Thursday, June 30, 2016

ஒழுக்கம் என்ற பெயரில்

இரண்டாண்டுகளுக்கு முந்தைய கல்வியாண்டின் முதல் நாள்.
புத்தக வினியோகம் எப்படி நடக்கிறது எனப் பார்க்கப் போனேன்.
புத்தகம் வழங்கப் பட்டுக் கொண்டிருந்த அறையின் வெளியே கிடந்த பெஞ்ச் ஒன்றில் குதிக்காலிட்டு அமர்ந்தபடி யார் ஜாமண்ரி பாக்ஸ் பெரியது என்று ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அளந்து பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஆறாம் வகுப்பு குந்தைகளிடம் அங்கே நின்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு பையன் " டேய் AHM சார்டா. எழுந்திருங்க " என்று சொன்னதும் குழந்தைகளுள் ஒருவன் சொன்னான் "ஏ ச்சம்னா என்ன பெரிய டீச்சரா?"
அய்யோ இந்த இயல்பான குழந்தைகளைதான் ஒழுக்கம் என்ற பெயரில் ஆளைப் பார்த்ததும் போலியாய் எழுந்து நிற்க செய்யப் போகிறோமோ என்று வலித்தது

மூக்க அறுத்து ...

” கொன்ன்ன்ன்னு ...
  மூக்க அறுத்து....
  தேஏஏஏச்சு...
  பூ....ன்னு ஊதிடுவேன் “

என்று விக்டோரியா சொல்லிக் கொடுக்க கொடுக்க மழலையில் அபிநயத்தோடு  சொன்னாள் தங்கை மகள் நிவேதிதா.

அவள் ஊதிய ஊதில் பறந்து போனது எனது கடந்த ஒரு மாதத்து கவலைகளும், இறுக்கமும்.


ஜோஸ்பின் மிஸ்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு கீர்த்தனாவிற்கு எனது உதவி தேவைப் பட்டது.

நாளை அவளது வகுப்பில் ஒவ்வொரு குழந்தையும் தனது ரோல் மாடல் குறித்து இரண்டு நிமிடங்கள் பேச வேண்டுமாம். எழுதித் தரக் கேட்டாள்.

இதுபோன்ற விஷயங்கள்தான் ஆங்கிலத்தில் பேச இருக்கும் தயக்கத்தைத் துடைத்துப் போடும். சமச்சீர் கல்வியின் ஒரு கூறு இது. எல்லாப் பள்ளிகளும் இதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தினால் ஓரளவு நல்ல பயன் விளையும்.

சரி யார் இவள் ரோல் மாடல்? கேட்டேன். கொஞ்சமும் தயக்கமின்றி சொன்னாள்,

“ வேற யாரு. ஜோஸ்பின் மிஸ் தான்.”

“ ஏண்டி?”

“ நான் இப்படி இருக்கேன்னா அதுக்கு முழுசுக் காரணம் மிஸ் தான் பா.”

ஆசிரியை மேல் பிள்ளைக்கு இருக்கும் அன்பும் மரியாதையும் பிடிப்பும் என்னை குதூகலப் படுத்தின.

அதைவிடவும் பிள்ளைக்கு இப்படித் தோன்ற வேண்டுமெனில் ஆசிரியை வகுப்பில் மாடலாய் வாழ்ந்திருக்க வேண்டும்.

அவர் விக்டோரியாவோடு வேலை பார்க்கும் சக ஆசிரியை. என் தோழியும் கூட.

அசைத்திருக்க ஜோ. வாழ்த்துக்கள்.

Wednesday, June 29, 2016

மகிழ்வோடு சாகலாம்

அவர்களும் நம்மைப் போலவே ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள்தான்.

மகனாகவோ, மகளாகவோ வீட்டிற்குள் வளைய வளைய வந்தவர்கள்தான்.

ஏதோ ஒரு புள்ளியில் தாம் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பதை கண்டறிந்த நொடியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

வளர்த்த நாய்க்குட்டி காணாமல் போனாலே பதறிப் போய் தெரு தெருவாய் தேடுபவர்கள் காணாமல் போன தாங்கள் பெத்து வளர்த்த இவர்களைத் தேடுவதே இல்லை.

வீட்டை விட்டு வெளியேறும் அந்தக் கணத்தில் வாக்குரிமை உள்ளிட்ட சகல உரிமைகளும் இவர்களுக்கு இல்லாமல் போகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சாசாதகமான ஒரு தீர்ப்பின் உதவியோடு ஏழாண்டு கால போராட்டத்தின் விளைவாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கிறார் அக்கய் பத்மஷாலி.

