Wednesday, January 8, 2020

சின்னியம்பாளையத்து தியாகிகள்

வரலாற்றில் அதிலும் குறிப்பாக இடதுசாரி தொழிற்சங்க வரலாற்றில் கோவை மாவட்டத்திற்கு பெரும் பங்கு உண்டு
செக்கிழுத்த செம்மல் வஉசி என்று பள்ளிக்கூடத்து பாடங்கள் சொல்லித் தரும்
இதைப் படித்ததும் அவர் ஏதோ ஒரு மரச்செக்கை இழுத்திருப்பார் என்றுதான் அதை சொல்லித்தரும் ஆசிரியர்களே நினைத்துக் கொண்டிருப்பார்கள்
ஆனால் அவர் இழுத்தது ஒரு கல் செக்கு என்று கேள்விபட்டபோது நான் அதிர்ந்து போனேன்
அந்தக் கல் செக்கு இன்னும் கோவை மத்திய சிறையில் இருப்பதாக அறிகிறேன்
ஆஷர்மில் அட்டூழியங்களை எதிர்த்து வீரத்துடனும் விவேகத்துடனும் போராடி உயிர்த்தியாகம் செய்து ஆஷர்மில் முதலாளிகளுக்கே கிட்டாத “ஆஷர்மில்” என்ற முன்னொட்டை தன் பெயரோடு பெற்றிருக்கும் ஆஷர்மில் பழனிசாமி வாழ்ந்த ஊர் ஒன்றுபட்டு இருந்த கோவை மாவட்டத்தில்தான் உள்ளது
இதற்கெல்லாம் கொஞ்சமும் குறைவுபடாத இன்னொரு தியாக வரலாறும் கோவைக்கு உண்டு
சின்னியம்பாளையத்தில் “ரங்க விலாஸ்” என்றொரு நூற்பாலை இருந்தது
மனிதத் தனத்தின் மிக சொற்பமான கூறுகளைக் கூட அங்கு காண முடியாது
அப்போதெல்லாம் ஆலைகளில் வேலை பார்ப்பதற்கு ஊழியர்களையும் அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக ரவுடிகளையும் வேலைக்கு வைத்திருப்பார்கள்
இதற்கு ”ரெங்க விலாஸ்” ஆலையும் விதி விலக்கல்ல.
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரைக்கும் வேலை வாங்குவார்கள்.
என்ன கொடுமை என்றால் ஊழியர்களைக் காட்டிலும் ரவுடிகளை அதிக சம்பளத்தோடு முதலாளிகள் கவனித்துக் கொண்டார்கள்
ஊழியர்கள் எழுச்சி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களது வேலை
இத்தைக்கு மத்தியிலும் ஒவ்வொரு ஆலையிலும் கம்யூனிஸ்டுகள் சங்கம் அமைத்தும் முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனத்திற்கு எதிராகவும் போராடிக் கொண்டிருந்தார்கள்
அந்த ரவுடிகள் அங்கு வேலை பார்க்கும் பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பது ஆலைகளின் எழுதப்படாத விதி
அதை எதிர்ப்பதையும் அவர்களின் காமப் பிடியில் இருந்து பெண் ஊழியர்களைப் பாதுகாப்பதையும் செங்கொடி சங்கங்கள் தங்களது செயல்பாடாக வைத்திருந்தார்கள்
”ரெங்கவிலாஸ்” ஆலையில் வேலைபார்த்த பெண் ஊழியர்களை பொன்னான் என்ற ரவுடி சீண்டிக் கொண்டே இருக்கிறான்
அதைத் தட்டிக் கேட்ட ராஜி என்ற பெண் ஊழியரை வெளியே வைத்து பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறான் பொன்னான்
அந்தப் பொன்னானை ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் என்ற நான்குபேரும் கொன்று போடுகிறார்கள்
அதற்காக அந்த நான்குபேரும் 1946 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம்நாள் அதிகாலை தூக்கில் இடப்பட்டனர்
இதுபோன்ற வரலாறுகளை இளம் தோழர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று படுகிறது
#சாமங்கவிய ஒரு மணி முப்பத்தி ஒன்பது நிமிடம்
08.01.2020

Sunday, January 5, 2020

ஆயிரம் விழுக்காடு அநீதி


இந்திய எல்லைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் சாதி, மதம், இனம் மற்றும் பாலின அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் இன்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பதினான்காவது பிரிவு கூறுகிறது. இதை மீறுவது குற்றம் ஆகும் என்றும் கூறுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பதிநான்காவது பிரிவை மீறும் குற்றத்தை தற்போதைய பாரதிய ஜனதாக் கட்சி அரசு செய்யத் துவங்கி இருக்கிறது.

