Monday, September 23, 2013

8 தி.பரமேசுவரி

இணையதளம் வாசிப்பை மேம்போக்கானதாகவும் நீர்த்துப்போகவும் செய்திருக்கிறது என்பதாக உருவாகிக் கொண்டிருக்கும் பொதுப் புத்தியை சுளுவில் உதாசீனப் படுத்திவிட முடியாதுதான். பெருமளவு உண்மைதான். மேம்போக்காய் மேய்ந்துவிட்டு எல்லாம் தெரிந்ததைப் போன்றதொரு மாயயை வாசகனிடத்தில் பெருமளவு உருவாக்கியிருக்கின்றன இணையதளங்கள் என்பதையும் மறுப்பதிற்கில்லைதான்.

ஆனாலும் சமூக அக்கறையோடு கூடிய ஆழமான எழுத்துக்களை தரக்கூடிய வலைதளங்களும் ஏராளம் இருக்கவே செய்கின்றன. ஆழமான விஷயங்களை வாசிப்பதற்கு எளிதான மொழியில் தரக்கூடிய வலைகளுள் ஒன்று தோழர் பரமேசுவரியின் “ தி.பரமேசுவரி ”

கல்வி குறித்தும், கல்வி சூழல் குறித்தும், பையப் பைய கொடுஞ்சிறைகளாக மாறிக் கொண்டிருக்கும் பள்ளிகள் குறித்தும் அக்கறையோடும் ஆழமாகவும் ஆன விவாதங்களை இவரது வலை முன்வைக்கிறது. இன்னொரு விஷயம் எந்த இடத்திலும் இவரது கருத்தை திணிக்க முயலாமல் முழுமனதோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு வாசலைத் திறந்து வைத்திருப்பதுதான்.

”தங்களின் நிறம், தாங்கள் சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை,படிக்கும் கல்வி கீழானது என்று அவர்கள் மூளைக்குள் புகுத்திவிட்டால் போதும். நாம் இந்தியாவை வெற்றி கண்டுவிடலாம்” என்று மெக்காலே கொடுத்திருந்த அறிக்கை ஒன்றினை 1835 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்த முன்வந்தது.

நாம் கற்கும் கல்வியும், நமது நிறமும், உடையும், உணவும் கீழானவை என்று நமக்கு புரியவைப்பதற்காக இன்னும் சரியாக சொல்வதென்றால் நம்மை வெற்றி கொள்வதற்காக கட்டமைக்கப் பட்ட கல்வித் திட்டத்தை, மனனம் செய்வதை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு கல்வி அமைப்பை இந்த வலையின் பெரும்பான்மை படைப்புகள் கேள்வி கேட்கின்றன.

பொதுவாகவே இன்றைய தேர்வுத் திட்டம் குறித்து கல்வி குறித்த அக்கறையுள்ள கல்வியாளர்கள் கவலை கொள்வதும் இதை மாற்றி அமைக்க ஆலோசிப்பதும் மிகவும் அவசியமானதாகும். மாறாக இன்றையக் கல்வித்துறை தேர்வு முறையில் மிகுதியான மாற்ரங்களை செய்வதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. மாணவர்களை அதிக விழுக்காடு தேற்சி பெற வைப்பதிலும்  அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதிலும் மட்டுமே இவர்களது கவனம் இருக்கிறது என்பதை இவரது பதிவுகள் அக்கறையோடு படம் பிடிக்கின்றன.

எவ்வளவு கவனமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாலும் தேர்வறைக் குற்றங்கள் நிறுவனமயப் பட்டிருக்கின்றன என்கிற உண்மையை இவரது “தேர்வு எனும் அகழி” எனும் கட்டுரை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. சென்ற ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில்  சோதனை செய்த அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா அங்கு தேர்வெழுதும் மாணவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட விடைத் தாட்களை வழங்கிக் கொண்டிருந்த ஏழு அரசு பள்ளி ஆசிரியர்களைக் கையும் களவுமாகப் பிடித்த தகவலைத் தருகிறார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு “பிட்” எடுத்துத் தருகிறார்கள். பிடி படுகிறார்கள். என்ன நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப் பட்டது என்பது பொது மக்களுக்கு இதுவரை தெரியாது. கார்பொரேட் அமைப்பின் கொடிய கரங்களுக்குள் கல்வி போனால் என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவு நமக்கு எழுத்துக்கூட்டி சொல்லித் தருகிறது.

