Showing posts with label பத்துக் கிலோ ஞானம். Show all posts
Showing posts with label பத்துக் கிலோ ஞானம். Show all posts

Tuesday, February 16, 2016

16 தெளிவு

எதிர் பார்த்ததுதான்.


நான் பள்ளியில் நுழையும் போது ஏழெட்டுபேர் அலுவலக வாயிலில் நின்று
கொண்டிருந்தார்கள்.

வணங்கினார்கள்.

வணங்கினேன்.

"தலைமை ஆசிரியர் வரட்டும். பேசிக்கலாம் ," சொல்லிவிட்டு கையொப்பமிட்டு
விட்டு ஆசிரியர் அறைக்குப் போய் விட்டேன்.

நாங்கள்தான் வரச் சொல்லியிருந்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் மதியம் மூன்று மணிபோல பதினோராம் வகுப்பு
பெண் குழந்தைகள் அலறிக் கொண்டு ஓடி வந்தனர்.

"சார், சிலம்பு  தண்ணியப் போட்டுட்டு வந்து வாந்தி எடுத்துகிட்டு
கிடக்கிறான் , சார்." பயமும் அழுகையுமாய் நின்றார்கள்.

வகுப்புக்குப் போனோம். பெண் பிள்ளைகள் வகுப்பிலிருந்து வெளியேறி
மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள்.மாணவர்கள் வகுப்புக்குள்ளேயே
சுவரோரமாய் ஒதுங்கிக் கிடந்தார்கள்.

மூக்கைப் பிடித்துக் கொண்டோம். தாறு மாறாய் விழுந்து கிடந்தான்.

தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் செல்வத்தைப் பார்த்தார். பொருளறிந்த செல்வம்
ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்தார்.

ஆட்டோவில் தூக்கிப் போட்டு பையனை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
பணியாட்களைக் கொண்டு வகுப்பைக் கழுவி சுத்தம் செய்தோம்.

மிரண்டுபோய் நின்ற பெண்பிள்ளைகளிடம் சென்ற தலைமை ஆசிரியர்
"பயப்படாதீங்கம்மா, நான் பார்த்துக்கிறேன்" என்றார்.

எப்பப் பார்த்தாலும் இப்படித்தான் சார் .  பான்பராக் போடுவது,
தண்ணியடித்துவிட்டு வருவது என்று ரகளை சார்," கொதித்துப் பதறினார்கள்.

" சரி, நான் பார்த்துக்கரேம்மா. நீங்க அப்பவே சொல்லியிருந்தா கண்டிச்சிருப்பேன்ல,"

"சொன்னாத் திட்டுவான்னு பயம் சார்"

சரி, சரி , நான் பார்த்துக்கறேன் " என்றவர்

" கொஞ்சம் கூட வா எட்வின்" என்றார்.

அதை அவர் சொல்லியிருக்கவே தேவையில்லை.

"என்ன செய்யலாம். ஒரு ஸ்டாப் மீட்டிங் போடலாமா?"

"போடாலாம்னே. நாளைக்குப் போடுவோம். நாமளும் பதறவேண்டாம்."

"ஆமாம் சார். அதுதான் சரி.," என்று நான் சொன்னதை ஆமோதித்தார் கனகராஜ் சார்.

"நாளைக்கு உணவு இடை வேளையில் ஸ்டாப் மீட்டிங். சர்குலர் ரெடி பண்ணுங்க."

" சரிங்கண்ணே" என்றேன்.

"அடுத்த நாள் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர்.
அவர்களது கொதிநிலை அதிகமாக இருந்தது. அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இறுதியாக பேசிக்கொண்டு வந்து எல்லோரும் ஒரே குரலெடுத்து சொன்னார்கள்,

"அவனுக்கு டி.சி யக் குடுங்க சார். இல்லேன்னா நாங்க எங்க புள்ளைங்க டி.சிய வாங்கிட்டு வேற பள்ளிக்கூடம் போய்விடுவோம்," எனப் பொரிந்தனர். மிகுந்த
பொறுமையோடும் அக்கறையோடும் அவர்களை அணுகிய தலைமை ஆசிரியர் "பயப்படாதீங்க. எனக்கும் இருபது வயசுல ஒரு பொண்ணு இருக்கா. உங்க வலி என்னன்னு எனக்கும் தெரியும். நான் பார்த்துக்கிறேன். நம்பிப் போங்க," என்றார்.

கட்டுப் பட்டார்கள், கலைந்து போனார்கள்.

மதியம் கூடிய ஆசிரியர் கூட்டத்திலும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்றே
ஏக மனதாய் முடிவெடுக்கப் பட்டது.
அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனது பெற்றோரை வரச்சொல்லியிருந்தோம்.

அவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியர் வந்ததும் வணங்கியிருக்கிறார்கள்.

" கொஞ்சம் பொறுங்க, பிரேயர் முடிஞ்சதும் கூப்பிடறேன்."

"சரிங்க சார்"

வகுப்புகள் தொடங்கியதும் சில ஆசிரியர்களை அழைத்தார் தலைமை ஆசிரியர்.
அந்தப் பையனது பெற்றோர்களையும் வரச் சொன்னார்.

" ஓங்கப் பையன் என்ன காரியம் செஞ்சிருக்கான் தெரியுமா?,"

"கேள்விப் பட்டோங்க சார் இனிமே இப்படி நடக்காமப் பார்த்துக்கறோம் சார்.
கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார். அவன் செஞ்ச தப்புக்கு நாங்க மன்னிப்பு
கேட்டுக்கறோம்."

"ஆயிரம் பொம்பளப் பசங்க படிக்கிற பள்ளிக்கூடம்  இது. ஓங்கப்
பொண்ணு இங்க படிச்சா  சும்மா விட்டுடுவீங்களா?"

" தப்புதாங்க, தயவு பண்ணி மன்னிச்சுக்கங்க சார்."

இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் நீண்டது.

எப்படியாவது மாற்றுச் சான்றிதழை வழங்கிவிட வேண்டும் என்பதில் நாங்கள்
பிடிவாதமாய் இருந்தோம். இல்லாது போனால் வருங்காலத்தில் மாணவர்களிடம் பயம்
இருக்காது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அப்போதுதான் பெண் பிள்ளைகளின்
பெற்றோர்கள் சமாதானமடைவார்கள் என்பது எங்கள் எண்ணம்.

அவர்களொஅ என்ன செய்தேனும் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றி
சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள்.

இறுதியாக வேறு வழியேயின்றி உரத்தக் குரலெடுத்து தலைமை ஆசிரியர் சொன்னார்,
"வேற வழியே இல்ல, டி.சி ய வாங்கிட்டுப் போங்க."

அதுவரை கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணீரோடு சுவரோடு சுவராய் சாய்ந்து
நின்று கொண்டிருந்த அவனது அம்மா வெடித்தார்,

"கொடுங்க சார், ஏம்புள்ள எப்படியோ நாசமாப் போகட்டும். நீங்க ஒங்க
பள்ளிக்கூடத்தக் கட்டிக்கிட்டு நல்லா இருங்க"

"என்னம்மா பேசுற நீ"

கூட வந்தவர்களும் , "நீ செத்த சும்மா இரும்மா. நாங்க பார்த்துக்கறோம்,
கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நில்லு," என்றனர்.

இந்த அம்மாவின் பேச்சினால் காரியம் கேட்டுவிடக் கூடாது என்று பயந்தனர்.

"உடுங்கய்யா எல்லோரும். ஏம்புள்ள எப்படியோ  நாசமாப் போகட்டும்" மீண்டும்
வெடித்தார்.

ஓம் பய என்ன செஞ்சிருக்கான்., நீ ஏன்னா பேசுற" தலைமை ஆசிரியர் கேட்கவும்

"அவன் யோக்கியன்னா சார் சொல்றோம். அவன் குடிச்சுட்டு பள்ளிக் கூடத்துக்கு
மட்டுமா சார் வரான். தண்ணியப் போட்டுட்டுதான் பல நேரம் வீட்டுக்கும்
வரான்."

" அப்பா கண்டிச்சு வைக்க வேணாமா?"

"கண்டிச்சுதான் வைக்கிறேன் சார். ஆனா வீட்ட விட்டு வெளிய துரத்துல"

இதற்கு அடுத்து அந்த அம்மா பேசியதுதான் எங்களை அதிரச் செய்தது.

"வீட்டுக்கு குடிச்சுட்டு வரானேன்னு என்னைக்காச்சும் அவங்கிட்ட 'இப்படிக்
குடிச்சுப் புட்டு வீட்டுக்கு வாரயே யாரடா ஒன்னோட கிளாஸ் சார், அவர
கூட்டிட்டு வான்னு என்னைக்காவது சொல்லியிருக்கேனா? சார்"

கிறுக்கு புடிச்சுருக்காமா ஒனக்கு?"

"கெட்டுப் போற புள்ளைங்கள வீட்டுக்கு அனுப்பிட்டு மத்தப் புள்ளைங்களுக்கு
பாடம் நடத்தறதுக்கா சார் ஸ்கூலு? கெட்டு சீரழியிற பசங்கள நல்ல
வழிப்படுத்தி திருத்தரதுக்குத்தான் சார் பள்ளிக்கூடம், சம்பளம் எல்லாம்"

அந்த அம்மாவை இழுத்துக் கொண்டு போனார்கள்.

பள்ளிகளில், கல்லூரிகளில் , ஆசிரியர் பயிற்சியில் விளங்காத ஏதா ஒன்றை
அந்த அம்மாவின் பேச்சு தெளிவு படுத்தியது

Monday, February 15, 2016

பூக்களை விற்ற காசில்...

" நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில்
கவிதை"
என்று ஒரு முறை எழுதினேன். எப்போதாவதுதான் அப்படி ஒரு அபூர்வமான வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தற்கரிய  அபூர்வமான வாய்ப்பு அன்று கிடைத்தது.

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் குடித்து வரலாம் என்று கடைக்குப் போனோம். தேநீர் கேட்டால் ஆளுக்கொரு வடையையும் கட்டாயப் படுத்தித் தந்தார் கடைக்காரர்.

ஒரே உப்பு. வாயில் போட்ட துண்டு வடையைத் துப்பி விட்டு எஞ்சிய வடையை தொட்டியில் கிடாசிவிட்டு வடைத் தாளைக் கசக்கி எறியப் போனபோதுதான் அதில் கவிதை மாதிரி ஏதோ கண்ணில் பட்டது.

பார்த்தேன். கவிதையேதான்.

"பூக்களை
விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்"  

என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆஹா! என்னமாய் எழுதியிருக்கிறான். ஆமாம் பூக்களை விற்ற காசில் பூக்களை விட அழகாய் எதை வாங்கி விட முடியும்? அழகான அழகியல்.

ஒன்று துருக்கியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது துருக்கி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து வாசித்துவிட வேண்டும். இப்படியாக அந்தக் கவிதையின் அழகில் லயித்து மூழ்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு மூலையில் உறுத்தவும் தொடங்கியது.

