Friday, February 27, 2015

குறும் படம் 02

நாகை முக்கூடல் நிகழ்ச்சியில் நான் பேசுவதற்கு முன்னால் இரண்டு குறும் படங்களை வெளியிட்டார் தம்பி வெற்றிச் செல்வன்.

அது ஒரு கூரை வீடு என்று ஒத்துக் கொள்வதற்கு உரிய குறந்த பட்ச காரணங்களுள் ஒன்றிரண்டு இருப்பதால் அதை கூறைவீடு என்று ஒத்துக் கொள்ளலாம். மண் தரை. வெளியே கூரையை முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மரத் தூணில் சாய்ந்து கொண்டிருக்கிறார் ஒரு பெண். வெளியே பழைய பாட்டில்களை வாங்கும் வியாபாரி ஒருவர் ஒரு பெரிய சாக்கினுள் பாட்டில்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்.ஒரு சாக்கு நிரம்புகிறது. சாக்கைக் கட்டிக் கொண்டு கொஞ்சம் பணத்தை கொடுக்கிறார்.

“ பார்த்தும்மா, பத்திரமா வச்சுக்க. உங்க வீட்டுக் காரனுக்கு தெரிஞ்சா இதையும் புடிங்கிட்டுப் போயி குடிச்சுட்டு வந்துடுவான்” என்றவாரே நகர்கிறார்.

பணத்தை வாங்கிய அந்தப் பெண் அதை எண்ணக்கூடச் செய்யாமல் அப்படியே வீட்டின் கீழ் பக்கமாக வருகிறார். அங்கு இரண்டு பேர் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவரைப் பார்த்ததும் எழுந்து நிற்கிறார்கள்.அதில் ஒருவரிடம் அந்தப் பணத்தை நீட்டியவாறே இவ்வளவுதான் தன்னால் முடியும் என்று சொல்லியவாறே கண்ணைக் கசக்கியவாறு நகர்கிறார்.

அவர்தான் அந்தப் பெண்ணின் கணவரென்றும் சாராயம் குடிக்க தொந்தரவு செய்ததால் பாட்டில்களை விற்று இன்றைய அவரது செலவிற்கு அனுப்பி வைப்பதாகவும் யூகிக்கிறோம். அவர்கள் இருவரும் நகர்கிறார்கள். இந்தப் பெண் முன்னர் நின்று கொண்டிருந்த இடத்தில் அமர்ந்து கண்ணைக் கசக்குகிறார்..

இப்போது கேமரா வீட்டின் உள்ளிருந்து இயங்குகிறது. அந்த மங்கிய வெளிச்சத்தில் கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டவைக்கப் பட்டுள்ள நிலையில் படுக்க வைக்கப் பட்டுள்ள ஒரு உருவத்தின் கால் பகுதி மட்டும் தெரிகிறது.

பொட்டில் அடித்தது மாதிரி புரிகிறது. கணவன் செத்துப் போயிருக்கிறான். தகணச் செலவுக்கு அவன் குடித்துப் போட்ட குப்பிகளை விற்று வந்த காசைத் தவிர ஏதும் இல்லை.

வேறு எதுவும் இந்தப் படம் பிரச்சாரமெல்லாம் உரத்த குரலெடுத்து செய்ய வில்லை.

குடி குடும்பத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் வலியை, வேதனையை, இழப்பை இதைவிட எப்படி பார்ப்பவரின் மனசைக் குடையக் குடையக் கொண்டுவர முடியும் என்று தெரியவில்லை.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அன்று இரவு நம்மால் தூங்க இயலாது. நாலு பேரிடம் இதைப் பற்றிப் பேசுவோம்.  நமது பிரச்சாரத்திற்கான கருவியாய் மௌனமாக மாறிப் போய்விடும் அந்தப் படம்.  இதுதான் அந்தப் படத்தின் வெற்றி.

Thursday, February 26, 2015

குறும்படங்கள் மாற்றும்

எதிலும் இருப்பதைப் போலவேதான் சினிமாவிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. ஆனால் அதிலிருக்கும் நல்லவைகளைவிட கெட்டவைகளே அதிகம் பற்றிக் கொள்கின்றன. போக ஊடகங்கள், அதுவும் சின்னத் திரை வெள்ளித்திரைக்கான ஊதுகுழலாகவே மாறிப் போயிருக்கிறது.

அரசியல்வாதிகள், திரைத் துறையினர், என்று பெரும்பாலோனோர் திருட்டு விசிடி குறித்து வானத்திற்கும் பூமிக்குமாய் பேசுகிறார்கள். அவர்களது உழைப்பும், முதலீடும் கொள்ளை போவதாய் எகிறிக் குதிக்கிறார்கள். நமக்கு அதிலொன்றும் மாறுபாடான கருத்தெல்லாம் இல்லை. எந்த வகையான திருட்டையும் உழைப்புச் சுரண்டலையும் நாம் எதிர்க்கவே செய்கிறோம்.

ஆனால் திரைப் படம் வந்த ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் என்றெல்லாம் சொல்வதெல்லாம் எப்படி என்றுதான் புரியவில்லை. எல்லா திரையரங்குகளும் எல்லா காட்சிகளும் நிறம்பி வழிந்தாலும் இது சாத்தியமே இல்லையே. போக பாதி இருக்கைகளுக்கும் மேல் காலியாய் இருக்கும் போது இவர்கள் சொல்கிற வசூல் எப்படி சாத்தியம் என்பதை ஏன் யாரும் வெளிப்படையாய் பேச மறுக்கிறார்கள்?

மிகவும் எளிய காரணம்தான். 30 ரூபாய் டிக்கட்டை 300 ரூபாய் முதால் 1000 ரூபாய் வரைக்கும் விற்பதே இந்த வசூலை சாத்தியப் படுத்துகிறது.

