Sunday, September 29, 2013

ஐந்து கேள்விகள் என்னிடம்

 முன் குறிப்பு:

இதை எழுதியும் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அமெரிக்காவின் ஈனத்தனமான , அமைத்திக்கு விரோதமான போக்கு வலுப்பட்டிருக்கிறதே அல்லாமல் மறையவில்லை. எனவே பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் இதற்கு உயிர் இருக்கிறது.

யுகமாயினியில் வெளி வந்து பிறகு “ அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற தொகுப்பிலும் இடம் பெற்றது.

.....................................................................................................................................................................

“ எதற்கெடுத்தாலும் அமெரிக்காவையோ, ஜார்ஜ் புஷ்ஷையோ வம்புக்கு இழுக்காட்டிஒங்களுக்கு தூக்கமே வராதா?” என்று கேட்பவர்கள் ஏராளம்.

தூக்கம் எப்படி வரும்?

நல்ல விலைக்கு அண்ணன் கையில் ஒரு துப்பாக்கியையும், தம்பி கைகளில் இன்னொரு துப்பாக்கியையும், இனாமாய் இருவருக்குமிடையில் பகையையும் விற்பது

ஒவ்வொரு நாடுகளிலும் எழுகின்ற தீவிரவாதக் குழுக்களை அடையாளங்கண்டு, உற்சாகப் படுத்தி, ஒருங்கிணைத்து, அவர்களை அந்தந்த நாடுகளுக்கெதிராக உசுப்பி விடுவது, பிறகு இருவருக்குமிடையில் பஞ்சாயத்து செய்வது, கட்டணமாகாந்தப் பிராந்தியத்தின் வளங்களைச் சூறையாடுவது.

உலகச் சமூகத்தின் அமைதியக் குறிவைத்துக் குலைப்பது.

உலக நாடுகளின், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளின் கனிம, நீர் மற்றுமெண்ணெய் வளங்களை ரவுடியாய் சூறையாடுவது. இத்தனை அயோகியத் தனங்களையும்செய்து கொண்டு “ நானே உலகின் நண்பன், என்னையன்றி சமாதானத் தூதுவன் இல்லை” என்று அரிதாரம் பூசுவது. பூசிய அரிதாரம் களையக் களைய அம்பலப் பட்டாலும், அது குறித்து கவலையே கொள்ளாத ஈனத்தனம் என்று நீளும் அமெரிக்க செயல்பாடுகள்.

நாம் நேசிக்கிற இந்தப் பூமியைச் சுரண்டுபவனை, பூமியின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாய் உறைந்து கிடக்கும் மனித ரத்தத்திற்குக் காரணமானவனை, இர்ராக்கில் சரிந்து கிடக்கும் பிணக் குவியல் பத்தாதென்று ஈரான், பாலஸ்தீனம் என அகோரப் பசியோடு அலைபவனை, குறைந்த பட்சம் சபிக்காமல்கூட விட்டால் வருங்காலத் தலைமுறை நம் கல்லறையில் காறி உமிழாதா?

ஆனால் ஒன்று. வெள்ளை மாளிகை, அதன் விசுவாசிகள், உலகமெங்கும் பரவிக் கிடக்கும் அதன் அடியாட்கள் ( இதில் பலர்பல நாடுகளின் அதிகாரத்திலும் உண்டு ) ஆகியோரை மட்டுமே இலக்கு கொண்டு எதிர்க்கிறோம்.

அமெரிக்க மக்களை எங்கள் சொந்த சகோதரர்களாகவே பார்க்கிறோம்.

ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் இருபத்தி நான்காயிரம் பேர் உலகம் முழுவதும் உயிர் வாழத் தேவையான உணவைப் பெற முடியாமல் உயிரிழந்து வருகிறார்கள்” என்று பட்டினியைத் தடுப்பதற்கான சர்வதேச நிறுவனத்தை மேற்கோள் காட்டி கூறுகிறார் ஜான் பெர்கின்ஸ் தனது “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூலில்.

இராக் போருக்காக 87 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிடுகிறது. ஆனால், உலக மக்கள் அனைவரும் சுத்தமான நீரும், போதுமான உணவும், மற்ற அடிப்படை வசதிகளும், கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும்” என்று ஐ.நா சபையின் மதிப்பீட்டையும் அவர் அதே நூலில்மேற்கோள் காட்டுகிறார்.

உலகத்தின் பட்டினியைத் தீர்த்து, அனைவருக்கும் கல்வி மற்றும் சுத்தமானநீர் ஆகியவற்றை அளிப்பதற்கு ஆகும் செலவைப் போல் இரு மடங்கு தொகையினை இராக்கின் இறையாண்மைய, மக்கள் உரிமைகளை, மக்களை , அழிப்பதற்குப் பயன்படுத்தும்  ஒரு ஸ்தாபனத்தை, அதன் தலைவனைக் குற்றம் சுமத்துவதென்பது குறைந்த பட்சத்திற்கும் கொஞ்சம் குறைவானதுதான்.

ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கும் இருபத்தி நான்காயிரம் மக்களைக் காக்கும் வல்லமை கொண்ட ஒருவன், தனது வல்லமையை, ஆற்றலை அதற்குப் பயன்படுத்தாமல், சிலநூறு இராக்கியர்களைக் கொல்வதற்கு பயன்படுத்தும் அதன் தலைமையைஅம்பலப் படுத்துவதும், அதற்கெதிராய் ஜனங்களைத் திரட்டுவதுமே படைப்பின் முதற்கடமையாகும்.

மின்னஞ்சலில் கண்ட நகைச்சுவைத் துணுக்கு மாதிரியான ஒரு செய்தியையும் அப்படியே தருகிறேன்.

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்கு செல்கிறார். புன்னகை தவழ, மாணவர்களை நோக்கிச் சொல்கிறார், “ குழந்தைகளே, என்னிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள்”

“ அதிபர் பெருமானே, வணக்கம். நான் ஜான்”

“ நல்லது குழந்தையே, கேள்”

“ என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன”

“ கேள் ஜான்”

1. ஏன் தேவையில்லாமல் ஈராக் யுத்தம்?

2. பின்லேடன் எங்கே?

3.ஏன் முஷாரப்பை இப்படித் தாறுமாறாய் வளர்த்து வருகிறீர்கள்?

புன்னகை மாறாத புஷ் பள்ளி நிர்வாகிகளைப் பார்க்கிறார்.

குறிப்பறிந்து அவர்கள் மண் அடித்து பள்ளிக்கு இடைவேளை விடுகிறார்கள்.

இடைவேளை முடிந்து பள்ளி மீண்டும் தொடங்குகிறது.

புன்னகைத்தபடியே அதிபர் கேட்கிறார், “ வேறு யாருக்கும் ஏதேனும் கேள்விகள் உண்டா?”

” என் பெயர் பீட்டர். என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன.”

“ கேள் பீட்டர்.”

 1. ஏன் தேவையில்லாமல் ஈராக் யுத்தம்?

2. பின்லேடன் எங்கே?

3.ஏன் முஷாரப்பை இப்படித் தாறுமாறாய் வளர்த்து வருகிறீர்கள்?

4. ஏன் வழக்கத்திற்கு மாறாக இருபது நிமிடங்களுக்கு முன்னமே இடைவேளை விட்டீர்கள்?

5. ஜான் எங்கே. என்ன செய்தீர்கள் அவனை?



Thursday, September 26, 2013

மொழியின் மரணம்

முன் குறிப்பு:

இந்தக் கட்டுரை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டு எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் வந்தது.

..................................................................................................................................................................

உலகில் புழக்கத்தில் உள்ளமொழிகள் ஆறாயிரத்து ஐநூறு என்று சொல்கிறது சமீபத்திய பத்திரிக்கை செய்தியொன்று. இது சற்று கூடலாம், குறையலாம்.

மொழியியல் நிபுணர்களின் கணிப்பின்படி பதினைந்து நாட்களுக்கு ஒன்று என்கிற கணக்கில் மொழித்தொகை குறைந்து வருவதாக இன்னுமொரு செய்தி சொல்கிறது.

ஆக, மாதத்திற்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு டஜன் என்கிற கணக்கில் ஏற்படும் இழப்பு இதயம் உள்ளவன் எவனது கண்களையும் ஈரப்படுத்தும்.

அழிவின் மிக  நெருக்கத்தில் “துரா” எனும் மொழி இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. நேபாளத்தில் காத்மண்டிற்கு  அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் எண்பத்தி இரண்டு வயது சோமாதேவிக்கு மட்டுமே இன்றைய தேதியில்  “துரா” பேசத் தெரியும்.

கடந்த ஆகஸ்ட் வரை தனது சிநேகிதியோடு துரா பேசி மகிழ்ந்திருக்கிறார் சோமாதேவி. அவரது சிநேகிதியின் மரணத்தோடு துராவின் பேச்சு வழக்கு அழிந்து போயிருக்கிறது. இன்றைய தேதியில் துரா தெரிந்த ஒருவர் இருக்கிறார். இவரும் இறக்கிற தருணத்தில் யாரும் பேசாத மொழியாக உள்ள துரா யாரும் அறியாத மொழியாக மாறி விடும்.

எனில்,

சோமாதேவியிம் மரண நொடியில் துராவும் மரணிக்குமா?