இது மேல் தட்டு மற்றும் நடுத் தட்டு வர்க்கச் சிந்தனையல்லவா? நமக்குள்ளும் இது வந்துவிட்டதா? நாம் வரட்டுத்தனமான அழகியலுக்கு அப்பாற்பட்டவன் என்பதுதானே நமது அடையாளம். அது பொய்யா? என்று ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

சாலை ஓரத்தில் வெயில் என்றால் காய்ந்து கொண்டும், மழை என்றால் நனைந்துகொண்டும் பூ விற்கும் பெண்ணிற்கு கவிழ்த்துப் போட்ட கூடையில் சுற்றப் பட்டுள்ள பூ முழுக்க விற்றால்தான் கந்து வட்டிக் காரனுக்கு அழுதது போக வீட்டில் உள்ள நான்கு வயிருகளுக்கும் அரை வயிறாவது நிறையும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வழக்கமாய் பேருந்துகள் நிற்குமிடங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் சின்னஞ்சிறிய பையன்களும், பெண் குழந்தைகளும் கைகளிலே சின்ன சின்னதாய் மல்லிககை மற்றும் கனகாம்பரப் பூப் பந்துகளை வைத்துக் கொண்டு பூ விற்கும் காட்சிகளை பயணங்களின் போது நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

எவ்வளவு கடினமான வேலை தெரியுமா இது? தேசிய நெடுஞ்சாலைகளை உயிரை வெறுத்துக் கடப்பதும், பேருந்து நின்று பயணிகளை அவசரம் அவசரமாய் ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கிளம்பும் முன் கிடைக்கும் அந்த சின்ன கால இடைவெளிக்குள் கஸ்டமர்களை பிடிக்க வேண்டும், பூவைக் கொடுத்து, காசு வாங்கி மீதியைத் தரவேண்டும்.

சில நேரங்களில் பூவைக் கொடுத்துவிட்டு அந்தப்  பிள்ளை, காசுக்காக காத்து நிற்கும் அவஸ்த்தை இருக்கிறது பாருங்கள், அதைச் சொல்லி மாளாது. பல நேரங்களில் காசைப் பெறுவதற்குள் பேருந்து நகரத் தொடங்கி விடும்.காசினை வாங்குவதற்காக அந்த சிறுவர்கள் பேருந்தோடே கூட ஓடி வருவதையும் பார்க்க முடியும்.

பூவை வாங்கியவர்கள் காசை எடுத்து வெளியே எறிவதையும் நம்மால் பார்க்க முடியும். அதைப் பொறுக்க அந்த சிறுவர்கள் படுகிற அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா உசிரே போய்விடும். சரியான சில்லறை எடுக்க இயலாத சிலர் பூக்களை எறிந்துவிடுவதும் உண்டு. கீழே விழுந்த பூவை மீண்டும் விற்கவும் முடியாது.

சிலரோ இரண்டையும் செய்யாமல் போய் விடுவதும் உண்டு.

இந்தக் குழந்தைகளின் அவலத்தை, துயரத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

இந்தக் குழந்தைகளிடமும், பூக்காரப் பெண்களிடமும் போய்
"பூகளை விற்ற காசில்
என்ன வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்?
என்று கேட்டால் நம்மை கொன்று போட மாட்டார்களா?

அவர்களைப் பொறுத்தவரை பூ என்பது ஒரு வணிகப் பொருள் என்கிற எல்லை தாண்டி அவர்களை இந்தச் சமூகம் எங்கே யோசிக்க அனுமதித்திருக்கிறது? பூக்களின் மலர்ச்சியையோ அழகையோ ரசித்து அனுபவிக்கிற அவகாசத்தை அவர்களது வயிறுகள் அவர்களுக்கு வழங்கியதே இல்லை.

எனில் இந்தக் கவிதை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதா? இதை ரசிக்க முடிகிறதே என்னால். என்றால் நான் உழைக்கும் திரளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறேனா?

இரண்டும் இல்லை. உழைக்கும் மக்களும் பூக்களின் அழகை, இந்தக் கவிதையின் அழகை ரசிக்கிற வாய்ப்பை பெறுகிற மாதிரி அவர்களது வாழ்க்கையை மாற்றித் தருகிற ஒரு போராட்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் போனதுதான் குற்றம்.

அந்தத் தாளில் இருந்த செய்தியை வாசித்தேன்.

கஸ்தூரி என்கிற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவி பள்ளிக்குப் போன நேரம் போக ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து பூ விற்கிறாள். வியாபாரம் இல்லாத நேரத்தில் அங்கேயே அமர்ந்து படிக்கிறாள். அங்குள்ள  ஆட்டோ ஓட்டுநர்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பூ விற்ற காசைக் கொண்டுதான் அந்தக் குழந்தை படிக்கிறாள் என்பதாக அந்த செய்தி நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அபாண்டமாக  பேசும் உத்தம சிகாமணிகளுக்கு இந்தச் செய்தி வாசிக்க கிடைக்குமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

" மலை வாழையல்லவோ கல்வி" என்கிறார் பாரதுதாசன். வாழைப் பழங்களிலே  மலை வாழை மிகவும் சுவையானது என்பதால் அப்படிச் சொன்னார். வாழைப் பழங்களிலேயே மலை வாழைப் பழம் மிகவும் அதிக விலையானது. கல்வியும் இன்று எதையும் விடவுமதிக விலையில் விற்பதால் "மலை வாழை அல்லவோ கல்வி" என்பது இன்னொரு விதத்திலும்  மிக அசிங்கமாகப் பொருந்தவே செய்கிறது.

" சொட்டுக் குழம்புக்கும்
சோற்றுக்கும்
கையிலொரு துட்டுக்கும்
கண்ணயர்ந்து தூங்குவதற்கும்
கட்டத் துணிக்கும்
நல்ல
பணக்காரணாக்கும் படிப்பு"  
என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால்  நொந்தே போயிருப்பான்.

பூக்களை விற்று அதைவிட அழகாய் என்ன வாங்கப் போகிறீர்கள் என்கிறான் கவிஞன். பூக்களை விற்றுதான் கல்வியை வாங்குகிறேன் என்கிறாள் குழந்தை கஸ்தூரி.

ஒருமுறை சமயபுரம் டோல்கேட்டில் பூ விற்கும் ஒரு சிறுவனைக் கேட்டேன்,

"இப்படி ரிஸ்க் எடுத்து ஓடி ஓடி பூ விற்க்கிறாயே, எதுக்குப்பா?"

"டியூஷன் பீஸ், எக்ஸாம் பீஸெல்லாம் கட்டனும் சார்."

சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.

குழந்தைகள் கல்வி கற்பதற்காக இப்படி உயிர் போக உழைக்க வேண்டிய நிலமை கண்டு நாம் சத்தியமாய் வெட்கப் படத்தான் வேண்டாமா?

ஒன்று திரண்டு அரசைக் கேள்வி கேட்க வேண்டாமா?
அதற்கு தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு தாண்டி கொஞ்சம் சொரனையோடு கூடிய அக்கறை வேண்டு
ஆமாம் அது நமக்கு எப்போது வரும்?

Sunday, February 14, 2016

18 ஏற்க இயலவில்லை ...

(முன் குறிப்பு : 16.12.2010 அன்று எழுதியது)

ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு என்கிறார்கள். எனில் இதில் எத்தனை ஆயிரம் கோடிகள் ஊழலாய் மாறியிருக்க வாய்ப்புண்டு என கணக்கிட்டுப் பார்க்கிறார்கள். எனில் யார் யாருக்கு எவ்வளவு கை மாறியிருக்கும் என ஊருக்கே கேட்கும்படி ரகசியமாய் கிசுகிசுக்கிறார்கள்.  இது குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரனை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

அமைச்சர் மீது வழக்குப் போட அனுமதி கேட்டபோது எதுவுமே பேசாமல் மௌனம் காத்தமைக்காக பிரதமர் அலுவலகத்தை உச்சநீதி மன்றம் கண்டனித்துள்ளது. இன்னின்ன காரணங்களால் அனுமதிக்க இயலாது என்றாவது சொல்லியிருக்க வேண்டாமா என்று கேட்கிறார்கள் நீதியரசர்கள். அந்த மௌனத்தை உள்நோக்கம் கலந்த அலட்சியத்தின் உச்சம் என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.

தனது அறுபது ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் உச்சநீதி மன்றத்தின் அதிருப்தி இந்த அளவுக்கு முன்னெப்போதும் பிரதமர் அலுவலகத்தின் மீது விழுந்ததில்லை என்கிறார் அத்வானி. பிரதமர் ஒருவரிடம் உச்சநீதி மன்றம் கேள்வி கேட்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்கிறார்கள் யெச்சூரியும், பிருந்தா காரத்தும்.

இந்த விஷயத்தில் தான் சட்டத்திற்கு உட்பட்டும்,  பிரதமரின்  வழிகாட்டுதலின்  படியும்தான்  நடந்து  கொண்டுள்ளதாகவும், முடங்கிக் கிடக்கும் பாராளுமன்றம் சீராய் நடைபெற வேண்டும் என்பதற்காகவே தான் பதவி வில்கியுள்ளதாகவும், இதை செய்ததனால் தன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டுகளைத் தான்  ஏற்பதாகக்  கொள்ளக் கூடாது என்றும் ராசா சொல்கிறார்.

ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடியை சாக்கிலே கட்டினால் எத்தனை லாரிகளுக்கு தேறும் என்பது குத்து மதிப்பாகக் கூட நமக்குத் தெரியாது. திரும்பிய திசையெங்கும், கண்னில் படுகிற யாவரும் இது பற்றியே பேசுகிறார்கள். போக இதை விட முக்கியமான விஷயம் குறித்து தேவையான அளவிற்கு விவாதம் தொடங்கப் படவேயில்லை என்று படுவதால் அது குறித்து பேசலாம் என்று படுகிறது.

எந்த தொலைக் காட்சி என்று சரியாய் நினைவில்லை. சுப.வீரபாண்டியன் அய்யாதான் தலைமை. அந்த நிகழ்ச்சியில் உச்சத்துக்கே ஏறி நின்று பேசினார் ராசா. " நிரம்பி வழியும் இந்த அவையில் வேண்டுமானால் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது கிராமத்தில் எனது ஜாதிதான் எனது முகவரி" என்கிற மாதிரி உணர்ச்சிப் பிழம்பாய் ராசா அவர்கள் வெடித்தபோது அதில் உள்ள நியாயம் சுட்டது. சத்தியமாய் சொல்கிறேன், பனித்த கண்களோடுதான் கை தட்டினேன். கலைஞரும், கனிமொழியும், ரஜினியும் கூட அதே மனநிலையில் இருந்ததையே தொலைக் காட்சியில் பார்க்க முடிந்தது.

