Saturday, March 19, 2016

அவன் ஏன் விருத்தசேதம் கொண்டான்?

அந்தக் கிழவனை கொலை செய்ததைத்தவிர அவர்களது திட்டங்கள் எதிலும் அவர்களால் 1948 ஆம் ஆண்டு வெற்றிபெற இயலாமல் போனது. அதில் மட்டும் அவர்கள் அன்று வெற்றி பெற்றிருந்தால் அது அந்தக் கொலையைவிடவும் கொடூரமானதாக இருந்திருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் இரண்டாவது திட்டமான காந்தியை ஒரு இஸ்லாமியன் கொன்றான் என்ற ஒரு பொய்யை மக்களை நம்ப வைப்பது, அதன்மூலம் இஸ்லாமியர்கள்மீது மக்களின் கோவத்தை திருப்புவது என்பதே காந்தியின் கொலையைவிட அவர்களுக்கு முக்கியமானது. அப்படி ஒரு பொய்யை கட்டமைத்துவிடவேண்டும் என்பதற்காக அவர்கள் படாத பாடு பட்டார்கள்.

கோட்சே சுன்னத் செய்து கொண்டான். அவன் தனது கைகளில்இஸ்மாயில்என்ற பெயரை பச்சைக் குத்திக் கொண்டான். பிடிபட்டாலோ செத்துத் தொலைந்தாலோ அல்லது கொல்லப் பட்டாலோ இந்த இரண்டு அடையாளங்களும் அவனை ஒரு இஸ்லாமியனாகக் காட்டவேண்டும் என்பதே அவர்களது முக்கியமானத் திட்டம். என்னைப் பொறுத்தவரை காந்தியை கொலை செய்வதைவிட இந்த அடையாளங்களை கொண்டு சேர்ப்பதுதான் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும்.

இப்படி யோசித்துப் பார்ப்போமே, காந்தியைக் கொலை செய்வதில் தோற்று அதைச் செய்ய முயற்சித்தது ஒரு இஸ்லாமியன் என்று மக்களை நம்ப வைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் அது காந்தி செத்து அவரைக் கொன்றது கோட்சே என்று அம்பலமாகிப் போனதைவிடவும் அவர்களுக்கு அது முக்கியமானதாகவும் கொண்டாட்டத்திற்கு உரியதாகவும் இருந்திருக்கும்.

காந்தியைக் கொல்வது மட்டுமல்ல அவர்களது நோக்கம். அந்தக் கிழவன் எப்படியும் இரண்டு மூன்று வருடங்களிலோ அல்லது அதற்கும் கொஞ்சம் பிறகோ செத்துப் போவார் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரு இஸ்லாமியன் அவரைக் கொல்ல முயற்சித்தான் என்ற ஒரு வ்பதந்திக்கான வாய்ப்புதான் அவர்களுக்கான பம்பர் பரிசாக இருந்திருக்கும். அதுமட்டும் நடந்திருந்தால் காந்தியின்மீது உலகத்திற்கிருந்த பிம்பம் உலகத்தின் பெரும்பகுதியை இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுசென்று நிறுத்தியிருக்கும்.

அதனால்தான் காந்தி கொல்லப்பட்ட செய்தியை வானொலியில்மகாத்மா காந்தி ஒரு இந்துவால் சுட்டுக் கொல்லப்பட்டார்என்று சொல்லவேண்டி வந்ததாம்.

ஆனால் எதை செய்தேனும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி குறைந்த பட்சம் அவர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக எந்தக் கேவலத்தையும் அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள்.

திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு இடத்தில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை இவர்களே ஏற்றுவார்கள். பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போடுவார்கள். அனைவரும் லுங்கியில் இருப்பதன் மூலமும் குல்லா அணிந்திருப்பதன் மூலமும் பாகிஸ்தாம் கொடியை ஏற்றி கோஷங்களைப் போட்டது இஸ்லாமியர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். இதன் விளைவாக அந்தப் பகுதியில் இருக்கும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறை அள்ளிக்கொண்டுபோய் நையப் புடைக்கும். தேசவிரோத வழக்குகளைப் போட்டு அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் சித்திரவதைப் படுத்தும்.

