Friday, March 31, 2017

025

இயற்பியல்
வேதியியல்
உயிரியல், கணிதம்
முதல் பிரிவில்

இயற்பியல்
வேதியியல்
கணிதம், கணினி
இரண்டாம் பிரிவில்

வரலாறு
பொருளியல்
வணிகவியல், கணிதவியல்
மூன்றாம் பிரிவில்

கணினி
தட்டச்சு
தையல் என நீளும்
தொழிற் பிரிவுகள்

இவற்றோடு
எல்லாப் பிரிவிற்கும்
சேர்க்க

தமிழ் அல்லது விருப்ப மொழி
ஆங்கிலம்
மற்றும்
நன்கொடை

Wednesday, March 29, 2017

விவசாயிகள் போராட்டம் என்பது எமக்குமானது

எழுபதுகளில் ஒருமுறை நடந்த ஆசிரியர் போராட்டத்தை அன்றைய அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றும் இறுதியாக ஆசிரியர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் ஒருநாள் போராட்டத்தில் இறங்கியதாகவும், அடுத்த நாளே பேச்சு வார்த்தைக்கு அரசு ஆசிரியர்களை அழைத்ததாகவும் கேள்வி பட்டிருக்கிறேன்.
போராடிய எல்லா நாட்களுக்குமான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டு விட்டது. ஆனால் விவசாயிகளுக்கான அந்த ஒரு நாள் இழப்பு இன்றுவரை ஈடு செய்யப்படாமலேயே இருக்கிறது என்பதையெல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லக் கேள்வி பட்டிருக்கிறேன்.
அந்த நன்றிக் கடனுக்காக அல்ல இன்றைய விவசாயிகள் போராட்டத்தை நான் ஆதரிப்பது. எது செய்தும் அவர்களது அந்த ஒருநாள் இழப்பை, தியாகத்தை எங்களால் ஈடு செய்துவிட முடியாது என்பதை நான் அறிவேன்.
இன்றைய விவசாயிகள் போராட்டம் என்பது எமக்குமானது

குழந்தையா இருக்கீங்க....

கடந்த சனியன்று சென்னையில் நடந்த கல்வி குறித்தான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல்யாணி அய்யாவோடு கலந்து கொண்டது மகிழ்வானதும் பொருளுள்ளதுமான ஒரு தருணம்.
நேற்று அழைத்த அய்யா,
"நேர்மையோடும் மென்மையாகவும் அக்கறையோடும் விவாதங்களை வைக்கிறீர்கள். நல்லா இருக்கு. மாவட்டந்தோறும் நாம இணைந்து பயணிக்கனும். குழந்தையா இருக்கீங்க. படைப்பாளிகள் அப்படித்தான் போல"
என்றார்.
மகிழ்ச்சியா இருக்கு

என் மரணம் தாண்டியும்

"என் மரணம் தாண்டியும் ஆசான் வாழனும் மாப்ள"
"பெரிய மனசுடா ஒனக்கு"
"ஆனா, நான் செத்ததுக்கப்பறம் தாறுமாறா எதனாச்சும் எழுதிடுவாரோனுதான் பயமாருக்கு"
"பயப்படதாடா மாப்ள, ஒன்னப் பத்திதான் அவருக்கு ஒன்னும் தெரியாதே. அப்புறம் எப்படி ஒன்னப் பத்தி எழுதுவார்"
"அவரு தெரிஞ்சத மட்டும் எப்படா மாப்ள எழுதியிருக்கார்"

Sunday, March 26, 2017

ஹையர் செகரட்டரி என்பது...

ஹையர் செகன்டரி என்பது ஒரு இன்டகிரேட்டட் கோர்ஸ்.

+1, +2 என்பதுதான் என்பதுதான் சரி. நாம்தான் 11, 12 என்று அழைக்கிறோம்.

எனில்,

1200 மதிப்பெண்கள் என்பது +1 பாடங்களுக்கும் +2 பாடங்களுக்கும் சேர்த்தானது.

அதாவது +1 தமிழுக்கு 100 , +2  தமிழுக்கு 100

நடைமுறையில் +2 தமிழுக்கு 200 மதிப்பெண்கள் என்று ஆகிறது. இதுவே எல்லாப் பாடங்களுக்குமான நடைமுறை ஆகிறது.

இதில் மாற்றம் செய்து +1 ற்கு 600 மதிப்பெண் +2 ற்கு 600 மதிப்பெண் என்று கொண்டுவரப்பட வேண்டும்

அப்போதுதான் +1 பாடங்களையும் குழந்தைகள் படித்து தெளியும் நிலை வரும்

Saturday, March 25, 2017

கவிதை 74

என்றைய நிலவின் மிச்சம் இன்றைய பிறை?

பேத்தி எனக்களித்த வானம்

வரைந்து கொண்டிருந்ததில் கொஞ்சமாய் கிழித்து எனக்குக் கொடுத்தாள்

"ஏம்பா படத்தை கிழித்த?"

"ஷ்... படமில்ல, வானம்"

"சரி, வானத்த ஏம்பா கிழிச்ச?"