ஸ்பெக்ட்ராம் விஷயம் கசியத் தொடங்கிய நாள் முதலே "ராசா ஒரு தலித் என்பதால் எப்படி வேண்டுமானாலும்  அபாண்டமாக பேசலாமா?" என்கிற  தொனியில்  தொடர்ந்து  பேசி  வருகிறார்  கலைஞர். நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக நம்பப் படுகிறபெரும் இழப்பிற்கு பெருமளவு பொறுப்பு ராசாவுக்கு என்பது  குற்றச்சாட்டு. இது பொய்யென நிரூபிக்கப் படுமானால் அந்த நிமிடமே( அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் படுகிறது ) இப்போது உள்ள உசரத்தைவிட பல மடங்கு உசரத்திற்கு அவர் போய்விடுவார் என்பதும் மாறாக ருசுப்பிக்கப் படுமானால் அதன் விளைவுகள் என்ன என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

எதிர்வாதம் செய்வதற்கும்,  தன்னை நிரபராதி என மெய்ப்பித்துக் கொள்வதற்கும் சகல உரிமைகளையும்  சேர்த்தே  தந்துதான் இந்தக் குற்றச் சாட்டும் வைக்கப் படுகிறது.  " தலித் என்பதால் இத்தனை அபாண்டமா?" என்கிற மாதிரி வெதும்பும் கலைஞரின் மேலான பார்வைக்கு சில சந்தேகங்களை, தெளிவு பெறும் பொருட்டு வரிசைப் படுத்துகிறேன்.

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகே, இன்னும் புரியும்படிக்கு  சொல்வதெனில் கலைஞர் அவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் புரட்சித்த கல்லக்குடிக்கு மிக அருகே திண்ணியம் என்றொரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவராய் செயல் படும் தலைவியின் கணவரிடம்  (அவர் ஓய்வு பெற்ர தலைமை ஆசிரியர் என்பதுதான் கொடுமயிலுங் கொடுமை ) தனது தங்கைக்கு தொகுப்பு வீடு ஒதுக்கித் தருமாறு ஒரு தொகையினத் தருகிறார் ஒருவர். அவர் ஒரு தலித். அநேகமாக அவர் அந்த ஊரின் தலையாரியாக இருக்கக் கூடும். வீடு ஒதுக்கப் படாதததல் கொடுத்த்ப் பணத்தைத் திரும்பக் கேட்கிறார். கிடைக்காது போகவே தண்டோரா போட்டு விஷயத்தை மக்களிடம் கொண்டு போகிறார்.

கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்டதற்காகத்தான் கலைஞர் அவர்களே திண்னியத்தில் ஒரு தலித் பீத் தண்ணீ குடிக்க நேர்ந்தது.

"தலித் என்பதால் ராசா மீது அபாண்டமாய் குற்றம் சுமத்துகிறீர்களே. நியாயமா?  என்று கொதிக்கும் கலைஞர் அவர்களே...

திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் ஆதிக்க சாதிகள் பீத் தண்ணியை ஊற்ரியபோது " தலித் என்பதால் பீத் தண்ணியை ஊற்றுவீர்களா பாவிகளே" என்று ஏன் கலைஞரே நீங்கள் குமுறவே இல்லை?

உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு நிழற்குடை அமைப்பதற்கு திரு. டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகை தருகிறார். ஆனால் அங்கே நிழற்குடை அமைத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என சொல்லி அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மறுத்து விட்டார் என்ற சேதி எனக்கே தெரியும் போது உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல இயலாது.

தலித்துகளுக்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் என்ன மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும்?. பச்சையாக சொல்வதெனில் அங்கே நிழற்குடை அமைத்தால் தலித்துகள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வார்கள். இது ஆதிக்க சாதிக் காரர்களை கொதிப் படையச் செய்யும். அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு கெடும் என்பதுதானே மாவட்ட ஆட்சித் தலைவரின் தயக்கம்.

தலித்துக்கள் என்றால் அவ்வளவு கேவலமா? அவர்கள் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமா?. வரட்டுமே.  அதை எதிர் கொள்ளத் துப்பில்லை  என்றால் எங்காவது ஓடி விடுங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து ஏன் கலைஞரே நீங்கள் கேட்க வில்லை?

உச்சமாக ஒன்றை சொல்லிவிட வேண்டும். எது எப்படியோ அதை விசாரனை தீர்மானிக்கட்டும். ஆனால் பெரம்பலூர் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே பெரம்பலூருக்கு  அதிகம் செய்தவர் ராசா அவர்கள்.
பெரம்பலூர் தனித் தொகுதியிலிருந்து மாறி பொதுத் தொகுதியானவுடன்  நீங்கள் என்ன செய்தீர்கள்?  பெரம்பலூர்க் காரரான ராசாவை நீலகிரிக்கு அனுப்பினீர்கள். 

பொதுத் தொகுதியாய் மாறினாலும் ராசாதான் பெரம்பலூர் வேட்ப்பாளர் என்று ஏன் கலைஞரே நீங்கள் அறிவிக்க வில்லை.

பொதுத் தொகுதியில் தலித் ஒருவருக்கு கட்சிக்காரர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் என்று அஞ்சினீர்களா? அல்லது பொதுத் தொகுதியில் தலித் நிற்க்கக் கூடாது என்பதுதான் உங்கள் முடிவுமா? எனக்கென்னவோ அப்படித்தான் என்று தோன்றுகிறது கலைஞர் அவர்களே.

எனில், சேரியில் பிறந்த தலித்  சேரியில்தான் வாழ வேண்டும்,  தனித் தொகுதியில்தான் நிற்க வேண்டுமா கலைஞர் அவர்களே?

இதை, உங்களுக்குத் தனித் தொகுதி இருப்பதால் பொது தொகுதி கிடையாது என்றும்  கொள்ள  முடியுமே  கலைஞர் அவர்களே? 

ஆமாம் எனில் உங்களுக்கு சேரி இருப்பதால் பொதுத் தெரு கிடையாது என்றும் ஆகாதா கலைஞர் அவர்களே.

"ஒரு தலித் என்பதால் ராசாவின்  மீது அபாண்டமாக குற்றம் சுமத்தலாமா? என்ற உங்கள் கூற்றை ஏற்க இயலவில்லை , மன்னியுங்கள் கலைஞர் அவர்களே.