மத அடிப்படையில் இந்திய மக்களை பாகுபடுத்தும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் முன்வடிவினை அது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது நிறைவேற்றி இருக்கிறது. இதற்காக அனைத்துவிதமான மரபொழுக்க நெறிமுறைகளையும் அது தமது கோரக் கால்களில் போட்டு  மிதித்திருக்கிறது.

தனது தோழமைக் கட்சிகளையும் மாநிலக் கட்சிகளையும் ஆசைகாட்டியோ, மிரட்டியோ பணிய வைத்திருக்கிறது. தாங்கள் அரசின் ஒரு துணைச் செயலாளரின் உத்தரவிற்கிணங்கவே அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க நேர்ந்ததாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திரு.S.R.பாலசுப்பிரமணியன் கூறுகிறார்.

இந்த மசோதாவை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிக் கொடுத்த பல கட்சிகள் அதன் பாதகமான போக்கை உணர்ந்தபின் தற்போது அந்த மசோதாவை எதிர்க்கத் தொடங்கியுள்ளன. அதை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று ஏறத்தாழ ஏழெட்டு மாநிலங்கள் பிரகடனப் படுத்தி விட்டன.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வடிவிற்கு எதிராக நாடே பற்றி எரிகிறது. அதிலும் குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் கொந்தளிப்போடு வீதியில் இறங்கியிருக்கிறார்கள். அரசின் கடுமையான அச்சுறுத்தலும், தாக்குதல்களும், உயிர்ச்சேதமும் அவர்களை முடக்கிப்போடவில்லை. இந்த மண்ணின் உயிர்ப்பான மதச் சார்பின்மையை காப்பதற்காக எந்தவிதமான தியாகத்திற்கும் பிள்ளைகள் தயாராக இருக்கிறார்கள்.

இத்தனைக்குப் பிறகும் இந்த மசோதா ஆயிரம் விழுக்காடு சரியானது என்கிறார் நமது பிரதமர் மோடி அவர்கள்.

இந்த மசோதா ஆயிரம் விழுக்காடு அநீதியானது, அயோக்கியத்தனமானது என்பதை தேசத்தின் எண்பது விழுக்காடு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கெதிராக ஏதோ ஒரு வகையில் அவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்.

மிச்சம் இருக்கிற இருபது விழுக்காட்டில் ஏறத்தாழ பத்துப் பதினைந்து சதம் இதன் ஆபத்து குறித்து புரிதல் இல்லாத நிலையில் இதை ஆதரிக்கிறார்கள். மிச்சம் இருக்கிற சிலர்தான் இதை மதவெறியோடு ஆதரிக்கிறார்கள்.

மதம், இனம் அல்லது மொழி அல்லது இதுபோன்ற ஏதோ ஒரு பாகுபாட்டால் தாக்குதலுக்கு உட்பட்டு, தங்கள் மண்ணில் தங்களால் உயிர்வாழ முடியாது என்கிற நிலையில் அகதிகளாக இந்தியாவிற்குள் வரும் மக்கள் இங்கு பதினோறு ஆண்டுகள் வாழ்ந்தால் அவர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்கிறது முந்தைய குடியுரிமைச் சட்டம்.

இப்படி அகதிகளாக இந்தியாவிற்குள் குடியேறியுள்ள அகதிகள் இங்கு வந்து ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலே அவர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்கிறது தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம்.

பதினோரு ஆண்டுகள் என்கிற நிபந்தனையை இப்போது ஐந்து ஆண்டுகள் என்று குறைத்ததில் எந்தப் பிழையும் இல்லை. இதை கொஞ்சமும் கஞ்சத் தனமின்றி மனதாரப் பாராட்டுகிறோம்.

இதை பதினைந்து ஆண்டுகள் என்று நீட்டித்திருந்தாலும்கூட இந்த அளவிற்கு அது குற்றமில்லை. இன்னும் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு பரிசீலியுங்கள் என்று கோரிக்கை வைத்திருப்போம், அவ்வளவுதான்.