இது அப்பாவி ரசிகனைச் சுரண்டுவதாகாதா? இது குறித்து எந்த அரசியல்வாதியும் திரைத் துறையினரும் ஏன் பேச மறுக்கிறார்கள்?

ஐ ஜி யிலிருந்து உள்ளூர் ஏட்டையா வரைக்கும் திருட்டு விசிடி க்கான ரெய்டுகளை அவ்வப்போது நடத்துவதில் காட்டும் கவனத்தை டிக்கட் கொள்ளைக்கு எதிராக ஏன் நடத்த மறுக்கிறார்கள்.

விடுங்கள்,

இத்தகைய சினிமாவிற்கு மாற்றாக நல்லவர்களிடம் இருந்து நல்ல சினிமா வரவேண்டும். அதற்கே நெஞ்சு நிறைய நெருப்பை வைத்துக் கொண்டு தம்பிகள் தாமிரா, நந்தன் ஸ்ரீதரன், கீரா போன்றவர்கள் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.

இந்தச் சூழலில் சினிமாவிற்கான லகுவான மாற்றாய் குரும்படங்கள் மாறி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. அதை கொண்டு போய் சேர்ப்பது ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நம்புகிறேன். எனவே நான் பார்த்த குரும்படங்களை இனி அறிமுகம் செய்யலாம் என்று நம்புகிறேன்.

குறும்படங்கள் இருப்போர் அருள் கூர்ந்து அனுப்பி உதவுங்கள். உரிய கட்டணத்தை அனுப்பிவிடலாம்.

தொடர்புக்கு,
9842459759, அல்லது   https://www.facebook.com/profile.php?id=100000945577360 வந்து இன்பாக்சில் பேசுங்கள்.

Tuesday, February 24, 2015

”ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்”


காக்கை இதழ் அச்சுக்குப் போய்விட்டது. அட்டையும் தயாராகிவிட்டது. அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள எத்தனித்தபோது இந்த மண்ணை நேசிக்கிற எந்த ஒரு மனிதனையும் உலுக்கிப் போடுகிற அந்த செய்தி வருகிறது. ”தோழர் மாயாண்டி பாரதி காலமானார்” இந்த மண்ணின் விடுதலைக்காக சற்றேரக் குறைய இருபது ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
அப்படி ஒருமுறை சிறைப் படுத்தப் பட்டபோது அத்தோடு விதிக்கப் பட்ட அபராதத் தொகையான ஐம்பது ரூபாயைக் கட்ட சொத்து இருக்கிறதா என்று நீதிபதி கேட்டபோது மீனாட்சியம்மன் கோயிலும், மங்கம்மா சத்திரமும் தனது தகப்பன் சொத்தென்றும், பாரத நாடு தனது பாட்டனார் சொத்தென்றும் கூறியவர். அதற்காக சிறையில் சித்திரவதை பட்டவர்.
தோழர் மாயாண்டி பாரதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று கூறி இவர் அளித்த சான்றை ஏற்று ஒருவருக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கியுள்ளார் நீதியரசர் சந்துரு.
இருபது வருடங்களுக்கும் மேலாக ஜனசக்தியிலும் பிறகு தீக்கதிரிலும் பணியாற்றியவர்.
ஒரு பை நிறைய மிட்டாய்களோடுதான் வீட்டைவிட்டு வேலைக்கு கிளம்புவாராம். வீட்டு வாசலில் இவருக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டுதான் நகர்வாராம். குழந்தைகளை அப்படி நேசித்தவர்.
மிச்சமிருந்த விரல்களின் எண்ணிக்கையளவு சுதந்திரப் போராட்ட வீரர்களில் இன்னுமொருவரை காலம் களவாண்டுவிட்டது. 
இவர் சார்ந்திருந்த இயக்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களும் ஏற்றுக் கொண்ட ஆளுமை இவர்.
அவர்குறித்த எந்தத் தகவலும் பாடப் புத்தகங்களில் இல்லை.
அந்தத் தியாகப் பெருமகனுக்கு அஞ்சலியையும் வணக்கத்தையும் செலுத்தும் அதே வேலையில் அவரை எங்களால் இயன்ற அளவு கொண்டு சேர்க்க அவர் குறித்து தெரிந்தவர்கள் பங்களிப்பை அளித்துதவுமாறு வேண்டுகிறோம்

குறும் படம் .

கரம்பக்குடி த .மு.க.ச மாநாட்டில் ஒரு குறும் படம் பற்றி கேள்விபட்டேன்.

படம் தொடங்கியதும் ஒரு பெண் காரைத்தட்டில் இந்தப்புறமிருக்கும் மண்ணை அந்தப்பக்கம் கொட்டுகிறார். மீண்டும் இந்தப் பக்கம் வருகிறார். மீண்டும் மண் அள்ளுகிறார். மீண்டும் அந்தப் பக்கம் சென்று கொட்டுகிறார்

5 நிமிடம் 11 நொடிகள் ஓடும் குறும்படத்தில் 5 நிமிடங்கள் தொடர்கிறது.

அலுப்பும் எரிச்சலும் நம்மை அப்பிக் கொள்ளும் புள்ளியில்  எழுத்து இப்படி ஓடுகிறது,

"ஒரே வேலையை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து பார்க்கவே அலுப்பும் எரிச்சலுமாய் இருக்கிறதல்லவா...

தலைமுறை தலைமுறையாக மாற்றமே இல்லாமல் இவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்."

நெற்றியில் அறைகிறது.


Monday, February 23, 2015

கவிதை 28அவர்களது தேடலின் இடையே உள் புகுந்து தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை.
எங்கேனும் என்னைக் காண்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்.

மழலையிசை

மழலை மாறாத நான்கு வயது குழந்தையை ஐம்பது வயதில் ஜானகி அம்மா பாடிய பாடலை அட்சரம் பிசகாமல் பாட வைக்க நீங்கள் கொடுத்த பயிற்சிக்கும் பட்ட சிரமங்களுக்கும் தலை வணங்குகிறேன்.

