Tuesday, May 27, 2014

நிலைத் தகவல் 36

வாழ்த்துக்கள் மாண்பமை மோடி அவர்களே.

நீங்கள் வந்துவிடக்கூடாது என்று இறுதிவரை என்னளவில் மிகக் கடுமையான பிரச்சாரம் செய்தவன்தான். ஆனாலும் உங்களது வெற்றியையும் எனது தோல்வியையும் மனதார ஏற்றுக் கொண்டவன்.

தேநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு சாமானிய மனிதனாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டின் பிரதமராக முடியும் என்பதை இந்த உலகிற்கு மூர்க்கமும் உரத்துமான ஒரு குரலில் புரிய வைத்திருக்கிறீர்கள்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதிலும், முன்பைவிட உங்களுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் வந்து போராட நேரலாம் என்பதை உணர்ந்திருந்தும் இந்த சாமானியன் அதற்காக மிகுந்த மரியாதையோடு வாழ்த்துகிறேன்.

நிறைய சொல்ல வேண்டும். ஆனால் நான் சம்பந்தப் பட்ட துறை சார்ந்து ஒன்றை மட்டும் இப்போது சொல்ல விரும்புகிறேன்.

சகல மாச்சரியங்களையும் அந்தப் பக்கம் தள்ளிவிட்டு தேநீர் விற்றவர் எங்கள் பிரதமர் என்பதில் திமிரோடு கூடிய பெருமையோடு கேட்கிறேன்,

இது நியாயம் என்பதை நீங்களும் திமிறோடும் பெருமையோடுமே உண்மையிலுமே உணர்கிறீர்கள் என்றால்,

மாடு மேய்ப்பவனுக்கெல்லாம் கல்வியா என்று கேட்பவர்களும் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அப்புறப் படுத்துங்கள். குடிசைக்கொரு கல்வி கோமானுக்கொரு கல்வி என்பதில் கறாராக இருப்பவர்களை உங்களிடமிருந்து விலக்குங்கள்.

இதை நீங்கள் செய்யத் தவறினால் என்னைப் போல ஒரு சாமானிய மனிதர் பிரதமர் ஆகியிருக்கிறார் என்ற எனது திமிரும் பெருமிதமும் அசிங்கப் பட்டுப் போகும்.

கொசுறாக ஒன்று,

உலகில் எங்கே இந்து பாதிக்கப் பட்டாலும் தலையிட்டு சரி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளீர்கள். முதலில் அதை செய்யுங்கள்.

பிரதமர் அவர்களே அன்புமணி மட்டும் அல்ல இளவரசனும் இந்துதான் என்பதையும், பல இடங்களில் கொத்துக் கொத்தாக ஊர்விலக்கம் செய்யப் பட்டுள்ள தலித்துகளும் இந்துக்கள்தான் என்பதையும் உணருங்கள்.

இந்தச் சாமனியனின் எதிர்பார்ப்பு நீங்கள் எல்லா இந்துக்களையும் சமமாக ஏற்று பாவிக்க வேண்டும் என்பதே. இதைச் செய்யத் தொடங்கினாலே சிறுபான்மையினரையும் என் போன்ற நாத்திகர்களையும் இந்தியனாக ஏற்கும் பக்குவம் உங்களுக்கு பையப் பைய வந்துவிடும்.

கூப்பிய கரங்களோடு உங்களை அணுகி வாஞ்சையோடு உங்கள் கரம் பற்றுவதா அல்லது உயர்த்திய கரங்களோடு களம் இறங்குவதா என்பதை உங்களது செயல்களே தீர்மானிக்கும்.,

இந்த சாமானியன் சொன்னதையும் கொஞ்சம் மனதில் கொள்ளுங்கள்.

மீண்டும் உங்களுக்கு என் அன்பும் வணக்கமும் வாழ்த்துக்களும்.

