" நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில்
கவிதை"
என்று ஒரு முறை எழுதினேன். எப்போதாவதுதான் அப்படி ஒரு அபூர்வமான வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தற்கரிய அபூர்வமான வாய்ப்பு அன்று கிடைத்தது.
நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் குடித்து வரலாம் என்று கடைக்குப் போனோம். தேநீர் கேட்டால் ஆளுக்கொரு வடையையும் கட்டாயப் படுத்தித் தந்தார் கடைக்காரர்.
ஒரே உப்பு. வாயில் போட்ட துண்டு வடையைத் துப்பி விட்டு எஞ்சிய வடையை தொட்டியில் கிடாசிவிட்டு வடைத் தாளைக் கசக்கி எறியப் போனபோதுதான் அதில் கவிதை மாதிரி ஏதோ கண்ணில் பட்டது.
பார்த்தேன். கவிதையேதான்.
"பூக்களை
விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்"
என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.
என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.
ஆஹா! என்னமாய் எழுதியிருக்கிறான். ஆமாம் பூக்களை விற்ற காசில் பூக்களை விட அழகாய் எதை வாங்கி விட முடியும்? அழகான அழகியல்.
ஒன்று துருக்கியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது துருக்கி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து வாசித்துவிட வேண்டும். இப்படியாக அந்தக் கவிதையின் அழகில் லயித்து மூழ்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு மூலையில் உறுத்தவும் தொடங்கியது.
இது மேல் தட்டு மற்றும் நடுத் தட்டு வர்க்கச் சிந்தனையல்லவா? நமக்குள்ளும் இது வந்துவிட்டதா? நாம் வரட்டுத்தனமான அழகியலுக்கு அப்பாற்பட்டவன் என்பதுதானே நமது அடையாளம். அது பொய்யா? என்று ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.
சாலை ஓரத்தில் வெய்யில் என்றால் காய்ந்து கொண்டும், மழை என்றால் நனைந்துகொண்டும் பூ விற்கும் பெண்ணிற்கு கவிழ்த்துப் போட்ட கூடையில் சுற்றப் பட்டுள்ள பூ முழுக்க விற்றால்தான் கந்து வட்டிக் காரனுக்கு அழுதது போக வீட்டில் உள்ள நான்கு வயிருகளுக்கும் அரை வயிறாவது நிறையும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் வழக்கமாய் பேருந்துகள் நிற்குமிடங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் சின்னஞ்சிறிய பையன்களும், பெண் குழந்தைகளும் கைகளிலே சின்ன சின்னதாய் மல்லிககை மற்றும் கனகாம்பரப் பூப் பந்துகளை வைத்துக் கொண்டு பூ விற்கும் காட்சிகளை பயணச்ங்களின் போது நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.
எவ்வளவு கடினமான வேலை தெரியுமா இது? தேசிய நெடுஞ்சாலைகளை உயிரை வெறுத்துக் கடப்பதும், பேருந்து நின்று பயணிகளை அவசரம் அவசரமாய் ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கிளம்பும் முன் கிடைக்கும் அந்த சின்ன கால இடைவெளிக்குள் கஸ்டமர்களை பிடிக்க வேண்டும், பூவைக் கொடுத்து, காசு வாங்கி மீதியைத் தரவேண்டும்.
சில நேரங்களில் பூவைக் கொடுத்துவிட்டு அந்தப் பிள்ளை, காசுக்காக காத்து நிற்கும் அவஸ்த்தை இருக்கிறது பாருங்கள், அதைச் சொல்லி மாளாது.பல நேரங்களில் காசைப் பெருவதற்குள் பேருந்து நகரத் தொடங்கி விடும்.காசினை வாங்குவதற்காக அந்த சிறுவர்கள் பேருந்தோடே கூட ஓடி வருவதையும் பார்க்க முடியும்.
பூவை வாங்கியவர்கள் காசை எடுத்து வெளியே எறிவதையும் நம்மால் பார்க்க முடியும். அதைபொறுக்க அந்த சிறுவர்கள் படுகிற அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா உசிரே போய்விடும். சரியான சில்லறை எடுக்க இயலாத சிலர் பூக்களை எறிந்துவிடுவதும் உண்டு. கீழே விழுந்த பூவை மீண்டும் விற்கவும் முடியாது.
சிலரோ இரண்டையும் செய்யாமல் போய் விடுவதும் உண்டு.
இந்தக் குழந்தைகளின் அவலத்தை, துயரத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?
இந்தக் குழந்தைகளிடமும், பூக்காரப் பெண்களிடமும் போய்
"பூகளை விற்ற காசில்
என்ன வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்?
என்று கேட்டால் நம்மை கொன்று போட மாட்டார்களா?
