Sunday, March 4, 2018

65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2018


வேலைக்குப் போவது, சம்பாதிப்பது, செலவு செய்வது என்ற சுழற்சியில் அந்த மனிதருக்கு அயற்சி வருகிறது. இவற்றைத் தொடர்வதற்காக அல்ல தான் பிறப்பெடுத்தது என்று உணர்கிறார். இந்தச் சமூகத்திற்கு எதையாவது உருப்படியாய்  செய்யவேண்டும் என்று படுகிறது. இருக்கிற வேலையை ராஜினாமா செய்கிறார். அதன்பொருட்டு தனது கைக்கு வந்த பணத்தோடு சேரவேண்டிய  புள்ளியின் இலக்கு ஏதுமின்றி ராஜஸ்தானின் ஏதோ ஒரு சலனமற்ற கிராமத்திற்கு வந்து சேர்கிறார். 

அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவரும்கூட.

அந்தப் பகுதியில் பெருவாரியான மக்கள் மாலைக்கண் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கான மருந்துகளைத் தருவித்து அவர்களுக்கு வழங்குகிறார்.  ஆனால் மருந்துகள் தமக்குத் தேவை இல்லை, தமக்கான பிரதானத் தேவை அவை அல்ல என்கிறார்கள். மாலைக்கண் நோயைவிட ஒரு பெரும் நோயினால் தாங்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கூறிய அந்த மக்கள்தாகம்என்ற கொடும் நோய் தங்களைத் தாக்கி இருப்பதாகவும்தண்ணீர்தருமாறும் ஊனுருக உயிர்க் கசிய கையேந்தி நிற்கிறார்கள்.

அந்தப் பகுதி மக்கள் ஒருகுடம் குடி தண்ணீரைக் கொண்டு வருவதற்காக பத்துமணி நேரம் நடக்கவேண்டியுள்ள அவல நிலையைக் காண்கிறார். தினமும் குளிக்க வேண்டும் என்பது அவர்களது கனவாகவும் பண்டிகைக்குப் பண்டிகை அதாவது வருடத்திற்கு இரண்டுமுறை குளிப்பதுகூட பெரும் செல்வந்தர்களுக்கே வாய்க்கும் வாய்ப்பென்பதையும் உணர்கிறார்.

நிலங்கள் வறண்டு போனதால் விவசாய வேலையின்றி இளைஞர்களும் தொழிலாளிகளும் பிழைப்புக்காக எங்கெங்கோ புலம்பெயர்ந்து போயிருக்கும் அவலத்தையும் உணர்கிறார்.

ஏதேதோ செய்கிறார். தண்ணீரால் அந்தக் கிராமம் ஆசீர்வதிக்கப் படுகிறது.  தாகம் தீர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை அந்தப் பகுதியின் சின்னப் பிள்ளைகள் முதல்முறையாக உணர்ந்தார்கள். தீபாவளிக்குத் தீபாவளி குளித்துக் கொண்டிருந்த மக்கள் தினந்தோறும் குளிக்க ஆரம்பித்தனர். வயல்களும் விளைநிலங்களும் மீண்டும் உயிர் பெற்றன. புலம் பெயர்ந்து போயிருந்த இளைஞர்களும் விவசாயிகளும் ஊர் திரும்பினர்.

வறண்டு, வெடித்து, இளைஞர்களையும் விவசாயிகளையும் தொலைத்திருந்த கிராமம் கிராமமாக அந்த மனிதர் பயணித்தார். அவர் போகிற ஊரையெல்லாம் தண்ணீர் தந்து ஆசீர்வதித்தார். அவர் போகிற மண் எல்லாம் தமது குழந்தைகளை அள்ளி அணைத்தன.

அதிசயங்களைச் செய்வதற்கு அவர் ஒன்றும் அவதாரப் புருஷரெல்லாம் இல்லை. அவர் ஒரு சாதாரண மனிதர். எதைச் செய்ய வேண்டுமோ, நாம் எதைச் செய்யத் தவறி இருக்கிறோமோ அந்த எளியக் காரியங்களைத்தான் அந்த மனிதர் வெற்றிகரமாக செய்துகொண்டிருந்தார்.