முகநூல் இணைப்பு
https://www.facebook.com/eraaedwin/posts/711426362232210

Saturday, May 17, 2014

நிலைத் தகவல் 35


எனக்குத் தட்டுப் பட்டாலும் அனுப்பி வைக்கிறேன், சொல்வதற்காக நீ தேடிக் கொண்டிருக்கும் என்னை மறந்ததற்கான காரணத்தை

Wednesday, May 14, 2014

நிலைத் தகவல் 34ஒரு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரின் பதிவு.

தேர்வு முடிவு எதுவாயினும் குழந்தைகளை ஒரு புன்னகையோடு அரவணையுங்கள்.

நல்ல மதிப்பெண்களோடு வரும் குழந்தையை " உம் " மென்று அணுகாதீர்கள். " உன்னைத் தவிர வேறு யாருக்கு இது சாத்தியப் படுமென்று? " பொய்யாகவேனும் கொண்டாடுங்கள்.


ஒருக்கால் குறைவாய் பெற்றுவிட்டான் எனில் கோபப்பட வோண்டாம்.

வெறும் 575 மட்டுமே பெற்ற என்னையே என் அப்பாவும் அம்மாவும் கொண்டாடினார்கள். நான் என்ன குறைந்தா போய்விட்டேன். ஒன்று தெரியுமா?, 575 எடுத்த நான் இன்று ஒரு மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியன். 923 எடுத்த என் வகுப்புத் தோழன் இப்போது ஒரு பள்ளியில் ரெக்கார்டு கிளார்க்.

ஒன்றும் இல்லை மதிப்பெண்களில் என்பதை உணருங்கள். குழந்தையைக் கொண்டாடி உற்சாகப் படுத்துங்கள். பெரிதாய் வருவான்.

தேர்வில் தோற்றுப்போன என் வகுப்புத் தோழன் ஒருவன் இன்று முப்பது பேர் பணியாற்றக்கூடிய நிறுவனத்தின் முதலாளி.

ஒருக்கால் பிள்ளை தோற்றே போயிருப்பின் அதிக அன்போடு " விடுப்பா. இப்ப பாஸ் பண்ணினவன் எல்லாம் என்ன பெரிய மேதையா? பார்த்துககலாம் வா" என்று உற்சாகப் படுத்துங்கள். கூடுமான வரைக்கும் கூடவே இருங்கள்.

இது போனால் ஜூனில்,அக்டோபரில், மார்ச்சில் என்று வாய்ப்புகள் உண்டு. குழந்தை போனால்?

முடிவு எதுவாயினும் குழந்தைகளை அன்போடும் புன்னகையோடும் வாரிக் கொள்வோம்.


09.05. 2014 அன்று சுட்டி விகடன் இணையதளம் பதிவு செய்த எனது பழைய பதிவு

நிலைத் தகவல் 33


" கொழந்தைங்களுக்கு டிக்கட் எடுக்கலையாம்மா? "

பேரப் புள்ளைங்கப்பா. பேரப் புள்ளைங்களுக்குக் கூடவா டிக்கட் எடுப்பாங்க"

"நீ கூட ஒங்க பாட்டியோட பேத்திதான. அப்புறம் ஏன் ஒனக்கெடுக்க?"

"சரி வேணான்னா எனக்கும் வேணாம் உட்டுடு"https://www.facebook.com/eraaedwin/posts/696804247027755

Tuesday, May 13, 2014

4

போகிற பாதையோரம்
தட்டுப் பட்டது
கூராயிருந்ததால்
பிரச்சினையெழவில்லை
அதை
சாமி என்றேற்பதில்

நீண்ட தேடலில்
சாமி ஏதுமற்ற குளக்கரை மரமொன்று கிடைக்க
பிரச்சினையில்லை
கழுவி நடுவதிலும்

”யார் வேணாலும் ஒன்னு மண்ணாப் பொழங்க
சாராயக் கடையா?
சாமி இடம்
சுத்த பத்தம் வேணும்”

“சுத்தி வளைக்காத
நாங்க கும்பிடக்கூடாது
அதானே?”