அவர்களைப் பொறுத்தவரை பூ என்பது ஒரு வணிகப் பொருள் என்கிற எல்லை தாண்டி அவர்களை இந்தச் சமூகம் எங்கே யோசிக்க அனுமதித்திருக்கிறது? பூக்களின் மலர்ச்சியையோ அழகையோ ரசித்து அனுபவிக்கிற அவகாசத்தை அவர்களது வயிறுகள் அவர்களுக்கு வழங்கியதே இல்லை.
எனில் இந்தக் கவிதை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதா? இதை ரசிக்க முடிகிறதே என்னால். என்றால் நான் உழைக்கும் திரளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறேனா?
இரண்டும் இல்லை. உழைக்கும் மக்களும் பூக்களின் அழகை, இந்தக் கவிதையின் அழகை ரசிக்கிற வாய்ப்பை பெறுகிற மாதிரி அவர்களது வாழ்க்கையை மாற்றித் தருகிற ஒரு போராட்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் போனதுதான் குற்றம்.
அந்தத் தாளில் இருந்த செய்தியை வாசித்தேன்.
கஸ்தூரி என்கிற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவி பள்ளிக்குப் போன நேரம் போக ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து பூ விற்கிறாள். வியாபாரம் இல்லாத நேரத்தில் அங்கேயே அமர்ந்து படிக்கிறாள். அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பூ விற்ற காசைக் கொண்டுதான் அந்தக் குழந்தை படிக்கிறாள் என்பதாக அந்த செய்தி நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அபாண்டமாக பேசும் உத்தம சிகாமணிகளுக்கு இந்தச் செய்தி வாசிக்க கிடைக்குமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்.
" மலை வாழையல்லவோ கல்வி" என்கிறார் பாரதுதாசன். வாழைப் பழங்களிலே மலை வாழை மிகவும் சுவையானது என்பதால் அப்படிச் சொன்னார். வாழைப் பழங்களிலேயே மலை வாழைப் பழம் மிகவும் அதிக விலையானது. கல்வியும் இன்று எதையும் விடவுமதிக விலையில் விற்பதால் "மலை வாழை அல்லவோ கல்வி" என்பது இன்னொரு விதத்திலும் மிக அசிங்கமாகப் பொருந்தவே செய்கிறது.
" சொட்டுக் குழம்புக்கும்
சோற்றுக்கும்
கையிலொரு துட்டுக்கும்
கண்ணயர்ந்து தூங்குவதற்கும்
கட்டத் துணிக்கும்
நல்ல
பணக்காரணாக்கும் படிப்பு"
என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால் நொந்தே போயிருப்பான்.
என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால் நொந்தே போயிருப்பான்.
பூக்களை விற்று அதைவிட அழகாய் என்ன வாங்கப் போகிறீர்கள் என்கிறான் கவிஞன். பூக்களை விற்றுதான் கல்வியை வாங்குகிறேன் என்கிறாள் குழந்தை கஸ்தூரி.
ஒருமுறை சமயபுரம் டோல்கேட்டில் பூ விற்கும் ஒரு சிறுவனைக் கேட்டேன்,
"இப்படி ரிஸ்க் எடுத்து ஓடி ஓடி பூ விற்க்கிறாயே, எதுக்குப்பா?"
"டியூஷன் பீஸ், எக்ஸாம் பீஸெல்லாம் கட்டனும் சார்."
சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.
குழந்தைகள் கல்வி கற்பதற்காக இப்படி உயிர் போக உழைக்க வேண்டிய நிலமை கண்டு நாம் சத்தியமாய் வெட்கப் படத்தான் வேண்டாமா?
ஒன்று திரண்டு அரசைக் கேள்வி கேட்க வேண்டாமா?
|
பூவில் பூத்த சிந்தனைகள் அருமை. கடுகு உள்ளம். துவரை உள்ளம் தொன்னை உள்ளம் எல்லாம் கடந்து தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும் பேருள்ளம் கொள்ள நினைத்து உழைக்க முனையும்பொழுது சொரணையுள்ளம் தோன்றும்.
ReplyDeleteமிகச் சரியாய் சொன்னீர்கள் தோழர். மிக்க நன்றி
Deleteஒரு பொறியை வைத்து ஒரு ஊரையே கொழுத்திவிட்டீர்கள் மலர்களால் !!!
ReplyDeleteவாய் அடைத்து விட்டேன் மட்டுமல்ல எழுதுவதற்கு எங்கெல்லாம் பொறிகள் புலப்படும் என்கிற சூட்சுமத்தினையும் புரிந்து கொண்டேன்,
ஐயா மிக அருமையாக இருக்கு நான் கூட சில வரிகளினை ஸ்டேடசாக போட்டிருக்கன் உங்கள் அனுமதியோடு நன்றி !!!
மிக்க நன்றி தோழர்
Deleteஉங்களின் சிந்தனையை சிந்தித்தால் உண்மையாகத் தான் படுகிறது....