ஆனால் அதை குழந்தையின் மெச்சூரிட்டி என்பதை நிராகரிக்கிறேன்.

இவ்வளவு பயிற்சியும் அர்களது மழலை வழி கசிந்திருக்குமானால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

அவர்களின் திறமையை வெளிக் கொணர்கிறோம் என்ற பெயரில் அவர்களது மழலையை குழந்தைமையை கொல்வது எப்படி சரியாகும்.

அவர்களது மழலை கொண்டே இதைவிடவும் காத்திரமான இசையை கொண்டுவர முடியும் .

கை ஏந்துகிறேன் ஆனந் சார்

Sunday, February 22, 2015

43


மேட்டுத் தெரு
குப்பனை
சிக்கனக்காரனென்றுதான்
ஊரே சொல்லும்

சந்தைக்கு
நடந்தே போவான்
நடந்தே திரும்புவான்
இரண்டு மணி செலவழித்து
நான்கு ரூபாய் சேமிப்பான்

முக்கால் மணி நேரம் நடப்பான்
முத்து வீட்டில்
பேப்பர் படித்துவிட்டு
மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
சேமிப்பான் பேப்பர் காசை

மாத்திரை போட்டா
பத்தே நிமிடத்தில் பறந்து போகும்
தலைவலி

சொன்னால்
மாத்திரைக்கு ஒரு ரூபாயா என்பான்

பத்துப் போட்டு
மூன்று நாளில் குணமாவான்

நேரம் செலவழித்து
காசை சேமிக்கும்
மேட்டுத் தெரு
குப்பனை

சிக்கனக்காரனென்றுதான் 
ஊரே சொல்லும்

Saturday, February 21, 2015

கையேந்தல்....

நமது மற்றும் நமது குடும்பத்தினரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களின்போது அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இல்லங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். சிலர் ஒரு வேளை உணவினை அவர்களுக்கு வழங்கி மகிழ்கிறோம்.  அந்தக் குழந்தைகளும் நமக்காக பிறந்த நாள் வாழ்த்தோ மணநாள் வாழ்த்தோ பாடி, நமக்காக பிராத்திக்கிறார்கள்.

பல ஆதரவற்றோர் இல்லங்கள் இது மாதிரியான நிகழ்வுகளை தங்களது இல்லங்களில் கொண்டாடி ஆதரவு தருமாறு செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் விளம்பரமே செய்கிறார்கள்.

பிறந்த நாள் மணநாள் தாண்டி சிலர் பண்டிகை நாட்களையும் இத்தகைய ஆதரவற்றவர்களோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

தங்கையின் கணவர் சிவா தனது திருமணத்தையே இப்படி ஒரு இல்லத்தில்தான் கொண்டாட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தார். எனக்கும் அதில் முழுக்க முழுக்க உடன்பாடு என்றாலும் இரண்டு குடும்பங்களிலும் எழுந்த நெருக்கடிகளை எங்களால் சமாளிக்க முடியாமல் போனது.

இப்படி ஒருமுறை எனது தங்கை மகள் நிவேதிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கருங்குளத்தில் உள்ள ஒரு ஆதரவற்ரோர் காப்பகத்திற்கு சென்றிருந்தோம். 

அப்போது, ஆறு வயது குழந்தைகள் சிலர்கூட பாப்பாவை கொஞ்சி வாழ்த்தினார்கள். இந்தக் குழந்தைகளே கொஞ்சப் படவேண்டியவர்கள் அல்லவா என்கிற எண்ணம் அப்போது வந்தது. 

இவர்களுக்கும் பிறந்த நாள் இருக்குமே?

குடைச்சலுக்கு உள்ளானேன். 

நமது பிறந்த நாளை அத்தகைய இல்லங்களில் சென்று கொண்டாடுவதை விடவும் அந்தக் குழந்தைகளின் பிறந்த நாளை அங்கு சென்று கொண்டாடினால் அது இதைவிடவும் பொருளுள்ளதாக அமையுமே என்று தோன்றியது.

முடியுமா?

எத்தனை இல்லங்கள்? எத்தனை குழந்தைகள்?

சாத்தியமா?

முற்சிப்போம் என்று தோன்றுகிறது. முன் முயற்சியாக கருங்குள்ம் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் பிறந்த நாட்களை வாங்குவது என்று முடிவெடுத்திருக்கிறேன். அநேகமாக 50 குழந்தைகள் இருப்பார்கள்.

என்னால் 4 குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட முடியும், நிச்சயமாக தங்கையின் கணவர் சிவா ஒரு ஐந்து குழந்தைகளின் பிறந்த நாட்களை எடுத்துக் கொள்வார், தோழர் இஸ்மாயிலோடும் சுரேஷோடும் பேசினால் அவர்களும் சரி என்பார்கள்.

தோழர்கள் கை கொடுத்தால் இந்த ஒரு இல்லத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஜமாய்த்து விடலாம் என்று தோன்றுகிறது.

அவரவர் அவரவர் பகுதியில் விரித்துச் சென்றால் ...

தோழர்கள் இருக்கிறார்கள்...

தொடங்க இருக்கிறேன். 

Friday, February 20, 2015

அழைப்பு 06


நாளை மாலை நாகையில் பேசுகிறேன்.

ஈரம்...

புத்தகக் கண்காட்சியிலிருந்து ஒருவழியாய் ஊர் வந்து சேர்ந்த அன்று பேருந்திலிருந்து
இறங்கும்போது பக்கத்து இருக்கை தோழரிடம் மன்னித்துக் கொள்ள வேண்டினேன். நியாயமாகப் பார்த்தால் பேருந்திலிருந்த அனைவரிடமும் மன்னிப்பைக் கோரியிருக்க வேண்டும்.