இந்த வகையில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெருகிறார்.

வாழ்த்துக்கள் அக்கய்.

எனக்கு ஒரு தம்பி ஒரு திருநங்கை என்று எந்த வித நெருடலுமின்றி சொல்லும் காலம் என் மரணத்திற்குமுன் வந்தால் மகிழ்வோடு சாவேன்

மீள்ஞ

Monday, June 27, 2016

லியோ வீடு

"லியோ அண்ணன் வீடு எது பாப்பா? "
கேரம்போர்டை நகர்த்தி வழி விட்டவாறே,
" இப்படியே மேல ஏறுனா இதேமாதிரி இடம் வருமா, ஆனா அங்க எங்கள மாதிரி யாரும் கேரம் விளையாடிட்டிருக்க மாட்டாங்க அங்க இந்தப் பக்கம் ரெண்டு வீடு இருக்கும். ரெண்டும்  பூட்டிருக்கும். அதுல தட்டாதீங்க. ஊருக்கு போயிருக்காங்க. அதுக்கு ஆப்போசிட்ல ரெண்டு வீடு இருக்கும். அதுல பஸ்ட் வீடு பூட்டியிருக்கும். அதுலயும் தட்டாதீங்க. யாரும் குடி இல்ல. பக்கத்து வீட்டில் தட்டுங்க லியோ அண்ணன் வருவாங்க. "
தாயே சரண் நான்.

Thursday, June 23, 2016

கவிதை 44


பத்துக் கிலோ ஞானம்இன்று புத்தகம் கைக்கு வந்தது. விக்டோரியாவிடம் கொடுத்தேன்.
"ஏற்கனவே போட்டதுதானே"
"ஆமாம்"
"அப்புறம் இப்ப எதுக்கு தேவையில்லாம"
"அதெல்லாம் வித்துடுச்சு. அதனால. புத்தகம் வித்து தீர்ந்தா கௌரவம்தானே"
"பத்து பதினஞ்சு மட்டும் அச்சடிச்சா அஞ்சா று வருஷத்துல விக்கத்தான் செய்யும்"

பி.ஆர் எனும் பிதாமகன்

NLC அப்படி ஒன்றும் எளிதாய் வாய்த்த ஒன்றல்ல. இந்திய அரசு அதில் அப்படி ஒன்றும் ஆர்வம் காட்டியதாய் தெரியவில்லை. மாறாக அதைத் தடுப்பதில் மிகவும் முனைப்பு காட்டியிருக்கிறார்கள்.
பி.ஆர் என்றே அறியப்படும் தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் கால்களை விந்தி விந்திக் கொண்டே பாராளுமன்றத்தின் மத்தியப் பகுதிக்கு சென்று பொட்டலம் கட்டிப் போயிருந்த நெய்வேலி மண்ணை கொட்டியவாறே.
" பாருங்கள். எங்கள் மண்ணில் நிலக்கரி கிடக்கிறது. எடுக்க உதவுங்கள். எங்கள் பூமி வளப்படும். எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்"
அந்த அமைச்சரின் பெயர் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அநேகமாக TTK வாக இருக்கக் கூடும். சொன்னாராம்.
"அங்கு கிடப்பது பழுப்பு நிலக்கரி. எதற்கும் உதவாது. "
இந்தச் சூழலில் பி.ஆர் ஒரு தொழிற்சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டி ஜெர்மன் போகிறார். அங்கு பழுப்பு நிலக்கரியைக் கொண்டு இரும்பை உருக்குவதையும். மின்சாரம் தயாரிப்பதையும் பார்க்கிறார். அவை குறித்த தரவுகளைத் திரட்டுகிறார். மீண்டும் அவையில் போராடுகிறார். இப்போது வேறுாரணங்களை முண் வைக்கிறார்கள். சொன்னார்கள்.
"அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் அதிகம் இருக்கிறது. அதை என்ன செய்வது? "
பி.ஆர் சொன்னார்.
"நல்லதாய்ப் போயிற்று. அந்தப் பகுதியில் உள்ள குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம்"
எனக்குத் தெரிந்ததை சொன்னேன். இன்னும் நிறைய பேர்களிண் உழைப்பும் இருக்கக் கூடும் சொன்னால் தெரிந்து கொள்வேன்.
இத்தகைய போராட்டங்களின் பலனாகத்தான் NLC சாத்தியப் பட்டது.
அதன் பங்குகளைதான் பெரு முதலாளிகளுக்கு விற்றுவிட மத்திய அரசு துடியாய்த் துடிக்கிறது. தடுத்தே ஆகவேண்டும். எண்ண விளை கொடுத்தும்.
மாநில அரசு இந்தப் பங்குகளை வாங்கினால் என்ன?