"எல்லா வானமும் எனக்கு வேணாம். நீ கொஞ்சம் வச்சுக்க"

இரண்டாம் மடித்து பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டேன் ஒரு பேத்தி எனக்களித்த ஒரு துண்டு வானத்தை

Friday, March 24, 2017

என்னை என்னுள் அலைய விட்டிருக்கிறீர்கள்
ஒவ்வொரு சிற்றிதழ் வரும்போதும் வாசித்துவிட்டு அதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றும். ஆனால் எழுத வாய்க்காது. இதே நிலைதான் நூல்களுக்கும்.
ஆனால் “சிற்றிதழ்கள் உலகம்” வந்ததும் எழுதுவதற்கான வாய்ப்பும் அமைந்துவிட்டது.
நானும் சிற்றிதழ்களால் வளர்ந்தவன்தான்.
எண்பத்தி ஒன்றாம் ஆண்டு “தேன் மழை”யில்தான் எனது நான்குவரிக் கவிதை ஒன்று வெளி வந்தது. நான்கே நான்கு வரி, எண்ணிச் சொல்வதெனில் ஏழே ஏழு வார்த்தைகள்.
வீடு போகும்போது ஏறத்தாழ இரவு ஒன்பது மணி. வீட்டிற்குள் நுழையும்போதே “ கவிஞரு வராரு. டீயக் குடு” என்றதும் என்னோட அண்ணன் ( மாமா பையந்தான் எனக்கு அண்ணன். மாமா பொண்ணுதான் அக்கா. மாமா வீட்டிலேயே வளர்ந்தவன்) ஒன்னுக்கு எட்டு சைசில் இருந்த புத்தகத்தை (நீள வாக்கில் இரண்டாக மடிக்கப் பட்டிருந்தது) நீட்டினார். வாங்கிப் பார்த்தால் ’தேன்மழை’. புரிந்து விட்டது. எழுத்துக்கூட்டி என் பெயரை ஏழெட்டுமுறை வாசித்தேன்.
சைக்கிளை எடுத்தவனிடம் ‘எங்கடா இந்த நேரத்துல?” என்கிறார் அண்ணான். ராஜாட்ட (பொன்மலை ராஜா) காட்டனும் என்று நகர்ந்தவனிடம் “ அப்படியே பெசிலிக்கிட்டயும் காட்டிட்டு வந்துரு என்றார். இரண்டையும் செய்தேன்.
அந்த ஒரு வாரம் மாமாவின் நண்பர்கள் ரெண்டு ப்ளாக் அக்காக்கள், அத்தைகள், அண்ணன்கள் பாப்பாக்கள் மாமாவோட பணியாற்றும் மாமாக்கள் எல்லோரும் விசாரிக்கிறார்கள்.
அப்படியே விரிகிறது.
நூற்றுக் கணக்கான இதழ்களில் கவிதைகள் பிரசுரமாக தாஸ்னா விழாக்களில் பங்கேற்க அழைக்கிறார்கள்.
88 ற்கும் 90 கும் இடையே நண்பன் ராஜாவோடு இணைந்து “தாகம்” என்ற இதழையும் பிறகு “ மானுடம்” என்ற இதழையும் நடத்துகிறேன். தொடர முடியவில்லை. ஆனால் ஒருநாள் என்னிடம் படைப்பு வாங்குவதற்காக தோழன் சுகனும்வெற்றிப்பேரொளி யும் சமயபுரம் வந்து ஒரு இரவு என்னோடு தங்கி கவிதை வாங்கிப் போகிறார்கள்.
சுகனைப் பற்றி எழுத வேண்டும். நாந்தான் எழுத வேண்டும்.
பிறகு முத்துப் பேட்டையில் நடந்த மேதினப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது இரா காமராசு (Kamarasu Era) "தோழர், ஏன் நீங்கள் ப்ரோஸ் எழுதக் கூடாது?’ என்றார் எழுதினேன். “தாமரை” யில் பிரசுரித்தார்.
இதைப் பார்த்த, அப்போது ‘இளைஞர் முழக்கம்” இதழின் ஆசிரியராயிருந்த தம்பி ரமேஷ் பாபு (Ramesh Babu) ‘ஏன் தோழா, இ.மு க்கெல்லாம் எழுத மாட்டீங்களோ?” என்று கிண்டலடிக்க ஒரு பத்துப் பதினைந்து கட்டுரைகள் இளைஞர் முழக்கத்தில் வந்தன.
அப்புறம்தான் தெரியுமே?
தோழர் சித்தனோடு இணைந்து “யுகமாயினி”. கொஞ்ச காலம் சிவகாசியிலிருந்து யுகமாயினி ரெகுலர் சர்வீசில் பெரம்பலூர் வரும். நாந்தான் தோழன் ரமேஷோடு இணைந்து கவர் போட்டு முகவரி எழுதி அஞ்சல் செய்வேன்.
இப்போது “காக்கைச் சிறகினிலே”.
என்னைப் பொறுத்தவரை சிற்றிதழ்களை மாற்றிதழ்கள் என்பேன். காக்கையை அப்படித்தான் உருவாக்கம் செய்கிறோம்.
தோழர் பொள்ளாச்சி நசன் போலவே தோழர் Krish Ramadasசிற்ரிதழ்களைப் பாதுகாத்து ஆவணப் படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது. சம்பாரிப்பதில் ஒரு பகுதியையும் தனது நேரத்தின் ஒரு பகுதியையும் இதற்காக அவர் செலவு செய்கிறார், அதற்கென் நன்றி.
இதில் இலக்கியத்தைத் தேட வேண்டாம், இது சிற்றிதழ்கள் குறித்த ஆவணம் என்கிறார். இதுதான் முக்கியமானது.
நான் மகிழ அதுமட்டுமல்ல காரணம்,
1) பெரம்பலூர் மனிதர் ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட முயற்சி, அதுவும் பெரம்பலூர் முகவரியோடு. ஏற்கனவே என் பிள்ளை அம்மணி (Chandra Mouli ’கவண்’ என்றொரு இதழை அவ்வப்போது கொண்டு வருகிறான்.
2)என் நண்பர் முருக தீட்சண்யா முருக தீட்சண்யா ஆசிரியர் குழுவில் இருக்கிறார்
3) தோழர் Markandan Muthusamy எழுதுகிறார்
மகிழ்கிறேன். தொடருங்கள் ராதாஸ்.கிருஷ் பக்கம் தொடரட்டும். ஆசிப் அலிக்கு என் அன்பையும் பாராட்டையும் சொல்லுங்கள்.
வெகு காலத்திற்குப் பிறகு என்னை என்னுள் அலைய விட்டிருக்கிறீர்கள்.
அன்பு, முத்தம், வாழ்த்து

போய் வாருங்கள் அசோகமித்திரன் அய்யா


இந்தியா 1948 ஆ அல்லது 1945 ஆ தெரியவில்லை. முந்தா நாள் இரவு அந்த நாவல் குறித்து யுகன் சாரோடு நிறையப் பேசிக் கொண்டிருந்தேன்.