Saturday, February 13, 2016

19 பட்டினிக்கு வயது பத்து

யாருக்காகவோ அவர்கள் நீண்ட நேரமாய்க் காத்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கசிந்த விடுதலை வேட்கையும், கொந்தளித்துப் பொங்கிய உணர்வு நிலையும் களம் நுழையும் முன்னால் தங்களது தலைவனின் கட்டளைக்காக காத்திருக்கும் போராளிகளின் நிலையை ஒத்திருந்தது.  ஆனால் அவர்கள் காத்திருந்தது அவர்களது கவிஞனுக்காக. தங்களது விடுதலைப் போருக்கான வெறியை, ஆவேசத்தை, வேட்கையை அவனது நான்கைந்து வரிகளால் சாணை பிடித்து கூர் தீட்டிக்கொள்ளவே அவர்கள் காத்துக் கிடந்தார்கள். 
அவர்கள் அந்தக் கவிஞனின் ஜனங்கள்: அவனோ அந்த ஜனங்களின் கவிஞன். 
Irom_Sharmilaஅவன் மாயோகோவஸ்கி 
"தோழர்களே..." 
அவனது ஒற்றை வார்த்தையில் கொந்தளித்து, ஆர்ப்பரித்து அடங்கியது கூட்டம். 
தொடர்ந்தான். 
"தோழர்களே !
லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும் ஏந்தி..." 
அவனை முடிக்க விடவில்லை கூட்டம். ஒரே குரலெடுத்து உரக்க முழங்கினார்கள் 
"லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும்
எங்கள் மாயோகோவஸ்கியை
இதயங்களிலும் ஏந்தி
களத்திற்கு போகிறோம்" 
உயிரோடு இருக்கும் போதே மாயோகோவஸ்கிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் நமது பாரதி மற்றும் பாரதிதாசன் இருவருக்கும் கிடைக்காத அங்கீகாரம். இன்குலாப் உள்ளிட்ட நமது சமகால மக்கள் கவிகளுக்கும் இதுதான் கதி. என்ன செய்வது உயிரோடு இருக்கும் வரை நல்லவர்களைக் கொண்டாடுவதில்லை என்று நாம்தான் யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்து விட்டோமே. 
அதனால்தான் பெரும்பான்மை ஆசு கவிகள் காசு கவிகளாய் மாறி சொகுசாகிப் போனார்கள். 
எழுதுவது, பதிப்பிப்பது, பேட்டிகளை அளிப்பது, வாழ்வை சொகுசாக்கிக் கொள்வது என்று சுருங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் பசியில், அவலத்தில், போராட்டத்தில் அவர்களோடு நிற்பது என்பதாக தனது எழுத்துக்கு வாழ்க்கையை பொழிப்புரையாக தந்தவன் மாயோகோவஸ்கி. அவனது நேர்மைக்கும் தியாகத்திற்கும் கொஞ்சமும் குறையாத அங்கீகாரத்தை மக்கள் அவனுக்கு வழங்கினார்கள் என்பதும் சேர்த்தே கொள்ளத் தக்கது. 
"பேனாதான் இருக்கும்
எப்போதும்
என் கைகளில்
என்று சொல்ல
நான் ஒன்றும் நீ அல்ல
நண்பனே
தேவைப்படுமெனில்
என் கைகள் காலம் தரும்
கருவி ஏந்தும்" 
என்று வண்ணை வளவன் ஒரு முறை எழுதியதாய் ஞாபகம். இந்த வரிகளில் பெருகி வழியும் மாயோகோவஸ்கியின் தாக்கத்தை யாருஇல்லை என்று சொல்லிவிட முடியாது. 
பரவசமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் தம்பி சுபாஷ் (கன்னகன்) அவர்களின் "பறவைக்குள் அடையும் கூடு" நூலை வெளியிட்டுப் பேசும்போது மனதைப் பிசையும் ஒரு காட்சியை ஏதோ ஒரு வேற்று மொழிப் படத்திலிருந்தோ சிறுகதையிலிருந்தோ சொன்னார் எஸ். ராமகிருஷ்ணன். 
குழந்தைகளையும் கூடைகளையும் முதுகுகளிலும் ரணங்களையும் வலியையும் தங்கள் உடல் முழுமையும் சுமந்தபடி தேயிலை கிள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். 
முதுகிலே சுமக்கும் தங்களது குழந்தைகளுக்கு பசியெடுத்து அலறினாலும் அவர்களுக்கு தாய்ப் பால் கொடுக்க அனுமதித்ததில்லை ஆண்டைகள். பசியால் அலறி அலறியே செத்துப் போன குழந்தைகள் ஏராளம், மாரிலே பால் கட்டி இறந்துபோன தாய்மார்களும் ஏராளம்.  
கீழத் தஞ்சையில் நம் அம்மாயி மற்றும் அப்பாயிகளுக்கும் கிடைத்த அதே அனுபவம். உலகம் முழுவதும் ஆண்டைகள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். ஒரே வித்தியாசம் அவர்கள் குழந்தைகளை முதுகிலே சுமந்தபடி வேலை பார்த்தார்கள். நம் தாய்மார்கள் வரப்போரத்தில் இருக்கும் மரங்களின் கிளைகளில் தொட்டில் கட்டிப் போட்டிருப்பார்கள். 
இந்த வேதனையிலிருந்து தப்பிக்க நமது தாய்மார்கள் ஒரு மார்க்கம் கண்டனர். மார்கட்டி வலி எடுக்கும் பெண்ணை மற்ற பெண்கள் மறைத்தபடி சுற்றி நின்று கொள்வார்கள். அந்தப் பெண் தனது முலைப் பாலை வயலிலே பீய்ச்சி தன்னைத் தற்காத்துக் கொள்வாள். இதிலுங்கூட தாய்மார்களைக் காப்பாற்ற முடிந்ததே தவிர குழந்தைகளின் இழப்பை மட்டுப்படுத்த முடியவில்லை.  
இப்படி காவேரித் தண்ணீரோடு எங்கள் தாய்மார்களின் தாய்ப் பாலையும் சேர்த்தே குடித்து வளர்ந்த நெல் சோறு சாப்பிட்டு வளர்ந்த ஒரு பெரியவர் தான் சொன்னார் "வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள்" என்று. அவரிடம் போய் வந்த பத்துப் பன்னிரண்டு பேரைத் தவிர மற்றவர்களை அவருக்கு அப்படித்தான் தெரியும் பெருந்தன்மையோ என்னவோ "உழைக்கும் பெண்களில் பெரும் பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு எப்படி ஐயா தெரியும்?" என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம் காக்கிறது தமிழ்ச் சமூகம்.  
அந்தக் கதைக்கு வருவோம். 
தேயிலைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கி வருகிறான் அவர்களின் கவிஞன். அவர்களது அவலத்தில், வாழ்வில், வலியில், கண்ணீரில், புன்னகையில் அவர்களோடு ஒருவனாய், அவர்களில் ஒருவனாய் அவர்களிடமிருந்து ஒரு அங்குலம் கூட அந்நியப்படாதவனாய் வாழ்பவன். அந்த ஜனங்கள் தங்கள் கவிஞனது வாக்கு பலிக்கும் என்று நம்பினார்கள்.  புன்னகைத்தவாறே அந்தப் பெண்களின் அருகே வந்தான் கவிஞன். அவனைக் கண்டதும் அவர்களது கவலைகளும் வலியும் பறந்தே போனது. மலர்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார்கள். 
"நலமா?" 
நலமென்று எப்படி சொல்ல முடியும் அவர்களால்.  
"நலமென்று கூட சொல்ல முடியாமல் என் ஜனங்களை மௌனக் கடலுக்குள் தள்ளியது எது?"  
"உம்மால் எமக்கொன்று ஆக வேண்டும் கவியே!"  
"என்னிடம் கேட்க என்ன தயக்கம். எது வேண்டும், கேள் தாயே!" 
"முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு கவியே!. மார் கட்டாது நாங்களும் பசியாறி குழந்தைகளும் பிளைத்துக் கொள்வோம்." 
அவர்களது சோகத்தில் கறைந்து நெகிழ்ந்து போன கவிஞன் சொன்னான் "அப்படியே ஆகட்டும்" 
முதுகுக்கு நகர்ந்தன முலைகள். 
நடக்குமா? மூடத்தனமல்லவா? அதுபற்றியெல்லாம் நாம் கவலைப்படப் போவதில்லை. தங்களுக்காகவும் தங்களோடும் வாழ்ந்த கவிஞன் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் காட்டவே மேற்சொன்ன காட்சியை ஞாபகம் கொண்டோம்.  
சமீபத்தில் "பெண்ணியம்" இணையதளம் வழியே ஒரு மாபெரும் மக்கள் கவியைக் கண்டேன். வாசித்து முடிந்ததும் கண்ணீரைக் கட்டுப்படுத்த படாத கஷ்டம் பட்டேன்.  
"ஐரோம் ஷர்மிளா" மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கவிஞர். 1958ஆம் ஆண்டு "ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்" கொண்டு வரப்பட்டது. இதன்படி சந்தேகப்படும் யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம், சுட்டும் கொல்லலாம். இந்த சட்டம் காவு கொண்ட எண்ணிக்கை மிக அதிகம். "பாலியல் இம்சைகள்" பற்றி எழுதினால் நீளும், நீளும் , நீண்டுகொண்டே போகும். 
இதைக் கண்டித்து 02.11.2000 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா. பல் துலக்கினால் வாய் வழியே நீர் போய்விடும் என்பதால் பல் துலக்குவதைத் தவிர்க்கிறார். ஒரு பருத்தித் துணியால் பற்களைத் துடைத்துக் கொள்கிறார். 
அவரைக் கைது செய்த அரசாங்கம் கட்டாயப்படுத்தி மூக்கு வழியே அவருக்கு திரவ உணவை செலுத்திக் கொண்டிருக்கிறது.
எனக்கு இருக்கிற கேள்வி ஒன்றுதான். தங்களோடும் தங்களுக்காகவும் வாழ்ந்த கவிகளை அந்தந்த சமூகங்கள் அங்கீகரித்து கொண்டாடியிருக்கின்றன. 
"கல்வி பாஷை"யில் சொன்னால் இரண்டு பிரிவேளைகளுக்கும் சற்று குறைவான நேரமே நடைபெற்ற, மிகச் சரியாய் சொல்வதெனில் "காலை சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில்" நடந்த ஒரு கூத்தினை "உண்ணாவிரதம்" என்றும் "தியாகத்தின் உச்சம்" என்றும் கூத்தாடிக் கொண்டாடிய நாம், தனது உடலை, இளமையை, வாழ்க்கையை தியாகித்துப் போராடும் இந்தப் போராளிக்கு என்ன செய்யப் போகிறோம்? 
பின் குறிப்பு 
இந்தக் கட்டுரையை முடிக்கிற தருவாயில் ஐரினா ஷர்மிளா விடுதலை செய்யப்பட்ட செய்தி வந்தது. இந்த தகவலை பத்துப் பேரிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்னமே சுகன் சொன்னார் "திரும்பவும் அந்த அம்மாவ கைது பண்ணீட்டாங்களாம் எட்வின்" 

பின் குறிப்பு: இதை எழுதி பத்து வருடமிருக்கும்

Thursday, March 21, 2013

என்ன வாங்கிவிடப் போகிறீர்கள்...



" நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில் 
கவிதை"

என்று ஒரு முறை எழுதினேன். எப்போதாவதுதான் அப்படி ஒரு அபூர்வமான வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தற்கரிய  அபூர்வமான வாய்ப்பு அன்று கிடைத்தது.

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் குடித்து வரலாம் என்று கடைக்குப் போனோம். தேநீர் கேட்டால் ஆளுக்கொரு வடையையும் கட்டாயப் படுத்தித் தந்தார் கடைக்காரர்.

ஒரே உப்பு. வாயில் போட்ட துண்டு வடையைத் துப்பி விட்டு எஞ்சிய வடையை தொட்டியில் கிடாசிவிட்டு வடைத் தாளைக் கசக்கி எறியப் போனபோதுதான் அதில் கவிதை மாதிரி ஏதோ கண்ணில் பட்டது.

பார்த்தேன். கவிதையேதான்.

"பூக்களை 
விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்"

என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆஹா! என்னமாய் எழுதியிருக்கிறான். ஆமாம் பூக்களை விற்ற காசில் பூக்களை விட அழகாய் எதை வாங்கி விட முடியும்? அழகான அழகியல்.

ஒன்று துருக்கியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது துருக்கி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து வாசித்துவிட வேண்டும். இப்படியாக அந்தக் கவிதையின் அழகில் லயித்து மூழ்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு மூலையில் உறுத்தவும் தொடங்கியது.

இது மேல் தட்டு மற்றும் நடுத் தட்டு வர்க்கச் சிந்தனையல்லவா? நமக்குள்ளும் இது வந்துவிட்டதா? நாம் வரட்டுத்தனமான அழகியலுக்கு அப்பாற்பட்டவன் என்பதுதானே நமது அடையாளம். அது பொய்யா? என்று ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

சாலை ஓரத்தில் வெய்யில் என்றால் காய்ந்து கொண்டும், மழை என்றால் நனைந்துகொண்டும் பூ விற்கும் பெண்ணிற்கு கவிழ்த்துப் போட்ட கூடையில் சுற்றப் பட்டுள்ள பூ முழுக்க விற்றால்தான் கந்து வட்டிக் காரனுக்கு அழுதது போக வீட்டில் உள்ள நான்கு வயிருகளுக்கும் அரை வயிறாவது நிறையும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வழக்கமாய் பேருந்துகள் நிற்குமிடங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் சின்னஞ்சிறிய பையன்களும், பெண் குழந்தைகளும் கைகளிலே சின்ன சின்னதாய் மல்லிககை மற்றும் கனகாம்பரப் பூப் பந்துகளை வைத்துக் கொண்டு பூ விற்கும் காட்சிகளை பயணச்ங்களின் போது நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

எவ்வளவு கடினமான வேலை தெரியுமா இது? தேசிய நெடுஞ்சாலைகளை உயிரை வெறுத்துக் கடப்பதும், பேருந்து நின்று பயணிகளை அவசரம் அவசரமாய் ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கிளம்பும் முன் கிடைக்கும் அந்த சின்ன கால இடைவெளிக்குள் கஸ்டமர்களை பிடிக்க வேண்டும், பூவைக் கொடுத்து, காசு வாங்கி மீதியைத் தரவேண்டும். 

சில நேரங்களில் பூவைக் கொடுத்துவிட்டு அந்தப்  பிள்ளை, காசுக்காக காத்து நிற்கும் அவஸ்த்தை இருக்கிறது பாருங்கள், அதைச் சொல்லி மாளாது.பல நேரங்களில் காசைப் பெருவதற்குள் பேருந்து நகரத் தொடங்கி விடும்.காசினை வாங்குவதற்காக அந்த சிறுவர்கள் பேருந்தோடே கூட ஓடி வருவதையும் பார்க்க முடியும்.

பூவை வாங்கியவர்கள் காசை எடுத்து வெளியே எறிவதையும் நம்மால் பார்க்க முடியும். அதைபொறுக்க அந்த சிறுவர்கள் படுகிற அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா உசிரே போய்விடும். சரியான சில்லறை எடுக்க இயலாத சிலர் பூக்களை எறிந்துவிடுவதும் உண்டு. கீழே விழுந்த பூவை மீண்டும் விற்கவும் முடியாது.

சிலரோ இரண்டையும் செய்யாமல் போய் விடுவதும் உண்டு.

இந்தக் குழந்தைகளின் அவலத்தை, துயரத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

இந்தக் குழந்தைகளிடமும், பூக்காரப் பெண்களிடமும் போய்

"பூகளை விற்ற காசில் 
என்ன வாங்கிவிடப் போகிறீர்கள் 
பூக்களை விட அழகாய்?

என்று கேட்டால் நம்மை கொன்று போட மாட்டார்களா?

அவர்களைப் பொறுத்தவரை பூ என்பது ஒரு வணிகப் பொருள் என்கிற எல்லை தாண்டி அவர்களை இந்தச் சமூகம் எங்கே யோசிக்க அனுமதித்திருக்கிறது? பூக்களின் மலர்ச்சியையோ அழகையோ ரசித்து அனுபவிக்கிற அவகாசத்தை அவர்களது வயிறுகள் அவர்களுக்கு வழங்கியதே இல்லை.