என்ன வினோதம் என்றால் அந்த அயோக்கியத் தனமான காரியத்தை செய்தது இவர்கள்தான் என்று அம்பலப்பட்டுப் போன பின்னாலும் அந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆயுள் முழுக்கவும் துயரம்தான் வழக்குகள்தான்.

திடீரென ஆள்யாருமற்ற வேலையில் இவர்களது அலுவலகங்கள் மீது இவர்களே பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு பழியை அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள்மீது போடுவார்கள். இஸ்லாமியப் பிள்ளைகள் கைது செய்யப் படுவார்கள்.

இதுபோக குஜராத் மற்றும் முசாபர் நகர் யுக்தி என்பது வேறு.

இவற்றின் நீட்சியாகத்தான் தற்போதைய JNU மாணவர்கள் மீதான இவர்களது தாக்குதல்களை பார்க்க முடிகிறது. தாக்குதலையும் அவதூறுகளையும் ஒருசேர செய்வதே ஆர்.எஸ்.எஸ் பாணி. கன்ஹையாமீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு அவன் சிறையில் அடைக்கப் பட்டிருப்பது ஒருபுறம். அதற்கு கொஞ்சமும் குறைவானதல்ல கிடைக்கிற ஊடகங்களின் (இப்போது அவர்களுக்கு ஊடகப் பஞ்சம் என்பதே இல்லை) மூலம் கருத்து யுத்தத்தினை தொடுக்கிறார்கள்.

JNU வில் மாணவர்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பப் போவதாகவோ அல்லது அவை இரண்டும் நடந்ததாகவோ தில்லி காவல் துறைக்கு யாரோ ஒருவர் ட்விட்டரில் செய்தி தருகிறாராம். அதை ஏற்று தில்லி காவல் துறை துரித கதியில் செயல்பட்டதாம். நடுத்தெருவில் ஆயிரம்பேர் பார்க்க நடக்கும் கொலைகளுக்கு முதல் தகவல் அறிக்கை போடவைப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியது இருக்கும் என்பது பொது வெளியிலே வேலை பார்க்கும் அனைவருக்கும் தெரியும். இவர்கள் ட்விட்டரில் வந்த ஒரு புகாருக்கு இவ்வளவு மதிப்பை எப்படிக் கொடுத்தார்கள்.

அப்சல் தூக்கிற்கு எதிராக நடத்தப் பட்ட கூட்டம் என்பது அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுள் ஒன்று. தூக்குத் தண்டனையே கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு. எனில் அந்த கருத்தினை பிரச்சாரம் செய்வதற்கு நமக்கு உரிமை உண்டு. தூக்கிற்கு எதிரான நமது நிலையை எடுத்து வைத்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவும் அவர்களது நிலைபாட்டினை எடுத்து வைப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதை செய்ய மறுக்கிறார்கள். காரணம் நமது கருத்தை எதிர்த்து விவாதிப்பதற்கு அவர்களிடம் ஏதும் இல்லை. ஆகவே வறட்டுத் தனமாய் கத்தத் தொடங்கி விடுகிறார்கள். ‘தேசத் துரோகிஎன்கிறார்கள். இதை நீ சவுதியில் போய் கேட்கமுடியுமா? என்கிறார்கள். எனக்கு என்ன வேண்டும் என்பதை என் வீட்டில்தான் நான் கேட்க முடியும்.

கன்ஹையா குமார் பேசிய கூட்டத்தில் மொத்தமாக இருபத்தி ஒன்பது கோஷங்கள் போடப் பட்டதாகவும் அவற்ருள்பாகிஸ்தான் ஜிந்தாபாத்என்ற கோஷம் இல்லவே இல்லை என்று தில்லி காவல் துறையின் துணைக் கமிஷனர் திரு பிரேம்நாத் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஆனால் அப்படி ஒரு கோஷத்தை ஒரு தொலைக்காட்சி வெளியிட்டது. அப்படி ஒரு கோஷமே போடப்படாதபோது அந்த கோஷம் தொலைக்காட்சியில் எப்படி இடம் பெற்றது? எனில், அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அப்படி ஒரு கோஷத்தை பொய்யாக சேர்த்திருக்க வேண்டும். ‘ஆம்என்கிறது அந்த்த் தொலைக்காட்சி நிறுவனம்.