துராவின் சொற்கள், இலக்கியங்கள், நாட்டுப்புற வழக்கு மொழிகள், பழமொழிகள்,சொலவடைகள் எல்லாம் அழிந்து போவதைத்தான் துராவின் மரணமென்பதா?

இல்லை, இவை யாவும் அப்படியே இருக்கும். எனில், மொழியின் மரணம் என்பதுதான் என்ன?

ஒரு மொழியின் சொற்களை, இலக்கிய செல்வங்களை அனுபவிக்க, புழங்க ஆளற்றுப் போதலையே மொழியின் மரணம் எனக் கொள்ள வேண்டும்.

“ நல்ல வெள்ளாரங்கல் எனும் சலவைக் கற்களால் கட்டப்பட்ட ஒரு பிருமாண்டமான கோயில் தமிழ் “ என்கிறார் தகழி.  அத்தகைய சிறப்புமிக்க செம்மொழியான நம் தமிழுக்கும் இப்படியொரு நிலை வருமா?

ஏன் வராது?வெள்ளாரங்கற்களால் கட்டப்பட்ட பிருமாண்டமான கோயிலேயாயினும் புழங்குவாரற்றுப் பூட்டியே கிடக்குமானால் அது அழிந்து போகாமல் என்ன செய்யும்?

தமிழ்நாட்டில் தமிழின் புழக்கம் என்பது அருகி வருகிறது. தமிழில் பேசுவது என்பது கௌரவத்திற்கு சற்று குறைச்சலான விஷயமாகவே பார்க்கப் படுகிறது. போகப் போக தமிழில் பேசுவது கேவலமாகப் பார்க்கப் படலாம். இன்னும் ஐநூறு ஆண்டுகள் கழித்தோ அதற்கு முன்னமோ தமிழும் புழங்குவதற்கு ஆளற்று அழிவின் விளிம்பிற்கு வரலாம்.

இது பற்றிய புரிதல் நமக்கு இருக்கிறதா?

ஒருமுறை கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தார்.நமது பாராளுமன்றத்தில் பேசினார்.அன்று அன்றையப் பிரதமர்  வாஜ்பாய் இந்தியில் பேசினார். இதற்காக வருத்தப் பட்ட கலைஞர் , “ வாஜ்பாய் ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க வேண்டும். இந்தியில் பேசியிருக்கக் கூடாது” என்றார்.

இதுதான் ஆபத்தானது. இந்தப் பார்வைதான் மொழியை அழிவின் அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும்.

நம்மைப் பொறுத்தவரை கிளிண்டன் தனது தாய்மொழியான ஆங்கிலத்தில் பேசினார்.அது சரி. அதேபோல வாஜ்பாய் தனது தாய்மொழியான இந்தியில் பேசியதும் மிகவும் சரியே.

“ பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய உறுப்பினர்கள் கூடியிருந்த அவையில் கிளிண்டனும் வாஜ்பாயும் அவரவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். அது சரி. இனி தமிழகத்து உறுப்பினர்கள் அனைவரும் குறைந்தபட்சம் எனது கட்சி உறுப்பினர்கள் அனைவரும்தமிழில் மட்டுமே பேசுவார்கள்” என்றல்லவா கலைஞர் சொல்லியிருக்க வேண்டும்.அப்படி சொல்லியிருந்தால் இதுவும் சரியாக இருந்திருக்கும்.

சரி துராவிற்கு ஏற்பட்டுள்ள நிலை தமிழுக்கு நேராமல் தடுக்க எத்தகைய போராட்டங்களை நாம் கையிலெடுப்பது?

ஒன்றைப் புரிந்துகொள்வது உத்தமம். நாம் போராடித்தான், நாம் உயிர்த் தியாகம் செய்துதாந்தன்னைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற அவல நிலையில்தமிழ் ஒருபோதும் இருந்ததில்லைஇருக்கப் போவதுமில்லை.

நாம் செய்ய வேண்டியதெல்லாம்தமிழர்களோடு தமிழில் மட்டுமே பேசுவது தமிழர்களுக்கு எழுதும்போது தமிழில் மட்டுமே எழுதுவது என்ற ஒற்றை முடிவினை எடுத்தாலே போதும்.






Monday, September 23, 2013

8 தி.பரமேசுவரி

இணையதளம் வாசிப்பை மேம்போக்கானதாகவும் நீர்த்துப்போகவும் செய்திருக்கிறது என்பதாக உருவாகிக் கொண்டிருக்கும் பொதுப் புத்தியை சுளுவில் உதாசீனப் படுத்திவிட முடியாதுதான். பெருமளவு உண்மைதான். மேம்போக்காய் மேய்ந்துவிட்டு எல்லாம் தெரிந்ததைப் போன்றதொரு மாயயை வாசகனிடத்தில் பெருமளவு உருவாக்கியிருக்கின்றன இணையதளங்கள் என்பதையும் மறுப்பதிற்கில்லைதான்.