எனில் இந்தக் கவிதை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதா? இதை ரசிக்க முடிகிறதே என்னால். என்றால் நான் உழைக்கும் திரளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறேனா?

இரண்டும் இல்லை. உழைக்கும் மக்களும் பூக்களின் அழகை, இந்தக் கவிதையின் அழகை ரசிக்கிற வாய்ப்பை பெறுகிற மாதிரி அவர்களது வாழ்க்கையை மாற்றித் தருகிற ஒரு போராட்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் போனதுதான் குற்றம்.

அந்தத் தாளில் இருந்த செய்தியை வாசித்தேன்.

கஸ்தூரி என்கிற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவி பள்ளிக்குப் போன நேரம் போக ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து பூ விற்கிறாள். வியாபாரம் இல்லாத நேரத்தில் அங்கேயே அமர்ந்து படிக்கிறாள். அங்குள்ள  ஆட்டோ ஓட்டுநர்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பூ விற்ற காசைக் கொண்டுதான் அந்தக் குழந்தை படிக்கிறாள் என்பதாக அந்த செய்தி நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அபாண்டமாக  பேசும் உத்தம சிகாமணிகளுக்கு இந்தச் செய்தி வாசிக்க கிடைக்குமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

" மலை வாழையல்லவோ கல்வி" என்கிறார் பாரதுதாசன். வாழைப் பழங்களிலே  மலை வாழை மிகவும் சுவையானது என்பதால் அப்படிச் சொன்னார். வாழைப் பழங்களிலேயே மலை வாழைப் பழம் மிகவும் அதிக விலையானது. கல்வியும் இன்று எதையும் விடவுமதிக விலையில் விற்பதால் "மலை வாழை அல்லவோ கல்வி" என்பது இன்னொரு விதத்திலும்  மிக அசிங்கமாகப் பொருந்தவே செய்கிறது. 

" சொட்டுக் குழம்புக்கும் 
சோற்றுக்கும்
கையிலொரு துட்டுக்கும்
கண்ணயர்ந்து தூங்குவதற்கும்
கட்டத் துணிக்கும்
நல்ல
பணக்காரணாக்கும் படிப்பு" 

என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால்  நொந்தே போயிருப்பான்.

பூக்களை விற்று அதைவிட அழகாய் என்ன வாங்கப் போகிறீர்கள் என்கிறான் கவிஞன். பூக்களை விற்றுதான் கல்வியை வாங்குகிறேன் என்கிறாள் குழந்தை கஸ்தூரி.

ஒருமுறை சமயபுரம் டோல்கேட்டில் பூ விற்கும் ஒரு சிறுவனைக் கேட்டேன்,

"இப்படி ரிஸ்க் எடுத்து ஓடி ஓடி பூ விற்க்கிறாயே, எதுக்குப்பா?"

"டியூஷன் பீஸ், எக்ஸாம் பீஸெல்லாம் கட்டனும் சார்."

சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.

குழந்தைகள் கல்வி கற்பதற்காக இப்படி உயிர் போக உழைக்க வேண்டிய நிலமை கண்டு நாம் சத்தியமாய் வெட்கப் படத்தான் வேண்டாமா?

ஒன்று திரண்டு அரசைக் கேள்வி கேட்க வேண்டாமா?
அதற்கு தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு தாண்டி கொஞ்சம் சொரனையோடு கூடிய அக்கறை வேண்டு
ஆமாம் அது நமக்கு எப்போது வரும்?

Thursday, March 8, 2012

பட்டினிக்கு வயது பத்து


முன் குறிப்பு;
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் “சுகன்” இதழில் வெளி வந்தது.
மகளிர் தினத்தன்று ஐரோம் பற்றிய பதிவினை வைப்பது சரியாகப் படவே
இதை இங்கு வைக்கிறேன்.
                            
யாருக்காகவோ அவர்கள் நீண்ட நேரமாய் காத்திருக்கிறார்கள். அவர்கள்
கண்களில் கசிந்த விடுதலை வேட்கையும், கொந்தளித்துப் பொங்கிய
உணர்வு நிலையும் களம் நுழையும் முன்னால் தங்களது தலைவனின்
கட்டளைக்காக காத்திருக்கும் போராளிகளின் நிலையை ஒத்திருந்தது.
ஆனால் அவர்கள் காத்திருந்தது அவர்களது கவிஞனுக்காக. தங்களது
விடுதலைப் போருக்கான வெறியை, ஆவேசத்தை, வேட்கையை அவனது
நான்கைந்து வரிகளால் சானை பிடித்து கூர் தீட்டிக்கொள்ளவே அவர்கள்
காத்துக் கிடந்தார்கள்.

அவர்கள் அந்தக் கவிஞனின் ஜனங்கள்: அவனோ அந்த ஜனங்களின்
கவிஞன்.


அவன் மாயோகோவஸ்கி


"தோழர்களே”


அவனது ஒற்றை வார்த்தையில் கொந்தளித்து, ஆர்ப்பரித்து அடங்கியது
கூட்டம்.


தொடர்ந்தான்


"தோழர்களே !
லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும் ஏந்தி..."


அவனை முடிக்க விடவில்லை கூட்டம். ஒரே குரலெடுத்து உரக்க
முழங்கினார்கள்


" லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும்
எங்கள் மாயோகோவஸ்கியை
இதயங்களிலும் ஏந்தி
களத்திற்கு போகிறோம்" 


உயிரோடு இருக்கும் போதே மாயோகோவஸ்கிக்கு கிடைத்த இந்த
அங்கீகாரம் நமது பாரதி மற்றும் பாரதி தாசன் இருவருக்கும் கிடைக்காத
அங்கீகாரம். இன்குலாப் உள்ளிட்ட நமது சம கால மக்கள் கவிகளுக்கும்
இதுதான் கதி. என்ன செய்வது உயிரோடு இருக்கும் வரை நல்லவர்களை
கொண்டாடு வதில்லை என்று நாம்தான் யாருக்கோ சத்தியம் செய்து
கொடுத்து விட்டோமே.


அதனால்தான் பெரும்பான்மை ஆசு கவிகள் காசு கவிகளாய் மாறி
சொகுசாகிப் போனார்கள்.

எழுதுவது, பதிப்பிப்பது, பேட்டிகளை அளிப்பது, வாழ்வை சொகுசாக்கிக்
கொள்வது என்று சுருங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் பசியில்,
அவலத்தில், போராட்டத்தில்அவர்களோடு நிற்பது என்பதாக தனது
எழுத்துக்கு வாழ்க்கையை பொழிப்புரையாக தந்தவன்
மாயோகோவஸ்கி. அவனது நேர்மைக்கும் தியாகத்திற்கும்
கொஞ்சமும் குறையாத அங்கீகாரத்தை மக்கள் அவனுக்கு
வழங்கினார்கள் என்பதும் சேர்த்தே கொள்ளத் தக்கது. 


" பேனாதான் இருக்கும்
எப்போதும்
என் கைகளில்
என்று சொல்ல
நான் ஒன்றும் நீஅல்ல
நண்பனே
தேவைப் படுமெனில்
என் கைகள் காலம் தரும்
கருவி ஏந்தும்"
என்று வண்ணை வளவன் ஒரு முறை எழுதியாதாய் ஞாபகம்.
இந்த வரிகளில் பெருகி வழியும் மாயோகோவஸ்கியின் தாக்கத்தை
யாரும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பரவசமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் தம்பி சுபாஷ் (கன்னகன்)
அவர்களின் "பறவைக்குள்அடையும் கூடு" நூலை வெளியிட்டு பேசும்
போது மனதைப் பிசையும் ஒரு காட்சியை ஏதோ ஒரு வேற்று
மொழிப் படத்திலிருந்தோ சிறு கதையிலிருந்தோ சொன்னார்
எஸ். ராமகிருஷ்ணன்.


குழந்தைகளையும் கூடைகளையும் முதுகுகளிலும் ரணங்களையும்
வலியையும் தங்கள் உடல் முழுமையும் சுமந்தபடி தேயிலை கிள்ளிக்
கொண்டிருக்கிறார்கள் பெண்கள். முதுகிலே சுமக்கும் தங்களது
குழந்தைகளுக்கு பசியெடுத்து அலறினாலும் அவர்களுக்கு தாய்ப்பால்
கொடுக்க அனுமதித்ததில்லை ஆண்டைகள். பசியால் அலறி அலறியே
செத்துப் போன குழந்தைகள் ஏராளம்: மாரிலே பால்கட்டி இறந்துபோன
தாய்மார்களும் ஏராளம். 


கீழத்தஞ்சையில் நம் அம்மாயி மற்றும் அப்பாயிகளுக்கு கிடைத்த அதே
அனுபவம். உலகம் முழுவதும் ஆண்டைகள் ஒரே மாதிரிதான்
இருக்கிறார்கள். ஒரே வித்தியாசம் அவர்கள் குழந்தைகளை முதுகிலே
சுமந்தபடிவேலை பார்த்தார்கள். நம் தாய்மார்கள் வரப்போரத்தில்
இருக்கும் மரங்களின் கிளைகளில் தொட்டில் கட்டிப் போட்டிருப்பார்கள்.  
  
இந்த வேதனையிலிருந்து தப்பிக்க நமது தாய்மார்கள் ஒரு மார்க்கம்
கண்டனர். மார்கட்டி வலி எடுக்கும் பெண்ணை மற்ற பெண்கள்
மறைத்தபடி சுற்றி நின்று கொள்வார்கள். அந்தப் பெண் தனது முலைப்
பாலை வயலிலே பீய்ச்சி தன்னைத் தற்காத்துக் கொள்வாள். இதிலுங்கூட
தாய்மார்களை காப்பாற்ற முடிந்ததே தவிர குழந்தைகளின் இழப்பை மட்டுப்
படுத்த முடியவில்லை. 


இப்படி காவேரித் தண்ணீரோடு எங்கள் தாய்மார்களின் தாய்ப் பாலையும்
சேர்த்தே குடித்து வளர்ந்த நெல் சோறு சாப்பிட்டு வளர்ந்த ஒரு
பெரியவர்தான் சொன்னார் "வேலைக்குப் போகும் பெண்களில்
பெரும்பகுதிபேர் அவுசாரிகள்" என்று. 


அவரிடம் போய் வந்த பத்துப் பன்னிரண்டு பேரைத் தவிர மற்றவர்களை
அவருக்கு அப்படித்தான் தெரியும். பெருந்தன்மயோ என்னவோ
" உழைக்கும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு
எப்படி ஐயா? " என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம்
காக்கிறது தமிழ்ச்சமூகம். 


அந்தக் கதைக்கு வருவோம்.    


தேயிலைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கி வருகிறான்
அவர்களின் கவிஞன். அவர்களது அவலத்தில், வாழ்வில், வலியில்,
கண்ணீரில், புன்னகையில் அவர்களோடு ஒருவனாய், அவர்களில்
ஒருவனாய் அவர்களிடமிருந்து ஒரு அங்குளம் கூட அந்நியப்
படாதவனாய் வாழ்பவன். அந்த ஜனங்கள் தங்கள் கவிஞனது வாக்கு
பலிக்கும் என்று நம்பினார்கள்.