இன்று காலை எழுந்து செல்லைப் பார்த்தால் யுகன் சாரிடமிருந்து மிஸ்ட் கால். நேற்று செல்லை மௌனப் படுத்திவிட்டு காக்கைக்கு கட்டுரை எழுதிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை.

ஒருக்கால் இதற்காகத்தான் அழைத்திருக்கக் கூடும்

உங்களுக்கென் வணக்கம்
 போய் வாருங்கள் அசோகமித்திரன் அய்யா

அதுக்காக...

வழக்கம் போலவே கோயம்பேடு பேருந்து நிலையம் நிறைந்து கசிந்தது. இரக்கமுள்ள நட்த்துநர் ஒருவரின் பெருந்தன்மையால் ஒரு வழியாக இடம் கிடைத்தது. ஆனால் கறாராக சொன்னார்,

“திருச்சி டிக்கட் வாங்கிக்கங்க சார். துறை மங்கலத்தில் இறங்கிக்கங்க”

“ சரிங்க சார்”

அமர்ந்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம்  பேருந்து நிறைந்து விடவே புறப்பட்டது.

அஷோக் பில்லர் அருகேஒரு இளைஞன் ஏறினான். உள்ளே என் அருகே வந்தவன் எங்கும் இடமில்லை என்பதால் இறங்கி விடலாமா என்று தயங்கினான்.

நடத்துநர் சொன்னார்,

“எல்லா பஸ்ஸும் கூட்டம்தான். பேசாம வாப்பா. இதோ துறை மங்கலத்துல சார் இறங்கிடுவார். உட்கார்ந்துக்கலாம்.”

பையனுக்கு திருப்தி.

பயணச்சீட்டு எல்லாம் போட்டு முடிந்ததும் நடத்துநர் அவனை ட்ரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் உட்கார அழைத்தார்.

“ பரவாயில்லீங்க சார். சார் இறங்கியதும் இங்கயே உட்கார்ந்துக்கறேன்”

சொன்னார்,

“அது சரிப்பா. அதுக்காக அஞ்சர மணி நேரமா நின்னுட்டு வருவ”

Thursday, March 23, 2017

”எந்த ஊராயிருந்தாலும் சனங்கதானே சாமி”

இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடத்தின் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு பற்றியும் இழப்புகள் பற்ரியும் பேச்சு நீண்டுகொண்டிருந்தபோது இஞ்சிமரப்பா வாங்க வந்த பாட்டி இடை புகுந்தார்
“எங்க ராசா?”
“நம்ம ஊர்ல இல்ல பாட்டி. லண்டன்ல”
”எந்த ஊராயிருந்தாலும் சனங்கதானே சாமி”
அய்யோ! எங்க கிழவிடா என்று உறக்க கத்தனும்போல இருக்கு

Tuesday, March 21, 2017

ஒருதலை பட்சமானது

பாபர் மசூதி பிரச்சினையை சம்பந்தப்பட்ட இருசாராரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த கவலைதரத்தக்கதும் ஏறத்தாழ ஒருதலைப் பட்சமானதுமாகும்

மத்தியிலும் மாநிலத்திலும் பலத்தோடும் வெறியோடும் அவர்களது அரசாங்கங்கள் இருக்கின்றன.

எந்தவிதமான பலமுமற்ற நிலையில் இருக்கக்கூடியவர்களை அவர்களோடு பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ள சொல்வது அநீதியானது

விரிவாக இந்தமாத காக்கையில் எழுதுகிறேன்

ஒருபோதும் அனுமதியோம் நீதியரசர்களே

”வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டியுள்ளது” என்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளனர். உண்மை நிரூபனமானபின்பும் மிக நீண்ட காலம் அதை வெளிப்படுத்த முடியாமல் நீதிமன்றத்தையே சிலரால் மௌனிக்கச் செய்ய முடிகிறது என்பதைத்தானே நீதியரசர்கள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்தவராய் ஆகிய இருவரின் வேதனை கலந்த இந்த வார்த்தைகள் நிரூபிக்கின்றன.

அவ்வளவு கால தாமதமா? நீதியரசர்களே இப்படி வேதனை கொள்ளுமளவிற்கு தங்களுக்கு சாதகமாக நீதிமன்றத்தை தங்களது செல்வாக்கால் மௌனப்படுத்த முடியுமா? முடியும், முடிந்திருக்கிறது என்பதைத்தான் செல்வி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சொல்கிறது.

ஆமாம், கீர்த்தனா பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தொடரப்பட்ட வழக்கு இது. அவளுக்கு பதினேழு வயது பூர்த்தியாகப் போகும் சூழலில் தீர்ப்பு வந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் இப்போது அந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் தமிழகத்தின் முதல்வராக பத்து ஆண்டுகளுக்கும் மேல் இருந்திருக்கிறார். முதல்வராக இருந்து கொண்டே இந்த வழக்கை  சந்தித்திருக்கிறார். கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அவரது பதவியை அந்த வழக்கை இழுத்தடிப்பதற்காகவும் செயலிழக்கச் செய்வதற்காகவும் பயன்படுத்தியிருக்கிறார். இடையில் அதில் அவருக்கு கொஞ்சம் வெற்றியும் கிடைத்திருக்கிறது.

அவர் குற்றவாளி என்றும் அதற்காக அவருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவர் இறந்து இரண்டு மாதங்களும் ஒன்பது நாட்களும் ஆகியிருந்தது.

எப்படிச் சுரண்டினார்கள், எவ்வளவு சுரண்டினார்கள், அதற்கு எவ்வளவு தண்டனை, அது அதிகமா அல்லது போதாதா என்பதை எல்லாம் நிறைய பேசிவிட்டார்கள். பேசுவதற்கு நிறையபேர் இருக்கிறார்கள்.