அதை செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்த்து அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு? யார் தூண்டிவிட்ட்து? அதனால் யார் பயனடைந்தது? என்பனவற்றையெல்லாம் அந்த நிறுவனத்தின் அதிபரைக் கைது செய்து விசாரிக்க வேண்டாமா? ஏன் இன்னும் செய்யவில்லை?

அதுபோக கன்ஹையா நீதிமன்றத்திற்கு கொண்டுவரப் பட்டபோது அங்குள்ள வழக்கறிஞர்களால் ஏறத்தாழ மூன்றுமணி நேரத்திற்கு தாக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்றக் காவலில் இருக்கும் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்போது அவருக்கு முழுப்பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது. விக்ரம்சிங் என்ற வழக்கறிஞன் மூன்றுமணி நேரம் கன்ஹையாவைத் தாக்கியதாகவும் கன்ஹையா கால்சிறாயோடு சிறுநீரே போனதாகவும் அவன் கூறுகிறான். மட்டுமல்ல தான் கன்ஹையாவை தாக்கியபோது காவலர்கள் அதை உற்சாகப் படுத்தியதாகவும் கூறுகிறான்.

அது உண்மையெனில் அந்தத் தாக்குதலை உற்சாகப் படுத்திய காவலர்கள்மீது வழக்குப் பதிய வேண்டாமா? அது பொய் எனில் அதற்காகாவே விக்ரம்சிங் மீது ஒரு வழக்குப் போட வேண்டாமா? கன்ஹையாவைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று அவன் பகிரங்கமாக பேசுகிறான். ஒருக்கால் ஒரு அமைச்சர்மீது அப்படி ஒரு தாக்குதலை நடத்தப் போவதாக சொல்லியிருந்தால் அரசும் காவல் துறையும் இப்படித்தான் நிதானமாக நடந்து கொண்டிருக்குமா?

இந்தக் கூட்டத்தின் அடுத்த இலக்கு உமர் காலித். இந்தப் பிள்ளை பலமுறை பாகிஸ்தான் சென்று பயிற்சி எடுத்து வந்த இஸ்லாமியத் தீவிரவாதி என்று சொல்கிறார்கள். இன்னும் பலர் இவனை ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்தவனென்று கூசாமல் பொய் சொல்கிறார்கள். விசாரனையின் முடிவில் இவன் எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத கடவுள் மறுப்பாளன் என்று தெரிகிறது. அவன் சாமியே கும்பிடமாட்டான் என்று அவனது தங்கை கூறுகிறாள். அப்புறம் ஏன் அவனை இவ்வளவு சித்திரவதைப் படுத்துகிறார்கள். அதற்கும் அவனது தங்கையின் பதிலிலேயே காரணம் இருக்கிறது. ‘அவன் ஒரு கம்யூனிஸ்ட் பைத்தியம்என்கிறாள் அவள். இது ஒன்று போதாதா அவன் சித்திரவதைப் படுவதற்கு.

நாம் சிந்திக்கிறோம் என்பதே அவர்களுக்கு அச்சமாக இருக்கிறதுஎன்று அந்தப் பிள்ளை உமர் காலித் சொல்கிறான். இந்தச் சின்ன வயதில் எவ்வளவு அழுத்தமான தெளிவு.