புன்னகைத்தவாறே அந்தப் பெண்களின் அருகே வந்தான் கவிஞன்.
அவனைக் கண்டதும் அவர்களது கவலைகளும் வலியும் பறந்தே போனது.
மலர்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார்கள்.


"நலமா?"


நலமென்று எப்படி சொல்ல முடியும் அவர்களால். 


"நலமென்று கூட சொல்ல முடியாமல் என் ஜனங்களை மௌனக்
கடலுக்குள் தள்ளியது எது?" 


"உம்மால் எமக்கொன்று ஆக வேண்டும் கவியே!" 


" என்னிடம் கேட்க என்ன தயக்கம். எது வேண்டும், கேள் தாயே!"  


"முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு
கவியே! .மார் கட்டாது நாங்களும், பசியாறி குழந்தைகளும் பிழைத்துக்
கொள்வோம்."


அவர்களது சோகத்தில் கறைந்து நெகிழ்ந்து போன கவிஞன் சொன்னான்
"அப்படியே ஆகட்டும்"


முதுகுக்கு நகர்ந்தன முலைகள்.


நடக்குமா? மூடத்தனமல்லவா? அதுபற்றியெல்லாம் நாம் கவலைப் படப்
போவதில்லை. தங்களுக்காகவும் தங்களோடும் வாழ்ந்த கவிஞன் மீது
மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் காட்டவே
மேற்சொன்ன காட்சியை ஞாபகம் கொண்டோம். 


சமீபத்தில் "பெண்ணியம்" இணையதளம்வழியே ஒரு மாபெரும் மக்கள்
கவியைக் கண்டேன். வாசித்து முடிந்ததும் கண்ணீரைக் கட்டுப் படுத்த
படாத கஷ்டம் பட்டேன்.


"ஐரோம் ஷர்மிளா" மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கவிஞர். 1958ஆம்
ஆண்டு "ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்" கொண்டு வரப் பட்டது.
இதன்படி சந்தேகப் படும் யாரையும் விசாரனையின்றி கைது செய்யலாம்,
சுட்டும் கொல்லலாம். இந்த சட்டம் காவுகொண்ட எண்ணிக்கை மிக
அதிகம். "பாலியல் இம்சைகள்" பற்றி எழுதினால் நீளும், நீளும்
நீண்டுகொண்டேபோகும்.  


இதைக் கண்டித்து 02.11.2000 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக
உண்ணாவிரதமிருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா. பல் துலக்கினால்
வாய் வழியே நீர் போய்விடும் என்பதால் பல் துலக்குவதை தவிர்க்கிறார்.
ஒரு பருத்தித் துணியால் பற்களைத் துடைத்துக் கொள்கிறார். 


அவரைக் கைது செய்த அரசாங்கம் கட்டாயப் படுத்தி மூக்கு வழியே
அவருக்கு திரவ உணவை செலுத்திக் கொண்டிருக்கிறது. 


எனக்கு இருக்கிற கேள்வி ஒன்றுதான். தங்களோடும் தங்களுக்காகவும்
வாழ்ந்த கவிகளை அந்தந்த சமூகங்கள் அங்கீகரித்து
கொண்டாடியிருக்கின்றன.


"கல்வி பாஷை" யில் சொன்னால் இரண்டு பிரிவேளைகளுக்கும் சற்று
குறைவான நேரமே நடைபெற்ற , மிகச் சரியாய் சொல்வதெனில்
"காலை சாப்பாட்டிற்கும்மதிய சாப்பாட்டிற்கும் இடைப் பட்ட நேரத்தில்"
நடந்த ஒரு கூத்தினை "உண்ணா விரதம்" என்றும் "தியாகத்தின் உச்சம்"
என்றும் கூத்தாடிக் கொண்டாடிய நாம், தனது உடலை, இளமையை,
வாழ்க்கையை தியாகித்துப் போராடும் இந்தப் போராளிக்கு என்ன
செய்யப் போகிறோம்?


பின் குறிப்பு
இந்தக் கட்டுரையை முடிக்கிற தருவாயில் ஐரினா ஷர்மிளா விடுதலை
செய்யப்பட்ட செய்தி வந்தது. இந்த தகவலை பத்துப் பேரிடம் பகிர்ந்து
கொள்வதற்கு முன்னமே சுகன் சொன்னார்
"திரும்பவும் அந்த அம்மாவகைது பண்ணீட்டாங்களாம் எட்வின்"

Wednesday, May 4, 2011

பத்து கிலோ ஞானம்


"நடத்துனரிடம்
மீதிச்சில்லரை
எதிர்பார்த்தே
ரசிக்க முடியாமல்
போய் விடுகின்றன
பெரும்பாலான
பேருந்துப் பயணங்கள்" 


என்கிறார் ராஜிவ் காந்தி. அநேகமாக அனைவரும் அனுபவித்தேயிருக்க வேண்டிய அவஸ்தைதான் இது. தரை வழி போக்குவரத்தை தவிர்ப்பவர்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். இருக்கிற ஒரே ஒரு நூறு ரூபாய் தாளினை கொடுத்து விட்டு உட்கார்ந்தால் பூம் தொலைக் காட்சியில் ஓடும், நரசிம்ம ராவையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிக்கு கூட நரசிம்மராவைவிட இறுக்கமாய் உட்கார்ந்திருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். மறக்காமல் மீதிச் சில்லறையை வாங்க வேண்டுமே எச்சரிக்கை உணர்வே சகல ரசனையையும் கொன்றுபோடும். கையில் இருந்த ஒரே நூறு ரூபாய் தாளினை நடத்துனரிடம் கொடுத்து விட்டு சில்லறை வாங்க மறந்து போய் வீட்டிற்கு நடந்து போன அனுபவம் எனக்குமுண்டு.

இது மாதிரியான தொடர் அனுபவங்கள் நடத்துனர்கள் அனைவருமே சில்லறையை ஆட்டை போடும் கொள்ளை காரர்கள் என்பதான ஒரு பொதுப் பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. எனக்குத் தெரிந்த வரை ஏழு ரூபாய் டிக்கெட்டிற்கு ஏழு ரூபாயை கொடுத்தால் வாங்க மறுக்கும் நடத்துனர் யாரும் இருப்பதாகப் படவில்லை. எத்தனை முறை இழந்தாலும் சரியான சில்லறையோடு பேருந்து ஏறவேண்டும் என்ற பொது அக்கறை மட்டும் பெரும்பாலும் யாருக்கும் வருவதில்லை.

ஆனால் எத்துனை இடையூறுகள் ஏற்படினும் அத்தனையையும் தாண்டி பேருந்துப் பயணங்களில் ரசிக்கவும் கற்றுக் கொள்ளவும் முடிகிறது என்னால். எனக்கென்னவோ அள்ள அள்ளக் குறையாத அட்ச்சயப் பாத்திரங்களாவே பேருந்துகள் அமைகின்றன. ஒவ்வொரு முறையும் எனக்கு கற்றுக் கொடுப்பதும் என்னையறியாமலே எனக்குள் ஒளிந்து கிடக்கும் "நான்" என்ற அழுக்கை தங்கள் ஒழுகும் சழுவாயால் துடைத்தென்னை தூய்மை படுத்துவதும் குழந்தைகள்தான்.


ஒரு முறை நான் கூட எழுதினேன்

"உனக்கு ஒன்னுந் தெரியாதுப்பா" 
குழந்தையின் மழழையில் கசியும் 
ஞானம்'" 

என்று. அனேகமாக எனது எல்லாப் பயணங்களிலும் குழந்தைகள் இந்தக் கவிதையை நிசப்படுத்தியே வருகிறார்கள். நமக்கு ஒன்றும் தெரியாது என்பதையோ அல்லது குறைந்த பட்சம் அவர்கள் அளவுக்கு தெரியாதென்பதையோ ஒவ்வொரு முறையும் நிரூபித்தே வருகிறார்கள்.

அதிலிரண்டை பந்தி வைத்துவிடவேண்டுமென்று படுகிறது.
...

அன்று அதி காலை எழுந்ததிலிருந்தே ஒன்று மாற்றி ஒன்றாக தவறுகளாகவே செய்து கொண்டிருந்தேன். எல்லாம் அவசரம் தந்த பதற்றத்தால் வந்தது. தாள் திருத்தும் மையத்தில் அன்று வாயில் கூட்டம். சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜயகுமார் நேற்றே வந்துவிட்டார். திருச்சிக்குப் போக ஒன்றரை மணி நேரமாவது ஆகும். விடுதி அறையிலிருந்து விஜியை அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஏழரை மணிக்குள் முகாம் வாசலில் இருந்தால்தான் தாள் திருத்த வரும் ஆசிரியர்களை கூட்டத்திற்கு தடுத்து நிறுத்த முடியும்.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த பேருந்தை நிருத்தி ஏறினேன். இடமிருக்கா இல்லையா என்றெல்லாம் பார்த்து ஏறுவத்ற்கு அவகாசமில்லை. நல்ல வேளை கடைசி இருக்கையில் ஒரு இடம் இருந்தது. அப்பாடா என்றிருந்தது. அமர்ந்ததும் செல் எடுத்து மணியைப் பார்த்தேன். சரியாக ஐந்து. வழியில் ஏதும் பிரச்சினை இல்லாத பட்சத்தில் சரியான நேரத்தில் சேர்ந்து விடலாம்.

பேருந்து புற வழிச்சாலையில் திரும்பிய அந்தப் புள்ளியில்தான் அந்த அம்மாவின் பேச்சு என் கவனத்தை இழுத்தது. எனக்கு முன்னிருக்கைக்கும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். அப்பழுக்கில்லாத கிராமத்து பெண்மணி. அவரோடு சுமார் நாற்பது மதிக்கத் தக்க அளவில் ஒரு ஆண். " இல்லடா தம்பி", "இதக்கேளுடா" என்று அடிக்கடி அந்த அம்மா சொன்னதிலிருந்து ஒன்று அவர் அவரது தம்பியாக இருக்க வேண்டும் அல்லது தம்பி போன்ற உறவுடையவராக இருக்க வேண்டும்.

அந்த அம்மாவின் குரலால் நிரம்பிக் கசிந்தது பேருந்து. எரிச்சலை தரக்கூடிய குரல். அவரது மகன் மற்றும் மருமகளைப் பற்றியே அவரது பேச்சு சுற்றியது. "ம்" " ம்ம்" , " சொல்லுக்கா" , "ச்ச்" என்பதைத் தாண்டி அந்த மனிதன் ஏதும் பேசவே இல்லை.

ஓட்டுநரே இரண்டு முறை திரும்பி பார்த்து விட்டு திரும்பி தலையிலடித்துக் கொண்டார். ஒவ்வொரு முறை அவரைக் கடக்கும் போதும் அந்த அம்மாவை ஒரு மாதிரி எரிச்சல் கசிய பார்த்துப் போனார் நடத்துனர்.