Tuesday, June 21, 2016

27 உண்மையை தேவையான சூட்டில்

ஒரு ஆசிரியை தன் குழந்தைகளிடம் கேட்கிறார்,

‘Name the nation we all hate?’

ஒரு குழந்தை சொல்கிறான்,

‘Exami_Nation’.

கணிதத்தில் தனக்கிருக்கும் சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு தனது தாயிடம் ஒரு பிள்ளை கேட்கிறான். அந்த அளவிற்கெல்லாம் தன்னை தனது தாய் தந்தை படிக்கவைக்கவில்லையே என்று புலம்பும் தாயிடம் அந்தப் பிள்ளை கூறுகிறான்,

உனக்கு மட்டும் எப்படிம்மா இவ்வளவு நல்ல அப்பா அம்மா வாச்சாங்க

இந்த இரண்டு துணுக்குகளையும் தங்களது முகநூல் பக்கங்களில் கீருத்திகாவும் கீர்த்தனாவும் பகிர்ந்திருந்தார்கள். கீர்த்தனா பதினோறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பிற்கு நகர்ந்திருக்கும் மாணவி. கிருத்திகா ஒரு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியை.

இவற்ரை வெறும் நகைச்சுவைத் துணுக்குகளாக மட்டும் பார்ப்பவர்கள் இதற்கு மேல் தொடராமல்கூட நகர்ந்து விடலாம். ஆனால் இவற்றில் இருக்கும் நகைச்சுவையைக் கடந்து விசனப் படுவதற்கும் விவாதிப்பதற்கும் இருப்பதாக உணர்பவர்களோடும் இவற்றைப் படிக்கும் போது புன்னகையோடு தங்கள் கண்கள் ஈரப்படுவதை உணர்பவர்களோடும் உரையாடலை நிகழ்த்த ஆசைப் படுகிறேன்.

இந்த இரண்டு துணுக்குகளையும் தங்கள் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இருவரும் அக்கா தங்கைகள். கீர்த்தனாவிற்கு விடுமுறை நாட்களில் கிருத்திகாதான் இயற்பியல் நடத்துகிறாள். அந்த வகையில் கீர்த்தனா கிருத்திகாவின் மாணவியுமாகிறாள். ஆக, ஒரு ஆசிரியையும்  ஒரு மாணவியும் இந்த இரண்டு துணுக்குகளையும் தங்கள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். வேறு வகையில் இந்த இரண்டு துணுக்குகளும் ஒரே நேரத்தில் ஒரு மாணவியையும் அவளது ஆசிரியையும் ஈர்த்திருக்கிறது.

முதல் துணுக்கில் ஒரு குழந்தைக்கு தேர்வு முறையின் மேல் இருக்கும் அலுப்பும் வெளிப்படுகிறது. இரண்டாவது துணுக்கில் ‘நல்ல வேளை நீ படிக்காம தப்பிச்ச’ என்கிற பொறாமை கலந்த குழந்தையின் ஆதங்கம் வெளிப்படுகிறது. இந்த இரண்டு மன நிலைகளோடும் குழந்தையின் மனநிலையும் ஆசிரியையின் மனநிலையும் ஒத்துப் போகிறது. இதை ஆரோக்கியமானதாகவே பார்க்கிறேன்.

இப்போதிருக்கிற பாடத்திட்டத்தோடும் தேர்வுமுறையோடும் ஒத்துப் போகாத மனநிலையில் ஆசிரியரும் மாணவரும் இருப்பது இவற்றில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உதவும்.
சரி, இவர்கள் இருவரும் சலித்துக் கொள்கிற மாதிரி, அல்லது அவர்கள் மனதில் ஒட்டாத மாதிரியாக இந்தக் கல்வித் திட்டமும், தேர்வு முறையும் மாறிப்போனதற்கான காரணங்கள் என்ன?

அதற்கான காரணங்கள் நிறைய. அவற்றுள் ஆக முக்கியமான காரணமாக நான் பார்ப்பது அவை இரண்டும் மனித வாழ்க்கையோடு கொஞ்சமும் ஒட்டாமல் இருப்பது. பஞ்ச பூதங்கள் பற்றிய அறிவை வித விதமாக போதிக்கும் கல்வித்திட்டமும் சரியாக போய் சேர்ந்திருக்கிறதா என்று சோதிக்கிற தேர்வு முறையும் பஞ்ச பூதங்களில் எது ஒன்றையும் உருவாக்க முடியாது என்கிற உண்மையை குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில்லை. அதிலும் குறிப்பாக நீரை மனிதனால் ஆக்கவோ அழிக்கவோ இயலாது என்பதை போதுமான அளவிற்கு என்றுகூட இல்லை சொல்லியே தருவதில்லை என்பதுதான் உண்மை.