இருமி இருமியே அனைவரது தூக்கத்தையும் கெடுத்திருந்தேன்.

" விடுங்க சார்.இதுல என்ன இருக்கு. இவ்வளவு இருமல். நெஞ்செல்லாம்  புண்ணாகியிருக்கும். விடிஞ்சதும் டாக்டரப் பாருங்க.நெஞ்சுல கவம் போல. அசால்டா உட்டுடாதீங்க" என்றார்.

காலங்காத்தால கண்கள சுரக்க வைக்கிறாங்க.

Tuesday, February 17, 2015

விமர்சனம் என்பது வேறு

ஆதிக்கமிக்க இடை சாதியில் பிறந்து அதன் அடையாளங்களை முற்றாய் துறந்து இன்னும் சொல்லப் போனால் அதற்கு நேரெதிராக பீக்கதைகள் போன்ற படைப்புகளை மணக்க மணக்க கொடுத்ததைத் தவிர வேறென்ன தவறு செய்தார் பெருமாள் முருகன்.
எழுதியவரே திரும்பப் பெருவதோ... ஆதிக்க வன்முறையும் காவல்துறையும் அத்துமீறி எங்கள் அலமாரிகளை சூறையாடுவதோ வேண்டுமானால் நடக்கலாம். வாசித்த படைப்புகளை நெஞ்சில் சுமக்கிறோம். அதை யாரால் என்ன செய்ய முடியும்?
தோழர்.நெய்வேலி பாரதி குமார் காக்கையில் ஒரு படம் பற்றி எழுதியிருந்தார்.
அந்த நாட்டின் பாசிசத் திமிர் பிடித்த ஆளும் வர்க்கம் தங்களுக்கு எதிரான நூல்களை கொளுத்துகின்றனர். அப்போது சிலர் கூடி நூல்களைக் காப்பாற்ற முடிவெடுக்கின்றனர். புத்தகங்களைக் காப்பாற்ற முடியாது என்று தெரிய வருகிறது. உடனே ஒரு காரியம் செய்கின்றனர். ஆளுக்கொரு நூலை மனப்பாடம் செய்கின்றனர். அந்த நூலின் பெயரையே தங்களது பெயராக்கிக் கொள்கின்றனர். மறந்து போகாமல் இருக்க தினமும் தினமும் சொல்லிப் பார்த்து பாதுகாக்கின்றனர்.
மரணத்திற்குள் அடுத்த ஒருவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கின்றனர். இப்படியாக கைமாற்றி கைமாற்றி காலங்கள் நகர்கிறது.
என்றாவது ஒரு நாள் நிலைமை மாறுகிறபோது இவர்கள் சொல்ல சொல்ல அந்த நூல்களை அச்சேற்றிவிடலாம் என்பது அவர்களது நம்பிக்கை.
போகிறேன் என்கிறார், திரும்பப் பெருகிறேன் என்கிறார் தோழன் பெருமாள் முருகன். திரும்பி வருவார் என்பது எனது திடமான நம்பிக்கை.
காலமும் நிச்சயமாய் மாறும்.
வரும்போது தமிழ் வாசகன் மனப்பாடமாய் உங்கள் படைப்புகளை மட்டுமல்ல தாக்கப்படும் யாருடைய படைப்பையும் தருவான். ஈஜின் நிலவறை நூலகம் மாதிரிவாசகத்தளம் உங்களது படைப்புகளைப் பாதுகாத்து தரும்.
இரண்டு விஷயங்கள்,
1) நாடறிந்த பெருமாள் முருகனையே இந்தப் பாடு படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் என் போன்ற எந்த அடையாளமுமற்றவர்களிடம் வரும் போது தற்கொலை செய்கிறவரை எங்களை விடமாட்டார்கள். என்ன செய்யப் போகிறோம்?
2) ஏன் பெருமாள் இப்படி ஒரு முடிவெடுத்தீர்கள்? அயோக்கியர்களும் பாசிஸ்டுகளும் ஒன்றை பிழை என்று சொன்னால் சத்தியமாய் அது சரியான ஒன்றாய்தானே இருக்கும்?
பின் குறிப்பு: பெருமாள் முருகன்மீதான அல்லது யார்மீதுமான யாருடைய விமர்சனத்தையும்மரியாதையோடு கையேந்தி வரவேற்கவே செய்கிறோம்.

Monday, February 16, 2015

குட்டிப் பதிவு 20

அணைகள் கட்டுவேன், தொழிற்சாலைகள் தொடங்குவேன், கல்லூரிகளை கொண்டு வருவேன் என்பதாக நகர்ந்து கொண்டிருந்த பள்ளிக் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டியில் இறுதியாய் வந்த குழந்தை பேசினாள்,
" நான் முதல்வரானால் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் "

வெறியன் வெறியை மட்டுமே...

”இப்படி ஒரு மோசமான பதிவிற்கு நீங்கள் எப்படி லைக் போடலாம். ரொம்ப வருத்தமா இருக்கு தோழர்” என்பதாக முகநூலில் தோழர் Sampath Srinivasan அவர்களிடமிருந்து வந்த தனிச் செய்தி என்னை ஒருகணம் அசைத்துப்போட்டுவிட்டது. காரணம் என்மீதும் என் எழுத்து மீதும் மிகப் பெரிய அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர் அவர். நான் அதை விடவும் கூடுதலான மரியாதையையும் அன்பையும் அவர்மீது வைத்திருப்பவன்.

விஷயம் இதுதான்,

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்த ஊழியர்களுக்கு சுகம் அளிப்பதற்காக இங்கிருந்து இஸ்லாமிய பெண்களை அனுப்புகிறமாதிரி செய்தியையும் கேவலமான ஒரு புகைப் படத்தையும் யாரோ சில விஷமிகள் வெளியிட்டிருந்தனர்.