வறண்ட பூமிதேடி நடந்தார். கால்பட்ட இடமெல்லாம் நீர்பற்றிக் கொண்டது. எனவே ராஜேந்திரசிங் என்ற அந்த மனிதர்தண்ணீர் மனிதர்என்று அழைக்கப் பட்டார்.

அவர் என்ன செய்தார் என்பதை இறுதியில் பார்ப்போம். அவர் மிகச் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார்.

தெற்காசியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மக்கள் தண்ணீருக்காக வேறு நாடுகளுக்கு புலம் பெயர வேண்டிய அவசியம் மிகவும் சமீபித்திருப்பதாகக் கூறினார். அவர் கூறுவது உண்மை என்பதையே சமீபத்தில் நமக்கு கிடைக்கும் செய்திகளும் உறுதி செய்கின்றன.

தென் ஆப்பிரிக்காவின்கேப்டவுன்நகரம் வரும் ஏப்ரல் பதினாறாம் நாளன்று (16.04.2018) ‘ZERO WATER CITY’ யாக மாறும் என்ற செய்திதான் அது. உண்மையும் அதுதான். அந்த்த் தேதியில் அந்த நகரம் சுத்தமாய் வறண்டு சொட்டுத் தண்ணீருமற்ற மண்ணாகத்தான் மாற இருந்தது. நினைத்துப் பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது. சொட்டுத் தண்ணீரும் இல்லை என்றால் அந்த பூமி மனிதன் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிடுமே. மனிதன் வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறும் எனில் இருக்கிற மனிதர்கள் என்ன செய்வது?. இப்படியாகக் குழம்பிக்கிடந்த மக்களுக்கு ஒரு தற்காலிக நல்ல சேதி வந்தது.

கேப்டவுனிற்கு அருகில் உள்ளதுகிரபவ்என்ற நகரம். அந்த மக்கள் பத்தாயிரம் கோடி லிட்டர் தண்ணீரை கேப்டவுனிற்கு வழங்க முன் வந்திருக்கின்றனர்.

எவ்வளவுதான் சிக்கனத்தோடு பயன்படுத்தினாலும் கேப்டவுனின் ஒரு நாளையத் தேவை நூறுகோடி லிட்டர். ஒரு நாளைக்கு நூறுகோடி லிட்டர் வேண்டும். பத்தாயிரம்கோடி லிட்டர் வருகிறது. எனில் அந்த்த் தண்ணீரைக் கொண்டு இன்னுமொரு நூறுநாட்களை அந்த மக்களால் சமாளிக்க முடியும்.

அதாவது ஏப்ரல் 16 வரவேண்டிய ஆபத்து நூறுநாட்கள் தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. 

பத்து நாட்களுக்கு முன்னர் ‘THE HINDU” நாளிதழ் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. குஜராத்தில் உள்ள நர்மதா அனையில் கடந்த பதினைந்து ஆண்டுகால சராசரி இருப்பு அளவில் ஏறத்தாழ 45 விழுக்காடு தண்ணீரே தற்போது உள்ளது என்றும் எனவே இந்தமுறை விதைத்தலை நிறுத்தி வைக்குமாறும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் குஜராத் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. சௌராஷ்ட்ரா மற்றும் வடக்கு குஜராத் பகுதிக்கான  குடிநீர்த் தேவையை மட்டுமே இருக்கிற தண்ணீரைக் கொண்டு ஜமாலிக்க முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

ஆயிரம்தான் நமக்கு அவர்களோடு பிரச்சினை என்றாலும் பெங்களூரு நகரமும் ஆக விரைவில் ‘ZERO WATER CITY’ ஆக மாறக்கூடுமென்கிற செய்தியை நம்மால் ரசிக்க முடியாது.   

தமிழ் நாட்டில் ஒரு குடம் தண்ணீருக்காக பத்துக் கிலோமீட்டர் கால்கடுக்க நடக்கவேண்டியுள்ளது என்பதை நம்மால் மறுக்கவே இயலாது.அதுவும் காவேரியில் நமது உரிமையில் ஏறத்தாழ 15 டிஎம்சி தண்ணீரை உச்சநீதி மன்றம் மறுத்திருக்கிற நிலையில் நமது அவலத்தை ஒரு தனி நூலில்கூட அடக்கிவிட முடியாது என்பதே உண்மை.

மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று நிகழுமானால் அது நிச்சயமாகத் தண்ணீருக்காகத்தான் இருக்கும்என்று கவிஞர் வைரமுத்து ஒருமுறை கூறியது எவ்வளவு தீர்க்கதரிசனம் என்பதை இப்போது உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பஞ்சம் எத்தகையது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறோம். அதை எப்படி எதிர்கொள்வது என்பதே நமது பிரதானக் கவலை என்பதும் அதற்கு நமக்கு உரிய பங்கை காவிரியில் போராடிப் பெறுவதும் ஒன்று என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம்.

ஆனால் இந்தப் பூமியின் எந்த ஒரு பகுதி சுத்தமாய் நீரற்று வறண்டு போனாலும் அதற்காகக் கவலைப்படும் மனிதாபிமானம் நமக்கு உண்டு என்பதை உண்மைதான். ஆனால் அதைவிடவும் மிக முக்கியமான ஒன்று உண்டு. உலகின் எந்த ஒரு மூலை நீரற்று வறண்டாலும் அது நம்மையும் பாதிக்கவே செய்யும்.

ஏறத்தாழ 50 நாடுகளில் இருந்து மக்கள் தண்ணீருக்காக புலம்பெயர வேண்டிய ஆபத்து சமீபத்தில் இருக்கிறது என்று ராஜேந்திரசிங் கூறுகிறார். மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று நிகழுமானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற வைரமுத்துவின் கூற்று உண்மையாவதற்குரிய அறிகுறியின் துவக்கப் புள்ளியாக இதைப் பார்க்காவிட்டால் நாம் வீழ்ந்து அழிந்து போவோம்.

வேலை இன்மை, உள்நாட்டுப் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் மக்கள் புலம் பெயர்வது தவிர்க்கமுடியாத வாடிக்கை. ஆனால் குடிதண்ணீருக்காக மக்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய அவலத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

வேலைவாய்ப்பின் பொருட்டான புலம்பெயர்தல் என்பது இருவழிப் பிரயோகம். இவனுக்கு வேலை வேண்டும், அவனுக்கு வேலைக்கு ஆள் வேண்டும். இவன் போகாவிட்டால் அவனுக்கு வேலை கிடைக்காது என்ற நிலையில் இது அந்த மண்ணில் வேலைக்கு ஆட்கள் தயாராகும் வரையில் சாத்தியமானது.

மற்ற காரணங்களின் பொருட்டு புலம்பெயர்தல் மிகவும் சிக்கலானது. இவனது வருகை தனது மண்ணின் நீராதாரத்தையும் அழித்துப் போடுமோ என்ற அச்சமும் எப்படி இவனை பராமரிப்பது என்ற கவலையும் அவனுக்குள் எழுவது இயற்கை.

பலநாடுகள் புலம் பெயர்தலை அனுமதிப்பதில்லை அதுவும் ட்ரம்ப் வந்த பிறகு இது வலுப்பெற்றுள்ளது.

எண்ணெய்க்காகப் போர் தண்ணீருக்காகப் போர் என்பதும் சாத்தியமே.

ராஜேந்திரசிங் செய்த எளிய காரியங்களான,

1)   மறைந்துபோன நீர்நிலைகளை, சிறுசிறு ஓடைகளைக் கண்டடைந்து உயிர்ப்பித்தல்
2)   தடுப்பணைகளை உருவாக்குதல்
3)   மழிபெறுவதற்கான இயற்கை வழியிலான ஏற்பாடுகளைச் செய்தல்
போன்றவற்றை செய்வோம்.

காவிரியில் நமது பங்கை சமரசமற்றுப் போராடிப் பெறுவது நமது உரிமை. ராஜேந்திரசிங் செயத்தைப் பின்பற்றுவது இன்னொரு உலகப்போரைத் தடுப்பதற்கான நமது கடமை.
  


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...