அவனுக்கு ரெண்டு இவனுக்கு ரெண்டென
அணிபிரிய
எவனோ ஒருவன்
எட்டி உதைத்ததில்

சாமியாகவேண்டியதை கல்லாக்கிப்
போயிருந்தது
சாதி

Tuesday, May 6, 2014

3

எடுப்பதற்கு உள்ளே எதுவுமில்லை
செய்து வைக்க காசு இல்லை
என்பதெல்லாம் கடந்து
குடிசைக்கு கதவு வைக்காமைக்கு
களவு போய்விடும் கதவு
என்ற பயமும்தான்

2

ரெண்டு செக்கோடு
அவசியம்
தம்பியையும் அழைத்து வருமாறு
மூன்றாவது முறையாக
கந்துக்காரன் அழுத்திய போதுதான்
உறைத்தது
வயதாகிக் கொண்டிருக்கிறது

Sunday, May 4, 2014

நிலைத் தகவல் 32

இரா எட்வின்
April 26 at 12:20am
22 ஆம் தேதி 11 மணிக்கு ஒரு அழைப்பு,

” எலெக்‌ஷன் கமிஷனிலிருந்து பேசறோம். நீங்க எட்வின் தானே?”

“ஆமாம்”

“ சரி வச்சுடுங்க”

பிறகு 12 மணி வாக்கில் அங்கிருந்து வந்த இன்னொமொரு அழைப்பு அடுத்த நாள் 9 மணிக்கே வந்து அப்பாயின்மெண்ட் ஆர்டெர் வாங்கி கொண்டு பூத்திற்கு செல்ல ஆணையிட்டது.

அன்று இரவு 8 மணிக்கு வந்த அழைப்பு அடுத்த நாள் சரியாக 7 மணிக்கெல்லாம் வந்து உத்தரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தவறினால் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் கனிவாக மிரட்டியது.

வீட்டை விட்டு 4 மணிக்கு கிழம்பி ஏழுக்கெல்லாம் போனால் ஏழரைக்குப் பிறகே அவர்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள். உத்தரவை 11 மணிக்கு கொடுத்தவர்கள் உடனே வாக்குச் சாவடிக்கு போய் காத்திருக்க வேண்டும் என்றும் வாக்களிக்கும் கருவிகளைக் கொடுக்க உடனே வருவார்கள் என்றும் அப்போது இல்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் வரும் என்றும் மிரட்டி அனுப்பினார்கள்.

போய் காத்திருந்தால் ஆறு மணி வாக்கில் நிதானமாக வந்தார்கள்.

முதல் நாள் மதியம் சாப்பிட்டது. 24 ஆம் தேதி இரவு 7 மணிக்குத்தான் சாப்பிட முடிந்தது. இடையில் ஒரே ஒரு கப் தேநீர்தான். இதுகூட பல இடங்களில் இல்லை என்பதுதான் செய்தி. ஏற்கனவே சாப்பாட்டிற்கு முன்னர், பின்னர் என்பதெல்லாம் தாண்டி சாப்பிடும் போது ஒரு மாத்திரை சாப்பிடவேண்டிய ஆள் நான்.

இவை போக வாக்கெடுப்பை அமர்ந்து நடத்த நாற்காலிகளைத் தேடிய ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே தேர்தல் வகுப்புகள் எடுத்து மிக நேர்த்தியாக ஆசிரியர்களை அசிங்கப் படுத்தினார்கள்.

தேர்தல் கமிஷனே இப்படித்தான் வழிகாட்டியதா? இல்லை வருவாய்த்துறை வரம்பு மீறினார்களா தெரியாது.

தேர்தல் கமிஷன் அவ்வப்போது ஆசிரியர்களை கலந்தாலோசித்தாலே தேர்தல்களை இதைவிடச் சிறப்பாக நடத்த முடியும்.
...................................................................
08.05.2014 புதிய தலை முறையில் 
..................................................................

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...