அதை எதிர்க்கிறேன் என்று உடற்பயிற்சியில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் பெண் ஊழியர்களின் படத்தை கொச்சையான முறையில் போட்டு கேவலமாக சிலர் பகிர்ந்திருந்தனர். அந்தப் படத்தை போட்டு இந்தக் கேவலத்தை தான் எதிர்ப்பதாகவும் மதவெறியர்கள் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தோழர் மன்சூர். செ.ப.மு.] அவர்கள் மிக நேர்மையோடும் அக்கறையோடும் இட்டிருந்த பதிவிற்கு நான் லைக் இட்டிருந்தேன்.

மட்டுமல்ல, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு தீர்வாகாது என்றும் பின்னூட்டம் இட்டிருந்தேன்.

அந்தப் படத்தை மட்டும் பார்த்துவிட்டு எனது லைக்கை பார்த்ததும் தோழர் சம்பத் அவர்கள் பதறி இருக்கிறார்.

இப்படி பட்ட தோழர்கள் நெறிப்படுத்த இருக்கும்போது நாம் தவறிழைக்க வாய்ப்பில்லை. நாம் கவனிக்கப் படுகிறோம் என்பதும் நம்மிடம் எதிர்பாக்கிறார்கள் என்பதும் நமது பொறுப்பினை கூட்டுகிறது.

என்னைப் பொறுத்தவரை தோழர்கள் சம்பத் மற்றும் மன்சூர் இருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது எந்த மதத்தோடும் எனக்கு சம்மதம் கிடையாது என்பதில் எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதே நேரத்தில் எனக்குள்ள இந்த உரிமைபோலவே எவர் ஒருவருக்கும் ஏதோ ஒரு அல்லது பல தெய்வங்களை வழிபடவும், ஏதோ ஒரு மதத்தை சார்ந்திருக்கவும் உள்ள உரிமையில் தலையிடவோ கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமை இல்லை.

மத நம்பிக்கையில்தான் நாம் உள்ளே நுழைய முடியாதே தவிர அது வெறியாக மாறும் பட்சத்தில் நாம் கேள்வி கேட்டே ஆகவேண்டும், அது எந்த மத வெறியாயினும்

இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கோ , கிறிஸ்தவர்களுக்கோ விரோதிகள் அல்ல. அப்படியேதான் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் வெறியன் இந்துவாயினும் இஸ்லாமியன் ஆயினும் கிறிஸ்தவன் ஆயினும் அவன் வெறியன் மட்டுமே. இவர்களுக்கு மதம் என்பது கிடையாது.

கிறிஸ்தவன் சிலுவையை நேசிக்கிறான், இஸ்லாமியன் பிறையை நேசிக்கிறான், இந்து சூலத்தை நேசிக்கிறான், வெறியன் வெறியை மட்டுமே நேசிக்கிறான்.

இதை இந்துவும் இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் புரிந்துகொண்டு ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும

Sunday, February 15, 2015

குட்டி பதிவு 19

அணில் கடித்த கொய்யான்னா ருசியாத்தானிருக்கும் என்று சொன்ன பொடிசிடம் இன்னொரு பொடிசு சொன்னது "ருசியான கொய்யாவதான் அணில் கடிக்கும்"

Saturday, February 14, 2015

என் மண் மீதான...

நான் மகிழ்ந்து பறக்கிறேன்.

இன்று ஆம் ஆத்மி பதவியேற்கிறார்கள்.

முதலில் தில்லி மக்களுக்கும் ஆம் ஆத்மிக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

”நான் தில்லி வாக்காளனாயிருக்கும் பட்சத்தில் எனது வாக்கு ஆமாத்மிக்கு”

என்று ஆறாம் தேதி ஒரு பதிவிட்டிருந்தேன். சில நண்பர்கள் என்னோடு பேசினார்கள். சிலர் தங்களது கோவத்தைக்கூட வெளிப் படுத்தினார்கள். ஆம் ஆத்மி என்ன செய்துவிடும் என்ற நம்பிக்கையில் அப்படி ஒரு நிலைத் தகவல் என்றார்கள். சிலர் மகிழ்ந்தார்கள்.

இப்பவும் ஆம் ஆத்மி என்ன செய்துவிடும் என்று எனக்குத் தெரியாது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா தோற்க வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். பாரதிய ஜனதாவை மக்கள் தோற்கடிப்பதற்கு அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் ஆம் ஆத்மி.

மற்றபடி ஏன் காங்கிரசை நீ ஒன்றும் சொல்வதேயில்லை என்றுகூட இரண்டொரு நண்பர்கள் கேட்டார்கள். விடுங்க தோழர் பாவம் அவர்கள்என்பதே எனது பதிலாக இருந்தது.

பாரதிய ஜனதா தோற்க வேண்டும் என்பதற்கு நம்மிடம் ஏராளம் காரணங்களிருக்கின்றன.

அதானி மற்றும் பெரு முதலாளிகள் சார்ந்த அவர்களது பொருளாதார நிலைப்பாடுகள் இவர்கள் காங்கிரசுக்கு மாற்று அல்ல என்பதை அவர்கள் கட்சிக் காரர்களையே உணர வைத்தன. விமான எரிபொருளின் விலை களைக்கொல்லி மருந்தடிக்கும் எந்திரத்தின் எரிபொருள் விலையைவிட குறைவாகுமளவிற்கான அவர்களது செல்வந்தச் சார்பு சென்ற தேர்தலில் அவர்களுக்காக தபால் ஓட்டுகளை சேகரித்த என் சக ஆசிரியர்கள் இருவரை வருத்தப் பட வைத்திருக்கிறது. அதில் ஒருவருக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கிருக்கிறது. இந்த முறை உங்க ஆளுங்க 500 ஓட்டு வாங்கினாலும் அதில் நிச்சயம் எங்க வீட்டு ஓட்டு ரெண்டும் இருக்கும் என்கிறார்.