இவ்வளவு ஏன், இந்தியாவில் இருக்கும் அகதிகள் எவருக்கும் குடியுரிமை கிடையாது என்று சொல்லியிருந்தால்கூட, அருள் கூர்ந்து இந்தப் பிரச்சினையை கொஞ்சம் கருணையோடு பரிசீலியுங்கள் என்றுதான் கையேந்தி இருப்போம்.

ஆனால் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்துள்ள இஸ்லாமியர்களைத் தவிர்த்த மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று இந்தச் சட்டத்திருத்தம் கூறுகிறது. அதுதான் நமக்கு பெருங்கவலையைத் தருகிறது.

உண்மையை சொல்வதென்றால்இஸ்லாமியர்களைத் தவிரஎன்ற பதத்திற்காகத்தான் இந்த சட்டத் திருத்தமே கொண்டுவரப்படுகிறதோ என்ற அச்சமும் நமக்கு ஏற்படுகிறது.

இஸ்லாமியர்களைத் தவிர ஏனையோருக்கு குடியுரிமை வழங்குவோம் என்ற அவர்களது சட்டத் திருத்தமானது, ”இந்திய எல்லைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் சாதி, மதம், இனம் மற்றும் பாலின அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் அனைவரும் சமமாகத்தான் நடத்தப்பட வேண்டும்என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பதினான்காவது பிரிவிற்கு எதிராக இருப்பதால்தான் இந்தியாவே இன்று எரிந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்துதான் பெருமளவு அகதிகள் வந்திருக்கிறார்கள். மியான்மரில் இருந்தும் சன்னமான அளவில் அகதிகள் வந்திருக்கிறார்கள்.

மேற்சொன்ன நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்,

1)   இந்துக்கள்
2)   இஸ்லாமியர்கள்
3)   சீக்கியர்கள்
4)   கிறிஸ்தவர்கள்
5)   பார்சிகள்
6)   சமணர்கள்
7)   பௌத்தர்கள்

இவர்கள் இப்போது கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலும் இருந்து வந்துள்ள இஸ்லாமியர்களைத் தவிர ஏனைய ஆறு மதத்தவருக்கும் அவர்கள் இந்தியாவில் குடியேறி ஐந்து ஆண்டுகள் கடந்திருக்குமானால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறுகிறது.

ஏன் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்க்கிறீர்கள்? என்று கேட்டால் அந்த மூன்று நாடுகளிலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர். மற்ற ஆறு மதத்தவரும் சிறுபான்மையினர்.

அந்தந்த நாடுகளில் பெரும்பான்மையினரின் ஆதிக்க அரசியலால் பாதிக்கப் பட்ட சிறுபான்மை மக்கள் அங்கு வாழ வழியின்றி இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களை ஏற்கிறோம். ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மையினரை ஏற்க இயலாது என்று கூறுகிறார்கள்.

இதுவே தவறு. இது குறித்தும் உரையாடுவோம். ஆனால் அதற்கு முன்னால் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.

பெரும்பான்மையினரால் தாக்குதலுக்கு ஆளாகி தஞ்சம் புகுந்துள்ள சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். இது உண்மை எனில் இலங்கையில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை தர மறுக்கிறார்கள்?

இலங்கையில் நடந்தது மற்ற நாடுகளில் நடந்ததைக் காட்டிலும் மிகக் கொடூரமான தாக்குதல் அல்லவா?

இலங்கையில் சிங்களர் பெரும்பான்மையினர். தமிழர்கள் சிறுபான்மையினர். அங்கு ஒரு இன அழிப்பு முயற்சியையே சிங்களவர்கள் முன்னெடுத்தார்களே. தங்களது உயிருக்குப் பாதுகாப்பே இல்லை என்ற நிலையில் நமது பூமியில் தஞ்சமடைந்த இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்படுகிறது?

இன்னும் சொல்லப்போனால் அப்படி அகதிகளாக இங்கு வந்துள்ளவர்களில் 95 விழுக்காடு இந்துக்கள்.

எனில்,

இஸ்லாமியர்கள் என்றாலே அவர்களுக்கு குடியுரிமை இல்லை. அகதிகளாக உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்கள் இந்துக்களே ஆயினும் அவர்கள் தமிழர்கள் என்றால் அவர்களுக்கும் குடியுரிமை இல்லை என்றுதானே ஆகிறது.