பூமிக்குள் ஏதோ நீர் ஊறிக்கொண்டிருப்பது போலத்தான் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேலான பள்ளிக் குழந்தைகளின் புரிதல் இருக்கிறது. ஒரு சொட்டு நீரும் புதிதாய் உருவாவது இல்லை என்கிற உண்மையை ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் அறிந்துகொள்ள நேர்கிறபோது அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் அந்த ஏதோ ஒரு புள்ளி என்பது அவர்களது கல்வித் தளத்தில் இருந்து பெரும்பாலும் கிடைப்பது இல்லை என்பதுதான் உண்மை.

நிலத்தடிநீர் என்பது ஒரு வங்கிச் சேமிப்பு மாதிரி என்பதை நாம் இன்னும் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில்லை. எடுக்க எடுக்க ஒருபோதும் நீர் சுரக்காது என்கிற உண்மை குறித்து இன்னும் நம் பாடத்திட்டம் அக்கறை கொள்ளவில்லை. எடுக்க எடுக்க நீர் குறையும் என்பதையும் பூமிக்கு அடியில் உள்ள நீரை நம் தேவைக்கு எடுத்து பயன்படுத்தும் நாம் மீண்டும் சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீராதாரம் ஜீவித்து நிற்கும் என்கிற உண்மையை குழந்தைகள் அறியாமல்தான் இருக்கிறார்கள்.

மட்டுமல்ல, நிலத்தடி நீரை வறட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதால் பூமிக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படும் என்பதையும் அந்த வெற்றிடம் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்பதில்லை. அல்லது அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அதை சமூக அக்கறையோடு சொல்லிக் கொடுக்காமல் மதிப்பெண்ணிற்காக மட்டுமே சொல்லித் தருகிறோம். ஐந்து மதிப்பெண்களுக்கு குழந்தைகளின் நீர்மேலாண்மையை நாம் கொள்முதல் செய்து கொள்கிறோம். அல்லது தங்களது நீர் மேலாண்மை பற்றிய ஞானத்தை பிள்ளைகள் ஐந்து மதிப்பெண்களுக்கு தேர்வறையில் விற்று விடுகிறார்கள்.

’தொட்டணைத்து ஊறும் மணற்கேணி’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆற்று மணலைத் தோண்டத் தோண்ட நீர் ஊறும் என்றும் அதுபோல கற்க கற்க மனிதனுக்கு அறிவு ஊறும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். மணலூற்று நீரை கல்விக்கு உவமையாக சொல்லிக் கொடுக்கிறோம். வள்ளுவர் இதை எழுதிய காலம் தொட்டு சற்று முந்தைய காலம் வரைக்கும் இது சரியாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழகத்து நதிகளில் தோண்டினால் எல்லாம் நீர் வராது. அதற்கு போர் போட வேண்டும். காரணம் எந்த ஆற்றிலும் இப்போது மணலே இல்லை. இதே நிலை தொடறும் எனில் அப்படி மிச்சம் மீதம் இருக்கிற மணலும் இன்று முதல் வகுப்பு படிக்கிற குழந்தை தனது பள்ளிக் கல்வியை நிறைவு செய்வதற்குள் இல்லாமல் போய்விடும். எனவே உவமையை மாற்றிச் சொல்லித் தரவேண்டிய நிலை வாய்த்திருக்கிறது என்பதை நாமின்னும் உணர்ந்தோம் இல்லை.

மழை பெய்வது, நதிகளில் நீர் வருவது என்பவற்றைப் போலவே நதிகளில் மணல் இருப்பதும் அவசியம் என்பதையும் பிள்ளைகளுக்கு உணர்வுப் பூர்வமாக சொல்லிக் கொடுத்துவிட்டோம் எனில் ஆற்று மணலை அள்ளிப்போகும் தைரியம் எவனுக்கு வரும்? ஆற்று மணலின் அவசியத்தை மதிப்பெண்ணிற்காக விற்காமல் உசிர் கசிய சொல்லி உணர வைத்துவிட்டோமெனில் பிறகு ஆற்று மணலை பாதுகாக்கிற காரியத்தை மாணவ சக்தி பார்த்துக் கொள்ளும்.

இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில்குடிநீர்ப் பஞ்சம் இருக்கிறது என்கிற உண்மையை சொல்லிக் கொடுக்கிறோம். உலகின் பெரும் பகுதியில் இதுதான் நிலைமை என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அடுத்த உலகப்போர் என்பது குடிநீருக்காகத்தான் வரும் என்பது பிள்ளைகளுக்கு தெரிந்தே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா இந்த யுத்தத்தை இந்தியாவின்மீது தொடுத்துவிட்டது. தெற்கின் ஜீவ நதியான தாமிரபரணி நீரை ராட்ஷச துளைகள் போட்டு கொக்கோ கோலா மூலம் உறிஞ்சிக் கொழுக்கிறது. இதன் ஆபத்தை பள்ளி பிள்ளைகள் இன்னும் உணரவில்லை.

அமெரிக்காவில் நிலத்தடி நீர் இல்லையா என்ன. பிறகு ஏன் அவர்கள் தமிழகத்தில் நீரை உறிஞ்சி எடுக்க வேண்டும்? காரணம் மிக எளிதானது. காசை சம்பாரிக்கலாம் எப்போது வேண்டுமானாலும். நீரை உற்பத்தி செய்ய முடியாது என்கிற உண்மையை உணர்ந்த அமெரிக்கா நமது அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருக்கும் பணத்தாசையை பயன்படுத்திக் கொண்டு நமது நீராதாரத்தை சுரண்டுவதன் மூலம் தங்களது நீராதாரத்தை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள் என்கிற உண்மையை தேவையான சூட்டில் கொடுத்தால் கொக்கோகோலாவை ஒருமாத காலத்திற்குள் விரட்டிவிடமாட்டார்களா நம் பிள்ளைகள்.

ஓரிடத்தில் இருக்கும் வறட்சியை பிரிதோர் இடத்திலிருந்து நீரை எடுத்து வந்து சமாளிப்பது என்பது மோசமான நீர் மேலாண்மை. இதை மோசமான நீர் மேலாண்மை என்பதுகூட தவறு. இது அயோக்கியத்தனமான வியாபாரம். மாறாக ஒரு இடத்தின் வறட்சியை அந்தப் பகுதியில் எதோ செய்வதன் மூலமே சரி செய்யும் வழிமுறைகளை செய்வதுதான் நீர் மேலாண்மை.

ராஜஸ்தானில் கடும் வறட்சி. வெளிமாநிலங்களில் இருந்து ரயில்மூலம் நீரைக் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்தது அரசு. இதைத் தவறென்றெல்லாம் சொல்ல இயலாது. மக்களின் தாகத்தை தணிக்கும் இந்த செயலை எப்படி தவறென்பது? ஆனால் பிரிதொரு இடத்தில் நிலத்தடிநீரை பேரதிகமாய் எடுப்பதன் மூலம் அந்தப் பகுதியின் நீராதாரம் பாதிக்கும் என்கிற உண்மையை உணர்ந்திருக்கிறோமா?

இதற்கு மாற்று இருக்கிறதா? இருக்கிறது என்பதை ஒரு பெண் நிரூபித்திருக்கிறார். ராஜஸ்தான் வறட்சியை அரசு பிற மாநிலத்து நீரின் உதவியோடு ஈடுகட்டுவதைப் பார்த்து துயறுற்ற அவர் ராஜஸ்தான் செல்கிறார். அங்குள்ள மக்களை சந்தித்து ராஜஸ்தானில் மழைக்காலத்தில் மட்டுமே உயிர்பெறும் சிறுசிறு ஓடைகள் குறுக்கே தடுப்பணைகளை கட்டி நீரை சேமிப்பதன் மூலம் வறட்சியை எதிர்கொள்ள முடியும் என்று சொல்கிறார். நம்பவில்லை என்பதுகூட சையாகாது, யாருமே காதுகொடுத்து கேட்கவே தயாராக இல்லை. அவரைக் கண்டாலே கிராமத்து மக்கள் பிள்ளிப் பிடிக்கிறவனைப் பார்த்து ஓடுவதுபோல் ஓடத் தொடங்கினார்கள்.

‘நீங்கள்
நின்றால்
சில சொல்கின்றேன்
சென்றால்
பின் தொடர்கின்றேன்’

என்று ஒருமுறை மேத்தா எழுதினார். இவரும் அதைப்போலவே ஓடுகிற மக்களைப் பின் தொடர்ந்தார். ஒரு புள்ளியில் நின்று கேட்கத் தொடங்கினார்கள். தடுப்பணைகளைக் கட்டினார்கள். சொந்த உடல் உழைப்பைத் தந்தார்கள். குடிநீர் மட்டும் அல்ல விவசாயத்திற்கே இப்போது நீர் இருக்கிறது. விவசாயமே செய்திராத ஒரு தலைமுறை இப்போது அங்கே விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறது.