உச்சத்திற்கே போய் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா சொல்கிறார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் து.ராஜா அவர்கள் தன் மகளை சுட்டுக் கொன்று அவரது தேச பக்தியை நிரூபிக்க வேண்டும் என்று. என்ன பாவம் செய்தாள் அந்தக் குழந்தை?
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணாவர் அமைப்பில் அவள் இருக்கிறாள். அவள் தேச விரோதியாம். ஒரு விஷயத்தை இப்போது சொல்லிவிட வேண்டும். தேச பக்தியைப் பற்றியெல்லாம் ராஜா போன்றவர்கள் வகுப்பெடுக்கக் கூடாது. அதற்கு நிறைய அருகதை வேண்டும். அதுவும் து.ராஜா அவர்களின் தேசபக்தியை கேள்வி கேட்கிற அருகதை ஹெச். ராஜாவிற்கு இல்லவே இல்லை.

மிக அருவருப்பான அவரது பேச்சை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்றங்கள் விவகாரத் துறை அமைச்சருமான மாண்பமை வெங்கையநாயுடு அவர்களே ரசிக்கவில்லை. ராஜா நாகரீகமாகப் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறை கூறியிருக்கிறார். அதுசரி, அநாகரீகமாகப் பேசியதற்கு என்ன தண்டனை

இப்போது அனைத்தும் பொய் என்று நிரூபணமாகி அம்பலப் பட்டுப் போய் இருக்கிறார்கள்.  ஒரு பொய் அம்பலப் படும் போது இவர்கள் இன்னொரு பொய்யை கையில் எடுப்பார்கள். இப்போதும் இவர்கள் இதைத்தான் செய்வார்கள். செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்றே படுகிறது.

ஏசுநாதர் ஒரு தமிழ் இந்து என்று இப்போது தொடங்கியிருக்கிறார்கள். ஏசுநாதர் யாராயிருந்தால் நமக்கென்ன? அதை ஏசுநாதரை ஏற்பவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அல்லது விட்டுத் தொலையட்டும். நமக்கில்லை அந்தக் கவலை.

யாரும் சிந்திக்கக் கூடாது என்பதில் இவர்கள் தெளிவாயிருக்கிறார்கள். அதுவும் அறிவுத் தளத்தில் இருப்பவன் பாடத்திட்டம் வரை சிந்திப்பதே தவறு அதைத் தாண்டியும் சிந்திப்பது பெருந்தவறு என்பதில் தெளிவாயிருக்கிறார்கள். சிந்தித்தால் அவன் இடதுசாரியாகி விடுவானோ என்கிற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. அது தேசத்திற்கு நல்லதாகவும் அவர்களுக்கு எதிரானதாகவும் அமையும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இடதுசாரிகளோடு கருத்துக் களத்தில் விவாதிக்க இயலவில்லை என்பதால் பெருங்குரலெடுத்து காட்டுக் கத்தலாய் கத்துகிறார்கள். இருக்கிற அதிகார பலத்தை எடுத்து அவர்களை பலம் கொண்டமட்டும் தாக்குகிறார்கள். கூச்சம் மறத்துப் போய் பொய் பொய்யாய் குற்றம் சுமத்துகிறார்கள்.   

இடதுசாரிகள் பலமடைந்தால் ஒற்றைக் கலாச்சாரத்தைக் கொண்டுவர முடியாது. சதியை மீண்டும் கொண்டுவர முடியாது. இடதுசாரிகள் பலமடைந்தால் தலித் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. குறைந்த பட்சம் தலித் விடுதலைக்கான போராட்டங்கள் வலுப்பெறுவதை தடுக்க முடியாது.

அவர்களது எதிரி காங்கிரஸ் அல்ல, இடதுசாரிகள். அவர்கள் சரியாய் புரிந்து வைத்திருக்கிறார்கள். நமக்கான வேலையை நாமும் திட்டமிடுவோம்.

1)   பன்முக கலாச்சாரம் காக்கப்பட
2)   சதி மாதிரி பெண்ணை இழிவு செய்யும் நடைமுறைகள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனில்
3)   தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலை சாத்தியப்பட வேண்டுமெனில்
இடதுசாரி சிந்தனையாளர்களை ஒருங்கிணைவதும், திட்டமிடுதலும், செயலாற்றுவதும் மிக அவசியம்.

சுருங்கச் சொன்னால் கருத்தும் கரமும் இணைய வேண்டும்.    

நன்றி: காக்கை மார்ச் 2016

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...