பாடாலூரைக் கடந்து சென்று கொண்டிருந்தது பேருந்து. புலம்பல் நிற்கிற பாடாய் தெரியவில்லை. பேருந்து புறப்பட்டு ஏறத்தாழ முப்பது நிமிடம் கடந்திருக்கும்.

திடீரென அழுவார். பிறகு அவரே சமாதானமாகி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கி விடுவார்.

"அவ நல்லா இருப்பாளா? அவள விடு. ஒரு ஈ எறும்பு கடிக்க விட்டுருப்பேனா, இன்னிக்கில்ல அவன் இவ்ளோ பெரிய ஆம்புள. புள்ள வளரதுக்குள்ள ஒவ்வொரு ஆத்தாவும் ரெண்டு லாரி பீயாவது அள்ளிப் போடனும்ப்பா. அவ என்ன சொன்னாலும் தலய தலய ஆட்டுறானே. வெளங்குவானாடா இவன். " அவர் குரல் தந்த எரிச்சலைத் தவிர எதையும் உள் வாங்க முடியவில்லை.

"பெரம்பலூர்ல ஆரம்பிச்சது. எப்ப முடியுமோ" அடங்க மறுத்து என்னிடமிருந்து சன்னமான குரலில் எனது எரிச்சல் வெளியேறியது.

" அடப் போங்க சார், நான் விருதாச்சலத்துல ஏறினேன். அதுக்கு முன்னாலேயே அந்த அம்மா ஏறியிருக்கனும். இந்த இம்சய மூனு மணி நேரமா தாங்க முடியல சார்."

கொள்ளிடம் செக்போஸ்ட் கடக்கும் போதே அந்த அம்மா எழுந்தார். உடன் வந்த மனிதரும் எழுந்தார். திருவாணைக் கோவிலில் இறங்குவார்கள் என்பது புரிந்தது. அவர்கள் இறங்கப் போகிறார்கள்என்பதே எல்லோருக்கும் பெரிய நிம்மதியை தந்தது.

நின்றதும் இறங்குவதற்கு வசதியாக பைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வெளியே வந்து கொண்டிருந்தார்.

"பாட்டி"

எனக்கு முன்னிருக்கையில் பெரும்பகுதி நேரம் நின்று கொண்டே வந்த மூன்று வயதுக் குழந்தை கத்தினாள்.

"ஏஞ்சாமி, என்னடா தங்கம்?"
குழந்தையின் கன்னத்தை வருடியவாரே அந்த அம்மா கேட்டார்.

" நீ பயப்படாம போ பாட்டி. குச்சி எடுத்து வந்து உனக்கு சோறு போடாத அத்தையையும் மாமாவையும் வெளு வெளுன்னு வெளுக்கிறேன்."
"நீ இருக்கப்ப எனக்கென்ன சாமி கவல." குழந்தையை தூக்கி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டே போனார்.

" யாரு பெத்த புள்ளயோ, ஒனக்குப் புரியுது என் வேதன. நீ நல்லா இருக்கனும் மவராசி"

அவர் பாட்டுக்கு அவர் இறங்கிப் போய்விட்டார். குழந்தையோ எதுவுமே நடக்காதது மாதிரி ஜன்னலில் வேடிக்கை பார்த்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.

எனக்கோ வாயில் கூட்டம் உட்பட அணைத்தும் மறந்து போய் ஒரே ஒரு கேள்வி மட்டும் சுழன்று சுழன்று உறுத்திக் கொண்டே இருந்தது. அநேகமாக பேருந்தில் இருந்த அனைவருக்கும் ஏன் உங்களையும் கூட இது நெருடவே செய்யும்.

அந்த சின்னக் குழந்தைக்கு புரிந்த அந்த அம்மாவின் வேதனையும் வலியும் நமக்கு ஏன் புரியாமல் போனது.

......

பாண்டியில் ஒரு வேலை. பேருந்தில் அதிக கூட்டமில்லை. வசதியான இருக்கை கிடைத்தது. ஜன்னலோர இருக்கை. எனக்கு அடுத்து முப்பத்தி ஐந்து மதிப்பில் ஒருவர். அடுத்து அவர் மனைவி. அவர்களது மூன்று வயது மதிக்கத் தக்க மகள்.

எதையும் ரசித்தாள். பேசிக் கொண்டே வந்தாள். நிறைய கேட்கவும் செய்தாள்.

அவளது பெற்றோர்கள் இவளை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
அவர்கள் எதிர் வீட்டு ஷர்மி பற்றி , அவளது அண்ணி பற்றி , பைனான்சில் இருக்கும் நகையை திருப்பி வங்கியில் வைத்து வட்டியை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றி , இப்படியாக எது எது பற்றியோ இடைவெளி இன்றி பேசிக்கொண்டேதான் வந்தார்கள்.

"ஐ! அம்மா அங்க பாரேன் ரெண்டு கொரங்கு" என்ற அவளது கொண்டாட்டத்தை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் பேசிக் கொண்டே வந்தார்கள்.

அவளும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.

இப்போது அவள் எனக்கும் அவளது அப்பாவிற்கும் இடையில் வந்து நின்றாள். "ஏய் மாமாவ தொந்தரவு பன்னாத" ஏதோ சடங்குக்காய் சொல்லி விட்டு மீண்டும் அவர்களது பேச்சிலே கறைந்து போனார்கள்.

என் விரல்களை பிடித்துக் கொண்டாள். நான் ஒரு புன்னகையோடு அவளைப் பார்த்தேன். எனது புன்னகை அவளை உற்சாகப் படுத்தியிருக்க வேண்டும்.

" மாமா ஏன் உங்க கைல மோதிரமே இல்ல. எங்க அப்பா ரெண்டு மோதிரம் , ப்ரேஸ்லெட் எல்லாம் போட்டிருக்கங்களே"

"ஏய் எரும, மாமாவ தொந்தரவு பன்னாதன்னு சொன்னேனா" என்று சத்தம் போட்டவாறே அவளைத் தன் பக்கமாக இழுத்தார் அவளது அம்மா.

"விடுங்கம்மா. சின்னக் குழந்ததானே" என்று அவர்களை சமாதானப் படுத்தி அவளை மீட்டேன். அத்தோடு அவளை விட்டு விட்டு அவர்கள் மீண்டும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

அவர்களது எரிச்சல் பற்றியோ , கோபம் பற்றியோ இவளும் கவலைப் படவில்லை.

"மாமா கேட்டேன்ல , சொல்லுங்க ஏன் நீங்க மோதிரம் போடல"

"மாமாட்ட இல்லடா. நீ வேனா வாங்கித் தரயா?"

"ம்..சரி , நான் பெரியவளானதும் அப்பாவாட்டம் வேலைக்க்கு போய் உங்களுக்கு மோதிரம் வாங்கித் தாரேன். சரியா?"

அவ்வளவுதான் அடுத்த விஷயத்திற்கு தாவி விட்டாள். ஏதோ பத்து வருடங்களாய் பழகுபவள் போல ஒட்டிக் கொண்டாள் அந்த மூன்று வயது பிள்ளை .

நானும் அவளும் நல்ல நண்பர்களாக மாறியிருந்தோம். பேருந்து சுல்த்தான் பாளையத்தில் நின்றது. சாலை ஒரத்தில் இருந்த கோழிக் கறிக் கடையின் பெயர்ப் பலகையை காட்டினாள். "மாமா அந்தக் கோழி ரொம்ப அழகா இருக்குள்ள"

"ஆமாண்டா"

"ஒங்களுக்கு மந்திரம் தெரியுமா?"

"தெரியுமே.." நானும் அவளுக்கு ஏற்ற விளையாட்டுக் கூட்டாளியாக மாறத் தொடங்கியிருந்தேன்.

" அப்ப ச்சூ காளி மந்திரம் சொல்லி என்ன அந்தக் கோழிப் படமா மாத்துங்க ப்ளீஸ்"

"எதுக்குடா கோழிப் படமா மாத்திட்டு . அழகான கோழியாவே மாத்திடவா?"

" வேனாம். லூசு மாதிரி பேசாம என்ன கோழி படமா மாத்துங்க"

"ஏண்டா . கோழியாவே மாத்திடறேனே."

" மக்கு , மக்கு கோழியா மாறினா அறுத்துறுவாங்கல்ல.."

ஒருமுறை எழுதினேன்

"தோளில் தூங்கும்
குழந்தையின் சழுவாயில் கசியும்
ஞானம்" என்று. அடடா நாம் கூட சரியாய்த்தான் எழுதுகிறோம் போல.

அவள் பத்து கிலோ இருப்பாள் அநேகமாக. எனில் பத்து கிலோ ஞானம் அவள்.

அது சரி இவளது ஞானத்தை ரசிக்காமல் வேறு என்னத்தை பேசிக் கிழித்து விடப் போகிறார்கள் . சுத்த ரசனை கெட்டதுகள்.

........

"பின்னிருக்கையில் ஒரு போதி மரம்" என்று தனது சிறு கதை நூலுக்கு பெயர் வைத்தான் தம்பி ஆங்கரை பைரவி.

ஆக ஆங்கரைபைரவிக்கு பின்னிருக்கயில் ஒரு போதி மரம்

வைரமுத்துவிற்கு வானம் போதி மரம்

எனக்கு மொத்த பேருந்துகளும் வரம் தரும் போதி மரங்கள்தான்.



(சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ”பத்து கிலோ ஞானம் என்ற எனது நூலில் இருந்து எடுக்கப் பட்ட கட்டுரை)

Tuesday, April 19, 2011

தண்ணீர் சாபம்

”என் லைப்ல இது மாதிரி மழையப் பார்த்ததே இல்ல” என்கிறான் மேல் வீட்டுப் பையன் லோகித். அவனது வயது ஆறு.

கழனி எடுக்க வந்த மீனா பாட்டி, “எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து இது மாதிரி மழையப் பார்த்ததே இல்ல” என்கிறார். அவருக்கு எழுபத்தி ஐந்து வயது.

எனக்கும்கூட அப்படித்தான் தோன்றுகிறது. இருபது நாட்களாகக் கொட்டித் தீர்த்து விட்டது.எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இருபது சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளதாக செய்தித் தாள்கள் கூறுகின்றன.

“மாமழைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும்”
என்று இளங்கோ அடிகள் மழையை வணங்கிப் போற்றுகிறார்.

இன்றோ , “இந்தச் சனியம் புடிச்ச மழை பேஞ்சும் கெடுக்குது: காஞ்சும் கெடுக்குது” என்று தெருவெங்கும் திசையெங்கும் பாதிக்கப் பட்ட மக்கள் மழையைச் சபிக்கிறார்கள்.

வைகையாற்றில் வரலாறு காணாத வெள்ளம். வெள்ளம் எனில் வெள்ளம், அப்படி ஒரு வெள்ளம்.

“கூட்டம் கூட்டம் கூட்டம்
கூடல் மாநகரில்
கூட்டம் பார்க்க
கூட்டம் கூட்டம் கூட்டம்”
என்பார் மீரா.கூட்டம் பார்க்கவே கூடும் தமிழ் ஜனத் திரள் அன்று தண்ணீர் பார்க்க வைகைக் கரையில் திரண்டது.