ஆனாலும் சமூக அக்கறையோடு கூடிய ஆழமான எழுத்துக்களை தரக்கூடிய வலைதளங்களும் ஏராளம் இருக்கவே செய்கின்றன. ஆழமான விஷயங்களை வாசிப்பதற்கு எளிதான மொழியில் தரக்கூடிய வலைகளுள் ஒன்று தோழர் பரமேசுவரியின் “ தி.பரமேசுவரி ”

கல்வி குறித்தும், கல்வி சூழல் குறித்தும், பையப் பைய கொடுஞ்சிறைகளாக மாறிக் கொண்டிருக்கும் பள்ளிகள் குறித்தும் அக்கறையோடும் ஆழமாகவும் ஆன விவாதங்களை இவரது வலை முன்வைக்கிறது. இன்னொரு விஷயம் எந்த இடத்திலும் இவரது கருத்தை திணிக்க முயலாமல் முழுமனதோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு வாசலைத் திறந்து வைத்திருப்பதுதான்.

”தங்களின் நிறம், தாங்கள் சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை,படிக்கும் கல்வி கீழானது என்று அவர்கள் மூளைக்குள் புகுத்திவிட்டால் போதும். நாம் இந்தியாவை வெற்றி கண்டுவிடலாம்” என்று மெக்காலே கொடுத்திருந்த அறிக்கை ஒன்றினை 1835 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்த முன்வந்தது.

நாம் கற்கும் கல்வியும், நமது நிறமும், உடையும், உணவும் கீழானவை என்று நமக்கு புரியவைப்பதற்காக இன்னும் சரியாக சொல்வதென்றால் நம்மை வெற்றி கொள்வதற்காக கட்டமைக்கப் பட்ட கல்வித் திட்டத்தை, மனனம் செய்வதை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு கல்வி அமைப்பை இந்த வலையின் பெரும்பான்மை படைப்புகள் கேள்வி கேட்கின்றன.

பொதுவாகவே இன்றைய தேர்வுத் திட்டம் குறித்து கல்வி குறித்த அக்கறையுள்ள கல்வியாளர்கள் கவலை கொள்வதும் இதை மாற்றி அமைக்க ஆலோசிப்பதும் மிகவும் அவசியமானதாகும். மாறாக இன்றையக் கல்வித்துறை தேர்வு முறையில் மிகுதியான மாற்ரங்களை செய்வதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. மாணவர்களை அதிக விழுக்காடு தேற்சி பெற வைப்பதிலும்  அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதிலும் மட்டுமே இவர்களது கவனம் இருக்கிறது என்பதை இவரது பதிவுகள் அக்கறையோடு படம் பிடிக்கின்றன.

எவ்வளவு கவனமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாலும் தேர்வறைக் குற்றங்கள் நிறுவனமயப் பட்டிருக்கின்றன என்கிற உண்மையை இவரது “தேர்வு எனும் அகழி” எனும் கட்டுரை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. சென்ற ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில்  சோதனை செய்த அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா அங்கு தேர்வெழுதும் மாணவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட விடைத் தாட்களை வழங்கிக் கொண்டிருந்த ஏழு அரசு பள்ளி ஆசிரியர்களைக் கையும் களவுமாகப் பிடித்த தகவலைத் தருகிறார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு “பிட்” எடுத்துத் தருகிறார்கள். பிடி படுகிறார்கள். என்ன நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப் பட்டது என்பது பொது மக்களுக்கு இதுவரை தெரியாது. கார்பொரேட் அமைப்பின் கொடிய கரங்களுக்குள் கல்வி போனால் என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவு நமக்கு எழுத்துக்கூட்டி சொல்லித் தருகிறது.

தேர்வுத்தாள் திருத்தும் போது நிகழும் சீரின்மையையும் இந்தப் பதிவு விளக்குகிறது. ஒரேக் கேள்விக்கு இரு ஆசிரியர்கள் வழங்கும் மதிப்பெண்கள் மாறுபடுவதை இவர் சுட்டுகிறார். ஒரே விடையை ஒரே மாதிரி இரு மாணவர்கள் எழுதுகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாளைத் திருத்திய ஆசிரியர் அதற்கு ஏழு மதிப்பெண்கள் போடுவதாகவும் அதே விடையை எழுதிய இன்னொரு தாளுக்கு இன்னொரு ஆசிரியர் ஒன்பது மதிப்பெண்கள் போடுவதாகவும் நினைத்துப் பாருங்கள். அந்த 2 மதிப்பெண்கள் வித்தியாசமே அந்த மாணவர்களின் மாநிலத் தகுதியைப் புரட்டிப் போடுமெனில் எங்கு போய் முட்டிக் கொள்வது.