இதை அல்லவா பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும். இதை செய்துவிட்டோம் எனில் மாணவச் சமூகம் மற்றதைப் பார்த்துக் கொள்ளாதா?

நீர் மேலாண்மையை மதிப்பெண்களுக்காக அல்லாமல் ஊனுருக உயிர் கசிய சொல்லிக் கொடுப்போம் எனில் அடுத்த உலகப்போரை பிள்ளைகள் தடுப்பார்கள்.     Saturday, June 18, 2016

65/66 காக்கைச் சிறகினிலே, மே 2016


”தோழர், வைகறை செத்துட்டான்னு சொல்றாங்க. முப்பத்தஞ்சுகூட தேறாதே. பாவிப்பயலுக்கு என்ன அவசரமோ? செத்த என்னன்னு பாருங்களேன்” என்று வர்தினி பர்வதா அழுதுகொண்டே கூறியது உண்மை என்று உறுதியானபோது அப்படியே உடைந்து போனேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை வழக்கம் போலவே சர்க்கரை அளவு ஐநூறை நெருங்கிய பொழுது மருத்துவர் உள்நோயாளியாக என்னை மாறி ஒரு வாரத்திற்கேனும் இன்சுலின் எடுத்துக் கொண்டு அவரது கட்டுப்பாட்டில் என்னை இருக்குமாறு கூறியபொழுது இரண்டையும் மறுத்து, வீட்டிலேயே தங்கி மற்றபடி அவர் சொல்லுகிற மாதிரியெல்லாம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்வதாக உறுதியளித்துவிட்டு சாப்பிடுவது, நேரா நேரத்திற்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மற்ற நேரங்களில் உறங்கி ஓய்வெடுப்பது என்பதாக இருந்தேன். படிப்பதில்லை என்று அவருக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை மட்டும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஓய்வில் இருக்கிறேன் என்றும் மிகவும் போரடிக்குது என்றும் சொல்லி புலம்பவே தோழர் மோகனா பாரதி புத்தக நிலையத்தில் சொல்லி ஏறத்தாழ 50 புத்தகங்களை அனுப்பியிருந்தார். 

அன்று மதியம் ஒன்று மேல்வீட்டு அம்மா கொரியரில் வந்திருந்த ஐந்தாறு நூல்களை என்னருகே வைத்துவிட்டு போனார்.  அவற்றில் ஒன்று “நிலாவை உடைத்த கல்”. புத்தகத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பிக்கிறேன்.

“என் கவிதைகள் உங்களுக்கு
அதிகபட்சமாய் உங்களுக்கு கொடுக்கலாம்
ஒரு புன்னகையை
அல்லது
ஒரு துளி கண்ணீரை”

என்ற வரிகளைப் பார்த்ததும் அப்படியே பிரமித்துப் போனேன். ஆமாம் இதைத் தவிர ஒரு நல்ல கவிதை வேறெதைத் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

நகர நகர பொக்கிஷங்களாய் கவிதைகள்.

“கூழாங்கற்களில்
காய்ந்து கிடக்கிறது
கோடைநதி” என்ற வரிகள் மிக மிக  அபூர்வமாக கிடைக்கும் வரிகள்.

“புன்செய் வயல்கள் மட்டுமல்ல
ஆறுகளும்தான்”

என்ற இடத்தில் அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மானாவாரி நதிகள்தானே இன்றைய பெரும்பான்மை நதிகள்.

“குளத்தில்
என்றோ எறிந்த கற்களை
மீட்டுத் தந்தது கோடை”

“சிதறிய பொருட்களில்
பரவிக் கிடக்கிறது
இறந்த எலியின் போராட்டம்”

இந்த இரண்டுக் கவிதைகளும் தமிழ்ச் சூழலில் முற்றும் புதிதான நுட்பங்களாகப் பட்டது. என்னால் அதற்குமேல் முடியவில்லை. அவனது எண் இருக்கிறதா என்று பார்க்கிறேன். இருக்கிறது. “உனது கவிதைகளால் எனது இன்றை ஆசீர்வதித்தாய். கண்டிப்பாக உனது கவிதைகள் என்னுள் ஏதோ செய்திருக்க வேண்டும். ஒன்று எனது சர்க்கரை குறைந்திருக்க வேண்டும். அல்லது எகிறி இருக்க வேண்டும். அவசரப்பட்டு என்னோடு பேச முயற்சிக்காதே மகனே. உன் கவிதை குறித்து எழுதி போஸ்ட் செய்துவிட்டு வருகிறேன்” என்று நீண்ட குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அவனது கவிதைகள் குறித்த எனது அபிப்பிராயத்தை பதிந்துவிட்டு அவனை அழைத்து ஒன்றரை மணிநேரம் பேசினேன்.