இளைஞர்கள் தண்ணீரைக் கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடியதைப் பார்க்க முடிந்தது.

“தண்ணீரைப் பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா?. லீவு போட்டுட்டு இதைப் பார்க்க வந்தேன் என்கிறான் ஒரு இளைஞன்.

தொலைக் காட்சியில் நாம் கண்ட அந்தக் காட்சி, சிலம்பில் வரும் ஒரு காட்சியோடு பெருமளவு ஒத்துப் போனது. இளங்கோ அடிகள் காவிரியில் வெள்ளம் கண்டு பொங்கிப் பூரித்துக் கொண்டாடிய ஜனங்களின் ஆர்ப்பரிப்பை சிலம்பில் இப்படிப் பதிகிறார்.

“உழவர் ஓதை
மதகோதை
உடை நீர் ஓதை
தன் பதங்கொள் விழவர் ஓதை
சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி”

காவிரியில் பெருகி ஆர்ப்பரித்து ஓடி வரும் நீரின் ஓசை, பெண்களின் குலவை ஒலி,  விவசாயிகளின் ஆனந்தக் கூப்பாடு எல்லாம் அந்தக் காலம் எனில், கரவொலி, விசில், குத்தாட்டம் என்பன இந்தக் காலம்.

ஆறுகளில் அன்றும் தண்ணீர் வந்தது, இன்றும் வருகிறது.

ஆனால் அன்று இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் இன்று தலை விரித்து ஆடுகிறது. அது ஏன்?

“ அப்ப இருந்ததை விடவும் இப்ப ஜனத் தொகை கூடிப் போச்சு இல்ல” என்று சொல்லக் கூடும்.

ஆமாம், ஒத்துக் கொள்ள வேண்டும்தான். ஆனால் அதுமட்டும்தான் காரணமா?

முன்பெல்லாம் எவ்வளவு மழைப் பெய்தாலும் ஆறுகளில் இவ்வளவு வெள்ளப் பெருக்கு வராது என்றும், பெய்த மழை நீர் ஒன்பது முதல் பத்து மாதங்களுக்கு நதிகளில் சீராக ஓடி வரும் என்றும், இப்போதோ பெய்கிற மழை நீர் மூன்று அல்லது நான்கே மாதங்களில் அவசர அவசரமாய்ப் பாய்ந்தோடி, கடலில் கலந்து வீணாவதாகவும் ஓசை காளிதாஸ் சொல்கிறார்.

மட்டுமல்ல, மழை நீர் வெள்ளமாய் வருகிறபோது உயிர்ச் சேதம் உட்பட அனைத்துச் சேதங்களையும் உப விளைவுகளாகத் தருவதாகவும் சொல்கிறார்.

அப்போது மிதமாய் ஓடிய ஆற்று நீரை இப்போது வேகம் பெறச் செய்த சக்தி எது? அவரிடமே கேட்டோம்.

”அதற்கு நதி எப்படி உற்பத்தியாகிறது என்பது புரிய வேண்டும்.அப்போதுதான் இது விளங்கும்,” என்றார்.

”நதி ஏரியில் இருந்துதான் பிறக்கும்”

“இல்லை” என்று அவர் மறுத்த போது வியப்பின் உச்சிக்கே போனேன்.

மலைகளில் ‘சோலாஸ்’ என்று அழைக்கப் படும் சோலைக் காடுகள் உண்டு.அந்தக் காடுகள் ஒரு விதமான சிறப்புத் தன்மை கொண்டவை.

சோலாஸ் அமைந்துள்ள நிலப் பகுதி மழை நீரை முற்றாய் உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.அவ்வாறு சேமிக்கப் பட்ட நீர் முற்றாய் வழிந்து விடாமல் பையப் பையக் கசியச் செய்யும் தன்மையை சோலாஸ் கொண்டுள்ளன. இவ்வாறு பையப் பைய நீர் கசிந்ததால் தென்னக நதிகளில் நீண்ட காலத்திற்கு நீர் வரத்து இருந்தது. சோலாஸ் எனப்படும் சோலைக் காடுகளில் இருந்து கசியும் நீரே நமது தென்னக நதிகள் என்கிற உண்மையை அவர் சொன்னபோது இருபத்தி ஐந்து ஆண்டுகால ஆசிரியன் மாணவனாய் ஆனேன்.

இவைதான் நீர்ப்பிடிப்பு ஆதாரங்கள். இந்தக் கசிவு ஏறத்தாழ பத்து மாதங்கள் வரை நீடித்தது.

“இப்போது ஏன் இப்படி?”

தேயிலைத் தோட்டங்களுக்காகவும், காபித் தோட்டங்களுக்காகவும் இச்சோலைக் காடுகள் அழிக்கப் பட்டதன் விளைவாக, நீர்ப்பிடிப்பு ஆதாரங்கள் குறைந்துபோய் ,  பெய்கிற மழை நீர் முற்றாய் விரைவாய் செலவழிக்கப் படுகிறது.

அன்றைக்கு நதி மிதமாக ஓடியிருக்கிறது. அதனால்தான் இளங்கோ அடிகள்  ”நடந்தாய் வாழி காவேரி” என்று பாடியிருக்கிறார்.

இவ்வளவு மழை பெய்தும் இவ்வளவு தண்ணீர்ப் பஞ்சம் வருவதற்கான ஒரு காரணம் இது.

பணப் பயிர் வளர்க்க வேண்டியும், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்புமாய் எஞ்சியிருக்கின்ற சோலாஸென்று அழைக்கப் படும் நீர்ப் பிடிப்பு ஆதாரங்களை முற்றாய் அழித்துப் போடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது அதிக அளவில் தண்ணீர்ப் பஞ்சத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இரண்டாவதாக இயற்கை தரும் தண்ணீரைச் சேமித்து வைக்காமல் ஊதாரித் தனமாய் செலவு செய்யும் மனிதர்களாய் நாம் மாறிப் போனோம். நீரைச் சேமித்து செலவு செய்யும் பழக்கம் நமது முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. நாம்தான் நல்லப் பழக்கங்களையெல்லாம் பையப் பையத் தொலைப்பதில் மன்னர்களாயிற்றே.

மன்னர்களுக்கும் அந்தக் காலத்து மந்திரிகளுக்கும் நீரின் அருமையும் நீர் சேமிப்பின் முக்கியத்துவமும் நன்கு தெரிந்திருக்கிறது. பள்ளியில் நமக்குக் கொட்டிக் கொட்டிச் சொல்லிக் கொடுத்தார்கள். ராஜராஜச் சோழன் குளம் வெட்டினான், ராஜேந்திரச் சோழன் குளம் வெட்டினான், திருமலை நாயக்கர் குளம் வெட்டினார் என்று. எல்லா மன்னர்களும் ஏரி, குளங்களை வெட்டி நீரைச் சேமித்து வளமான ஒரு வாழ்க்கையைத் தம் மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கேட்கலாம், ராஜ ராஜன்தான் நிறைய ஏரிகளையும் குளங்களையும் வெட்டினானே பிற்கு ஏரிகளையும் குளங்களையும் வெட்ட வேண்டிய அவசியம் ராஜேந்திரச் சோழனுக்கு ஏன் வந்தது?. வரலாற்றின் பரந்த பக்கங்களில் இந்தப் பூமியின் எல்லப் பரப்பிலும் ஒவ்வொரு மன்னனும் ஏரிகளையும் குளங்களையும் வெட்டியிருக்கிறார்களே. அவர்களுக்கெல்லாம் என்ன பைத்தியமா?

ஒவ்வொரு நாளும் பெருகி வரும் ஜனத்தொகை நீர்த் தேவையை அதிகரிக்கும் என்ற அடிப்படை அறிவு, இன்றைய தொழில் நுட்ப அறிவுக்கு வாய்ப்பே இல்லாத அன்றைய மன்னர்களுக்கும் மந்திரிகளுக்கும் இருந்திருக்கிறது. அவர்கள் புதிது புதிதாய் ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீரைச் சேமித்து இருக்கிறார்கள்.

எனில் மக்களாட்சியில் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இன்னமும் கூடுதலான பொறுப்புணர்வுமக்கறையும் இருந்திருக்க வேண்டும். இருந்திருக்கும் பட்சத்தில் ஏரிகளும், குளங்களும், தடுப்பணைகளும் நிறையப் பெருகியிருக்க வேண்டும்.

செய்தோமா?

இருந்த ஏரிகளையும் குளங்களையும் ப்ளாட் போட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தும் பாவப் பட்டல்லவா போனோம்.

ஒரு பக்கம் நதி நீரின் விரைந்த பயணம், மறுபக்கம் நீரைச் சேமிக்க புதிய ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதோடு இருந்த ஏற்பாடுகளையுமழித்தொழித்த குற்றவாளிகளாய்க் குறுகி நிற்கிறோம்.

இன்னொருபக்கம் ஒரு தனிப் பதிவிற்கே தேவை இருக்குமளவிற்கு நீள்கிறது மணல் திருட்டு.

ஏரிகளில் குளங்களில் நீர் தேங்கி நின்றால்தான் நிலத்தடி நீர் சமனிலைப் படும். நிலத்தை நீரைச் சமனிலைப் படுத்தத் தவறியதோடு இருக்கிற நிலத்தடி நீரையும் பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக் கொழுக்க அனுமதித்து இருக்கிறோம்.

இப்படியே போனால் இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் ஒரு குடம் குடிநீருக்காக நம் போமியில் கொலையேகூட நடக்கலாம்.

சரி, என்ன செய்யலாம்?

ஒன்று, சோலாஸ் எனப்படும் இயற்கை நீர்ப் பிடிப்புஆதாரங்களைப் புதிதாய் ஏற்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும்.இதற்காக நிதி நிலை அறிக்கையில் போதுமான அளவு நிதி ஒதுக்க வேண்டும்

அண்டம் நோக்கி, வெளி குறித்து, நமக்கு இருக்கும் அக்கறையை நாம் இது குறித்தும் நீட்டிப்புச் செய்ய வேண்டும். விஞ்ஞானிகளின் நேரத்தை, செயலை இது நோக்கியும் நகர்த்த நிர்ப்பந்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஏற்கனவே இருக்கிற நீர்ப் பிடிப்பு ஆதாரங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஏரிகள், குளங்கள் இருந்த இடங்களில் கட்டப் பட்டுள்ள வீடுகளைத் தகுந்த மாற்று ஏற்பாடுகளோடு அப்புறப் படுத்தி அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அஙே பன்னாட்டு நிறுவனக்களினாலைகள் இருப்பின் அவற்றை அ ந்நிய ஆக்கிரமிப்பாகவே கருதி அகற்ற வேண்டும்.

புதிது புதிதாய் ஏரிகளை குளங்களை தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும்.

நிலத்தடி நீரை உறிஞ்சி கொழுக்கும் நிறுவனங்களை அடித்து விரட்ட வேண்டும்.

இல்லாது போனால் முன்பே சொன்னதுதான்.

ஒரு குடம் குடி நீருக்காய் இந்தப் பூமியில் கொலைகளே விழும்

எனது “ பத்து கிலோ ஞானம்” என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...