ஆசிரியர் பணிக்கான தேர்வெழுதிய 6.72 லட்சம் நபர்களுள் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். ஆசிரியர் பணிக்கான படிப்பை முறையாகப் படித்து அரசு வைக்கும் தேர்வெழுதி அதில் தேர்ச்சியும் பெற்றபின்னர் இன்னொரு தேர்வை நடத்தவேண்டிய அவசியம் ஏன் வந்தது?

இன்னொருவிதமாகப் பார்ப்போம். இங்கு தோல்வி அடையக் கூடிய மாணவர்கள் அங்கு எப்படி தேர்ச்சி பெற்றார்கள்? இதற்குள் இருக்கும் அரசியல் என்ன என்பதையெல்லாம் இவரது “திருதராஷ்ர ஆசிரியர்கள்” எனும் பதிவு அலசுகிறது.

“தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுக்கும் கல்வியை” தனது குழந்தைக்கு கேட்ட லிங்கனைப் போல் நமது குழந்தைகளுக்காக யாசிக்கிறது இவரது வலை.

“ கழிப்பறையைக் காணாத கல்விக்கூடங்கள்”  என்ற கட்டுரையே என்னைப் பொருத்தவரை இந்த நொடிக்கான இந்த வலையின் ஆகச் சிறந்தக் கட்டுரை.

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கமுடியாது என்பது பழமொழி.

“சார்
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்”
எனும் புகழேந்தியின் கவிதையை சரியாகக் கையாள்கிறார்.

இடைநிற்கும் பள்ளி மாணவிகளுள் 50சதவிகிதம் மாணவிகள் கழிப்பறை இல்லாமையால் இடைநிற்கிறார்கள் என்கிற தகவல் நம்மை கலங்க வைக்கிறது.

“ தடம் பதிக்கும் பெண்ணெழுத்து” இந்த வலையின் இன்னொரு குறிப்பிடத் தகுந்த பதிவு.

இவை கடந்து நாடறிந்த நல்ல கவிஞர் இவர். “எனக்கான வெளிச்சம்” மற்றும் “ஓசை புதையும் வெளி” அகிய பேசப்பட்ட கவிதை நூல்களைத் தந்தவர். நிறைய கவிதைகள் உள்ளன. இடமின்மை காரணமாகவே அவை குறித்து பேச இயலவில்லை.

ஒரு கூடுதல் செய்தி, இவர் சிலம்புச் செல்வரின் பேத்தி.

கல்வி குறித்து, பெண்ணியம் குறித்து,சமூகம் குறித்து ஆரோக்கியமான விவாதங்களுக்கு தயாராய் இருப்பவர்கள் இவரது வலையை அவசியம் பார்க்க வேண்டும்.

http://tparameshwari.blogspot.in/

நன்றி: “ புதிய தரிசனம்”

 

Sunday, September 22, 2013

ஒன்னுக்கு ரெண்டு ரூவா, ரெண்டுக்கு மூனு ரூவா

சில நாட்களுக்கு முன்னால் கரூரில் ஒரு திருமணம்.

கரூரில் இறங்கியதுமே வயிறு கட முடா என்றது.

நகராட்சி கட்டணக் கழிவறைக்கு வெளியில் டோக்கன் வாங்குமிடத்திலேயே ஏகத்துக்கும் கூட்டம்.

டோக்கன் கொடுப்பவர் கத்திக் கொண்டே இருந்தார்,

“ ஒன்னுக்கு ரெண்டு ரூவா, ரெண்டுக்கு மூனு ரூவா. சில்லறையா கொண்டு வாங்க”

இதையெல்லாம்கூட விற்க ஆரம்பிச்சுட்டாங்களா?

அந்த அவஸ்தையிலும் சிரிப்பு வந்தது.

ஒரு வழியாய் உள்ளே நுழைந்தால் ரேஷன் கடை கூட்டத்தில் கால் வாசி தேறும் போல இருந்தது.

கைகளைப் பின் கட்டி, கால்களை தரையில் அழுத்தி, இடுப்பை நெளித்து என்று என்னன்னவோ செய்து கொண்டிருந்தேன்.  ஏறத்தாழ எல்லோருமே அப்படித்தான்.

அங்கு நின்று கொண்டிருந்த இருவர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது.

பணி மூப்பை மதிக்காமல் பதவி உயர்வினை பள்ளி நிர்வாகங்கள் வழங்கிக் கொண்டிருப்பது பற்றி விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

கோவத்தை எள்ளலோடு வெளிப்படுத்தும் ஆற்றல் இருந்தது இருவருக்கும்.

அந்த அவஸ்தையின் உச்சத்திலும் கொடுமை கண்டு எள்ளலோடு அவர்களால் பொங்க முடிந்தது.

