Thursday, September 26, 2013

மொழியின் மரணம்

முன் குறிப்பு:

இந்தக் கட்டுரை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டு எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் வந்தது.

..................................................................................................................................................................

உலகில் புழக்கத்தில் உள்ளமொழிகள் ஆறாயிரத்து ஐநூறு என்று சொல்கிறது சமீபத்திய பத்திரிக்கை செய்தியொன்று. இது சற்று கூடலாம், குறையலாம்.

மொழியியல் நிபுணர்களின் கணிப்பின்படி பதினைந்து நாட்களுக்கு ஒன்று என்கிற கணக்கில் மொழித்தொகை குறைந்து வருவதாக இன்னுமொரு செய்தி சொல்கிறது.

ஆக, மாதத்திற்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு டஜன் என்கிற கணக்கில் ஏற்படும் இழப்பு இதயம் உள்ளவன் எவனது கண்களையும் ஈரப்படுத்தும்.

அழிவின் மிக  நெருக்கத்தில் “துரா” எனும் மொழி இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. நேபாளத்தில் காத்மண்டிற்கு  அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் எண்பத்தி இரண்டு வயது சோமாதேவிக்கு மட்டுமே இன்றைய தேதியில்  “துரா” பேசத் தெரியும்.

கடந்த ஆகஸ்ட் வரை தனது சிநேகிதியோடு துரா பேசி மகிழ்ந்திருக்கிறார் சோமாதேவி. அவரது சிநேகிதியின் மரணத்தோடு துராவின் பேச்சு வழக்கு அழிந்து போயிருக்கிறது. இன்றைய தேதியில் துரா தெரிந்த ஒருவர் இருக்கிறார். இவரும் இறக்கிற தருணத்தில் யாரும் பேசாத மொழியாக உள்ள துரா யாரும் அறியாத மொழியாக மாறி விடும்.

எனில்,

சோமாதேவியிம் மரண நொடியில் துராவும் மரணிக்குமா?

துராவின் சொற்கள், இலக்கியங்கள், நாட்டுப்புற வழக்கு மொழிகள், பழமொழிகள்,சொலவடைகள் எல்லாம் அழிந்து போவதைத்தான் துராவின் மரணமென்பதா?

இல்லை, இவை யாவும் அப்படியே இருக்கும். எனில், மொழியின் மரணம் என்பதுதான் என்ன?

ஒரு மொழியின் சொற்களை, இலக்கிய செல்வங்களை அனுபவிக்க, புழங்க ஆளற்றுப் போதலையே மொழியின் மரணம் எனக் கொள்ள வேண்டும்.

“ நல்ல வெள்ளாரங்கல் எனும் சலவைக் கற்களால் கட்டப்பட்ட ஒரு பிருமாண்டமான கோயில் தமிழ் “ என்கிறார் தகழி.  அத்தகைய சிறப்புமிக்க செம்மொழியான நம் தமிழுக்கும் இப்படியொரு நிலை வருமா?

ஏன் வராது?வெள்ளாரங்கற்களால் கட்டப்பட்ட பிருமாண்டமான கோயிலேயாயினும் புழங்குவாரற்றுப் பூட்டியே கிடக்குமானால் அது அழிந்து போகாமல் என்ன செய்யும்?

தமிழ்நாட்டில் தமிழின் புழக்கம் என்பது அருகி வருகிறது. தமிழில் பேசுவது என்பது கௌரவத்திற்கு சற்று குறைச்சலான விஷயமாகவே பார்க்கப் படுகிறது. போகப் போக தமிழில் பேசுவது கேவலமாகப் பார்க்கப் படலாம். இன்னும் ஐநூறு ஆண்டுகள் கழித்தோ அதற்கு முன்னமோ தமிழும் புழங்குவதற்கு ஆளற்று அழிவின் விளிம்பிற்கு வரலாம்.

இது பற்றிய புரிதல் நமக்கு இருக்கிறதா?

ஒருமுறை கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தார்.நமது பாராளுமன்றத்தில் பேசினார்.அன்று அன்றையப் பிரதமர்  வாஜ்பாய் இந்தியில் பேசினார். இதற்காக வருத்தப் பட்ட கலைஞர் , “ வாஜ்பாய் ஆங்கிலத்தில்தான் பேசியிருக்க வேண்டும். இந்தியில் பேசியிருக்கக் கூடாது” என்றார்.