போக இவர்களது மத அரசியல் மிக அசிங்கமானது.

இளவரசனும் திவ்யாவும் சேர்ந்துவாழ ஆசைப்பட்டால் இளவரசன் சாகவேண்டும்தான் எனில் இருவரையும் எப்படி இந்துவாக பார்ப்பது?

இங்க பேசறீங்களே. பாகிஸ்தானப் பத்திப் பேசுவீங்களா? பங்களாதேஷைப் பற்றி பேசுவீர்களா? என்றெல்லாம் எதிர் கேள்வி வருகிறது.

என் மண் குறித்த அக்கறையும் கவலையுமே எனக்கு முதன்மையானது. அங்குள்ள மதச் சார்பற்ற சக்திகள் அதை செய்கிறார்கள் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். போக “லஜ்ஜா” எழுதியதற்காக படாத பாடுபட்ட தஸ்லிமா நிரந்தரமாக இந்தியாவில் தங்க முடியவில்லை. அங்குள்ள வெறியர்களுக்கு எதிராக எழுதிய அவரை இந்தியா ஏன் பாதுகாக்க முடியவில்லை? அதுவும் அவர் இருக்க விரும்பியது கொல்கத்தாவில் என்பதும் அதுவே சாத்தியப் படவில்லை என்பதும் துயரத்திற்குரிய செய்தியல்லவா?

போன.சட்டமன்ற தேர்தலில் பெற்ற அதே சதவிகித வாக்குகளை பிஜேபி தக்கவைத்திருக்கிறார்களே என்கிறார்கள். இருக்கட்டும். தோல்வியடைந்த ஒவ்வொரு தொகுதியிலும் பி.ஜே.பி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தாலும் மகிழவே செய்வேன்.

விகிதாச்சாரம் பார்த்தால் கம்யூனிஸ்டும் அண்ணா திமுகவும் சென்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஏறத்தாழ ஒரே சதவிகித வாக்குகளைதான் பெற்றிருந்தன. எண்ணிக்கையில் வித்தியாசப் படவில்லையா?

போனமுறை பொறுப்பில் இருந்த போது தில்லி மக்களுக்கு நிறைய செய்ய முயன்றிருக்கிறார்கள் ஆம் ஆத்மி. தெருவில் குளிரில் இருந்தவர்களுக்கு பயனற்ற பேருந்துகளை இருப்பிடமாக்கியது என்னைக் கவர்ந்த ஒன்று.

நிறைய வேலை இருக்கிறது அவர்களுக்கு. போலீசை வாங்க வேண்டும்.

போக ஸ்டண்டு மாதிரி சில விசயங்களை கெஜ்ரிவால் தவிர்க்க வேண்டும். அவரது நேரம் விலை மதிப்பு மிக்கது . அதை சிக்னல்களிலும் புறநகர் ரயில்களிலும் அவர் வீணடிக்கத் தேவை இல்லை. சிக்கனத்தை எத்தனையோ வகைகளில் காட்டலாம்.

உங்களது செயல்பாடுகள் மதவெறி சக்தியை தேசம் முழுக்கவும் வீழ்த்த உதவும் என்பதை ஆமாத்மி உணர வேண்டும்.

மீண்டும் அவர்களுக்கென் வாழ்த்துக்கள்.

Friday, February 13, 2015

நிலைத் தகவல் 67

ஸ்ரீரங்கம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாத்துரை எனது மாணவர். ஒழுங்காப் படிச்சு வேலைக்குப் போய் சம்பாதித்து தன் பெண்டு தன் பிள்ளை என்று சுகமாக வாழ்ந்திருக்க வேண்டியவன்.
மக்களுக்கான போராட்டங்கள், போலீஸ் தடியடி, சிறை என்று அவனை மக்களுக்கான போராளியாக மடை மாற்றியதில் என் பங்கும் உண்டு. என்னைவிட 6 வயதே இளைய என் மாணவன்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஒரு சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வந்திருந்தபோது “ஒழுங்கா பாடம் நடத்தாம அதையும் இதையும் சொல்லி என்னை இப்படி அலைய விட்டுட்டியே அண்ணா” என்றான்.
ஆசிரியர் பணிக்கு வந்ததற்கான பயனை அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.
தனக்கோ குடும்பத்தில் யாருக்கோ திடீரென மருத்துவ செலவு 2000 ரூபாய் அளவு வருமெனில் கட்சியையோ அல்லது கட்சி ஊழியர்களையோ சார்ந்தே நிற்க வேண்டியவன்.
அதுவும் பெருமையாகத்தான் இருக்கிறது.
அவனால் ஆளுக்கு 2000 ரூபாய் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.
இப்படி மக்களுக்குக்காக போராடும் என் மாணவன் ஒருவனும் தேர்தல் களத்தில் நிற்கிறான்.
தேர்தலில் நிற்பவர்களில் எவன் யோக்கியன் என்று கேட்கும் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்.
சுரண்டத் தெரியாத ஒருவனும் களத்தில் இருக்கிறான் என்பது அவர்களின் தகவலுக்காக.

Thursday, February 12, 2015

நிலைத் தகவல் 66

நேற்று காலை பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்திற்காக ஓட்டுநர் திடீரென்று ப்ரேக் போடவே பெரும் பகுதி பயணிகள் ஏதோ ஒன்றில் மோதிக் கொண்டோம். எனது கண்ணாடி விழுந்துவிட்டது. நான் இருக்கைகளுக்கு அருகே நடப் பட்டிருக்கும் கம்பம் ஒன்றில் பலமாக மோதிக் கொண்டேன். இடது கண் அடிபட்டுவிட்டது.