என்னாலும் ரசிக்க முடிந்தது.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன். அவர்களும் புன்னகைத்தார்கள்.

“ தனியார் பள்ளி ஆசிரியர்களா சார்?”

“ ஆமாம் சார். நீங்கள்?”

“ நானும்தான்”

இப்படி எங்களுக்குள் ஒரு உரையாடல் துவங்கியிருந்த நேரத்தில் ஒரு அறை காலியாகவே எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் உள்ளே நுழைந்து விட்டான்.

“ இங்க வரிசையில நிக்கறவனெல்லாம் மனுசனா இல்லையா?” என்று சகட்டு மேனிக்கு ஒருவர் திட்ட ஆரம்பித்து விட்டார்.

மற்றொரு ஆசிரியர் அவரை சமாதானப் படுத்தினார்.

சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்,

“ பாருங்க சார், இவனவிட ஏழு வருஷம் ஜூனியரை தலைமை ஆசிரியரா போட்டாங்க. அப்பக் கூட சிரிச்சான். இன்னமும் அந்த ஹெச்.எம் மோட நல்லாதான் பழகுறான். ஆஃப்டர் ஆல் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி பாயறான் பாருங்களேன்”

 “ எதுடா சின்ன விஷயம்?”

“ இது அவ்வளவு பெரிய விஷயமாடா?”

“ இல்லையா பின்ன. HM ப்ரொமோஷன உட்டுக் கொடுத்ததால என் பேண்ட்டு நாறாது. இங்க அப்படியில்லை”

அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்,

பள்ளிகள், ஆலயங்கள், மருத்துவ மனைகள் இவை எவற்றின் தேவைக்கும் குறைச்சலானது அல்ல கழிவறைகள்.

ஜனத் தொகைக்கேற்ப சுத்தமான, சுகாதாரமான கழிவறைகள் நிறைய அவசியம்.

Thursday, September 19, 2013

நிலைத் தகவல்...20

" உலகை மூன்று முறை சுற்றி வந்துவிட்டேன். எந்த நாட்டிலும் தன்பெயரை இரண்டு மொழிகளில் எழுதும் அவலம் இல்லை” என்று தமிழர் தந்தை ஆதித்தனார் சொன்னதாக “ நாளை விடியும்” இதழில் எப்போதோ படித்ததாக ஞாபகம்.

எனக்கு வரும் கடிதங்களில் R எட்வின் என்று முகவரியிட்டு எத்தனை கடிதங்கள்.

இதில் என்ன இருக்கிறது? என்று கேட்பவர்களிடம் அ பி என்று தமிழில் எழுதிவிட்டு வாஜ்பாய் என்பதை ஹிந்தியில் எழுதி அனுப்பச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

விடுங்கள் ,

இனி ஆங்கில தலைப்பெழுத்தோடு வரும் கடிதங்களை வாசிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

Saturday, September 14, 2013

நிலைத் தகவல்...19

இன்றும் வீட்டை விட்டுக் கிளம்பும் போது கால்களைப் பின்னிக் கொண்டு ஒரு முட்டம் குறைத்து ஓய்ந்தான் டோனி .

வழக்கம்தான் .

ஆனாலும் இன்று ,

" பார்த்து சூதானமா போய்ட்டு வாடா "

என்று சொல்லும் அப்பா தெரிந்தார் அவனுள்

ஆக,

இதுவரை மகனாக மட்டுமே இருந்த டோனி

இன்றெனக்கு தந்தையுமானான்


முகநூலில் வாசிக்க
 https://www.facebook.com/eraaedwin/posts/452209251487257

Tuesday, September 10, 2013

நிலைத் தகவல்...18

தில்லியில் லுட் யென்ஸ் மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை ஆக தோராயமாக 3.25 லட்சம்.

இவர்களுக்கு அரசு வழங்கும் நீரின் அளவு 32 மில்லியன் கேலன்.

அங்கு வசிக்கும் ஏழைகள் மற்றும் அன்றாடம் காய்ச்சிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 32 லட்சம்.

இவர்களுக்கு அரசு வழங்கும் நீரின் அளவு 35 மில்லியன் கேலன்.

வாழ்க மக்களரசு.

இன்னும் கொடுமை என்னவெனில் பணக்காரத் திரளுக்கு வழங்கப் படும் நீரில் பெரும் பகுதி அவர்களது கார்களைக் கழுவவும், அவர்கள் வீட்டு புல் தரைகளுக்குமாய் பயன்படுவதுதான்.

இரண்டு சொல்வோம்

ஒன்று,

தண்ணீரை இப்படி காசு மாதிரி செலவு செய்யாதீர்கள் கனவான்களே

இரண்டு,

உழைக்கும் திரளுக்கும் ஒடுக்கப்பட்ட திரளுக்கும் கோவம் பற்றிக் கொண்டால் அப்போது நீங்கள் கழுவி சுத்தமாக வைத்துள்ள கார்களாலோ, உங்களது வளமான புல்வெளிகளாலோ அவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்ற முடியாது.