தண்டனையை அறிவித்தது சட்டநெறிமுறைகளின்படி. அதில் நாம் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் உணார்ச்சி வசப்படாத நிலையில் இறுக்கமாகவே தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகள் வழக்கத்திற்கு மாறாக வேதனையோடு கொட்டியுள்ள சில விஷயங்கள் மிக முக்கியமானவை.

எத்தனை வழக்குகளைப் பார்த்திருப்பார்கள். எத்தனை தீர்ப்புகளை வழங்கியிருப்பார்கள்.

”அச்சமே இல்லாமல் இவர்கள் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். தவறான வழியில் சொத்து சம்பாரிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் இவர்கள் சம்பாரித்து குவித்திருக்கிறார்கள். இவர்கள் தந்திரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றெல்லாம் நீதிபதிகள் கூறியிருப்பது ஏதோ ஒரு பெரு முதலாளியைப் பார்த்து என்றால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கும்.  அது தவறு என்றாலும் ஒரு முதலாளி எத்தகைய தகிடுதத்தம் செய்தேனும் சொத்து குவிக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

ஆனால் அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டிருப்பது மக்களின் பேராதரவோடு ஆட்சிக்கு வந்த ஒரு மாநிலத்து முதல்வரைப் பார்த்து. மக்களிடத்தில் அவருக்கிருந்த அன்பும் செல்வாக்கும் அத்தனை அலாதியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உண்ணாமல் உறங்காமல் அவருக்காக கதறி அழுது கடவுளிடம் இறைஞ்சியபடி இருந்தவர்கள் அவர்கள்.

செல்வி ஜெயலைதா மீது இந்த மக்கள் வைத்திருக்கும் அன்பை வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமானது. அந்த அப்பாவி எளிய மக்களுக்காக ஜெயலலிதா ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதே இல்லை. அப்படி இருக்க அந்த அம்மையார்மீது என்ன காரணத்திற்காக இத்தனை வெறி கொண்ட அன்பை வைத்திருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி வியந்து போவதுண்டு.

அவர் சிறைபட்டபோது அமைச்சர்களும் நிர்வாகிகளும் மண்சோறு சாப்பிட்டதும் கண்ணீரைத் துடைத்ததும் சந்தேகத்திற்கே இடமில்லாமல் போலியானவை. ஆனால் அவர் சிறைபட்டபோதும் மருத்துவ மனையில்

சேர்க்கப்பட்ட பொழுதும் இந்த எளிய மக்கள் சிந்திய கண்ணீரும் அவர்களது வேண்டுதல்களும் உண்மையானவை. அவர் மரணத்தின்போது வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு தரையில் விழுந்து அழுதார்களே அது எவ்வளவு உன்னதமானது.

தங்களுக்காக ஒன்றுமே செய்யாதவர்மீது மக்கள் ஏன் இவ்வளவு அன்பு பாராட்ட வேண்டும் என்று மக்கள்மீது எனக்கிருக்கும் கோவத்தைவிட தங்களுக்கான எல்லாமும் ஜெயலலிதாதான் என்று நம்பி விசுவசித்து வாக்குகளைப் போட்டு ஆட்சியில் அமர்த்திய இந்த அப்பாவி எளிய மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தனக்கும் தனது தோழியின் குடும்பத்திற்காகவும் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சொத்து குவித்திருக்கும் ஜெயலலிதாவின்மீதான வெறுப்பு அதிகமாகிறது.   

”இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்”
என்று தீர்ப்பின் ஓரிடத்தில் நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த இடம்தான் என்னை நிலைகுலையச் செய்கிறது. ஒரு நகருக்குள் யாரோ ஒரு தலைவர் வருவதாக இருந்தால் அந்த ஊரில் உள்ள சிலரை கைது செய்வார்கள். ஏதேனும் பெரிய திருவிழா அல்லது தேசிய தினங்களின் போதும் சிலரை கைது செய்து அடைப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு முடிந்ததும் அவர்களை வெளியே விட்டுவிடுவார்கள். இந்தக் கைது நடவடிக்கைக்கு ’முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று பெயர்.

யாரிவர்கள்? எதற்காக இவர்களைக் கைது செய்கிறார்கள்? அதற்கு ஏன் முன்னேச்சரிக்கை நடவடிக்கை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?

இவர்கள் சமூக விரோத நடவடிக்கையில் ஏதோ ஒரு காலத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தங்களது சமூக விரோத செயல்களில் இருந்து வெகுவாக வெளியேறி சமூகவெளியில் கறைந்திருக்கவும் கூடும். ஆனாலும் இவர்களது கடந்த கால செயல்பாடுகளின் பொருட்டு தலைவர்கள் வரும் பொழுது அல்லது விழாக்களின் பொழுது இவர்கள் வெளியே இருந்தால் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடும் என்ற அச்சப்படுகிறார்கள். அப்படி ஏதும் விபரீதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகாக அந்த நிகழ்வு முடியும்வரை அவர்களை சிறையில் அடைக்கிறார்கள். இது அசம்பாவாவிதங்களில் இருந்து சமூகத்தைக் காப்பதற்கான முன்னெச்சரிக்கை

நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கை என்பது பெரும்பாலும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது என்பது தற்காலத்தைய நடைமுறையாகிப் போனது என்பது வேறு.

அந்த சம்பவம் நடக்கும்போது இவர்கள் வெளியே இருந்தால் இந்த சமூகத்திற்கு ஆபத்து நேரிடும் அப்படி நேரிட்டுவிடக் கூடாது என்பதற்காக சமூக விரோதிகள் என்று தங்களது பட்டியலில் இருப்பவர்களை கைது செய்து சமூகத்தைக் காப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இங்கோ ‘இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்’ என்று உரத்த குரலில் வேதனைப் படுகிறார்கள் நீதியரசர்கள்.

