Wednesday, March 16, 2016

கவிதையின் முன்வாசல்

(உமா மோகன் அவர்களின் கவிதை நூலான “துயரங்களின் பின் வாசல்” குறித்து)
அதைக் கடந்து நகர முடியவில்லை. அப்படியே உறைந்துபோய் உட்கார்ந்துவிட்டேன் என்று பொதுவாக சொல்வோமல்லவா, அப்படி சொல்வதற்கான வாய்ப்பு எனக்கின்று வாய்த்தது.
“தருவதற்கு ஏதுமில்லா வெறும்
அகப்பை
எரியட்டும்”
என்ற உமா (Uma Mohan) அவர்களின் கவிதையை வாசித்ததும் அதைக் கடந்து நகரமுடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டேன். “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றெழுதிய ஞானக்கிறுக்கனின் கோவத்தில் கொஞ்சமும் குறைவுபடாத கோவச்சூட்டை இந்த வரிகள் தந்தன.
ஆமாம், பசித்த வயிறுகளுக்கு அள்ளிப்போடுவதுதானே அகப்பையின் வேலை. அள்ளிப்போட பானையில் ஏதுமில்லாதபோது பானை இருந்தென்ன?, அகப்பை இருந்தென்ன? அந்த ஞானப் பெருங்கிறுக்கன் தன் வாழ்நாளின் ஒரு பகுதியை வாழ்ந்து செலவழித்த ஊரில் வாழ்பவரல்லவா, இப்படித்தானே எழுத வரும்.
ஒரு வயிறு பசித்திருந்தாலும் பிரபஞ்சத்தையே கொளுத்தடா என்ற கர்ஜணை என்பது பிரபஞ்சத்த்தின் தாயுமான தந்தை ஒருவனின் சாபம்.
இந்த மூன்று வரிகளைக் கொஞ்சம் காட்சிப்படுத்திப் பாருங்களேன். பசித்த வயிறோடு அமரும் பிள்ளை. பானையில் பருக்கை இல்லை. கையிலே அகப்பை இருக்கிறது. கையிலிருக்கும் அகப்பையின்மீதும் வெற்றுப் பானையின் மீதும் ஒரு தாய்க்கு கோவம் வருவது இயல்புதானே. கோவம் வருகிறது உமாவிற்கு. இன்றைய தளத்தில் பையப் பைய அருகி வருகிற தாயுள்ளம் இது என்கிற வகையில் உமாவை வாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.
பாரதியோடு சற்றித் திரிந்த பாரதிதாசன் இதே மாதிரி ஒரு சூழலில் “கூலுக்கொருவனுக்கு உப்பில்லையெனில் கோலினை முறித்திடுவோம்” என்கிறான். எனக்கென்னவோ பாரதியின் “ஜெகத்தினை அழித்தலை” விடவும் பாரதிதாசனின் “கோலினை முறித்திடுவோம்” ஒருநூல் கூடுதலான சரியாகப் படுகிறது. உணவில்லை எனில் ஜகத்தை அழி என்கிறான் கோவத்தோடு பாரதி. அவனது மாணவனோ இல்லை எனில் ஆள்பவனை எரி என்கிறான்.
யார் சொல்லியும் எதையும் தெரிந்து கொள்ளவேண்டியவராகத் தெரியவில்லை உமா. ஏன் அகப்பைக்கு வேலை இல்லை என்பதற்கான காரணங்கள் அவருக்கு நன்கு தெரிந்தே இருக்கின்றன என்பதையே
“பக்கத்துப் பெட்டிக்கடையில்
நாளிதழின் போஸ்டர்
ஆடுகிறது
டாஸ்மார்க் இலக்கு செய்தியோடு”
என்ற அவரது கவிதை நமக்கு சொல்கிறது. பானைகள் ஏதுமற்றிருப்பதற்குரிய காரணங்களுள் ஆகப் பெரிய காரணம் டாஸ்மார்க் என்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார்.
அகப்பை அல்ல தோழர் எரிபட வேண்டியது என்பது இந்த எளியவனின் நேயர் விருப்பம். பகட்டுத் தனமான ஜிகினா அரசியலே எரிபட வேண்டியது என்பதும், அது சாத்தியப்பட வேண்டுமெனில் மக்கள் சக்தியை ஒன்றுகட்ட வேண்டும் என்பதும், அதில் படைப்பாளிகளின் பங்களிப்பிற்கான தேவை என்ன என்பதையும் கவிஞர் உணர்ந்தவராகவே இருக்கிறார். ஆகவே அகப்பைகளை அல்ல பானைகளையும் சுரண்டிக் கொழுத்த கயவர்களை நீங்கள் உங்கள் படைப்புகளில் எரித்துப் போட வேண்டுமாய் உங்களது வாசகன் என்ற உரிமையோடு கேட்க கடமை பட்டிருக்கிறேன்.