நெகிழ்ந்து போனான். அவ்வப்போது பேசுவான். ஒருநாள் அழைத்து அவனது இரண்டாவது கவிதைநூல் குறித்து பொள்ளாச்சி வந்து பேச வேண்டும் என்றான். நண்பர்கள் சேர்ந்து ஆறு நூல்களை வெளியிட்டனர். நிறையபேர் பேசுவதாகத் தெரிந்தது. அந்தநேரமும் படுத்துக் கிடந்த நேரம்தான். “நிறையபேர் இருக்கிறார்களே, முடியாத என்னை ஏன் சிரமப் படுத்துகிறாய்?” என்றேன். “நிரையபேர் வரலாம், எனக்கு நீங்கள் மட்டும்தான். ஒன்றும் ஆகாது” என்றான். போய் பேசினேன். யாழியும் இவனும் என்னிடம் வந்து இதுமாதிரி தட்டிக் கொடுக்க ஆட்கள் இருந்தால் எவ்வளவோ எழுதுவோம் என்றார்கள்.

சென்ற டிசம்பர் மாதம் காரைக்குடி போதியில் உரையாற்றிவிட்டு வெளியே வந்தால் அங்கே நிற்கிறான். ஏதேனும் வேலையாக வந்தானா என்று கேட்டபொழுது எனது உரையை கேட்பதற்காக மட்டுமே வந்ததாகக் கூறினான். உரையைக் கேட்பதற்கெல்லாம் இப்படி அலையக்கூடாது என்று கூறியபோது ‘ஒருபோதும் நீங்கள் ஏமாற்றுவதேயில்லை” என்றான்.

மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அக்கறையோடு நான் உடம்பைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறினான்.

இன்று அவன் இல்லை. அவனது மரணம் குறித்த உரையாடலில் ;வைகறை தோழர் எட்வின்மீது அப்படியொரு அன்பை வைத்திருந்தான்” என்று தோழன் சுரேஷ் மான்யா தன்னிடம் கூறியதாக தோழர் ரமா ராமநாதன் கூறினார்.

“வைகறை உங்கள்மீது வைத்திருந்த அன்பிற்கு அளவேயில்லை” என்று தோழர் தேவதா சொல்கிறார்.

தஞ்சையில் அவனது நூல் அறிமுகம் இருப்பதைக் குறித்து அவன் பேசியதுதான் அவனோடான இறுதி உரையாடல். உளைச்சலோடு இருந்தான் என்று தோழர் தேவதா சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. அவனது கவிதைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது போனதாக அந்தப் பிள்ளைக்கு வருத்தம் இருந்தது. பரிசுகளுக்கும் விருதுகளுக்கும் சிபாரிசு செய்பவர்கள் தனது நூலை பொருட்டாகவே மதிக்காமல் போகிற இடமெல்லாம் உன் கவிதைகள் குறித்து பேசுகிறேன். அவ்வளவு மோசமான உடல்நிலையில் இருந்தபோதும் படித்தவுடன் நீண்டு எழுதுகிறேன். என் பாராட்டை விடவும் விருது பெரிதா என்று அவனை அடக்கினேன்.

உண்மையிலுமே அவனது கவிதைகள் கொண்டாடப் படுகின்றன. ஜோலார்பேட்டைக்கு கூட்டம் நிமித்தம் போயிருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட நண்பர்களோடான சந்திப்பில் வைகறையைப் பற்றிதான் நிறைய பேசியிருக்கிறேன் என்பதை பிள்ளை நா.கோகிலன் நேற்று பதிவு செய்திருந்தான். மட்டுமல்ல அங்கிருந்த பெரும்பான்மையோருக்கு அவனது கவிதைகள் பரிச்சயம்.

இரண்டு ஆலோசனைகள் சொன்னேன்

1)   விருதுகளைப் பெரிதாக எடுக்காதே.
2)   போட்டிகளுக்கு கவிதைகளை அனுப்பாதே

 சரி என்றான்.20 நாட்களுக்குள் போய் சேர்ந்து விட்டான்.