இதுதான் ஆபத்தானது. இந்தப் பார்வைதான் மொழியை அழிவின் அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும்.

நம்மைப் பொறுத்தவரை கிளிண்டன் தனது தாய்மொழியான ஆங்கிலத்தில் பேசினார்.அது சரி. அதேபோல வாஜ்பாய் தனது தாய்மொழியான இந்தியில் பேசியதும் மிகவும் சரியே.

“ பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய உறுப்பினர்கள் கூடியிருந்த அவையில் கிளிண்டனும் வாஜ்பாயும் அவரவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். அது சரி. இனி தமிழகத்து உறுப்பினர்கள் அனைவரும் குறைந்தபட்சம் எனது கட்சி உறுப்பினர்கள் அனைவரும்தமிழில் மட்டுமே பேசுவார்கள்” என்றல்லவா கலைஞர் சொல்லியிருக்க வேண்டும்.அப்படி சொல்லியிருந்தால் இதுவும் சரியாக இருந்திருக்கும்.

சரி துராவிற்கு ஏற்பட்டுள்ள நிலை தமிழுக்கு நேராமல் தடுக்க எத்தகைய போராட்டங்களை நாம் கையிலெடுப்பது?

ஒன்றைப் புரிந்துகொள்வது உத்தமம். நாம் போராடித்தான், நாம் உயிர்த் தியாகம் செய்துதாந்தன்னைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற அவல நிலையில்தமிழ் ஒருபோதும் இருந்ததில்லைஇருக்கப் போவதுமில்லை.

நாம் செய்ய வேண்டியதெல்லாம்தமிழர்களோடு தமிழில் மட்டுமே பேசுவது தமிழர்களுக்கு எழுதும்போது தமிழில் மட்டுமே எழுதுவது என்ற ஒற்றை முடிவினை எடுத்தாலே போதும்.


8 comments:

 1. "நாம் செய்ய வேண்டியதெல்லாம்தமிழர்களோடு தமிழில் மட்டுமே பேசுவது தமிழர்களுக்கு எழுதும்போது தமிழில் மட்டுமே எழுதுவது என்ற ஒற்றை முடிவினை எடுத்தாலே போதும்."
  "தமிழர்களோடு தமிழில் மட்டுமே பேசுவது - தமிழர்களுக்கு எழுதும்போது தமிழில் மட்டுமே எழுதுவது என்று பெருமை கொள்ளவேண்டும்!!" அதிலும் குறிப்பாக வீட்லும் எதர்காலத் தலைமுறையினரோடும் தமிழ் பேசி பெருமை கொள்ள வேண்டும். இது நடிப்பாக இருக்கவே கூடாது. நமது அகப் பெருவெளியை உணர்ந்து ஆழ்மனதில் பதிக்கும் ஆற்றலுடையவர்கள் நம் வளரும் வாரிசுகள்!! - நல்லதொரு ஆக்கம் தோழர்!! - செயற்படுத்தி வாழ்வோம்!!

  ReplyDelete
 2. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே இப்படியொரு ஆக்கத்தை தங்களைப்போல் மற்ற தமிழார்வலர்கள் தந்திருந்தால் தற்போது இவ்வளவு ஆங்கிலப் பள்ளிகள் தோன்றியிருக்காது என்றே எனக்கு படுகிறது. தமிழகத் தாய்மார்கள் தாலாட்டையும். விளையாட்டுப் பாடல்களையும் ஆங்கிலத்தில் பாடுகிறார்கள் என்பது வேதனையல்லவா! அதைப்பற்றிய ஒரு பதிவு எனது தளத்தில் இட்டுள்ளேன். முடிந்தால் பாருங்கள் அய்யா. http://pandianpandi.blogspot.com/2013/08/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். அவசியம் பார்ப்பேன் தோழர்

   Delete
 3. சிறப்பான, சிந்திக்க வேண்டிய பதிவு!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 4. சிறப்பான சிந்திக்க வேண்டிய பதிவு!

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...