நான் திரும்பத் திரும்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையில்கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்கள் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இருந்தால்தான் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற கருத்து இருக்கிறது. அதாவது அந்தக் குறிபிட்ட காலத்தில் அந்தக் குறிப்பிட்ட நபர் அந்தக் குறிபீட்ட பகுதியில் இல்லை என்றால் அவரைத் தேடிப்போயெல்லாம் சிறைக்கு கொண்டு வரமாட்டார்கள்.

அந்தக் குறிப்பிட்ட தேதியில் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அவர் இருந்தால் அந்தப் பகுதியின் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்று நினைக்கிறார்கள்.

இங்கோ, இவர்கள் வெளியே இருந்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும் என்று நீதியரசர்கள் பயப்படுகிறார்கள். இந்த இடத்தில், இந்த நேரத்தில் இவர்களை அனுமதித்தால் அந்த இடத்தின் அமைதி குலையும் என்பது இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது ஒன்றும் இல்லாததாகிப் போகிறது.

சமூக விரோதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் அமைதியை குலைத்துப் போடுவார்கள். இவர்களோ வெளியே இருக்கும் காலம் எல்லாம் நாடு முழுமையிலும் அமைதியைக் குலைத்துப் போடுவார்கள் என்று நீதியரசர்கள் அச்சப்படுகிறார்கள். எனில், சமூக விரோதிகளைவிடவும் இந்த மேன்மக்களால் இந்த மண்ணிற்கு பங்கம் விளையும் என்று இவர்கள் கருதுகிறார்கள். எனில், அவர்களைவிடவும்


இவர்கள் ஆபத்தானவர்கள், மோசமானவர்கள் என்று இந்த நீதியரசர்கள் கருதுகிறார்கள். எனில், நான்காண்டுகள் என்பதுகூட இவ்வளவுதான் தர இயலும் என்ற சட்டநுணுக்கத்தின் பொருட்டுதான் என்று கொள்ள முடியும்.

இவை இப்படி இருக்கும்போது முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மரியாதைக்குரிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மாவின் ஆசியோடும் சின்னம்மாவின் வழிகாட்டுதலோடும் தமது அரசு செயல்படும் என்று கூறியிருப்பது மிகுந்த அச்சத்தைத் தருகிறது.

அவரால் அம்மா என்று அழைக்கப்படுகிற ஜெயலலிதா அவர்களையும் சின்னம்மா என்று அவர் அழைக்கிற சசிகலா அவர்களையும் கண்டுதான் நீதியரசர்கள் ‘இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்’ என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் சுட்டப்பட்டுள்ள ஒருவரது ஆசியோடும் இன்னொருவரது வழிகாட்டுதலோடும்தான் தமது ஆட்சி நடக்கும் என்று மாண்பமை முதல்வர் சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப் படுத்துவது ஆகாதா?

இன்னமும் ஜெயலலிதா அவர்களின் பெயரால் நலத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதும் குடிநீர் பாட்டில்களில் அவரது படத்தை வைத்திருப்பதும் அம்மா உணவகங்கள் அதே பெயரோடு தொடர்வதும் எப்படி நியாயமாகும்?

இதைக் கேட்டால் ஒரு அமைச்சருக்கு கோவம் சுள்ளென்று தெறிக்கிறது. ’காந்திகூடத்தான் சிறைக்குப் போனார். அவரது படத்தை அரசு பயன்படுத்துவதில்லையா, அதுபோல்தான் நாங்கள் அம்மாவின் படத்தை பயன்படுத்துவதும்’ என்று கூறுகிறார்.ச் எப்படி இதை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

மகாத்மா சிறைக்கு போனதற்கான காரணமும் ஆட்டோ சங்கர் சிறைக்கு போனதற்கான காரணமும் ஒன்றல்ல என்கிற எளிய உணமைகூட இவருக்குத் தெரியாதா?

1)   இந்த எளிய உண்மைகூடத் தெரியாத ஒருவர் அமைச்சர் என்பது ஜீரணிக்க இயலாதது
2)   அல்லது அவருக்குத் தெரியும். தெரிந்தேதான் இப்படி பேசுகிறார் என்றால் மக்களை அவர் மக்குகள் என்று கருதுகிறார் என்றுதானே பொருள்.

இதை எல்லாம்விட அந்தத் தீர்ப்பு வெளியான பொழுதில் அதே அம்மாவின் படத்தை சட்டைப் பாக்கெட்டுகளில் வைத்துக் கொண்டே பெரும்பாண்மை அதிமுகவினர் போவோர் வருவோருக்கெல்லாம் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். அந்தத் தீர்ப்பு அவர்கள் இதய தெய்வத்தையும் சேர்த்துதான் குற்றவ்வாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது என்ற உண்மை தெரியாதவர்களா அவர்கள்.

”’இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததேகூ வாழ்வததற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்” என்று நீதியரசர்கள் கூறும் இடத்தைதான் நான் தீர்ப்பின் முக்கிய இடமாகக் கருதுகிறேன்.

வாழ்வதற்காக சதி செய்வதைக்கூட ஒரு வாதத்திற்காக ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்கலாம்.

இவர்கள் சதி செய்வதற்காகவே வாழ்பவர்கள் என்றுதான் நீதியரசர்களின் தீர்ப்பு சொல்கிறது.

இவர்கள் குற்றவாளிகள் என்பதை அம்பலப்படுத்துவது மிக முக்கியம். அந்தக் காரியத்தை நாம் சரியாக செய்யாது போனால் அவர்கள் விட்ட இடத்திலிருந்து அவர்களது பிரதிநிதிகள் தொடருவார்கள்.

”இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்” என்ற நீதியரசர்களின் கருத்து கவனமாகக் கொள்ளத் தக்கது. இறந்துவிட்டார் என்பதற்காக ஒருவரைப் புனிதராக்குவதோ சிறைக்கு போனதால் ஒருவரை மன்னிப்பதோகூட அவர்களை அனுமதிப்பச்தே ஆகும்.

இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்கள் என்பதன் பொருள் இவர்களை அனுமதித்தால் நல்லவர்கள் குறைந்து போவார்கள் என்பதே.

நல்லவர்கள் குறைந்தால் கெட்டவர்கள் பெருகுவார்கள். நல்லது குறைந்து அல்லது பெருகும்.

ஒருபோதும் அனுமதியோம் நீதியரசர்களே.   

65/66 காக்கைச் சிறகினிலே மார்ச் 2017

தோழர் முத்தையாவோடான உரையாடல்களில் ஏராளம் கிடைக்கும். அதுவும் ரேஷன் குறித்த செய்திகளை அவர் அக்கறையோடு பகிரும்போது வியப்பின் உச்சிக்கே நான் போவது வழக்கம். ரேஷன்கடை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பில் இருந்தவர் என்பதால் அந்த ஊழியர்களின் சிரமங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர். அவரிடம் குவிந்து கிடக்கும் இத்தகைய தகவல்களை எப்படி இந்த சமூகத்திற்கு கடத்துவது என்பது குறித்து அவ்வப்போது யோசிப்பது உண்டு.

அவர் தேர்ந்த பேச்சாளரும் அல்ல. எப்போதும் எழுதுபவரும் அல்ல. பிறகெப்படி அவரது கருத்துக்களை கொண்டுபோய் சேர்ப்பது? இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக படுகிறது. இயல்பாக அவரோடு உரையாடும்போது கிடைப்பவற்றை எழுதித் தொகுப்பது ஒன்று. அவரோடான நீண்ட நேர்காணல்கள். ஆனாலும் நிறைவேறாமல் போகும் என் எத்தனையோ ஆசைகளுள் இதுவும் ஒன்று.

நேற்று எது எதை சுற்றியோ நகர்ந்துகொண்டிருந்த அவரோடான உரையாடல் இறுதியாக ரேஷன் அரிசியில் வந்து நின்றது.

குடும்ப அட்டைக்கு மாதம் இருபதுகிலோ இலவச அரிசி என்பது ஏன் நபர் ஒன்றுக்கு ஐந்துகிலோ என்றானது? இந்த அரிசி எங்கிருந்து என்ன விலைக்கு வாங்கப்படுகிறது? இந்த அரிசி இன்னும் எவ்வளவு காலத்திற்கு கிடைக்கும்? போன்ற விவரங்களை ஒரு எட்டாம் வகுப்பு மாணவனுக்கும் புரிகிறமாதிரி இருந்தது அவரது விவரனை.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் இலவச அரிசியை தமிழ்நாடு அரசு எங்கிருந்து என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது நிறையபேருக்கு தெரியாது. விவசாயிகளிடமிருந்து மாநில அரசு நேரடியாக கொள்முதல் செய்வதாகவே பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  மைய அரசின் தொகுப்பிலிருந்து என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் புரிகிறமாதிரி எளிமையாக சொல்லிவிடுவதெனில் இந்த அரிசியை மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து விலைக்கு வாங்கி வருகிறது.

ஒரு கிலோ அரிசி எட்டு ரூபாய் இருபத்தியோரு பைசா என்ற அளவில் வாங்கி வருகிறது. எட்டு ரூபாய் இருபத்தியோரு பைசா என்பதில் போக்குவரத்து கட்டணம், ஏதுக் கூலி இறக்குக் கூலி, ஊதியம், கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம் எல்லாம் சேராது. இதை எல்லாம் சேர்த்தால் ஒரு கிலோ அரிசி விலை ஒன்பது ரூபாயிலிருந்து பத்து ரூபாய் நோக்கி நகரக்கூடும். ஆக, ஒரு கிலோ அரிசியை சற்றேறக்குறைய  பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்துதான் நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ வீதம் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

பெரும்பான்மை குடும்பங்களுக்கு இந்த அரிசிதான் வாழ்வாதாரமே. நூறுநாள் வேலை இப்போது நூற்றி ஐம்பது நாட்களுக்கு விரிவு படுத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு வந்தாலும் நடைமுறையில் எழுபது நாட்கள்தான் வேலை கிடைக்கும். நூற்றி ஐம்பது நாட்கள் என்ற அறிவிப்பிற்குப் பிறகு இன்னும் ஒரு பத்து இருபது நாட்கள் வேலை கூட கிடைக்கலாம். அப்படி கிடைக்கும் வேலைக்கும் ஒழுங்காக நிர்ணயிக்கப் பட்ட கூலி கிடைக்காது என்ற நிலையில் இந்த அரிசிதான் பல குடும்பங்களுக்கு கஞ்சி வார்த்து வந்தது.

தற்போது இந்த அரிசியின் விலையை இருபத்தியோரு ரூபாய்க்கு உயர்த்தியிருப்பதாக கூறிய முத்தையா எனில், ஒருகிலோ அரிசியின் அடக்கவிலை இருபத்தி மூன்று ரூபாயாக மாறும் என்றும் அப்படி மாறும் பட்சத்தில் இந்த திட்டத்தை மாநில அரசு முற்ராக கைவிடவேண்டி வரும் என்றும் கூறினார்.

இந்தத் திட்டம் கைவிடப்பட்டால் எத்தனைக் குடும்பங்கள் பிச்சை எடுக்கிற நிலைக்கு தள்ளப்படும் என்பதை நினைத்துப் பார்த்தால் பதட்டமாக இருக்கிறது.

**********************************************************************************************  

வாடிவாசலுக்குப் பிறகு நெடுவாசல் இப்போது போராட்டக் களமாக மாறியிருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என்று இணைந்து கரம் கோர்த்து வித விதமான போராட்ட வடிவங்களை கையெடுத்து களமேறத் துவங்கியிருக்கிறார்கள்.

என்ன ஆயிற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையோர கிராமமான நெடுவாசலுக்கு?