முகநூலில் வாசிக்க
 https://www.facebook.com/eraaedwin/posts/415762665131916

Saturday, September 7, 2013

7 அடர் கருப்பு

கருப்பு என்பது துக்கத்தின் அடையாளமாகவே கொள்ளப்படுகிற சூழலில் தனது வலைக்கு “ அடர் கருப்பு” என்று பெயர் வைத்திருக்கிறாரே, ஒருக்கால் பெரியாரிஸ்டாக இருப்பாரோ என்ற அய்யம் இவரது வலைக்குள் பயணத்தைத் தொடங்கிய பத்து நிமிடங்களுக்கெல்லாம் தகர்ந்து போனது. இடதுசாரியாகவே அவரை அடையாளங்காண முடிந்தது. ஆமாம் என்றே அவரைப் பற்றிய ஆரம்பகட்ட விசாரனைகள் சொல்லின.

கருப்புகள் சிவப்பைக் கையிலெடுப்பதும் சிவப்புகள் கருப்பையும் சேர்த்து கையெடுப்பதும் கனவிலும் நடக்காதா என்று ஏங்கித் தவித்த நமக்கு ஒரு சிவப்பு தனது வலைக்கு “ அடர் கருப்பு” என்று பெயர் வைத்திருப்பதுஆச்சரியத்தை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் சேர்த்தே சேர்த்தே கொண்டுவந்து சேர்த்தது.

இருள் என்பது குறைந்த ஒளி என்ற எதனிலிருந்தும் வேறுபடுகிற பிரகடனத்தைப் பார்த்ததும் உச்சி முதல் உள்ளங்கால்வரைநம்பிக்கை நிரம்பிக் கசியத் தொடங்குகிறது.

ஐநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள்.

இருப்பதை எடுத்துச் சொல்வதோடு திருப்தி படுகிற சராசரியாக இவர் இல்லை.மாற்றத்தை முன் வைக்கிற படைப்புகளே ஏறத்தாழ வலையின் அத்தனை பக்கங்களிலும் விரவிக் கிடக்கின்றன.


புத்தனுக்கு போதி மரம். எனக்கு வைப்பர் வேலைசெய்யாத அரசுப் பேருந்து என்று ஒருமுறை எழுதினேன். ஆழமான தேடலும் கூரிய கவனமும் கொண்ட எவருக்கும் பேருந்துகள் போதி மரங்களே. இவரது “மூன்று பேருந்து பயணங்கள்” என்ற பதிவு இதை உறுதி செய்கிறது.

ஒரு பயணத்தில் இவருக்குப் பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இருவரின் உரையாடலை இவர் கேட்கிறார். அதில் ஒருவர் ட்ரெடில் அச்சகத்தில் மணிக்கு 14 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர். ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு மேல் வேலை கிடைக்காத அவலம். வழமையாக ரேஷன் அரிசி சாப்பாடுதான் என்பதும் என்றைக்கவது உறவினர்கள் வந்தால்தான் நல்ல அரிசி சோறு என்பதும், ஒன்றியப் பெருந்தலைவர் ஒருவர் தனது மகளது திருமணத்திற்கு 82000 ரூபாய் செலவில் பத்திரிக்கை அடிக்கிறபோது இவரது இரண்டு குழந்தைகளுக்குமான பள்ளிக் கட்டணமான 3000 ரூபாய்க்கு இவர் விழி பிதுங்கி நிற்பதையும் வலிக்க வலிக்க எழுதுகிறார். வெறும் வலியை தருவதோடு மட்டும் இவரது எழுத்து நின்று விடவில்லை. வாசகனுக்கு இந்த அமைப்பின்மீது ஒரு கோவத்தையும் சேர்த்தே கொடுக்கிறது. இந்தக் கோவம்தான் நாளைய மாற்றத்திற்கான ஆதாரப் படிகள். 

90 களில் நடந்த ஜாதிக் கலவரத்தில் அடுத்த சாதிக்காரனை தன் புடவைக்கு கீழே மறைத்து கொலைவெறியோடு வந்த தன் சாதிக்காரனிடமிருந்து காப்பாற்றிய ஒரு தாயைப் பற்றி ஒரு பயணத்தில் கேள்வி படுகிறார். எழுதுகிறார்,

“ஒரு உயிரின் விலை என்ன என்பதை எமனை விடவும், கடவுளை விடவும், எவனை விடவும் துள்ளியமாக தெரிந்து வைத்திருப்பவள் தாய்.” அப்பப்பா , எப்படி ஒரு துள்ளியமான எழுத்து.