பலபேருக்கு கை வலி, சிலர் முன்னிருக்கை கம்பியில் மோதிக் கொண்டதில் நெற்றியில் அடி. வேறு ஒன்றும் பெரிதாயில்லை. அவரவர் இறங்கி அவரவர் வேலைக்கு சென்றுவிட்டோம்.

வலி இருக்கவே மாலை பெரம்பலூர் வாசன் ஐ கேர் போனேன். பரிசோதித்த மருத்துவர் ஒன்றும் இல்லை சார் பயப்படாதீங்க என்று சொல்லிக் கொண்டே சரி செய்தார்.

அப்போது அவர் கேட்டதை சொல்லவே இந்தப் பகிர்வு.

ரெண்டு கண்ணுலயும் அறுவை செய்திருக்கீங்க போல சார். யார் செய்தது?

நான் டாக்டர் ரமேஷ் என்றேன். வலது கண்? என்றார். அதற்கும் டாக்டர் ரமேஷ்தான் சார் என்றேன்.

மிக மிக நேர்த்தியான அறுவை, wonderful piece of surgery என்றார்.

என்ன சொல்வது,

அடுத்த மருத்துவர் செய்த நேர்த்தியான அறுவையை பாராட்டும் இன்னொரு மருத்துவரின் கஞ்சத்தனமற்ற பெருந்தன்மையையா?

அல்லது,

17 ஆண்டுகளுக்குப் பிறகும் தான் செய்த அறுவை சிகிச்சை மற்றொரு தரமான மருத்துவர் பாராட்டும்படி செய்த எனக்கு பார்வையை மீண்டும் பெற்றுத் தந்த மருத்துவர் ரமேஷ் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையையா?

ரெண்டும்தான்.

Wednesday, February 11, 2015

நிலைத் தகவல் 65

ஆயிரம்தான் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் H.ராஜா அவர்கள் பொறுப்புமிக்க ஒரு தலைவர் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். சோதனை என்னவென்றால் இதை ராஜா அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்தத்திலோ செயல்பாட்டிலோ உங்களுக்கு கருத்திருப்பின் சொல்லுங்கள். அதற்கான உங்களது உரிமையை மறுக்கவில்லை.

உளறுவதை அருள்கூர்ந்து நிறுத்துங்கள்.

தந்தை பெரியார் என்பவர்களுக்கெல்லாம் அவர்தான் தகப்பனா என்பது மாதிரி உளரியிருக்கிறீர்கள்.

ஒன்று கேட்கவா நீங்கள் உங்கள் கட்சியின் மரியாதைக்குரிய பெண்ணுறுப்பினர் எவரையும் தங்கை என்றோ சகோதரி என்றோ விளித்ததே இல்லையா?

நிச்சசயமாய் இருக்கவே இருக்கும்.

எனில் உங்கள் இருவருக்கும் ஒரே தந்தைதானா என்று யாரேனும் உளரினால் அவருக்கும் எதிரான குரல்தான் இந்தப் பதிவு.

கவிதை 27

விளங்கவில்லை 
விளங்கிக் கொள்ளாத எனக்கும்
பெரும்பான்மை விளங்கிக் கொண்டோருக்கும்

Tuesday, February 10, 2015

கவிதை 26

தன் இருத்தலை நிறுவ 
ஒரே ஒரு சொட்டேனும் 
இருட்டு தேவைப்படுகிறது 
வெளிச்சத்திற்கு.

Monday, February 9, 2015

குட்டிப் பதிவு 18

இன்று டோனிக்கு தடுப்பூசி போட வேண்டிய நாள்.
வெட்னரி மருத்துவருக்கு போன் செய்தேன்.
யாரென்று கேட்டவரிடம் எட்வின் என்றேன்
அவரால் என்னை யாரென்று புரிந்துகொள்ள முடியவில்லை என்பது தெரிந்ததும் சமயபுரம் ஆசிரியர் என்கிறேன்.
அப்போதும் அவருக்கு நான் யாரென்று விளங்கவில்லை.
கிஷோரை.,கீர்த்தனாவை, விக்டோரியாவை யாரையும் அவருக்கு தெரியவில்லை.
இறுதியாய் சார் நான் டோனியோட அப்பா என்றதும்,
" சார், வேற நம்பர்ல இருந்து வந்ததால குழம்பிட்டேன். சாரி, நான் டோனினு சேவ் செய்திருக்கேன். 12மணிக்கு வரேன் சார்"
என்கிறார்.

குட்டிப்பதிவு 17

வண்டியை எடுக்கும்போது சற்றே தடுமாறிய என்னைப் பார்த்து குரைத்தான் டோனி.

வண்டியை நிறுத்திவிட்டு அவனை தடவிக்கொண்டே "ஒன்னுமில்ல சாமி பயப்படாத " என்ற என்னிடம் " என்ன உளறுறீங்க என்ற விட்டுவிற்கு புரியாது " பார்த்து சூதானமா போப்பா" என்று குரைத்த டோனியின் பாஷை.

Sunday, February 8, 2015

கொம்பன்கள் வரைந்த கோடுகளைத் திமிறோடு தாண்டிப் படரும் கவிதைகள்...

இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த விதமான சட்டத்திற்குள்ளும் கவிதை ஒருபோதும் சிக்கிக் கொள்வதில்லை. எத்தகைய எல்லைக் கோட்டையும் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் தாண்டி அசைந்து சிரிக்கவே செய்யும் கவிதையின் கொழுந்திலைகள்.

தாங்கள் வரைந்து வைத்திருக்கிற வரம்புகளுக்குள் சிக்காத கவிதைகளைக் கண்டதும் சில கவிதைக் காரியதஸ்தர்கள் இந்தக் கவிதைகள் அடங்குகிற மாதிரி இந்தக் கவிதைகளைச் சுற்றி கோடு கிழிப்பார்கள். பிறகு அப்படியே அவர்கள் வரைந்த கோட்டினை ரசித்தபடியே அந்தக் கவிதைகளை ரசிக்கிற மாதிரி பாசாங்கு செய்வார்கள்.