நாம் இஸ்லாமியர்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ வாதாட வரவில்லை என்பதை இந்த இடத்திலேயே தெளிவு படுத்திவிட விரும்புகிறோம். ”காக்கைச் சிறகினிலேஅவருக்கு எடுத்திருந்த பாராட்டு விழாவிலே மக்கள் கவிஞர் இன்குலாப் மிகத் தெளிவாக கூறினார்,

ஈழத் தமிழர்களுக்காக நான் எழுதுவது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல. ஒருக்கால் இலங்கையிலே தமிழர்கள் பெரும்பான்மையினராகவும் சிங்களர்கள் சிறுபான்மையினராகவும் இருந்து தமிழர்களால் சிங்களர்கள் தாக்கப்பட்டிருந்தால் நான் சிங்களருக்காகத்தான் எழுதி இருப்பேன்

இதுதான் இப்போது இந்தக் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பவர்களின் நிலையும்.

இது ஒரு பக்கம் இருக்க நிறைய படித்த மேட்டுக்குடியினர் இது அகதிகளாக வந்துள்ள இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும் இந்திய இஸ்லாமியர்களுக்கு இது பொருந்தாது என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் நுட்பமான மேட்டுக்குடியினர் சிலர்இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று கதறத் தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் பிரதமர் தாங்கள் ஒருபோதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்து குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்.

உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள்தேசத்தின் பிற பகுதிகளோடு சேர்த்து அஸ்ஸாமிலும் தேசியக் குடிமக்கள் பதிவு மீண்டும் நடைபெறும்என்று கூறியுள்ளதை 11.12.2019 நாளிட்ட “PEOPLE’S DEMOCRACY” யின் தலையங்கம் தெரிவிக்கிறது.

மேட்டுக்குடிகளும் பிரதமரும் கூறுவதை எல்லாம் எழுத்துக்கு எழுத்து நீர்த்துப் போகச் செய்கிறது மாண்புமிகு அமித் ஷா அவர்களின் கூற்று.

பிற பகுதிகளோடு சேர்த்து அஸ்ஸாமிலும் தேசியக் குடிமக்கள் பதிவு மீண்டும் நடைபெறும்என்றால் அஸ்ஸாமில் ஏற்கனவே இது நடைபெற்றுவிட்டதா என்ற கேள்வி இயல்பாகவே எழும். ஆம், ஏற்கனவே அது அங்கு நடைபெற்றுவிட்டது.

தேசியக் குடியுரிமைப் பதிவு என்பதுதானே பாஜகவின் வேலைத்திட்டம். அது ஏற்கனவே அஸ்ஸாமில் நடந்துவிட்டது என்றால் அதை ஏன் மீண்டும் செய்ய வேண்டும்?

1985 இல் அன்றைய பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்கள் அஸ்ஸாமோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி 1971 மார்ச் மாதத்திற்குப் பிறகு அஸ்சாமிற்கு வந்த எவருக்கும் குடியுரிமை கிடையாது.

இந்த ஒப்பந்த்த்தின் அடிப்படையில்தான் அஸ்ஸாமில் குடியுரிமைப் பதிவேடு 31.08.2019 அன்று முழுமையாக வெளியிடப்பட்டது. இதன்படி குறந்தபட்சம் பத்தொன்பது லட்சம் அஸ்ஸாம் வாழ் மக்கள் அகதிகளாக மாறவேண்டி வருகிறது. இவர்களில் வங்க தேசத்தில் இருந்து அஸ்ஸாமிற்குள் தஞ்சம் புகுந்த கணிசமான அளவு இந்துக்களும் உண்டு.

இந்த இந்துக்களுக்காகத்தான் ஏற்கனவே பதினோறு ஆண்டுகளாவது இந்தியாவில் வசித்திருந்தால்தான் இந்தியக் குடியுரிமை என்பதை மாற்றி 31.12.2014 வரை இந்தியாவிற்கு வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று இவர்கள் எதிர்த்தது.

இதை எதிர்த்துதான் அஸ்ஸாம் எரிகிறது என்பது வேறு கதை.

பிற பகுதிகளோடு சேர்த்து அஸ்சாமிலும் தேசிய குடிமக்கள் பதிவு இணைந்து நடைபெறும்என்று மாண்புமிகு அமித் ஷா கூறியுள்ளதால் இந்தியா முழுக்க இது நடைபெறப் போகிறது என்பது தெளிவாகிறது.