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்கிற இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கான அனுமதியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்தப் பொழுதிலிருந்தே அந்தப் பகுதி மக்கள் அதற்கெதிராக களமாடத் துவங்கி விட்டார்கள். அந்த நிறுவனத்தினர் ஊறுக்குள் அவர்களை நுழைய முயன்றபோது ஊர்ப்பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.  

இப்போது மாணவர்களும் மண்ணின்மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் அந்த கிராமத்து பொதுமக்களோடு இணைந்து போராட்டத்தை கை எடுத்திருக்கிறார்கள்.

ஹைட்ரோகார்பன் என்றால் என்ன? நான்கு அலகு ஹைட்ரஜனும் ஒரு அலகு கார்பனும் இணைந்தால் அது ஹைட்ரோ கார்பன். நான்கு அலகு ஹைட்ரஜனும் ஒரு அலகு கார்பனும் இணைந்தால் அதனை மீத்தேன் என்றும் சொல்லலாம். ஆக, ஹைட்ரோ கார்பனும் மீத்தேனும் வேறு வேறு அல்ல.

எனில், ஹைட்ரோ கார்பன் என்பது மீத்தேனே ஆகும். எனில், தஞ்சையில் விரட்டி அடிக்கப்பட்ட மீத்தேன் எரிவாயு திட்டத்தைத்தான் ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டம் என்று பெயர் மாற்றி நெடுவாசலுக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள்.

இதில் விசேஷம் என்ன வென்றால் இதே திட்டத்திற்காக அனுமதி வழங்கப் பட்ட இடங்களுள் ஒன்று புதுச்சேரி மாநிலத்தில் இருக்கிறது. மிக மிக ஆபத்தான கூடங்குளம் திட்டத்திற்கு வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவாய் பேசி நமது எதிர்ப்புக்கு ஆளான திரு நாராயணசாமி அவர்கள் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். மண்ணின் வளத்தை சீரழித்து கால்நடைகளையும் விவசாயத்தையும் சீரழிக்கும் இந்தத் திட்டத்தை தமது மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.

என்ன செய்வது இதனால் பாதிக்கப் படப்போவது அவர் மக்களாயிற்றே. என்றாலும் அவரை பாராட்டவே செய்வோம்.

பிஜேபி யைத் தவிர ஏறத்தாழ எல்லாக் கட்சிகளும் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். அவர்கள் எதிர்ப்பைக் களத்தில் காட்ட வேண்டும்.

பொது நலனுக்காக ஒரு கிராமம் தியாகம் செய்யத்தான் வேண்டும் என்பதாக ஒரு பிஜேபி தலைவர் அறிக்கை விட்டிருக்கிறார்.

அதாவது இந்தியா நல்லா இருக்கனும்னா தமிழ்நாடு செய்தாக வேண்டும், அப்படித்தானே?

***************************************************************************  

“நான் கணக்குல பாஸாயிட்டா இவனுக்கு மொட்டை போடுகிறேன்” என்று பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக வேண்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒருபோதும் அது சாத்தியப் படாது.

பெத்தப் புள்ளைங்க ரெண்டு பேருக்கு மொட்டை அடித்தபிறகு ஒத்தைப்படைக்கு இன்னும் ஒருஆள் தேவை என்றால் பெத்தவள் கணக்கிற்காக பூமுடி எடுத்து கணக்கை சரி செய்கிற காலம் இது.

ஆனால் தன் வேண்டுதல் நிறைவேறியதற்காக அரசு கஜானாவிலிருந்து ஐந்து கோடியை செலவு செய்து தங்க ஆபரணங்களை ஏழுமலையானுக்கு வழ்ங்கி மகிழ்ந்திருக்கிறார்.

இதில் கடவுள், மதம், பக்தி என்கிற எதற்குள்ளும் நாம் போகவில்லை. இவை எல்லாவற்றையும் மறுப்பதற்கான உரிமை நமக்கு உண்டு. அதேபோல இவற்றை ஏற்கிற யாருடைய உரிமையிலும் தலையிடுகிற உரிமை யாருக்கும் இல்லை.

ஒரு அரசு ஆலயத்திற்கு செலவு செய்வதில்கூட நமக்கு பிரச்சினை இல்லை. இங்கு எழுகிற பிரச்சினையே வேறு.

தனித் தெலுங்கானா மாநிலம் அமையுமானால் ஏழுமலையானுக்கு தங்க நகைகளை காணிக்கையாக செலுத்துவதாக திருசந்திரசேகர் வேண்டிக் கொண்டிருக்கிறார். தனது வேண்டுதல் பலித்த நிலையில் ஏழுமலையானுக்கு காணிக்கையை செலுத்தியிருக்கிறார். இதில் தலையிடுகிற உரிமை யாருக்கும்போலவே எனக்கும் இல்லை. ஆனால் இவரது சொந்த வேண்டுதலுக்காக தன் சொந்தக் காசை செலவு செய்திருந்தாலோ அல்லது குறைந்த பட்சம் கட்சியின் கணக்கிலிருந்து காசெடுத்து செலவு செய்திருந்தாலோ இதில் எந்தப் பிரச்சினையும் எழுவதற்கு வாய்ப்பில்லை.

தனது சொந்த வேண்டுதல் நிறைவேறியமைக்காக அரசு கஜானாவிலிருந்து ஐந்து கோடியை செலவு செய்திருப்பது குற்றம்தான்.

இப்பவும் சொல்கிறேன் நேர்த்திக் கடனை செலுத்தியது சரியா தவறா என்பதல்ல இங்கு பிரச்சினை. யார் காசில் என்பதே.

********************************************************     

  

Wednesday, March 15, 2017

தங்களைத் தாங்களே

வெமுலா தற்கொலை செய்யப்பட்ட பின் அதுகுறித்து நீ எழுதியது போல் நீ தற்கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் இப்போதும் யாரேனும் ஒரு பிள்ளை நியாயம் கேட்டு எழுதிக் கொண்டிருக்கக் கூடும்.