எழுதப்பட்டவற்றிலிருந்து நல்லதை நம்மால் தேர்வு செய்ய முடியாது. ஆனால் நாம் அறிந்தவற்றுள் நல்லதை தேர்வு செய்வதில் நாம் கவனத்தோடு இருக்க வேண்டும் என்ற பாடத்தை எடுத்.துக் கொண்டேன்

அவனது மூன்றாவது தொகுதிக்கான தட்டச்சுப் பிரதியை உப்பு பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறான். நீதிமணிக்கும் அனுப்பியிருப்பான் போல. நூலாக்கிவிட வேண்டும்.

”பட்டமரம்
ஒற்றைக் குயில்
கிளையெல்லாம் இசை”

என்று எழுதினான்.

வைகறை என்ற குயில் இல்லைதான். ஆனாலும் இந்த வனமெங்கும் நிரம்பிக் கசிகிறது அந்தக் குயிலின் இசை.

*********************************************************************************   
காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்த உத்திரகண்ட் மாநிலத்தில் காங்கிரசிலிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களை பிஜேபி விலைக்கோ வேறு எதற்கோ வாங்கி விட்டது. அல்லது பிஜேபி கொள்கையில் அவர்கள் மயங்கி சாய்ந்துவிட்டார்கள்.

மத்திய அரசு குடியரசு தலைவர் ஆட்சியை அமல் செய்துவிட்டது. தமக்கு பெரும்பாண்மை இருப்பதாகவும், அதை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று முதல்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். உயர்நீதி மன்றம் ஒரு தேதியை குறிப்பிட்டு அந்தத் தேதியில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடுகிறது.

மத்திய அரசு அதே உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த உத்தரவிற்கு தடை உத்தரவு வாங்குகிறது. மீண்டும் அதே உயர்நீதி மன்றம் பெருபான்மையை நிரூபிக்க அனுமதி தருகிறது. அதற்கு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறது.

ஆக பெரும்பான்மையை நிரூபிக்கவே வாய்ப்புத் தரக்கூடாது என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. வன்மமாக கண்டிக்கின்றோம்.

காங்கிரஸ் இதுபோன்று செய்ததில்லை என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இதைவிடவும் மோசமாகவே பல சமயங்களில் காய் நகர்த்தியிருக்கிறது. பிறகு ஏன் இதைப்பற்றி பேச வேண்டும்? காங்கிரஸ் இதை செய்தபோதும் எதிர்த்தோம். இத்தகைய செயலொன்றின் மூலம் காங்கிரஸே பாதிக்கப் பட்டாலும் எதிர்ப்போம்.

********************************************************************************  

இந்தத் தேர்தலின்மூலம் தோழர் திருமாவளவன் ஒரு பக்குவமும் முதிர்ச்சியும் மிக்க தலைவராக அடையாளப் படுகிறார். தர்மபுரி வன்முறையின்போதும் அதன்பிறகான ஜாதியத் தாக்குதல்களின்போதும் அவர் கம்பிமேல் நடந்தார். அவர் ஏதேனும் ஒரு புள்ளியில் அவர் உணர்ச்சி வசப் பட்டிருந்தாலும் நிலைமை வேறுமாதிரி ஆகியிருக்கும். என்னைவிட வயதில் குறைந்தவரான அவரிடம் தென்பட்ட இந்த முதிர்ச்சி அளப்பரியது.

மக்கள்நலக் கூட்டமைப்பின் கட்டமைத்தலில் அவரது ஈடுபாடும் செயல்பாடும் மெச்சத் தக்கது.

ஆர்கே நகரில் தோழர் வசந்தி தேவியை அவர் களமிறக்கி இருப்பது நுட்பமானது. அரசியலை நேர்த்தியாக செய்கிறார்.

பாரதியின் நண்பர் சர்க்கரை செட்டியாரின் பேத்தி என்ற அடையாளமெல்லாம் அவருக்கு தேவையே இல்லை. கடைக்கோடி மனிதனுக்கும் உயர் கல்வி சாத்தியப் பட வேண்டும். மனித நேயத்தை அடிநாதமாகக் கொண்ட கல்வித்திட்டம் கட்டமைக்கப் படவேண்டும் என்பதற்காக பல பத்து ஆண்டுகளாக போராடி வருபவர்.

அவரை நிறுத்தி இருப்பதன் மூலம் தான் ஒரு வெகுஜனத் தலைவன் என்பதையும் கல்விகுறித்த தனது ஆழமான அக்கறையையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாழ்க தோழர்.
*********************************************************************         இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...