தேர்வுத்தாள் திருத்தும் போது நிகழும் சீரின்மையையும் இந்தப் பதிவு விளக்குகிறது. ஒரேக் கேள்விக்கு இரு ஆசிரியர்கள் வழங்கும் மதிப்பெண்கள் மாறுபடுவதை இவர் சுட்டுகிறார். ஒரே விடையை ஒரே மாதிரி இரு மாணவர்கள் எழுதுகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாளைத் திருத்திய ஆசிரியர் அதற்கு ஏழு மதிப்பெண்கள் போடுவதாகவும் அதே விடையை எழுதிய இன்னொரு தாளுக்கு இன்னொரு ஆசிரியர் ஒன்பது மதிப்பெண்கள் போடுவதாகவும் நினைத்துப் பாருங்கள். அந்த 2 மதிப்பெண்கள் வித்தியாசமே அந்த மாணவர்களின் மாநிலத் தகுதியைப் புரட்டிப் போடுமெனில் எங்கு போய் முட்டிக் கொள்வது.

ஆசிரியர் பணிக்கான தேர்வெழுதிய 6.72 லட்சம் நபர்களுள் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். ஆசிரியர் பணிக்கான படிப்பை முறையாகப் படித்து அரசு வைக்கும் தேர்வெழுதி அதில் தேர்ச்சியும் பெற்றபின்னர் இன்னொரு தேர்வை நடத்தவேண்டிய அவசியம் ஏன் வந்தது?

இன்னொருவிதமாகப் பார்ப்போம். இங்கு தோல்வி அடையக் கூடிய மாணவர்கள் அங்கு எப்படி தேர்ச்சி பெற்றார்கள்? இதற்குள் இருக்கும் அரசியல் என்ன என்பதையெல்லாம் இவரது “திருதராஷ்ர ஆசிரியர்கள்” எனும் பதிவு அலசுகிறது.

“தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுக்கும் கல்வியை” தனது குழந்தைக்கு கேட்ட லிங்கனைப் போல் நமது குழந்தைகளுக்காக யாசிக்கிறது இவரது வலை.

“ கழிப்பறையைக் காணாத கல்விக்கூடங்கள்”  என்ற கட்டுரையே என்னைப் பொருத்தவரை இந்த நொடிக்கான இந்த வலையின் ஆகச் சிறந்தக் கட்டுரை.

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கமுடியாது என்பது பழமொழி.

“சார்
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்”
எனும் புகழேந்தியின் கவிதையை சரியாகக் கையாள்கிறார்.

இடைநிற்கும் பள்ளி மாணவிகளுள் 50சதவிகிதம் மாணவிகள் கழிப்பறை இல்லாமையால் இடைநிற்கிறார்கள் என்கிற தகவல் நம்மை கலங்க வைக்கிறது.

“ தடம் பதிக்கும் பெண்ணெழுத்து” இந்த வலையின் இன்னொரு குறிப்பிடத் தகுந்த பதிவு.

இவை கடந்து நாடறிந்த நல்ல கவிஞர் இவர். “எனக்கான வெளிச்சம்” மற்றும் “ஓசை புதையும் வெளி” அகிய பேசப்பட்ட கவிதை நூல்களைத் தந்தவர். நிறைய கவிதைகள் உள்ளன. இடமின்மை காரணமாகவே அவை குறித்து பேச இயலவில்லை.

ஒரு கூடுதல் செய்தி, இவர் சிலம்புச் செல்வரின் பேத்தி.

கல்வி குறித்து, பெண்ணியம் குறித்து,சமூகம் குறித்து ஆரோக்கியமான விவாதங்களுக்கு தயாராய் இருப்பவர்கள் இவரது வலையை அவசியம் பார்க்க வேண்டும்.

http://tparameshwari.blogspot.in/

நன்றி: “ புதிய தரிசனம்”

 

8 comments:

 1. மிக்க மகிழ்ச்சி தோழர்.

  ReplyDelete
 2. Miga arumayaana katturai. Migavum varuthaamaga irukkiradhu indraya kalviyin avalangal.

  ReplyDelete
 3. Nalla katturai. Miga varutthamaaga irukiradhu indraya kalvi tharamum aasiriyargalin tharamum. Naangal uyara nimirndhu nokkiya aasiriyargal enge, ippodhu peyarai kedukkum ivargal enge.

  ReplyDelete
 4. நல்ல அறிமுகம்..

  ReplyDelete
 5. தடம் பதித்த பரமேஸ்வரிக்கு தங்களின் இனிய வடம் பிடித்த அறிமுகம் அவருக்கு பெருமையன்றோ..

  ReplyDelete
  Replies
  1. அவருடையது மிக அருமையான வலை தோழர். மிக்க நன்றி

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...