யார் கண்டது, அவனைத் தற்கொலை செய்ய அவனறை நுழைபவர்கள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்து கொள்ளவும் கூடும்.

போய் வா மகனே, முத்துக்கிருஷ்ணா

Saturday, March 11, 2017

ஏதாவது ஒரு நிறத்திலேனும்

கனடாவின் ஒரு நகரத்தில் நீர்த்தொட்டியில் போடப்பட்ட பொட்டாசியம் பர்மாங்கனேடின் விளைவாக வெளிர் சிவப்பு நிறத்தில் நீர் வந்திருக்கிறது.
இதனால் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றாலும் அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார் அந்நகரத்து மேயர்
 தண்ணீருக்கு ஏற்பாடு செய்யுங்களென்றுதான் இறைஞ்சி நிற்கிறோம் நாங்கள்

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்

பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் டயாலசிஸ் நடந்து கொண்டிருந்தபோது ஏதோ காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்படவே மூன்று நோயாளிகள் இறந்திருக்கிறார்கள் என்ற செய்தி உலுக்கிப் போட்டிருக்கிறது
எவ்வளவு பெரிய அலட்சியம்?
அமைச்சர்களும் கனவான்களும் இதுமாதிரியான சிகிச்சைக்காக கார்பரேட் மருத்துவ மனைகளில் எவ்வளவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்?
மின்சாரம் நின்றால் அந்த நொடியில் தானாகவே ஜெனரேட்டருக்கு மாறுகிற ஏற்பாடோ யுபிஎஸ் ஏற்பாடோ இருந்திருக்குமே? அந்த ஏற்பாடு அரசு மருத்துவமனைகளில் ஏனில்லை?
அது கடந்தும் ஏதேனும் அசம்பாவம் ஏதும் இது போன்று நிகழ்ந்திருப்பின் என்னென்ன நிகழ்ந்திருக்கும். அவையெல்லாம் ஏறுங்கள் நிகழவில்லை?
காரணம் எளிதானது
இவர்கள் உழைக்கும் ஏழை மக்கள்.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்

Thursday, March 9, 2017

க்யூரிங் பத்தாத சொவத்துப் பூச்சுய்யா நீ"

ஒரு குளியலுக்கான சிமெண்டுச் சாம்பல் அவர்கள் உடலெங்கும்.
"என்ன லூசுன்னே நெனச்சுட்டியா?" என்று அவன் கேட்கும் நேரத்துக்கு அங்கு போனேன்
" சேச்ச, க்யூரிங் பத்தாத சொவத்துப் பூச்சுய்யா நீ"
காதல் கவித்துவமானது

குப்பைக்கு பஞ்சமற்ற நாட்டில்

எப்படி என்ற தொழில்நுட்பம் தெரியவில்லை. ஆனால் ஒரு டன் குப்பையிலிருந்து ஏறத்தாழ 50 கிலோ ஹைட்ரோ கார்பன் எடுக்கமுடியும் என்கிறார்கள்
இது ஏறத்தாழ 4 சிலின்டர் பக்கம்.
குப்பையை இதற்காக இறக்குமதி செய்யும் நாடுகளும் உண்டென்கிறார்கள்
குப்பைக்கு பஞ்சமற்ற நாட்டில் அதிலிருந்து மீத்தேனை எடுக்கக் கூடாதா?

இது போதும் எனக்கு

பள்ளிக்கு போய்க்கொண்டிருந்தபோது பரிதியிடமிருந்து அழைப்பு.
"வகுப்பறை" வரும் இதழில் 'எது கல்வி?' குறித்த விமர்சனம் வைக்க வேண்டுமென்றும் யாரிடம் வாங்கலாம் என்றும் கேட்டான். யாரென்று என்ன இருக்கிறது என்றேன்
வரும் இதழில் வருமென்று படுகிறது
இந்தப் புத்தகத்தை போடுவதற்கு கேட்டான். முடியாமல் போனது. 'விடுங்கண்ணா, ரொம்ப நல்லா வந்திருக்கு' என்கிறான்
கேட்கிறபோது கட்டுரைகூட தரமுடிவதில்லை அவனுக்கு
ஆனாலும் யாருக்குமே பேசத் தோன்றாத என் எழுத்து குறித்து எழுத வைக்கிறான்
யாரும் கண்டுகொள்ளாமலே போகட்டும்
இது போதும் எனக்கு Ilamparithi Parithi

மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லைதான்.
NCBH இல் இருந்து தோழர் துர்கா அழைத்து “என் கல்வி என் உரிமை” மூன்றாவது பதிப்பு வந்துவிட்டதாகக் கூறினார். முதல் பதிப்பு 2015 ஜனவரியில் வெளி வந்தது. 26 மாத கால இடைவெளியில் ஒரு நூல் மூன்றாவது பதிப்பு காண்பது என் போன்ற வாசகத்தளம் ஏதுமற்ற எளிய படைப்பாளியை மகிழ்ச்சிப் படுத்தவே செய்யும்.

மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லைதான்.

எந்த நூலையும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் எதற்கு எழுதிக்கொண்டு என்று நொந்தவனாய் இந்த மாத காக்கைக்கு எழுதுவதோடு நிறுத்திக் கொள்வது என்கிற மனநிலையில் இருந்தவனை உற்சாகப் படுத்தியிருக்கிறது


ஏதாவது ஒரு நிறத்திலேனும்

கனடாவின் ஒரு நகரத்தில் நீர்த்தொட்டியில் போடப்பட்ட பொட்டாசியம் பர்மாங்கனேடின் விளைவாக வெளிர் சிவப்பு நிறத்தில் நீர் வந்திருக்கிறது.
இதனால் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றாலும் அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார் அந்நகரத்து மேயர் என்பதை BBC தமிழ் கூறுகிறது
ஏதாவது ஒரு நிறத்திலேனும் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யுங்களென்றுதான் இறைஞ்சி நிற்கிறோம் நாங்கள்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...