தேசியக் குடிமக்கள் பதிவு முற்றுப் பெறும்போது பெருவாரியான இந்திய இஸ்லாமியர்கள் தங்களது குடியுரிமையை இழப்பார்கள். தான் ஒரு இந்தியன் என்று ஒவ்வொரு இந்தியனும் இந்தப் பதிவேட்டில் நிறுவிப் பதிய வேண்டும்.

இதற்காக நிறைய விஷயங்களை ஒவ்வொருவரும் நிறுவ வேண்டும். அவற்றில் ஒன்றிரண்டு குறித்து இங்கு உரையாடுவோம்

1)   நாம் இந்த மண்ணில்தான் பிறந்தோம் என்பதை
2)   நமது பெற்றோர் யார்
3)   நமது பிறந்த தேதி
4)   நமது பெற்றோர் இந்த மண்ணில்தான் பிறந்தார்கள்

இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் மேற்சொன்னவற்றை நிறுவ இயலாமல் குடியுரிமை இழப்பவர்களே கணிசமாக இருப்பார்கள் என்பதால் இவற்றோடு நிறுத்திக் கொள்வோம்.

நமது பெற்றோர் இந்த மண்ணில்தான் பிறந்தார்கள் என்பதை நிறுவுகிற வேலையே மிகக் கடினம்.

இவர்கள்தான் நம் பெற்றோர் என நிறுவுவதில் ஏற்படும் சிக்கல்கள்கூட நிறைய மக்களை அகதிகளாக்கிவிடும்.

முன்பெல்லாம் பிறப்புப் பதிவு அவ்வளவு கட்டாயமாக இல்லாத காரணத்தால் பிறப்பு விவரங்கள் சரியாகப் பதியப் படவில்லை. அப்போதெல்லாம் பிரசவங்கள் மருத்துவச்சிகளால் வீடுகளிலேயே பார்க்கப்பட்டன. பள்ளியில் சேர்க்கும்பொழுதும் இப்போதுபோல பிறப்புச் சான்றிதழ்கள் அவசியமில்லை. சேர்க்கைக்கு வரும் மாணவர்களை வலது கையால் தலையைச் சுற்றி இட்து காதைத் தொடச் சொல்வார்கள். அல்லது வலது கையால் இடது காதைத் தொடச் சொல்வார்கள். தொட்டுவிட்டால் போதும் அனுமதி கிடைத்துவிடும்.

ஐந்து, ஐந்தரை, அல்லது ஆறு என்று வருகிற மாதிரி ஏதோ ஒரு பிறந்த நாளை தலைமை ஆசிரியரே பதிந்து கொள்வார்.

பல திருமணங்களுக்கு எந்த விதமான பதிவும் இருக்காது. அப்படிப் பதிவு இருந்தால் அதிலும்கூட சிக்கல் வரும்.

உதாரணமாக 1967 வாக்கில் ஒரு குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று கொள்வோம். அந்தக் குழந்தையும் தனது வலது கையால் இட்து காதைத் தொட்டுவிட்டான். அவனுக்கு பள்ளியில் அனுமதி கிடைத்துவிட்டது.

தலைமை ஆசிரியரும் தோராயமாக 01.06.1962 என்று பதிந்து கொள்கிறார் என்று கொள்வோம்.

அந்தப் பையனது பெற்றோருக்கு 01.07.1962 அன்றுதான் திருமணம் நடந்து 01.06.63 அன்றுதான் பிறந்திருக்கிறான். எந்தத் தேதியும் நினைவில் இல்லாமல் பள்ளிக்குப் போனவர்கள் எப்படியோ சீக்கிரமே பள்ளிக்குப் போனால் போதும் பள்ளியில் சேர்த்து விட்டார்கள் என்றும் கொள்வோம். கொள்வோம் என்ன, சேர்த்திருக்கிறார்கள். 

அவனது தந்தைக்கு இவன் பிறந்ததற்குப் பிறகு அரசுப் பணி கிடைக்கிறது என்று கொள்வோம். அவரது பணிப்பதிவில் பதிவில் சகலமும் பதிவாகும்.

இப்போது தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் தன்னைப் பதிந்துகொள்ள அன்றைய அந்தக் குழந்தையும் இன்றைய ஐம்பதுகளின் அந்தியில் இருப்பவருமான அவர் முயல்கிறார்.

பள்ளிப் பதிவுகளின்படி இவரது பிறந்த தேதி 01.06.1962. ஆனால் அவர் தனது பெற்றோர் என்று கூறும் நபர்களுக்கு திருமணம் நடந்ததோ 01.07.1962 இல். 01.06.1962 இல் பிறந்த இவருக்கு 01.07.1962 இல் திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி பெற்றோராக முடியும்?