மறு வாசிப்பில் இந்தக் கொம்பர்களின் கோடுகளைக் கடந்து படர்ந்து நம்மை மகிழ்வித்தபடியே இந்தக் கோட்டோவியர்களைப் பார்த்து பகடி செய்யும் நல்ல கவிதைகள்.

வசீகரமான வார்த்தைகளும் நளினமாய் வளைந்து நெளியும் கைவண்ணமும் வாய்த்தவர்கள் விஷயங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாதவர்களாய் தங்களது கவிதைகளைத் தொகுத்து தொகுத்து குவிக்கிறார்கள்.

மறுபுறம் வடிவங்களைப் பற்றி கவலைப் படாமல் ஆழமான விஷய ஞானத்தோடு எழுதுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு உழைக்கிற மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுத ஒருபோதும் மனம் வருவதேயில்லை.

இன்னும் சிலர் உழைக்கிற மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக வண்டி வண்டியாக எழுதி குவிக்கிறார்கள்.

இந்தச் சூழலில் நீரை மகேந்திரன் இந்தக்

கொம்பன்கள் வரைந்த கோடுகளைத் திமிறோடு தாண்டிப் படரும் என் உழைக்கிற மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான தன் கவிதைகளை தொகுத்து “அக்காவின் தோழிகள்” என்றொரு கவிதை நூலினைக் கொண்டு வந்திருக்கிறான்.

நாகை மாவட்டத்து கழனிகளும், கன்மாய்களும், மந்தைகளும் இவனுக்கு வண்டி வண்டியாய் கவிதைக்கான சரக்குகளை அள்ளித் தந்திருக்கின்றன.

மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பது கூட இருக்காது இவனுக்கு. இவ்வளவு சின்னப் பிள்ளைக்கு,

“இறங்க வேண்டிய
நிறுத்தமென்பது
சேரவேண்டிய இடமல்ல
அங்கிருந்தும் தொடங்குகிறது
மற்றொரு பயணம்”

என்று எப்படி எழுத முடிகிறது என்று ஆச்சரியமாயிருக்கிறது. வாழ்வைப் பற்றிய எவ்வளவு சரியான தெளிவு. வாழ்வைப் பற்றி ஐம்பது கடந்த நமக்கு முப்பதின் பேனா எழுத்துக் கூட்டி பாடம் நடத்துகிறது.

நானொரு தேநீர்ப் பிரியன். தேநீர் பருக எனக்கு எந்தக் காரணமும் தேவை இல்லை. ஆனாலும் நாம் ஏன் இப்படி தேநீர்ப் பித்துப் பிடித்து இப்படி அலைகிறோம் என்று பல நேரம் நினைப்பதுண்டு. ஆனால் இந்தத் தேநீர் பித்துக்கான காரணங்களுக்குள் ஒரு கவிதையை என்னால் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தரிசிக்கவே முடியவில்லை. ஆனால் மகேந்திரனால் இதை கவிதைப் படுத்த முடிகிறது. அந்தக் கவிதையை,

“எல்லா மனநிலைக்கும்
பசுந்தேயிலையின்
சுவை மாறுவதேயில்லை”

என்று முடிக்கிறான். இலக்கிய ஜாம்பவான்கள் ரொம்ப விட்டேந்தியாக போகிற போக்கில் இவன் எழுதிய “பசுந்தேயிலையின் சுவை” படிமமா உவமையா என்று பிய்த்துக் கொள்ளட்டும். எனக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. எனது கடைசித் தேநீர் கோப்பையும் இவனது இந்தக் கவிதையால் நுரைத்திருக்கும்.

”தேவனே” என்றொரு கவிதை. தேரில் வரும் சவேரியாரை இந்திரா காலனி முக்கத்தோடு நிறுத்தி வந்த வழியே திருப்பி அனுப்பும் சாதி அரசியலை ஆழமாக உணர்த்துகிறது. கிறிஸ்தவத்தை ஏன் விமர்சிக்க மறுக்கிறீர்கள் என்று எதையும் வாசிக்காமலே வசைபாடும் நண்பர்களுக்கு இந்தக் கவிதையை நான் சிபாரிசு செய்கிறேன்.

“ குழந்தைகள் அமராத
விலங்கின் இருக்கை
வெறுமனே சுற்றுகிறது
குடை ராட்டினத்தில்”

குழந்தைகளற்ற வெறுமையை எவ்வளவு அழகியலோடு பதிகிறான் இவன்.

“இஸ்மாயில்” என்ற ஒற்றை கவிதை போதும் எனக்கு இந்த நூலைக் கொண்டாட.

“இறங்க வேண்டிய
நிறுத்தமென்பது
சேரவேண்டிய இடமல்ல
அங்கிருந்தும் தொடங்குகிறது
மற்றொரு பயணம்”

என்ற இவனது வரிகளை இவனுக்கு நினைவு படுத்துகிறேன். “அக்காவின் தோழிகள்” அடுத்த நூலுக்கான இவனது பயணத்தின் தொடக்கமாக அமைய வேண்டும்.

கவிதை குறித்த நல்ல புரிதலுள்ள தம்பி விஷ்ணுபுரம் சரவணன் இவனது அறைத்தோழன் என்பது இருவருக்குமான வரம். இவர்களுக்கு இடையேயான கவிதை மற்றும் இலக்கியம் குறித்த தொடர் உரையாடல்கள் காத்திரமான படைப்புகளை இருவரிடமிருந்தும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையே மகிழ்ச்சியைத் தருகிறது.

மகேந்திரன் என்னை அப்பா என்று அழைக்கிறான். அதற்கு நான் என்னை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

( அகநாழிகை வெளியீடு இது)

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...