சாதியக் கொடுமைகளை அதற்கான மாற்றுகளை பெருமளவு யோக்கியத் தனத்தோடு தனது “ சத்யமேவ ஜெயதே” என்ற நிகழ்ச்சியின் மூலம் கொடுத்த அமீர்கானுக்கு நன்றி சொல்லும் ஒரு பதிவிருக்கிறது.

1000 மாணவிகள் படிக்கக் கூடிய ஒரு பெண்கள் பள்ளியில் இருந்த மூன்று அருந்ததிய மாணவிகளைக் கொண்டு பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த அயோக்கியத் தனத்தை கேள்வி கேட்கிறது அந்தப் பதிவு.

1835 இல் இங்கிலாந்து பராளுமன்றம் மெகாலேயின் ஒரு அறிக்கையை விவாதித்தது. அந்த அறிக்கை சொன்னது,

“ தங்களின் நிறம், தாங்கள் சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை, படிக்கும் கல்வி, கீழானது என்று அவர்கள மூளைக்குள் புகுத்திவிட்டால் போதும் நாம் இந்தியாவை வெற்றி கண்டு விடலாம்”

ஆழ நிலைகுத்தி நின்று நம்மை அவர்கள் 200 ஆண்டுகள் ஆண்டமைக்கு மேற்காணும் பத்தியை அவர்கள் சரியாக கைஎடுத்ததே காரணம். இபோது இதே யுக்தியைதான் பன்னாட்டு பெரு முதலாளிகள் கையெடுத்திருக்கிறார்கள். கவனத்தோடு இதை எதிர்கொள்ளவில்லை என்றால் நமது பூமி ஒரு மறு காலனியாதிக்கத்தின் கீழ் வந்தே தீரும் என்பதை இந்தப் பதிவு தெளிவாகவும், புரிகிற பாஷையிலும் சொல்கிறது.

உத்தபுரத்து அவலங்களை கொதிக்கக் கொதிக்கப் பதிகிறார். பள்ளி விட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த ஒரு தலித் மாணவனது கை தவறிப் பட்டுவிட்டதற்காக அவனை கட்டி வைத்து உதைத்ததை, “ அண்ணே” என்று கூப்பிட்ட ஒரு தலித் சிறுவனை, “நீ என்ன எங்கப்பனுக்கா பொறந்த” என்று கட்டி வைத்து உதைத்ததையும் ரத்தம் கொதிக்கப் பதிந்தவர், இந்தக் கயமையை “ காட்டுமிராண்டித் தனம்” என்று சொல்வது தவறு. காரணாம் காட்டு வாசிகளிடம் ஈரமும் மனிதபிமானமும் இருக்கும். எனவே இதை “ உயர்மிராண்டித் தனம்” என்று அழைக்க வேண்டுமென்கிறார்.

எவ்வளவு சரியான பிரயோகம். மொழிக்கு ஒரு சரியான புது வார்த்தையைத் தந்திருக்கிறார்.

“ வெள்ளைக்குள் ஒளிந்திருக்கும் நிறங்கள்” போன்ற சிறு கதைகளும் இவரது வலையில் இருக்கின்றன.

நாலந்தா பற்றிய இவரது பதிவு சிறப்பான கவனத்திற்கு உரியது.

10000 மாணவர்களுக்கு 2000 ஆசிரியர்கள். 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் இது விவாதிக்கப் பட்டால் எவ்வளவு நல்லதாக இருக்கும்.
“ நான் எழுதுகிற எழுத்தை, படைப்பை எனது தாய், என் மனைவி, என் மகள் மட்டுமல்லாது பக்கத்து வீட்டுப் பெண்களும் படிக்கிறமாதிரி எழுதினால் மட்டுமே அது படைப்பு. அப்படி இல்லாதவை கக்கூசில் வெளியேறும் அருவருப்பு” என்று எழுதுகிறார்.

யார்மீது வேண்டுமாயினும் சத்தியம் செய்து சொல்கிறேன்,

நிசமான எழுத்துக்கள் இவருடையவை.

போய்ப் பாருங்கள்.

நன்றி: புதிய தரிசனம்

Tuesday, September 3, 2013

நிலைத் தகவல்...17


மகனது கல்விக் கடனுக்காக வங்கி மேளாளரைப் பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

கீர்த்தி சொன்னாள்,

“கணக்கு மிஸ் கூட கடன் வாங்கிக் கழிக்கத்தான் சொன்னாங்க. அது யாருப்பா கடன் வாங்கிப் படிக்கச் சொன்னது?”

“அரசாங்கம்.”

“நாசமாப் போக”

கோட்டைக் கனவான்களே!,

சாபமிடத் தொடங்கிவிட்டார்கள் குழந்தைகள்.

முகநூலில் வாசிக்க...

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...