர் மாவட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமையாக தன்னை பையப் பையக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார். களைப்பின்றி உழைக்கிறார். நிறைய வாசிக்கிறார். வளர்ந்து கொண்டிருக்கும்போதே வளர்த்தெடுக்கும் வித்தையைக் கற்றிருக்கிறார். அரும்பாவூர் பகுதியில் இவர் தொடர்ந்து நடத்தும்இலக்கியச் சாரல்பல இளைஞர்களை வாசகர்களாக்கி இருக்கிறது. சில நல்ல மழலை எழுத்தாளுமைகளை இவரது தொடர் செயல்பாடு அடையாளம் காட்டியிருக்கிறது.

அவர் செய்திருக்கும் காரியங்களிலேயே மிக அழகானதும், மிக மிக ஆழமானதுமான விஷயம் அவர் தனது மனைவியை ஆசை ஆசையாய் முனைவராக்கியது. இதை ஆணாதிக்க செயல்பாடாகவே நான் பார்க்கவில்லை. இருவரும் தோழமைகளாகவே வாழ்க்கையை நகர்த்துபவர்கள்.

எவ்வளவோ முயன்றும் அவரது வைவாவிற்கு என்னால் போக முடியவில்லை. அந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக அவரோடு இன்று பேசினேன். மனிதர் சரியாய் புரிந்து கொண்டது மகிழ்ச்சியாய் இருந்தது. அதைவிடவும் மகிழ்ச்சியான ஒன்றை அடுத்து அவர் சொன்னார்,

அண்ணே, இந்த மகிழ்ச்சியை நெறியாளுனருக்கு (Guide) காக்கைக்கு ஐந்தாண்டு சந்தா கட்டுகிறேன்.”

இது மாதிரியான மகிழ்ச்சிகளை காக்கையை நேசிக்கும் நண்பர்களும் இது மாதிரியே கொண்டாடாட சிபாரிசு செய்கிறேன்.
********************************************************* 
வேறு வழியே இல்லை. இந்த மாதமும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்

நிழலுக்கு ஒதுங்கியவளின்
இடுப்புக் குழந்தையின் 
பொக்கைச் சிரிப்பில்
சரிந்து 
சன்னமாய் ஆசைப்பட்ட புத்தனை
இலைசொரிந்து தீட்சித்தது போதி
*********** 

கன்ஹையாவைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் நாங்கள் அவனைத் தாக்கியபோது போலீசார் எங்களை ஆதரித்தனர். அவர்கள் நல்லது சார்என்றனர். நான் வாருங்கள் என்று அவர்களைய்ம் தாக்குவதற்கு அழைத்தேன். அவர்கள் நாங்கள் சீருடையில் இருக்கிறோம்ஆனால் நல்லது நல்லதுஎன்றனர்

பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்து கன்ஹையாவைத் தாக்கிய வழக்கறிஞர் விக்ரம் சௌஹான் இந்தியா டுடேதொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறியது.

என்ன செய்யலாம் இவர்களை.
**************************************************


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...