ஆகவே அவர் தமது பெற்றோர் யாரென நிரூபிக்க முடியாதவராக மாறுகிறார். பெற்ரோர் யாரென நிரூபித்தல் அவசியம் என்பதால் அவர் தனது குடியுரிமைத் தகுதியை இழக்கிறார். வெளிப்படையாகக் கூறுவதெனில் அவர் அகதியாக மாறிவிடுகிறார்.

இப்படியாக,

1)   வரதராஜன்
2)   முரளி
3)   சபியுல்லா
4)   ஜேம்ஸ்
5)   சதக்கத்
6)   மேரி

ஆகிய ஆறுபேரும் அகதிகளாக மாறிவிடுவதாகக் கொள்வோம்.

இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூறுவதை மீண்டும் பார்ப்போம்.

இந்துக்கள், பார்சிகள், சமணர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய ஆறு மதத்தைச் சார்ந்தவர்களும் குடியுரிமை பெறுவதற்கு தகுதி உடையவர்கள். எனவே மேலே நாம் பார்த்த பட்டியலில் இருந்து வரதராஜன், முரளி, ஜேம்ஸ், மேரி ஆகிய நால்வரும் குடியுரிமை பெறுவார்கள். சபியுல்லாவும், சதக்கத்தும் குடியுரிமை அற்றவர்கள் ஆவார்கள்.

பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வந்தவர்களுக்குதானே குடியுரிமை இந்த நால்வருக்கும் எப்படி கிடைக்கும், இதெல்லாம் சுத்தப் பேத்தல் என்றுகூட சில மெத்தப் படித்த மேட்டுக்குடி அறிவாளிகள் வாதாடக் கூடும்.

இத்தனை செய்பவர்களுக்கு அங்கிருந்துதான் இவர்கள் வந்திருக்கக் கூடும் என்று நிறுவுவது எளிதானதுதான் என்பதை அந்த மெத்தப் படித்தமனித ரோபோக்களுக்கு சொல்லி வைப்போம்.

எவ்வளவு கவனமாக இந்தச் சதி வலையை நெய்திருக்கிறார்கள்.

அஸ்ஸாமில் இருந்து மட்டுமே பத்தொன்பது லட்சம் என்றால் இந்தியாவில் இருந்து எத்தனை கோடி?

1)   இவர்களை குடியுரிமை அற்றவர்கள் என்று கூறி என்ன செய்யப் போகிறது மைய அரசு?
2)   இவர்களை அந்தந்த நாடுகளுக்கு கட்த்தப் போகிறதா? 
3)   அப்படிச் செய்வதை ஐநா ஏற்குமா?
4)   ஐநாவே ஏற்றாலும் அந்தந்த நாடுகள் இதை ஏற்குமா?
5)   இப்படியாகப் புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு இங்கே பிறந்த பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும்கூட அகதிகள்தானா?
6)   நாடு கடத்த இயலாத பட்சத்தில் அவர்களை முகாம்களுக்குக் கொண்டுபோவதாக உத்தேசமா?
7)   அத்தனை கோடி மக்களுக்கும் முகாம்கள் கட்டவும் அவர்களைப் பராமரிக்கவும் நிதிவசதி இருக்கிறதா?

போன்ற அய்யங்கள் நிறைய இருக்கிறது.

மதப் பாகுபாடுள்ள, செயல்படுத்தவே இயலாத, உலக மக்களின் சாபத்திற்கு உள்ளாக வேண்டிய நடவடிக்கை இது.

இது இஸ்லாமியர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு எதிரானது என்பதற்காக அல்ல நாம் கவலைப் படுவது. இந்த திருத்தச் சட்டம் இந்தியாவிற்கு எதிரானது.

இது ஆயிரம் விழுக்காடு சரியானதுஎன்கிறார் மாண்பமை பிரதமர்.

ஆயிரம் விழுக்காடு அநீதியானது இந்தக் குடியுரிமை திருத்த மசோதா.

இதை இந்தப் புள்ளியிலேயே கைவிடவேண்டும் என்று மத்திய அரசைக் கோருவோம்.

இதற்கான வன்முறையற்ற எந்த வடிவத்திலான எதிர்விணையோடும் கரம் கோர்ப்போம்.

நன்றி : காக்கை  ஜனவரி 2020




இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...