“திரையிடுகையில் நின்றபடி
ஆடிக்காட்டும் மிஸ்சும்
அங்கே ஒரு கண்
அவையில் ஒரு கண்ணாய்
ஆடும் குழந்தையும்
ஆண்டுதோறும் கிடைத்துவிடுகிறார்கள்
சம்பளம் எப்படியிருப்பினும்”
இந்தக் கவிதையை வாசிக்கிறபோது பல நர்சரிப் பள்ளிகளின் ஆண்டுவிழா நடனங்கள் கண்முன்னே விரிகின்றன. அய்யோ, என்ன ஒரு அழகான படப்பிடிப்பு. பத்து நிமிட காட்சியை பத்தே வார்த்தைகளுள் சுறுக்கி விரிக்கும் வித்தையில் தோழருக்கு தனியாக ஒரு டாக்டர் பட்டமே வழங்கலாம்.
’சம்பளம் எப்படியிருப்பினும்’ என்று இரண்டே இரண்டு வார்த்தைகளில் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் வலியை, துயரை நீங்கள் சமைத்திருக்கும் விதம் நிச்சயமாய் வாசகனிடம் வலியை கட்த்தும்.
“பார்க்க விரும்புவது
முகத்தையா
முகமூடியையா’
என்று ஓரிடத்தில் கேட்கிறார்.
“முகமூடிக்குப் பின்னால் இருப்பதும்
முகம் இல்லையா?”
என்று பத்துப் பக்கம் தள்ளி தெளிகிறார். அந்த இரண்டு குறுங்கவிதைகளும் முகங்களே பலரது முகமூடிகளாகிப் போன அவலத்தை நம்மிடம் அம்பலப்படுத்துகின்றன.
அவரது கவிதைகள் குறித்த முற்றான மதிப்பீடு அல்ல. அவரது சற்றே நீளமான கவிதைகளைக்கூட நானிங்கு அலசவில்லை. எனக்குப் பிடித்த இவரது கவிதைகளுள் நான்கைந்து பற்றி மட்டுமே பகிர்ந்து கொண்டேன். இதுவே இவ்வளவு வருகிறது எனில் முழுவதும் பேசினால் தனி நூல் போட வேண்டி வரும்.
இவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு அம்சம் எந்த இடத்திலும் போலியோ, வறட்டுத்தனமோ இல்லவே இல்லை. இசங்களைக் குறித்தும் சித்தாந்தங்களைக் குறித்தும் நன்கு புரிதலுள்ள உமா, தனது படைப்பாக்கத்தில் அவை குறித்து கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. இதுதான் வெற்றிகரமான ஒரு படைப்பாளிக்கான அடையாளம். அவை குறித்து அக்கறை கொள்ளவேண்டியவர்கள் விமர்சகர்கள் படைப்பாளிகள் அல்ல. அவர்கள் அதை பார்த்துக் கொள்ளட்டும். நாம் படைப்புகளில் கவனம் குவிப்போம்.
மக்களின் சோகத்தை, காதலை, வலியை, அன்பை தாய்மையை, பசியை, மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, ஏமாற்றத்தை தங்கள் படைப்புகளின் வழி வாசகர்களுக்கு கடத்தத் தெரிந்த மக்கள் கவிஞராக இவரை இந்தத் தொகுப்பு அடையாளம் காட்டுகிறது. பிரச்சினைகளுக்கான தீர்வும் பிரச்சாரத் தொனியற்று இவரது கவிதைகளுள் நிறைய விரவிக் கிடக்கிறது.
“நீருக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த மீன்
சிரித்துக்கொண்டது
தூண்டில்காரன்
நிலவைத் தின்று கொண்டிருந்தான்”
என்ற இவரது அழகியல் ததும்பும் கவிதையை குறிப்பிடாமல் முடித்தால் அது கவிதைக்கு நான் செய்யும் துரோகம்.
“துயரங்களின் பின் வாசல்” கவிதையின் முன்வாசல்.
நூல் : “துயரங்களின் பின் வாசல்”
ஆசிரியர்: உமா மோகன்
விலை : எண்பது ரூபாய்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...