ReplyDeleteசில நேரங்களில் சில இடங்களில் சிலரிடம் சில கேள்விகள் பொருந்தாமல் தான் இருக்கின்றன...
அக்கறை சா(ச)த்தியமாவது சிறிது சிரமம் தான்...
மிக்க நன்றி தோழர்
Deleteவணக்கம் தோழர். என்ன வாங்கிவிடப்போகிறீர்கள்..அருமையான பதிவு. எங்கோ தொட்டு, பின் மனதைத் தொட்ட கட்டுரை. //சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.
ReplyDelete//
இதுதானே இன்றைய அடித்தட்டு வர்க்க மக்களின் நிலை இதனை மாற்ற சமூகம் கவலைப்படுவதைவிட அரசுக்கு அக்கறை வேண்டும் தோழர். சமூக அக்கறையற்ற அரசை அக்கறைப்பட வைக்கவேண்டியது, நம்மைப் போன்ற சமூக போராளிகளின் பணியும்,கடமையுமாகும். என் மகன் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு பூக்கார சிறுமி பற்றி ஒரு கதை எழுதினான். "ஆசிரியர் பணிமூப்பின் போது பரிசுகள் கொடுக்க எண்ணி இயலாமல், அம்மாவிடம் சொல்லி தனக்கென பூ கேட்டு திட்டோடு தலையில் வைத்து வந்து, அதனை வீட்டைவிட்டு வந்ததும் பத்திரமாய் எடுத்து வைத்து , பள்ளிக்கு வந்ததும் ஆசிரியரிடம் நீட்டுகிறாள்." மறக்க முடியாத விஷயமாக நெஞ்சில் நிற்கிறது. குழந்தைகள் படும் வேதனை மனத்தை ரொம்பவே நெருடும்.. வாழ்த்துகள் பதிவுக்கும், தகவலுக்கும்.
மிக்க நன்றி தோழர்
Deleteபூக்களை சரம் போல நூலில் கோர்த்து இலையொன்றில் கட்டிய சரத்தை வைத்து ,நதியொன்றில் தவழ விட்டது போல எழுத்தும்,நதியில் பயணப்பட்டு தன வாசனையை நதிக்கும்,நதி போக தான் தவழ்ந்து ஏறி இறங்கும் கரைகளுக்கும் அள்ளி வீசியதை போல இருக்கின்றன..மக்களுக்கான கருத்துக்கள்....
ReplyDeleteநெகிழ்ந்து நன்றி சொல்கிறேன் கீரா
Deleteஎட்வின் அவர்களே! மாமேதை லெனின் அவர்கள் ஜெர்மனியில் இருந்தார்!! பீதோவனின் 13 வது இசைகோர்வைய கேட்டுக் கொண்டிருந்தார்! அவர் கண்கள் கசிந்தது! சிறிது நேரத்தில் விம்மி அழ அரம்பித்துவிட்டர்! அருகிலிருந்த நணபர்கள் ஏன் அழுகிறிர்கள் என்று கேட்டனர்! என் ரஷ்ய நாட்டு விவசாயியும் தோழிலாளியும் இத்தகைய செவ்விசையை கேட்க முடியாமலிருப்பதை நினைத்து அழுகிறென்! என்றார்! புரட்சிக்குப்பிறகு மெலை நாட்டு இசையை பள்ளியில் கற்றுக் கொடுக்கச் செய்தார்! கலப்பிட மில்லாத மெற்கத்திய இசை ஐரொப்பாவில் இல்லை! பைலோ ரஷ்யாவில் தான் உள்ளது!(தகவலுக்காக)---கஸ்யபன்.
ReplyDeleteஅரிய தகவல் தோழர். மிக்க நன்றி
Deleteமனதை கொஞ்சம் கலவரபடுத்தியது உங்கள் எழுத்தை படிக்கும் போது...எந்த எழுத்து வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதோ அது ஜீவனுள்ளதாகத்தான் இருக்கும்...
ReplyDeleteமிக்க நன்றி லக்ஷ்மி
Deleteஎந்த எழுத்து வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டாலும் அது ஜீவனுள்ளதாகத்தான் இருக்கும்...அதை உங்க எழுத்திலும் கண்டேன்...பூ விற்பவரின் வாழ்வில் பூ அவர்களின் எதிர்காலம்...
ReplyDeleteமிக்க நன்றி லக்ஷ்மி
Deleteமனதைத் தொடும் பதிவு. உண்மை சுடுகிறது. இந்த குழந்தைகளெல்லாம் என் சகோதரர்கள் தானே!
ReplyDeleteவருத்தமுடன்
என் சுரேஷ்
மிக்க நன்றி சுரேஷ்
Deleteஆமாம்...அது நமக்கு எப்போது வரும்?...தெரியவில்லை...
ReplyDeleteஆமாம்...அது நமக்கு எப்போது வரும்...தெரியவில்லை...
ReplyDeleteமிக்க நன்றி அகிலா
Delete